Category Archives: ஆன்மீகம்

கோவில் விளங்க குடி விளங்கும்!

இன்று, நாட்டின் பல்வேறு இடங்களில் பழுதுபட்டு கிடக்கும் ஒவ்வொரு பழமையான கோவிலுக்கு பின்பும், ஒரு உயிரோட்டமுள்ள வரலாறு உள்ளது. அதனால் தான், காஞ்சி மகா பெரியவர், ‘புதுசு புதுசா கோவில் கட்டறதை விட, பழைய கோவில்களை புதுப்பிச்சு, விளக்கேத்தி, ஒரு வேளை பூஜையாவது நடக்கும்படி செய்வது பெரிய புண்ணியம்…’ என்றார்.
‘கோவில் விளங்க குடி விளங்கும்’ என்பது முதுமொழி. பழுதுபட்டு கிடக்கும் கோவிலை சுத்தப்படுத்தி, விளக்கேற்றி வழிபட்டால், கடவுளின் அனுக்கிரகம் மட்டுமல்ல, குடும்பமும் சுபிட்சம் அடையும்.
ஒரு ஊரில் தம்மக்கா என்ற பெண்மணி வாழ்ந்து வந்தாள். அவள் ராமரிடம் அளவில்லாத பக்தி கொண்டவள். நாளாக நாளாக, ராமரை நேராக தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வம் தம்மக்காவிற்கு ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு நாளும், தன் மனதுள் உறைந்துள்ள ஆசையை விண்ணப்பமாக வைத்து, ராமபிரானிடம் வேண்டி வந்தாள் தம்மக்கா.
சரணாகதி ரட்சகனான ராம பிரான், தம்மக்காவின் விருப்பத்தை நிறைவேற்றத் தீர்மானித்தார். ஒரு நாள், இரவு நேரம்… தம்மக்கா வழிபாட்டை முடித்து, ராமரைத் தியானித்தபடியே தூங்கி விட்டாள். கனவில் அவளுக்கு காட்சியளித்த ராமர், ‘தம்மக்கா… இதோ அருகில் உள்ள மலையில் நான் இருக்கிறேன்; அங்கு வந்து வழிபாடு செய்…’ என்று அருளி, மறைந்தார்.
கனவு கலைந்தது; அதன்பின், தம்மக்கா தூங்கவில்லை.
காரணம், நல்ல கனவு கண்டால், அதன் பின் தூங்கக்கூடாது; அப்போதுதான் அது பலிக்கும். கெட்ட கனவு கண்டால், அதன் பின் தூங்கிவிட வேண்டும்; அப்போது தான் அது பலிக்காது என்பர் பெரியோர். அதன் காரணமாக, கனவில் இறை தரிசனம் கிடைத்த தம்மக்கா, அதன்பின் தூங்கவில்லை.
காலையில் எழுந்ததும், தான் கண்ட கனவை ஊர் மக்களிடம் தெரிவித்து, ‘கனவில் வந்து கருணை பொழிந்த அந்த ராமருக்கு அவர் சொன்னபடியே, கோவில் கட்டி வழிபாடு செய்ய வேண்டும்…’ என்றாள். தர்ம சிந்தனையும், தெய்வ பக்தியும் கொண்ட பெரும் செல்வந்தர் ஒருவர், ‘அம்மா… நானே முன்னின்று உன் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்…’ என்றார்.
ஊர் மக்களும், தம்மக்காவும், கனவில் ராமபிரான் கூறிய மலைக்கு சென்றனர். நீண்ட நேரம் தேடிய பின், அங்கே ஒரு புதரின் அடியில் ராமர், லட்சுமணன், சீதை மற்றும் அனுமார் ஆகிய நால்வரின் விக்கிரகங்கள் இருந்தன. அழகொழுகும் அந்த விக்கிரகங்களைத் தரிசித்ததும், கண்ணீர் விட்டு, கை கூப்பி தொழுது மகிழ்ந்தாள் தம்மக்கா.
பின்னர், தரும சிந்தனை கொண்ட செல்வந்தர் மற்றும் ஊர் மக்களால், அம்மலை மேல், அழகானதொரு கோவில் உருவானது.
கோவில் உருவாவதற்கு மூல காரணமாக இருந்த தம்மக்கா, ராமரை வழிபட்டு, திருவருள் பெற்றாள். தம்மக்காவால் உருவாகிய அக்கோவிலை, பிற்காலத்தில் அரசர் ஒருவர் செப்பனிட்டார். அதன்பின் கவனிப்பாரின்றி கால வெள்ளத்தில் அக்கோவில் பழுதடைந்து, முள்ளும், புதரும் மண்டிப் போனது. அக்கோவிலை மீண்டும் கோபமண்ணா என்பவர் புதுப்பித்தார். அக்கோவில்தான், பத்ராசல ராமர் கோவில். ராமரே வந்து வெளிப்படுத்திய அந்த விக்கிரகங்களை, இன்றும் நாம் தரிசிக்கலாம். தம்மக்காவிற்கு அருள் புரிந்த ராமர், நமக்கும் அருள் புரிவார்.

திருப்பம் தரும் திருப்பதி ! புரட்டாசியில் புண்ணிய தரிசனம்!

‘வேங்கடேத்ரி சமஸ்தானம் பிரம்மாண்டே நாஸ்திகிஞ்சன
வேங்கடேஸ சமோதேவோ நபூதோந பவிஷ்யதி’

திருமலை திருப்பதி  இந்த க்ஷேத்திரத்துக்கு இணையான வேறு க்ஷேத்திரம் இல்லை; திருமலை திருவேங்கடவனுக்கு இணையான வேறு தெய்வம் இல்லை.

உண்மைதான்! ஏழுமலையானைக் கண்கண்ட தெய்வமாக ஏற்றுக்கொண்ட அவன் அடியார்களுக்கு, அவனுடைய திருநாமமே உயிர் உந்தும் மந்திரம்; அவன் கோயில்கொண்டிருக்கும் திருமலையே உலகம். இன்றைக்கும்… வழக்கமான நாட்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் லட்சோபலட்சம் பக்தர்களும் திருமலையில் குவிகிறார்கள் என்றால், திருவேங்கடவனின் அருட்கருணையே அதற்குக் காரணம்!

Continue reading →

ஏகாதசி விரதத்தின் பலன்!

கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து பக்தி செலுத்தினால், நமக்கு வரும் இடர்களை அவனே தாங்கிக் கொள்வான் என்பதை உணர்த்தும் புராணக்கதை இது:
சூரிய வம்சத்து அரசர் ருக்மாங்கதன்; நீதி நெறி முறைப்படி நல்லாட்சி நடத்தி வந்தார். அவர் பெருமாள் மீது கொண்ட அளவுக்கடந்த பக்தியினால், ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடித்து வந்தார். அத்துடன், தன் நாட்டு மக்களும் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதன் காரணமாக அனைத்து மக்களும் ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து வந்ததால், அந்நாட்டில் இறந்த அனைவரும் சொர்க்கத்தையே அடைந்தனர்; எமலோகத்திற்கு ஒருவர் கூட செல்லவில்லை. அதனால், எமதர்மன் பிரம்மதேவரிடம் சென்று முறையிட, அவர் மோகினி எனும் ஒரு அழகிய பெண்ணை சிருஷ்டித்து, ‘நீ போய் ருக்மாங்கதனின் ஏகாதசி விரதத்தை கெடுத்து வா…’ என அனுப்பினார்.
அதன்படி மோகினியும் வர, அவள் வீசிய மோக வலையில் அகப்பட்ட அரசர், தன்னை மணம் செய்து கொள்ள வேண்டினார். மோகினியோ, ‘நான் என்ன சொன்னாலும், அதை கேட்டு நடக்க வேண்டும்; மறுக்கக் கூடாது…’ என நிபந்தனை விதித்தாள்.
மன்னர் ஒப்புக் கொள்ள, திருமணம் நடந்தது. மோகினியுடன் மன்னர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாலும், வழக்கம் போல் அரசனும், அந்நாட்டு மக்களும் ஏகாதசி விரதத்தை கடைபிடித்து வந்தனர். ஏகாதசி விரதத்தை நிறுத்துவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்தாள் மோகினி.
ஒருநாள், மன்னர் மோகினியுடன் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்த போது, ஏகாதசி விரதம் பற்றிய அறிவிப்புக்கான முரசொலி கேட்டது. அதைக் கேட்டதும் மன்னர் உடனே எழுந்து, ஆலயத்திற்கு புறப்பட தயாரானார். மோகினி அவரைத் தடுத்து, ‘மன்னா… என்னை மணம் செய்து கொள்ளும் போது என் விருப்பப்படி நடப்பேன் என்று சொன்னீர்களல்லவா… அப்படி கொடுத்த வாக்கின்படி, இப்போது நீங்கள் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க கூடாது…’ என்றாள்.
‘மோகினி…ஏகாதசி விரதத்தின் பேரில் எனக்குள்ள விருப்பத்தை நீ அறிவாய். ஆகையால், அதை தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள் தருகிறேன்…’ என்றார்.
மோகினியும் சளைக்கவில்லை. ‘அப்படியானால், உங்கள் மகனின் தலையை வெட்டிக் கொடுங்கள்… எனக் கேட்டாள்.
அதைக்கேட்ட மன்னர் மனம் கலங்கி, அவளிடம், ‘வேறு எதையாவது கேள்’ என, மன்றாடிப் பார்த்தார்; மோகினி ஒப்புக் கொள்ளவில்லை. அந்தநேரம் அங்கு வந்த மன்னரின் மகன், விஷயத்தை அறிந்து, ‘தந்தையே… பூமியில் ஜனனம் எடுத்து விட்டாலே மரணம் நிச்சயம்; என்றோ போகக் கூடிய என் உயிர், என் தந்தையின் கொள்கைக்காக போகிறதென்றால் எனக்கு சந்தோஷமே… வெட்டுங்கள் என் தலையை…’ என்றான்.
வேறு வழியின்றி, மன்னர் தன் மகனை வெட்ட துணிந்த போது, பகவான் நாராயணன், ருக்மாங்கதனுக்கு காட்சியளித்து, அருள் புரிந்தார்; இளவரசன் உயிர் பிழைத்தான். தன் எண்ணம் பலிக்காததால், மோகினி அங்கிருந்து விலகினாள்.
ஏகாதசி விரதத்தின் மீது ருக்மாங்கதன் கொண்ட நம்பிக்கையே, அவனுக்கு வந்த இடர்களை தவிடு பொடியாக்கி, அவனை காத்தது.

தமிழகத்தில் ஓணம்!

செப்., 6 – ஓணம்
ஓணம் கேரள மக்களின் பண்டிகையாக இருந்தாலும், தமிழகத்திலும் ஓணம் கொண்டாடப்பட்டுள்ளது. கேரளத்தில் உள்ள அனைத்து கோவில்களிலுமே கஜபூஜை நடக்கும்; ஓணம் பண்டிகையின் போதும், யானைகளை அலங்கரித்து அணிவகுப்பு நடத்துவர். அதேபோன்று மதுரையில், பாண்டியர் ஆட்சிக் காலத்தில், ஓணம் பண்டிகை காலத்தில் யானைச் சண்டை நடக்கும். நான்கு புறமும் கூழாங்கற்களைக் குவித்து, மேடான பகுதியாக்கி அதன் மேல் மக்கள் அமர்ந்து கொள்வர். நடுவிலுள்ள பள்ளத்தில் யானைகளை சண்டையிடச் செய்வர். வெற்றி பெறும் யானையின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது சேவல் சண்டை, ஆட்டுக்கிடா சண்டை நடப்பது போல் அக்காலத்தில் யானைச் சண்டையும் நடந்துள்ளது.
மதுரைக்கும், ஓணத்திற்கும் புராண ரீதியாகவும் தொடர்பு இருந்துள்ளது. மகாபலி மன்னன் மிகவும் நல்லவன்; ஆனால், ஆணவக்காரன். அந்த ஆணவம் மட்டும் நீங்கி விட்டால், அவன் மோட்சத்திற்கு தகுதியுள்ளவனாகி, தேவலோகத்தை அடக்கியாண்டு விடுவான் என்று நினைத்த தேவேந்திரன், திருமாலின் உதவியை நாடினான். திருமால், குள்ள வடிவம் எடுத்து வாமனராக பூமிக்கு வந்தார்.
உலகை தன் கட்டுக்குள் கொண்டு வர, யாகம் நடத்திக் கொண்டிருந்த மகாபலி, வந்தவர்கள் கேட்டதையெல்லாம் கொடுத்தான்.
வாமனர் அவனிடம், தனக்கு மூன்றடி நிலம் வேண்டுமென கேட்டார். இந்த சின்னஞ்சிறு கால்கள் எவ்வளவு நிலத்தை அளந்து விடும் என நினைத்து சம்மதித்தான் மகாபலி. அவரோ விஸ்வரூபமெடுத்து, இரண்டடியால் உலகை அளந்து, மூன்றாம் அடிக்கு, ‘எங்கே நிலம்…’ என கேட்டார்.
மகாபலி தன் தலையைக் கொடுக்க, அவனை பாதாளத்திற்குள் அனுப்பினார். பிற அவதாரங்களில், திருமால் அசுரர்களைக் கொன்று விடுவார்; ஆனால், வாமன அவதாரத்தில் மகாபலியை ஆட்கொண்டார். அதனால் தான் அவரை, ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ என பாராட்டுகிறாள், ஆண்டாள். பெருமாள் உலகளந்த சமயத்தில், அவரது ஒரு திருவடி வானத்தை கிழித்து, பிரம்மலோகத்தை எட்டியது. இதைக்கண்டு மகிழ்ந்த பிரம்மா, அந்த திருவடியை தன் கமண்டலத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்தார். அந்த நீர் பூமியை நோக்கி வந்தது; அதுவே, ‘நூபுர கங்கை’ எனப்பட்டது. ‘நூபுரம்’ என்றால் சிலம்பு; திருமாலின் திருவடி சிலம்பின் மீது பட்ட நீர், கங்கையாகப் பெருகியதால் இந்த தீர்த்தத்திற்கு நூபுர கங்கை என பெயர் ஏற்பட்டது. இந்த தீர்த்தம் மதுரை அழகர் மலையில் இருக்கிறது; இங்கு புனித நீராடுவதை பக்தர்கள் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர்.
ஓணம் திருநாளன்று, நீங்களும் நூபுர கங்கைக்கு வந்து நீராடுங்கள்; அன்று இல்லங்களில் பல வகை உணவு சமைத்து, குழந்தைகளுடன் ஓணத்தைக் கொண்டாடி மகிழுங்கள்.

வரமா….. சாபமா?

உட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்க வேண்டும்; உலகத்தில் உள்ள அனைத்தையும் உடனடியாக கண்டு களித்து, உண்டு தீர்த்தாக வேண்டும். மொத்தத்தில், உழைக்காமல் உல்லாசமாக வாழ வேண்டும்; இதுதான் இன்றைய பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது. உழைக்க விரும்பாத சோம்பேறிகளின் வாழ்க்கை எப்படி முடிந்து போகும் என்பதற்கு வியாசர் கூறிய கதை இது:
ஒட்டகம் ஒன்று, தனக்கு நீண்ட கழுத்து இருந்தால், இருந்த இடத்திலிருந்தே சுலபமாக உணவைப் பெற்று விடலாமே என நினைத்து, அத்தகைய நீண்ட கழுத்தைப் பெறுவதற்காக பிரம்மாவை நோக்கி கடும் தவம் செய்தது. அதன் தவத்திற்கு இரங்கிய பிரம்ம தேவர், ‘ஏன் இவ்வளவு கடுமையாக தவம் செய்கிறாய்… உனக்கு என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார்.
‘சிருஷ்டி கர்த்தாவே… என் கழுத்து நூறு மீட்டருக்கு மேல் நீண்டதாக இருக்க வேண்டும்; அந்த வரத்தைத் தாருங்கள்…’ எனக் கேட்டது ஒட்டகம். அவ்வாறே வரத்தைக் கொடுத்தார் பிரம்மதேவர்.
ஒட்டகத்திற்கு இப்போது கழுத்து மிக நீண்டதாக மாறியது. இதனால், அதற்கு சந்தோஷத்தில் தல, கால் புரியவில்லை. ‘அப்பாடா… இனிமேல் உணவு தேடி அலைய வேண்டாம்; இருந்த இடத்தில் இருந்தபடியே கழுத்தை நீட்டி, வளைத்து தின்னலாம்…’ என நினைத்து மகிழ்ந்தது; அது நினைத்தபடியே வாழ்க்கை சொகுசாக சென்றது.
இவ்வாறு சுகமாக வாழ்ந்து கொண்டிருந்த போது, ஒரு நாள் பெருத்த புயற் காற்றுடன் மழை பெய்தது. ஒட்டகம் பயந்து போய் தன் தலையையும், கழுத்தையும் ஒரு குகையில் நுழைத்துக் கொண்டது. குகைக்குள் கழுத்தை மட்டுமே நுழைக்க முடிந்தது; உடல் வெளியே இருந்தது.
அப்போது நரி ஒன்று, தன் துணையுடன் பசியால் களைத்து, மழையிலிருந்து ஒதுங்குவதற்காக அக்குகைக்குள் நுழைந்தது. அதன் பார்வையில், ஒட்டகத்தின் கொழுத்த நீண்ட கழுத்து தென்பட்டது. உடனே நரியும், அதன் மனைவியும் ஆளுக்கொரு பக்கமாக ஒட்டகத்தின் கழுத்தை கடித்து, தின்னத் துவங்கியது. சோம்பேறி ஒட்டகம் இறந்து போனது. தெய்வம் வரம் தந்தாலும், சோம்பேறி அதை நல்ல விதமாக உபயோகப்படுத்திக் கொள்ளாமல், தன்னுடைய சோம்பேறித்தனத்தால் அழிந்து விடுவான் என்கிறார் வியாசர்.

ஆசியாவின் பிரமாண்ட விநாயகர்! கணபதியே சரணம்!

கோவை, புலியகுளம் பகுதியில் அமைந்து உள்ளது ஸ்ரீமுந்தி விநாயகர் ஆலயம். இங்கே, அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான், ஆசியாவிலேயே மிகப்பெரிய விக்கிரகத் திருமேனியர் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.

இந்த ஆலயம், அந்தப் பகுதி மக்களால், கடந்த 98-ம் வருடம், ஜகத்குரு ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 

எதுவாக இருப்பினும், என்ன இன்னல் வந்திடினும் முன்னின்று வந்து அனுக்கிரகம் செய்து வைப்பாராம் இவர். எனவே, இவருக்கு ஸ்ரீமுந்தி விநாயகர் எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்வர். அனைத்துக் கடவுளருக்கும் முதன்மையானவர் என்பதாலும் இந்தத் திருநாமம் இவருக்கு!

‘முந்தி விநாயகர் சுமார் 19 அடி 10 அங்குல உயரமும் 11 அடி 10 அங்குல அகலமும், 8 அடி கனமும் கொண்டவராக, சுமார் 190 டன் எடை கொண்டவராகத் திகழ்கிறார். இன்னொரு சிறப்பு… இந்தச் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது. விநாயகரின் நெற்றி மட்டுமே இரண்டடி அகலம். துதிக்கை வலம் சுழிந்து காட்சி தருகிறார் பிள்ளையார். நான்கு திருக்கரங்கள். வலது முன் கரத்தில் தந்தமும் பின் கரத்தில் அங்குசமும்; இடது முன்கரத்தில் பலாப்பழமும் பின் கரத்தில் பாசக் கயிறும் கொண்டு காட்சி தருகிறார். தவிர, துதிக்கையில் மகாலட்சுமியின் அம்சமான அமிர்த கலசத்தைத் தாங்கியபடி, தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீவிநாயகக் கடவுள். அவரின் கிரீடத்திலும் தாமரை மேல்நோக்கி விரிந்திருப்பது போன்ற வேலைப்பாடு மிக அழகு!

வாசுகிப் பாம்பை, தன் வயிற்றில் கட்டிக் கொண்டிருப்பதால், நாக தோஷத்தை நீக்கி அருள்கிறார் ஸ்ரீகணபதி பெருமான். நாக தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து ஸ்ரீவிநாயகரை வணங்கினால், தோஷம் நீங்கி, வளமுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை” என்கிறார் கோயிலின் கார்த்திகேய குருக்கள். 

‘பிடியதன் உருவுமை கொளமிகு கரியது’ என்ற வாக்குக்கு இணங்க, அம்பாள் பார்வதியும் பரமேஸ்வரனும் யானை உருக்கொண்டு ஸ்ரீவிநாயகப் பெருமானாகத் தோன்றியது போல் காட்சி அளிக்கிறார் கணபதி. அதாவது, அவரின் வலது பகுதி, ஆண்களைப் போலவும் இடது பக்கம் பெண்களின் வடிவிலும் அமைந்து உள்ளது.

‘சித்திரை முதல் நாள், சுமார் 3 டன் எடை கொண்ட பலவகை பழங்களால், விநாயகருக்கு அலங்கார பூஜை நடைபெறுகிறது. அந்த மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்வதும் பக்தர்களுக்கு பழங்கள் விநியோகிப்பதும் சிறப்புற நடைபெறும். அதேபோல் விநாயக சதுர்த்தி நாளில், அதிகாலையிலேயே விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுவதுடன், மூன்று டன் எடை கொண்ட பல மலர்களால் ஆன மாலையை அணிவிக்கப் பட்டு, ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார்.” எனத் தெரிவிக்கிறார் குருக்கள்.

விழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பிள்ளையாரைத் தரிசித்துச் செல்வார்கள். நவராத்திரி விழாவும் இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீமுந்தி விநாயகரை வணங்கினால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். பதினாறு வகை பேறுகளும் பெற்று, பெருவாழ்வு வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்!

கணபதி நம் குணநிதி!

ஆக., 29 – விநாயகர் சதுர்த்தி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான கடவுள் விநாயகர். நம் மனதில் மட்டுமல்ல, நாம் செல்கிற வழியெல்லாம் ஆற்றங்கரை, அரசமரம், முச்சந்தி, தெருக்கோடி, முட்டுச்சந்து, சாலையோரம் என, எல்லா இடங்களிலும் அமர்ந்திருக்கும் இவரே, நமக்குத் துணையாக வருபவர். இவருக்கு பிரமாண்ட கோவில் வேண்டாம்; நினைக்கும் நேரத்தில் நினைத்த இடத்தில், மஞ்சள் பொடி, களிமண் என எதில் பிடித்து வைத்தாலும், அதில் ஆவாஹனம் ஆகி, நமக்கு அருள்பாலிப்பார்.
ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் முன், அது தடையின்றி நடக்க, விநாயகரை வணங்கி அவருடைய அனுக்ரகத்தைக் வேண்டுகிறோம். அம்பாள் பண்டாசுரனை வதம் செய்யும் போது, அசுரனும், அவனுடைய சகாக்களும் எய்த பாணங்களை, தன் யந்திரத்தினால் வீழ்த்தி, தேவியை வெற்றி பெறச் செய்தார் விநாயகர் என்பதை, லலிதா சகஸ்ரநாமத்தில், ‘மஹா கணேச நிர்பின்ன விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா’ என்ற நாமா மூலம் அறியலாம். இதன் மூலம், இக்கட்டான சூழ்நிலையில் ஒரு செயலை முடிக்க நினைப்பவர்கள், விநாயகரை வணங்கி அந்த காரியத்தை துவங்கினால், அவர் நல்லபடியாக முடித்து தருவார்.
விநாயகருக்கு மிக எளிய உணவுகளே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. ஆனால், அந்த எளிய உணவுக்குள் மிகப்பெரிய தத்துவங்கள் புதைந்துள்ளன. அவருக்கு மிகவும் பிடித்தது மோதகம்; இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில், இது விநாயகருக்கு படைக்கப்படுகிறது.
அதேபோல் கரும்பும் இவருக்கு பிடிக்கும்; இனித்தாலும் கடிப்பதற்கு கடினமானது கரும்பு. வாழ்க்கையும் இப்படித்தான், கஷ்டப்பட்டு உழைத்தால், இனிமையாக வாழலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இது படைக்கப்படுகிறது. அவல், பொரியை இவருக்கு படைப்பர்; ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருட்கள், வாழ்க்கையில் நாம் சந்திக்கிற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதை குறிக்கிறது.
அம்பாளுக்கு நவராத்திரி போல, விநாயகருக்கும் நவராத்திரி உண்டு. விநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து வரும் ஒன்பது நாட்களை, ‘விநாயகர் நவராத்திரி’ என்பர். ஒரு காலத்தில், இந்ந ஒன்பது நாட்களும் விரதம் இருந்து விநாயகரை பூஜித்து, ஒரு விழாவாகவே கொண்டாடி உள்ளனர். இவ்விரதத்தை அனுஷ்டிப்போருக்கு நிகழ்கால வாழ்வில் செல்வமும், வாழ்வுக்குப் பின் மோட்சமும் கிடைக்கும் என்பர். குணநிதியான கணபதியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!

விப்ரதனும், விநாயகரும்!

‘செய்த பாவமெல்லாம் பரிபூரணம் உணர்ந்த ஞானி விழிபட ஓடுமே…’ – என்பது பெரியோர் வாக்கு. இதன் அர்த்தம், அறிந்தும், அறியாமலும் நாம் செய்த பாவங்கள், ஆத்ம ஞானம் பெற்ற ஞானியின் பார்வைபட்டால் நீங்கி விடும் என்பதாகும். நந்துரம் எனும் நகரத்தை ஒட்டி இருந்த காட்டில், கொடும் கொலை பாதகச் செயல்களைச் செய்து வந்த விப்ரதன் என்ற வேடன் வாழ்ந்து வந்தான்; காட்டு விலங்குகள் கூட அவனைக் கண்டால் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளும். அந்தப் பக்கமாக யார் வந்தாலும், அவர்களைக் கொன்று, உடைமைகளைக் கவர்வதே அவனது தொழில்.
ஒருநாள், அந்த காட்டு வழியாக முற்கல முனிவர் என்பவர், தன்னை மறந்த நிலையில், விநாயகப் பெருமானைத் துதித்து பாடியபடி வந்தார். அவர் குரலைக் கேட்டதும், விப்ரதன் அவரைக் கொல்வதற்காக, கத்தியுடன் அவர் எதிரில் போய் நின்றான். முற்கல முனிவர் பயந்து நடுங்காமல், அன்போடு அவனைப் பார்த்தார்.
‘யாராக இருந்தாலும் என்னைப் பார்த்தவுடன் தலை தெறிக்க ஓடுவர்; ஆனால், இவர் அமைதி யாக நிற்கிறாரே…’என்று நினைத்து, ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தான் விப்ரதன். அப்போது அவன் கையில் இருந்த கத்தி, அவனையறியாமலேயே கீழே விழுந்ததுடன் அவன் மனதில் இருந்த குரூரம் குறைந்து, கனிவு வந்தது.
தன் மனமாற்றத்தை எண்ணி ஆச்சரியம் அடைந்த விப்ரதன், அவரின் திருவடிகளில் விழுந்து, ‘என் குரூரத்தை அழித்த கருணா மூர்த்தியே… உங்களைப் பார்த்ததும் என் பாவமெல்லாம் நீங்கியது; மனம் அமைதி அடைந்தது. எனக்கு வழி காட்டுங்கள் குருவே…’ என, கண்ணீர் மல்க வேண்டினான்.
விப்ரதனை நீராடி வரச்சொல்லிய முற்கல முனிவர், அவன் தலையில் தன் கரத்தை வைத்து, ‘ஓம் கணேசாய நமஹ…’ எனும் மந்திரத்தை அவன் செவியில் ஓதினார்.
அதன் பின், பட்டுப்போன ஒரு கொம்பை தரையில் நட்டு, ‘நான் சொன்ன மந்திரத்தை சொல்லி, தினமும் இந்தக் கொம்பிற்கு தண்ணீர் ஊற்றி வா; இது தழைக்கும் காலத்தில், உனக்கு மந்திர சித்திகள் கைகூடும்…’ என்று சொல்லிச் சென்றார். அவர் சொன்னபடியே செய்து வந்தான் விப்ரதன். கட்டையும் துளிர்க்க துவங்கியது; அதன் அருகிலேயே அமர்ந்து தவம் செய்யத் துவங்கினான் விப்ரதன்.
ஆண்டுகள் பல உருண்டோடியது. ஒரு நாள் அந்தக் காட்டிற்கு வந்த முற்கல முனிவர், ஆழ்ந்த தவத்தில் அமர்ந்திருந்த விப்ரதனைப் பார்த்தார். ‘முற்றும் துறந்த முனிவர்கள் கூட இந்நிலையை அடைய முடியாதே…’ என வியந்தவர், தன் கமண்டல நீரை, விப்ரதன் மீது தெளித்தார்.
முனிவரின் கமண்டல நீர் பட்டதும், விப்ரதனிடம் இருந்த கொஞ்ச நஞ்ச தீவினைகளும் விலகி, அவனுக்கு புருவ மத்தியில், சிறு தும்பிக்கை முளைத்தது. இதன் காரணமாகவே விப்ரதனுக்கு, புருசுண்டி என்ற பெயர் ஏற்பட்டது. ‘சுண்ட’ என்றால், தும்பிக்கை.
விநாயக பக்தர்களில் இந்தப் புருசுன்டி தான் முதலாவதாக வைத்து போற்றப்படுகிறார். தீயவன் திருந்துவது மட்டுமல்ல மிகவும் உயர்ந்த நிலையை அடையலாம்; அவ்வாறு செய்யும் ஆற்றல், ஞானிகளின் பார்வைக்கு உண்டு. ஞானிகளின் அருள் கடாட்சம் நம் அனைவர் மீதும் வீசட்டும்.

கண்ணன் கருணை!

கடவுள் நம் வாழ்வில் எத்தனையோ சந்தோஷங்களைக் கொடுத்திருப்பார்; அப்போதெல்லாம், மகிழ்ச்சியின் உன்மத்தில், ‘நான்’ எனும் அகங்காரத்துடன், கடவுளை மறந்து விடுவர். ஆனால், சிறு துன்பம் வந்து விட்டால், ‘கடவுளுக்கு கண்ணில்லை…’ என்று நிந்திப்பதுடன், அவர் இருப்பையே சந்தேகிப்பர்.
இத்தகையோருக்கு மத்தியில், தனக்கு ஏற்பட்ட கடுமையான உடல் நோவுக்கு மத்தியிலும், கண நேரம் கூட கடவுளின் திருவருளை மறக்காத பக்தர் ஒருவருக்கு, கண்ணன் அருளிய கதை இது:
‘நாராயணீயம்’ பாடிய மேப்பத்தூர் நாராயண பட்டதிரி, ‘ஞானப்பானை’ என்ற நூலை எழுதிய பூந்தானம், ‘கிருஷ்ண கர்ணாம்ருதம்’ பாடிய வில்வமங்கள் ஆகியோர் வாழ்ந்த காலத்தில், அத்யாச்ரமி என்ற மகான் வாழ்ந்து வந்தார்.
இவர் பலகாலமாக குருவாயூரப்பன் சன்னிதியில், ஸ்ரீமத் பாகவத பாராயணம் மற்றும் நாராயண நாம சங்கீர்த்தனம் செய்து, தொண்டுகள் செய்து வந்தார். ஆனாலும், காலகிரமத்தில், அவரைக் குஷ்டநோய் பாதித்தது.
ஊரார் அதையும் குத்தலாக, ‘நாம ஜபம் செய்யறேன்னு இந்தப் பாவி என்னவெல்லாம் செய்தானோ… அது தான் இப்படி நோய் வந்து அவதிப்படுறான்…’ என்று ஏசினர்.
ஆனால், அத்யாச்ரமியோ, ‘குருவாயூரப்பன் ஏதோ அனுக்கிரகத்திற்காகவே நமக்கு இந்த நோயைத் தந்திருக்கிறார்…’ என்று நினைத்தார். ஆனாலும், ‘இந்நோயுடன் இங்கு இருப்பது சரியல்ல…’ எனத் தீர்மானித்து, குருவாயூரில் இருந்து புறப்பட்டு, நாம சங்கீர்த்தனம் பாடியபடி, திருச்சம்பரம் எனும் திருத்தலத்தை அடைந்தார்.
அப்போது, அவருக்கு நோய் முற்றி, உடம்பெங்கும் புண்ணாகி, புழு உருவாகி, துர்நாற்றம் அடித்தது. இதனால், அசையக் கூட முடியாத அவர், அங்கிருந்த இலஞ்சி மரத்தடியில் படுத்து விட்டார்.
மறுநாள், அந்த வழியாக, வில்வமங்கள் சுவாமிகள், தன் பரிவாரங்களுடன் வந்தார். அப்போது சில வழிப்போக்கர்கள் அவரிடம், ‘சுவாமிகளே… அந்தப் பக்கமாகப் போய் விடாதீர்; அங்கே ஒரு மகாபாவி குஷ்ட நோயால் புழுத்து கிடக்கிறான்…’ என்று சொல்லிச் சென்றனர்.
அந்த திசைப் பக்கமாக திரும்பிப் பார்த்தார் வில்வமங்களம். அப்போது, ‘வில்வமங்கள்… வில்வமங்கள்…’ என, இனிமையான குரல் ஒன்று அழைப்பது கேட்டு, குரல் வந்த திசையை நோக்கி நடந்தார். அங்கே…
அத்யாச்ரமியை, தன் மடியில் படுக்க வைத்து, மருத்துவம் செய்து கொண்டிருந்தார் பகவான். உலகையே காக்கும் தன் திருக்கரங்களால், அத்யாச்ரமியின் புண்களில் இருந்த புழுக்களை எடுத்தவர், உடலெங்கும் மென்மையாகத் தடவிக் கொடுத்தார்; விசிறியால் வீசினார். அநாதரட்சகனாகிய குருவாயூரப்பனின் செயலைக் கண்டு, வில்வமங்கள் சுவாமிகள் கண்ணீர் விட்டு வணங்கி, ‘கண்ணா… தீனபந்து; எல்லையில்லாத உன் கருணையை என்னவென்று சொல்வேன்…’ என்று பலவாறாக துதித்தார்.
அப்போது, குருவாயூரப்பன், ‘வில்வமங்கள்… என் பக்தன் ஒருவன், அவனுடைய கர்ம வினையின் பொருட்டு எத்தகைய துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தாலும், என் கிருபை அவனுக்கு அனுபவமாகும்; நாம சங்கீர்த்தனம் செய்யும் பக்தன் ஒருக்காலும் நாசமடைவதில்லை; சத்தியம்…’ என்றார்.
எந்த விதமான கஷ்டத்தையும் கடவுள் கிருபையாகக் கருதி, இன்பமடைய முடியும் என்பதை, வில்வமங்கள சுவாமிகள் உணர்ந்து கொண்டார்.

அழிவை தரும் அகங்காரம்!

தேனில் மூழ்கி, இறக்கும் வண்டைப் போல், ஆணவம் கொண்ட மனம், ‘தான்’ என்கிற அகங்கார மாயைக்குள் அகப்பட்டு, தன்னுடைய அழிவைத் தேடிக் கொள்கிறது. மேலும், ஆசை வயப்பட்ட மனமானது, பற்றுதலில் சிக்குண்டு, ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் போது, வன்மத்தையும், வெறுப்பையும் பிரதிபலிக்கிறது.
கிருபானந்த வாரியார் ஒரு சொற்பொழிவில் சொன்னது: ஒரு நண்பருடன் அவர் தோட்டத்துப் பாதையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, வழியில் தென்பட்ட நிலத்தில் பயிர்கள் நன்றாக விளைந்திருந்தது. அது, அவருடைய நிலம் என்பதால், ‘பயிர்கள் நன்றாக செழித்து வளர்ந்திருக்கிறதே…’ என்றேன். உடனே அவர், ‘நாசமாப் போக; மூணுமாசத்துக்கு முன்னால தான் இந்த நிலத்த வித்தேன்; இப்ப இது விளைஞ்சா என்ன, விளையாட்டி என்ன…’ என்றார் கடுப்புடன்.
அந்த நிலத்தை அவர் நல்ல விலைக்குத் தான் விற்றிருக்கிறார்; இருந்தாலும், நிலத்து மேல் இருந்த பற்று, கோபமாக வெளிப்பட்டு விட்டது, என்று கூறினார் கிருபானந்த வாரியார்.
அதே போன்று தான் அகங்காரம்! அறியாமையின் இருப்பிடமான இந்த அகங்காரமே மனிதனின் அழிவிற்கும் அவனுடைய கர்ம வினைக்கும் காரணமாக இருக்கிறது. அகங்காரத்தால் அழிந்து போன தேவலோக பசுக்களின் கதை இது:
ஒரு சமயம்… சிவபெருமான் ஆழ்ந்த தவத்தில் இருந்தார்.
அப்போது, தேவலோக காராம் பசுக்கள், வெறிபிடித்து, ஆகாய மார்க்கமாக, ஹூங்காரம் இட்டப்படி போய் கொண்டிருந்தன. அவ்வாறு சென்று கொண்டிருந்த போது, கீழே தவத்தில் இருந்த சிவபெருமானைப் பார்த்து, ‘அடடே… சிவபெருமான் சடைமுடியோடு தவம் செய்து கொண்டிருக்கிறாரே… இவருக்கு யார் காராம் பசு பாலால் அபிஷேகம் செய்யப் போகின்றனர். நாம் செய்தால் தான் உண்டு…’ என்று, அகங்காரத்துடன் ஆகாய வீதியில் இருந்தபடியே சிவபெருமானின் திருமுடியில் பாலைப் பொழிந்தன.
சிவபெருமான் நிமிர்ந்து பார்த்தார்; காராம் பசுக்கள் அப்படியே இறந்து விழுந்தன.
காராம் பசுவின் பாலைக் கொண்டு, இறைவனுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் விசேஷம்.
அப்படி இருக்கையில், காராம் பசுக்களுக்கு ஏன் அந்த நிலை ஏற்பட்டது?
அகங்காரம் தான்! எவ்வளவு தான் உயர்ந்த நிலையில் இருந்தாலும், அகங்காரம் கொண்டவர்கள் துயரத்தைச் சந்தித்து தான் ஆக வேண்டும்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 2,950 other followers