Daily Archives: மே 2nd, 2012

காதல் உணர்வுகளை அதிகரிக்கும் நீல நிறம்….

திருமண நாளன்று இரவில் படுக்கை அறையில் செய்யப்பட்டுள்ள அலங்காரம் காதல் உணர்வுகளை அதிகரிக்கச் செய்யும். அன்றோடு அவ்வளவுதான். அப்புறம் ஒரே மாதிரியான டிம் லைட் விளக்கு வெளிச்சம். ஒரே போர் என்று நினைக்கிறீர்களா? கவலை வேண்டாம். உங்கள் படுக்கை அறையை உங்கள் மனதிற்கு பிடித்த மாதிரி அலங்கரியுங்கள். தினம் தினம் உற்சாகம்தான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அவர்கள் கூறியுள்ள ஆலோசனைகள் உங்களுக்காக.

காதலுக்கு நீல நிறம்

படுக்கை அறையில் ரொமான்ஸ் மூடு வருவதற்கு இரவு விளக்கின் நிறம் மிகவும் முக்கிய அம்சமாகும். இரவு நேர விளக்கு நீல நிறமாக இருந்தால் ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகளில் அமைதியும், சக்தியும் கிடைக்கும். எனவே படுக்கை அறையில் நீல நிற விளக்கை பயன்படுத்துவது நல்லது. படுக்கை அறைக்கும் கூட இள நீல நிறத்தில் பெயிண்ட் அடிப்பது காதல் உணர்வுகளை அதிகரிக்கும்.

மெழுகுவர்த்தி வெளிச்சம்

மின்விளக்கு வெளிச்சம் பிடிக்காதவர்கள் படுக்கை அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி அலங்கரிக்கலாம். இது அறையின் அழகையும், ரொமான்ஸ் மூடையும் அதிகரிக்கும்.

ரோஜா பூங்கொந்து

சுகந்தமான மணம் தரும் ரோஜா மலர்களைக் கொண்டு அலங்கரிக்கலாம். ஏனெனில் ரோஜாவிற்கும் ரொமான்ஸ்க்கும் நெருங்கிய தொடர்ப்பு உண்டு.

மென்மையான இசை

படுக்கை அறையில் மனம் மயக்கும் மெல்லிய இசையை கசிய விடுங்கள். அது காதல் உணர்வுகளை அதிகரிக்கச் செய்யும்.

இயற்கை அலங்காரம்

படுக்கை அறையில் கூடை ஒன்றில் மாதுளை முத்துக்கள், ஸ்ட்ராபெரி, திராட்சைப் பழங்களைக் கொண்டு அழகாய் அலங்கரியுங்கள். அது உங்களின் ரசனையை அதிகரிக்கும்.

பட்டுத் துணி அலங்காரம்

மென்மையான, வழு வழு துணிகளைக் கொண்டு படுக்கை, தலையணைகளை அலங்கரிக்கலாம். கொசு வலை இருந்தால் அதை படுக்கையின் மேல் அலங்கரிப்பது ஒரு ராஜ தோரனை ஏற்படும்

மாமனார் இல்லாத புகுந்த வீடு

மாமனார் இல்லாத புகுந்த வீடு, பெரும்பாலும் பாதுகாப்பு இல்லாத வீடாக கருதப்படுகிறது. புதிதாக வாழ வரும் ஒரு மருமகளுக்கு, மாமியாரிடமிருந்து தாயின் நேசம் கிடைக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக மாமனாரிடம் இருந்து ஒரு தந்தையின் நேசம் கிடைக்கும் என்று பெண்கள் நம்புகிறார்கள்.

புரிந்து கொள்ளும் தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஆகிய இரண்டும் பெரும்பாலும் மாமனார்களிடம் இருக்கிறது. பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்குள் நுழையும் ஒரு பெண்ணின் மனநிலையை மாமனாரால் புரிந்து கொள்ள முடியும். காரணம் வெளி உலக அனுபவம் மாமியாரைவிட மாமனாருக்கு அதிகம்.

குடும்பத்தை பராமரிப்பது, கணவருக்கு சேவை செய்வது ஆகியவைதான் பெண்களின் கடமை என்று இப்போதும் நினைக்கிறார்கள். கடமைகளை மட்டுமே வாழ்க்கை என்று நினைத்து வாழும் பெண்களுக்கு தங்களுடைய ஆசைகள், லட்சியங்களைப் பற்றி கனவு காணக்கூட உரிமையில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படிப்பட்ட பெண்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்காக குரல் கொடுக்க ஒரு ஜீவன் தேவை.

எப்போதும் மகனது தேவைகளை மட்டுமே கருத்தில் கொள்ளும் அம்மாக்களுக்கு மருமகளின் கனவுகள், உரிமைகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். இந்த நிலையில் மாமனார் இல்லாத வீடு பெண்களுக்கு ஒரு குறையுள்ள வீடுதான்.

தவறு செய்யும் நேரத்தில் காப்பாற்ற அக்கறைகொண்ட ஒருவரின் பாதுகாப்பு வேண்டும். பரிந்து பேசவும், அவள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துக் கூறவும், அறிவு முதிர்ச்சியும், அனுபவமும் உள்ள ஒரு நபர் தேவை. இந்த முக்கிய இடத்தை நிரப்புவது மாமனார்தான்.

மகன்- மருமகள் இடையில் ஏற்படும் சிறு பூசல்களுக்கும், மனஸ்தாபங்களுக்கும் மாமனார் தான் மருந்தாக இருப்பார். மகனை கண்டிக்கும் சக்தி மாமனாரைத் தவிர வேறு யாருக்கு இருக்க முடியும்? மண வாழ்க்கையில் ஏற்படும் கசப்புகளை மனம் விட்டு யாரிடமும் சொல்லிவிட முடியாது. சொன்னாலும் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது. அப்போதெல்லாம் மாமனார் இல்லாத குறை மருமகளை வாட்டும்.

கணவன்-மனைவிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பக்குவமாக களைய அனுபவ முதிர்ச்சி தேவை. மருமகள் மீது குறையிருந்தாலும் எப்பாடுபட்டாவது வாக்குவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து இருவரையும் சேர்த்து வைக்கும் உன்னத பணியை மாமனாரால் மட்டுமே செய்ய முடியும் என்பது பல பெண்களின் கருத்து.

மாமியாருக்கும்- மருமகளுக்கும் இடையே ஏற்படும் தகராறுகளை சரிசெய்யவும் மாமனாரால் தான் முடியும். தனது மனைவியை அடக்கும் தைரியம் அவரிடம் மட்டுந்தானே இருக்க முடியும்!

மீனாவுக்கு மாமனார் இல்லை. புகுந்த வீட்டுக்குச் சென்ற புதிதில் அது அவ்வளவு பெரிய குறையாக அவளுக்குத் தெரியவில்லை. தன் தோழியின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல இடர்பாடுகளை அவளுடைய மாமனாரே தீர்த்து வைத்ததாக அவள் கூறிய போதுதான், மாமனாரின் பெருமை அவளுக்கு புரிந்தது.

அவளுடைய தோழிக்கும் அவள் கணவருக்கும் நடக்க இருந்த விவாகரத்தை போராடி நிறுத்தியது அவளுடைய மாமனார் என்று தெரிந்ததும், மீனாவின் மனதில் ஒரு மெல்லிய ஏக்கம் பிறந்தது. பல நேரங்களில் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை யாரிடமும் சொல்லவும் முடியாமல் தீர்வு காணவும் வழி தெரியாமல் கலங்கி நிற்கும்போது அவளுக்கு மாமனாரின் நினைவு வரும்.

அந்த மருமகள், சில வருடங்களில் அம்மா அந்தஸ்தை அடைகிறாள். அவளது குழந்தை களை உலக ஞானத்திற்கு தக்கபடி வளர்க்கவும், அன்பால் அரவணைக்கவும், தேவைப்படும்போது கண்டிக்கவும் ஒரு தாத்தா தேவைப்படுகிறார். அந்த தேவையை நிறைவேற்றவும் ஒரு மாமனார் அவசியப்படுகிறார். வளரும் பிள்ளைகளை செம்மைப்படுத்த நல்ல அறிவுரைகளை கூறி ஒழுக்கத்தை போதிக்க, அவர்களுக்கு ஒரு தாத்தா தேவைப்படுகிறார். ஒரு மனிதரின் அறிவும், ஆழ்ந்த அனுபவமும் அவரது முதுமைப் பருவத்தில்தான் அவரது குடும்பத்தினருக்கு பயன்படுகிறது.

இளமையான அரசனுக்கு முதுமையான அமைச்சர் ஒருவர் இருந்தால் தான் நாடு வளம் பெறும் என்பது முன்னோர் வாக்கு. அப்படி ஒரு குடும்பத்தை வழிநடத்த மாமனாரின் அறிவுரை வேண்டியிருக்கிறது. தன் மகனுக்கு எது தேவை எது தேவையில்லை என்பதில் ஆழ்ந்த அறிவு தந்தைக்குத் தான் அதிகம் இருக்கிறது.

ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்குவதில் மாமனார் பெரும் பங்கு வகிக்கிறார். குடும்பத்தில் புதிதாய் பிரவேசிக்கும் ஒரு பெண்ணை மற்றவர்கள் புரிந்து கொண்டு நேசிக்கும் மனப்பக்குவம் வரும்வரை அந்தப் பெண்ணை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மாமனாருடையது. மாமனார் இல்லாத பல குடும்பங்களில் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக உணர்கிறார்கள். மருமகளுக்கு புகுந்த வீட்டில் மிக முக்கிய நபர் மாமனார். அவர் இல்லாத வீடு காவலாளி இல்லாத தோட்டம் போன்றது.

`இன்சூரன்ஸ்’ எடுக்கும் முன்பு கவனிக்க வேண்டிய `பண வீக்கம்’

இன்சூரன்ஸ் எனப்படும் காப்பீடு விஷயத்தில் பொதுமக்களின் ஆர்வமும், விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது. அரசு துறை நிறுவனங்களுக்கு போட்டியாக தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் போட்டியில் குதித்துள்ளதால் இந்த துறையின் மீது மக்களின் கவனம் அதிகரித்து இருக்கிறது. இன்சூரன்ஸ்களில் வாகன இன்சூரன்ஸ், தனி நபர் இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு இன்சூரன்ஸ் போன்றவை மிக முக்கியமாகும். இந்த இன்சூரன்ஸ்களில் பல திட்டங்கள் உள்ளன.

ஒருவர் தனி நபர் இன்சூரன்ஸ் எடுப்பதாக இருந்தால், அதற்கு முன்பு பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும். தனது தேவை, பிரீமியம் செலுத்தும் வசதி ஆகியவை அதில் முக்கியமானது. இதுபோல் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான அம்சம் `பண வீக்கம்’. ஏன் என்றால் நீங்கள் எவ்வளவு மதிப்புக்கு இன்று இன்சூரன்ஸ் எடுக்கிறீர்களோ அந்த மதிப்பு 10 அல்லது 20 ஆண்டுகள் கழித்து அதே அளவு இருக்காது. மதிப்பு குறைவாகவோ அல்லது மிக குறைவாகவோ இருக்கும்.

உதாரணமாக இன்றைய தினத்தில் நீங்கள் 25 லட்ச ரூபாய்க்கு தனி நபர் காப்பீடு எடுப்பதாக வைத்துக்கொள்வோம். பாலிசி காலம் 25 ஆண்டுகள் என்ற அடிப்படையில் நீங்கள் மாதாந்திர பிரீமியம் செலுத்துகிறீர்கள். 25 ஆண்டுகள் கழித்து உங்களுக்கு பாலிசி தொகை ரூ. 25 லட்சம் கிடைக்கும். ஆனால் இன்று 25 லட்ச ரூபாய்க்கு உள்ள மதிப்பு 25 ஆண்டுகள் கழித்து எப்படி இருக்கும் என்று உறுதியாக கூற இயலாது.

இதற்கு முக்கிய காரணம் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பண வீக்கம். மேலும் பண வீக்கத்தின் அடிப்படையில் ஏறி வரும் விலைவாசியையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது, இந்த பண வீக்கம் நமது பணத்தின் உண்மையான மதிப்பை குறைத்து அதனுடைய வாங்கும் திறனை குறைத்து விடுகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு 100 ரூபாய்க்கு வாங்கிய பொருளை இன்று வாங்க முடியாது. இதையே வேறுவிதமாக குறிப்பிடுவது என்றால், இன்று மாதம் 25 ஆயிரம் ரூபாயில் குடும்பம் நடத்தும் உங்களால் இன்னும் 10 ஆண்டுகள் கழித்து அதே தொகையில் குடும்பம் நடத்த இயலாது.

அதுபோலத்தான் இன்சூரன்ஸ் பாலிசி தொகையும். இன்று நாம் எடுக்கும் ரூ.25 லட்சம் பாலிசித்தொகை 25 ஆண்டுகள் கழித்து உங்களது தேவைகளை நிறைவேற்ற போதுமானதாக இருக்காது. இன்று ரூ. 10 லட்சமாக இருக்கும் ஒரு பொருளின் மதிப்பு 20 ஆண்டுகள் கழித்து சுமார் ரூ. 45 லட்சமாக இருக்கும் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கின்றது. இதற்கு அந்த பொருளின் மதிப்பு குறைவது ஒரு காரணம் என்றாலும் ரூபாயின் மதிப்பு குறைவதும் முக்கிய காரணம் ஆகும்.

எனவே, பணவீக்கம் மற்றும் குறைந்து வரும் ரூபாயின் மதிப்பு ஆகியவற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் நமது முதலீடு அமைய வேண்டும். எனவே ஆண்டு தோறும் நமது காப்பீட்டுத்தொகை 5 முதல் 8 சதவீதம் வரை அதிகரித்துக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் நமது காப்பீட்டு திட்ட முதலீடுகள் அமைய வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் காப்பீட்டு திட்டங்களை தேர்வு செய்து அதில் முதலீடு செய்ய வேண்டும்.

நல்ல பழக்க வழக்கங்களால் புற்றுநோய்களை தடுக்கலாம்

புற்றுநோய் ஒரு புரியாத புதிர். அது யாருக்கு வரும், எப்போது வரும், யாருக்கு வராது என்று யாராலும் வரையறுத்துச் சொல்ல முடியாது. காரணம் புற்றுநோய், வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்க வழக்கம் சார்ந்த ஒரு உயிர்க்கொல்லி நோயாகஇருப்பதுதான்.

ஆக, புற்றுநோயிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரேயொரு வழிதான் இருக்கிறது. அது புத்திசாலித்தனமாகவும், கட்டுப்பாட்டுடனும் இருந்து புற்றுநோய் வருமுன் காப்பது. இதைத்தான் புள்ளிவிவரங்களுடன் விளக்குகிறது அமெரிக்காவின் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று.

அமெரிக்காவில் சுமார் மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய் புகைப்பழக்கத்தினால் வருகிறதாம். மற்றுமொரு 20 சதவீதம் உடற்பருமனால் ஏற்படுகிறதாம். இதனால் ஒருவருடத்துக்கான மருத்துவச் செலவு மட்டும் 226 பில்லியனாம். அதாவது, இந்தியமதிப்பில் சுமார் 12.5 லட்சம் கோடி ரூபாய்.

இன்னும் சொல்லப்போனால், அமெரிக்க மக்கள் புகைப்பதை நிறுத்தினால் தற்போது நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் முக்கால்வாசிப்பேர்ஆரோக்கியமாக இருந்திருப்பார்களாம்.

இது தவிர, பல்வேறு விதமான இதர புற்றுநோய்கள் வருமுன் காக்கும் வழிகளைஅறிவியல் காட்டியிருக்கிறது நமக்கு. உதாரணமாக, ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்கள் மற்றும் ஹெப்பாட்டிடிஸ் வைரஸ்களுக்கு எதிரான தடுப்பூசிகளைக்கொண்டு கருப்பை வாய் மற்றும் கல்லீரல் புற்றுநோய்களை தடுப்பது. அல்ட்ரா வயலெட் கதிர்கள் உள்ள சூரிய ஒளியை தவிர்த்து தோல் புற்றுநோய் வராமல்தடுப்பது போன்றவற்றை சொல்லலாம்.

ஆனால் இதற்கு, தனி மனித மாற்றம் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனித சமுதாயமும் ஒன்றிணைந்து ஆரோக் கியமான பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வதை முனைப்புடன் செயல்படுத்திக் காட்ட வேண்டியது அவசியம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

இந்த வாழ்க்கைமுறை மாற்றத்தை செயல்முறைப் படுத்திக்காட்டுவதில் சில பல நடைமுறை சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஆனால் அதிர்ஷ்டவசமாக, உடற்பயிற்சி செய்தல், சரியான உணவுகளை உண்ணுதல் மற்றும் புகைப்பழக்கத்தை கைவிடுதல் போன்ற பழக்க வழக் கங்களால் இந்த வருடம் நிகழ இருக்கும் 5 லட்சத்து 77 ஆயிரம் புற்றுநோய் மரணங்களில் பாதியைதவிர்த்துவிடலாம் என்கிறது ஒரு புதிய ஆய்வு!

மேலும், சுற்றுச்சூழல் மாசு, மோசமான பொது போக்குவரத்து வசதிகள்,குழந்தைகள் விளையாடவும் உடற்பயிற்சி செய்யவும் பூங்காக்கள் இல்லாமை, நல்ல உணவுப் பொருட்கள் கிடைக்கும் அங்காடிகள் அருகில் இல்லாமை போன்ற பல்வேறுகாரணங்கள், மக்கள் ஆரோக்கியமான, புற்றுநோய் ஏற்படுத்தும் ஆபத்துகள் குறைந்த ஒரு வாழ்க்கை முறையை கடைபிடிக்க பெரும் தடையாய் இருக்கின்றன என்கிறது இந்த ஆய்வின் முடிவுகள்.

இத்தனை தடைக்கற்களையும் படிக்கற்களாக மாற்றி புற்றுநோய் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டுமானால், அரசாங்கத்தின் கொள்கைகளில் மாற்றம் வரவேண்டும். அதுதான் மக்களை மாற்றக்கூடிய ஒரு உந்துசக்தியாக இருக்கமுடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதற்கு, மிகவும் கண்டிப்பான `புகையிலை ஒழிப்பு கொள்கை’ ஒரு மிகச் சிறந்த உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில், நாம் ஒவ்வொருவரும் நம் உணவு கட்டுப்பாட்டினை மன உறுதியுடன் மேற்கொண்டு, உடற்பயிற்சி செய்து உடல் எடையை கட்டுக்குள் வைத்திருந்தால் பல்வேறு விதமான ஆபத்தான புற்றுநோய்கள் வருமுன்காத்துக்கொள்ளலாம். அப்படியே புற்றுநோய் வந்துவிட்டாலும், அது எந்தவகையான புற்றுநோயாக இருந்தாலும் அதனை எதிர்த்து போராடி வென்றுவிடலாம் என்கிறார் பாஸ்டனிலுள்ள டானா பார்பர் புற்றுநோய் மையத்தின் ஆய்வாளர் எட்வர்டு பென்ஸ்.

`கிராபீன்’ என்ற புதுமைப் பொருள்!

2010-ம் ஆண்டுக்கான இயற்பியல் துறை நோபல் பரிசு, இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரே கெய்ம், கான்ஸ்டான்டின் நோவோசெலாவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. `கிராபீன்’ என்ற புதுமைப் பொருளைக் கண்டுபிடித்ததற்காகவும், இரு பரிமாண கிராபீன் பற்றிய முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டதற்காகவும் இவர்களுக்கு நோபல் பரிசு கவுரவம் கிடைத்தது.

கடந்த சில ஆண்டுகளாகவே கிராபீனின் தன்மைகள், உபயோகங்கள் குறித்து உலகெங்கும் விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படியென்ன கிராபீனுக்கு மவுசு?

கிராபீன் என்பது நானோமீட்டர் அளவில் மெல்லிய கார்பன் நூலிழைகளால் ஆன ஒரு தகடு. சிலிக்கான் அல்லது செப்புக் கல்லில் தேய்த்து இடப்பட்ட பொருள். கிராபீன்தான் உலகில் தற்போது மிக மெல்லியதான பொருள்.

இது கார்பன் அணுக்கள் பக்கவாட்டில் இணைந்து அமைக்கும் ஓர் அணிவரிசை. உயரம் ஒரு நானோ மீட்டர். பரப்பு சில சென்டிமீட்டர்கள் வரை. நாம் சாதாரணமாக வைக்கும் ஒரு முற்றுப்புள்ளியின் அளவு சுமார் நூறு மைக்ரோ மீட்டர். நானோமீட்டர் என்பது ஒரு மைக்ரோ மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு. இதிலிருந்து, கிராபீன் எவ்வளவு சிறிய பொருள் என்று புரிந்துகொள்ளலாம்.

கிராபீன் இந்த அளவு சிறியது மட்டுமல்ல, மிக மிகப் பலமானது. லேசில் கிழியாது, உடையாது. இவ்வளவு பலமானது என்பதால் கட்டுமான மூலப் பொருட்களில் இதைக் கலந்து மேலும் பலமுள்ளதாக்க முடியுமா என்று ஆராய்ந்து வருகிறார்கள். எளிதில் சிதைவடையாத நுண்ணிய பொருட்களையும் கிராபீனை கொண்டு உருவாக்கலாம்.

ஒரு முற்றுப்புள்ளி அளவுள்ள கிராபீனை காந்தசக்தியில் அப்படியே அந்தரத்தில் தொங்கவிட்டு, மின்சக்தியால் நொடிக்கு 6 கோடி முறை சுற்றவைக்க முடியும். கிராபீனுக்கு மூன்று முக்கியக் குணங்கள் உண்டு. மிகச்சிறந்த மின்கடத்தி. ஏற்கனவே கூறியபடி, நல்ல பலம். ஒளி சுலபமாக ஊடுருவும்.

இந்தக் குணங்களால் கிராபீனின் சாத்தியங்கள் எண்ணற்றதாக உள்ளன. உதாரணமாக, லித்தியம் அயான் பேட்டரிகளில் (இன்று நாம் பயன்படுத்தும் அனைத்து செல்போன்களிலும் இந்த பேட்டரியே உள்ளது) கிராபீனை ஆனோடுகளாகப் பொருத்தலாம். கிராபீன் நல்ல மின்கடத்தி என்பதால், தற்போது மணிக்கணக்கில் நடக்கும் ரீ சார்ஜ், சில நிமிடங்களில் முடிந்துவிடும்.

தற்போது சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சூரிய சக்தித் தகடுகளில் உள்ள சோலார் செல்களில் உபயோகிக்கும் இண்டியம்-டின்-ஆக்சைடு ஒளி ஊடுருவத்தக்கதாக உள்ளது. ஆனால் அது அதிவேக மின்கடத்தி அல்ல. இதற்கு மாற்றாக கிராபீனை பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஒளி ஊடுருவும் பிளாஸ்டிக்குடன் கிராபீனை சேர்த்து உருவாக்குவதுதான் இனிவரும் டச் ஸ்கிரீன்களாக இருக்கும். இவற்றின் செயல்பாடு அபாரமாக இருக்கும். பென்சில் அல்லது விரலால் திரையைத் தொட்டவுடன் கிராபீனின் மின்கடத்திக் குணத்தினால் அதிவேக மின்சார சர்க்யூட் வழியாக நாம் தொட்டுப் பிறப்பிக்கும் ஆணை மிகத் துரிதமாக கணினியை அடையும். ஒளி ஊடுருவ கிராபீன் அனுமதிப்பதால், நம்மால் தொடுதிரை பின்புறமுள்ள எழுத்துகளையும், பிம்பங்களையும் எளிதாகப் பார்க்க முடியும்.

இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட கிராபீன் பயன்பாடு என்பது கடலில் சிறு துளி அளவுதான் என்கிறார்கள். எனவே, கிராபீனின் சாத்தியங்கள் என்னென்ன என்று ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மனைவிக்கு துரோகம் செய்கிறீர்களா?

ஒரு சமயம் பார்க்கவர் என்ற முனிவர், தன் புத்திரன் ஜடமாக இருப்பதைப் பார்த்து, “நீ ஏன் இப்படி ஜடமாக இருக்கிறாய்? வேதம் படித்தும், குரு சிஷ்ருதை செய்தும், பிச்சை எடுத்தும் ஆத்ம லாபம் தேடிக்கொள்…’ என்றார்.
அதற்கு அந்தக் குழந்தை, “தந்தையே… நான் இதற்கு முன், எத்தனையோ ஜென்மாக்கள் எடுத்தாகி விட்டது. பூர்வ ஜென்மத்தில் பரமாத்மாவிடம் என் ஆத்மாவை வைத்து, ஆத்ம விசாரணை செய்து ஞானம் பெற்றேன். இப்போது இந்த ஜென்மா கிடைத்துள்ளது. இனி, நான் எதையும் கற்றுணர வேண்டும் என்பதில்லை. இந்த ஜென்மாவில், மேலும் ஞானத்தால் பகவானை அடைவேன். இனி, பிறவி இராது.
“பூர்வ ஜென்மங்களின் புண்ணிய வசத்தால், எனக்கு பூர்வ ஜென்மங் களில் நிகழ்ந்தவை ஞாபகம் உள்ளது. பல ஜென்மங்களுக்கு முன், நான் ஒரு வைசியனாக இருந்த போது, ஒரு பசுவை கட்டிப்போட்டு, தண்ணீர் கொடாமல் இருந்து விட்டேன். அந்தப் பாவத்துக்காக, எனக்கு நரகலோக வாசம் ஏற்பட் டது. நரகத்தில், என்னைப் போல் பல பாவிகளும் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தனர்.
“இங்கிருந்து எப்படி விடுதலை கிடைக்கும் என்று எல்லாருமே ஏங்கி அழுது கொண்டு இருந்தோம். அந்த சமயம், திடீரென்று, குளிர் காற்று வீசியது. இது எப்படி ஏற்பட்டதென்று பார்த்தேன். அப்போது எம தூதர்கள், ஒரு புண்ணிய புருஷனை அங்கு அழைத்து வந்தது தெரிந்தது. அந்த புண்ணிய புருஷன் வந்ததால், இங்கு குளுமையான காற்று வீசியதாக தெரிந்து கொண்டேன். அந்த எம தூதன், புண்ணிய புருஷனுடன் வரும்போது, நரகலோகத்தை காண்பித்தபடி வந்தான்.
“நரகவாசிகள், அந்த புண்ணிய புருஷனிடம், “ஐயா… நீங்கள் போய் விடாதீர்கள். இங்கேயே இருங்கள். நீங்கள் இருப்பதால், இங்கு எங்களுக்கு குளிர்ச்சியும், சுகமும் ஏற்படுகிறது…’ என்று கூறினர். அவரும் அப்படியே நின்று, எம தூதர்களை பார்த்து, “நான் பல யாக யக்ஞங்கள் செய்துள்ளேன். தான தர்மம் செய்திருக் கிறேன். நான் விபச்சித் என்ற அரசனாக இருந்த போது, குடிமக்களை நீதியுடன் பரிபாலனம் செய்தேன். அப்படி இருக்கும்போது, என்னை ஏன் நரக லோகத்துக்கு அழைத்து வந்தீர்…’ என்று கேட்டார்.
“அதற்கு எம தூதன், “ஐயா… நீர் சொல்வதெல்லாம் உண்மை! ஆனாலும், நீர் உம்முடைய மனைவி ஒருத்திக்கு, தவறு செய்து, துக்கப்படும்படி செய்து விட்டீர். ஒரே ஒரு சமயம் தான் அப்படி செய்தீர். இருந்தாலும், அது பாவம் தான். அதனால்தான் உமக்கு நரகலோக வாசம் இல்லாவிட்டாலும், நரகலோகத்தை பார்க்கும்படியான சின்ன தண்டனை கிடைத்து உள்ளது. இப்போது பார்த்தாகி விட்டது. இனி, நீர் செய்த புண்ணிய பலனை அனுபவிக்கலாம். அதோ விமானம் வருகிறது…’ என்றான் எமதூதன்.
“அதற்கு அந்த புண்ணியவான், “ஐயா… நான் இங்கிருப்பதால் இத்தனை பேர்களுக்கும் சுகம் ஏற்படுகிறது. ஆகவே, நான் இங்கேயே இருந்து விடுகிறேன். நரகமானாலும், பிறருக்கு உதவி செய்வதற்காக நான் இங்கேயே இருந்து விடுகிறேன்…’ என்றார்.
“இவர்களுக்கு ஏதாவது புண்ணியம் இருந்தால் இங்கிருந்து விடுதலை கிடைக்கும். புண்ணியமில்லாத போது, நரக வாசம் தான்! நீங்கள் வந்து விமானத்தில் ஏறி, சுவர்க்கம் செல்லுங்கள்…’ என்றான் எம தூதன்.
“அதற்கு அந்த புண்ணியவான், “ஐயா… நான் செய்த புண்ணியங்களில் ஒரு பகுதியை இவர்களுக்கு அளிக்கிறேன். இவர்களை நரகத்திலிருந்து விடுதலை செய்யுங்கள்…’ என்றார். அதேபோல் புண்ணியத்தில் ஒரு பகுதியை தானம் செய்தார். அந்த புண்ணிய பலன் கிடைத்ததும், பாவிகளுக்கு விடுதலை கிடைத்தது, அந்த புண்ணியவானும் விமானம் ஏறி சுவர்க்கம் சென்றார். அந்தக் கூட்டத்தில், நானும் ஒருவனாக இருந்ததால் நரகத்திலிருந்து எனக்கும் விடுதலை கிடைத்தது.
“அதன் பின், பல ஜென்மங்கள் எடுத்து, நல்ல புத்தியோடு வாழ்ந்து, பகவானை வழிபட்டு, ஞானம் வர ஆரம்பித்தது. பூர்வ ஜென்மத்தை நல்ல முறையில் வாழ்ந்து, ஞானத்தை வளர்த்தேன். ஏதோ ஒரு கர்ம பலன், இந்த ஜென்மா கிடைத்துள்ளது…’ என்றது அந்தக் குழந்தை.
இப்படி ஒரு சின்ன கதை உள்ளது. இங்கு அதை ஏன் சொல்கிறோம் என்றால், எந்த பாவம் செய்தாலும் தண்டனை உண்டு; அதனால், ஜாக்கிரதையாக இருந்தால் நல்லது.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 2,531 other followers