குரலில் கவனம் வேண்டும்!

நமது குரல் மற்றவர்கள் காதில் எப்படி விழுகிறது என்று யோசித்திருக்கிறீர்களா?

ஒரு செய்தித்தாளை எடுத்து ஒரு பாராவை படியுங்கள். அதை ஓர் ஒலிநாடாவில் பதிவு செய்துகொண்டு மீண்டும் அதைப் போட்டுப் பாருங்கள்.

குரலை ரொம்பவும் உயர்த்தியிருக்கிறீர்களா? வார்த்தைகளைச் சேர்த்துச் சேர்த்துப் படிக்கும் பழக்கம் இருக்கிறதா? வாக்கிய முடிவில் தெளிவில்லாமல் குரல் மங்கிவிடுகிறதா? மூக்கால் பேசுவது போல குரல் தொனிக்கிறதா? சாதாரணமாக ஒருவரது குரலில் இந்தக் குறைபாடுகள்தான் காணப்படுவதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். இவற்றை நம்மால் திருத்திக்கொள்ள முடியுமா? நிச்சயமாய் முடியும்!

உரத்த குரல் ஏற்படுவதற்குக் காரணம் என்ன தெரியுமா? தொண்டையின் சதைப்பகுதிகளில் இறுக்கம் இருப்பதுதான். அதற்குத் தொண்டையைச் சரிசெய்ய வேண்டும். தலையைச் சற்று முன்னால் தளர்த்திக்கொண்டு முதலில் வலது பக்கமும், பின்னர் இடதுபக்கமுமாய்ச் சுழற்ற வேண்டும். தொண்டையின் இறுக்கம் இளகிவிடும். மூக்கால் பேசுவது போல் குரல் இருப்பதற்குக் காரணம், தொண்டையில் ஏற்படும் அடைப்பும், பிடிப்பான தாடைப் பகுதிகளும்தான்.

பேசும்போது வாயை நன்கு முழுமையாகத் திறக்காவிட்டால், சப்தம் மூக்கின் வழியே தப்பித்துக்கொண்டு விடுகிறது. இதற்கு, பேசுவதற்கு முன் நன்றாக வாயைத் திறந்து `ஆ’ என்று சத்தமிட்டுப் பழகலாம். பிடிப்பான தாடைப் பகுதியை ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு அசைத்துப் பழக வேண்டும்.

தெளிவாகப் பேசும் பழக்கத்தை வளர்க்க வல்லுநர்கள் தரும் `டிப்ஸ்கள்’ இவை:

1. ஒவ்வொரு வாக்கிய முடிவிலும் நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடிக்காவிட்டால் குரலின் தொனியைக் குறைக்காதீர்கள்.

2. பேசும்போது அடிக்கடி உம், ஆ, இர், வந்து… என்று சொல்வதைத் தவிருங்கள்.

3. வாக்கிய முடிவின்போது குரலை உயர்த்தாதீர்கள். அப்படிச் செய்வதால், நீங்கள் ஏதோ கேள்வி கேட்பது போலப் படும். இல்லாவிட்டால் நீங்கள் சொல்லும் விஷயத்தில் உங்களுக்கே நம்பிக்கை இல்லாதது போலப்படும்.

4. குரலின் தொனியில் எச்சரிக்கையாய் இருங்கள். ஏனெனில் தொனிதான் எவ்வளவு பெரிய விஷயத்தையும் வெளிப்படுத்தும்.

5. பேச்சின் நடுவே ஆழ்ந்த சுவாசத்தை இழுக்க வேண்டும் போலிருந்தால் அதற்குத் தயங்காதீர்கள்.

6. தொலைபேசியில் பேசும்போது சட்டென்று பேச்சை நிறுத்தாதீர்கள். அப்படி நிறுத்தினால், பேசி முடித்துவிட்டார்கள் என்று போனை வைத்துவிடுவார்கள்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 3,154 other followers

%d bloggers like this: