Category Archives: சிந்தனைகள்

வாழ்த்துவதால் வருமே வளமும் நலமும்

ஜப்பானில் “கோய்’ என்றொரு மீன் வகை உள்ளது. இந்த மீன் விசித்திரமான இயல்புடையது. நீங்கள் இந்த மீனை ஒரு சிறிய தொட்டியில் வைத்து வளர்த்தால் அது அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று அங்குலம் மட்டுமே வளரும்.
சற்று பெரிய தொட்டியில் வளர்த்தால் கோய் மீன் 8 அல்லது 10 அங்குலம் வரை வளரும். சிறு குட்டையில் கோய் மீன்களை வளர்த்தால் அது ஒன்று முதல் ஒன்றரை அடி வரை வளரும். கோய் மீனைக் குளத்தில் வளர்த்தால் இரண்டரை அடி முதல் மூன்றடி வரை வளரும். மிகப் பெரிய ஏரியில் கோய் மீனை வளர்த்தால் அது ஐந்து அடி வரை வளரும்.
மனிதர்களும் கோய் மீனைப் போன்றவர்கள்தாம். சிறியவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் வளர முடியாமல் போய்விடும். பெரியவைகளைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கவேண்டும். அப்போததான் வளர முடியும். உங்களது சிந்தனை உயர உயர உங்களது செயல்பாடும் மேம்பாடு அடையும். உங்களது மதிப்பும் உயர்ந்து கொண்டே செல்லும்.
மனிதர்கள் தங்களை பற்றிக் குறைவாகவே மதிப்பிடுகிறார்கள். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. சிறிய தொட்டியில் வளர்க்கப்படும் கோய் மீன்கள் போல மனிதர்கள் தங்களைக் குறுக்கிக் கொண்டு விடுகினறனர். இதனால் அவர்களால் அவர்களது முழு ஆற்றலை வெளிப்படுத்த முடியாமல் போய்விடுகிறது. இதற்கு முக்கிய காரணங்கள் யாவை? இந்தக் காரணங்களைக் கண்டறிந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய முடியும்.
பொதுவாக எதிர்மறைச் சிந்தனைதான் அதிகமாகக் காணப்படுகின்றது.
ஒரு குண்டான மனிதர் சாப்பிட உட்காரும்போதே “நான் சாப்பிடுவதெல்லாம் கொழுப்பாக மாறிவிடுகிறது.’ என்று அலுத்துக் கொள்ளுகிறார்.
ஒரு குடும்பத் தலைவி காலையில் எழும்போதே “இந்த வீட்டில் எங்கு பார்த்தாலும் குப்பையாகத்தான் கிடக்கிறது. ஒருநாளும் குப்பைகள் குறைவதாகத் தெரியவில்லை’ என்று அலுத்துக் கொள்கிறார்.
பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும் மாணவி தனத தந்தையைப் பார்த்து, “அப்பா, கணக்கில் நான் குறைந்த மதிப்பெண்கள்தான் எடுப்பேன் போல் தெரிகிறது. தேர்வில் நான் தோல்வி அடைந்து விடுவேன் என்று அஞ்சுகிறேன்’ என்று சொல்கிறார்.
வானிலை அறிவிப்பாளர் “இன்று மழை பெய்வதற்கான வாய்ப்பு 20% மட்டுமே உள்ளது. வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும்’ என்று குறிப்பிடுகிறார்.
இவை யாவும் எதிர்மறையான எண்ண அலைகளாகும். ஆற்றல் மிக்க பலர் தங்களது ஆற்றலை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் குடத்தில் இட்ட தீபங்களாக உள்ளனர். குன்றிலிட்ட தீபங்களாக அவர்களால் பிரகாசிக்க முடியவில்லை. பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், மேல் அதிகாரிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கேலி, கிண்டல் செய்வதால் ஆற்றல்களைப் பலரால் வெளிப்படுத்த முடியவில்லை.
இதமற்ற சொற்கள் ரணத்தை ஏற்படுத்துகின்றன. தெரிந்தோ, தெரியாமலோ உதிர்க்கப்படுகின்ற வார்த்தைகள் வேதனையை ஏற்படுத்துகின்றன.
உளவியலாளர்கள், எண்ண அலையின் ஆற்றல் எப்படிப்பட்டது என்பதைத் துல்லியமாக நிரூபிக்க ஒரு சோதனையை மேற்கொண்டனர்.
இரண்டு பசுமைக் குடில்கள் ஒரே மாதிரியாக உருவாக்கப்பட்டன. மண், உரம் போன்றவை ஒரே மாதிரியாக இடப்பட்டன. பசுமைக் குடிலில் சீதோஷ்ணம் சமமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது. இரண்டு குடில்களிலும் தலா 23 விதைகள் ஊன்றப்பட்டன.
ஒரு பசுமைக் குடிலின் முன் ஒருவர் தினந்தோறும் நின்று கொண்டு “இந்த விதைகள் முளைக்காது, முளைத்தாலும் நிலைக்காது. சீக்கிரமே வீணாகிப்போய்விடும்’ என்றெல்லாம் அவர் வசைமாரி பொழிந்து வந்தார்.
மற்றொரு பசுமைக்குடிலின் முன் மற்றொருவர் நின்று கொண்டு, “இந்த விதைகள் யாவும் அபாரமாக முளைக்கும், அற்புதமாக வளரும், அமோக பலனைத் தரும்’ என்று வாழ்த்துமாரி பொழிந்துவந்தார். இந்த வாழ்த்தும் வசையும் மூன்று வாரங்கள் தொடர்ந்தன.
வாழ்த்துமாரிக்கு உள்ளான குடிலில் ஊனப்பட்டிருந்த விதைகள் யாவும் முளைத்தன. கம்பீரமாகக் காட்சியளித்தன.
வசைமாரிக்குள்ளான குடிலில் ஊன்றப்பட்டிருந்த 23 விதைகளில் இரண்டு மட்டுமே முளைத்தன. அவை மிகவும் நலிந்த நிலையில் இருந்தன.
வாழ்த்து மாரியும் வசைமாரியும் தொடர்ந்தன. வாழ்த்துக்குள்ளான பசுமைக் குடிலில் பயிர்கள் செழித்தோங்கின. வசைமாரிக்குள்ளான பசுமைக் குடிலில் முளைத்திருந்த இரண்டு பயிர்களும் வாடி வதங்கிவிட்டன.
விதைகளின் நிலையே இப்படிப்பட்டது என்றால் மனிதர்களின் நிலையைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அதனால்தான் வைபவங்களின்போது வாழ்த்துகளைக் கேட்க வேண்டும் என்று சமூக ரீதியாக ஏற்பாடு செய்து வைத்துள்ளனர்.
மனிதர்களிடையே குழப்பம் அடிக்கடி தலை தூக்குகிறது. ஒரு மாணவர் ஒரு பாடத்தில் தேர்ச்சியடையவில்லை என்றால் அவர் மனம் உடைந்து விடுகிறார். என்னால் எல்லா பாடத்திலும் வெற்றி பெற முடியவில்லையே என்றும் வேதனைப்படுகிறார். இந்த வேதனை அவருடைய வளர்ச்சியைத் தடுத்து விடுகிறது.
“பல பாடல்களில் வெற்றி பெற்றுள்ளேன். ஒன்றில் மட்டும்தான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளேன். அடுத்த முறை அதிலும் மகத்தான வெற்றி பெறுவேன்’ என்றும் சிந்திக்கத் தொடங்கி விட்டால் தோல்வியை துரத்தியடித்துவிட முடியும்.
தனி நபர்களின் எண்ண ஓட்டத்தைச் சீர்குலைப்பதில் தெரிந்தோ, தெரியாமலோ ஆசிரியர்கள், பெற்றோர், உறவினர்கள், மேல் அதிகாரிகள் ஆகியோரும் ஈடுபடுகிறார். திடமான, தெளிவான ஆக்கப்பூர்வ சிந்தனை இருந்தால் மட்டுமே தோல்வியை அண்டவிடாமல் செய்ய முடியும்.

காதல் கொலைகள் காரணம் என்ன?

ht1577 இந்த உலகத்திலேயே மிகவும் துயரமான விஷயங்கள் இரண்டு. ஒன்று… காதலில் தோல்வி அடைவது! இன்னொன்று?  காதலில் வெற்றி பெறுவது!
இரண்டாவது துயரத்துக்கு உதாரணம்… நீதிமன்ற வாசல்களில் விவாகரத்து வேண்டி வரிசையில் காத்திருக்கிற காதல் திருமண தம்பதிகள்.
முதல் துயரத்துக்கு உதாரணம், தினசரி தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகிற காதல் கொலைகள்.
காதலுக்காக கையை அறுத்துக்கொண்ட, நாக்கை அறுத்துக்கொண்ட, இவ்வளவு ஏன்? தன்னையே அழித்துக்கொண்ட ஆண்களைத்தான் இதுவரை பார்த்திருப்போம். அதெல்லாம் ஓல்டு ஸ்டைல்! காதலை ஏற்க மறுக்கிற பெண்ணைக் கதறக் கதற கொலை செய்வது, அதே வெறியுடன் தற்கொலை செய்து கொள்வது… இதுதான் காதலில் லேட்டஸ்ட்!
சம்பவம் 1
கோவையைச் சேர்ந்த ரம்யா 24 வயது எம்.சி.ஏ. பட்டதாரி. தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், இவரது உறவினர் மதன்குமாருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக காதல். வேலை கிடைத்ததும் மதன்குமாரைவிட்டு, ஒதுங்கினாராம் ரம்யா. ஆத்திரமடைந்த மதன்குமார், அலுவலகம் செல்லும் வழியில் ரம்யாவை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.
சம்பவம் 2
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அசீம். அவருக்கு, வடவள்ளியைச் சேர்ந்த தொழிலதிபர் சஜீவ்மேனன் மகள் ஸ்ருதி மீது காதல். இருவரும் இளங்கலை படிக்கும்போதிருந்தே காதலித்துள்ளனர். முதுகலையில் சேர்ந்த நிலையில் இருவரிடையே கருத்துவேறுபாடு ஏற்படவே, காதலனைத் தவிர்த்திருக்கிறார் ஸ்ருதி. இதனால் ஆத்திரமடைந்த அசீம், ஸ்ருதியின் வீட்டுக்குச் சென்று ஸ்ருதியின் தாயார் லதாவுடன் வாக்குவாதம் செய்து, அவரைக் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு, காதலி ஸ்ருதி இருந்த அறைக்குள் நுழைந்து, அவரையும் குத்தியிருக்கிறார். கொலைவெறி அடங்காமல், ஸ்ருதியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயும் வைத்தார். நெருப்பு பற்றி எரிய, தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு, காதலியின் உடல் மீது விழுந்து உயிரை விட்டிருக்கிறார்.
சம்பவம் 3
திருவொற்றியூரைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் செந்தமிழ்ச்செல்வனின் 21 வயது மகள் கார்த்திகா.  கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணி
புரிந்த அவரை, அதே பகுதியைச் சேர்ந்த டூவீலர் மெக்கானிக் ராஜரத்தினம் காதலித்தார். இந்தக் காதலில் கார்த்திகாவின் பெற்றோருக்கு உடன்பாடில்லை. மகளிடம் விஷயத்தை விளக்கியதை அடுத்து, அவரும் ராஜரத்தினத்தை விட்டு விலகினார். வேலைக்குச் செல்ல, பிராட்வே பேருந்து நிலையத்தில் காத்திருந்த கார்த்திகாவை, வழிமறித்து, காதலை ஏற்கக் கட்டாயப்படுத்தினார் ராஜரத்தினம். கார்த்திகா அதற்குச் சம்மதிக்காததால், அந்த இடத்திலேயே கத்தியால் கழுத்தை அறுத்து, கொலை செய்திருக்கிறார். அதே கத்தியால் தன்னையும் குத்திக்கொண்டு இறந்து போனார்.
சம்பவம் 4
கோவையைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி அபிநயா. தன் காதலை ஏற்காத காரணத்துக்காக அபிநயாவை, வீட்டில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்துக் கழுத்தை அறுத்துக் கொன்று, தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு இறந்திருக்கிறார் அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் வேணுகோபால்.
காதல் திருமணங்கள் தவறில்லை என்கிற மன நிலைக்கு மாறிக் கொண்டிருக்கிற பெற்றோர் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்திருக்கின்றன சமீபத்தில் ரத்த வெறிச் செயல்கள். ஏற்கனவே காதலில் விழுந்து விட்ட பல பெண்களும் பீதியில் உறைந்து கிடக்கிறார்கள்.
காதல் ஒன்றும் கடவுள் இல்லையடா… இந்த இழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா…’ என இவர்களுக்கெல்லாம் எப்படித்தான் புரிய வைப்பது? கொலை வெறிக் காதலர்களுக்கு  என்னதான் பிரச்னை?
‘‘காதலை ஏற்கவும், மறுக்கவும் அந்தப் பெண்ணுக்கு முழு உரிமை உண்டு. அவளைக் கட்டாயப்படுத்துவதையோ, காதலை ஏற்க மறுக்கிற பட்சத்தில்
வன்முறையில் ஈடுபடுவதையோ, ஆணாதிக்க மனோபாவத்தின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும்.  இத்தகைய வெறிச்செயலில் ஈடுபடுகிற ஆண், சிறு வயதிலேயே வன்முறை நிறைந்த சூழலில் வளர்ந்தவனாக இருப்பான். அப்பா குடித்துவிட்டு, அம்மாவை அடித்துத் துன்புறுத்துவதையும், தான் வைத்ததுதான் சட்டம் என முடிவுகளைத் திணிப்பதையும் பார்த்து வளர்ந்திருப்பான். அல்லது அடி, உதைகள் வாங்கியே வளர்ந்தவனாக இருப்பான். இந்த மாதிரி இளைஞர்களுக்கு வன்முறையை வெளிப்படுத்துவது மிகச் சுலபம்’’ என்கிறார் பிரபல பாலியல் மருத்துவர் காமராஜ். வன்முறை உணர்வுள்ளவர்களை அடையாளம் கண்டு தவிர்க்க சில ஆலோசனைகளையும் முன் வைக்கிறார் அவர்.
‘‘காதலிக்கிற போது, ஒவ்வொரு இளைஞனும் தன்னை ஒரு சினிமா ஹீரோ மாதிரிதான் கற்பனை செய்து கொள்கிறார்கள். சினிமா ஹீரோ பத்து பேரை அடிப்பார். பறந்து பறந்து தாக்குவார். தன்னையும் அப்படி கற்பனை செய்து கொள்வார்கள். பலருக்கு அது வெறும் கற்பனையோடு நிற்பதில்லை. காதலியுடன் ஓட்டலுக்குப் போகும் போது, சர்வர் செய்கிற சிறிய தவறுக்குப் பொங்கி எழுந்து, தகராறு செய்வது, சாலையில் செல்லும் போது, சக பயணிகளுடன் பிரச்னை செய்து, அடிதடியில் இறங்குவது எனக் கூடுதலாக உணர்ச்சிவசப்படுகிற இந்த கேரக்டர்களை ‘ஜெர்க்’ என்கிறோம். நடைமுறையில் வன்முறை உணர்வைக் கட்டுப்படுத்தத் தெரியாத இந்த நபர்களைக் கல்யாணம் செய்கிற பெண்களுக்கு திருமண வாழ்க்கை நிச்சயம் நரக மாகத்தான் அமையும்.
காதலிக்கிற போது மற்றவர்களிடம் வெளிப்பட்ட அதே வன்முறை, திருமணத்துக்குப் பிறகு மனைவியிடமும் கட்டாயம் வெளிப்படும். எழுதப்படாத சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு, அவற்றை யாராவது மீறும் போது, யாராக இருந்தாலும், அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கத் தயங்காத அரக்கர்கள் இவர்கள். இப்படிப் பட்டவர்களுடன் வாழ்வது போராட்டம்தான். இந்த கேரக்டரை அடையாளம் கண்டுவிட்டால், அந்தக் காதலைத் தொடர்வது பெண்களுக்கு நல்லதல்ல. அதைவிட முக்கியமானது, காதலை முடிவு செய்ய குறைந்த பட்சம் 2 வருடங்களாவது அவகாசம் அவசியம். அந்த 2 வருடங்களில் அந்த ஆணின் குணாதிசயங்களைக் கவனிக்க வேண்டும். யாரிடம், எப்படிப் பழகுகிறார், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவரா என்பதைக் கண்காணிக்க வேண்டும். கல்யாணத்துக்குப் பிறகு சரியாகி விடும் என்றோ, திருத்திவிடலாம் என்றோ தப்புக்கணக்கு போட்டு, தியாகிப் பட்டம் சுமக்க வேண்டாம்’’ – எச்சரித்து முடிக்கிறார்.

நன்றி-தினகரன்

நீர்-இனி போர்: எதிரியாக மாறுமா எதிர்காலம்

பணத்தை தண்ணியா செலவழிக்கிறான்’ என பழமொழி சொல்லப்போய், "தண்ணியை பணத்தைப் போல செலவழிக்கிறான்’ என சொல்லும் காலம் நெருங்கி வருகிறது.
மண்ணுக்காக நாடுகள் முட்டிக்கொண்டதால் தான் இரண்டு உலகப் போர்கள் நடந்தன. எதிர்காலத்தில் இன்னொரு உலகப் போர் நடந்தால், அது நீருக்காக மட்டுமே நடக்கும் என்கின்றனர் அறிஞர்கள்.இதற்கு காரணம், மாறி வரும் சுற்றுச்சூழ்நிலைகளால், நீர் என்பதே அரிதாகி வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு, உலகுக்கு கிடைக்கும் நல்ல நீரின் அளவு குறைந்து கொண்டே போகிறது. செயற்கையாக நீரை தயாரிக்கலாம் என்றால், அது எளிதில் சாத்தியமாகாது. எனவே, இயற்கையாக கிடைக்கும் நீரை கைப்பற்ற, உலக நாடுகள் போட்டி போடும். தண்ணீர் இல்லாவிட்டால், வாழ்க்கையே இல்லை என்பதால், உலக நாடுகள், உச்சகட்டத்தில் மோதிக்கொள்ளும்.

பருவநிலை மாற்றம்:

பருவநிலை மாற்றத்தால், அதிக மழை அல்லது அதிக வெப்பம் என்ற நிலைமை ஏற்படுகிறது. சரியான நேரத்தில், மழை பெய்வது சமீப காலமாக நடப்பதில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பும் வறட்சி ஏற்பட்டது. அப்போதெல்லாம் தண்ணீரின் தேவை குறைவாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமையே வேறு.தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் மக்கள் தொகை பெருக்கம், காடுகளை அழித்தல், மழை நீரை தேக்கி வைக்காதது, நதிகள் இணைக்கப்படாமல் இருப்பது, சுற்றுச்சூழல் மாசுபாடு, தொழில் மயம் ஆகியவை. தேவையை உணர்ந்து செயல்படாவிட்டால், 2015லேயே தண்ணீர் தேவை அதிகரித்து, உயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும். தண்ணீர் பற்றாக்குறையால், உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்து, விலை உயரும்.
பூமி, 71 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது. 29 சதவீதம் நிலப்பரப்பாக உள்ளது. மொத்த தண்ணீரில் உப்பு நீரே அதிகம். 2.5 சதவீதம் நீர் மட்டுமே நல்லநீர். உலகில், 0.08 சதவீதத்துக்கும் குறைவான தண்ணீரை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. உலகளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் 50 நாடுகளை 1999ல் ஐ.நா., அறிவித்தது. தற்போது விவசாயத்திற்காக 70 சதவீத நீர் பயன்படுத்தப்படுகிறது. இது 2020ல் 87 சதவீதம் ஆகும் என, உலக தண்ணீர் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது, உலக அளவில் ஐந்து பேரில் ஒருவருக்கு, சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. ஒவ்வொரு நாளும், ஐந்து வயது பூர்த்தியடையாத, 30 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் பசி, தொற்று நோய்களால் இறக்கின்றனர். சுத்தமான குடிநீர், நல்ல சுகாதாரம், சரிவிகித உணவு போன்றவற்றின் மூலமே இதை சரி செய்ய முடியும்.

என்ன தீர்வு:

அனைத்து ஆதாரங்களுக்கும், அடிப்படையான தண்ணீரை பாதுகாப்பது நமது கடமை. நீராதாரங்களை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். அதிக மரங்களை நட வேண்டும். தண்ணீரை மறுசுழற்சி செய்து, விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், சூரிய ஒளி மின்சாரம் போன்ற திட்டங்களை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். சொட்டு நீர் பாசனம், நீர்தெளிப்பு போன்ற வற்றை பயன்படுத்தி தண்ணீரை சேமிக்கலாம்.

"மடி’யில் கை வைத்த கதை:

பற்றாகுறை ஏற்பட்டதும், "மடி’யில் கை வைத்த கதையாக, நிலத்தடியில் கை வைத்தோம். அந்த நீரையும் எக்கச்சக்கமாக உறிஞ்சிகிறோம். இது இன்னொரு ஆபத்து. இதனால், அந்த இடத்தின் இயற்கை சமநிலைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கிணறுகள் வற்றி, விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படுகிறது.

நீரின் தேவை:

விவசாயத்திற்கே அதிக நீர் தேவைப்படுகிறது. அடுத்ததாகத் தான் மற்ற உபயோகங்களுக்கு தேவை. 1970ம் ஆண்டில், உலகில் இருந்த மொத்த நீரில் 25 சதவீதத்தை பயன்படுத்தினோம். இது 1980ல், 45 சதவீதமாகவும், 1990ல் 65 சதவீதமாகவும் அதிகரித்தது. தற்போது உலகின் நீர்த் தேவை, மொத்த நீரில் 80 சதவீதத்தை நெருங்கி விட்டது. இதே நிலை தொடர்ந்தால், நீர் அரிதான பொருளாகும் அபாயம் இருக்கிறது. நீர் இல்லாவிடில், உலகம் அழிந்து விடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கிறதா என்ன.
மாசுபடுத்தும் காரணங்கள்:நீர் மாசுபடுவதற்கு முக்கிய காரணமே மனிதர்களின் மனசாட்சி இல்லாத நடவடிக்கைகள் தான். தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகள், வேதிப்பொருட்கள், ஆயில், பெயின்ட் போன்றவையாலும் நீர் மாசுபடுகிறது. இக்கழிவுகள் ஆற்று நீரை மட்டுமல்லாது, நிலத்தடி நீரையும் நாசம் செய்கின்றன. நிலத்தின் இயற்கை தன்மையே மாறுகிறது. வீட்டு கழிப்பறை, சாக்கடை ஆகியவற்றாலும் நீர் மாசுபடுகிறது. உலகம் முழுவதும் 40 சதவீதம் நிலத்தடி நீர் குடிநீராகவும்,60 சதவீத நிலத்தடி நீர், விவசாயத்துக்கும் பயன்படுகிறது.

செயற்கை நீர் சாத்தியமா:

செயற்கையாக நீரை உருவாக்க முடியுமா என்று ஆராய்ச்சியாளர்களை கேட்டால், முடியாது என்றே பதில் அளிக்கின்றனர். இருப்பினும், ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்தது தான் நீர். இந்த இரண்டு வாயுக்களும், எளிதாக கிடைக்கக்கூடியவை தான். ஆனாலும் இதை இணைத்து நீரை உருவாக்க முடிவதில்லை. காரணம், ஹைட்ரஜன் அணு தனித்து கிடைக்காது. ஆக்ஸிஜன், இரட்டை அணுவாகத்தான் இருக்கும். ஒரு அணுவை அதிலிருந்து பிரிக்க முடியாது.இதையும் மீறி, இரண்டு ஹைட்ரஜன் அணுவையும், ஒரு ஆக்ஸிஜன் அணுவையும் பிரித்தெடுத்தால், இரண்டும் நிலையான எலக்ட்ரான்களை கொண்டிருக்கும். ஒரே அளவு எலக்ட்ரான்கள் கொண்டவை, எதனுடனும் வினை புரியாது. மீறி இணைத்தால், தண்ணீருடன் சேர்ந்து அதிகமான சக்தி வெளிப்படும். காரணம் அணுக்கரு இணைவு (பியூஷன்).செயற்கையாக நீரை உருவாக்குவதில், இவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், இயற்கையாக ஆவியாகும் கடல்நீர், மேகத்தின் மீது பட்டு குளிர்வடைந்து மழைநீராக மண்ணில் மீண்டும் விழுகிறது. அந்த நீரை அலட்சியமாக வீணாக்குகிறோம்.

பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் `அந்தஸ்து’

 

பிள்ளைகள் புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்புகிறார்கள். அதேபோல் தங்கள் பெற்றோர் புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்று பிள்ளைகளும் விரும்புகிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் இன்னும் ஒரு படி மேலே போய், பெற்றோர்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமின்றி, சமூகத்திலும் பலரால் மதிக்கப்படக்கூடிய அந்தஸ்துடன் வாழவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். பெற்றோரின் அந்தஸ்து தங்களுக்கு தனி கவுரவத்தைக் கொடுப்பதாக கருதுகிறார்கள்.

பெற்றோர் புத்திசாலிகளாக இருந்தால், எப்போதும் அவர்கள் பிள்ளைகளின் மனநிலையை புரிந்து கொண்டு செயல்படுவார்கள். தங்கள் பிள்ளைகளின் தேவைகளை அவர்கள் சொல்லாமலேயே புரிந்துகொண்டு நிறைவேற்றுவார்கள்.

பொதுவாக எல்லா பெற்றோருக்கும் போதிய கல்வி அறிவு இருக்கும் என்று சொல்ல முடியாது. கல்வி அறிவு இல்லாவிட்டாலும்கூட, தங்களது பொது அறிவை மேம்படுத்தி குழந்தைகளின் தேவைகளை உணர்ந்து அவர்களை திருப்திப்படுத்தும் பெற்றோராக இருப்பது இன்று அவசியமாகிறது. போதிய கல்வி அறிவு இல்லாத பெற்றோருக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மை உருவாகிவிடும். அந்த தாழ்வு மனப்பான்மையால் யார் முன்னாலும் தன் பெற்றோர் தலைதாழ்ந்து நின்றுவிடக்கூடாது என்றும் குழந்தைகள் எதிர்பார்க்கின்றன. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பிள்ளைகளின் மனது காயப்படும் என்பதை பெற்றோர் உணர்ந்துகொள்ளவேண்டும்.

Sun14 பெற்றோரின் உழைப்பில்தான் குழந்தைகள் படித்து முன்னேறுகின்றன. தனது தந்தை என்ன வேலை பார்க்கிறார்? என்பதிலும், அவர் வாங்கும் சம்பளம் அல்லது சம்பாதிக்கும் பணத்தின் அளவு அதிகமாக இருக்கவேண்டும் என்பதிலும் குழந்தைகள் கவனமாக இருக்கின்றன. அப்பா பார்க்கும் வேலை சொல்வதற்கு மகிழ்ச்சியாக இல்லை என்றாலும், வாங்கும் சம்பளம் மிகக் குறைவாக இருந்தாலும் குழந்தைகள் வருத்தப்படுகின்றன என்பதை பெற்றோர் புரிந்துகொள்ளவேண்டிய காலம் இது.

போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில், போராடி ஜெயிக்க ஒவ்வொரு குழந்தையும் தயாராக இருக்கிறது. அவர்களின் போராட்டத்திற்கு சரியான முறையில் வழிகாட்டி, ஊக்குவிக்கும் பெற்றோரை குழந்தைகள் அதிகம் விரும்புகின்றன. `நீ விரும்புவதால் அதில் கலந்துகொள்ள அனுமதிக்கிறேன். எந்த அளவுக்கு அதை சிறப்பாக செய்யமுடியுமோ அந்த அளவுக்கு செய்’ என்று தூண்டுதல் தரும் பெற்றோர் என்றால் குழந்தைகள் அதிகம் மகிழ்கின்றன. அப்படி அனுமதி

கொடுக்கும் விஷயத்தில் அவர்கள் தோற்றுப்போனால்கூட பெற்றோருக்கு அது பெரிய வெற்றியாகிவிடுகிறது. ஏன்என்றால் தானாகவே முன்வந்து பெற்றோர் அனுமதி செய்த காரியம் தோல்வி அடைந்தால், உடனடியாக அதுபற்றி குழந்தைகள் ஆய்வு செய்கின்றன. அதில் சில நல்ல தீர்மானங்களை எடுக்கின்றன. அந்த தீர்மானங்கள் காலம் முழுக்க அவர்கள் முன்னேற கைகொடுப்பதாக இருக்கிறது.

பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்குச் செல்கிறார்கள். `வேலைக்கு செல்வதால் தங்களோடு பெற்றோர் அதிக நேரம் இருப்பதில்லை’ என்ற கவலை குழந்தைகளுக்கு இருந்தாலும், பெற்றோர் அருகில் இல்லாத நேரத்தில் தனது நேரத்தை செலவிட சரியான ஏற்பாடுகளை செய்துகொடுத்தால், அந்த பெற்றோர்களை குழந்தைகளுக்கு பிடிக்கிறது. அந்த ஏற்பாடுகள் குழந்தைகளுக்கு பிடித்ததாக இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சிறுமிகள் தங்களுக்கு பலவிஷயங்கள் தெரியும் என்று, தங்கள் தோழிகளிடம் கூற ஆசைப்படுகிறார்கள். அதற்காக புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். இந்த வாய்ப்பை புரிந்துகொண்டு எந்த தாய் தன் குழந்தைக்கு சமையல், அலங்காரம், தையல் கலை போன்றவைகளை சொல்லிக்கொடுக்கிறாரே, அவர் தன் குழந்தைகளிடம் அந்தஸ்துமிக்கவராக மாறிவிடுகிறார். இதை தாய் கற்றுக்கொடுக்கவேண்டும் என்றால், முதலில் அவர் அவைகளை கற்றுக்கொள்ளவேண்டும். நிறைய கலைகளை கற்றுத் தெரிந்து வைத்திருக்கும் அம்மாக்களுக்கு அவர்களது பெண் குழந்தைகள் அதிக மதிப்பு கொடுக்கிறார்கள் என்பது கவனிக்கத் தகுந்த விஷயமாகும்.

எப்போதும் திட்டுவது, அடிப்பது, கடிந்து கொள்வது என்று செயல்படும் பெற்றோரை குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை. தாங்கள் எப்போதும் கிறுக்கிக்கொண்டே இருந்தாலும், `நீ கிறுக்குவதற்குள் ஒரு ஓவியன் ஒளிந்திருக்கிறான்’ என்று கூறி ஊக்கம் அளித்து, அதற்கான வகுப்புகளுக்கு அனுப்பி, தங்களை ஓவியர் ஆக்கிவிட்டால் அந்த பெற்றோரை தலைக்கு மேல் தூக்கிவைத்துக்கொண்டு குழந்தைகள் கொண்டாடுகின்றன.

விளையாட்டு எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும். விளையாட்டு குழந்தைகளை பலம் பெற வைக்கும். நன்றாக வளர வைக்கும். குழந்தைகள் வாழ்க்கையில் விளையாட்டு மிக அவசியம் என்பதை பெற்றோர் உணர்ந்து அதை ஊக்கப்படுத்த வேண்டும். படிப்புக்கும்- விளையாட்டுக்கும் சரியாக நேரத்தை ஒதுக்க முடியாமல் குழந்தைகள் தடுமாறினால், அதற்கு சரியாக திட்டமிட்டுக்கொடுத்து நேரத்தை ஒதுக்க உதவினால் குழந்தைகள் மகிழ்கின்றன. எந்த விளையாட்டு அவர்களுடைய திறமையை வெளிக்கொண்டு வந்து அவர்களை பிரகாசிக்க வைக்கும் என்பதை புரிந்து, அதில் தொடர்ந்து பயிற்சியளிக்க பெற்றோர் உதவவேண்டும் என்று குழந்தைகள் விரும்புகின்றன. தனக்கு பிடித்த விளையாட்டில் பெற்றோருக்கு ஆர்வம் இல்லாவிட்டாலும், அதைப் பற்றி பெற்றோர் தெரிந்துகொண்டு, அதைப் பற்றி பேசவும், ஊக்கமளிக்கவும் வேண்டும் என்று குழந்தைகள் விரும்புகின்றன. தனது விளையாட்டுக்கு ஊக்கம் கொடுக்கும் பெற்றோரை, குழந்தைகள் உயர்ந்த இடத்தில்வைத்து பார்க்கிறார்கள்.

பிள்ளைகள் விஷயத்தில் எப்படிப்பட்ட நிலையிலும் புத்திசாலி பெற்றோர் ஆவேசப்படாமல் நிதானமாக செயல்படுவார்கள். குழந்தைகளுக்கென்று ஒரு வெளியுலக இமேஜ் இருக்கிறது. அவர்களுக்கென்று மரியாதைக்குரிய ஒரு நட்பு வட்டம் இருக்கிறது. அதை புரிந்து கொண்டு தங்களை கவுரவமாக நடத்த வேண்டும் என்று அவர்கள் பெற்றோரிடம் எதிர்பார்க்கிறார்கள். தங்களது நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி தங்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோருக்கு பிள்ளைகள் தங்கள் மனதில் உயர்ந்த இடத்தை அளிக்கிறார்கள். அப்படிப்பட்ட பெற்றோரைப் பற்றி தங்கள் நட்பு வட்டத்திலும் உயர்வாகப் பேசுகிறார்கள்.

ஆட்டமா… தள்ளாட்டமா…! குடிகாரன் பேச்சு…! விடிஞ்சா போச்சு…!!

"நாளை முதல் குடிக்க மாட்டேன், சத்தியமடி தங்கம், இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்,” என்ற பாடலை "அரை மப்பில்’ பாடியபடி மேலும் ஒரு "கட்டிங்’ போடுவதற்காக… மனைவியிடம் கெஞ்சுவது போல் கொஞ்சி பணம் கேட்பார் கணவர்.""ராத்திரி ஆனா… சனியனோட தொல்லையா போச்சு. இதெல்லாம் என்னைக்கு தான் உருப்படப்போகுதோ தெரியல,” என மனைவியின் அன்பு(?) பேச்சை பொருட்படுத்தாமல், "கட்டிங்’ போடுவதிலேயே கணவரின் கவனம் செல்லும்.தூங்குவது போல் போக்கு காட்டும் குழந்தைகள், பெற்றோரின் சண்டையை கவனித்து கொண்டிருக்கும். "இதுக… திருந்தவே… திருந்தாது,’ என பெற்றோர் பற்றி, ஒரு முடிவுக்கு வரும் குழந்தைகள் தூங்கி விடும்.
பத்து பதினைந்து சிகரெட்டுகளை ஊதி தள்ளி, இரவு 2 மணி வரை, படுக்கையில் அங்கும், இங்கும் புரண்டும், உருண்டும் தூக்கம் வராமல் திணறுவார். மல்லாக்கப்படுத்தபடி கால்மேல் கால்போட்டு யோசிப்பார். ஒரு வழியாக தூங்க, அதிகாலை ஆகி விடும்.மறுநாள் காலை 8 மணி வரைக்கும் கண் விழிக்க முடியாது. முந்தைய நாள் போட்ட "மப்பு’ தலையை குடைந்து வலியை ஏற்படுத்தும். கை, கால்கள் வீங்கிப் போயிருக்கும். "வேலைக்கு செல்ல வேண்டுமே…!,’ என வேண்டா, வெறுப்பாக எழ முடியாமல் எழுந்து தயாராவார். வேலைக்கு சென்றாலும் பணியில் கவனம் செலுத்த முடியாது.இது நடுத்தர குடும்பத்தை சேர்ந்த "குடி’கார கணவரால் நடக்கும் அன்றாட நிகழ்வுகள்.நாளை முதல் குடிக்க மாட்டேன், என சத்தியம் செய்தவர் மறுநாள் அந்தி மயங்கும் நேரத்தில் ஆளும் மயங்க ஆரம்பித்து விடுவார். பிறகென்ன, "குடிகாரன் பேச்சு… விடிஞ்சா போச்சு தானே…?’இப்படி தினமும் மது குடிப்பதால், கை, கால் நடுக்கம், வியர்வை, குழப்பநிலை, வலிப்பு நோய் வரும். கல்லீரல், வயிற்றுப் புண், ரத்தக்கசிவு, கணையம், நரம்பு பாதிப்புகள் என அத்தனை நோய்களும் உடம்பை ஆட் கொள்ளும். குடியால் நம்மைத் தேடிவரும் நோய்கள் பற்றி ஒரு கணம் சிந்தித்தால், "பாட்டில்’ திறக்க மனம் வராது…. குடிப்போர்கள் சிந்திப்பார்களா…?
குடிப்பவர் எண்ணிக்கையை குறைப்பது எப்படி?தமிழகத்தில், "டாஸ்மாக்’ கடைகளை மூடி "குஜராத் போல்’ மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்ற விவாதங்கள், கோரிக்கைகள் எழுந்துள்ளன. மதுக்கடையை முழுமையாக மூடிவிட்டால், கள்ளச்சாராயம் பெருகி விடும்; அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்ற கருத்தும் உண்டு.நம் மாநிலத்தில் 6 ஆயிரத்து 823 "டாஸ்மாக்’ கடைகள் உள்ளன. கடந்த ஆண்டு, 15 ஆயிரம் கோடிக்கு மது விற்பனை நடந்தது. இந்த ஆண்டு, 18 ஆயிரம் கோடிக்கு விற்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே அரசிற்கு இது ஒரு நல்ல வருமானம் தான். வருமானத்தை இழக்க அரசு விரும்பவில்லை என்றால், "டாஸ்மாக்’ கடைகள் செயல்படுவது தொடர்பாக, சில கட்டுப்பாடுகளை அரசு விதிக்க வேண்டும்.
*கடைகள் திறக்கும் நேரத்தை, பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை என குறைக்கலாம்.
* ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் (சராசரியாக 25 தினங்கள்)அனைத்திலும் விடுமுறை அளிக்கலாம்.
* 21 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும், உரிய ஆவணம் காட்டினால் மட்டுமே, மது விற்க வேண்டும். (அமெரிக்காவில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான், மது விற்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது)
* கடைகளுக்கு வெளியே, மது வகைகளின் விலைப்பட்டியல் வைத்தால், வாங்க வருபவர் சற்று தயங்கலாம்.
* கடைகளின் எண்ணிக்கையை குறைக்கலாம். மருத்துவமனை, பள்ளி, கோயில் அருகில் இருந்து சில கி.மீ., தூரத்திற்கு கடைகள் வைக்க கூடாது என்பதை தீவிரப்படுத்தலாம்.

போதையேறி போச்சு:


மதுரை அரசு மருத்துவமனை மதுபோதை மறுவாழ்வு மையத்தில், 2011ம் ஆண்டில் 273 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். இந்தாண்டு ஆகஸ்ட் வரை, 204 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்தாண்டை விட, இருமடங்கு அதிகம். இதுதவிர தினமும் 50 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.

தேர்வில் "பாஸ் மார்க்’ இல்லை வாழ்வில் "டாஸ்மாக்’ உண்டு!

"நா ஸ்டெழியாத்தான் நிக்கிழேன்’- என்று, அவிழும் வேட்டியை அள்ளி மடித்துக் கட்ட முயன்று தோற்கும் கணவனை, ஊர்சிரிக்கும் முன், சத்தமின்றி வீட்டுக்குள் திணிக்கும் மனைவியையும், "பாழாய் போகிறானே அன்பு மகன்’ என, மனம்வெதும்பும் தாய், தந்தையையும் நம்மூரில் நாளும் காணலாம். இப்படி, "போதையில் பாதை மறந்தோரை’ எந்தச் சமூகமும் மதிப்பதே இல்லை."ஒரு ஜாலிக்காக… எப்போதாவதுதான்… கம்பெனி கிடைக்கும்போது மட்டும்… என்ற "சால்ஜாப்பு’களுடன் துவங்கி… "கவலையை துறக்க, காதலியை மறக்க…’ என்று கூறி, "பிரிகேடியர்’, "நெப்போலியன்’,என (மதுபான வகையினரை) கையோடு "அழைத்து’ச் செல்கின்றனர். கல்லூரி இளைஞர்களும் மதுவைப் பழகி, தேர்வில் "பாஸ் மார்க்’கைவிட… வாழ்வில் "டாஸ்மாக்’ போதுமென, குடிக்கு அடிமையாகி வருகின்றனர். வாழும் காலத்தில், வம்பை விலைக்கு வாங்கி, திடகாத்திர பருவத்தில், திமிராய் திரியவைத்து, உழைப்பை மறக்கடித்து ஊனநிலைக்கு கொண்டு செல்கிறது குடிப்பழக்கம். இதனால் குடும்பமே சிதைவடைந்து போகிறது. "கோயில் நகர்’ மதுரையில் தெருவுக்கு தெரு கோயில்களை பார்த்தோம் அன்று! இன்று பார்…பார்…என்று "பார்கள்’ தான் பார்வையில் படுகின்றன. இங்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இதே நிலமை தான். வறுமை, வசதி எப்படி என்றாலும் மதுவில் மயங்கி எழுகின்றனர் மதுரை வாசிகள்!

பாரில் மது அருந்திவிட்டு டூவீலரில் செல்லலாமா?

மது அருந்திவிட்டு, "எப்படியாவது வீடு போய் சேர்ந்துவிடலாம்’ என்று போதையில், அசட்டு நம்பிக்கையில், வாகனம் ஓட்டி விபத்தில் சிக்குவது மதுரையில் அதிகம். இதுகுறித்த புள்ளிவிபரம் போலீசாரிடம் இல்லை.போலீசார் கூறியதாவது: குடித்து விட்டு வாகன விபத்தில் சிக்கினால், குடும்பத்துக்கு பணப்பலன்கள் கிடைக்காது. இதற்காக, நாங்களும், டாக்டர்களும், குடிபோதையால் விபத்து ஏற்பட்டதாக சான்று தருவதில்லை. குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்கினால், மத்திய போக்குவரத்து வாகன சட்டப்படி, முதல் முறை ரூ.2 ஆயிரம் வரையும், அடுத்த முறை ரூ.5 ஆயிரம் வரையும் அபராதம் விதிக்கிறோம். ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய ஆர்.டி.ஓ.,வுக்கு பரிந்துரைக்கிறோம், என்றனர்.
"அரசுதான் மதுக்கடை நடத்துகிறது. பாரில் மது அருந்திவிட்டு, தூரத்தில் உள்ள வீட்டிற்கு நடந்து செல்ல முடியாது. எனவே டூவீலரில், காரில் புறப்பட்டால், போதையில் வந்ததாக வழக்குப்பதிவு செய்கிறார்கள் என "குடிமகன்கள்’ குமுறுகிறார்களே’ என கேட்டதற்கு, ""கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கவே, மதுக்கடைளை அரசு நடத்துகிறது. அதற்காக, போதையில் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்குவதை அனுமதிக்க முடியுமா? இதனால்தான் அபராதம் விதிக்கிறோம்,’ என்கின்றனர் போலீசார்.

குடித்தால் மனிதன் ஓர் இயந்திரம்

மனநல மருத்துவ நிபுணர் சி.ராமசுப்ரமணியன்:

குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதும் ஒருவித நோய். இதற்கென மருந்துகள், நிபுணர்கள் உள்ளனர். இதை குணப்படுத்தலாம். உள்மன கொந்தளிப்பு, மனஉளைச்சல், உணர்வுக்கு வடிகாலாக சிலர், மதுவை நாடுகின்றனர். பிரச்னைகளை அறிவுபூர்வமாக, ஆக்கபூர்வமாக தீர்ப்பதற்கு பதில், இம்மாதிரி ரசாயன பொருட்களை தேடுகின்றனர். இந்தப் பொருள், செயற்கையான மகிழ்ச்சி, தைரியம், உத்வேகத்தை தருகிறது. இதன் "வீரியம்’ குறையும்போது, மகிழ்ச்சியும், உற்சாகமும் குறைகிறது.இப்பழக்கம் உடல், நரம்பு மண்டலம், மனநிலையை பாதிக்கிறது. எனவே தனிப்பட்ட நபர், ஒரு இயந்திரம் போலாகிறார். செல்லமுத்து அறக்கட்டளையின், "திரிசூல்’ அமைப்பு நடத்திய ஆய்வில், குடிப்பழக்கத்திற்கு ஆளானவர் மனநிலை மட்டுமின்றி, அவரை சார்ந்துள்ள மனைவி, மக்கள் மனநிலையும், உடல் நிலையும் பாதிப்பது தெரிகிறது. தந்தையால்,குழந்தைகள் தீயபழக்கத்திற்கு ஆளாகின்றனர்.

டாஸ்மாக்- மூடப்பட்டால்?

அரசு திடீரென டாஸ்மாக்கை மூடி விட்டால் என்ன செய்வீர்கள் என்று, ராமநாதபுரம் பாண்டுகுடியை சேர்ந்த ஆர்.சந்தோஷ்குமாரிடம், கேட்டபோது: டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால், மிக்க சந்தோஷம். வாரம் ஒரு நாள், அல்லது இரண்டு நாள் குடிப்பதையும் நிறுத்தி விடுவேன். ஒரு துயரத்தை மறக்க, குடித்து விட்டு, வீடு திரும்புவதற்குள், பல பிரச்னைகள் உருவானது. இது பணமும், மானமும் மிஞ்சும். உடலும், உள்ளமும் புத்துணர்ச்சியோடு இருந்து வாழ்வு சிறக்க வழிகாண்பேன்.கள்ளு வேணும்

பி.அங்குச்சாமி, திண்டுக்கல்:

எதையும் மெதுவாகத்தான் விட முடியும். அது போல திடீரென குடி ஓட்டத்தை நிறுத்தினால், உடல் சோர்ந்து போய்விடும். அரசு டாஸ்மாக் கடையை மூடினால், உடனடியாக கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும்.

மது குடிக்கனும்னா… புதுச்சேரி செல்லணும்

கே.கே.காளிதாஸ், 77, மூத்த குடிமக்கள், ஓய்வூதியர் நலச் சங்க தலைவர், மதுரை: நாங்க இளைஞராக இருந்த காலத்தில், இந்தளவுக்கு மது கிடைக்காது. கல்லூரியில் படிக்கும் போது, எனக்கு மதுன்னா என்னன்னு தெரியாது. ஆனால் சிலர் மருத்துகடையில் விற்கப்படும் "ஜிஞ்சர்பிரியை’ தண்ணீர் கலந்து குடிப்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். இப்ப மாதிரி, தெருவுக்கு தெரு மதுக்கடைகள் கிடையாது. போதையில் தெருவில் யாரும் கிடப்பதை பார்க்க முடியாது. கிராமங்களில் தென்னை, பனை மரங்களில் இறக்கப்படும் கள்ளை, சிலர் திருட்டுத்தனமாக குடிப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். நகரில் இருப்பவர்களுக்கு அதுவும் தெரியாது. அந்த காலத்தில் ஏதாவது பார்ட்டி என்றால், வீடுகளில் டிபன் சமைத்து கொடுப்போம். மது குடிக்க புதுச்சேரி, காரைக்காலுக்கு செல்வதுண்டு. தற்போது பள்ளி பருவத்தில், மதுவுக்கு அடிமையாகும் அளவு, அரசு டாஸ்மாக் கடைகளை திறந்திருப்பது வேதனை.

மது குடித்த நாட்கள்

ராஜா (ஷெனாய்நகர், மதுரை):

நான்ஆம்னிபஸ் டிக்கெட் ஏஜன்ட். 15 வயதில் கஞ்சா பழக்கம் இருந்தது. 25 வயதில் திருமணத்திற்குப் பின் குடிப்பழக்கம் ஏற்பட்டது. 10 ஆண்டுகள் அதிகளவு மது குடித்தேன். அதிகாலை 5 மணிக்கு துவங்கி, இரவு தூங்கும் வரை போதையில் மிதப்பேன். இந்நாட்களில் மனைவி, குழந்தைகள், உறவினர் யாரும் என்னை ஒரு ஆளாகவே மதிக்கமாட்டார்கள். ஒரு கட்டத்தில் எனக்கு "வலிப்பு’ நோய் வந்தது. அதன் பின், நான் மதுரை செல்லமுத்து அறக்கட்டளையின், "திரிசூல்’ அமைப்பில் சேர்ந்து, உடல், மனரீதியாக, சிகிச்சை, கவுன்சிலிங் பெற்றேன்.தற்போது 5 ஆண்டுகளாக குடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. தற்போது வீட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என்றாலும், என்னை யாரும் தவறாக பேசுவதில்லை. மதுகுடித்த நாட்களில், வாழ்க்கையை வீணாக்கிவிட்டதாக தற்போது உணர்கிறேன்.

பல லட்ச ரூபாய் இழந்தேன்

மதுரை அரசு மருத்துவமனை மது போதை மறுவாழ்வு மையத்தில் கணவனுக்கு சிகிச்சை அளித்து வரும் மாதவி, கொட்டாம்பட்டி (ஊர், பெயர் மாற்றப்பட்டுள்ளது): நான்
பத்தாம் வகுப்பு படிக்கும் போதே திருமணமாகி விட்டது. சொந்த அத்தை பையன் தான். திருமணத்திற்கு முன்பே குடிப்பழக்கம் இருந்திருக்கிறது. ஆனால் எப்போதாவது என்பதால், பிரச்னையில்லை. இரண்டு குழந்தைகள் பிறந்தபின், அவரது குடிப்பழக்கம் அதிகமாகி விட்டது. அரசு ஊழியர் என்பதால், சம்பளம் சரியாக வந்தது. கடந்த ஓராண்டாக தொடர்ந்து குடிக்க ஆரம்பித்ததால், கை, கால் நடுக்கம் வந்து உடல் நலம் பாதித்தது. ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று, பல லட்ச ரூபாய் இழந்துள்ளேன். குடிக்கக்கூடாது என பொண்டாட்டி, பிள்ளை, சொந்த, பந்தம் யார் சொன்னாலும் கேட்பதில்லை. குடித்துவிட்டு, சந்தேகப்பட்டு அடிப்பார். அவர் மனம் திருந்தி, பிள்ளைகளுக்காக வாழவேண்டும்.

இன்று முதல் குடிக்காதீர்

மதுரையில் செயல்படும் "சாந்திசேனா’ அமைப்பினர், டாஸ்மாக் கடைகள் முன்பு துண்டு பிரசுரங்கள் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த அமைப்பின் செயலர் வினாபா கூறியதாவது: விடுமுறை நாட்களில் தான், டாஸ்மாக்கை தேடி அதிகம் பேர் வருகின்றனர். எங்கள் இயக்கத்தினரும் அந்த நாட்களில், கடைகளின் வாசல் பகுதிகளில் நின்று, "குடியை ஒழிப்போம், குடும்பநலம் காப்போம்’ என்ற வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்களை கொடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இப்படி வழங்கும் போது, ஆதரவை விட எதிர்ப்பு தான் அதிகம். அதைபற்றி நாங்கள் கவலைப்படுவது இல்லை.திருந்த வேண்டும் என முயற்சிக்கும் பலரை, இதற்கான மையங்களில் சேர்த்து, அவர்களை குடியிலிருந்து, முற்றிலும் மீட்டெடுத்துள்ளோம். மதுக்கடைகளை அரசு நடத்தக்கூடாது, என நாங்கள் வழக்கும் தொடர்ந்துள்ளோம், என்றார்.

திருந்தியதால் மரியாதை

வாசுதேவன் (புதுப்பட்டணம், ராமநாதபுரம்): பி.ஏ., வரை படித்த நான், கூட்டுறவு சங்க ஊழியராக உள்ளேன். நண்பர்களுடன் சேர்ந்து மதுக்குடிக்கத் துவங்கினேன். ஏழாண்டுகள், எந்நேரமும் மதுவுக்கு அடிமையானேன். வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். அக்கவலையில், அதிகம் குடிக்கத் துவங்கினேன். குடும்பத்தையே மறந்த நான், இரவு வீடு திரும்புவதுகூட இல்லை.இதனால் குழந்தைகளின் படிப்புக்காக, என்னைப் பிரிந்த மனைவி, அவரது வீட்டுக்குச் சென்றுவிட்டார். திரிசூல் அமைப்பினர் தந்த ஆலோசனையால், தற்போது நான் திருந்திவிட்டேன். இதனால் எனக்கு சமூகத்தில் மரியாதை அதிகரித்துள்ளது. வங்கியிலும் என்னை நம்பி நகையைக் கூட தருகின்றனர்.

நன்றி-தினமலர்

நல்ல பிள்ளை என்றால்…

பிள்ளைகளைப் பெறுவது பாக்கியம் என்பர். ஆனால், எல்லா பிள்ளைகளும் நல்ல பிள்ளையாக இருக்கின்றனரா? நல்ல பிள்ளை என்றால், யார் நல்ல பிள்ளை?
ஒருவருக்கு நான்கு பிள்ளைகள். எல்லாரையும் பாடுபட்டு வளர்த்து, நல்ல வேலை கிடைக்கச் செய்தார். ஒருவனுக்கு மும்பையில் வேலை, ஒருவனுக்கு டில்லியில் வேலை, ஒருவனுக்கு கோல்கட்டாவில் வேலை, ஒருவனுக்கு பெங்களூருவில் வேலை. இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. டாக்டர், "சந்தேகமான கேஸ்!’ என்று சொல்லி விட்டார்.
மும்பையில் இருக்கும் பையனுக்கு போன் செய்து உடனே வரச் சொன்னார். "இப்போது ஆபீசில் பிரமோஷன் நேரம். நான் அங்கு வந்தால், பிரமோஷன் பாதிக்கப்படும். நல்ல டாக்டரிடம் வைத்தியம் செய்து கொள்ளுங்கள்…’ என்று சொன்னான் அவன்.
டில்லியில் இருப்பவன், "நான் இப்போது வர¬ முடியாது. ஆபீசில் ஆடிட் நடக்கிறது. நான் அவசியம் இங்கே இருக்க வேண்டும். நல்ல டாக்டராகப் பார்த்து, வைத்தியம் செய்து கொள்ளுங்கள். பணம் வேண்டுமானால் அனுப்புகிறேன்…’ என்றான்.
அடுத்த பையன் கோல்கட்டாவிலிருந்து போன் செய்தான்… "என் மனைவிக்கு பிரசவ நேரம். ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து, நான் கவனித்துக் கொள்ள வேண்டும். அதனால், இப்போது வர¬முடியாது. நல்ல டாக்டராகப் பார்த்து வைத்தியம் செய்து கொள்ளுங்கள்…’ என்றான்.
நாலாவது பையன் பெங்களூருவிலிருந்து உடனே வந்து விட்டான். தகப்பனாருக்கு உதவியாக அவரோடு இருந்து கவனித்துக் கொண்டான். "ஏண்டா… நீ இங்கே இருந்தால் எப்படி? பெங்களூருல போய் வேலையில் சேர வேண்டாமா?’ என்று கேட்டார். அதற்குப் பையன், "உங்களை கவனித்துக் கொள்வதை விட, வேலை என்ன ¬முக்கியம்? இந்த வேலை இல்லா விட்டால், வேறு வேலை கிடைக் காதா? அதனால், உங்களை கவனித்துக் கொள்வதற்காக வேலையை ராஜினாமா செய்து விட்டு, வந்து விட்டேன்.
"ஒரு பிள்ளை என்பவன், தகப்பனாருக்கு கடைசி காலத்திலோ, உடல் நலமில்லாதபோதோ, கூடவே இருந்து கவனிக்க வேண்டியது கடமை அல்லவா? நீங்கள் எனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள். அதற்கு பலனாக, நான் வேறு என்ன செய்ய ¬முடியும்? உங்களுக்கு உடல் நலமில்லாத போது, நான் கூட இருந்து கவனிக்க வேண்டாமா? அப்படிச் செய்யாவிட்டால் இந்தப் பிள்ளையைப் பெற்றது எதற்கு?’ என்று சமாதானம் சொன்னான்.
அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. "நீ தான்டா என் நல்ல பிள்ளை!’ என்று சொல்லி, அவனை கட்டிக் கொண்டார். அதனால் தான், "பெற்றதெல்லாம் பிளளைகளல்ல!’ என்று கூறினரோ என்னவோ…
நல்ல பிள்ளை என்று பெயர் எடுக்க வேண்டும்.

நலந்தானா..!

நாம் உறவினர்களையோ, நண்பர்களையோ சந்திக்கும்போது கேட்டுக்கொள்ளும் முதல் வார்த்தை, முக்கியமான வார்த்தை, `நலந்தானா?’ என்பது! மனித வாழ்க்கையில் `நலம்’ அவ்வளவு முக்கியம் என்பதை இது உணர்த்துகிறது.

ஆனால் யாரைப் பார்த்தாலும் ஏதாவது ஒருவகையில் உடல் நலக் குறைபாட்டுடன்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதை ஒரு விவாத பொருளாக மாற்றாமல், `நலமாக இருக்கிறேன்’ என்று கூறிவிடுவார்கள்.

சிலரோ, `நலந்தானா?’ என்று கேட்டு முடிப்பதற்குள், தனக்கு அங்கே வலிக்கிறது.. இங்கே வலிக்கிறது என்று புலம்பத் தொடங்கி விடுவார்கள். இந்த புலம்பல்கள் தனக்கு இருக்கும் வலியை மற்றவர்களுக்கும் ஓரளவு பரவச் செய்யும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அதே நேரத்தில் அவருக்கு இருக்கும் வலியும் அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர குறையாது.

இதுபற்றி மனநல நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

“ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்படும்போது ஓரளவுக்கு அவரது மனநலமும் பாதிக்கும். மனநலம் அதி கம் பாதித்தால் உடல் ஆரோக்கியம் மேலும் பாதிக்கும். ஒரு வருடைய மனநலன் பாதிக்கப்படுவதற்கு குடும்ப பிரச்சினை, அலுவலக பிரச்சினை, சமூக சூழல் போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.

ஒருவர் தனக்கு இருக்கும் பிரச்சினை களைப் பற்றி அடுத்தவர்களிடம் புலம் பாமல் அதை எப்படி தீர்ப்பது என்று தீர்க்கும் வழியைப் பற்றிதான் ஆலோ சிக்கவேண்டும். உடல் நலம் கெடும் போது சிலருக்கு பயம் வந்துவிடும். அந்த பயமே, புலம்பலாக வெளிப் படுகிறது. அதனால் ஒருவர் தன்னிடம் புலம்பும்போது அவர் தன் ஆரோக்கியம் பற்றி நிறைய பயப்படுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும். அதனால் மருத்துவ விஞ்ஞானத்தை நம்பி, புலம்பலை கைவிடுவதுதான் சிறந்த வழி.

குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு நோய் வந்து விட்டால் குடும்பமே அவரை சுற்றி நின்று வேதனையை வெளிபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. அந்த வேதனை அவர்களை மேலும் சோர்வடையச் செய்யும். அதற்கு பதிலாக, இந்த மாதிரியான நோய்களில் இருந்து மீண்டவர்கள் பற்றிய தகவலைக்கூறி அவர்களுக்கு நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் ஊட்டவேண்டும்.

சிலர் நோயாளிகளை நன்றாக கவனிப்பதாக கருதிக்கொண்டு, அவர்கள் அருகிலே யாரை யும் விடாமல் தனிமைப்படுத்திவிடுவார்கள். அப்படி தனிமைப்படுத்தவும் கூடாது. வருவோர் போவோரிடம் அந்த நோயைப் பற்றி புலம்பி ஆறுதல் தேடவும் கூடாது. எந்நேரமும் அந்த நோயைப் பற்றியே பேசி, அதற்குள்ளே அந்த நோயாளியை மூழ்கிவிடவும் செய்யக்கூடாது.

நோயாளிகளாக இருப்பவர்கள், தனது நோய் தாக்குதல்தன்மை ஒருபுறத்தில் இருந்தாலும், அதற்கான சிகிச்சையை முறைப்படியாக எடுத்துக்கொண்டு, தனக்கென்று இருக்கும் வேலையை பார்த்துக்கொண்டிருக்கவேண்டும்.

சிலர் முழு ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். அவர்களிடம், `நலந்தானா?’ என்று கேட்டால், கேட்ட ஆள் `போதுமய்யா நிறுத்தும்’ என்று சொல்லும் அளவுக்கு தன் குடும்ப பிரச்சினை, வேலை பிரச்சினைகளைக்கூறி புலம்பித் தீர்த்துவிடுவார்கள். எதிரில் இருப்பவருக்கு வாழ்க்கை வெறுத்துவிடும் அளவுக்கு இருக்கும் அந்த புலம்பல். இந்த புலம்பல்வாதிகள், `நம்மிடம் இருக்கும் கொஞ்ச சந்தோஷத்தையும் நீர்த்துபோய்விடச் செய்வார்கள்’ என்று கருதி மறுநாள் அவர் அருகில்கூட செல்லாமல் நழுவிவிடுவார்கள்” என்று விளக்கு கிறார்கள்.

உங்களிடம் புலம்பல் இருக்கிறதா? அது ஒரு வேண்டாத விருந்தாளி. அதை உங்களோடு வைத்துக்கொள்ளாதீர்கள். சீக்கிரம் அதை மூட்டைக்கட்டி அனுப்பிவிடுங்கள்.

இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்!

 

சில குடும்பத் தலைவர்கள் முகத்தில் எப்போதும் கடுகு பொரிகிற மாதிரி அப்படி ஒரு அனல் வீசிக்கொண்டிருக்கும். முகமோ சிரிப்பையே மறந்திருக்கும். சின்ன விஷயத்துக்கும் சட்டென்று கோபப்பட்டு விடுவதால் இவர்களின் மனைவி, பிள்ளைகள் எப்போதுமே இரண்டடி தள்ளி நின்றபடி தான் பேசுவார்கள். இவர்களுக்கு சாப்பாடு பரிமாறும் நேரத்தில் இவர்களின் மனைவிகள் ஏதோ ஒரு பிரார்த்தனை வாசகத்தை உதட்டுக்குள் முணுமுணுத்தபடி தான் இருப்பார்கள். சாம்பாரில் உப்பு இல்லையென்றால் தட்டு பறக்கும். அதனாலேயே அப்படியொரு நிகழ்வுக்கும் காலப்போக்கில் இவர்களின் இல்லத்தரசிகள் பழகி விடுகிறார்கள்.

அதேநேரம் மணக்க மணக்க சாம்பார் ஊற்றி திருப்தியாக சாப்பிட்டு முடித்தாலும் `நன்றாக இருந்தது’ என்று ஒரு வாய்வார்த்தை இவர்களிடம் இருந்து வெளிப்படாது.

இப்படியான மனநிலை கொண்டவர்களின் சிறுவயதுப் பிராயத்தை எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் இவர்கள் கவனிக்கப்படாமல் வளர்ந்திருப்பார்கள். பெற்றோரின் நாலு பிள்ளைகளில் ஒருவராக இருப்பார்கள். மற்ற பிள்ளைகள் யாருக்கும் கிடைக்காத திட்டு ஸ்பெஷலாக இவர்களுக்கு மட்டும் கிடைத்தபடி இருக்கும். வகுப்பறையிலும் இவர்கள் அமைதியே காப்பார்கள். வகுப்பில் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தாலும் இவர்கள் பார்வை மட்டும் எங்கோ ஒரு கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பது போல் தெரியும்.

சில சமயம் ஆசிரியர்கள் வகுப்பறையில் ஏதாவது ஒரு ஜோக் சொல்ல, அதற்கு மாணவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ஆனால் இந்த மாதிரியான மாணவர்கள் மட்டும் எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் .அமைதியாக இருப்பார்கள்.

அதற்காக எல்லாம் கடந்த நிலை என்று முனிவர்கள் ரேஞ்சுக்கு இவர்களை எடுத்துக் கொண்டு விட முடியாது. நடப்பதற்கு ஒரு மவுனசாட்சியாக இருப்பார்கள். இவர்களிடம் கருத்து கேட்டால், தெரிந்த விஷயத்தை சொல்லவும் தயக்கம் காட்டுவார்கள். முடிந்தால் கருத்து கேட்டவர்களிடம் இருந்து நகரவும் பார்ப்பார்கள்.

பள்ளிப்பருவத்தில் ஆசிரியர்களின் அரவணைப்பும் கிடைக்காமல், வீட்டில் பெற்றோருக்கும் வேண்டாத பிள்ளைகளாய் ஏனோதானோவென்று வளரும் இவர்கள் பின்னாளில் அதிகார வட்டத்திற்குள் வரும்போது ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு விடுகிறார்கள். அதுவரை தன்னை கண்டு கொள்ளாத சமுதாயத்தை இவர்கள் சாட்டையால் அடிப்பது போல் தங்களைச் சார்ந்தவர்களை காயப்படுத்தி திருப்திப் பட்டுக் கொள்கிறார்கள். அதிலும் இவர்களிடம் மாட்டிக் கொள்ளும் குடும்பம் தான் இவர்களின் அதிக பட்ச அதிகார இலக்கு.

இப்படிப்பட்டவர்களை எப்படித்தான் வழிக்கு கொண்டு வருவது? இவர்களை முன்னிலைப்படுத்துகிற மாதிரியான விஷயங்களை படிப்படியாக தொடர வேண்டும். அதாவது அப்படியாக நடிக்க வேண்டும். உப்பு பெறாத விஷயத்துக்கும் இவர்களின் அனுமதி கேட்டு அதன்பிறகே செய்யவேண்டும். ஆனால் இது நடிப்பு என்பதை அவர் கண்டு கொள்ளாத மாதிரி நடந்து கொள்வதில்தான்வெற்றியே இருக்கிறது.

ஒருகட்டத்தில் இதைல்ெலாம் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமா? என்ற சலிப்பின்நிலைக்கு அவர் வந்து விடக்கூடும். எல்லாருக்கும் வருகிற மாதிரி சாதாரண தலைவலி காய்ச்சல் அவருக்கும் எப்போதாவது வரலாம். அப்போது ஒட்டுமொத்த குடும்பமும் அவரை கவனிப்பதில் அக்கறை காட்ட வேண்டும். டாக்டரிடம் அழைத்துப்போய், “டாக்டர்…இவருக்கு ஒண்ணுன்னா நாங்க எல்லாம் உயிரோடு இருந்து வேஸ்ட். அதனால் இவரை எப்படியாவது குணப்படுத்திடுங்க” என்று சொல்லும்போதே வார்த்தைகள் தழுதழுத்து நாக்குழற வேண்டும். கண்களில் வராத கண்ணீரை லேசாக துடைக்க முற்பட வேண்டும்.

இப்படியான சந்தர்ப்பங்களில் தான் அவர் தன்னைப்பற்றி யோசிப்பார்.குடும்பத்தை நடத்தினவிதம் பற்றி யோசிப்பார். `கொஞ்சம்அதிகமாத்தான் அடாவடி பண்ணிட்டோமோ? அப்படி பண்ணியும் இந்தக் குடும்பம் என்னை நேசிக்குதுன்னா நான் இனியாவது என்னை மாற்றிக்கொள்ளத்தானே வேணும்’ என உள்மனம் குரல் கொடுக்கும்.

இதற்கெல்லாம் பிறகு அவர் குணமாகி வழக்கம்போல தன் வேலைகளில் ஈடுபடத் தொடங்கினாலும், எப்போதாவது இரவில் மொட்டை மாடியில் காற்றாட நின்று கொண்டிருந்தால், “கொட்ற பனியில் இப்படி நின்னா மார்ச்சளி பிடிச்சி பாடாப்படுத்திடுமே. உள்ளே வாங்க” என்று அக்கறை சிகாமணியாய் பதட்டக்குரலில் வீட்டுக்குள் அழைத்துப் போக வேண்டும். இது எதில் ஒன்றாவது ஓவர்ஆக்டிங்காக அமைந்து விட்டால், `பொய் நாடகம்..போலி நடிப்பு’ என்பதை அவர் கண்டு கொள்வார். அப்புறம்…?

மறுபடியும் முதல்ல இருந்தா..?

காலம் மாறினால் காதலும் மாறுமா?

கண்ணோடு காண்பதெல்லாம் காதலாகி விடாது. பார்த்த மாத்திரத்தில் வந்து விடுவது காதலும் இல்லை. `சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை, தந்துவிட்டேன் என்னை…’ என்று கவிஞர்கள் உருகி உருகிப் பாடியதெல்லாம் இன்றைய காதலர்களுக்குப் பொருந்தவே பொருந்தாது.

இன்றைய தலைமுறை முதல் பார்வையை பெரும்பாலும் `இவர் எப்படி’ என்பதை எடை போட மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். அடுத்தடுத்த தற்செயலான, அல்லது தற்செயல் மாதிரியான திட்டமிட்ட சந்திப்புகள் அவர்களிடம் ஒருவித பிடிப்பை ஏற்படுத்தலாம். இதில் பிடித்தாலும், பிடிக்காத மாதிரி நடிப்பவர்கள் பெண்கள் தான். இதனால் தான் ஆண்கள் தங்கள் காதலை சொல்ல அத்தனை அலைச்சல்களுக்கு ஆளாகிறார்கள். அதற்குள் பல இரவுகள் தூக்கம் தொலைக்கிறார்கள். பாலிருந்தும் பழமிருந்தும் பசியாற மறக்கிறார்கள்.

சரி, இருக்கட்டும். இப்படியெல்லாம் போராடி ஒருவழியாக காதல் மகுடத்தை கைப்பற்றி விட்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இந்தக் காதலை கல்யாணம் வரை கொண்டு போக எத்தனை பேரால் முடிகிறது? சின்னச் சின்ன ஊடல்கள், கொஞ்சம் கோபம் என்று காதல் காலத்தை கார்காலமாய் நகர்த்துகிறவர்களுக்கு மத்தியில், நிஜமாகவே சண்டை போட்டு காதலை அவசரமாய் கல்லறைக்கு அனுப்பி விட்டு அதேவேகத்தில் இன்னொரு வரை தங்கள் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்கிறவர்களும் இருக்கவே செய்கி றார்கள். அதுவரை எதுவுமே நடக்காதது போல் புது வாழ்வு காணத் தொடங்கி விடுகிறார்கள்.

தேவதாஸ் கால காதல்கள் அப்போதெல்லாம் `அடைந்தால் மகாதேவி… இல்லையேல் மரணதேவி’ என்பதாக மட்டுமே இருந்தன. இதனால் தான் `உலகே மாயம் வாழ்வே மாயம்’ பாட்டு அன்றைய காதலர்களின் அமுதகீதமாக தொடர்ந்தது.

ஆனால் இன்று? பார்க்கிறார்கள். பழகுகிறார்கள். காதலாகிறார்கள். கல்யாணம் வரை வருவதற்குள் கருத்து வேறுபாடு வந்து விட்டால் காதலுக்கு `பை…பை…’ சொல்லிப் போய் விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் காதலைப் பொறுத்தவரையில் `அடைந்தால் மகாதேவி, இல்லையேல் மல்லிகாதேவி’ ரகம். `இன்னொரு பெண்ணே இல்லாத உலகில்தானே இருந்த ஒரே ஒரு காதலிக்காக நீ வாட வேண்டும்’ என்று யாரோ ஒரு சந்தர்ப்பக் காதலன் எப்போதோ சொன்னதை தங்களுக்காகவே சொன்னதாக எடுத்துக்கொண்டு அடுத்த காதல் அல்லது கல்யாணத்திற்குள் போய் விடுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் மறுபடியும் பழைய காதலி அல்லது காதலரை எங்காவது சந்திக்க நேர்ந்தால் கூட `ஹாய்’ சொல்லி இரண்டொரு வார்த்தை பேசும் அளவுக்கும் தங்கள் இயல்பாக்கிக் கொண்டிருப்பார்கள்.

எப்படிப்பட்ட ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கிறது?

முடிந்தவரை முன்கதைச் சுருக்கம் கேட்காத, அழகை மறைமுகமாக வர்ணிக்கிற ஆண்கள் எளிதில் பெண்களை கவர்ந்து விடுகிறார்கள். காதலி கல்லூரியில் படிப்பவர் என்றால், `பள்ளி நாட்களில் யாரையாவது காதலித்தது உண்டா?’ என்று கேட்கிற காதலனை அவளுக்குப் பிடிக்காது. இவன் சந்தேகப் பிராணி என்பதாக அப்போதே முடிவு செய்து அவன் மீதான பிடிப்பையும் அப்போதே விலக்கிக் கொண்டு விடுகிறாள். ஆண்கள் பற்றிய பெண்கள் கணிப்பில், தங்கள் விருப்பத்துக்குரியவன் தன்னை நேசித்த இதயத்தில் இன்னொரு பெண்ணுக்கு எந்த விதத்திலும் இடம் கொடுத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். இதில் மட்டும் எல்லாக் காலத்திலும் பெண்கள் ஒரே மாதிரி இருக்கிறார்கள்.

காதலை பொழுதுபோக்காக வைத்துக் கொள்பவர்கள் இரு தரப்பிலும் தான் உண்டு. அதற்காக காதலே பொழுதுபோக்காக இருந்து விடாது என்பதை நிறைவேறாத காதலுக் காக இப்போதும் உயிரை விடும்காதலர்கள் நிரூபித்துக் கொண்டு தானிருக்கிறார்கள். அதுமாதிரி அற்ப விஷயத்துகாக காதலை கட்செய்பவர்களும் இப்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் வருத்தமான உண்மை.

ஒரு இளைஞனிடம் இன்னொரு இளைஞன் மெரினா கடற்கரையில் இப்படி விசாரித்துக் கொண்டிருந்தான். “உங்க காதல் கட் ஆயிட்டது போலிருக்கே? என்ன காரணம்?”

அடுத்தவன் சொன்னான்: “மிஸ்டு கால் கொடுத்து கொடுத்து என்னை பேச வைத்தே என் பேங்க் பேலன்ஸ் பூராத்தையும் காலி பண்ணிடறா…”

திகைக்க வைக்கும் செக்ஸ் கொடுமைகள்

அதிர்ச்சியானது.. கவலைக்குரியது.. அனைவரும் அறிந்துகொண்டு விழிப்புணர்வு அடைய வேண்டியது.. என்ன விஷயம் தெரியுமா?

– குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை என்ற கொடுமை!

* 53 சதவீத குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

* பாதிக்கப்படுபவைகளில் பெண் குழந்தைகளைவிட, ஆண் குழந்தைகளின் சதவீதம் அதிகம்.

* பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப குழந்தைகளைவிட மேல்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகம்.

* ஒன்று முதல் 18 வயது வரை உள்ளவர்கள் இந்த பாதிப்பு பட்டியலில் இடம்பிடிக்கிறார்கள்.

* 5 முதல் 12 வயது வரை பாதிப்பின் உச்சம். பாதிக்கப்பட்டவைகளில் 40 சதவீதம் இந்த வயதுதான். 30 சதவீதம் பேர் 13-14 வயதினர்.

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்கிற வர்கள், பீடோபீலியா (Peadophilea) என்ற வக்கிர புத்தி கொண்டவர்கள். இது ஒரு மனநோயாகவும் கருதப்படுகிறது. சிறுவர்- சிறுமியர்கள் மூலம் இன்பமடையும் வக்கிரவாதிகள் மேலைநாடுகளில் அதிகம். `சைல்டு செக்ஸ் டூரிசம்’ என்ற பெயரில் அவர்களை சில சமூக விரோத அமைப்புகள் ஆசிய நாடுகளுக்கு அழைத்து வருகின்றன. முன்பு தாய்லாந்து போன்ற நாடுகளில் கால்பாதித்த இந்த பாதகர்கள் இப்போது இந்தியாவில் ஒடிசா, கோவா, மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கு ரகசி யமாக வந்து `ஆசைகளை’ தீர்த்துவிட்டு போகி றார்கள்.

இது தொடர்பான சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பாலியல் தொழிலில் ஈடுபடுகிறவர்களில் 15 சதவீதத்தினர் 15 வயதிற்கும் குறைவானவர்களாக இருக்கி றார்கள். 25 சதவீதத்தினர் 16 முதல் 18 வயதிற்கு உள்பட்டவர்கள். 2005-ம் ஆண்டு இந்தியாவில் 44,476 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார் கள். அவைகளில் 11,008 குழந்தைகள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இவர்கள் பாலியலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

– குழந்தைகளை எளிதாக ஏமாற்ற முடியும்.
– குழந்தைகள் காட்டிக்கொடுக்காது.
– குழந்தைகளுக்கு விளைவுகளை புரியத்தெரியாது. எதிர்ப்பு தெரிவிக்காது.
– தனக்கு ஏற்பட்ட பாதிப்பை குழந்தைகளுக்கு விளக்கத் தெரியாது. விளக்கினாலும் பெற்றோர் அதை நம்பமாட்டார்கள்.
– வயதானவர்கள் குழந்தைகளிடம் கொஞ்சும் பாவனையில் வக்கிர செயலில் ஈடுபடும் போது, பெற்றோருக்கு சந்தேகம் வராது.
– ஆண்மை அதிகரிக்கும், ஆயுள் நீடிக்கும் போன்ற மூட நம்பிக்கைகள்.

இப்படிப்பட்ட பல காரணங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித் துக்கொண்டே போகிறது. கற்பனைக்கு எட்டாதவிதத்தில்கூட குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த உறவினர்கள் அல்லது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்கிறவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், வேலைக்காரர்கள், அம்மாவின்- அப்பாவின் நண்பர்களாக வந்து போகிறவர்கள்…. போன்றவர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். புதிய நபர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு.

பயணங்கள், திருவிழா, திருமணவிழாக்களில் உருவாகும் மக்கள் நெருக்கடியை பயன் படுத்தி குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு தருபவர்கள் உண்டு. குழந்தை தொழி லாளர்கள், தெருவோரக் குழந்தைகள் இந்த பாதிப்பிற்கு உள்ளாகுவது சாதாரண விஷய மாக மாறிக்கொண்டிருக்கிறது. குழந்தை இல்லங்கள், அனாதை ஆசிரமங்கள், ஒருசில பள்ளிக்கூடங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

பாலியல் பலாத்காரத்தால் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. முதலா வதாக அவர்களுக்கு பால்வினை நோய்கள் உண்டாவதை குறிப்பிடலாம். குழந்தைகளின் `உறுப்பு’ பகுதியில் புண்களோ, கட்டிகளோ, சீழ் வடிதலோ இருந்தாலும் குழந்தையின் தாய்க்கு அது பால்வினை நோயின் அடையாளம் என்ற சந்தேகம் வருவதில்லை. ஒருசில மருத்துவர்களும் அது பால்வினை நோயின் அறிகுறி என்பதை உணராமல், வேறு விதமான சிகிச்சைகள் கொடுத்துவிடுவதும் உண்டு.

நன்றாக தெரிந்தவர்களால் குழந்தைகளுக்கு பாலியல் பாதிப்பு ஏற்படும்போது, அவை களின் உடலில் காயங்களோ, சிராய்ப்புகளோ இருப்பதில்லை. அதனால் பெற்றோரோ, மருத் துவர் றகளோ குழந்தை பலாத்காரத்திற்கு உட்பட்டிருக்கிறது என்று முதலில் நினைப்ப தில்லை. அப்படியே நினைத்து விசாரித்தாலும் குழந்தையால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை கூறமுடியாது.

வெளிநபர்களால் பாதிப்பு ஏற்படும்போது காயம், சிராய்ப்பு, உறுப்பு பகுதியில் ரத்தம் வடிதல் போன்றவை காணப்படும். அவசரத்திலும், பயத்துடனும் அந்த பாதகர்கள் செயல்படுவதால் குழந்தைகள் காயம் அடைந்துவிடுகின்றன.

பலாத்காரத்திற்கு உள்பட்ட குழந்தைகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப் படுகின்றன. பால்வினை நோய் மற்றும் காயங்களை சிகிச்சையால் குணப்படுத்திவிடலாம். ஆனால் மனநிலை பாதிப்பால் பிற்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். வயதுக்கு மீறிய பாலியல் மாற்றங்கள், மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, எதைக் கண்டாலும்- யாரைக் கண்டாலும் பயம், தனிமை மீது விருப்பம், உணவில் நாட்டமின்மை, போதை மருந்துகளுக்கு அடிமையாகுதல், வீட்டை விட்டு ஓடுதல், படிப்பில் ஆர்வமின்மை, பாலியல் தொழில் ஆர்வம் போன்றவை முக்கியமான எதிர்கால பாதிப்புகளாகும்.

மக்கள் விழிப்புணர்வு கொண்டால் மட்டுமே இந்த பாதகத்தை தடுக்கவோ, குறைக்கவோ முடியும். சமூகத்தின் அடிப்படையில் இருந்து இந்த பணியை தொடங்கவேண்டும். பள்ளி கள், கல்லூரிகள், மருத்துவ துறை, தன்னார்வ அமைப்புகள், அரசு அமைப்புகள் ஆகிய அனைத்தும் இணைந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும். தங்கள் தம்பி, தங்கை களை காத்து கண்காணிக்க மூத்த குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். குழந்தைகளின் உடலில் எந்தெந்த பகுதிகளில் தொட்டால் அது நல்ல தொடுதல் என்றும்- எந்தெந்த பகுதிகளில் தொட்டால் அது தவறான அணுகுமுறை என்றும் சொல்லித்தர வேண்டும். இதை சரியாக சொல்லித்தர அம்மாக்களாலே முடியும்.

மற்றவர்களின் பிரச்சினைக்குரிய செயல்கள் பற்றியோ, பிரச்சினைக்குரிய நபர்கள் பற்றியோ குழந்தைகள் கூறினால் அதை அலட்சியப்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்து டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். யாரையும் நம்பி குழந்தைகளை விட்டுச்செல்லக்கூடாது. பொது இடங்களில் குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த பாதகத்தில் ஈடுபடு கிறவர்கள் நீதியின் முன்னே நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் ஒரு தனிநபர் பிரச்சினையோ, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்து பிரச்சினையோ இல்லை. இது சமூக பிரச்சினை. அதனால் எல்லோரும் ஒன்றுபட்டு, ஒத்துழைத்து இதை தடுக்கவேண்டும்.

கட்டுரை: டாக்டர் என்.உஸ்மான் M.D., D.V., Ph.D., 
(பாலியல் நோய் நிபுணர் மற்றும்
உலக சுகாதார நிறுவன ஆலோசகர்) சென்னை.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 3,418 other followers