பலம் தரும் பாதுகாப்பு படிப்புகள்

       பாதுகாப்பு துறை சார்ந்த விழிப்புணர்ச்சி மக்களிடம் ஏற்பட பல நாடுகள் ராணுவ கல்வியை மக்களிடம் வழங்குகின்றன. இந்த கல்வி மூலம் கிடைக்கும் பயன்களை விளக்குகிறார் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் சுரேஷ்குமார். எந்த நாட்டில் அமைதி நிலவுகின்றதோ அங்கு முதலீடு செய்வதற்கு வெளிநாட்டைச் சார்ந்த முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முன்வருவார்கள். அங்கு தொழில் வளர்ச்சி, தொழில்ட்ப ஆராய்ச்சி, பொருளாதார மேம்பாடு என்ற ஒட்டு மொத்தமான நாட்டின் வளர்ச்சி என்பது சாத்தியமாகும். சில சமயங்களில், புவியியல் ரீதியாக அமைந்துள்ள இயற்கை சூழலும் ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமையும். பாதுகாப்புக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் குட்டி நாடுகளும் பாதுகாப்பு துறையை நவீனமாக்கி வருகிறது என்பதை அடிக்கடி நடக்கும் ஏவுகணை சோதனைகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு நாடும் பல நூறு கிலோமீட்டர்கள் பறந்து சென்று இலக்கை தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்து தங்களின் பலத்தை பிற நாட்டுக்கு தெரிய வைக்கின்றன. முன்பெல்லாம் போர்நடந்தால் யார் போர்களத்தில் போரிடுகிறார்களோ அவர்களுக்குத் தான் உடல்சேதம் அல்லது உயிர்ச்சேதம் ஏற்படும். ஆனால் இப்போதுள்ள நவீனகால ஆயுதங்களை பயன்படுத்தும் போது, நகர்ப்புறங்களில் வாழ்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற நவீன ஆயுதங்களின் தாக்குதலில் இருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்கு அது தொடர்பான ஆய்வுகள் ஒவ்வொரு நாட்டிலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. உலகமயம், தாராளமயம் என்று பொருளாதாரக் கொள்கைகள் மாறிவிட்டதால் உலகம் முழுவதும் வேலைக்காகவும், படிப்புக்காகவும் இடம் பெயரும் சூழல் இன்றுள்ளது. நமது நாட்டைச் சேர்ந்தவர்கள் பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளில் குடி பெயர்ந்துள்ளனர். எனவே பாதுகாப்பு குறித்த அயல்நாட்டுக் கொள்கையில் இதுபோன்ற சிறந்த விஷயங்களையும் அரசு கருத்தில் கொள்கிறது.     பாதுகாப்பு துறை சார்ந்த விழிப்புணர்ச்சி மக்களிடம் ஏற்பட பல நாடுகள் ராணுவ கல்வியை மக்களிடம் வழங்குகின்றன. இந்த கல்வியின் மூலம் கிடைக்கும் பயன்களை இந்த வாரம் விரிவாக பார்ப்போம். ராணுவ கல்வி பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்த ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, சீனா, தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா, பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், பாதுகாப்பு குறித்த படிப்பு பள்ளிகளிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவ விஞ்ஞானம், தேசிய பாதுகாப்பு சார்ந்த பாடப்பிரிவுகளுடன் பல்வேறு பெயர்களில் பாடமாக இடம் பெற்றுள்ளது. ராணுவ கல்வி மற்றும் அதுசார்ந்த விழிப்புணர்ச்சியை நாட்டிலுள்ள பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதத்தில் பாதுகாப்பு படிப்புகள் வழங்கப்படுகின்றன. இளைஞர்களுக்கு அந்நாட்டின் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு பரிமாணங்களை இப்படிப்பு உணர்த்துகிறது. இந்தியாவில் ராணுவ கல்வி சுதந்திரத்திற்கு பின்பு பாகிஸ்தான், சீனாவுடன் 1962-ம் ஆண்டு நடந்த யுத்தம், இந்திய பாதுகாப்புக் கொள்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் அமைந்தது. இதனால் பாதுகாப்பு படிப்புகள் தொடங்கப்பட்டு, இன்று பல பல்கலைக்கழகங்களில் பாடமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. சர்வதேச உறவுகள், விஞ்ஞானம் மற்றும் தொழில்ட்பம், அணுசக்தி கொள்கை, குறிப்பிட்ட நிலப்பகுதிசார்ந்த படிப்பு, யுத்தம் குறித்து அறிஞர்களின் கருத்து, ஆய்வு மற்றும் செயல்பாடுகள் என்று இப்படிப்புக்கான பாடங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் ராணுவப் புவியியல், புவி அரசியல், பாதுகாப்பு சார்ந்த பொருளாதாரம், வெளிநாட்டு உறவு சார்ந்த சிக்கல்களை தீர்வு செய்தல், வெளியுறவு சார்ந்த பிரச்சினைகளை மேலாண்மை செய்தல் என்று பிறபாடப் பரிவுகளையும் சேர்த்து ஒருங்கிணைந்த படிப்பாக அமைந்துள்ளது.     பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களை ராணுவத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றுபவர்கள் மட்டுமல்ல; சாதாரண மக்களும் அறிந்திருக்கவேண்டியது முக்கியம். ராணுவ ஆட்சி நடைபெறும் நாடுகளில் இப்பயிற்சி கட்டாயமாகும். இந்த படிப்பை முடிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் கற்பிக்கும் ஆசிரியர்களும் அவ்வப்போது கட்டுரைகள் மூலம் பத்திரிக்கைகளில் நாட்டின் பாதுகாப்பு குறித்த தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். இந்தப் படிப்பை இன்னும் மேம்படுத்தும் விதத்தில் இந்திய அரசாங்கம் பாதுகாப்பு படிப்பு சார்ந்த பல்கலைக்கழகத்தை நிறுவ பரிந்துரை செய்துள்ளது. வேலைவாய்ப்பு இப்பிரிவில் முதுநிலை பட்டம் வாங்கியவர்கள் கல்லூரி விரிவுரையாளர் பணியில் சேர முடியும். தரைப்படை, விமானப்படை, கடற்படையில் நேரடியாக பணிநியமனம் பெறவும் இப்படிப்பு உதவுகிறது. இந்திய பாதுகாப்பு குறித்த ஆய்வு, சர்வதேச நாடுகளின் உறவு சார்ந்த ஆய்வு போன்றவற்றை மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டு. பாதுகாப்பு இதழியல் துறையில் செயல்படுவோருக்கு இந்த துறை கல்வி மிகவும் உதவிகரமாக இருக்கும். சில மாநிலங்கள் நடத்தும் அரசு தேர்வாணைய தேர்வுகளில் இப்பாடப்பிரிவு சார்ந்த போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும், பேராசிரியர், இளம் ஆய்வு வல்லுனர் தேர்வுகளிலும் இப்படிப்பு சார்ந்த தேர்வெழுதி தேர்ச்சி பெற்று பணிவாய்ப்பை பெறலாம். மேலும் இப்படிப்பை பயில்பவர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை பெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இந்த உதவியின் மூலம் புத்தகம் வெளியிடுதல், ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடவும் வாய்ப்பு உண்டு. பாதுகாப்பு படிப்பில் பட்டம் அல்லது முதுநிலைப்பட்டத்திற்குப் பின் பொதுவான வேலையிலும் போட்டித்தேர்வின் மூலம் சேர முடியும். (வழிகாட்டுதல் தொடரும்)   *** இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் * சென்னைப் பல்கலைக்கழகத்தில் இப்படிப்பு சார்ந்த எம்.ஏ., எம்.பில். மற்றும் பிஎச்.டி, படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. * உஸ்மானியா பல்கலைக்கழகம்- ஐதராபாத், இத்துறை சார்ந்த முதுநிலை மேலாண்மைப் படிப்பை வழங்குகின்றது. * மணிப்பூர் பல்கலைக்கழகம் மற்றும் திரிபுரா பல்கலைக்கழகங்கள் பட்டப்படிப்பாக வழங்குகின்றன. * பஞ்சாப் பல்கலைக்கழகம், பஞ்சாபி பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம், புனே பல்கலைக்கழகம், ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகம் என பல்வேறு பல்கலைக்கழகங்கள் இப்பிரிவு சார்ந்த படிப்புகளை அளிக்கின்றன.

%d bloggers like this: