Category Archives: கட்டுரைகள்

திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? (பகுதி 6)

 

6. என்னதான் தீர்வு?

பத்திரிகைகள், பொருளாதார நிபுணர்கள், பொறுப்புள்ள சில எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று பலரும் அதிகரித்துவரும் சீனாவின் இறக்குமதி பற்றியும், தேவையில்லாத மூலப்பொருள் இறக்குமதி அதிகரிப்பு பற்றியும், ஏற்றுமதி குறைவு மற்றும் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படுவது பற்றியும் எச்சரிக்கை செய்தவண்ணம் இருந்தும், அதைப்பற்றிய கவலையே இல்லாமல் நிதியமைச்சரும் பிரதமரும் இருந்தனர் என்பதுதான் இன்றைய சிக்கலுக்கு மிகப்பெரிய காரணம்.

"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானுங் கெடும்’ என்பார் வள்ளுவப் பேராசான். ஆனால், இடிப்பார் இருந்தும், எச்சரிக்கைகள் பல தரப்பட்டும் அதை எல்லாம் சட்டையே செய்யாமல் தேசம் கொள்ளை போவதையும் இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படையே ஆட்டம் காண்பதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது மன்மோகன் சிங் அரசும் நிதியமைச்சகமும் என்பதுதான் வேதனை.

எல்லா தரப்பிலிருந்தும் விடுத்த பொது எச்சரிக்கைக்குப் பின்னர்தான், சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை 127 பில்லியன் டாலராக எகிறியது. 2006-07 முதல் சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையான 175 பில்லியன் டாலரில் இது 75 சதவீதமாகும். ஒன்று "இவர்கள் என்ன சொல்வது, நாம் என்ன கேட்பது’ என்கிற அகம்பாவ மனோபாவம் காரணமாக இருக்க முடியும். இல்லையென்றால், ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தே, அவர்களது ஆசியுடன்தான் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்று கருத வேண்டியிருக்கிறது.

சரி, இந்த அளவுக்கு சீனாவுடனான வர்த்தகத்தை அதிகரிக்க முற்பட்டோமே, அதைப் பயன்படுத்தி, சீனாவுடனான எல்லைத் தகராறு உள்பட அனைத்துத் தகராறுகளையும் தீர்த்துக் கொள்ளவும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெறுவதற்கு ஆதரவு திரட்டவும் சீனாவுடனான வர்த்தக உறவை இந்தியா பயன்படுத்திக் கொண்டதா என்றால் அதுவும் இல்லை. சீனா தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் இருக்கும் தெளிவின்மையையும், ராஜதந்திரரீதியாகவும், தொலைநோக்குச் சிந்தனையுள்ள தேசிய தலைமைப் பண்பிலும் தோல்வியுற்றதையே இது எடுத்துக்காட்டுகிறது.

வீண்ஜம்பம், நிர்வாகக் குளறுபடி

சர்வதேச அளவில் பொருளாதாரரீதியாக வளர்ந்து வரும் நாட்டை, உள்ளும்புறமும் வீண்ஜம்பம் பேசியே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு குழப்பி மோசமாக நிர்வகித்து வருகிறது. 2005-06, 2006-07இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5 சதவீதத்தைத் தாண்டியதையும், நிதிப் பற்றாக்குறை குறைந்துவருவதையும், உலகம் முழுதும் உலா வந்த போலி கடன்கள் காரணமாக அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்துவருவதையும் கண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் அகமகிழ்ந்து, தன்னிலை மறந்தனர். இந்த மதிமயக்கமான தருணத்தில், இறக்குமதிக்கும், இந்தியர்கள் அன்னிய முதலீடு செய்வதற்கும் கதவுகளை மத்திய அரசு திறந்துவிட்டது.

முதிர்ச்சியடைந்த தலைமையாக இருந்திருந்தால், நிதி மற்றும் வெளியுறவை நிலைப்படுத்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியிருப்பார்கள். வரிவிலக்கைத் திரும்பப் பெறவும், அன்னியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க நம்பகமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கவும் அதுதான் சரியான தருணமாகும்.

2005 பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிவிலக்குத் திரும்பப் பெறப்படும் என பிரதமர் மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் எச்சரித்திருந்தனர். ஆனால், பட்ஜெட்டில் அதுபற்றி மெüனம் சாதித்தனர். அதன் காரணமாக வரிவிலக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.2.5 லட்சம் கோடியாகவே நீடித்தது.

இந்தியா ஏற்கெனவே வல்லரசாக ஆகிவிட்ட தோரணையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செயல்பட்டது. 2008இல் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டபோது, மத்திய அரசு தனது எல்லையைத் தாண்டி வரிவிலக்கை அதிகரித்தது. அதன் காரணமாக வருவாய் பாதிக்கப்பட்டதுடன் சீனாவும், மற்ற நாடுகளும் தங்களது மலிவான பொருள்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்க வழிகோலப்பட்டது.

இந்தியாவின் பொருளாதாரப் பேரழிவு 2005-06 முதல் 2010-11 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தது. இதை ஆய்வு செய்து மட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், இந்தப் பேரழிவு 2011-12இல் கட்டுப்படுத்த முடியாததாகிவிட்டது.

தீர்வுதான் என்ன?

இப்போது, இதற்கு தீர்வுதான் என்ன? முதலீடுகளுக்காக கையேந்துவதோ அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்வதுபோல வெளியிலிருந்து கடன் வாங்குவதோ இதற்குத் தீர்வல்ல. இது புற்றுநோய்ப் புண்ணுக்கு மருந்து தடவுவது போன்றது. அது வேதனையை சற்று மட்டுப்படுத்துமே தவிர நோயைக் குணப்படுத்திவிடாது. அப்படியெனில் என்ன செய்ய வேண்டும்?

முதலில், நிதிப் பற்றாக்குறையில் ஆண்டுதோறும் ரூ.2 லட்சம் கோடி கூடுதலாக சேரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு மசோதாவை செயல்படுத்துவதை, இப்போதைய பொருளாதார நெருக்கடி தீரும் வரையில் ஒத்திவைப்பதாக அறிவிக்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் அரசு உண்மையான அக்கறையுடன் உள்ளது என்பதை இது உணர்த்தும். முதலீட்டாளர்களுக்கும், சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் சற்று நம்பிக்கை ஏற்படும். அவசர அவசரமாக முதலீடுகளைத் திரும்பி எடுத்துக் கொண்டுபோக எத்தனிக்க மாட்டார்கள்.

அடுத்து, வரிவிலக்கு அளித்து, மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்கத்தை வெளிக்கொணர வேண்டும்.

ஆபரணம் செய்யப்படாமல் மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்கம் 3 ஆயிரம் டன் முதல் 6 ஆயிரம் டன் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இதை வெளிக் கொணரத் தகுந்த வட்டி விகிதத்துடன் தங்கத்தின் மீது கடன் பத்திரங்களை அரசு வெளியிட வேண்டும். இதன் மூலம் 200 பில்லியன் டாலர் கிடைக்கும்.

அதே அளவு தொகை அன்னியச் செலாவணி கையிருப்பும் சேர்ந்தால் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் எதிர்பாராதவகையில் இந்தியப் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்க இயலும்.

2012 பட்ஜெட்டில் இதைச் செயல்படுத்த அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மிகுந்த ஆர்வம் காட்டினார். ஆனால், அப்போது அண்ணா ஹசாரே தலைமையில் ஊழலுக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடியவர்கள், கருப்புப் பண முதலைகளுடன் தன்னையும் இணைத்துப் பேசுவார்களோ என அஞ்சியதால் அவர் இதைச் செய்யவில்லை. பிரணாப் முகர்ஜியின் புத்திசாலித்தனமான முடிவு அரசியல் காரணங்களால் நிறைவேற்றப்படாமல் போயிற்று.

இப்போது இதைச் செய்வதற்கான அரசியல் உறுதி அரசுக்கு இருக்கிறதா? இப்போது இதைச் செய்யவில்லை என்றால், வேறு வழியில்லாமல் இதுபோன்றோ அல்லது இதைவிடக் கடுமையான நடவடிக்கைகளையோ அரசு பின்னர் மேற்கொள்ள நேரிடும் என்பது மட்டும் உறுதி.

பொருளாதார நெருக்கடி நிலை தோன்றும் வகையில் இப்போதைய சூழ்நிலை உள்ளது. எனவே, 1991இல் செய்தது போல, எதிர்க்கட்சியினருடன் கலந்துபேசி கருத்தொற்றுமை அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இதுதான் தகுந்த தருணம்.

எங்களுக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணத்தில், மக்களவைத் தேர்தலை மட்டுமே குறியாக வைத்து மன்மோகன் சிங் அரசு தொடர்ந்து செயல்படுமேயானால், "அறுவை சிகிச்சை வெற்றி; நோயாளி காலமானார்’ என்பதுபோல இந்தியப் பொருளாதாரம் திவால் நிலைக்குத் தள்ளப்படும்!

                                       முற்றும்

By எஸ்.குருமூர்த்தி            

நன்றி- தினமணி

திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? (பகுதி 5)

5. இந்தியாவின் சந்தை சீனாவின் கையில்!

மிகப்பெரிய பொருளாதாரச் சறுக்கலை இந்தியா எதிர்கொள்ளும் இந்த நிலைமையிலும்கூட, நமது நாடு திவாலாகாமல் காப்பாற்றுவது இந்திய சமூகத்தின் குடும்ப அமைப்பும், நமது சேமிப்பு உணர்வும்தான் என்பதைப் பார்த்தோம். ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறையும் பொறுப்பின்மையும் இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மட்டுமல்ல, நமது பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகி விட்டிருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் மேற்பார்வையில், 587 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலதனப் பொருள்களால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்றில் ஒரு பங்கு சரிந்தது. வேடிக்கை என்னவென்றால், இறக்குமதி செய்யப்பட்ட இந்த மூலதனப் பொருள்களில் பெரும்பாலானவற்றை இந்தியாவிலேயே தயாரிக்க முடியும் என்பதுதான். நாம் தயாரித்துக் கொண்டிருந்த பொருள்களேகூட இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது.

சுங்கம் மற்றும் உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்ததன் காரணமாக 339 பில்லியன் டாலர் அளவுக்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்குப் பொருள் என்ன? அதே அளவுக்கு இந்தியா தனது வளத்தை இழந்திருக்கிறது என்பதுதானே?

இந்தியாவின் நஷ்டம் யாருக்கு லாபம்? இந்தியாவின் நட்பு நாடுகளாக இருக்கும் அமெரிக்காவோ, இங்கிலாந்தோ, ஜெர்மனியோ, ஜப்பானோ, பிரான்úஸா, ரஷியாவோ லாபம் அடையவில்லை. மாறாக லாபம் அடைந்திருக்கும் நாடு எது தெரியுமா? சீனா!

2006-07 முதல் ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவின் இறக்குமதியால் சீனாதான் மிகப் பெரிய அளவில் லாபம் அடைந்திருக்கிறது. 2006-07இல் இந்தியாவின் இறக்குமதியில் சீனாவின் பங்கு 13 சதவீதமாக இருந்தது. அதுவே 2011-12இல் 17 சதவீதமாக அதிகரித்தது. விளைவு, சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 2012-13 வரையிலான கடந்த 6 ஆண்டுகளில் 175 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதற்கு முழு முதற்காரணம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தவறான அணுகுமுறையும், நிதிநிர்வாகமும்தான்.

2001-02இல் சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை 1 பில்லியன் டாலராக இருந்தது. அதுவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் 3-வது ஆண்டில் 9 பில்லியன் டாலரானது. பின்னர், அதுவே 16 பில்லியன் டாலர் (4-வது ஆண்டு), 23 பில்லியன் டாலர் (5-வது ஆண்டு), 19 பில்லியன் டாலர் (6-வது ஆண்டு), 28 பில்லியன் டாலர் (7-வது ஆண்டு), 39 பில்லியன் டாலர் (8-வது ஆண்டு), 41 பில்லியன் டாலர் (9-வது ஆண்டு) என மொத்தம் 175 பில்லியன் டாலராக ஆகியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறையான 325 பில்லியன் டாலரில் இது 54 சதவீதமாகும்.

150 பில்லியன் டாலருக்கு அதிகமாக சீனாவில் இருந்து மட்டுமே மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள பொருள்களின் மதிப்பைவிட மூன்று மடங்கு மதிப்புள்ள பொருள்களை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்!

இந்தியாவின் சிறந்த நண்பனாக சீனா என்றுமே இருந்ததில்லை. சீனாவுடனான பனிப்போர் தொடர்கிறது. அருணாசலப் பிரதேசத்தின் மீது சீனா உரிமை கொண்டாடி வருகிறது. பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே அணைகளைக் கட்டி வருகிறது. அது மட்டுமல்ல, இந்திய எதிர்ப்பையே தனது தேசியவாதத்தின் உயிர்மூச்சாகக் கொண்டுள்ள பாகிஸ்தானின் நட்பு நாடாகவும் சீனா விளங்கிவருகிறது.

வெறும் நட்பு நாடாக மட்டுமல்லாமல், நம்பத்தகுந்த கூட்டாளியாக பாகிஸ்தானுக்கு பொருளாதார, ராணுவ, தொழில்நுட்ப உதவிகளை அளித்துவருகிறது சீனா. பாகிஸ்தானுக்காக அணுசக்தி கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. உருவாக்கிவருகிறது. பொருளாதார நலன் ஒரு பக்கம் இருந்தாலும், தான் நஷ்டமடைந்து சீனா லாபம் அடைய உதவுவது என்பது இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு உகந்ததாக இருக்க முடியாது. சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையான 175 பில்லியன் டாலர் (சுமார் ரூ.10 லட்சம் கோடி) என்பது, கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவப் பாதுகாப்புச் செலவினங்களுக்கு சமமானதாகும். அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கணிப்புப்படி, சீனா தனது பாதுகாப்புத் துறைக்கு ஆண்டுதோறும் 63 பில்லியன் டாலர் செலவழிக்கிறது. எனவே, இந்தியாவின் வர்த்தகம் சீன பாதுகாப்புத் துறையின் 3 ஆண்டு செலவினங்களை ஈடுகட்டுவதாக அமையும்.

மேலும், சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை இந்திய ரூபாயின் மதிப்பையும், பொருளாதாரத்தையும் பாதிப்பதுடன் நின்றுவிடுவதில்லை. இன்னொரு பக்கம் சீனப் பொருளாதாரத்தை வலுவாக்குகிறது. இது இந்தியாவின் புவியியல்சார்ந்த அரசியல் நலன்களுக்கு உகந்ததல்ல.

பொருளாதாரரீதியாகவும், புவியியல்சார்ந்த அரசியல்ரீதியாகவும் இந்தத் தவறை மத்திய அரசு ஏன், எப்படி இழைத்துவருகிறது? இதற்கு பதில் இல்லை.

சீனா தனது பொருள்களை கொண்டுவந்து இந்தியாவில் கொட்டுவதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு பதிலாக, தனது நடவடிக்கைகளின் மூலம் சீனாவுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மறைமுகமாக உதவி வருகிறது. மெத்தப் படித்த மேதாவிகளின் தலைமையிலான இன்றைய அரசு, இதை அனுமதிக்கிறதா இல்லை இதுகூடத் தெரியாமல், இதைப் பற்றியெல்லாம் சிந்திக்கும் திறனில்லாமல் செயல்படுகிறதா என்று தெரியவில்லை.

ரொக்கச் செலாவணி நிலை வலுவாக இருப்பதால், மிகவும் குறைவான வட்டி விகிதம் அளித்து இந்திய இறக்குமதியாளர்களை ஈர்த்து பல பில்லியன் டாலர் அளவுக்கு தனது மூலதனப் பொருள்களை இந்தியாவுக்கு சீனா ஏற்றுமதி செய்துவருகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இன்னும் சற்று விழிப்புடன் இருந்திருந்தால் இந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்தவோ, மட்டுப்படுத்தியிருக்கவோ முடியும்.

விழிப்புடன் இல்லாத இந்தியா

உலக வர்த்தக அமைப்பில் சீனா 2001இல் இடம்பெற்றது. அதற்கு முன்னரே, உலக வர்த்தக அமைப்பின் நிர்பந்தம் காரணமாக இந்தியா இறக்குமதி வரிகளை பெருமளவு குறைத்திருந்தது. 1990-ல் இந்தியாவில் இறக்குமதியை ஒட்டிய வரி 50 சதவீதமாக இருந்தது. அதுவே, 1990-களின் இறுதியில் 20 சதவீதமாகக் குறைந்தது. 1980-களில் இருந்தே சீனா தனது பொருள்களை கொண்டுபோய் உலகம் முழுவதும் கொட்டியது. கொட்டியது என்றால் அடக்க விலைக்கும் குறைவாகவே விற்றது.

இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுக்க உலக வர்த்தக அமைப்பில் விதிமுறைகள் உள்ளன என்பதால், சீனப் பொருள்கள் குறித்து இதற்கு முந்தைய அரசுகள் மிகவும் தீவிர விழிப்புணர்வுடன் செயல்பட்டன. இந்தியாவில் பொருள்களைக் கொண்டு வந்து கொட்டுவதற்கு எதிரான நடவடிக்கைகளை நரசிம்ம ராவ் அரசு ஆட்சியில் இருந்த காலம் முதல் தொடர்ந்து இந்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வந்தது.

1995 முதல் 2001 வரை பொருள்களைக் கொண்டு வந்து கொட்டுவதற்கு எதிராக 248 வழக்குகள் இந்தியாவால் தொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இந்தியாவைவிட அமெரிக்கா மட்டுமே அதிக வழக்குகளை (255) தொடுத்திருந்தது. இந்தியா தொடுத்த வழக்குகளில் ஐந்தில் ஒரு பங்கு வழக்கு சீனாவுக்கு எதிரானதாகும்.

மன்மோகன் சிங் அரசு பதவி ஏற்றது முதல் நிலைமை தலைகீழாக மாறியது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் வேகமெடுத்த சீனப் பொருள்களின் இறக்குமதியும், இந்தியாவில் இறக்குமதி வரி குறைப்பும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன. இந்தியாவில் வர்த்தகத்தையொட்டிய வரி விகிதம் 1990-ல் 50 சதவீதம் ஆக இருந்தது, 1998இல் 20% ஆகவும், 2006இல் 14% ஆகவும், 2007இல் 12% ஆகவும், 2008இல் 8% ஆகவும் குறைந்தது. வரிகள் குறைக்கப்பட்டதில்கூடத் தவறில்லை. என்ன இறக்குமதி செய்கிறோம், எதற்காகச் செய்கிறோம் என்கிற கண்காணிப்பு இருந்திருந்தால் நிலைமை கட்டுக்குள் இருந்திருக்கும். பொருள்களைக் கொண்டு வந்து கொட்டுவதற்கு எதிரான நடவடிக்கைகள் வேகம் பெறுவதற்குப் பதிலாக, 2008 முதல் தேக்கமடைந்தன என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் உண்மை.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது 2002இல் பொருள்களைக் கொண்டு வந்து கொட்டுவதற்கு எதிராக உலகம் முழுவதும் தொடரப்பட்ட வழக்குகளில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவினால் தொடரப்பட்டிருந்தது. அப்போது வர்த்தகத்தையொட்டிய வரிவிகிதம் 20% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர், தொடரப்படும் வழக்குகளின் சதவீதம் குறைந்தது. பொருள்களைக் கொண்டு வந்து இந்தியாவில் கொட்டுவதற்கு எதிரான நடவடிக்கைகள் வேகம் பெற்றிருக்க வேண்டிய காலகட்டத்தில் (2009) தொடரப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 15 சதவீதமாகக் குறைந்தது.

இந்திய சந்தையைக் கைப்பற்றிய சீனா

இப்போது, மூலதனப் பொருள்களின் இறக்குமதியில் சீனாவின் பங்கு 25 சதவீதத்துக்கும் அதிகமாகும். துணிநூல் இழை, தயாரிக்கப்பட்ட துணிகளில் 50%, பருத்தி நூலிழை, துணிகளில் 75%, பட்டு நூலிழை, கச்சா பட்டில் 90%, ஆயத்த ஆடைகளில் 33%, சிந்தெடிக் நூலிழைகளில் 66%, ரசாயன, மருத்துவப் பொருள்களில் 33%, உர உற்பத்திப் பொருள்களில் 66%, தொழிற்சாலை உதிரி பாகங்களில் 17%, கணினி மென்பொருள்களில் 33%, உருக்கில் 25%, மின்னணு சாதனங்களில் 66%, சிமென்டில் 10%, உலோகப் பொருள்களில் 33% ஆகியன இந்தியாவின் இறக்குமதியில் சீனாவின் பங்கு ஆகும்.

இந்திய சந்தையை சீனா எவ்வாறு ஆக்கிரமித்துள்ளது என்பதை இந்தப் பட்டியல் எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவில் சீனா தனது பொருள்களைக் கொண்டு வந்து குவிக்கிறது என்பதில் ஒளிவுமறைவில்லை. இது குறித்து பத்திரிகளைகளும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளன.

"தி ஸ்டேட்ஸ்மேன்’ இதழ் (18.5.2009) இவ்வாறு எச்சரித்தது: "சீனா தனது பொருள்களை இந்தியாவில் குவிப்பதன் மூலம் இந்திய உள்ளூர் சந்தையையும், உற்பத்தியாளர்களையும் சீர்செய்ய முடியாத பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இப்போதைய நடைமுறை தொடர்ந்தால் இந்தியத் தொழில் துறை விரைவில் காணாமல் போய்விடும்.’

By எஸ்.குருமூர்த்தி

நன்றி- தினமணி

திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? (பகுதி 4)

4. திவாலாகாமல் காப்பாற்றுவது எது?

ஊக்குவிப்பு நடவடிக்கை என்கிற பெயரில் அளிக்கப்பட்ட வரி விலக்கால் வருவாய் இழப்பு ஏற்பட்டு நிதிப் பற்றாக்குறை அதிகரித்தது என்பதுடன் நிற்கவில்லை.

வெறும் வருவாய் இழப்பைவிட மோசமான தீமையை ஊக்குவிப்பு நடவடிக்கை மறைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சுங்க வரி ஏற்கெனவே பாதியாகிவிட்டது. இந்நிலையில், 2008இல் சுங்க வரி குறைக்கப்பட்டதன் மூலம் இறக்குமதிப் பொருள்கள் மலிவான விலைக்கு கிடைக்கின்றன. அதன் விளைவாக, கடந்த 5 ஆண்டுகளில் (2008-09 முதல் 2012-13 வரை) மூலதனப் பொருள்கள் 407 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டன. அதற்கு முந்தைய 4 ஆண்டுகளில் 180 பில்லியன் டாலருக்குதான் மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2007-08இல் ரூ.ஒரு லட்சம் கோடியாக இருந்த சுங்க வரி வசூல், 2009-10இல் 0.83 லட்சம் கோடியாகக் குறைந்தது. அதேநேரத்தில், 2007-08இல் ரூ.8.4 லட்சம் கோடியாக இருந்த இறக்குமதி, 2009-10இல் ரூ.13.74 லட்சம் கோடியாக அதிகரித்தது. இறக்குமதி 56 சதவீதம் அதிகரித்த நிலையில், சுங்க வரி வசூலோ 17 சதவீதம் குறைந்தது.

2008இல் சுங்கம் மற்றும் உற்பத்தி வரியைக் குறைத்ததன் காரணமாக மூலதனப் பொருள்களின் இறக்குமதி வெள்ளமென அதிகரித்தது என்பது வெளிப்படை. ஏற்கெனவே கூறியது போல, உள்ளூர் மூலதனப் பொருள் உற்பத்தியை, மூலதனப் பொருள்களின் இறக்குமதி பாதித்ததுடன் உள்நாட்டு மொத்த உற்பத்தியையும் குறைத்தது.

வரி விலக்கானது நிதிப் பற்றாக்குறையை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தியதுடன் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையையும் அதிகரிக்கச் செய்து ரூபாயை மரணப் படுக்கையில் தள்ளியது.

இப்படி பொருளாதாரத்தை எல்லா வழிகளிலும் வரி விலக்கு பாதிப்புக்குள்ளாக்கியது. ஆனால், பொருளாதாரக் குழப்பங்கள் இத்துடன் முடிந்தனவா என்றால் முடியவில்லை.

கடனை அதிகரித்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை

2008-ம் ஆண்டு பட்ஜெட்டுக்கு பிந்தைய நிதிப் பற்றாக்குறைகள், பொதுக் கடன் தொகையில் ரூ.21.6 லட்சம் கோடி அதிகரித்தவேளையில், நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் அதிகரித்ததன் காரணமாக அதிக அளவில் வெளியிலிருந்து கடன் வாங்க நேரிட்டது. ஒரு வகையில் பார்த்தால் கந்து வட்டிக்குக் கடன் வாங்குவதுபோல என்று வைத்துக் கொள்ளுங்கள்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், இதற்கு முன்பு இல்லாத வகையில் இந்தியாவுக்கு அன்னிய நேரடி முதலீடு வந்த நிலையிலும் வெளியிலிருந்து கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டது என்பதுதான் வேதனை.

கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 205 பில்லியன் டாலர் அன்னிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்ட 102 பில்லியன் டாலரை கழித்தால்கூட இந்தியாவுக்கு நிகர மதிப்பாக 103 பில்லியன் டாலர் அன்னிய நேரடி முதலீடு வந்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள நிகரத் தொகை 124 பில்லியன் டாலர்களாகும். இதனுடன் அன்னிய நேரடி முதலீட்டையும் சேர்த்தால் அன்னியச் செலாவணியாக 227 பில்லியன் டாலர் வந்துள்ளது. ஆயினும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை தொகையான 339 பில்லியன் டாலரைவிட இது குறைவு. இதனால், வெளியிலிருந்து கடன் வாங்குவது தவிர்க்க முடியாததானது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் குறுகிய காலக் கடன்கள் 4 பில்லியன் டாலர்களிலிருந்து 70 பில்லியன் டாலர்களாக அதாவது 17 மடங்கு அதிகரித்தது. வெளிக் கடன்களோ 288 பில்லியன் டாலரில் இருந்து 396 பில்லியன் டாலராக அதிகரித்தது. அன்னிய முதலீடுகளும், கடன்களும் அதிகரித்ததன் காரணமாக முதலீடுகளுக்கும், கடன்களுக்கும் வருவாயிலிருந்து செலவிடப்படும் நிகரத் தொகை (வட்டி என்று வைத்துக் கொள்ளலாம்.) 4 பில்லியன் டாலரில் இருந்து 16.5 பில்லியன் டாலராக (4 மடங்கு) அதிகரித்தது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது (339 பில்லியன் டாலர்), முதலீட்டு வருவாயையும் (227 பில்லியன் டாலர்), கூடுதல் கடனையும் (288 பில்லியன் டாலர்) பெருமளவு விழுங்கிவிடுவதால், அன்னியச் செலாவணி கையிருப்பு 180 பில்லியன் டாலரிலிருந்து 292 பில்லியன் டாலராக மட்டுமே அதிகரித்தது.

தொடர்ந்து இமய மலை அளவுக்கு அதிகரித்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, அதிகரிக்கும் கடன்கள், கடன்கள் மற்றும் முதலீடுகளுக்கான வட்டி, பொருத்தமற்ற குறுகிய காலக் கடன்கள் உள்ள நிலையில், ஏட்டளவில் மட்டுமே உள்ள அன்னியச் செலாவணி கையிருப்பான 292 பில்லியன் டாலரானது, சர்வதேச அளவில், பெருமளவு நாம் திவாலாகி ரூபாய் மரணப் படுக்கையில் தள்ளப்பட்டதை வெளிப்படுத்தியது. அதனால், முதலீட்டாளர்கள் பயந்து பின்வாங்கத் தலைப்பட்டனர்.

கலாசாரமே காத்தது

இவ்வளவு மோசமான நிலையில் இந்தியாவின் நிதி நிலைமையும், பொறுப்பில்லாத நிதி நிர்வாகமும் இருந்தும் சோமாலியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போல இந்தியா திவாலாகவில்லையே, ஏன்? இன்றும் இந்தியப் பொருளாதாரம் தாக்குப் பிடிக்கிறதே, அது எப்படி?

இந்தியாவை உள்நாட்டு அளவிலும், சர்வதேச அளவிலும் திவாலாகும் நிலையில் இருந்து எது காப்பாற்றியது என்பது பொதுமக்கள் பார்வைக்குப் புலப்படவில்லை. நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க நிதி எங்கிருந்து வந்தது? வர்த்தக வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் அரசு நிதியைப் பெற்றது. பாரம்பரியமாக இந்தியக் குடும்பங்கள், தங்கள் சேமிப்பை வங்கிகளில் இட்டுவைப்பதால் இந்தியாவுக்குள் அரசு கடன் பெற முடிந்தது.

ஓராண்டில் இந்தியர்கள் வங்கிகளில் சேமிக்கும் தொகை சுமார் ரூ.10 லட்சம் கோடியாகும். இதுவே உள்நாட்டு அளவில் திவாலாவதில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தைக் காத்தது. ஆனால், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை எப்படி சமாளிக்கப்பட்டது? இந்த விஷயத்தில் இதுவரை சொல்லப்படாத உண்மை அதிர்ச்சி தரத்தக்கதாகும்.

குடும்பச் செலவுகளுக்காக வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் அனுப்பும் தொகையும், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து உள்ளூரில் எடுக்கப்படும் தொகையுமே சர்வதேச அளவில் திவாலாவதில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தைக் காத்து வருகிறது என்பதுதான் அந்த அதிர்ச்சி தரும் ஆச்சரியமான உண்மை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டுகால ஆட்சியில் அன்னியச் செலாவணி கையிருப்புக்கு இந்தியக் குடும்பங்களின் பங்களிப்பு 335 பில்லியன் டாலர் ஆகும். இது கிட்டத்தட்ட நடப்புக் கணக்குப் பற்றாக்குறைக்கு சமமானதாகும்.

இந்தப் பணம் திருப்பத் தக்கதல்ல. இதற்கு வட்டியும் கிடையாது. இந்தியப் பொருளாதாரத்துக்கு வாழ்வாதாரமாக விளங்கும் இந்தத் தொகை, பொருளாதார கோட்பாடுகளாலோ, அரசின் கொள்கையினாலோ கிடைத்ததல்ல. பாரம்பரியம், கலாசாரம் மூலம் இந்தியப் பொருளாதாரத்துக்கு கிடைத்த பரிசு இது. நவீனகால தனி மனிதத்துவத்துக்கு எதிராகப் போராடி வரும் பாரம்பரிய ஒருங்கிணைந்த இந்தியக் குடும்பங்கள் இல்லாது போயிருந்தால் இந்தத் தொகை கிடைத்திருக்காது, இந்தியப் பொருளாதாரம் இன்னமும் திவாலாகாமல் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

தங்கள் உற்றார், உறவினர்களைப் பாதுகாக்க இந்தத் தொகையை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனுப்பாமல் இருந்திருந்தால், இப்போது இந்தியப் பொருளாதாரத்துக்கு வாழ்வாதாரமாக உள்ள 335 பில்லியன் டாலர் வராமல் போயிருப்பது மட்டுமல்ல, வெளிநாடுவாழ் இந்தியர்களின் உற்றார், உறவினர்களைப் பாதுகாக்கவும் அரசு செலவழிக்க வேண்டியிருந்திருக்கும். பொருளாதாரத்துக்கு கலாசார ரீதியாக பாதுகாப்பு அளிக்கும் இந்த நடைமுறையை இந்திய அரசு நிர்வாகம் எப்போதாவது கவனித்திருக்கிறதா? உணர்ந்திருக்கிறதா?

உறவுமுறை சார்ந்த இந்திய சமூகம், உற்றார், உறவினர்களைப் பாதுகாப்பதை கலாசாரரீதியாக கட்டாயமாக்கி இருக்கிறது. மேற்கத்திய நாடுகள் போன்று ஒப்பந்த முறையில் வாழும் சமூகங்களில் இது சாத்தியமல்ல.

இருப்பினும், இந்தியக் குடும்ப அமைப்பையும், சமூகத்தையும் ஒப்பந்த அடிப்படையிலான சமூகமாக மாற்றுவதற்கு ஏற்ப சட்டங்களை அரசு வகுத்து வருகிறது. வெளிநாடுவாழ் இந்தியர்களின் இந்தப் பங்களிப்பு பற்றிய பிரக்ஞைகூட இல்லாமல் அரசு நிர்வாகம் இதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளது. ஆனால், முதலீடுகள் வருவது பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்கிறது.

இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராக நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சாதுர்யமில்லாமலோ அல்லது அறியாமையினாலோ மத்திய அரசு எப்படிக் கையாள்கிறது என்பதை இனி பார்ப்போம். அரசின் நடவடிக்கைகள் இந்தியாவைப் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிநடத்தி வருகின்றன என்பது மட்டுமல்ல. இந்தியாவின் சுதந்திரத்திற்கும், சான்றாண்மைக்குமே அச்சுறுத்தலை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன.

By எஸ்.குருமூர்த்தி

நன்றி- தினமணி

திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? (பகுதி 3)

3. வரி விலக்கால் அதிகரித்த நிதிப் பற்றாக்குறை!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டு கால ஆட்சியில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை தாறுமாறாக 339 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) டாலர் அளவுக்கு உயர்ந்ததால் ரூபாயின் மதிப்பு வெகுவாகச் சரிந்தது என்பதில் சந்தேகமே இல்லை. ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்தது ஒரு காரணமாக இருந்தாலும், அது மட்டுமே காரணமல்ல. நிதிப் பற்றாக்குறையும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

அரசுக்கு வரும் வருவாயைவிடக் கூடுதலாகச் செலவழிப்பதே நிதிப் பற்றாக்குறையாகும். இப்போது மிக அதிகமான நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும், அபரிமிதமான நிதிப் பற்றாக்குறையும் சேர்ந்து கொண்டபோது ரூபாயை மரணப் படுக்கையில் தள்ளி இருக்கிறது என்பதுதான் உண்மை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிதிப் பற்றாக்குறை எந்த நிலையில், எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

கடந்த 9 ஆண்டுகளில் ரூ.27 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறைக்கு அரசு ஆளாகியுள்ளது. அதில் கடந்த 5 ஆண்டு நிதிப் பற்றாக்குறை ரூ.22.66 லட்சம் கோடி. முதல் 4 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.1.35 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறையாக இருந்துள்ளது. அதுவே அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.4.5 லட்சம் கோடியாக அதிகரித்தது.

2008-ல் சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதாகக் கூறி உற்பத்தி மற்றும் சுங்க வரியை மத்திய அரசு குறைத்ததன் காரணமாகவே நிதிப் பற்றாக்குறை 5 ஆண்டுகளில் சுமார் ரூ.23 லட்சம் கோடியாக அதிகரித்தது.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும், நிதிப் பற்றாக்குறையும் மட்டுமல்ல, கூடவே வருவாய்ப் பற்றாக்குறையும் சேர்ந்து கொண்டது. முதல் இரண்டு பற்றாக்குறைகளும் அரசின் கவனக் குறையாலும், நிதி நிர்வாகத் திறமையின்மையாலும் ஏற்பட்டவை என்றால், வருவாய்ப் பற்றாக்குறை என்பது அரசு தெரிந்தே செய்த தவறு. விவரமுள்ள எந்த அரசும், நிதியமைச்சரும் இந்தத் தவறைச் செய்ய மாட்டார்கள்.

வரிகள் குறைப்பு காரணமாக 5 ஆண்டுகளில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.16 லட்சம் கோடியாக எகிறியது. முதல் 4 ஆண்டுகளில் வருவாய்ப் பற்றாக்குறை 0.75 லட்சம் கோடியாக இருந்தது, அடுத்த 5 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடியாக உயர்ந்தது. இன்றைய பொருளாதார நெருக்கடிக்கும், ரூபாயின் மதிப்புச் சரிவுக்கும் இதுவும் ஒரு முக்கியமான காரணி.

2008-ல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட சில நடவடிக்கைகள் இப்போதும் சிறிதளவில் நடைமுறையில் உள்ளன. வரிகள் குறைப்பு என்பது நாட்டை கொள்ளையடித்தது என்பதுடன் மிக அதிகப்படியான நிதிப் பற்றாக்குறையையும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறையையும் உண்டாக்கி, ரூபாயின் மதிப்பைச் சரித்து, பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அதாவது, கார்ப்பரேட் நிறுவனங்கள் என்று சொல்லப்படுகின்றனவே, அவர்களுக்கு மட்டுமே உதவியது.

ரூ.30 லட்சம் கோடி வருவாய் இழப்பு

ஆண்டுதோறும் பட்ஜெட்டின் பிற்சேர்க்கையில் வருவாய் இழப்பு குறித்த அறிக்கை இடம்பெறுகிறது. 2006-07 முதல் மத்திய அரசு வரி விலக்கு அளித்ததன் விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. கடந்த 9 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அளித்த வரி விலக்கு ரூ.30 லட்சம் கோடி அளவுக்குச் சேர்ந்துள்ளது.

2008-ல் அறிவிக்கப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் வரி விலக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.2.6 லட்சம் கோடியாக இருந்தது. ஊக்குவிப்பு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளில் வரி விலக்கு இரு மடங்காக உயர்ந்து ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டுகால ஆட்சியில் நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்க்கப்படும் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.16 லட்சம் கோடியாகவும், வரி விலக்கு ரூ.25 லட்சம் கோடியாகவும் உள்ளது.

சர்வதேச அளவில் பொருளாதார நிலை தேக்கம் அடைந்ததால் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தேவையாக இருந்தன என்று காரணம் கூறப்பட்டது. அதாவது, கார்ப்பரேட் நிறுவனங்கள் சர்வதேசப் பொருளாதாரத் தேக்கத்தால் பாதிக்கப்பட்டு நஷ்டம் அடையாமல் காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இது என்பது மன்மோகன் – சிதம்பரம் கூட்டணி முன்வைத்த வாதம்.

ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில், முன்பைவிட இந்த "ஊக்குவிப்பு’ காலகட்டத்தில்தான் பெரிய தொழில் நிறுவனங்களின் லாபம் அதிகரித்துள்ளது. 2005-06இல் பெரிய தொழில் நிறுவனங்களின் லாபம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீதமாக இருந்தது. அப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் மிக அதிகமாக (9.5%) இருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டோமானால், பெரிய தொழில் நிறுவனங்களின் லாபம் 12.94% (2006-07) ஆகவும், 14.26% (2007-08) ஆகவும், 11.86% (2008-09) ஆகவும், 12.71% (2009-10) ஆகவும், 12.15% (2010-11) ஆகவும் அதிகரித்துள்ளது.

2005-06ஐ ஒப்பிடும்போது கடந்த 5 ஆண்டுகளில் பெரிய தொழில் நிறுவனங்கள் ரூ.4.8 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளன. பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளின் பயனில் பெரும் பகுதியை பெரிய தொழில் நிறுவனங்கள் விழுங்கிவிட்டன என்பதுதான் உண்மை. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்தியப் பொருளாதாரத்தை பலப்படுத்தவோ, பத்திரப்படுத்தவோ பயன்படாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொழிப்பதற்குத்தான் பயன்பட்டன.

அரசின் ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு முன் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் சராசரியாக 9 சதவீதமாக இருந்தது. 2008-09இல் 6.7 சதவீதமாகக் குறைந்தது. 2010-11 வரை சராசரியாக 9 சதவீதமாக இருந்தது. அதன் பின்னர்தான் குறையத் தொடங்கியது. மிகப் பெரிய அளவில் வரிவிலக்கு அளித்தது குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையும் (பக்கம் 66-68) அதிருப்தி தெரிவித்துள்ளதுடன், வரி விலக்கு அளிப்பதைக் கட்டுப்படுத்துவதும் அவசியமானதே என ஆலோசனையும் வழங்கியுள்ளது.

வரி விலக்குகளைத் திரும்பப் பெறுவோம் என பிரதமர் மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் 2005-லேயே உறுதி அளித்தனர். ஆனால், செய்யவில்லை. அப்போது அப்படிச் செய்யாததும், 2009-ல் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை நிறுத்தாததுமே தவறான பொருளாதார நடவடிக்கைகளாக ஆகிவிட்டன.

ஊக்குவிப்பு வரி விலக்கு காரணமாக நிதிப் பற்றாக்குறை ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது. இதன் காரணமாகவும் 2011-12இல் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, 2014 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக உணவுப் பாதுகாப்பு மசோதாவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவித்துள்ளது. மசோதா இப்போது மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

இதன் மூலம், ஆண்டுதோறும் நிதிப் பற்றாக்குறையில் மேலும் ரூ.2 லட்சம் கோடி உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. தேசமே திவாலானாலும் பரவாயில்லை, பின்விளைவுகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பிலேயே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உள்ளது என்ற எண்ணம் வர்த்தகச் சந்தையில் தோன்றியுள்ளது. நிலைமை இப்படி இருந்தால் ரூபாயின் மதிப்பு ஏன் வீழ்ச்சி அடையாது? மேலும் பார்ப்போம்.

By எஸ்.குருமூர்த்தி

நன்றி- தினமணி

திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? (பகுதி 2)

2. கச்சா எண்ணெய், தங்கம் மட்டுமே காரணமல்ல!

எப்படி நடப்புக் கணக்கில் உபரி பற்றாக்குறையானது என்பதையும், இறக்குமதி அதிகரித்து உற்பத்தி குறைந்தது என்பதையும் ஆட்சியில் இருக்கும் பொருளாதார மேதைகள் வேடிக்கை பார்த்தார்கள் என்பதைப் பார்த்தோம். அதற்கு இவர்கள் சொன்ன சமாதானம், சர்வதேச அளவில் காணப்பட்ட பொருளாதார மந்த நிலை.

தொழில் துறை உற்பத்தி குறைந்ததற்கு 2008-ல் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையைக் காரணமாகக் கூற முடியாது. ஏனென்றால், 2008-09இல் 6.7 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 2009-10இல் 8.6 சதவீதமாகவும், 2010-11இல் 9.3 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. மேலும், பொருளாதார மந்தநிலை முதலில் முதலீடுகளையும், பின்னரே உற்பத்தியையும் பாதிக்கும். முதலீடு சுருங்கிய பிறகுதான் உற்பத்தி வீழ்ச்சியடையும். ஆனால், இங்கு முதலீடு (மூலதனப் பொருள் இறக்குமதி) மூன்றில் இரண்டு பங்கு அதிகரித்தும், உற்பத்தி பாதிக்கும் கீழே குறைந்துவிட்டது. இது என்ன புதிர்?

பிந்தைய 5 ஆண்டுகளில், மூலதனப் பொருள்களின் அதிகரித்த இறக்குமதிதான் தேசிய உற்பத்தி வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. இறக்குமதி அதிகரித்ததால் உள்ளூர் மூலதனப் பொருள் தொழில் துறை சரிவைச் சந்தித்தது. 2009-10இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.6 சதவீதமாக அதிகரித்தபோதும், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லாமல் தொழில் துறை உற்பத்தி வெறும் 5.3 சதவீதம் அதிகரித்தது.

பின்னர் மூலதனப் பொருள் உற்பத்தி 2011-12இல் 4 சதவீதமும், 2012-13இல் 5.7 சதவீதமும் சரிவைக் கண்டது. மேலும், கடந்த 3 ஆண்டுகளில் இடைநிலைப் பொருள்களின் உற்பத்தியும் அதிகரிக்கவில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மூலதனப் பொருள் தொழில் துறையை, மூலதனப் பொருள் இறக்குமதி சுனாமி போல தாக்கிய நிலையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் இந்தியச் சந்தையில் வெள்ளமெனப் பாய்ந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது (2001-04) வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களின் இறக்குமதி வெறும் 600 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) டாலராக இருந்தது. ஆனால், 2004-05 முதல் 2012-13 வரை வெளிநாட்டுப் பொருள்களின் இறக்குமதி 8 மடங்கு அதிகரித்து சராசரியாக ஆண்டுக்கு 5.5 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) டாலராக உயர்ந்தது.

இதே காலகட்டத்தில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.2 மடங்கு உயர்ந்தது. இது தயாரிக்கப்பட்ட பொருள்களின் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்குதான். 9 ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், தயாரிக்கப்பட்ட பொருள்களின் இறக்குமதி 50 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் வெறும் 2.3 பில்லியன் டாலராக இருந்தது. மூலதனப் பொருள் இறக்குமதி தேசிய உற்பத்தியை அதிகரிப்பதற்குப் பதில் அழிக்கவே செய்தது. தேசிய உற்பத்தி அழிவுக்கு, தயாரிக்கப்பட்ட பொருள்களின் இறக்குமதியும் காரணமாக அமைந்தது.

உற்பத்தியை அழித்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை

வர்த்தக உபரி என்பது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் என்பதும், வர்த்தகப் பற்றாக்குறை என்பது அதைக் குறைக்கும் என்பதும் அடிப்படைப் பொருளாதாரம் ஆகும். எனவே, வர்த்தகப் பற்றாக்குறையான நடப்புக் கணக்குப் பற்றாக்குறை விகிதம், அதே அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் குறைத்தது.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2007-08இல் 0.8 சதவீதமும், 1.5 சதவீதமும் (2008-09), 2.1 சதவீதமும் (2009-10), 1.4 சதவீதமும் (2010-11), 2.6 சதவீதமும் (2011-12), 3.9 சதவீதமும் (2012-13) குறைத்துள்ளது. ஒரு கணக்குக்காக, நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை விலக்கிவிட்டால், இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2007-08இல் 10.8 சதவீதமாகவும் (9.3% அல்ல), 2008-09இல் 8.2 சதவீதமாகவும் (6.7% அல்ல), 2010-11இல் 10.7 சதவீதமாகவும் (8.6% அல்ல), 2011-12இல் 8.8 சதவீதமாகவும் (6.2% அல்ல), 2012-13இல் 8.9 சதவீதமாகவும் (5% அல்ல) இருந்திருக்கும்.

கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் இறக்குமதி நமது அன்னியச் செலாவணிக் கையிருப்பை ஓரளவுக்கு விழுங்கிவிட்டது என்பது உண்மைதான். ஆனால், மூலதனப் பொருள்களுக்கும் இவற்றுக்கும் அடிப்படையிலேயே வித்தியாசங்கள் உள்ளன.

சர்வதேச உற்பத்தியில் சுமார் 25 சதவீதத்திலிருந்து 33 சதவீதம் அளவு தங்கத்தை இந்தியர்கள் வாங்குகிறார்கள். இந்தியாவின் தேவையில் நான்கில் ஒரு பங்குதான் பெட்ரோலியப் பொருள்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மீதி நான்கில் மூன்று பங்கை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதை மறுப்பதற்கில்லை. அது மட்டுமே பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்பதை ஏற்பதற்கில்லை.

ஆனால், இப்போது இறக்குமதி செய்யப்படும் இதர வெளிநாட்டுப் பொருள்கள் பெரும்பாலானவை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. தேவையில்லாமல் இந்தியாவில் உற்பத்தியாகும் பொருள்களை மிக அதிகமாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய மன்மோகன் சிங் அரசு அனுமதித்ததால், உள்நாட்டு மூலதனப் பொருள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவையும் குறைத்துவிட்டது.

கச்சா எண்ணெய், தங்கம் காரணமல்ல!

ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு கச்சா எண்ணெயும், தங்கமும் மட்டுமே காரணமல்ல அல்லது ஓரளவே காரணம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டு கால ஆட்சியில் 402 பில்லியன் டாலருக்கு தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் போன்ற விலைமதிப்பற்ற கற்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

பார்ப்பதற்கு இது பெரிய தொகை போலத் தோன்றலாம். ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் 251 பில்லியன் டாலர் மதிப்புக்கு நகைப் பொருள்களும், விலைமதிப்பற்ற கற்களும் ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளன. அதாவது, இறக்குமதி செய்யப்பட்ட தங்கமும், வைரம் போன்ற கற்களும் ஆபரணங்களாக்கப்பட்டு ஏற்றுமதியும் செய்யப்பட்டிருக்கின்றன. இதைக் கழித்துவிட்டால் நிகரப் பற்றாக்குறை 9 ஆண்டுகளில் 151 பில்லியன் டாலர்தான்.

அதேபோல, 9 ஆண்டுகளில் பெட்ரோலிய பொருள்கள் 804 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால், பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட 279 பில்லியன் டாலரை கழித்துவிட்டால் நிகரப் பற்றாக்குறை 525 பில்லியன் டாலர் ஆகும். இது 587 பில்லியன் டாலர் மூலதனப் பொருள் இறக்குமதியைவிடக் குறைவானதே ஆகும்.

கடந்த 5 ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதியின் நிகர மதிப்பு 360 பில்லியன் டாலர். இதே காலகட்டத்தில் 407 பில்லியன் டாலர் அளவுக்கு மூலதனப் பொருள்களை இறக்குமதி செய்திருக்கிறோம். பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதி தவிர்க்க முடியாதது, சரி. மூலதனப் பொருள்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தி இருக்கலாமே, ஏன் செய்யவில்லை?

பின்விளைவுகளைப் பற்றி கொஞ்சமும் கவலையில்லாமல் மூலதனப் பொருள்களை இறக்குமதி செய்ததால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது என்றும், உள்ளூர் உற்பத்தியையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் பாதித்தது என்றும் கூறுவதற்கு ஒரு ஞானி வேண்டுமா என்ன? சாதாரண மனிதனுக்குக்கூட தெரியும் இந்த உண்மை. பொருளாதார மேதைகளுக்குத் தெரியாதா என்ன?

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால் ஏற்படும் ஒரே ஒரு விளைவை மட்டும் பார்ப்போம். எண்ணெய் இறக்குமதிக்காக டாலரை வாங்குவதற்கு கூடுதலாகச் செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும், இந்தியா எண்ணெய்க்காக செலவழிக்கும் தொகையை ரூ.9,500 கோடி அதிகரிக்கச் செய்துவிடும். இப்போதைய ரூபாய் மதிப்பினால், இந்தியா எண்ணெய் இறக்குமதிக்காக ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.1.60 லட்சம் கோடி செலவழிக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

பொருளாதாரச் சீரழிவுக்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்பது ஒரு காரணம் மட்டுமே. பத்தாண்டுகளாக பொருளாதாரம் தொடர்ந்து சீரழிந்ததற்கான மேலும் சில காரணங்களையும், புள்ளிவிவரங்களையும் அடுத்து பார்ப்போம்.

By எஸ்.குருமூர்த்தி

நன்றி- தினமணி

திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? (பகுதி 1)

1. பற்றாக்குறை அதிகரிப்பும் ரூபாயின் வீழ்ச்சியும்!

இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைவதை 18 மாதங்களாக மெளன சாமியாராகப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்துவதற்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை குறைக்கப் போவதாக ஆகஸ்ட் 12-ம் தேதி அறிவிக்கிறார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். 2012 ஜனவரியில் ரூ.45 கொடுத்து ஒரு டாலரை இந்தியர்களால் வாங்க முடிந்தது. ஆனால், ஆகஸ்ட் 12-ல் ஒரு டாலர் வாங்க ரூ.61 கொடுக்க வேண்டியிருந்தது. 2012 ஜனவரியில் இருந்து தற்போது வரை டாலரின் மதிப்பு 35 சதவீதம் உயர்ந்தது. அது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் பிரதிபலித்தது.

2004-2005 முதல் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வந்ததன் நேரடி விளைவு இது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவும் சில "நடவடிக்கைகளை’ ப.சிதம்பரம் ஆகஸ்ட் 12-ல் அறிவித்தார்.

ஆனால், அவர் அறிவித்த 36 மணி நேரத்துக்குள்ளாக ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ந்தது. டாலருக்கு ரூ.61.50 கொடுக்க வேண்டியிருந்தது. இந்தியாவிலிருந்து டாலர் வெளியேறுவதைத் தடுக்க வெளிநாடுகளில் முதலீடு செய்வதையும், பணம் செலுத்துவதையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு இந்திய ரிசர்வ் வங்கி தள்ளப்பட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையும் கைகொடுக்கவில்லை.

ரூபாய் மதிப்பு வீழ்ந்து வந்த நிலையில், உண்மையிலேயே ரூபாயின் மதிப்பு – அதாவது அதன் வாங்கும் சக்தி- டாலருக்கு வெறும் ரூ.19.75தான் என்று "தி எகனாமிஸ்ட்’ (2.1.2013) குறிப்பிட்டது. அதாவது ரூபாயின் இன்றைய சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் அதன் நிஜமான மதிப்பு!

சர்வதேச சந்தையில் தகுதிக்கும் மிகக் குறைவாக மதிப்பிடப்படும் கரன்சி இந்திய ரூபாய்தான் என்றும் "தி எகனாமிஸ்ட்’ குறிப்பிட்டது. உண்மையிலேயே அதிக மதிப்புடைய, ஆனால் குறைத்து மதிப்பிடப்பட்ட ரூபாயின் மதிப்பு ஏன் குறைந்து வருகிறது? இதற்கு யார் பொறுப்பு?

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004-இல் பதவி ஏற்றபோது, இந்தியப் பொருளாதாரம் வலுவாகவும், வளர்ச்சிப் பாதையிலும் இருந்தது. நிதியமைச்சராகப் பொறுப்பேற்றபோது, வலுவான பொருளாதார நிலையையே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விட்டுச் சென்றது என்று ப.சிதம்பரமே ஒப்புக் கொண்டுள்ளார்.

2004 ஜூலையில் அவரது பட்ஜெட் உரையில், "இந்தியாவின் பொருளாதார அடிப்படை வலுவாகவே காணப்படுகிறது. ஏற்றுமதியைவிட இறக்குமதி கூடுதலாக இருந்தால் ஏற்படும் பற்றாக்குறை நிலையும் இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த நிலை மாறி, 1991-ம் ஆண்டில் காணப்பட்ட இருண்ட பொருளாதார நிலை ஏற்பட்டிருப்பதற்கு யார் காரணம்?

2004-ல் முந்தைய ஆட்சி விட்டுச் சென்ற வளமான பொருளாதாரத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எப்படி சீரழித்தது?

நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் பாய்ச்சல்

2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்றதில் இருந்து பொருளாதாரம் மோசமானது எப்படி, 2009-ல் மீண்டும் அதே அரசு ஆட்சிக்கு வந்ததும் பொருளாதாரம் எப்படி சீரழிந்தது என்பதை சில புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே புரியும். நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் அண்மைக்கால வரலாற்றைப் பார்ப்போம்.

1991-2001 காலகட்டத்தில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 35 பில்லியன் (ஒரு பில்லியன் – 100 கோடி) டாலராக இருந்தது. அதாவது 3,500 கோடி டாலர். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது நடப்புக் கணக்கு பற்றாக்குறை உபரியாக மாறியது. உபரி -ஆம், உபரிதான்- அதுவும். 22 பில்லியன் டாலராக இருந்தது. 1978-க்குப் பிறகு நடப்புக் கணக்கு உபரி என்பது அதுவே முதல்முறை.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது உபரியாக இருந்த நடப்புக் கணக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டு ஆட்சியில், ப.சிதம்பரம் (ஐந்தரை ஆண்டுகள்), பிரணாப் முகர்ஜியின் (மூன்றரை ஆண்டுகள்) தலைமையில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு 339 பில்லியன் டாலராக அதிகரித்தது. அவர்களது பொருளாதாரத் தலைமையின் கீழ் உபரி எவ்வாறு, ஏன் பற்றாக்குறையாக ஆனது?

2003-2004 இல் 13.5 பில்லியன் டாலரை நடப்புக் கணக்கு உபரியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒப்படைத்தது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2004-05இல் 2.7 பில்லியன் டாலராகவும், 2-வது மற்றும் 3-வது ஆண்டுகளில் மூன்று மடங்காக அதாவது 10 பில்லியன் டாலராகவும் உயர்ந்தது. பின்னர், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 16 பில்லியன் டாலராகவும் (4-வது ஆண்டு), 28 பில்லியன் டாலராகவும் (5-வது ஆண்டு), 38 பில்லியன் டாலராகவும் (6-வது ஆண்டு), 48 பில்லியன் டாலராகவும் (7-வது ஆண்டு), 78 பில்லியன் டாலராகவும் (8-வது ஆண்டு), 89 பில்லியன் டாலராகவும் (9-வது ஆண்டு) அதிகரித்தது.

கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றை அதிகமாக இறக்குமதி செய்வதே நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கக் காரணம் என அரசு திரும்பத் திரும்பக் கூறியது. இப்போதும் கூறி வருகிறது. இதுதான் காரணமா, இதுதான் முழு உண்மையா என்றால் நிச்சயமாக இல்லை.

உற்பத்தியை அழித்த இறக்குமதி

இறக்குமதி புள்ளிவிவரங்களை ஆய்வு செய்வதால் அதிர்ச்சிகரமான உண்மைகள் புலப்படுகின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மூலதனப் பொருள்களின் இறக்குமதி விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. பொதுவாகச் சொல்வதென்றால் இது யாராலும் கவனிக்கப்படாததாகி (அல்லது மறைக்கப்பட்டதாகி) விட்டது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது மூலதனப் பொருள்களின் இறக்குமதி சராசரியாக ஆண்டுக்கு 10 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே (2004-05) மூலதனப் பொருள்களின் இறக்குமதி 25.5 பில்லியன் டாலராக ஆனது. அதன் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் மூலதனப் பொருள்களின் இறக்குமதி அதிகரித்தது.

2-வது ஆண்டில் 38 பில்லியன் டாலராகவும், 3-வது ஆண்டில் 47 பில்லியன் டாலராகவும், 4-வது ஆண்டில் 70 பில்லியன் டாலராகவும், 5-வது ஆண்டில் 72 பில்லியன் டாலராகவும், 6-வது ஆண்டில் 66 பில்லியன் டாலராகவும், 7-வது ஆண்டில் 79 பில்லியன் டாலராகவும், 8-வது ஆண்டில் 99 பில்லியன் டாலராகவும், 9-வது ஆண்டில் 91.5 பில்லியன் டாலராகவும் அதிகரித்தது. 9 ஆண்டுகளில் மொத்தம் 587 பில்லியன் டாலருக்கு மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

மூலதனப் பொருள்களின் இறக்குமதி "செயல்படும்’ பொருளாதாரத்துக்கான அறிகுறி. தத்துவரீதியாக, அது தேசிய உற்பத்தியை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், என்ன ஆனது என்பதைப் பார்ப்போம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளில் தொழில் துறை உற்பத்திக் குறியீடு ஆண்டுதோறும் சராசரியாக 11.5 சதவீதமாக இருந்தது. ஆனால், இது படிப்படியாகக் குறைந்து அடுத்த 5 ஆண்டுகளில் 5 சதவீதத்துக்கும் கீழே போனது. கடைசியாக 2012-13 இல் 2.9 சதவீதமாக ஆனது. 4 ஆண்டுகளில் மூலதனப் பொருள் இறக்குமதி அதிகரிப்பதற்கேற்ப தொழில் துறை உற்பத்தி அதிகரிக்காமல் 11.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக 56 சதவீத சரிவைக் கண்டது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் 9 ஆண்டுகளில் 587 பில்லியன் டாலருக்கு மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கடைசி 5 ஆண்டுகளில் 407 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இது மொத்தத்தில் 79 சதவீதமாகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளில் சராசரியாக 45 பில்லியன் டாலருக்கும், பிந்தைய 5 ஆண்டுகளில் 80 பில்லியன் டாலருக்கும் மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

79 சதவீதம் அதிகரிப்பு

மூலதனப் பொருள் இறக்குமதி 79 சதவீதம் அதிகரித்தபோதும், தேசிய உற்பத்தி 56 சதவீதம் வீழ்ச்சியடைந்தது மட்டுமல்ல அதிர்ச்சி. தொடர்ந்து உற்பத்தி குறைவதையும், இறக்குமதி அதிகரிப்பதையும் பிரதமரும், நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கியும், பொருளாதார ஆலோசகர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்பதுதான் அதிர்ச்சி.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (கரண்ட் அக்கௌண்ட் டெபிசிட்) என்றால் என்ன?

நாம் அன்னியச் செலாவணி கொடுத்து இறக்குமதி செய்யும் மொத்தத் தொகைக்கும், ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அன்னியச் செலாவணிக்கும் உள்ள இடைவெளிதான் நடப்புக் கணக்கு உபரி அல்லது பற்றாக்குறை. ஏற்றுமதி அதிகமாக இருந்தால் உபரியும், இறக்குமதி அதிகமாக இருந்தால் பற்றாக்குறையும் ஏற்படும். அளவுக்கு மீறிய பற்றாக்குறை ஏற்படும்போது அது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும்.

மூலதனப் பொருள்களின் இறக்குமதி என்றால் என்ன?

ஒரு தயாரிப்பாளர் ஏதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்காக மூலப்பொருளை இறக்குமதி செய்வதுதான் மூலதனப் பொருள் இறக்குமதி.

அப்படி மூலப்பொருளை இறக்குமதி செய்து புதிய பொருள்களைத் தயாரித்து அதிக விலைக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் இறக்குமதியால் ஏற்படும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை ஈடுகட்ட முடியும்.

By எஸ்.குருமூர்த்தி

நன்றி- தினமணி

ஒலிம்பிக்ஸின் கதையும் சில துணைக் கதைகளும்

ஒலிம்பிக்ஸின் கதையும் சில துணைக் கதைகளும்: சரிசமநிலையற்ற ஐந்து வளைய விளையாட்டுகள்
ஒலிம்பிக்ஸின் பூர்வீகம் கிரேக்க நாட்டின் ஒரு பட்டணம் என்பது விளையாட்டுகளை அரைகுறையாகக் கவனிப்பவர்களுக்குக்கூடத் தெரியும். இன்றைக்குப் புதிய வடிவங்களோடு பரிணமித்திருக்கும் நவீன ஒலிம்பிக்ஸுக்கும் இங்கிலாந்துக்கும் சுற்றுமுகமான ஆனால் நெருக்கமான தொடர்பு உண்டு. இந்த உறவை வெளிப்படுத்தியவர் ஓர் ஆங்கிலேயர் அல்ல. ஆங்கிலக் கலாச்சார நேசகரான Charles Pierre Coubertin (1863 – 1937) என்ற பிரான்சு நாட்டவர். கொபார்ட்டின்தான் செயலற்றுப்போன இந்தப் பண்டைய விளையாட்டுகளை மீள்கண்டுபிடித்தவர். இன்றைக்கும் ஒலிம்பிக்ஸ் என்னும் வார்த்தையைக் கேட்டவுடன் நினைவுக்கு வரும் ‘வாகை சூடுவதல்ல பங்குகொள்வதுதான் முக்கியம்’ என்னும் சாசுவதமான வார்த்தைகளின் சொந்தக்காரர் இவர்தான்.
நவீன ஒலிம்பிக்ஸ் மறுபடியும் உருவாக ஆங்கிலக் கலாச்சாரத்துடன் இணைந்த மூன்று சம்பவங்கள் கொபார்ட்டினுக்கு உறுதுணையாக இருந்தன. ஒன்று இந்தியப் புரட்சி ஆண்டான 1857இல் வெளி வந்த Thomas Hughes எழுதிய Tom Brown’s School Days நாவல். இந்த ஆங்கில நூலைப் பிரான்சுக்காரர் வாசித்திருந்தார். அதில் பொதிந்திருந்த செய்தி இவருக்குப் பிடித்திருந்தது. அதைவிட அது தந்த தகவல் பிரஷியாவுடன் நடந்த போரில் தோல்வியடைந்து சோர்ந்துபோயிருந்த பிரான்சை மீண்டெழச்செய்யும் என்று நம்பினார். விளையாட்டு உடலைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல, ஒழுக்கத்தையும் தனி ஆளுமையையும் தரக்கூடும்; பந்தயங்கள் மனத்துக்கினிய, மகிழ்ச்சியான, பொழுதுபோக்கான காரியங்கள் மட்டுமல்ல சமுதாயத்தை மாற்றியமைக்கவும் தேசங்களிடையே நட்பையும் நல்லுறவையும் அவற்றால் வளர்க்க முடியும் என்று நாவலில் வரும் தாமஸ் ஆர்னாலட் கூறும் புத்திமதிகள் இவரைப் பாதித்திருந்தன. நான் மாணவராயிருந்த நாட்களில் இன்றைக்கு ஹாரி போட்டர்போல் இந்த நாவலில் வரும் டாம் பிரவுன் என்ற பதின்ம வயதுக் கதாநாயக இளைஞன் என் போன்றோரை உற்சாகத்தில் ஆழ்த்தியிருந்தான். அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் மிஷனரிமார் நடத்திவந்த ஆங்கிலக் கல்லூரிகளில் மாணவர்களின் தசை ஆற்றலை உரப்படுத்த மட்டுமல்ல தசைவலிவான கிறிஸ்துவத்தைப் போதிக்கவும் இந்நூல் கட்டாய வாசிப்பாயிருந்தது. அந்த நாட்களில் இந்த நாவல் பற்றித் தெரிந்திருக்காவிட்டால் எதோ ஜுராசிக் பார்க்கில் இருந்து வந்த ஆள் என்று நினைத்ததுண்டு. ஆனால் நாடுகளிடையே நல்லெண்ணமும் நேசமும் வளரும் என்று கொபார்ட்டின் எதிர்பார்த்தது நடக்கவில்லை. மூன்றாம் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடந்து முடிந்தவுடனே முதலாம் உலக மகாயுத்தம் ஐரோப்பாவில் ஆரம்பமாயிற்று.
இந்தக் கட்டத்தில் தேவையில்லாத சின்னக் கிளைக் கதையைப் புகுத்துகிறேன். Tom Brown’s School Days வெளிவந்த சில ஆண்டுகளுக்குப் பின் Alec Waugh எழுதிய The Loom of Youth என்னும் நாவல் வெளிவந்தது. அது எதிர்மறையான செய்தியைத் தந்தது. விளையாட்டு முக்கியமல்ல. இலக்கியந்தான் வாழ்வை உய்விக்கும் என்பது அந்தக் கதாசிரியர் சொல்லிய கருத்து.
மறுபடியும் கொபார்ட்டினுக்கு வருவோம். இரண்டாவதாக இவரைக் கவர்ந்த ஆங்கிலேய நிகழ்ச்சி 1850இலிருந்து ஆண்டு தோறும் மச் வென்லோக் என்ற பசுமையான ஆங்கிலக் கிராமத்தில் நடைபெற்ற பண்டைய ஒலிம்பிக்ஸ் பாணியில் ஒழுங்கு செய்யப்பட்ட போட்டிகள். அணிகள் ஆட்டமான உதைபந்தாட்டம், கிரிக்கட் போன்றவற்றுடன் திடல்தளப் பந்தயங்களான ஓடுதல், பாய்தல், எறிதல் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதை William Penny Brookes என்ற வைத்தியர் நடத்திவந்தார். அன்றைக்கு உருவாகி வந்த தொழிலாள வர்க்கத்தினரின் தார்மீகத்தையும் அறிவாற்றலையும் மேம்படுத்த வாசிப்புப் பழக்கத்தை மட்டும் அல்ல அவர்களின் தேகத்தையும் உடல்நலத் தகுதியையும் வலுப்படுத்த விளையாட்டுகளையும் இந்த வைத்தியர் அறிமுகப்படுத்தினார். அவற்றை நேரில் பார்த்த கொபார்ட்டின் உலகளவில் இதை ஏன் சாதிக்க முடியாது என்று நினைத்தார். மிகுதி சரித்திரமாயிற்று.
ஒலிம்பிக்ஸ் ஆரம்பமாவதற்கு இங்கிலாந்து இன்னுமொரு விதத்திலும் காரணமாக இருந்தது. விளையாட்டுகள் பற்றிய விதிமுறைகள் யாவும் இங்கிலாந்தில்தான் முறைப்படுத்தப்பட்டன. முரணான விதிகள் கொண்ட விளையாட்டுகள் தொகுக்கப்பட்டு ஒரே மாதிரியான தன்மையுடன் சீரமைக்கப்பட்டது இங்கிலாந்தில்தான். இதற்கு ஜேம்ஸ் மன்னரின் ஆட்சியில் 1618இல் வெளிவந்த Book of Sports காரணமாயிற்று. இந்தக் கைநூலில் என்ன விளையாட்டுகள் அங்கீகரிக்கப்பட்டவை, எப்படி விளையாட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டிருந்தது. ஜேம்ஸ் மன்னர்கூட உடற்பயிற்சி மக்களைச் சோம்பேறித்தனத்திலிருந்தும் அவர்களின் மனநிறைவற்ற வாழ்விலிருந்தும் மீட்டு ஆற்றலும் உடல்வலுவுமுடைய மனிதர்களாக மாற்றும் என எதிர்பார்த்தார்.
உலகின் எல்லா விஷயங்களையும் போலவே ஒலிம்பிக்ஸும் படிப்படியாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. முதல் பதின்மூன்று ஒலிம்பிக்ஸ்களில் ஒரே ஒரு நிகழ்ச்சியாக 200 மீட்டர் குறுவிரை (sprint) ஓட்டந்தான் இருந்தது. பிறகுதான் தொலைதூர ஓட்டங்களும் மற்போரும் அறிமுகப்படுத்தப்பட்டன. கிரேக்கர்களுக்கு மட்டுமல்ல கிரேக்கமொழி பேசத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே என்றிருந்த விளையாட்டுகளைச் சர்வதேச நிகழ்ச்சியாக்கியவர்கள் ரோமர்களே. பன்னாட்டினரும் அனுமதிக்கப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற முதல் கிரேக்கரல்லாதவர் என்ற பெருமை கி. பி. 385 போட்டிகளில் ஆமினியாவிலிருந்து வந்த பாரசீகரான Varazdatesஐச் சேரும். ஒரு நாள் மட்டுமே நடந்த போட்டிகள் ஐந்து நாட்களுக்கு விரிந்து இப்போது பதினேழு நாள் திருவிழாவாக நீடித்திருக்கிறது.
பொதுக்கருத்தில் இருப்பதுபோல் அந்தப் பண்டைய விளையாட்டுகள் பரிசுத்தமானவையும் நேர்மையானவையும் அல்ல. இன்றைக்கு இருக்கும் ஊழல்கள் அந்த நாட்களிலும் இருந்தன. பிடில் என்று சொன்னதும் ஞாபகத்திற்கு வரும் நீரோ தானும் பந்தயங்களில் பங்குபெற வேண்டும் என்பதற்காக விளையாட்டுத் திகதியைத் தள்ளிப் போட்டதுமல்லாமல் லஞ்சமும் கொடுத்தார். கிபி 67இல் நடந்த ஒலிம்பிக்ஸில் தேரோட்டப் போட்டியில் பங்குபெற்ற அவர் பாதி ஓட்டத்தில் தேரிலிருந்து தூக்கியெறியப்பட்டார். ஆனால் வெற்றி தனக்கே என்று அறிவித்துவிட்டார். அவருடைய மரணத்திற்குப் பின் வெற்றிபெற்றவர்களின் பட்டியலிலிருந்து அவர் பெயர் நீக்கப்பட்டது.
நீரோ மன்னன் செய்த நல்ல காரியம் கலை, கலாச்சாரப் போட்டிகளையும் அறிமுகப்படுத்தியது. கவிதை, சிற்பம், ஓவியம், பகிரங்கப் பேச்சு போன்றவை பண்டைய ஒலிம்பிக்ஸில் இடம்பெற்றன. இதைப் பின்பற்றி நவீன ஒலிம்பிக்ஸில் கவிதைப் போட்டியைக் கொபார்ட்டின் அறிமுகப்படுத்தினார். 1912 ஒலிம்பிக்ஸ் கவிதைப் போட்டியில் ஜெயித்தவரின் பெயர்: கொபார்ட்டின். அவரது மோசமான கவிதையைத் தமிழ்ப்படுத்தி உங்களின் இனிய நாளைக் கெடுக்க விரும்பவில்லை.
போட்டிகள் முடிவுபற்றி முன்னமே நிர்ணயிக்கப்படுவது (match fixing) அந்த நாட்களிலும் இருந்திருக்கிறது. குத்துச்சண்டை வீரர்கள் மூவரை வேண்டுமென்றே தோற்றுப் போகும்படி Eupholus of Thessaly கிபி 388 போட்டிகளில் லஞ்சம் கொடுத்திருந்தார். அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது மட்டுமல்ல அவரிடமிருந்து வசூலித்த அபராதக் கட்டணத்திலிருந்து கிரேக்கக் கடவுளான Zeusவைச் சமாதானப்படுத்தச் சிலைகளும் உருவாக்கப்பட்டன.
ஒலிம்பிக்ஸுக்கும் வணிகக் குழுமங்களுடன் தொடர்பு உலகமயமானதால் ஏற்பட்டதல்ல. ரோமர் காலத்திலிருந்தே இருக்கிறது. அதில் ஒருவர் இயேசு கிறிஸ்துவை விசாரணைக்குட்படுத்திய ஏரோது மன்னன். இவர் கி.மு. 12ஆம் ஆண்டில் பண உதவிசெய்தது மட்டுமல்லாது ஒரு புதிய விளையாட்டு அரங்கையும் கட்டினார்.
ஒலிம்பிக்ஸ் தொடங்கிய நாட்களில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். தேரோட்டப் போட்டியில் மட்டும் பங்குபெறப் பெண்களுக்கு அனுமதி தரப்பட்டது. நவீன ஒலிம்பிக்ஸ் முதன்முதலாக 1896இல் ஏதன்ஸில் நடந்தபோது பெண்கள் இடம்பெறவேயில்லை. பெண்கள் அனுமதிக்கப்படாததற்குக் கொபார்ட்டின் சொன்ன காரணம்: “impractical, uninteresting, unaesthetic, and incorrect.” 1900 பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தான் பெண்களின் முதல் பிரவேசம் நிகழ்ந்தது. ஆனாலும் ஓடுதல், பாய்தல், எறிதல் போன்ற பந்தயங்களில் பெண்கள் தடைசெய்யப்பட்டிருந்தனர். டென்னிஸ் மற்றும் குழிப் பந்தாட்டத்தில் பங்குபெற மட்டுமே பெண்களுக்கு அனுமதி கிடைத்தது. திடல்தள (track and field) விளையாட்டுகளில் பெண்கள் முதல்முதலாக 1928 ஒலிம்பிக்ஸில்தான் பங்குபெற்றார்கள். லண்டன் ஒலிம்பிக்ஸில் 26 விளையாட்டுகளிலும் கலந்துகொண்டர்கள். தங்கப் பதக்கங்கள் வழங்குவதில் ஆடவருக்கும் மகளிருக்கும் சரிசமநிலை இல்லை. ஆண்கள் 162 தங்கப் பதக்கங்கள் பெற வாய்ப்பிருந்தது. ஆனால் பெண்கள் 132 தங்கப் பதக்கங்களுக்குத் தான் போட்டியிட முடிந்தது.
ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இடம்பெறும் விளையாட்டுகள் மேற்குலக அரசியல், சமூக, வர்க்கச் சூழலில் எழுந்தவை. பெரும்பாலானவை இங்கிலாந்தில் உருவானவை. குத்துச்சண்டை, ஓடம் வலித்தல் (rowing), விற்போட்டி (archery), திடல் தடப் (track and field) பந்தயங்கள், இறகுப் பந்துப்போட்டி (badminton), உதைபந்தாட்டம், நீச்சல், வளை கோற்பந்தாட்டம் (hockey) ஆகியன ஐக்கிய ராச்சியத்தில்தான் நவீனமாக்கப்பட்டன. இவற்றில் விற் போட்டி, குத்துச்சண்டை, மல்யுத்தம் போன்றவை இந்திய, சீனக் கலாசார வழக்கிலிருந்தாலும் விக்டோரியன் ஆங்கிலேயர்களால்தான் தற்காலத்திற்கேற்பச் சீராக்கப்பட்டன. கரப் பந்தாட்டம் (volleyball), கூடைப் பந்தாட்டம், ஏககால நீச்சல் (synchronized swimming) ஆகியவை அமெரிக்காவில் உருவானவை. கைப்பந்து, சீருடற்பயிற்சி (gymastics) போன்றவை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவை. லண்டன் ஒலிம்பிக்ஸில் இடம்பெற்ற 26 விளையாட்டுகளில் இரண்டு மட்டுந்தான் ஆசியாவில் தோன்றியவை. ஜப்பானிய மற்போர் (judo) 1964இலிலும் கொரிய பண்டைய படைத்துறைக் கலையான டைக்வாண்டோ (taekwondo) 1988இலும் அறிமுகப்படுத்தப்பட்டன. நவீன ஒலிம்பிக்ஸின் முதல் ஆறு பத்தாண்டுகளும் மேற்கத்தியத் தலைநகரில் நடந்தது மட்டுமல்ல மேற்கத்தைய விளையாட்டுகளிலேயே ஆப்பிரிக்கர்களும் ஆசியர்களும் தென் அமெரிக்கர்களும் ஈடுபட்டிருந்தார்கள். மூன்றாம் மண்டல நாடுகள் தங்கள் உடல் திண்மையையும் மனவுரத்தையும் மேற்கத்தையரின் விளையாட்டுகள் மூலந்தான் வெளிப்படுத்த நேரிட்டது, அங்கீகாரம் பெற முடிந்தது.
ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளான குதிரையேற்றம் சார்ந்த பந்தயங்கள் (equestrian), வாள்சிலம்பம் (fencing) போன்றவை மேட்டுக்குடி மற்றும் ராணுவத் தொடர்பு உடையவை. இன்றைய குண்டெறிதலின் முன்னோடி ராணுவ வீரர்கள் பொழுது போக்குக்காகப் பீரங்கிக் குண்டுகளை வீசி விளையாடியதில் ஆரம்பமாயிற்று. சில விளையாட்டுகளுக்குக் காலனியச் சம்பந்தமுண்டு. மேசைப் பந்து விளையாட்டு இந்தியாவிலிருந்த ஆங்கில ராணுவ அதிகாரிகளின் உணவகத்தில்தான் ஆரம்பமானது. உணவு உண்டபின் நேரத்தைக் கழிக்க சாம்பேயின் போத்தல்களின் தக்கையைப் பந்தாகப் பாவித்துச் சுருட்டு டின்களை வலையாக வைத்துத் தொடங்கிய விளையாட்டுதான் இன்று மேசைப் பந்தாட்டமாக உருமாறியிருக்கிறது. கனடாவில் புதிய பிரசேதங்களைக் காலனிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஓடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பயணந்தான் இன்று பாய்மரப் படகுப் போட்டியாக அவதாரம் எடுத்திருக்கிறது.
இந்தப் போட்டிகளில் வழங்கப்படும் பதக்கங்கள் ஒருபுறச் சாய்வுடையவை. மேற்கத்தைய மேட்டுக் குடியினரின் விளையாட்டுகளுக்கே அதிகப் பதக்கங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மத்தியதர வர்க்கத்தினரும் பணவசதி உள்ளவர்களும் மட்டும் பங்குபெறும் வலித்தல் போட்டிக்கு 14 தங்கப் பதக்கங்கள். ஆனால் பெருஞ்செலவில்லாமல் உலகம் முழுவதும் பிரபலமான சாதாரண மக்களிடையே செல்வாக்குள்ள உதைபந்தாட்டப் போட்டிக்கு இரண்டு பதக்கங்கள் மட்டுமே. அதுமட்டுமல்ல சில விளையாட்டுகள் வரையறை செய்யப்பட்ட விதத்தில் குறிப்பிட்ட சில நாடுகள்தான் திரும்பத் திரும்பத் தங்கப் பதக்கங்களைப் பெற்றிருக்கின்றன. இதுவரை நடந்த ஒலிம்பிக்ஸ் சைக்கிள் போட்டியில் பிரான்சு 40க்கும் மேலான தங்கப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறது. அதுபோல் குதிரையேற்றப் பந்தயத்தில் சுவீடன், ஜெர்மனி, பிரான்சு ஆகிய நாடுகளே மாறி மாறித் தங்கப் பதக்கங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கின்றன. பதக்கங்கள் வழங்குவதில் இருக்கும் சமத்துவமின்மை பதக்கப் பட்டியலில் காணப்படும் ஏற்றத்தாழ்வைப் பிரதிபலிக்கிறது.
இந்தப் போட்டிகளில் இடம் பெறும் விளையாட்டுகளில் முக்கியமாகக் குதிரையேற்றம் சார்ந்த பந்தயங்களில் உலகத் தரம் பெற நீங்கள் சின்ன அரண்மனை ஒன்றுக்குச் சொந்தக்காரராக இருக்க வேண்டும். குதிரையேற்றப் போட்டித் திடல்கள் எல்லாம் ராஜ குடும்பத்துக் கோட்டைகளிலும் உயர்குடிப் பிரமுகர்கள் வசிக்கும் வளவுகளிலும்தான் இருக்கின்றன. அதேபோல் படகுப் போட்டிகளில் சர்வதேச நிலையை அடைவதற்குப் பயிற்சி பெற மாலத் தீவுகளில் ஒரு சின்னத் தீவாவது வேண்டும். சைக்கிள் போட்டிகளில் இடம்பெறும் சைக்கிள்கள் அந்த நாட்களில் சாதாரணமாக இரண்டு சக்கரங்களில் யாழ்ப்பாண ஒழுங்கைகளில் ஓடித்திரிந்த ராலே (Raleigh) சைக்கிள் அல்ல. இவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் அதிக சக்தி வாய்ந்த மின்னணுத்திறனில் சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையை ஆடு, மாடு, ஆட்டோக்களின் தொந் தரவு இல்லாவிட்டால் இரண்டு மணி நேரத்தில் கடந்து ஊர் வந்து சேரலாம் என நினைக்கிறேன்.
அதிகப் பண முதலீடில்லாமல், பிரத்தியேக அரங்கங்களைப் பெரும் செலவில் கட்டாமல் எல்லோரும் கலந்துகொள்ளும் விளையாட்டுகள் ஒலிம்பிக்ஸில் சேர்க்கப்பட வேண்டும். கயிறு இழுத்தல் (tug of war) இந்த வகையைச் சார்ந்தது. 1920 வரை இது ஒலிம்பிக்ஸ் பந்தயமாக இருந்திருக்கிறது. நவீன ஒலிம்பிக்ஸில் முதன்முறையாக ஒரு கறுப்பர் பங்கு பெற்றது இந்தப் போட்டியில்தான். பிரான்சு நாட்டுப் பிரதிநிதியாகக் கலந்துகொண்டவரின் பெயர் Constantin Henriquez de Zuiera. செலவில்லாத இன்னுமொரு விளையாட்டு கபடி. இதைப் பிராந்திய விளையாட்டு என்று ஒதுக்க முடியாது. இன்று ஒலிம்பிக்ஸில் இடம்பெற்றிருக்கும் நவீன ஐந்து நிகழ்ச்சிகள் (modern pentathlon) போட்டி கிழக்கு ஐரோப்பாவைத் தவிர மற்ற நாடுகளில் அவ்வளவு பிரபலமல்ல. ஆனாலும் சர்வதேச ஒலிம்பிக் குழு இந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திவந்திருக்கிறது. அதுபோல் 2016இல் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரக்பி 7 எல்லா நாடுகளிலும் விளையாடப்படுவதில்லை. அதிகச் செலவில்லாமலும் பெரிய ஆடுதிடல்கள் இல்லாமலும் பெண்களிடையே அதிகம் பரவலான வலைப்பந்தாட்டம் இதுவரை ஒலிம்பிக்ஸ் ஆட்டமாக அங்கீகரிக்கப்படவில்லை.
இந்தப் போட்டிகளில் நடைபெற்ற பந்தயங்களில் எத்தனையை மனமார்த்தமாக விளையாட்டுகள் என்று ஒத்துக்கொள்ள முடியும்? இவற்றில் சில தொலைக்காட்சிக்கு என்றே உருவாக்கப்பட்ட கண்கவர் காட்சி விந்தைகள் என்று படுகிறது. அதில் ஒன்று ஙிவிஙீ சைக்கிள் போட்டி. இதை அரங்கத்தில் போய்ப் பார்ப்பதைவிட உங்கள் தொலைக்காட்சியில் பார்ப்பதுதான் நல்லது. வீர வசனம் பேசியிடும் வாள் சண்டைகளைத் தமிழ்ப் படங்களில் பார்த்துப் பழகிப்போன எனக்கு இந்த ஒலிம்பிக்ஸ் வாள்சிலம்பப் போட்டிகள் ஏதோ இருபதுகளில் வந்த மௌனப் படங்களைப் பார்ப்பதுபோல் இருந்தது. மகளிர் கடற்கரை வலைப் பந்தாட்டம் முக்கியமாகப் போட்டியாளர்கள் அணிந்திருந்த உடுப்பு மத, கலாச்சாரக் கண்காணிகள் பலரை மிகைநேர வேலையில் ஈடுபடச்செய்யும்.
இலக்கியம்போல் விளையாட்டுகளும் கபடமற்றவை அல்ல. சீனாவில் ஒலிம்பிக்ஸ் நடந்தபோது இந்தப் போட்டிகளை அரசியல் ஆதாயத்திற்காகச் சீன அரசியல் தலைமைப்பீடம் பயன்படுத்திக்கொண்டது என்று மேற்கு நாட்டு விமர்சகர்கள் கூறினார்கள். இதைத்தான் ஐக்கிய ராச்சியமும் சாதித்தது. பாரம்பரியமும் உயர்பண்பும் கொண்டவர்களின் நாடு என்று தன்னை உலகிற்கு அறிவிக்க ஆங்கில அரசுக்குச் சர்ந்தர்ப்பம் கிடைத்தது. படகுப்போட்டி, ஓடம் வலித்தல் முதலியவை நடந்த Eton’s Dorney, கடற்கரைக் கைப்பந்தாட்டம் நிகழ்ந்த Horse Guard Parade, குதிரையேற்றம் சார்ந்த பந்தயங்களுக்கான Greenwich Parkஇல் அமைந்த ஆடு களம், சைக்கிள் ஓட்டம் அரங்கேறிய Hampton Court Place ஆகியவை எல்லாம் இங்கிலாந்தின் மேற்குடியினருடனும் மேதகு குடும்பங்களுடனும் உறவுடையவை. நெடுந்தொலைவு ஓட்டம்கூட (marathon) முதலில் குடியேறிகள் அதிகமாக வசிக்கும் கிழக்கு லண்டன் பட்டணங்களான Tower Hamlets, Newham, Hackney, Waltham Forest வழியாகத்தான் நடப்பதாக இருந்தது. அதை மாற்றிச் சுற்றுலா வாண்மையான Buckingham Palace, St. Paul’s, Admiralty Arch, Houses of Parliament வழியாகத்தான் போட்டி நடந்தது.
லண்டன் ஒலிம்பிக்ஸ் ஐக்கிய ராச்சியத்தைப் பன்முகச் சமூகமாக உலகுக்கு அறியப்படுத்த உதவியது. இன இறுக்கம் தளர்ந்த சகல வந்தேறிகளும் சுமுகமாக வாழும் நாடு என்ற பிம்பத்தை இரண்டு வாரங்களுக்குக் கட்டுருவாக்க முடிந்தது. திடத்தளப் பந்தயங்களில் பதக்கங்கள் பெற்றவர்கள் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்கள். இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற மொ ஃபரா சோமாலியாவிலிருந்து அகதியாக வந்தவர். பெண்கள் எழுபந்தையப் போட்டிகளில் (லீமீஜீtணீtலீறீஷீஸீ) முதலிடத்தை அடைந்த ஜெசிக்கா என்னிஸ்ஸுடைய தகப்பனார் மேற்கு இந்தியத் தீவுகளைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சென்ற ஆண்டு இதே ஆகஸ்ட்மாதம் இங்கிலாந்தில் புரட்சிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடந்தபோது பல் வகைக் குடியேறிகள் மையநீரோட்ட ஆங்கிலக் கலாச்சாரத்துடன் ஒன்றிணையாததே அவற்றுக்குக் காரணம் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமாரன் எரிச்சல்பட்டார். அதே பிரதமர் இன்று பன்முக ஆங்கிலச் சமூகம் உலகுக்கு அகத்தூண்டுதலளிக்கும் நாடு என்று பெருமைப்பட்டுக்கொள்கிறார். மூன்று மணி நேரத் தொடக்கவிழாக் காட்சியும் இங்கிலாந்தின் பன்மைத் தன்மையைத்தான் பெரிதுபடுத்தியது. இதைத் தயாரித்தவர் சேரி நாய் லட்சாதிபதி படத்தின் இயக்குநர் டானி பொயில். ஒரு சாய்வான பார்வையுடன் ஐக்கிய ராச்சியத்தின் சரித்திரத்தைத் தொலைக்காட்சியில் சித்தரித்த டானி பொயில் சொல்ல மறந்துவிட்ட இரண்டு சம்பவங்கள்: ஆங்கிலேயரின் காலனீய அட்டூழியங்கள், கறுப்பர்களை அடிமையாக்கியதில் ஆங்கிலேயரின் பங்கு. இயந்திரத் தொழில்துறை வளர்ச்சியில் இங்கிலாந்தின் முக்கியப் பங்கை நினைவூட்டியவர் இதற்கு அடிமை வியாபாரப் பணம் ஒத்தாசையாக இருந்த செய்தியைப் பற்றி மௌனம் காத்துவிட்டார்.
சாய்மணைக் கதிரை ரசிகனின் எண்ணங்கள்
இந்த விளையாட்டுகளில் யார் வென்றார்கள், எந்த நாடு அதிகம் தங்கப் பதக்கங்கள் பெற்றது என்று நான் திரும்பவும் இங்கு உங்களுக்கு நினைவுபடுத்த விரும்பவில்லை. இந்த இரண்டு வார விளையாட்டுகளில் என் கவனத்தை ஈர்த்தவற்றை இங்கே வரிசைப்படுத்துகிறேன். இவற்றைப் படிக்கும்போது உங்களுக்கு ஒன்று புலனாகும். இவை எல்லாமே விளையாட்டு சார்ந்தைவை அல்ல. அவற்றுக்கு அப்பால்பட்ட சம்பவங்கள்.
முதலில் பரிசு வழங்கும் மேடைக்கு வீரர்களைச் சடங்காச்சாரமாக அழைத்து வந்த முகத்திரை அணிந்த அந்தப் பிரித்தானிய இஸ்லாமியப் பெண்மணிகள். நாளைக்கு இந்தப் பெண்கள் ஒரு உத்தியோகத்திற்கான நேர்காணலில் இதே முகத்திரையால் வேலைவாய்ப்பை இழக்கலாம். ஆனால் உலகம் முழுவதும் பரப்பட்ட இந்தப் பிம்பம் இங்கிலாந்தின் மற்ற இன அடையாளங்களான வேல்ஷ் (Walesh), ஸ்கோட்டிஷ் (Scottish), ய்ரிஷ் (Irish) போல் ஆங்கில இஸ்லாமியர்களும் ஒரு இனக் குழுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள் என்ற சின்னமாக எடுத்துக்கொள்ளலாம். சிக்கன் டிக்கா எப்படி ஆங்கிலேயரின் உணவாக மாறியதோ அதுபோல் முகத்திரைகூட உடையலங்காரங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
என் கவனத்தைக் கவர்ந்த இரண்டாம் சம்பவம் தென்கொரிய உதைப்பந்தாட்ட வீரர் Park Jong Wooவின் துணிச்சலான செயல். ஜப்பான்-தென்கொரிய ஆட்ட வெற்றிக்குப் பின் சர்ச்சைக்குரிய Dokdo தீவுகள் தென்கொரியாவுக்கே உரியவை என்று துகிற்கொடி காட்டியது. இதனால் பரிசளிப்பு விழாவில் பங்குபெற முடியாதபடி தடை செய்யப்பட்டார். இது இந்தியா – சிறிலங்கா ஆட்டத்திற்குப் பிறகு இந்திய வீரர் ஒருவர் கச்சத் தீவு தமிழருக்கே என்று சொல்வது போன்றது. 1968 மெக்சிகோ ஒலிம்பிக்ஸில் கறுப்பர்கள் அமெரிக்காவில் ஒடுக்கப்படுவதை எதிர்த்து Tommy Smith, John Carlosபோல் எதிர்காலத்தில் பார்க் ஜொங் வூவின் செய்கை நினைவுகூரப்படும் என நினைக்கிறேன்.
மூன்றாவது, இந்தத் தேயிலை வாங்கு, அந்தப் பட்டுப் புடவையைத் தேர்வுசெய் என்று எந்தவித விளம் பரத் தொந்தரவுகளும் இல்லாமல் போட்டிகளைத் தொலைக்காட்சியில் பார்த்தது. துப்பரவாக ஒரு விளம்பரம்கூட இல்லை. பிபிசி ஒலிம்பிக்ஸிற்கு என்றே தனியாக 24 லக்க (digital) அலைவரிசைகளை ஏற்பாடு செய்திருந்தது. ஒருவேளை ஒரு நிகழ்ச்சியைத் தவறவிட்டால் உங்கள் தொலை இயக்கக் கருவியிலிருக்கும் சிவப்புப் பொத்தானை அமுக்கி எப்போது வேண்டுமானாலும் மீள் அழைப்புச் செய்யலாம். முக்கியமாக மகளிர் கடற்கரைக் கரப்பந்தாட்டத்தை உங்கள் குடும்பத்துடனிருந்து பார்க்கக் கூச்சமாக இருந்தால் உங்களுக்கு வசதியான நேரத்தில் வரவழைத்துப் பார்க்கலாம். ஐபிஎல்லில் ஒவ்வொரு பந்துவீச்சுக்குப் பின்னும் விளம்பரங்களைப் பார்த்து அலுப்படைந்தவர்களுக்கு விளம்பரங்கள் இல்லாமலே ஒலிம்பிக்ஸ் நிகழ்ச்சிகளைப் பார்த்தது மதுரையில் கோடை இரவு முழுக்க மின்சாரத் துண்டிப்பில்லாமல் மின்சார விசிறிக்குக் கீழ் படுத்ததைப் போல் இருந்தது.
நான்காவதாக, வெற்றிபெற்ற வீரர்களுக்குப் பின்னால் இயங்கும் பன்னாட்டுக் கூட்டுறவு முயற்சி. பதக்கப் பட்டியலில் நாடுகளின் பெயர்கள் இருந்தாலும் ஒரு வீரரின் வெற்றிக்கு அவரின் சொந்த நாட்டைவிடப் பல நாடுகளின் உதவி தேவையாக இருக்கிறது. 5000, 10,000 மீட்டர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற மொ ஃபாரா ஆங்கிலேய அணியைச் சேர்ந்தவரானாலும் அவர் பயிற்சிபெற்றது அமெரிக்காவில். அவருடைய பயிற்சியாளர் கூபா நாட்டைச் சேர்ந்தவர். 800 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையை முறியடித்த கென்னிய நாட்டு ருடிஷியா வாழ்வது ஜெர்மனியில். அவருக்குப் பயிற்சியளிப்பது ஆஸ்திரேலியர். ஆங்கிலத் திடல்தளப் பயிற்சியாளர் இத்தாலியர்.
ஐந்தாவதாக, மாறிவரும் ஆங்கிலேயருடைய உணர்ச்சி உச்ச அளவு. ஒரு காலத்தில் ஆங்கிலேயர் அதிகம் உணர்ச்சிவசப்படாதவர்கள், இறுக்கமான உதடு உடையவர்கள் என்ற எண்ணம் பரவலாயிருந்தது. அது இப்போது மாறிவருகிறது. இளவரசி டயனா இறந்தபோது நாடே விம்மி விம்மி அழுதது. ஒலிம்பிக்ஸ் நடந்த இரு வாரங்கள் வீராப்பான தேசிய உணர்வில் ஊறிப்போயிருந்தது. குறைத்துக்கூறல் ஆங்கில அடையாளமாக இருந்தது. ஒவ்வொரு ஆங்கிலப் பதக்க வெற்றிக்குப் பின்னும் எதையுமே மிகைப்படுத்தல் சாதாரணமாகிவிட்டது. எப்போதுமே நிதானத்தை இழக்காத ஆங்கில வர்ணனையாளர்களின் கண்களில் ஆங்கிலேய வீரர்கள் தோற்றுப்போனபோது நீர்வழிந்தது, வெற்றியடைந்தால் நெஞ்சங்கள் விம்பின. இவர்களின் உணர்ச்சிப்பெருக்குக்கு முன்னால் வடகொரியத் தலைவர் இறந்த பின் தொலைக்காட்சியில் பார்த்த கூட்டு ஒப்பாரி ஏதோ கோணல்மாணலான செய்கைபோல் தெரிந்தது.
கடைசியாக, விளையாட்டுப் பிரியர்களுக்கு விறுவிறுப்பு தராத, அவர்களின் ஆர்வத்தைச் சிதைக்கும் வார்த்தைகளுடன் முடிக்கிறேன். என்னை முழுமையாக ஒலிம்பிக்ஸ் பரவசப்படுத்தவில்லை. வணிகமாக்கப்பட்ட, வியாபாரக் கூட்டு ஸ்தாபனங்களின் தயவில் நடத்தப்படும் விளையாட்டுகள் ஒரு குறிப்பட்ட வர்க்கத்தினருக்கும் வசதியுள்ளவர்களின் செயல் திறத்திற்குமே சிறப்புரிமையும் ஆதரவும் கொடுப்பதாகப்படுகிறது. பண்டகமாக்கப்பட்ட இந்த விளையாட்டின் கூறுமுறைப் பிரதியைப் பழுதுபடுத்தியவர் இந்தியாவின் மேரி கொம். அவரின் பொருளாதார, சமூகப் பின்னணியிலிருந்து விளையாட்டு வீரர்கள் தோன்றுவது தற்செயலான சமூக விபத்து. இந்தப் போட்டிகளில் பதக்கங்கள் பெறுவதற்கு உடல் வலிமையும் மனவுரமும் மட்டும் போதாது. உடற்பயிற்சியாளர் முதல் பத்திய உணவு தயாரிப்பாளர்வரை சர்வதேச அந்தஸ்து உள்ள நிபுணர்கள் வேண்டும். பதக்கங்கள் பட்டியலைப் பார்த்தீர்கள் என்றால் எல்லாமே நிறையப் பணவசதியுள்ள நாடுகள். இதுவரை 28 ஆப்பிரிக்க நாடுகள் ஒரு பதக்கமுமே பெறவில்லை. இதை மனத்தில் வைத்துப் பார்க்கும்போது இந்தப் போட்டியிலிருந்து விலக்கப்பட்ட இந்தோனேசிய வீரர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்குவருகின்றன: இவை குறைபாடுள்ள, நேர்த்தியற்ற விளையாட்டுகள்.
சச்சிதானந்தன் சுகிர்தராஜா

நன்றி- காலச்சுவடு

மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு’?

மதுவின் தீமை குறித்து எத்தனையோ விதமாகக் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. வெளிவருகின்றன. வெளிவரும். காரணம், மது நேற்றும் விற்கப்பட்டது. இன்றும் விற்பனையாகிறது. நாளையும் விற்பனையாகும். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில்லை என அரசுகள் மிகுந்த உறுதியாக இருக்கும்போது, மதுவின் தீமைகளை விளக்கி, மதுவிலக்கை வலியுறுத்தி கட்டுரைகள் வெளிவர வேண்டியதும் அவசியம்தானே?

குடங்குடமாய் பாலைத் தந்தேனே என அரசுகள் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டாலும் கூடவே ஒருதுளி விஷத்தைத் தந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான், ஏழைகளுக்காக எனக் கூறி எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினாலும் கூடவே ஒரு துளி விஷமாய் மது விற்பனை.

அண்மையில் நாளிதழ்களில் ஓரிரு நாள் இடைவெளியில் இரண்டு செய்திகள் கண்ணில்பட்டன.

மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மாணவர்கள் வகுப்பறையில் கிடந்த இருக்கைகளை உடைத்து எடுத்துச் சென்று விற்று மது குடித்தனர் என்பது. மற்றொன்று கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகேயுள்ள அரசுப் பள்ளி ஒன்றில் இரவுதோறும் மர்ம நபர்கள் புகுந்து வகுப்பறைகளை மதுக்கூடங்களாக மாற்றி மதுகுடித்து மகிழ்கிறார்கள் என்பது.

இரண்டுமே மது சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, வகுப்பறை சம்பந்தப்பட்டது என்பதுதான் இதில் கூடுதல் வேதனை. கன்னியாகுமரி மாவட்டம் "படித்தோர் நிறைந்த’ மாவட்டம் என்னும் புகழ்பெற்றது. இப்போது நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் அப் பெருமையைப் பின்னுக்குத் தள்ளி, "குடித்தோர் அதிகரித்துக் கொண்டிருக்கும்’ மாவட்டம் என்னும் பெருமையைப் பெற்றுவிடுமோ என நினைக்க வைக்கிறது.

"மூத்தகுடி’ தோன்றியதாகக் கூறப்படும் தமிழகத்தின் தென்கோடி மாவட்டம் இன்று "குடியில், மற்ற மாவட்டங்களைவிட மூத்தது’ என்னும் பெருமையைப் பெற்றாலும் ஆச்சரியமில்லை.

"பிச்சைப் புகினும் கற்கை நன்றே’ என உலகுக்குத் தமிழகம் உரைத்த காலம்போய் இன்று ‘எது செய்தேனும் மது குடி’ எனப் புதுமொழியைத் தந்துவிடுமோ என சமூகநல ஆர்வலர்களைக் கவலையும், அச்சமும் கொள்ளச் செய்கிறது மதுரைச் சம்பவம். இறையனாரின் இலக்கியப் பாட்டில் குற்றம் கண்டுபிடித்து தமிழை வளர்த்த நக்கீரப் பரம்பரையினர் இன்று மது பாட்டில் பிடித்து இன்பம் கண்டு மகிழ்கிறார்கள் போலும்!

மது குடிப்பதால் உடல், உள்ளம் பாதிக்கும், ஆண்மைக் குறைவு, மூளை (அது இருந்தால், குடிப்பார்களா எனக் கேட்கக்கூடாது) பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற பல நோய்கள் ஏற்படலாம் என்றெல்லாம் மதுவின் தீமைகளை விளக்கி புள்ளிவிவரங்களை அறிவியலாளர்கள் அள்ளித் தருகிறார்கள். ஆனால் அவற்றைக் காது கொடுத்தும் கேளாமல், புதிய புதிய குடிமகன்கள் நாள்தோறும் உருவாகிறார்கள். இதனால், குடிக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. மாறாக ஏழைகளைப் பாடாய்ப்படுத்தும் விலைவாசிபோல அந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.

ஆனால் இதிலும் ஓர் ஆச்சரியம். விலைவாசி ஏறி ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள் என ஆங்காங்கே குரல்கள் எழுப்பப்பட்டாலும் "டாஸ்மாக்’ கடைகளில் பாதிக்கும் மேல் விற்பனையாவது ஏழைகளின் புண்ணியத்தால்தான்.

ஒருவேளை, அரசுகளிடமிருந்து சில இலவசங்களைப் பெறும் அவர்கள், அவற்றைப் பலமடங்காக்கி அரசுக்கு நன்றி உணர்வுடன் திருப்பித் தரவேண்டும் என்ற கண்ணியத்தோடு தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு கடமை ஆற்றுகிறார்களோ என்னவோ?

முன்பெல்லாம் மது குடிப்பது அவமானம். இப்போதோ அதனால் அரசுக்கு வருமானம்.

அதேபோல, முன்பு மது குடிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இப்போதோ மது குடிக்காதவர்களைத்தான் விரல்விட்டு எண்ண முடிகிறது. காலப்போக்கில், "மணமகன் தேவை’ விளம்பரம் செய்வோர் "மணமகன் குடித்தாலும் பரவாயில்லை’ என்ற சலுகை அளித்துத்தான் மணமகனைத் தேட வேண்டும் என்ற நிலை வந்தாலும் வரலாம்.

மாணவர்களுக்கு மது விற்கக் கூடாது, குறைந்தபட்ச வயது நிர்ணயிக்க வேண்டும் என, மதுவிலக்கை வலியுறுத்தும் சிலர் கோருகின்றனர். அதுகூடத் தவறுதான். குடிக்க வேண்டும் என முடிவெடுத்து கடைக்கு வரும் மாணவன் தன் உண்மையான வயதைச் சொல்வானா? அல்லது குடிக்க வேண்டும் என ஆசைப்படும் ஒருவன், குறிப்பிட்ட வயது வரும்வரை பொறுமையுடன் காத்திருப்போம் என நினைத்து மதுக்கடைக்குச் செல்லாமலிருப்பானா? இவ்வாறு மதுவிலக்கில் "சில விலக்குகளை’க் கோராமல் மாணவர்களை மட்டுமன்றி தமிழ்ச் சமுதாயத்தைக் குடியிலிருந்து மீட்க ஒரேவழி, ""மதுக்கடைகளை ஒட்டுமொத்தமாக மூடுவதுதான்”.

 

நன்றி -தினமணி

கைப்பேசி என்கிற எட்டப்பன்!

உனக்கு ஒரு பரம ரகசியமான விஷயம் சொல்லப் போகிறேன். தப்பித் தவறிக்கூட நீ அதை வேறு யாரிடமும் சொல்லிவிடக் கூடாது?” என்று நீங்கள் கைப்பேசி மூலம் உங்களுடைய நண்பரிடம் குசுகுசுவென்று ஒரு செய்தியைச் சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், அந்தப் பரம ரகசியத்தை இந்தியாவிலிருந்து மட்டுமன்றி, அகில உலகத்திலிருந்தும் பல நூறு பேர் ஒட்டுக் கேட்டுக்கொண்டும் பதிவு செய்துகொண்டுமிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது!

வனவிலங்குகள், கடல் ஆமைகள், திமிங்கிலங்கள் போன்றவற்றின் கழுத்தில் ஓர் அலைபரப்பிக் கருவியைப் பொருத்திவிட்டு, வானில் சுற்றி வரும் புவியியல் இடமறியும் செயற்கைக் கோளின் உதவியுடன் அந்த விலங்குகளின் நடமாட்டத்தை உயிரி ஆய்வர்கள் கண்காணிப்பார்கள்.

கைப்பேசி உண்மையில் உங்கள் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு ரேடியோ காலர். நீங்கள் நடந்தாலும் நின்றாலும் பறந்தாலும் எங்கே இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள், யார் யாருடன் தகவல் பரிமாறிக் கொள்கிறீர்கள் என்பன போன்ற விவரங்களை அக்கணமே கைப்பேசி நிறுவனங்களின் ஆவணங்களில் பதிவு செய்யும் எட்டப்பன். அதைக் கொண்டு அழைக்கவும் அழைக்கப்படவும் முடிவது உங்களுக்கு ஆசை காட்டும் தூண்டிற் புழு.

கடந்த ஆண்டில் அமெரிக்கக் காவல் துறையினரும் பாதுகாப்புத் துறையினரும் கைப்பேசி நிறுவனங்களிடமிருந்து 13 லட்சம் கைப்பேசி உரையாடல்களைப் பற்றிய பதிவுகளைக் கோரிப் பெற்றிருக்கிறார்கள். பல சமயங்களில் உளவுத்துறையினர் உரிய வாரண்டுகள் ஏதுமில்லாமலேயே கைப்பேசி நிறுவனங்களின் ஆவணங்களை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள்.

ஜிபிஎஸ் மூலம் புவிப்பரப்பில் துல்லியமாக இடம் அறியும் தொழில்நுட்பமும் கைப்பேசிகளின் பரிணாம வளர்ச்சியும் எதையும் யாரிடமிருந்தும் மறைக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன. ஐஃபோன், ஸ்மார்ட்ஃபோன் என்று பற்பல பயன்பாடுகளுடன் அதிநவீனக் கருவிகள் சந்தைக்கு வந்துள்ளன. அவற்றைக் கைப்பேசி என்று அழைப்பதுகூட இன்றளவில் பொருத்தமில்லை. அவற்றின் மூலம் கைப்பேசி நிறுவனங்கள் கடவுள் நிலைக்கு உயர்ந்து உங்களுடைய ஒவ்வோர் அசைவையும் மேலேயிருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன.

காரிருளும் பனிமூட்டமும் அவற்றின் பார்வையைத் தடுக்க முடியாது. ஆழ்கடலுக்கு அடியிலும் சுரங்கங்களுக்குள்ளும் அடர்ந்த வனாந்தரங்களுக்குள்ளும்கூட அவற்றால் பார்க்க முடியும்.

ஸ்மார்ட் ஃபோன் போன்ற அதிநவீனமான கருவிகள் பற்பல பயன்பாடுகளை உள்ளடக்கியுள்ளன. அவற்றை ஒருவர் பயன்படுத்தும்போதெல்லாம் அவரைப் பற்றிய தன்னிலை விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. எந்த எந்தக் கடைகளில் என்ன என்ன பொருள்களை எப்போதெல்லாம் வாங்குகிறார்; அவருடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது; என்று எப்போது எவ்வளவு பணத்தை வங்கியிலிருந்து எடுக்கிறார் அல்லது வங்கியில் செலுத்துகிறார்; மின்னஞ்சல் மூலம் யார் யாருடன் எப்போதெல்லாம் தொடர்பு கொள்கிறார்; எந்த இணைய தளங்களைப் பார்வையிடுகிறார்; எந்தவிடத்துக்கு, எந்த நேரத்தில், உறங்கப்போய் எப்போது கண் விழிக்கிறார்; இத்யாதித் தகவல்களை அவர் தன்னையும் அறியாமல் கைப்பேசி நிறுவனங்களில் உள்ள கருவிகளில் பதிவு செய்து கொண்டேயிருக்கிறார்.

பல கைப்பேசி நிறுவனங்கள் இத்தகைய தகவல்களைச் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை வர்த்தக நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றன. உங்களுக்கு ஓர் அயல்நாட்டு அல்லது உள்நாட்டு ஓட்டலிலிருந்து அழைப்பு வந்தால் வியப்படைய வேண்டாம். அந்த ஓட்டல் இருக்கும் ஊருக்கு நீங்கள் அலுவல் நிமித்தம் அடிக்கடி செல்கிறீர்கள் என்பதையும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அங்கு சென்று பத்து நாள்கள் தங்கத் திட்டமிட்டுள்ளீர்கள் என்பதையும் அது கைப்பேசி நிறுவனத்தின் மூலம் தெரிந்துகொண்டது என எளிதாய் ஊகிக்கலாம்.

சுற்றுலாப் பயணிகள் ஒரு புதிய ஊரிலுள்ள முக்கியமான இடங்களுக்குச் செல்லும் பாதையறிய வரைபட வசதியுள்ள கைப்பேசிகளைப் பயன்படுத்துகிறார்கள். அது ஒவ்வொரு கணமும் அவர்களுடைய நடமாட்டத்தைக் கண்காணிக்க உதவுகிறது.

ஒவ்வோராண்டும் தனியார் வர்த்தக நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களின் போக்குவரத்துகள், உரையாடல்கள், நிதி நிலவரங்கள் மட்டுமன்றி, சிந்தனைப் போக்குகளைக் கூடக் கண்டறியவும் கண்காணிக்கவும், தொகுத்து வைக்கவும், தமக்குள் பரிமாறிக் கொள்ளவும் உதவுகிற புதிய சேவைகளைக் கொண்ட கைப்பேசிகளை உருவாக்குவதற்குப் பல மில்லியன் டாலர்களைச் செலவழிப்பதாகக் கொலராடோ பல்கலைக் கழகத்தில் சட்டப் பேராசிரியராக உள்ள பால் ஓம் கூறுகிறார்.

இதையறியாத மக்கள் தேனில் வந்து விழும் ஈக்களைப்போல ஆவலுடன் ஸ்மார்ட் ஃபோன், ஐ போன் என அதிநவீனக் கருவிகளை வாங்கிப் பயன்படுத்தி உணர் கருவிகள் மற்றும் இணையச் சுற்றுகளின் இடையறாத கண்காணிப்பு வலையில் வலுவில் வந்து சிக்குகிறார்கள்.

அதிநவீனக் கைப்பேசிகளின் உதவியால் பூமியில் எந்தவொரு பொருளின் இருப்பிடத்தையும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் புள்ளி துல்லியமாகக் கண்டுபிடித்துவிட முடியும். ஒருவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்று தெரிந்தால், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை ஓரளவு ஊகித்துவிட முடியும்.

ஒரு கைப்பேசி நிறுவனத்திலுள்ள கருவிகள் அதன் வாடிக்கையாளர்களின் கைப்பேசிகள் எந்த இடங்களிலுள்ளன என்பதை இடையறாது பதிவு செய்து கொண்டே இருக்கின்றன. பல சமயங்களில் காவல் துறையினர் அப்பதிவுகளைக் கோரிப் பெறுவதுண்டு. குறுந்தகவல் செய்திகள் மூலம் விளம்பரம் செய்வோரும் இப்பதிவுகளைக் கோருவார்கள்.

இப் பதிவுகள் ஓராண்டுக் காலத்துக்குப் பராமரிக்கப்பட்ட பின் அழிக்கப்படுவது வழக்கம். ஆயினும், அரசு, நீதிமன்றங்கள் அல்லது காவல்துறையின் கோரிக்கைகளுக்கு இணங்கச் சேமிப்புக் காலம் நீட்டிக்கப்படும். ஒருவரது நடமாட்ட விவரங்களிலிருந்து அவருடைய ஜாதகத்தையே கணித்துவிட முடியும். அவர் நாள் தவறாமல் அலுவலகம் சென்று காலை முதல் மாலை வரை அங்கேயே தங்கி இருக்கிறாரா; இடையிடையே வெளியே சென்று சொந்த வேலைகளை முடிக்கிறாரா; மாலையில் அலுவலகத்திலிருந்து நேராகச் சொந்த வீட்டுக்குப் போகிறாரா அல்லது வேறு வீட்டுக்குப் போகிறாரா; அல்லது பார், சூதாட்ட விடுதி என்று பொழுது போக்குகிறாரா; ஜிம் அல்லது பீச்சில் நடை பயின்று உடல் நலத்தை அக்கறையுடன் பேணிப் பராமரிப்பவரா; எந்த மருத்துவரிடம் எந்த நோய்க்குச் சிகிச்சை பெறுகிறார்? எந்தப் பொழுதுபோக்கு கிளப் அல்லது தொழிற்சங்கம் அல்லது அரசியல் கட்சியில் உறுப்பினராயிருக்கிறார்? சிக்கனமானவரா அல்லது செலவாளியா; இன்னோரன்ன ஏராளமான தன்னிலைத் தகவல்களைக் கைப்பேசிகள் மூலம் திரட்ட முடியும்.

கைப்பேசிகளை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மட்டுமே பயன்படுத்திய காலம் மலையேறிவிட்டது. அதிநவீனக் கைப்பேசிகளின் பயன்படு நேரத்தில் 20 சதவிகிதம்தான் தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படுவதாக ஓர் இங்கிலாந்து ஆய்வு தெரிவிக்கிறது. மீதி நேரமெல்லாம் இணைய தளத்தில் மேய்வது, விளையாட்டு, இசை, சமூக வலைத்தளங்களைப் பார்வையிடுவது எனச் செலவழிக்கப்படுகிறது.

அதிநவீனக் கைப்பேசியை வைத்திருப்பவருக்கு கைக்கடிகாரம், கேமரா, கால்குலேட்டர், சிடி பிளேயர், பண்பலை ரேடியோ போன்ற சாதனங்களே தேவையில்லை. அவற்றின் பணிகளையெல்லாம் ஓர் அதிநவீனக் கைப்பேசியால் நிறைவேற்றிக் கொள்ள முடியும். கடன் அட்டைகள், வங்கிக் கணக்கு வரவு செலவுகள், மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்துவது எல்லாமே கைவிரல் முனைகளில் சாத்தியமாகிவிட்டன.

சினிமா டிக்கெட் முதல் ரயில் அல்லது பஸ் டிக்கெட் வரை கைப்பேசி வாங்கித் தரும். ஒரு மடிக்கணினிக்குச் சமானமாகச் செயல்படக்கூடிய கைப்பேசிகள் சந்தைக்கு வந்துவிட்டன.

கண்காணிப்பு வலையில் சிக்க விரும்பாத கிளர்ச்சியாளர்கள், பயங்கரவாதிகள், கடத்தல் மன்னர்கள் போன்ற சட்டவிரோதிகள் பொய் முகவரி கொடுத்து அல்லது அனாமதேயமாக ரொக்கப் பணம் தந்து பிரீபெய்டு முறையில் கைப்பேசி இணைப்பு பெறுவார்கள். ஓரிரு நாள்கள் அவற்றைப் பயன்படுத்திவிட்டு கைப்பேசிகளை உடைத்து நொறுக்கி விடுவார்கள். அவை இருக்குமிடம் தெரிந்தாலும் அவற்றை அந்த நபர்களுடன் தொடர்புபடுத்த முடியாது. பல நாடுகளில் பிரீபெய்டு முறையில் ரொக்கமாகக் கட்டணத்தைச் செலுத்தினால் பெயரையும் முகவரியையும் தெரிவிக்க வேண்டாம். அரபு நாடுகளிலும் பர்மாவிலும் கிளர்ச்சியாளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கண்காணிப்பிலிருந்து தப்பிவிடுகிறார்கள். நம் நாட்டில் அது முடியாது.

நம்மைப் போன்ற சாமானியர்கள் அழைப்பு அனுப்பவும் பெறவும் மட்டுமே வசதி செய்யும் கைப்பேசிகளை வாங்கி வைத்துக்கொண்டு கண்காணிப்பாளர்களின் கவனத்தை அதிக அளவில் கவராமல் பயன்படுத்தலாம். நாம் போகுமிடம் அவர்களுக்குத் தெரியக் கூடாது என்பதற்காகக் கைப்பேசியை வீட்டிலேயே வைத்துவிட்டுப் போவதில் அர்த்தமில்லை. கைப்பேசியைப் பயன்படுத்தாதபோது அதை அணைத்து வைக்கலாம். ஆனால், நம்மை யாராவது அழைத்தால் தெரியாமல் போகும். பாட்டரியை வெளியே எடுத்து வைத்தாலும் போதும். ஆனால், மீண்டும் உள்ளே பொருத்துவதற்குத் தனித்திறமை வேண்டும். கைப்பேசியே இல்லாமலிருப்பது உத்தமம். ஆனால், அது அசாத்தியம். உண்மையை ஒப்புக் கொள்வோம். கைப்பேசி ஓர் இன்றியமையாத இன்னல், விலக்க முடியாத வில்லன், ஒதுக்க முடியாத ஒற்றன்தான் என்றாலும் அது இல்லாமல் வாழ்க்கை பூரணம் பெறாது!

நன்றி -தினமணி

மதுவிலக்கு வருகிறதாமே! ஃபுல்லாவா? குவாட்டர் கட்டிங்கா?

அரசாங்கமே நேரடியாக மதுக்கடைகளை நடத்துகின்ற ‘பெரும் புரட்சி’ தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இந்தப் புரட்சியைத் தொடங்கிவைத்தவர்  இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாதான்.
2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. அந்தப் படுதோல்விக்குப் பிறகு, அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் மதுக்கடைகளை அரசின் டாஸ்மாக் நிறுவனமே நேரடியாக நடத்துகின்ற முடிவை ஜெயலலிதா அரசு எடுத்தது.
ஆனால், இப்போது அவர் 2014 எம்.பி. தேர்தலில் 40க்கு 40தொகுதிகளையும் ஜெயித்து, இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற கனவிலும் ஆசையிலும் மிதப்பதால், பெண்வாக்காளர்களின் வாக்குகளைக் குறிவைத்து, முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது பற்றி ஆலோசித்து வருவதாகப் ‘பரபரப்பு’ செய்திகள் வெளியாயின.

பெருமாயிக் கிழவி பேன் பார்த்தாலும் பார்க்கும். பிய்ச்சிவிட்டாலும் பிய்ச்சிவிடும் என்று கிராமப்புறங்களில் பழமொழி உண்டு.
ஜெயலலிதா தன்னுடைய நிர்வாகத்தில் எப்போது என்ன  செய்வார் என்று தெரியாததாலும், எதையும் எப்போது வேண்டுமானாலும்  செய்பவர் என்பதாலும், இதுவும் நடக்கலாம் என்ற நம்பிக்கையே ‘மதுவிலக்கு’ என்ற செய்திக்கு கிடைத்திருக்கும் மார்க்கெட் வேல்யூ.  அதே நேரத்தில், மதுவிலக்கின் ரியல் வேல்யூ என்ன என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்.

“காமராஜர் படி.. படி.. என்று சொன்னார். கருணாநிதி குடி.. குடி.. என்று சொன்னார்” என்ற குற்றச்சாட்டு உண்டு. அதாவது, தமிழகத்தில் நீண்டகாலமாக இருந்துவந்த மதுவிலக்கை ரத்து செய்து, கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சி 1971ல் மதுபானக்கடைகளைத் திறந்ததால், அதுவரை குடிப்பழக்கத்தையே அறியாத தலைமுறையினரும் குடிக்கக் கற்றுக்கொண்டார்கள் என்பதுதான் இந்தக் குற்றச்சாட்டுக்கான  அடிப்படை.

பிரிட்டிஷ் நிர்வாகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சியைத் தோற்கடித்து காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோது, சென்னை மாகாணத்தின் பிரிமியராக இருந்த மூதறிஞர் ராஜாஜிதான் மதுவிலக்கை அமல்படுத்தினார். இதனால் ஆண்டுக்கு 15 முதல் 20 கோடி வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த மதுவிலக்கு உடனடியாக ஏற்படுத்திய தாக்கம் என்ன தெரியுமா? அது பற்றி பெரியார் தனது குடிஅரசு இதழில் எழுதியிருக்கிறார். எந்தப் பெரியார்? மதுவிலக்கை வலியுறுத்தி, கள் தரும் மரங்களை வெட்டவேண்டும் என்று மகாத்மா காந்தி சொன்னவுடன், தன் தோட்டத்தில் இருந்த 500 தென்னை மரங்களைக் கண்மூடித்தனமாக வெட்டித்தள்ளினாரே, அந்தப் பெரியார்.

“நமது கல்வி வளர்ச்சியை ஒழித்துக் கட்டுவதற்கு ஒரு ஆதாரம் தேடவேண்டும் என்கிற எண்ணத்தின்மீது மதுவிலக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது, 100க்கு 5 (சத)வீதமே படித்த மக்களாய் இருந்த நாம், ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு 100க்கு 7 படித்த மக்களானோம். அதைக்கண்டு ஆத்திரமடைந்த ராஜாஜி, தாம் 1938ல் பதவிக்கு வந்தவுடன் கல்வியை அன்றுள்ள தன்மைப்படி நடத்துவதானால் அரசாங்கத்தினிடம் போதிய பணம் இல்லை. ஆதலால் வரவு-செலவைச் சரிக்கட்ட 2600 பள்ளிகளை மூடவேண்டியது அவசியமாகிவிட்டது என்பதாக ஒரு சாக்குக் கண்டுபிடிக்கக் கருதியே, மதுவிலக்கினால் ஏற்பட்ட நட்டத்தைச் சரிக்கட்டினேன் என்று சொல்ல ராஜாஜி வசதி ஏற்படுத்திக்கொண்டார்” என்று தெரிவித்திருக்கிறார் பெரியார்.

ராஜாஜி கொண்டு வந்த மதுவிலக்கின் உடனடி விளைவு என்பது, சென்னை மாகாணத்தில் செயல்பட்டுவந்த 2600 பள்ளிகளை மூடியதுதான். ஆனாலும், தமிழகத்தில் மதுவிலக்குத் தொடர்ந்து  நீடித்தே வந்தது.
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் இந்த வருவாய் இழப்புப் பற்றிக் கவலைப்படாமல் புதிய பள்ளிகள் திறக்கப்பட்டன. இலவசக் கல்வித்திட்டமும், இலவச மதிய உணவுத்திட்டமும் நடைமுறைக்கு வந்தன. ஆனாலும், ராஜாஜி ஆட்சியிலும் காமராஜர் ஆட்சியிலும் தமிழகத்தில் குடிகாரர்களே இல்லை என்று நினைத்துக்கொண்டால் நாம் பரிதாபத்திற்குரியவர்கள்.

பணக்காரர்கள் பர்மிட் எனப்படும் குடிக்கான அனுமதி பெற்று, குடித்து வந்தார்கள். ஏழைகள் மதுக்கசாயம், கள்ளச்சாராயம் ஆகியவற்றைக் குடித்தனர். மதுவிலக்கு நடைமுறையில் இருந்ததால், பர்மிட் இல்லாமலோ-பர்மிட்டில் உள்ள அளவுக்கு மீறியோ குடிப்பது சட்டவிரோதமானது. தண்டனைக்குரியது.
ஆனால், இந்த சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டவர்களில் மிகக்குறைவானவர்களே குற்றவா ளிகளாகப் பதிவு செய்யப்பட்டார்கள். மற்றவர்களுடன் போலீசார் ‘உடன்பாடு’ செய்துகொண்டு, தனி வருமானம் பார்த்ததால், சாராய வியாபாரம் நடந்துகொண்டுதான் இருந்தது. குறைவானவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையிலானப் பின்வரும் புள்ளிவிவரமே நமக்கு ஓர் உண்மையைக் காட்டுகிறது.

1961ல் 1லட்சத்து 12ஆயிரத்து 889 பேர் மீது வழக்குப் பதிவாகியிருக்கிறது. 1962ல் 1,29,977 பேர். 1963ல் 1,23,006, 1964ல் 1,37,714, 1965ல் 1,65,052, 1966ல் 1,89,548 பேர். இந்தக் கணக்கைப் பார்த்தால், ஆண்டுதோறும் சாராயக் குற்றங்கள் பெருகியே வந்துள்ளன என்பதையும், மதுவிலக்கோ, காவல்துறையின் நடவடிக்கைகளோ குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை என்பதையும் புரிந்துகொள்ளமுடியும்.

காங்கிரசுக்குப்பிறகு தி.மு.க தலைமையிலான ஆட்சி அமைந்து, மதுவிலக்கு தொடர்ந்த 1967ல் 1,90,713 பேர், 1968ல் 2,53,607, 1969ல் 3,06,555, 1970ல் 3,72,472 பேர் மீது குற்றச்சாட்டுப் பதிவாகியிருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் இந்தியாவின் பல மாநிலங்களிலும், தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலும் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு, மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு வந்தன. மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசாலேயே, மகாத்மா காந்தியின் புனிதமிகு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

தமிழக எல்லையோரத்தில் அண்டை மாநில மதுவிற்பனை அதிகமானதுடன், அவை தமிழகத்தின் பல பகுதிகளுக்குள்ளும் ஊடுருவி வந்தன. சட்டங்களோ, காவல்துறையினரோ இதைத் தடுப்பதில் வெற்றிபெறவில்லை.
இந்த நிலையில்தான் 1971ல், ‘‘கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள், கொளுத்தப்படாத கற்பூரமாக எத்தனை நாளைக்குத்தான் தமிழகம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்?” என்று சட்டமன்றத்தில் விளக்கமளித்த அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, தமிழகத்தில் மது விலக்கை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தார். அதாவது, மதுக்கடைகள் அதிகாரப் பூர்வமாகத் திறக்கப்பட்டன.
மதுவிற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கத் தொடங்கியது. இதுதான், ஒரு புதிய தலைமுறையைக் கருணாநிதி குடிக்க வைத்தார் என்ற குற்றச்சாட்டின் பின்னணி.
மறைமுகமாகக் குடித்து வந்தவர்கள், சட்ட பயமின்றிக் குடிக்கத் தொடங்கினர். கடைகள் திறக்கப் பட்டதால், ‘போட்டு பார்ப்போமே’ என்று புதிதாகப் பழகியவர்களும் உண்டு. மதுவிலக்கை கலைஞர் அரசு ரத்து செய்ததற்கு, காங்கிரஸ் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. அதேநேரத்தில், மதுவிலக்கு ரத்து ஏன் என்கிற காரணங்களை வலியுறுத்தி தி.மு.கவுக்காகப் பிரச்சாரம் செய்தவர் எம்.ஜி.ஆர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பிரச்சாரத்தின்போது, மது குடிப்பதனால் தனிமனிதர்களுக்கும் அவர்களைச் சார்ந்த வர்களுக்கும் ஏற்படும் தீமைகளையும் எம்.ஜி.ஆர். விளக்கிப் பேசி வந்தார். பின்னர், 1972ல் எம்.ஜி.ஆர், தனிக்கட்சி தொடங்கினார்.
மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டதற்கான எதிர்ப்புகள் கடுமையாயின. எனவே, 1974ல் அதே கலைஞர் ஆட்சியில் மீண்டும் மதுவிலக்குக் கொண்டுவரப்பட்டு, மதுக்கடைகள் மூடப்பட்டன என்பதும் கவனிக்கத்தது.

1977ஆம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. முதல்வர் பொறுப்பேற்ற மக்கள்திலகம் எம்.ஜி.ஆர், “என் தாய் மீது ஆணையாக மதுவிலக்கைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவேன்” என்றார்.

தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்திலும் (யூனியன் பிரதேசம்) ஆட்சியைப் பிடித்த அ.தி.மு.க, அந்த மாநில வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு முதன்  முறையாக அங்கும் மதுவிலக்கைக் கொண்டுவந்தது.
அதன் விளைவு என்ன தெரியுமா? ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க அடுத்து வந்த  புதுச்சேரி மாநிலத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. இன்றுவரை, அந்த மாநிலத்தில் அ.தி.மு.கவால் ஒற்றை இலக்கத்திற்கு மேல் தொகுதிகளைப் பெறவில்லை என்பதுதான் சுமார் 35 ஆண்டுகால வரலாறு. சரி.. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியின் மதுவிலக்குக் கொள்கை எந்தளவு வெற்றி பெற்றது?

தாய் மீது ஆணையிட்ட எம்.ஜி.ஆர், தனது ஆட்சியில் மதுவிலக்கைக் கடுமையாக நடைமுறை ப்படுத்தப் பல சட்டத்திருத்தங்களைக் கொண்டுவந்தார். “மது குடித்த குற்றத்திற்காக முதல் முறை பிடிபட்டால் 3 ஆண்டு சிறை. இரண்டாவது முறை என்றால் 7 ஆண்டு சிறை. மூன்றாவது முறை பிடிபட்டால் நாடு கடத்தப்படுவார்கள்” என்றெல்லாம் அறிவிக்கப்பட்டது.

ஆனால், அவையெல்லாம் நடைமுறையில் வெற்றிபெறவில்லை. மெல்ல மெல்ல மதுவிலக்கைத் தளர்த்தினார். கூட்டுறவு அங்காடிகளில் மதுபானங்கள் விற்பனைக்கு வந்தன. அங்கே அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைக்காததைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், “ரவா-மைதா வாங்கி வைக்க, வக்கில்லாத நிர்வாகத்திற்கு ரம்மும் ஜின்னும் லட்சக்கணக்கில் வாங்கி வைக்க முடியுதா?” என்று கேட்டனர்.

பிராந்தி, விஸ்கி ஆகியவை மட்டுமின்றி, எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1981ஆம் ஆண்டு தொழிலாளர் தினமான மே 1ந் தேதி முதல் சாராயக் கடைகளும் கள்ளுக்கடைகளும்கூடத் திறக்கப்பட்டன. இந்தக் கடைகளுக்கு நம்பர் உண்டு. அதனால், மூணாம் நம்பர் கடை, ஆறாம் நம்பர் கடை என்று ‘குடி’மக்கள் சொல்ல ஆரம்பித்தார்கள்.

இந்தக் கடைகளை ஏலம் எடுத்து நடத்தியவர்கள் பெரும்பாலும் அ.தி.மு.கவினரே. சில பல இடங்களில் அவர்களுக்குத் தொழில்பார்ட்னர்களாக இருந்தவர்கள் லோக்கல் தி.மு.கவினர். காங்கிரஸ் கதர்ச்சட்டையினரும் ரகசிய பார்ட்னர்களாக இருந்தது உண்டு. மதுபானத் தொழிலில் அரசியல் கட்சியினர் ருசி காணத் தொடங்கியது இந்தக் கட்டத்தில்தான்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் சாராய ஆலை அதிபர்களும், சாராய வியாபாரிகளும் கொழித்துச் செழித்ததுடன், தனியார் சுயநிதிக் கல்லூரிகளைத் தொடங்கினர். இத்தகையக் கல்லூரிகளுக்கு எம்.ஜி.ஆர். அரசு தாராளமாக அனுமதி வழங்கியது. சாராயத் தொழில் செய்தவர்கள், ‘கல்வி வள்ளல்’களாக உருமாற்றம் பெற்றனர். எம்.ஜி.ஆர். ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் மீண்டும் மதுவிலக்கு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு, கள்-சாராயக் கடைகள் மூடப்பட்டன. பர்மிட் உள்ளவர்கள் பிராந்தி-விஸ்கி குடிப்பதற்கான உரிமை மட்டும் நீடித்து வந்தது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்  மறைவுக்குப்பின் 1989ல் நடந்த தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று, கலைஞர் மீண்டும் முதல்வாரானார். அப்போது, மலிவு விலை மது என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. அதாவது, சாராயம் போலத் தூக்கலாகவும் இல்லாமல், பிராந்தி-விஸ்கி போல மிதமாகவும் இல்லாமல் தரத்திலும் விலையிலும் நடுத்தரமான சரக்கு இது.

இதனை எதிர்த்து, தமிழக காங்கிரஸ் கட்சி பல போராட்டங்களை நடத்தியது. அதற்கு அ.தி.மு.க மறைமுக ஆதரவு தந்தது. எனினும், தி.மு.க அரசோ, கள்ளச்சாராய சாவுகளைத் தடுப்பதற்காக மலிவு விலை மது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று கூறி, இதற்கானக் கடைகளைத் திறந்தது. ‘தாலி அறுக்கும் மலிவு விலை மது’ என்று பத்திரிகைகள் விமர்சனம் செய்தன.

1991ல் முதன்முறையாக முதல்வர் பொறுப்பேற்ற செல்வி.ஜெயலலிதாவின் முதல் கையெழுத்தே, மலிவு விலை மதுவை ரத்து செய்யும் உத்தரவுக்கான கோப்பில்தான் இடப்பட்டது. பெண்களின் தாலியைக் காப்பாற்றிவிட்டார் ஜெயலலிதா எனப் பாராட்டுகள் குவிந்தன.
ஆனால் அடுத்த ஆண்டிலேயே, 1992ல் பார் வசதியுடன் கூடிய ஒயின் ஷாப்புகளுக்கான அனுமதியை அளித்தது ஜெயலலிதா அரசு. வாங்குகிற இடத்திலேயே குடிக்க முடியும் என்பதால், விற்பனை பெருகியது. அரசுக்கு வருமானம் அதிகரித்தது.
‘பார்’ போற்றும் அரசு என்று பத்திரிகைகள் விமர்சித்தன. இதற்கு ஈடுகொடுக்கும் விதத்தில்,  மதுவின் தீமையை வலியுறுத்தும் பிரச்சாரப் படமான ‘நீங்க நல்லா இருக்கணும்’ என்ற திரைப்படத்தை தமிழக அரசே எடுத்தது. படப்பிடிப்பை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். இயக்குநர், விசு. படம் கல்லா கட்டவில்லை. பார்கள்தான் கல்லா கட்டின.

ஒயின்ஷாப்புகளையும் பார்களையும்  ஆளுங்கட்சியினரும் அவர்களுக்கு வேண்டியவர்களும் ஏலம் எடுத்தனர். வேறு யாரும் ஏலத்தில் மூக்கை நுழைக்கமுடியாதபடி ஆங்ககாங்கே சிண்டிகேட்டுகள் (கூட்டணி) அமைக்கப்பட்டன. இந்த மதுக்கடைகளால் லோக்கல் கட்சிக்காரர்கள் வருமானம் பார்க்க, மதுபானத் தொழிற்சாலை அதிபர்களோ கட்சித் தலைமைக்கு நிதி தரும் காமதேனுக்களாக இருந்தனர். 1996ல் திமு.க வெற்றி பெற்றபோது, ஆட்சி மாறினாலும் ஒயின்ஷாப் விவகாரத்தில் காட்சி மாறவில்லை.

அ.தி.மு.கவினருக்குப் பதில் தி.மு.கவினரும் அவர்களுக்கு வேண்டியவர்களும் ஏலம் எடுத்தனர். மதுபான அதிபர்கள் தி.மு.க தலைமைக்கு நிதியளித்தனர். 1991 முதல் 2001 வரையிலான 10 ஆண்டுகளில் இந்தியாவின்  பொருளாதாரக் கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அது தமிழகத்திலும் தாக்கம் ஏற்படுத்தத் தவறவில்லை.

வெளிநாட்டு முதலீடுகள், பன்னாட்டு நிறுவனங்கள், சாஃப்ட்வேர் துறையின் வளர்ச்சி, பங்குச்சந்தை வர்த்தகம் ஆகியவற்றால் நடுத்தர வர்க்கத்தின் ஒரு தரப்பிடம் பணம் புழங்கத் தொடங்கியது. ஊதிய விகிதங்களில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது.
கேளிக்கைக்கான பணம் பற்றி இளைய தலைமுறைக்குக் கவலையில்லாத நிலை தொடங்கியது. மதுபானக் கடைகளை நோக்கிய அவர்களின் படையெடுப்பு அதிகரிக்க ஆரம்பித்தது. குடிப்போர் விழுக்காடு பெருமளவு உயர்ந்தது. எல்லாவற்றுக்கும் ‘ட்ரீட்’ கொடுப்பதும், பீர் குடிப்பது தவறல்ல என்ற போக்கும் அதிகரித்தது.

டான்சி வழக்கில் கீழ்நீதிமன்றம் தண்டித்த நிலையிலும், 2001ல் முதல்வரானார் ஜெயலலிதா. இதற்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க, ஜெ பதவி விலகி, ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அவர் பதவியில் இருந்தபோது, சென்னை செங்குன்றத்தையடுத்த கோட்டூர் கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில், ரசாயனத் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தும் மெத்தனாலில் தண்ணீர் கலந்து சாராயமாக்கிக் கொடுத்ததில், ‘மிக்ஸிங்’ சரியில்லாமல், 36 பேர் இறந்தனர். பலருக்குக் கண்பார்வை பறிபோனது. இதேபோல கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மேல்அருங்குணம், செம்பேடு, நத்தம் ஆகிய கிராமங்களிலும் இதேபோல விஷசாராயம் குடித்த 52 பேர் பலியாயினர். இந்த சாராயப் பலிகளில் பெண்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது.

உயிர்ப்பலிகள், சாராய விற்பனை என எல்லாவற்றிலும் பெண்களும் இருந்ததை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சாராயம் தொடர்பான வழக்குகளில் நான்கில் ஒரு பிரிவினர் பெண்கள் என்பதும் முக்கியமானது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் விஷச் சாராயப் பலிகள் தொடர்ந்ததையடுத்து, மீண்டும் மலிவு விலை மது கொண்டு வரப்பட்டது.

ஒயின் ஷாப்புகளிலேயே ‘மினி குவார்ட்டர்’ என்ற பெயரில் 100 மில்லி அளவிலான பிராந்தி, விஸ்கி, ரம் பாட்டில்கள் விற்பனைக்கு வந்தன. விலை 15 ரூபாய். இதற்கு ஏழைக் ‘குடி’மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், ஒயின்ஷாப்காரர்களுக்கு இலாபம் குறைவு என்பதால், மினி குவார்ட்டர் பாட்டில்களுக்கு டிமாண்ட் ஏற்படுத்தப்பட்டு, ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டது. மினிகுவார்ட்டர் பிரியர்கள், கூடுதல் பணம் கொடுத்து குவார்ட்டர் வாங்க ஆரம்பித்தனர். 
மலிவுவிலை மதுவுக்குப் பதில், கள்ளுக்கடைகளைத் திறப்பது ஏழைகளின் வருமானத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பில்லாமல் இருக்கும் என்றும், பனைத்தொழிலாளர்களுக்கும் வருமானத்தைத் தரும் என்றும் குரல்கள்  ஒலிக்க ஆரம்பித்தன. அதை அரசாங்கம் காதில் வாங்கவில்லை.

2002ல் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். அதையடுத்து, அரசின் டாஸ்மாக் நிறுவனமே ஒயின்ஷாப்புகளை நேரடியாக நடத்தும் முடிவு எடுக்கப்பட்டது. வருமானம் முழுவதும் அரசுக்கே வரவேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். ஒயின்ஷாப் பார்களை மட்டும் ஆளுங்கட்சி ஆட்கள் ஏலம் எடுத்து நடத்தினர்.

காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 12 மணிவரை ஒயின்ஷாப்புகள் செயல்பட்டன. இளைஞர்கள் பலருக்கு தற்காலிக அரசு வேலை கிடைத்தது. இந்தக் கட்டத்தில்தான், மிடாஸ் நிறுவனத்தின் மதுபானங்கள் ஒயின்ஷாப்களை ஆக்கிரமித்தன. இந்த நிறுவனம் யாருடையதென்று விளக்கவேண்டியதில்லை.

2006ல் தி.மு.க ஆட்சி அமைந்தபிறகும், அரசுக்கு வருகின்ற வருமானத்தைக் கணக்கில் கொண்டு, ஒயின்ஷாப்புகளை டாஸ்மாக்கே  நேரடியாக நடத்துவது தொடர்ந்தது. இலவச திட்டங்களுக்கு இந்த நிதி, துணையாக இருந்தது. மிடாஸ் நிறுவனத்தின் சரக்குகளை வாங்குவதிலும் தி.மு.க அரசு தாராளமாகவே நடந்துகொண்டது. எனினும், தமிழகத்தில் குடிகாரர்கள் பெருகிவிட்டார்கள் என்றும், இளைஞர்கள் கெட்டுச் சீரழிகிறார்கள் என்றும் கூட்டணிக் கட்சியாக இருந்த பா.ம.கவின் நிறுவனர் ராமதாஸ் விமர்சித்ததுடன், மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தவேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து ஒயின்ஷாப் நேரம் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு, காலை 10மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே கடை திறந்திருக்கும் என தி.மு.க அரசு முடிவெடுத்தது.
கள்ளுக்கடைகளைத் திறக்கக்கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், அந்தக் கோரிக்கை கண்டுகொள்ளப்பபடவில்லை. தமிழகத்தில் தற்போது ஒயின்ஷாப்புகள் மட்டுமின்றி, அனுமதிபெற்ற தனியார் பார்களும் இருக்கின்றன. நட்சத்திர ஓட்டல்களில் உயர்வகை மதுபானங்கள் கிடைக்கின்றன. ரிசார்ட்ஸ்களிலும் இந்த வசதிகள் உள்ளன. விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள், பிறந்தநாள்-புத்தாண்டு கொண்டாட்டங்கள், கெட் டூ கெதர் என இளைஞர்களும் இளம்பெண்களும் மதுவிருந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெயலலிதா 2011ல் மீண்டும் முதல்வரானார். டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் ஒயின்ஷாப்புகள் தொட ர்ந்து இயங்குகின்றன. மிடாஸ் நிறுவன மதுபானங்களின் கொள்முதல் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. நட்சத்திர ஓட்டல்களில் 24 மணி நேரமும் பார் திறந்து வைக்க அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர அந்தஸ்து இல்லாத ஓட்டல்களில் உள்ள பார்களில் இரவு 12 மணிவரை மது சப்ளை செய்யலாம் என்றும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கானக் கூடுதல் கட்டணங்களை செலுத்தினால், அனுமதி உண்டு என்று ஜெயலலிதா அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில்தான், டாஸ்மாக் கடைகளை அவர் மொத்தமாக மூடுவது பற்றி ஆலோசித்து வருகிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

இளையதலைமுறையினரிடம் அதிகரித்துள்ள குடிப்பழக்கம் அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் பெரும் தீங்கை ஏற்படுத்தி வருவதை மறுக்கமுடியாது. பழக்கம் என்பதைத் தாண்டி, குடிநோய்க்கு இளைஞர்கள் ஆளாகிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பள்ளி மாணவர்கள்கூட குடிக்கும் வேதனைத் தகவல்கள் வெளியாகின்றன. ஆரோக்கியமான வளரவேண்டிய சமூகம் திசைமாறுகிறது என்பது பெருங்கவலைக்குரியது. ஆனால், அரசாங்கத்தின் மதுவிலக்குத் திட்டம், இதையெல்லாம் மாற்றிவிடுமா என்ற கேள்விக்கு, முந்தைய நிகழ்வுகள் சாதகமான பதில்களைத் தரவில்லை.

இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக மதுவிலக்கு நடைமுறையில் இருப்பது, காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில் மட்டும்தான். ஆனால், அங்கும் போர்பந்தரில் காந்தியின் பூர்வீக வீட்டுக்குப் பக்கத்திலேயே அடிபம்பு மூலம் சட்டவிரோதமாக சாராய வியாபாரம் நடப்பதை பத்திரிகைகள் அம்பலப்படுத்தியுள்ளன. இதுதான் மதுவிலக்கின் லட்சணம்.

தேசிய அளவிலான மதுக்கொள்கை, மாநிலங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு, மதுக்கடை நேரங்களைக் குறைத்தல், தனிநபருக்கான மது அளவு, கள்ளுக்கடைகளை அனுமதிப்பது பற்றிய முடிவு, வேலைவாய்ப்புகள், கலாச்சார மாற்றங்கள், இளையதலைமுறையினருக்கான மாற்றுப் பொழுதுபோக்குகள்,  காவல்துறையின் லஞ்ச ஊழலற்ற நடவடிக்கை, அரசாங்கத்தின் வருவாயைப் பெருக்கும் மாற்றுத் திட்டங்கள் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தாமல் மதுவிலக்கு என்பது மோசடியே.

ஜெயலலிதாவுக்கே அப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா என்று தெரியவில்லை. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியை மனதில்கொண்டு தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், தேர்தலுக்குப் பிறகு அது ரத்து செய்யப்படவேண்டிய நிலை நிச்சயம் உருவாகும். ஏனெனில், மது குடிப்போரைவிட அதிகம் தள்ளாடுவதாக உள்ளது அரசாங்கத்தின் மதுவிலக்குக் கொள்கை.

நன்றி-நக்கீரன்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 2,531 other followers