சர்வதாரி புத்தாண்டு சகல வளமும் தரட்டும்

சித்திரை- பெயர்க்காரணம் : சந்திரன், அசுபதி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் சஞ்சரிக்கிறார். இதில் பவுர்ணமியன்று அவர் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் சஞ்சரிப்பதின் அடிப்படையில், மாதங்களுக்கு சமஸ்கிருத மொழியில் பெயர் சூட்டப்பட்டது. அதை தமிழில் மொழி பெயர்க்கும் போது சிறு வித்தியாசம் ஏற்பட்டது. சில மாதங்களின் பெயர்கள் நட்சத்திரத்தின் பெயர்களுடன் சம்பந்தமே இல்லாதது போல் தோன்றினாலும், மொழியியல் வல்லுனர்கள் அவை காலப்போக்கில் ஏற்பட்ட மருவலே எனக்கூறுகின்றனர்.சித்திரையைப் பொறுத்தவரை, சித்ரா பவுர்ணமி சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் வரும். சமஸ்கிருதத்தில் இது “சைத்ர மாதம்’ எனப்பட்டு, தமிழில் “சித்திரை’ எனப்பட்டது. தமிழகத்தின் மிக முக்கிய விழாவான மதுரை மீனாட்சி கோயில் திருவிழாவைக் கூட “சைத்ரோற்ஸவம்’ என்றே குறிப்பிடுவர்.

சித்திரை வெயில் சுட்டெரிப்பது ஏன்? : நவக்கிரகங்களின் நாயகன் சூரியன். அதனாலேயே, நாம் கிரகங்களின் கூட்டமைப்பை, “சூரியக் குடும்பம்’ என்கிறோம். கிரகங்களின் பெயரால் வாரத்தின் ஏழு நாட்களும் அமைந்துள்ளன. இதில் சூரியனுக்குரிய முதல் நாளை ஞாயிறு என அதன் பெயரிலேயே அழைக்கிறோம். ஞாயிறு என்றால் சூரியன் என்பது பொருள்.அதுபோல், சூரியன் பன்னிரு ராசிகளில் சுற்றி வரும்போது முதல் ராசியாகிய மேஷவீட்டில் உச்சம் பெறுகிறான். உச்சம் பெறும் நாளில் சூரியனின் முழு தாக்கத்தை நாம் உணரமுடியும்.”அப்பா! வெயில் மண்டையை பிளக்கிறதே’ என்று முணுமுணுப்பது இந்த மாதத்தில் தான். சூரியன் தன் முழுவீரியத்துடன் உச்சம் பெறும் மாதம் சித்திரையே.ஜோதிட ரீதியாக கிரகங்கள் <<உச்சம் பெறும் போது அதன் தாக்கம் கூடுதலாக இருக்கும் என சொல்வார்கள். சூரியன் <உச்சிக்கு போனால் என்னாகும்? சுட்டெரிக்கும். முதல் ராசியான மேஷத்தில் உச்சம்பெறும் போது அந்த தாக்கம் அதிகமாக தெரிகிறது.

சிவாலயங்களில் ஜலதாரை : சித்திரை மாத இறுதியில் கத்திரிவெயில் என்னும் அக்னிநட்சத்திரதோஷம் வருகிறது. இச்சமயத்தில், சூரியன் உக்கிரமாக தன் கதிர்களை வீசும்போது, உஷ்ணம் கூடுகிறது. சிவபெருமான் நெருப்பு
வடிவானவர். நெருப்பை இன்னொரு நெருப்பு சுடும் போது, உலகம் என்னாகுமோ என்ற அச்சம் இயற்கையாகவே ஏற்படுகிறது. மேலும், நம் இறைவனாகிய சிவன், ஏற்கனவே நெற்றிக்கண்ணுடன் சிரமப்படும் போது, இன்னும் அவனை சூடாக்குகிறோமே என்ற அன்புணர்வும் ஏற்படுகிறது. இதனால், இறைவனை குளிர்விக்கும் பொருட்டு, ஒரு செம்பு கலயத்தில் நீர் நிரப்பி சொட்டுசொட்டாக லிங்கத்தின் விழும்படி அமைத்துவிடுவர். அக்னிநட்சத்திர காலத்தில் சிவலிங்கத்திருமேனியை குளிர்விக்கும் பொருட்டு இந்த முறை பின்பற்றப்படுகிறது. இதனை “ஜலதாரை’ என்று குறிப்பிடுவர்.ஜலதாரையினால் கருவறையில் குளிர்ச்சியான காற்றலை பரவி பக்தர்களையும் குளிர்விப்பதாக அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்ட சிவாலயங்களில் 365 நாளும் ஜலதாரை உண்டு.

சித்ரகுப்த பூஜை : நவக்கிரகங்களில் கேதுபகவானுக்கு அதிதேவதை சித்ரகுப்தன். சிவபெருமானின் அருளால் இந்திரனுக்கும் காமதேனுவுக்கும் பிறந்தவர் என்றும், பார்வதிதேவி ஒரு சித்திரத்திற்கு உயிர்கொடுத்து உருவானவர் என்றும் சொல்வர் . சித்ராபவுர்ணமியன்று இவர் அவதரித்தார். இவரே சிவபெருமானின் ஆணைப்படி எமனிடம் தலைமை கணக்கராய் அமர்ந்தார். பிறவி முடிந்த ஜீவன்கள் <பூவுலகில் செய்த நன்மை, தீமைகளை கணக்கிடும் உரிமை பெற்றவர் இவர். ஒரு கரத்தில் பனையோலை சுவடியையும், மற்றொன்றில் எழுத்தாணியும் வைத்திருப்பார். காஞ்சிபுரம் நெல்லுக் காரத்தெருவில் இவருக்கு கோயில் அமைந்துள்ளது. சித்ராபவுர்ணமியன்று அபிஷேகஆராதனை நடக்கும். அன்று மாலை கர்ணாம்பிகை என்னும் தேவியுடன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. சித்திரகுப்தரை வணங்குவோருக்கு கேதுவினால் துன்பம் இல்லை.

புத்தாண்டு சமையல் : மேஷராசியில் சூரியன் சஞ்சாரம் செய்யும் மாதம் சித்திரை. இந்த நாளில் வீட்டை அழகுபடுத்தி கோலமிட்டு செம்மண்பூசி வர்ணம் தீட்ட வேண்டும். இப்படி செய்தால், நம் வீடு லட்சுமி கடாட்சத்துடன் திகழும் என்பது நம்பிக்கை. அன்று சமையலில் வேப்பம் பூ பச்சடியும், மாங்காய் பச்சடியும் செய்யப்பட்டிருக்கும். வேப்பம்பூ கசக்கும் தன்மையுடையது. ஆனால், ரத்தத்தை தூய்மைப்படுத்தி பூச்சிகளை அழிக்கவல்லது. வேம்புக்கு நிகரான மூலிகை இல்லை. மாங்காய் புளிக்கும் தன்மையுடையது. வாழ்க்கையில் பலதரப்பட்ட அனுபவங்களை நாம் பெறுகிறோம். ஆனால், எல்லாவற்றையும் சமநோக்கில் காணும்வகையில் மனநிலையை பக்குவப்படுத்த பழகிக் கொள்ள வேண்டும். இதை உணர்த்தவே, இனிப்பு, கசப்பு<, உவர்ப்பு<, புளிப்பு<, துவர்ப்பு<, கார்ப்பு என வழங்கும் அறுவகை சுவைகளை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர். பானகம், நீர்மோர் ஆகிய குளிர்ச்சியான உணவுவகைகளையும் இன்றைய நாளில் உண்பது சிறப்பம்சமாகும்.

புண்ணியம் தேட சுலப வழி : சித்திரை முதல் நாளில் கோயில்களில் பஞ்சாங்கம் வாசிப்பர். பெரும்பாலும் மாலை நேரத்தில் கோயில்களில் இந்நிகழ்ச்சி நடக்கும். அந்த ஆண்டில் நவக்கிரக சஞ்சாரத்தினால் உலகத்துக்கும், மக்களுக்கும் நடக்கவிருக்கும் பலன்களை இதன் மூலம் மக்கள் அறிந்து கொண்டு தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வர். இது தொன்று தொட்டு தமிழகத்தில் நிகழும் வழக்கமாகும். பஞ்சாங்கம் கேட்பதால் நவக்கிரகங்கள் நமக்கு நல்ல பலன்களை வழங்குவர் என்பது ஐதீகம். <<புது பஞ்சாங்கம் ஒன்றை வாங்கி, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூஜையில் வைத்து வழிபாடு செய்வர். அப்பஞ்சாங்கத்தை நல்ல நேரம் பார்த்து வாசிப்பர். பஞ்சாங்கத்தில் வாரம், திதி, கரணம். நட்சத்திரம் உள்ளிட்ட பல விஷயங்கள் இருக்கும். புத்தாண்டு தினத்தில் பக்தி சிரத்தையுடன் இவற்றைப் பற்றி தெரிந்து கொள்வதால் குறிப்பிட்ட சில பலன்களும் கிடைக்கும். வாரம் (கிழமை)-ஆயுள் விருத்தி, திதி– செல்வம் சேர்தல், நட்சத்திரம் -முன் செய்த பாவம் நீங்குதல், யோகம்- நோயற்ற வாழ்வு, கரணம்- செயல்களில் வெற்றி. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் நினைவாலயம் ஆகிய இடங்களில் புத்தாண்டன்று பஞ்சாங்கம் வாசிப்பது இப்போதும் நடக்கிறது.

கனி காணும் நிகழ்ச்சி : சித்திரை நாளில் “சித்திரை விஷு’ என்ற கனிவகைகளை காணும் சம்பிரதாயத்தை கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பின்பற்றி வருகின்றனர். பங்குனி மாத கடைசிநாள் இரவு பூஜையறையை சுத்தம் செய்து கோலமிடுவர். பொன்நகை, பணம், வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங்காய்,பூ போன்ற மங்கலப்பொருள்களை ஒரு மேஜையில் வைத்து, அதன் முன்னால் ஒரு கண்ணாடியையும் வைப்பர். சித்திரை விசுவன்று காலையில் வீட்டில் உள்ள மூத்தவர் ஒருவர் எழுந்து குளித்து திருவிளக்கேற்றி வைப்பார். பின் ஒவ்வொருவராக எழுப்பி வந்து இம்மங்கலப் பொருள்களைக் காணச் செய்வார். இதனால் ஆண்டு முழுவதும் செழிப்புடன் வாழலாம் என்பது நம்பிக்கை.இவ்வாண்டு சபரிமலையில் நாளை “விஷூ’ கனி தரிசனம் நடக்கிறது. குருவாயூர், குருவாயூரப்பன் கோயிலில் நாளை நடக்கும் கைநீட்டம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

%d bloggers like this: