Advertisements

ஏசர் நிறுவனத்தின் ஜெம்ஸ்டோன் புளூ

ஏசர் நிறுவனத்தின் ஜெம்ஸ்டோன் புளூ
ஆஸ்பயர் 6920 மற்றும் ஆஸ்பயர் 8920 என்ற இரு லேப்டாப் கம்ப்யூட்டர்களை அண்மையில் ஏசர் நிறுவனம் வெளியிட்டது. ஜெம்ஸ்டோன் புளூ என்ற பிராண்ட் பெயரில் இவை வெளிவந்துள்ளன. இந்த இரு லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் மல்ட்டி மீடியா வசதிகளுக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளன. டோல்பி ஹோம் தியேட்டர் அனுபவத்தினை இந்த இரு கம்ப்யூட்டர்களும் தருகின்றன.

இன்டெல் கோர் டூயோ 2 புராசசர்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மொபைல் இன்டெல் டி 5550 மற்றும் டி 7500 சிப்செட்கள் கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு தனி வேகத்தைத் தருகின்றன. இவற்றில் முறையே 2 ஜிபி மற்றும் 3 ஜிபி ராம் மெமரி உள்ளது. ஹார்ட் டிஸ்க் கொள்ளளவு முறையே 250 ஜிபி மற்றும் 350 ஜிபி ஆகும். முதன் முதலில் 16 அங்குலம் மற்றும் 18 அங்குல நோட்புக் வகைகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தின. இவற்றில் புல் கிறிஸ்டல் எல்.சி.டி. 8 எம்.எஸ். ரெஸ்பான்ஸ் டயத்துடன் தரப்பட்டுள்ளன. இதனுடைய ஸ்கிரீன் ஆஸ்பெக்ட் விகிதம் 16:9 ஆகும். இவற்றில் உள்ள சினிடேஷ் மீடியா கண்ட்ரோல் மல்ட்டி மீடியா பணிகளுக்கு ஒன் டச் கீகளைத் தருகிறது. ஆஸ்பயர் 6920 நோட்புக் ரூ. 49,000 மற்றும் ஆஸ்பயர் 8920 ரூ.79,000 என விலையிடப்படும் எனத் தெரிகிறது.

3.A. வெளிவந்தது ஹம்மர் மொபைல்

வெகுநாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வந்த மெரிடியன் மொபைல் நிறுவனத்தின் ஹம்மர் மொபைல் போன் அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பிளை என்ற பிராண்ட் பெயரில் வரும் இந்த போனை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனுமதி பெற்று அதன் ஹம்மர் கார் போல வடிவமைத்துள்ளனர்.

மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. டச் ஸ்கிரீன் எல்.சி.டி. திரை தரப்பட்டுள்ளது. 2 மெகா பிக்ஸெல் கேமரா 256 மைக்ரோ எஸ்.டி. கார்ட் இணைந்து தரப்படுகிறது. எப்.எம். ரேடியோ மற்றும் எம்பி 3 பிளேயர் இசை ரசிகர்களுக்குத் தீனி போடுகின்றன. இன்னும் 15 மாடல் போன்களுடன் அடுத்த மாதம் வர இருக்கும் இந்த போனின் நிறுவன விலை ரூ.10,000.

3.B. எச்.பி.யின் மிகச் சிறிய லேப்டாப்

ஹ்யூலட் பேக்கார்ட் நிறுவனம் மிகச் சிறிய லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. டி.வி. 3000 என்ற எண்ணுடன் தி ஒன் என அழைக்கப்படும் இந்த லேப்டாப் அடிக்கடி பயணத்தில் இருக்கின்ற எக்ஸிகியூடிவ்களுக்கான ஒரு லேப்டாப். இதில் முழு அளவிலான கீ போர்டு தரப்பட்டுள்ளது. 13.3 அங்குல அளவிலான திரையில் எச்.பி. பிரைட் வியூ தொழில் நுட்பம் செயல்படுகிறது.

எச்.பி.3 டி டிரைவ் கார்ட் இதன் ஹார்ட் டிஸ்க்கினை லேப்டாப் பயணத்தில் பயன்படுத்துகையில் பாதுகாக்கிறது. லேப்டாப் பாதுகாப்பிற்கு விரல் ரேகையினைப் படித்துச் செயல்படும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த லேப்டாப் கம்ப்யூட்டரில் எச்.பி. பெவிலியன் வெப் கேமரா மற்றும் எச்.பி. ரிமோட் கண்ட்ரோல் இணைக்கப்பட்டுள்ளது. என்விடியாவின் லேட்டஸ்ட் கிராபிக்ஸ் கார்ட் இதில் தரப்பட்டுள்ளதால் கிராபிக்ஸ் பணிகளை எளிதாகவும் சிறப்பாகவும் மேற்கொள்ளலாம். இதன் வீடியோ மெமரி 256 எம்பி. இதன் குறியீட்டு விலை ரூ.53,990 மற்றும் வரிகள்.

3.C. கிங்ஸ்டன் டேட்டா டிராவலர் 110

தகவல் பரிமாற்றத்திற்கென பல்வேறு மாடல்களில் பிளாஷ் டிரைவ்களை அறிமுகபடுத்தும் கிங்ஸ்டன் தற்போது கிங்ஸ்டன் டேட்டா டிராவலர் 110 என்ற பெயரில் 1,2,4 மற்றும் 8 ஜிபி கொள்ளளவில் புதிய வடிவமைப்பில் டிரைவ்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. தனியே மூடி இல்லாமல் ஸ்லைடிங் முறையில் அமைக்கபட்டுள்ளது. இதனால் பயன்படுத்துவது எளிதாகிறது.

விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படுத்தலாம். பழுப்பு கலரிலான 1 ஜிபி ரூ.625க்கும், நீலக் கலரில் 2 ஜிபி ரூ.925க்கும், சிகப்பு வண்ணத்தில் 4 ஜிபி ரூ.1,595க்கும் பச்சை நிறத்தில் உள்ள 8ஜிபி டிரைவ் ரூ.3,425க்கும் கிடைக்கிறது. அனைத்து டிரைவ்களுக்கும் 5 ஆண்டு வாரண்டி கிடைக்கிறது.

3.D. எல்.ஜி. கே. எப். 600

டிசைனுக்கென உயர்ந்த விருது பெற்ற கே.எப்.600 மொபைல் போனை அண் மையில் எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஸ்லிம்மான தோற்றத்தில் சிறப்பாகச் சொல்லக் கூடிய கிராபிக் இன்டர்பேஸ் தீம்களுடன் தனி தோற்றத்தைத் தந்து போனை வைத்திருப்பவருக்கு தனியானதொரு ஸ்டேட்டஸ் தருகிறது இந்த போன். இதில் தரப்பட்டுள்ள இன்டராக்ட் பேட் கீகளை இயக்கும் வேலையைக் குறைக்கிறது. இதனால் இதனைப் பயன்படுத்துபவருக்கு வேலைப் பளு குறைந்து மேற்கொள்ள வேண்டிய பணிக்கு உடனே செல்ல முடிகிறது. பயனாளர்களுக்கான வசதியைத் தன் முதன்மைக் கடமையாக எல்.ஜி. எப்போதும் மேற்கொள்ளும் என்பதனை இந்த யூசர் இன்டர்பேஸ் மூலம் நிரூபித்துள்ளது. இது எல்.ஜி.யின் தொடர்ந்த ஆய்வுகளின் பயனாக வந்த விளைவு ஆகும்.

தேவையான பணிகளுக்கான ஒன் டச் கீகள் தரப்பட்டுள்ளன. ஸ்கிராட்ச் எதுவும் ஏற்படுத்த முடியாத திரை தரப்பட்டுள்ளது. இவற்றுடன் 3 மெகாபிக்ஸெல் கேமரா, எம்பி3 பிளேயர், வீடியோ ரெகார்டர், எப்.எம்.ரேடியோ, புளுடூத் மற்றும் பிற வசதிகள் தரப்பட்டுள்ளன. கைக்கு அடக்கமாய் ஸ்லிம்மாய் அழகான தோற்றத்துடன் உள்ள இதன் நிறுவன விலை ரூ.14,990.

3.E. சாம்சங் வழங்கும் புதுமையான போன்

ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ. வகை இணைப்புகளைத் தரும் மொபைல் போன் ஒன்றை சாம்சங் வடிவமைத்துத் தந்துள்ளது. இதன் பெயர் “2 ஆன்’. பொதுவாக இந்த இருவகை இணைப்பும் இணைந்து எந்த போனிலும் இயங்காது. குறிப்பாக சி.டி.எம்.ஏ., வகை மொபைல் இணைப்பில் இயங்கும் டாடா இண்டிகாம் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களின் சிம் கார்டுகளும் இணைப்பும் அந்த அந்த நிறுவனங்கள் பரிந்துரைக்கும் போன்களில் மட்டுமே இயங்கும். ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படாது.

ஆனால் இந்த சாம்சங் போனில் இந்தியாவில் இயங்கும் ஏறத்தாழ அனைத்து நிறுவனங்களின் சிம் கார்டுகளையும் இணைத்து இயக்கலாம். இதில் 2.3 அங்குல டி.எப்.டி. டச் ஸ்கிரீன் உள்ளது. 2 மெகா பிக்ஸெல் கேமரா, மைக்ரோ எஸ்.டி.கார்ட் ஸ்லாட் (1 ஜிபி மெமரி வரை கொள்ளும்) எம்பி3 பிளேயர் இணைக்கப்படுள்ளன. இதில் ஹேண்ட் ரைட்டிங் ரெகக்னிஷன் சாப்ட்வேர், பைல் வியூவர், ஸ்கெட்ச் மெமோ, ஆர்கனைசர், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி சப்போர்ட், மொபைல் பிரேயர் எனப் பல வசதிகள் தரப்பட்டுள்ளன. இதில் 1200 எம்.ஏ.எச். பேட்டரி தரப்பட்டுள்ளதால் அதிக நேரம் இதனைப் பயன்படுத்தலாம். இதனால் இரண்டு நெட்வொர்க்கில் இயங்கலாம். சி.டி.எம்.ஏ. நெட்வொர்க்கில் இந்த மொபைல் போனை மோடமாகப் பயன்படுத்தி இன்டர்நெட் பிரவுசிங் செய்யலாம். 153 கேபிபிஎஸ் வேகம் கிடைக்கிறது. இதன் குறியீட்டு விலை ரூ.16,500.

3.F. மொபைல் போன்களைக் குறி வைத்திடும் சான் டிஸ்க்

உலகளாவிய அளவில் ஆண்டுக்கு பத்து லட்சம் பிளாஷ் மெமரி கார்டுகளை விற்பனை செய்து வரும் சான்டிஸ்க் நிறுவனம் இந்தியாவில் பெரிய அளவில் விற்பனையை மேற்கொள்ள திட்டமிடுகிறது. பன்னாட்டளவில் இந்தியா சிறிய விற்பனைச் சந்தையாக இருந்தாலும் மொபைல் போன் வளர்ச்சியில் அதன் வேகம் பிரமிக்க வைக்கிறது என்றும் எனவே இங்கு புதிய முயற்சிகளில் இறங்கத் திட்டமிடுகிறோம் என்றும் இந்நிறுவன தலைமை அதிகாரி சஞ்சய் மெஹ்ரோத்ரா குறிப்பிட்டார்.

மொபைல் போன் சந்தையில் அறிமுகமாகும் பெரும்பான்மையான போன்கள் மெமரி ஸ்லாட்டுடன் தான் அறிமுகமாகின்றன. அதிக கொள்ளளவுள்ள கார்டுகளுக்கு மாறிட பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விரும்புவதாகவும் இவர்களை இலக்காகக் கொண்டு தங்கள் பிராண்ட் கார்டுகளை முன்னிலைப் படுத்த இருப்பதாகவும் இவர் கூறினார். இந்தியாவில் தற்போது சான் டிஸ்க் கார்டுகள் ஏறத்தாழ 15 ஆயிரம் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் இந்த எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்த இருப்பதாகவும் தெரிவித்தார். மொபைல் போன்களுடன் டிஜிட்டல் கேமரா, கேம் கார்டர் மற்றும் டிஜிட்டல் மீடியா பிளேயர்களின் சந்தையிலும் சான் டிஸ்க் கார்டுகளின் பயன்பாட்டினை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். சான் டிஸ்க் நிறுவனத்திற்கு பெங்களூருவில் ஒரு டிசைன் சென்டர் 100 வல்லுநர்களுடன் இயங்கி வருகிறது.

3.G. ஏற்றுக் கொள்ள மறுக்கவில்லை யாஹூ மழுப்பல்

மைக்ரோசாப்ட் நிறுவனம் சென்ற மாதம் யாஹூ நிறுவனத்தின் பங்குகளை வாங்கிடத் திட்டம் ஒன்றை அறிவித்து அந்நிறுவனத்தின் இயக்குநர்களுக்குக் கடிதம் எழுதி அதனை வெளிப்படையாகவும் அறிவித்தது. இதற்கு பதிலளித்த யாஹூ மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மதிப்பீடும் நிதி அளிக்க சமர்ப்பிக்கப்பட்ட முறைகளும் சரியில்லை எனவும் இன்னும் நல்ல மதிப்பிட்டை எதிர்பார்ப்பதாகவும் பதிலளித்து பிரச்னையை ஒத்திவைத்தது. கூகுள், மை ஸ்பேஸ் டாட் காம் மற்றும் ஏ.ஓ.எல். நிறுவனங்களுடன் தன் நிலை குறித்துப் பேசி உதவியை எதிர்பார்த்து.
ஆனால் எந்தவிதமான உதவியும் கிடைக்கவில்லை. எனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் துணிந்து புதிய எச்சரிக்கையினை விடுத்துள்ளது. வரும் ஏப்ரல் 26க்குள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கு வாங்கும் திட்டத்தினை ஏற்றுக் கொள்ளாவிட்டால் மைக்ரோசாப்ட் நிறுவனம் நேரடியாக யாஹூ நிறுவனப் பங்கு வைத்திருப்பவர்களிடம் பேச ஆரம்பிக்கும் என்றும் இது யாஹூ நிறுவனத்தின் நிலையை இன்னும் மோசமாக்கும் எனவும் அறிவித்தது. பின்புலத்தில் இருந்து யாஹூ நிறுவனத்திற்கு புதிய இயக்குநர்களைத் தேர்ந்தெடுக்கும் வரை இது செல்லும் என்றும் எச்சரித்தது.

இதன் விளைவுகளை உணர்ந்த யாஹூ மைக்ரோசாப்ட் நிறுவனம் பங்கு வாங்கும் திட்டத்தைதான் எதிர்க்கவில்லை என்று அண்மையில் அறிவித்துள்ளது. போகிற போக்கைப் பார்த்தால் யாஹூ மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கைப்பிடியில் விரைவில் வந்துவிடும் என்றே தெரிகிறது. இதனை உணர்ந்தே கூகுள் நிறுவனம் தன் பணிப் பிரிவுகளில் பலவாறாக தன்னை நிலைப் படுத்திகொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

3.H. மொபைல் கூடுதல் பயன்கள்

மொபைல் போனுக்கான கூடுதல் சேவைகளை விற்பனை செய்திடும் சந்தை இந்தியாவில் சூடு பிடித்துள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த சந்தையின் விற்பன மதிப்பு ரூ.11,600 கோடியாக உயரும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன் இப்போதைய வளர்ச்சியைத் தக்க வைத்து உயர்விற்குத் தடையாய் இருக்கும் சிலவற்றை நீக்க வேண்டும் எனவும் கண்டறிந்துள்ளது. 2008 ஆம் ஆண்டில் இவ்வகை வருமானம் ரூ.5,000 கோடியாக இருக்கும். மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களின் வருமானத்தில் இத்தகைய (எஸ்.எம்.எஸ். போன்ற சேவை) சேவை வருமானம் தற்போது சராசரியாக 7% மட்டுமே.

மொபைல் போன் சர்வீஸ் வழங்கும் நிறுவனத்திற்கும் இத்தகைய கூடுதல் சேவை வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே இந்த கூடுதல் வருமானத்தினை எப்படி பங்கிட்டுக் கொள்வது என்ற பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை. தற்போது இந்த வருமானத்தில் 70 சதவிகிதத்தினை மொபைல் போன் நிறுவனமே வைத்துக் கொள்கிறது. இதுவே கூடுதல் சேவை வழி வருமானத்திற்குப் பெரும் தடையாக உள்ளது. மேலும் இந்த சேவை குறித்த விளம்பரங்களும் வருவதில்லை என்பதால் மக்களுக்கு என்ன என்ன கூடுதல் சேவைகள் கிடைக்கின்றன என்பதுவே தெரியாமல் உள்ளது. இது போன்றவற்றில் நல்ல உடன்பாடு ஏற்பட்டால் கூடுதல் சேவை என்பதுவே நல்ல ஒரு வருமானம் ஈட்டும் சந்தையாக மாறும்.

3.I. வீட்டில் இருந்தபடியே போன் வாங்கலாம்

எஸ்ஸார் குரூப்பின் மொபைல் ஸ்டோர் தன் பணிகளை வர்த்தக ரீதியாக சென்ற மாதம் தொடங்கியது. தன் ஆன் லைன் வர்த்தகத்தினை முதல் கட்டமாக இந்தியாவின் 11 நகரங்களில் தொடங்கியுள்ளது. சென்னை, மும்பை, பெங்களூரு, டில்லி, சண்டிகார், லூதியானா, ஹைதராபாத், ஆமதாபாத், கொச்சின், புனே மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஆன்லைன் வர்த்தக வெப்சைட்டைப் பயன்படுத்தி தங்கள் வீடு மற்றும் அலுவலகத்தினை விட்டு வெளியே வராமல் ஒரு வாடிக்கையாளர் தான் விரும்பும் மொபைல் போனை வாங்க முடியும். தொடர்ந்து 600 நகரங்களில் 2,500 கடைகளைத் திறந்திட மொபைல் ஸ்டோர் முடிவெடுத்துள்ளது.

Advertisements
%d bloggers like this: