Category Archives: வணிகம்

பிபிஎஃப் Vs இஎல்எஸ்எஸ் எதில் அதிக வருமானம்?

இந்த ஆண்டின் பட்ஜெட்டில் வருமான வரிப் பிரிவு 80சி வரிச் சலுகை உச்சவரம்பு ரூ.1  லட்சத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இது நடுத்தர வருமானப் பிரிவினருக்கு மகிழ்ச்சியான செய்தி. வருமான வரிச் சலுகை பெற பல முதலீட்டு வழிகள் இருந்தாலும் முதலீட்டாளர்கள் அதிகம் விரும்புவது பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் மற்றும் இஎல்எஸ்எஸ் திட்டங்களைத்தான். 
இந்த இரண்டுக்கும் அடிப்படையான வித்தியாசம் என்ன?

பிபிஎஃப் என்பது அரசின் உத்திரவாத முள்ள திட்டம். இதன் தற்போதைய ஆண்டு வட்டி விகிதம் 8.7%. இஎல்எஸ்எஸ் என்பது மியூச்சுவல் ஃபண்டுகளால் வழங்கப்படும் பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டம். இவை இரண்டுக்கும் வேறு வித்தியாசங்கள் என்று பார்த்தால், பிபிஎஃப் முதலீட்டை 15 வருட காலத்துக்கு திரும்ப எடுக்க முடியாது. என்றாலும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 6-ம் ஆண்டிலிருந்து பணத்தை எடுக்க வழி உண்டு. ஆனால், இஎல்எஸ்எஸ் என்பது 3 வருட லாக்-இன் திட்டம். அதாவது, 36 மாதங் களுக்குப்பின் பணத்தைத் திரும்ப எடுத்துவிடலாம்.
சரி, இப்படி வித்தியாசங்கள் இருக்கையில் எதில் முதலீடு செய்து வரிச் சலுகை பெறுவதோடு, அதிக வருமானம் ஈட்டலாம் என்பதுதானே உங்களின் கேள்வி.  உங்கள் கேள்விக்கான விடையை கீழ்க்காணும் உதாரணத்தின் மூலம் தெளிவாகப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

Continue reading →

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு…

நிலத்திலும், தங்கத்திலும், வீட்டிலும், ஃபிக்ஸட் டெப்பாசிட் களிலும் மட்டுமே முதலீடு செய்துவந்த நம்மில் பலருக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் இன்றும் ஒரு புதிய முதலீடாகவே உள்ளது. பங்குச் சந்தை தற்போது நல்ல நிலையில் இருப்பதால், இனிவரும் ஆண்டுகளிலும் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் முதலீட் டாளர்களின் கவனம் மியூச்சுவல் ஃபண்டுகளின் பக்கம் திரும்பியுள்ளது. இந்தத் தருணத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதைக் காண்போம்.

முதலீட்டுக் காலம்!

Continue reading →

`கமாடிட்டி’ சந்தையில் தங்க வர்த்தகம்

 

 

Finace

தங்கத்தை ஆபரணமாக வாங்கி, விற்பதன் மூலம் ஏற்படும் செய்கூலி, சேதார இழப்புகளைக் கணக்கிட்டால் ஆபரணமாக தங்கமë வாங்குவது சரிப்பட்டு வராது என்று சிலர் நினைக்கின்றனர். அவர்கள், தங்கத்தில் முதலீடு செய்ய `ஈ.டி.எப்’ எனப்படும் `எக்சேஞ்ச் டிரேடட் பண்ட்’கள் (Exchange Traded Fund ETF) பக்கம் போகின்றனர். வேறு சிலர், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஊக வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.
வேறு எந்த முறையில் தங்கத்தில் முதலீடு செய்தாலும் முழுத் தொகையையும் செலுத்தியே அதற்கான தங்கத்தை வாங்க முடியும். ஆனால் ஊக வணிகத்தில் 100 கிராம் தங்கம் வாங்க விரும்பினால் அன்றைய விலையில் சுமார் 5 முதல் 7 சதவீதம் மட்டும் கட்டினால் போதும்.
உதாரணமாக, ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் தற்போதைய விலை ரூ. 2,700 என்று வைத்துக்கொள்வோம். அப்போது 100 கிராம் தங்கம் வாங்க 2,70,000 ரூபாய் வேண்டும். ஆனால் ஆன்லைன் பொருள் சந்தையில் (Online Commodity Market) சுமார் 5- 7 சதவீதம் மட்டும், அதாவது அதிகபட்சமாக வெறும் 18,900 ரூபாய் மட்டும் மார்ஜின் தொகையாக செலுத்தினால் போதும். 100 கிராம் தங்கம் உங்கள் `டீமேட்’ கணக்கில் (Demat Account) வரவு வைக்கப்பட்டு விடும்.
வாங்கிய பின்னர் ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் விலை ஏறினால் உங்களுக்கு100 x 50= 5,000 ரூபாய் லாபம். தரகுக் கட்டணம், முத்திரைத் தாள் கட்டணம் போன்ற செலவுகளுக்கு 0.05% என்று வைத்துக்கொண்டால், அதிகபட்சமாக 300 ரூபாய் ஆகலாம்.
அப்போது அந்த 300 ரூபாய் போக, 4,700 ரூபாய் லாபம். வாங்கிய அன்றே விலை ஏறினாலும் விற்றுவிட்டு வெளியே வரலாம். ஆக 18,900 ரூபாய் முதலீட்டில் 4,700 ரூபாய் லாபம்.
இவ்வளவு சுலபமாக பணம் சம்பாதிக்க வழியா என்று வியக்க வேண்டாம். இருபுறமும் கூர்மையான கத்தி போன்றது ஊக வணிகம். ரூ. 18,900 மார்ஜின் மணி (Margin Money) செலுத்தி காலையில் 100 கிராம் தங்கம் ஊக வணிகத்தில் வாங்குவதாக வைத்துக்கொள்வோம். மாலையில் ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் குறைந்தால், ரூ. 5,000 நஷ்டம்.
தங்கம்தான் அடிக்கடி விலை ஏறிக்கொண்டே இருக்கிறதே, அதனால் வாங்கிப் போடலாம், இறங்கினால் பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியமாக `ரிஸ்க்’ எடுக்க நினைப்பவரா நீங்கள்? மார்ஜின் தொகையுடன் விலை குறைந்தால் ஏற்படும் இழப்புக்கு ஈட்டுத் தொகையாக கொஞ்சம் பணத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும்.
100 கிராம் தங்கம் வாங்க ரூ. 30 ஆயிரம் உங்கள் கையில் இருந்தால், இன்று விலை குறைந்தாலும் நாளை விலையேறும்போது விற்று நஷ்டத்தைத் தவிர்ப்பதுடன், லாபத்துடன் வெளியே வரலாம்.

தங்கத்தின் தேவை அதிகரிப்பதற்குக் காரணம்!

 

இந்திய நகைச் சந்தை
தங்க நகைகளுக்கு உலகிலேயே பெரிய சந்தையாக இநëதியா விளங்குகிறது. கடந்த ஆண்டில் இந்தியா இறக்குமதி செய்த ஆயிரம் டன் தங்கத்தில் பெரும் பகுதி, தங்க நகை செய்வதற்கே சென்றுள்ளது.
உலக தங்க கவுன்சில் மேற்கொண்ட ஓர் ஆய்வில், இந்தியப் பெண்களில் 75 சதவீதம் பேர் தாங்கள் எப்போதும் புதிய டிசைன் நகைகளைத் தேடிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
`டிமாண்டின்’ பின்னணியில்…

இந்தியாவில் தங்கத்துக்கான `டிமாண்டின்’ பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. அதில், பெருமைக்காக தங்க நகை வாங்குவது ஒரு முக்கியக் காரணம். அடுத்து, 50 சதவீதத்துக்கு அதிகமான நகைகள் திருமணத்துக்காக வாங்கப்படுகின்றன.
எப்போதுமே தீபாவளியை ஒட்டிய பண்டிகைக் காலத்தில் தங்கத்தின் விற்பனை சூடு பிடிக்கிறது. அதேபோல தங்க விற்பனை உச்சத்தை எட்டும் நேரம் மே மாதத்தில் அட்சய திருதியை.
தங்கம் வாங்குவதற்கான தூண்டுதலாக அதன் மதிப்பு, ஒரு சொத்தைப் பாதுகாக்கும் உணர்வு, தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே செல்வது போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.
முக்கியமாக, தங்கத்தையும், இந்தியத் திருமணங்களையும் பிரிக்க முடியாது. நாட்டில் வருடாந்திர தங்க நகை விற்பனையில் பாதிக்கு மேல் திருமணங்களால் நடக்கிறது.
இந்திய மக்கள் தொகையில் சுமார் 50 சதவீதம் பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். அடுத்த பத்தாண்டுகளில் நாட்டில் சுமார் 15 கோடி திருமணங்கள் நடைபெறும் என்று மதிப்பிடப்படுகிறது. எனவே, உலக தங்க கவுன்சிலின் மதிப்பீட்டின்படி, திருமணங்கள் காரணமாக நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 500 டன் தங்க நகை விற்பனை நடைபெறும். குடும்பங்களிடையே அன்பளிப்பாகக் கொடுக்கப்படும் தங்க நகை மூலம் மேலும் 500 டன் தங்கம் விற்பனையாகும்.
தங்கமும் நாட்டின் பொருளாதாரமும்
இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறைக்கு (ஏற்றுமதி- இறக்குமதிக்கு இடையே உள்ள இடைவெளி) அதிகரிக்கும் தங்க இறக்குமதி ஒரு முக்கியக் காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
2011- 2012-ம் ஆண்டில் நாட்டின் தங்க இறக்குமதி அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 சதவீதத்துக்கு மேல் எகிறி, 60 பில்லியன் டாலர்களாகியுள்ளது. அதன் மூலம் நடப்பு வர்த்தகப் பற்றாக்குறை `சாதனை அளவாக’ 78.2 பில்லியன் ஆகியுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் பார்த்தால் 4.2 சதவீதம். தங்க இறக்குமதியைக் குறைப்பதற்காகவே அதற்கான இறக்குமதி வரியை அரசு உயர்த்தியுள்ளது.
ஆக, நமது தங்க மோகம், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் வல்லுநர்களையே நிறைய யோசிக்க வைக்கிறது.

தடுமாற வைக்கும் தங்கம்!

 

Golds

`கிடுகிடு’வென்று உச்சத்தை எட்டியிருக்கிறது தங்கம். ஆனால் இந்த விலையிலும் தங்கம் தங்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. இனி தங்க நகை வாங்குவதே காஸ்ட்லியான கனவாகி விடுமோ என்று தயங்கி, தேங்கி நிற்கிறார்கள் நடுத்தர மக்கள்.
தங்கத்தின் எவரெஸ்ட் சிகர உயர்வின் பின்னணி, தங்கத்தில் முதலீடு செய்வது போன்றவை குறித்த விஷயங்களைப் பார்ப்போம்…
விலை உயர்வு ஏன்?
தங்கம் பொதுவாகப் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. அதிகம் படிக்காதவர்கள் கூட தங்கத்தில் முதலீடு செய்வதில் நல்லது என்று புரிந்துவைத்திருக்கிறார்கள். அதிகமான பணவீக்கமும், நிலையில்லாத பங்குச் சந்தையும் தங்கத்தை வரலாறு காணாத விலை உயர்வை எட்ட வைத்திருக்கின்றன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தங்கம் 35 சதவீதம் விலை உயர்ந்திருக்கிறது. இதற்கு நமது மக்கள் மட்டுமின்றி, அமெரிக்க, ஐரோப்பிய நாட்டினரும் தங்கத்தில் முதலீடு செய்யக் காட்டத் தொடங்கியிருக்கும் ஆர்வம் ஒரு முக்கியக் காரணம்.

GoldLady

பிற முதலீடுகள், வங்கி டெபாசிட்கள் போலில்லாமல் தங்கம் ஒரு பொருளாக இருக்கிறது. அதனால் இது கரைந்து போகாது என்ற நம்பிக்கை உள்ளது. வழிவழியாக, கூடுதல் பணத்தைப் போடும் பொருளாகத் தங்கம் உள்ளது.
அமெரிக்கப் பின்னணி…
அமெரிக்க `பெடரல் ரிசர்வ்’ அமைப்பானது, ஒரு முக்கியமான வங்கிக் கூட்டத்தில், புதிய நிதித்துறை ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவிக்க முடிவு செய்தது. அதுதான் தங்க விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று ஓர் ஊகம் நிலவுகிறது. புதிய நிதி ஊக்குவிப்புத் திட்டத்தால், சந்தைக்குள் மேலும் அதிகப் பணம் செலுத்தப்படும். அதன் விளைவாகப் பணவீக்கம் அதிகமாகி, பொருட் களின் விலை உயரும். எனவேதான் மக்கள் தங்கள் இருப்பு மதிப்புக் கரைந்து போகாமல் இருக்க தங்கத்தை வாங்குகிறார்கள், மேலும் வாங்குவார்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்தியாவில்…
ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை தங்க இறக்குமதியும், விற்பனையும் குறையவே செய்யும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். நிலையற்ற உலகப் பொருளாதாரம், `பலவீனமான’ ரூபாய், பருவமழை ஏமாற்றம், நாட்டின் பொருளாதார மந்த நிலை ஆகியவற்றை அவர்கள் காரணமாகக் கூறுகிறார்கள். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 12 சதவீதத்துக்கு மேல் மதிப்பு சரிந்துள்ள ரூபாய், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலையை மேலும் விசிறிவிட்டுள்ளது. ரூபாய் மதிப்புக் குறையும்போது தங்கம் மட்டுமல்ல, இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களின் விலையும் கூடுகிறது.
சரிந்த இறக்குமதி
இந்த ஆண்டின் ஏப்ரல்- ஜூன் காலகட்டத்தில் நாட்டின் தங்க இறக்குமதி 56 சதவீதத்துக்கு மேல் குறைந்து 131 டன்கள் ஆகியுள்ளது. அண்மையில் உலக கோல்டு கவுன்சில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரியவந்திருக்கும் தகவல் இது. விலைவாசி மேலும் கூடக் கூட, உலகின் பெரிய தங்க வாடிக்கையாளர்களான இந்தியர்கள் தங்கத்தை மேலும் தள்ளிவைப்பார்கள் என்று நிதி அலசல் நிபுணர் கள் கூறுகிறார்கள்.

Golds

மழையும் காரணம்
இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், அதாவது சுமார் 80 கோடிப் பேரின் பொருளாதாரம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விவசாயத்தைச் சார்ந்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு தாமதமான, பற்றாக்குறையான பருவமழை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புற மக்களின் செலவழிப்பு குறைந்துள்ளது.
விவசாயத்தில் குறைந்துபோன வருவாயும், அதிகரித்த பணவீக்கமும் கிராமப்புற மக்களை தங்கம் போன்ற முதலீடுகளை அதிகம் நாட விடாமல் செய்துள்ளன. நம் நாட்டில் விற்பனையாகும் தங்க நகைகளில் 60 சதவீதத்தை வாங்குபவர்கள் கிராமப்புற மக்களே என்ற நிலையில் இது முக்கியமான தாக்கம் ஆகும்.

எதைப் பொறுத்து கடன் கொடுப்பார்கள்?

 

`நானும் பாங்க் பாங்கா ஏறி இறங்குறேன்… யாரும் கடன் கொடுக்க மாட்டேங்கிறாங்க…’ என்று சிலர் புலம்புவார்கள்.
அவர்கள், `கடன் நிலை தகவல் அறிக்கை’யின் (`கிரெடிட் இன்பர்மேஷன் ரிப்போர்ட்’- சுருக்கமாக `சி.ஐ.ஆர்.’) அடிப்படையில்தான் ஒருவருக்குக் கடன் கொடுப்பதா, இல்லையா என்று வங்கிகள் தீர்மானிக்கின்றன என்பதை அறியாதவர்கள்.
வங்கிகள், நிதி நிறுவனங்கள் சார்பில் `சி.ஐ.ஆர்.’கள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கடன் கொடுப்பது குறித்து முடிவெடுப்பதில் `சி.ஐ.ஆர்.’ தான் வங்கிகளுக்கு வேதம். ஆனால் இதன் முக்கியத்துவம் குறித்து மக்கள் மிகச் சமீபமாகத்தான் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கேற்பத் தங்கள் வங்கி நிலை, நிதித் தொடர்புகளைப் பராமரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
கடன் நிலை தகவல் அறிக்கையைப் புரிந்துகொள்வதன் மூலம், எந்த நேரத்தில் கடனுக்கு விண்ணப்பிப்பது, கடன் ஒப்புதலுக்கான வாய்ப்பை எப்படி அதிகரித்துக்கொள்வது எனத் தெரிந்துகொள்ளலாம். எனவே, கடன் கொடுப்பவர்கள் இந்த அறிக்கையில் முக்கியமாக எவற்றைக் கவனிக்கிறார்கள் என்று பார்க்கலாம்…
தவணை செலுத்திய பட்டியல் (பேமன்ட் ஹிஸ்டரி)
உங்களுக்கான சி.ஐ.ஆரில் கணக்குப் பிரிவில் இது இடம்பெறும். இதுவரை செலுத்தியிருக்கும் தவணைத் தொகைகள், மாத, வருட விவரங்கள் இங்கு இடம்பெற்றிருக்கும்.
கடைசி மாதத்தில் தவணைத் தொகை எத்தனை நாள் தாமதத்தில் (அப்படி இருந்தால்) செலுத்தப்பட்டிருக்கிறது என்ற விவரமும் இருக்கும். அதுகுறித்து, `000′ தவிர வேறு ஏதாவது குறிப்பிட்டிருந்தால் கடன் கொடுக்கும் நிறுவனம் `நெகட்டிவாக’ கருதும். 3 மாதங்கள் வரை இந்தப் பட்டியல் இருக்கும். சமீபகால மாதங்கள் முதலிலும், பழைய மாதங்கள் அதைத் தொடர்ந்து வரிசையாகவும் இடம்பெற்றிருக்கும்.
நடப்பு கடன் இருப்பு
சி.ஐ.ஆர். கணக்குப் பிரிவில் காணப்படும் இன்னொரு விவரம், நீங்கள் பெற்றுள்ள பல்வேறு கடன்களில் செலுத்த வேண்டிய தொகைகளைச் சுட்டிக் காட்டும். அதன் மூலம் உங்கள் கடன் சுமையை உணர முடியும். ஒவ்வொரு கடனிலும் செலுத்த வேண்டிய தொகையைக் கூட்டுவதன் மூலம், தற்போது உங்களால் எவ்வளவு தவணை செலுத்த முடியும் என்று புதிதாகக் கடன் கொடுப்பவர்கள் கணக்கிடுவார்கள். அப்போது அவர்கள் உங்களின் நடப்பு வருமானத்தையும் கணக்கில்கொள்வார்கள். இயல்பாகவே, நீங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையின் அளவு குறையும்போது, புதிய கடனுக்கான ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
புதிய கடன் வசதிகள்
உங்களுக்குச் சமீபமாக புதிய கிளைக் கடன் வசதிகள் அளிக்கப்பட்டிருந்தால் மாதாந்திர தவணைத் தொகையும் அதிகரித்திருக்கும். அப்படி ஏதாவது கிளைக் கடன் அளிக்கப்பட்டிருக்கிறதா என்று புதிதாகக் கடன் கொடுப்பவர்கள் கவனிப்பார்கள். எனவே நீங்கள் பெற்ற ஒரு புதிய கடன் வசதி, மேலும் ஒரு கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பாதிப்பை ஏற்படுத்தும்.
விண்ணப்பித்த விவரங்கள்
நீங்கள் சமீபமாக பல கடன்களுக்கு விண்ணப்பித்திருந்தால், புதிதாகக் கடன் பெறும் வாய்ப்புக் குறையும். உங்களின் அந்தப் பழக்கம், நீங்கள் `கடன் பசி’யில் இருக்கிறீர்கள் என்பதையும், கடன் பெற வேண்டிய தலைபோகிற அவசரத்தில் நீங்கள் உள்ளதையும் காட்டிக் கொடுத்துவிடும்.
கடன் கொடுப்போர், உங்கள் கடன் விண்ணப்பத்தை அலசும்போது ரொம்பக் கவனமாக இருப்பார்கள். எனவே, நீங்கள் ஒன்றிரண்டு வருடங்களில் வீட்டுக் கடன் அல்லது வேறு கடன் பெறத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால், வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை உங்கள் சி.ஐ.ஆர். நிலையைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.
கன்னாபின்னாவென்று கடன் பெறும் வழக்கத்தை வளர்த்துக்கொள்ளாமல் இருப்பது ரொம்பவே நல்லது.

`தனிநபர் கடன்’ பெற நினைக்கிறீர்களா?

 

`தனிநபர் கடன் (பெர்சனல் லோன்) வேண்டுமா?’ என்று கேட்டு உங்களுக்கு இதுவரை செல்போன் அழைப்பு வரவில்லை என்றால் அதிசயம்.
அந்த மாதிரி அழைப்பின்போது, `அதெல்லாம் வேண்டாம்’ என்று நீங்கள் பட்டென்று செல்போனை அணைத்திருந்தாலும், சம்மதித்திருக்கலாமோ என்ற லேசான எண்ணமும் உள்ளுக்குள் ஓடியிருக்கலாம். பணத் தேவை இல்லாதவர் யார்?
`பாதுகாப்பற்ற கடன்’ என்பதால், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் அதிகம்.
நீங்கள் தனிநபர் கடன் பெறுவது என்று முடிவெடுத்தால் எந்தெந்த அடிப்படையான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இப்போது பார்க்கலாம்…

* முதலாவது, எந்த நிலையில் தனிநபர் கடனுக்குப் போவது? நீங்கள் கடன் பெறும் வகையில் சொத்தோ, `செக்யூரிட்டி’யோ இல்லாதபோது. உதாரணத்துக்கு, நீங்கள் உங்களுக்குச் சொந்தமான ஒரு வீட்டை, வீட்டுக் கடனுக்கான `செக்யூரிட்டி’யாக கொடுத்திருந்தால், மறுபடி அதை வைத்துக் கடன் பெற முடியாது.
* மாதாந்திரத் தவணையை தவறாது செலுத்த முடியும் என்றால் மட்டுமே தனிநபர் கடனுக்கு முயற்சியுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் கடன் சுழலுக்குள் சிக்கிக்கொள்வீர்கள்.
* ஓர் அவசரநிலை, அதற்காக உடனடியாகப் பணம் தேவைப்படுகிறது என்கிறபோது. அந்த மாதிரியான வேலைகளில் நீங்கள் தனிநபர் கடன் குறித்து யோசிக்கலாம். காரணம், இக்கடனுக்கு குறைவான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் போதும். `பிராசசிங்’ நேரமும் குறைவு.
* உடனடியாக முடிக்க வேண்டிய அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் தனிநபர் கடனை நாடுவது என்பதில் உறுதியாக இருங்கள். உங்களின் கடைசி வழியாக மட்டுமே இது இருக்க வேண்டும். ஆனால் `கிரெடிட் கார்டு’ மூலம் பணம் எடுப்பதற்கு முன்னால் தனிநபர் கடனைப் பற்றி யோசிக்கலாம். உங்களின் `ஜாலியான’ தேவைகளான சூதாடுவது, சுற்றுலா செல்வது, கார் வாங்குவது போன்றவற்றுக்குத் தனிநபர் கடன் பெறுவது உங்களை சிக்கலில் ஆழ்த்திவிடும்.
தனிநபர் கடன் என்றதும் எல்லோருக்கும் இயல்பாகவே அதிக வட்டி ஞாபகம் வரும். ஆனால் தனிநபர் கடனில் மேலும் பல கட்டணங்களும் மறைந்திருக்கின்றன. அவையும் சேர்ந்ததுதான் தனிநபர் கடன்.
எனவே, பிற கட்டணங்கள், மறைமுகக் கட்டணங்களை சம்பந்தப்பட்ட வங்கியில் நன்றாக விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். அதை விடுத்து பின்னர், இவை பற்றியெல்லாம் முன்பே ஏன் தெரிவிக்கவில்லை என்று வங்கியுடன் மல்லுக்கு நிற்காதீர்கள்.

சொத்து அடமானக் கடன் பற்றித் தெரியுமா?

 

நமது நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்பவை கடன்கள். சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் நமது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், பொருளாதார இறக்க நிலையில் இருந்து மீள்வதற்கும் கடன்கள் கைகொடுக்கும்.
அந்த வகையில்தான் வருகிறது, சொத்து அடமானக் கடன். இதுவும் வீட்டுக் கடன் வாங்குவது போலத்தான்.
உயர்கல்வி பயில்வது, தனக்கு அல்லது பிள்ளைகளுக்குத் திருமணம் செய்வது, வீட்டைப் புதுப்பிப்பது, மருத்துவச் சிகிச்சை மேற்கொள்வது, தொழிலை விரிவாக்கம் செய்வது, வாகனம் வாங்குவது என பல்வேறு தேவைகளுக்கு வீட்டை அடமானம் வைத்துக் கடன் பெற்றுக்கொள்ளலாம்.
வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு, வர்த்தகக் கட்டிடங்களுக்கான கிரயப் பத்திரங்களை அடமானமாக வைத்து இக்கடனைப் பெறலாம். மாதச் சம்பளக்காரர்கள், சுயதொழில் செய்பவர்கள் என அனைவருக்கும் இக்கடன் கிடைக்கும்.

நீங்கள் அடமானம் வைக்கும் சொத்து, அது அமைந்திருக்கும் பகுதியின் உள்ளாட்சி அமைப்பின் அங்கீகாரத்தைப் பெற்றதாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
இன்னொரு விஷயம், சொத்து மதிப்பு முழுமைக்கும் கடனை எதிர்பார்க்கக் கூடாது. சொத்து மதிப்பில் 50 முதல் 70 சதவீதம் வரை கடன் கிடைக்கும்.
சொத்து அடமானக் கடன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனம், பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு இக்கடனை வழங்கும். அதாவது கடன் கோருபவரின் மாத வருமானம், திரும்பச் செலுத்தும் திறன், சொத்தின் மதிப்பு ஆகியவை கடன் தொகையை நிர்ணயிக்கும் காரணிகளாக அமையும். சொத்து அடமானக் கடனை அதிகபட்சம் 15 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தலாம். இந்தக் காலம் வங்கிக்கு வங்கி வேறுபடும்.
இந்த வேளையில் உங்களுக்கு இன்னொரு சந்தேகம் எழக்கூடும். அது, பூர்வீகச் சொத்தை அடமானமாக வைத்துக் கடன் பெற முடியுமா என்பது. அந்த வகையிலும் தாராளமாகக் கடன் பெற முடியும். ஆனால் அந்தச் சொத்தில் உங்களுக்கு உரிமை இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டியது அவசியம். மேலும், சொத்து பிரிக்கப்படவில்லை என்றால், இதர சட்டப்படியான வாரிசுகளும் சேர்ந்து கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

சிங்கிள் பிரீமியம்’ பாலிசிகள் வீழ்ச்சி!

 

`சிங்கிள் பிரீமியம்’ பாலிசிகளின் விற்பனை வெகுவாகக் குறைந்து வருகிறது. பொதுவாக `ரிஸ்க்’கானவையாகக் கருதப்படும் சிங்கிள் பிரீமியம் பாலிசிகள் மீதான கவனத்தை காப்பீட்டு நிறுவனங்களும் குறைத்துக் கொண்டிருக்கின்றன. மாறாக, வழக்கமான பிரீமியம் பாலிசிகள் மீது கூடுதல் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன.
காப்பீட்டுக் காலம் முழுமைக்கும் ஒரே ஒரு முறை பிரீமியம் செலுத்துவதுதான் `சிங்கிள் பிரீமியம் பாலிசி’ எனப்படுகிறது. மற்ற காப்பீட்டுத் திட்டங்களுடன் ஒப்பிடும்போது இவற்றுக்கான பிரீமியம் அதிகமே.
`காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்’ (இர்டா) தெரிவிக்கும் தகவல்படி, 2012 நிதியாண்டில் சிங்கிள் பிரீமியம் பாலிசிகளின் விற்பனை 35 சதவீதம் அளவுக்குக் குறைந்து ரூ. 51 ஆயிரத்து 625 கோடியாகி உள்ளது.
இத்துறை வல்லுநர்கள் மேலும் வீழ்ச்சி இருக்கும் என்கிறார்கள்.

`முன்பு சிங்கிள் பிரீமியம் பாலிசிகள் நல்ல வளர்ச்சி கண்டன. ஆனால் தற்போது காப்பீட்டு நிறுவனங்கள் ரெகுலர் பிரீமிய வகைகளிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றன. இந்த ஆண்டு மே மாதத்தில் 38 சதவீத பாலிசிகளே சிங்கிள் பிரீமிய வகையாக இருந்தன. இந்த ஆண்டு இறுதியில் இது மேலும் சறுக்கி, 25 சதவீதமாகும்’ என்று காப்பீட்டுத் துறை சார்ந்த நிபுணர்களான அனுபவ் அடால்கா, ராஜீவ் வர்மா ஆகியோர்
கூறுகின்றனர்.மற்றொரு தனியார் காப்பீட்டு நிறுவனத்தைச் சேர்ந்த சாம்பசிவ ராவ் கூறுகையில், “சிங்கிள் பிரீமியம் பாலிசிகளின் பங்கு சீராகக் குறைந்து கொண்டே வருகிறது. இது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனங்களும் இதில் தற்போது ஆர்வத்தைக் குறைத்துக் கொண்டிருக்கின்றன. அதற்குக் காரணம், ரெகுலர் பிரீமியம் வகைகள் தொடர்ந்து வருவாய் அளிக்கின்றன என்றால், சிங்கிள் பிரீமியம் வகைகள் ஆண்டுக்கு ஒரே வருவாயாக அமைகின்றன” என்கிறார்.
சிங்கிள் பிரீமிய வகைகளில் அதிகக் கவனம் செலுத்துவது `ரிஸ்க்’கானது, நிலையானது அல்ல என்று ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களை ஏற்கனவே காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்திருந்தது.
அப்போது, சிங்கிள் பிரீமியம் வகைகளின் கிடுகிடு வளர்ச்சி, ஒழுங்குமுறை ஆணையத்தை யோசிக்க வைத்தது. காரணம், மொத்த பிரீமிய வருவாயில் சிங்கிள் பிரீமியத்தின் பங்கு 45 சதவீதம் முதல் 50 சதவீதமாக இருந்தது.
சிங்கிள் பிரீமியம் பாலிசிகள் தொடர்பான `இர்டா’வின் எச்சரிக்கையை தற்போது ஏற்றுக்கொண்டிருக்கிற ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், அந்த பாலிசிகளின் விற்பனைக்குக் கடிவாளம் போட ஆரம்பித்திருக்கின்றன.
`யூனிட்’ சார்ந்த காப்பீட்டுத் திட்டங்களின் (யூலிப்) விற்பனைச் சரிவும், சிங்கிள் பிரீமிய பாலிசி விற்பனை வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
காப்பீட்டுத் துறையைச் சார்ந்த ஆயுள் காப்பீட்டு கவுன்சில் வெளியிட்டுள்ள தகவல்படி, 2011-12-ம் நிதியாண்டை முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது மொத்த பிரீமிய வருவாய் 3 சதவீதம் குறைந்து ரூ. 2 லட்சத்து 83 ஆயிரத்து 315 கோடியாகி இருக்கிறது.
அதேவேளையில், `யூலிப்’ திட்டங்கள் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2011-12-ல் 67 சதவீதம் அளவுக்குச் சரிவடைந்து ரூ. 17 ஆயிரத்து 445 கோடியாகி இருக்கின்றன.
“யூலிப் மற்றும் பென்ஷன் திட்டங்களில்தான் வாடிக்கையாளர்கள் அதிகம் சிங்கிள் பிரீமியத்தில் ஆர்வம் செலுத்தினார்கள். ஆனால் யூலிப் திட்டங்கள் பெரிதாக கைகொடுக்காத நிலையிலும், பென்ஷன் திட்டங்களும் பிரகாசிக்காத நிலையிலும் சிங்கிள் பிரீமியம் பாலிசிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன” என்று காப்பீட்டுத் துறை வல்லுநர்கள் விளக்கிக் கூறுகின்றனர்.

காப்பீடு… கவனம்!

நம்மில் சிலர், காப்பீட்டு விண்ணப்பப் படிவத்தில் கொடுக்கும் தகவல் குறித்து அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. அதனால் பெரிதாக என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடப் போகிறது என்ற அலட்சியம். அது சரிதானா?

உதாரணத்துக்கு இதைப் பாருங்கள்… 3 லட்ச ரூபாய் வருடாந்திர வருமானம் கொண்டவர் ராஜேஷ். இவர் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களில் மொத்தமாக ரூ. 25 லட்சத்துக்குக் காப்பீடு செய்திருக்கிறார். மீண்டும் ரூ. 1 கோடிக்கு காப்பீடு பெறுவதற்கு ஒரு புதிய டெர்ம் இன்சூரன்ஸுக்கு ராஜேஷ் விண்ணப்பித்தார்.

அப்போது, மேலும் கூடுதலாக ரூ. 50 லட்சத்துக்கு மட்டுமே காப்பீடு பெற முடியும் என்று கூறி ராஜேஷின் விண்ணப்பத்தைக் குறிப்பிட்ட காப்பீட்டு நிறுவனம் நிராகரித்து விட்டது.

ஏன் அவ்வாறு செய்தது?

ராஜேஷ் தனது பணிவாழ்க்கைக் காலம் வரை (58 வயது) வாழ்வார் என்றால் அவர் மொத்தமாக ரூ. 75 லட்சம் சம்பாதிப்பார். அதாவது, ரூ. 3 லட்சம் * 25 ஆண்டுகள். ஆண்டுதோறும் ராஜேஷின் சம்பளம் உயரும் என்றாலும், வருடங்கள் குறையும் என்பது போன்ற காரணங்களால் உத்தேசமாகத்தான் இந்தக் கணக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ராஜேஷ் ஏற்கனவே ரூ. 25 லட்சம் காப்பீடு பெற்றிருக்கிறார். புதிதாக ரூ. 1 கோடிக்கு காப்பீடு பெற்றால் அவரது மொத்தக் காப்பீடு ரூ. 1.25 கோடியாக உயரும். ராஜேஷ் உயிரோடு இருந்தால் எவ்வளவு சம்பாதிப்பாரோ அதைவிட அதிகமாக அவரது மரணத்துக்குப் பின் பெறும் நிலை ஏற்படும்.

எளிமையாகக் கூற வேண்டும் என்றால், ராஜேஷின் வாரிசுதாரர்கள் அவர் உயிரோடு இருந்தால் எவ்வளவு பெறுவார்களோ, அதைவிட அதிகமாக அவர் இறந்தால் பெறுவார்கள். இந்த `லாஜிக்’கின் அடிப்படையில்தான் புதிய காப்பீட்டு நிறுவனம் ரூ. 1 கோடிக்கான அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.

நீங்கள் லாபம் அடைவதற்கான அமைப்பல்ல, காப்பீட்டுத் திட்டம். ஒருவர் உயிரோடு இருப்பதைவிட, காலமானால் அதிகப் பயன் கிட்டும் என்ற கருத்து ஏற்பட்டால், காப்பீடு தவறாகப் பயன்படுத்தப்படலாம். காப்பீட்டுத் திட்டம் எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த அடிப்படை நோக்கமே அடிபட்டுப் போகும். ஏற்கனவே காப்பீடு தொடர்பான பல குற்றங்கள் உலகளவில் காணப்படுகின்றன.

ஒருவர் தான் ஏற்கனவே பெற்றிருக்கிற காப்பீடுகளை தெரிவிக்காமல் அல்லது ஒன்றிரண்டு காப்பீடுகளை மட்டும் தெரிவித்தால், அவர் காலமாகும்போது அவருக்கான `கிளெய்மை’ நிராகரிக்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உரிமை உண்டு. புதிய காப்பீடைப் பெறுவதே பலனளிக்காமல் போகும்.

எனவே உங்களின் காப்பீட்டு முகவர், அனைத்துத் தகவல்களையும் அளிக்கும்படி வற்புறுத்தினால் எரிச்சல்பட்டு, `எனக்குக் காப்பீடே வேண்டாம்’ என்று மிரட்டாதீர்கள். முழுமையான தகவல்கள் இல்லாமலே அவர் விண்ணப்பத்தை அனுப்பிவிடக்கூடும். ஆனால் அதனால் நஷ்டமடையப் போவது உங்கள் குடும்பம்தானே தவிர, முகவர் அல்ல.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 3,030 other followers