மரபணு செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் ரிமோட் கண்ட்ரோல்!

`ஒரு விலங்கு அல்லது அதன் உயிரணுவை தொடாமலேயே அந்த விலங்கின் உயிரணுக்களையும், அவற்றின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த முடியுமா?’ என்றால் `ஓ, கட்டுப்படுத்தலாமே’ என்று கோரசாக சொல்கிறார்கள் உயிரியல் விஞ்ஞானிகள்.

எப்படி என்று கேட்டால், `ரிமோட் கண்ட்ரோல் வைத்துத்தான்’ என்கிறார்கள் கூலாக. ரிமோட் கண்ட்ரோல் வைத்து டி.வி., கார் போன்ற மின்சாதனங்களை இயக்க முடியும். ஆனால் உயிரணுக்களை எப்படி இயக்க முடியும்?

உண்மைதான். `ரிமோட் கண்ட்ரோல் போல செயல்படும் ரேடியோ அலைகளை, எலி போன்ற விலங்குகளின் உடலிலுள்ள உயிரணுக்களின் மீது செலுத்தி, அதன் மரபணு செயல்பாடுகளை நம் தேவைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள முடியும்’ என்பதுதான் உயிர்தொழில்நுட்பவியல் உலகில் உலவி வரும் சமீபத்திய ஹாட் செய்தி. இன்னும் சுவாரசியமாக, `ரேடியோ அலைகளைக் கொண்டு உயிரணுக்களின் சில பகுதிகளை உஷ்ணப்படுத்தி, ஒரு குறிப்பிட்ட மரபணுவை தூண்டுவதன் மூலம் இன்சுலின் உற்பத்தியை தூண்ட முடியும்’ என்று நிரூபித்திருக்கிறார்கள் அமெரிக்காவின் ராக்பெல்லர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

ஆச்சரியமான, ஆனால் அட்டகாசமான இந்த ஆய்வை தலைமையேற்று நடத்தியிருப்பவர் ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மரபியலாளர் ஜெர்ரி ப்ரைடுமேன்.

இந்த ஆய்வில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பிரத்தியேகமான உயிரணுக்கள் எலியின் உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தப்பட்டன. இந்த உயிரணுக்களில், உஷ்ணமடையும் போது திறந்துகொள்ளும் தன்மை கொண்ட TRPV1 என்னும் துளையும், கால்சியம் கிடைத்தால் இன்சுலின் உற்பத்தி செய்யும் மரபணு சுவிட்சும் வடிவமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட இந்த உயிரணுக்களின் மீது முதலில் ரேடியோ அலைகள் செலுத்தப்பட்டன. இதனால் உண்டான வெப்பத்தால் உயிரணுக்களின் உள்ளே இருக்கும் TRPV1 துளைகள் திறந்து கொண்டன. பின்னர், இந்த துளை வழியாக பாயும் கால்சியம் அயான்கள் இன்சுலின் உற்பத்தி செய்யும் மரபணு சுவிட்சை ஆன் செய்கின்றன. இதனால் இன்சுலின் உற்பத்தி தொடங்குகிறது.

இப்படித்தான், மரபணு செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் ஒரு ரிமோட் கண்ட்ரோலாக ரேடியோ அலைகள் செயல்படுகின்றன என்கிறார் ஆய்வாளர் ஜெர்ரி ப்ரைடுமேன்.

ஓர் உயிரணுவை தொடாமலேயே, ஒளி மற்றும் அல்ட்ரா சவுண்டு கதிர்களை வைத்து அதன் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என்பது பழைய செய்தி.

ஆனால், `உயிரணுக்களின் உள்ளே இருக்கும் மரபணுவின் செயல்பாடுகளை ரேடியோ அலைகளைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும்’ என்பது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருப்பது, உலகில் இதுவே முதல் முறை என்கிறார் ஆய்வாளர் ப்ரைடுமேன்.

அது சரி, உயிரணுக்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த ஒளியும், அல்ட்ரா சவுண்டு கதிர்களும் இருக்கும்போது ரேடியோ அலைகள் எதற்கு?

ஏனென்றால், ஒளி மற்றும் அல்ட்ரா சவுண்டில் இல்லாத பல வசதிகள் ரேடியோ அலைகளில் உண்டு என்பதால்தான்.

உதாரணமாக இந்த ஆய்வில், ரேடியோ அலைகள் ஒரு தசையையோ அல்லது ஒரு உயிரணுவையோ உஷ்ணப்படுத்தாமல், உயிரணுக்களின் உள்ளே இருக்கும் TRPV1 என்னும் குறிப்பிட்ட துளைகளை மட்டும் உஷ்ணப்படுத்துகின்றன.

ஆனால், அல்ட்ரா சவுண்டு கதிர்கள் ஒரு தசை மொத்தத்தையும் சுமார் 42 டிகிரி செல்சியஸ் வரை உஷ்ணப்படுத்துகின்றன. இதனால் உயிரணுக்கள் சேதப்படலாம். அல்லது வேறு விதமான பாதிப்புகள் ஏற்படலாம்.

அதேபோல, ஒளிக் கதிர்களால் ஒரு தசையினுள் ஒரு குறிப்பிட்ட ஆழம் வரைதான் ஊடுருவிச் செல்ல முடியும். ஆனால், ரேடியோ கதிர்களால் ஒளியை விட பல மடங்கு அதிகமாக ஊடுருவிச் செல்ல முடியும்.

எதிர்காலத்தில் ஸ்டெம் செல் தெரபி போன்ற உயிர் காக்கும் மருத்துவ தொழில்நுட்பங்களில், ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி மரபணுக்களை தூண்டக் கூடிய ஒரு பிரகாசமான வாய்ப்பு இருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி- முனைவர் பத்மஹரி

Follow

Get every new post delivered to your Inbox.

Join 3,154 other followers

%d bloggers like this: