சங்கு சக்கர முருகன்

ஏப்ரல் 13ல் சர்வதாரி தமிழ் வருடம் பிறக்கிறது.
தமிழ்க்கடவுளான முருகனை இந்நாளில் வழிபடுவது விசேஷம். கும்பகோணம்
அருகிலுள்ள அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோயிலிலுள்ள முருகன்
கையில் சங்கு, சக்கரம் வைத்தபடி காட்சி தருகிறார். இவரை
தரிசிக்கச் செல்வோமா

தல வரலாறு: கைலாயம் சென்ற பிரம்மாவிடம்,
பிரணவ மந்திரத்தின் பொருளைக் கேட்டார் முருகன். அது தெரியாததால்,
அவரைச் சிறையில் அடைத்தார். பின்னர் படைப்புத்தொழில் கருதி அவரை
விடுவித்தார்.

வயதில் பெரியவரான பிரம்மாவை தண்டித்ததற்குரிய சாபத்தை அவர்
பெற வேண்டி வந்தது. அதற்காக சிவனை வேண்டி தவமிருந்தார். சிவன்
அவருக்கு காட்சி தந்து, தவறை யார் வேண்டுமானாலும்
சுட்டிக்காட்டலாம், ஆனால், தண்டிக்கும் அதிகாரத்தை
எடுத்துக்கொள்ளக் கூடாது, என்று அறிவுறுத்தினார்.

அவர் எந்த இடத்தில் முருகனுக்கு காட்சி தந்தாரோ அந்த
இடத்திலேயே லிங்கமாக எழுந்தருளினார். அவரை படிக்காசுநாதர் என
அழைத்தனர். அம்பாள் இங்கே அழகம்மை என்ற பெயரில் அருள்
செய்கிறாள்.

சங்கு, சக்கர முருகன்:
ஒருசமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, தேவர்கள் தங்களை
காக்கும்படி சிவனிடம் வேண்டினர். சிவன், அசுரர்களை அழிக்க
முருகனை அனுப்பினார். அப்போது திருமால் முருகனுக்கு தனது சங்கு,
சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களை
சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள
முருகன் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம்
மற்றும் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். இந்திர மயில்
மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவரை, கல்யாணசுந்தர சண்முக
சுப்பிரமணியர் என்று அழைக்கிறார்கள். இவரது திருவாசி ஓம் வடிவில்
அமைக்கப்பட்டுள்ளது. வள்ளி, தெய்வானை உடனிருக்கின்றனர்.
மகாலட்சுமிக்கும் சன்னதி இருக்கிறது.
நாயனார் அவதார
தலம்:
புகழ்த்துணை நாயனார் இத்தலத்தில் அவதரித்தவர்.
சிவபக்தரான இவர் வறுமையில் வாடினாலும், சிவபூஜையை தொடர்ந்து
செய்தார். ஒருசமயம் பசியால் உடல் தளர்ந்தபோது, கை தவறி தீர்த்த
குடத்தை லிங்கத்தின் மீது போட்டு மயக்கமுற்றார். அப்போது சிவன்
அவரது கனவில் தோன்றினார். சிவபூஜை தடையின்றி நடக்க அருளும்படி
வேண்டினார் புகழ்த்துணையார். சிவன் அவருக்கு தினமும் ஒரு
படிக்காசு தருவதாகவும், அதை வைத்து பூஜை செய்யும்படியும்
கூறினார். அதன்பின் புகழ்த் துணையார் பூஜையை தொடர்ந்தார்.
பலகாலம் இத்தலத்தில் சிவனுக்கு சேவை செய்த புகழ்த்துணையார்,
இங்கேயே முக்தியடைந்தார். நாயன்மார்களில் ஒருவராகவும் இடம்
பிடித்தார்.

சிறப்பம்சம்: சுந்தரர் தன் மனைவி பரவை
நாச்சியாருடன் இருக்கிறார். நவக்கிரக மண்டபத்தில் சூரியனும்,
சந்திரனும் கிழக்கு திசை நோக்கி இருப்பர். இங்கு இருவரும்
எதிரெதிரே பார்த்தபடி இருக்கின்றனர். எனவே இது அமாவாசை திதி
கொடுக்க உகந்த தலமாக இருக்கிறது.
இங்குள்ள விநாயகர் செல்வ
வரம் அருளும், சொர்ணவிநாயகர் என்ற பெயரில் உள்ளார்.
படிக்காசுநாதர் சன்னதியில் இரண்டு காசுகளை வைத்து வேண்டி, ஒன்றை
மட்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜிக்கின்றனர். இதனால்,
குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.
பிரகாரத்தில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர். முருகன்,
சிவனுக்கு குருவாக இருந்து பிரணவ உபதேசம் செய்த சுவாமிமலை தலம்,
இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.

திருவிழா: மாசிமகம், சிவராத்திரி,
கந்தசஷ்டி, ஆவணி ஆயில்யம் நட்சத்திரத்தில் புகழ்த்துணை நாயனார்
குருபூஜை.

இருப்பிடம்: கும்பகோணத்தில்
இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., தூரத்தில்
இத்தலம் இருக்கிறது. பஸ் வசதி உண்டு.

நடை
திறப்பு:
காலை 7- 12.30 மணி, மாலை 4- 8
மணி.

போன்: 99431 78294.

<span>%d</span> bloggers like this: