இந்த வார இணைய தளம்

ஒவ்வொரு நாளும் நாம் இந்த உலகின் சக்தியைத் தான் பயன்படுத்தி வருகிறோம். சக்தியானது நம்மைச் சுற்றி இருக்கிறது. ஒளி, வெப்பம், மின்சக்தி எனப் பல வகைகளில் உள்ளது. நம்முடைய உடம்பு இந்த சக்தி அடங்கி உள்ள பொருட்களைப் பயன்படுத்துகிறது. கார்போஹைட்ரேட், புரொட்டீன் உள்ள பொருள்கள் என்று கூறுவது எல்லாமே நமக்கு சக்தியைத் தருவன ஆகும். இவற்றைப் பயன்படுத்தித்தான் நாம் சுவாசிக்கிறோம்; அலைகிறோம்; வளர்கிறோம்; சிந்திக்கிறோம். வேலை பார்ப்பதற்கும் விளையாடுவதற்கும் இந்த சக்தியைத் தானே பயன்படுத்துகிறோம்.

அடிப்படையில் நாம் பயன்படுத்துவது வெப்பம் மற்றும் மின்சாரம். இரண்டு பொருட்கள் ஒன்றை ஒன்று உராய்வதிலிருந்து கிடைக்கிறது. எவ்வளவு வேகமாக இவை அசைகின்றனவோ, அந்த அளவிற்கு சூடு அதிகமாகிறது. அதே போல மின்சாரம்; எலக்ட்ரான் வேறு ஒரு வயர் போன்ற பொருளில் நகரும்போது மின்சக்தி கிடைக்கிறது. ஆனால் இவை எத்தனை நாட்களுக்கு நமக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும். இந்த உலகம் தன் இயற்கைச் சக்தியைச் சிறிது சிறிதாக இழந்து கொண்டு வருகிறதே. என்றாவது ஒரு நாள் நாம் எந்த சக்தியும் கிடைக்காமல் திண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுமோமே. அதனால் தான் நாம் பல்வேறு நிலைகளில் நம் இயற்கை சக்திக்கு புத்துணர்ச்சி தரும் வழிகளைப் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து, பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சூரிய ஒளி பயன்படுத்தி அடுப்புகள் போன்றவை நம் முயற்சிகளின் ஓர் எளிய வெளிப்பாடு. காற்றாலைகளைப் பயன்படுத்தி மின்சாரம், ஓடும் நீரைப் பயன்படுத்தி மின்சாரம், இயற்கை தாவரக் கழிவு மற்றும் மனிதக் கழிவுகளைப் பயன்படுத்தி மின்சாரம் போன்றவை அடுத்த நிலையில் உள்ளன. மேலே சொல்லப்பட்ட முறைகளின் அடிப்படை பொருளான சூரிய ஒளி, காற்று, கழிவு போன்றவை நமக்கு இலவசமாகக் கிடைக்கும் பொருள்களாகும். இவற்றை எப்படி நன்றாகப் பயன்படுத்தலாம் என்பதே இன்று நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.

இது குறித்து இணையத்தில் தேடிய போது, அருமையான தளம் ஒன்று நமக்குக் கிடைத்தது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொறுப்புள்ள குடிமக்கள், எதிர்கால சந்ததியினரைப் பற்றி சிந்தித்து செயலாற்றுபவர்கள் என அனைவரும் ஆழமாகப் படித்துச் செயல்பட வேண்டிய பல வழிகளை இந்த தளம் சுட்டிக் காட்டுகிறது. இந்த தளத்தின் இணைய முகவரி: http://www.reenergy.ca இதில் நுழைந்தவுடனேயே இதன் பல்வேறு பிரிவுகள் நம்மை வரவேற்று வியப்பில் ஆழ்த்துகின்றன. ஏனென்றால் அனைவருக்கும் ஏற்ற வகையில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. நீங்கள் ஓர் ஆசிரியர் என்றால் அவர்கள் மாணவர்களுக்கு புதுப்பிக்கக் கூடிய சக்தி குறித்து என்ன தர வேண்டும் என ஒரு தளப்பிரிவு காட்டுகிறது.
மாணவர்கள் என்ன மாதிரி திட்டங்களை மேற்கொள்ளலாம் என இன்னொரு பிரிவு காட்டுகிறது.
பொதுவான தகவல்கள் பல தலைப்புகளிலும், குறிப்பிட்ட பிரிவுக்குண்டான தகவல்கள் அவற்றின் தலைப்புகளிலும் தரப்பட்டுள்ளன. Renewable Energy Basics, Solar Electricity, Solar Heat, Wind Energy, Water Power, Biomass Energy, Clean Energy Techniques எனப் பல பிரிவுகள் நம்மை புதிய தளப்பிரிவுகளுக்கு எடுத்துச் சென்று தகவல்களைத் தருகின்றன.
நாம் எதிர்கொள்ளும் காலத்தின் தேவையை மிகச் சிறப்பாக விளக்குகின்றன. அனைவரும் பார்த்து, அறிந்து சிந்திக்க வேண்டிய தகவல்களைக் கொண்டுள்ள இந்த தளம் ஒரு சிறப்பான தளமாகும்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 3,883 other followers

%d bloggers like this: