ஆளை பார்த்து அறிவை எடை போடாதீர்-(அதிவீரராமபாண்டியன்)அறிஞர்கள் நல்ல நூல்களைக் கற்று அவற்றின் பொருள்களை
சந்தேகமின்றி உணர்ந்து ஐம்புலன்களையும் கட்டுக்குள் அடக்கி
தன்னிலேயே அடங்கி வாழ்பவர்கள். அடக்கம் தான் அறிஞருக்கு
உண்மையான அழகாகும்!

வறுமை வந்தபோதும் ஒழுக்க நெறியில தவறாமல் நடந்து கொள்ள
வேண்டும். அவ்வாறு வறுமையிலும் செம்மையாக விளங்குவது தான்
ஏழைகளுக்கு அழகாகும்!

பெரிய பனம் விதை முளைத்து உயரமாக வானுற ஓங்கி
வளர்ந்திருந்தாலும், அதனுடைய நிழல் ஒருவர் இருந்து
இளைப்பாறவும் போதுமானதாக இருக்காது. அதாவது, வளர்ச்சியால்
உயர்ந்து காணப்படுகிறவர்கள் எல்லாரும், பண்பால் பிறருக்கு
உதவும் தன்மையோடு உயர்ந்து இருப்பார்கள் என்று நினைப்பது
தவறு.

மீன் முட்டையை விட சிறியதான ஆலம் விதை பெரிய மரமாக
வளரும். ஓர் அரசன் தன்னுடைய நால்வகைப் படையோடும் தங்கி
அயர்வு போக்கப் போதுமான அளவு நிழலையும் தரும். மூர்த்தி
சிறியதானாலும் கீர்த்தி பெரியது. சிறியவர்களும் அரிய பெரிய
காரியங்களைச் சாதிக்கக் கூடியவர்களாயிருப்பார்கள். ஆகவே,
உருவத்தைக் கொண்டு மதிப்பிடுதல் கூடாது.

வெளித் தோற்றத்துக்குப் பெரியவர்களாகத் தோன்றுகிறவர்கள்
அத்தனை பேரும், அறிவிலும் அரிய பண்பிலும் ஆற்றலிலும்
பெரியவர்களாக இருந்து விடமாட்டார்கள். பார்வைக்குச்
சிறியவர்கள் போன்ற தோற்றமுடையவர்கள் அத்தனை பேருமே
உண்மையில், அறிவிலும், அரிய பண்பிலும் ஆற்றலிலும்
இளையவர்களாக இருந்து விடமாட்டார்கள்.

ஒருவர் பெறும் அத்தனை பிள்ளைகளும் அறிவுடைய
பிள்ளைகளாகவோ, நல்ல ஒழுக்க நெறியில் சிறந்து விளங்குகின்ற
பிள்ளைகளாகவோ, பெற்றோரைக் காப்பாற்றும் பிள்ளைகளாகவோ
இருப்பார்கள் என எதிர்பார்க்கக்கூடாது.

%d bloggers like this: