கீதையை படியுங்கள் மாணவர்களே!–காந்தியின் பொன்மொழிகள்

கீதையை படியுங்கள் மாணவர்களே!

கீதையின் 18 அத்தியாயங்களையும் படித்து ஆராய்ச்சி
செய்வது உங்களுக்கு கடினமாக இருந்தால், முதல் மூன்று
அத்தியாயங்களையாவது கவனமாக படியுங்கள். இந்த மூன்று
அத்தியாயங்களிலிருந்து சில ஸ்லோகங்களை தேர்ந்தெடுத்துக்
கொள்வதின் மூலம் அந்த அத்தியாயங்களின் சாரத்தை தெரிந்து
கொள்ளலாம். கீதையின் மூன்று இடங்களில், எல்லா
கொள்கைகளையும் விட்டுவிட்டு இறைவனையே சரணம் அடைந்துவிட
வேண்டும் என்று உபதேசிக்கப்பட்டிருக்கிறது.

கீதை எல்லோருக்கும் அன்னை. அவள் யாரையும் பிடித்து
வெளியே தள்ளுவதில்லை. கதவைத் தட்டுவோருக்கு அவள் அன்புடன்
கதவை திறந்து அடைக்கலம் அளிக்கிறாள். கீதையை உண்மையாக
படிப்பவன் ஏமாற்றம் என்பதை அறியான். அறிவுக்கே எட்டாத
ஆனந்தமும், சாந்தியும் அந்த பக்தனுக்கு ஏற்படுகிறது.
எனினும் அத்தகைய சாந்தியும், ஆனந்தமும் சந்தேகவாதிக்கோ
அல்லது அறிவையும் புலமையையும் குறித்து இறுமாப்பு
அடைபவனுக்கோ ஏற்படுவதில்லை. பணிவுள்ளவனுக்கும், மனதை
சிதறவிடாமல் முழு நம்பிக்கையுடன் கீதை அன்னையை
வணங்குபவனுக்கும்தான் அத்தகைய அமைதியும், ஆனந்தமும்
உண்டாகின்றன.

விடியற்காலம் கீதை பாராயணத்துடன் ஒவ்வொரு நாளும்
அலுவல்களை ஆரம்பிக்க வேண்டுமென நான் மாணவர்களுக்கு ஆலோசனை
கூறுகிறேன். நான் துளசிதாசரிடம் மிக்க அன்பும் பக்தியும்
கொண்டவன். வேதனையில் ஆழ்ந்துள்ள உலகத்திற்கு ராமநாம
மந்திரமாகிய சிறந்த மருந்தை கொடுத்த அந்த அண்ணலை நான்
போற்றி வணங்குகிறேன். நீங்கள் கீதையை படிக்கவும் ஆராய்ச்சி
செய்யவும் முற்பட வேண்டும். அதைப்படித்தால் உங்களது
ஒவ்வொரு விருப்பத்தையும் அது நிறைவேற்றும்.

கஷ்டப்பட்டு கீதை படியுங்கள்

கீதையைப் போன்ற நூல்களை மனப்பாடம் செய்து கொள்ள
வேண்டியது மிகவும் விரும்பத்தக்கது என்பதே எப்போதும் எனது
கருத்தாகும். எனினும் நான் பல தடவை முயற்சித்தும் கூட,
கீதையில் உள்ள எல்லா அத்தியாயங்களையும் மனப்பாடம் செய்ய
என்னால் இயலவே இல்லை. நெட்டுருப்போட்டு மனப்பாடம் செய்ய
என்னால் இயலவே இல்லை. அந்த திறமை எனக்கு இல்லை என்பதை நான்
அறிவேன். எனவே, கீதையை மனப்பாடம் செய்துள்ள ஆடவரோ, பெண்ணோ
யாரையாவது நான் சந்தித்தால், எனக்கு அவர்கள் மீது மிகுந்த
மதிப்பு ஏற்படுகிறது.

நான் தமிழகத்தில் யாத்திரை செய்தபோது, அவ்விதம் கீதையை
மனப்பாடம் செய்த இருவரைச் சந்தித்தேன். அவ்விருவரில்
ஒருவர் மதுரையில் உள்ள ஒரு கனவான் (கீதா அஷ்டாவதானி
டி.ஆர்.பத்மநாபய்யர்). மற்றொருவர் தேவகோட்டையில் உள்ள ஒரு
பெண்மணி. பார்வதிபாய் என்ற பெயருள்ள அந்த பெண் காலஞ்சென்ற
நீதிபதி சதாசிவ ஐயரின் மகள். வருடந்தோறும் கீதையை யார்
சிறிதும் தவறாமல் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கிறாரோ
அவருக்குப் பரிசளிக்க நீதிபதி சதாசிவ ஐயர் தாம் இருந்தபோது
ஏற்பாடு செய்திருந்தார். எனினும் கீதையை மனப்பாடம் செய்து
ஒப்புவிப்போர் ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும். மனப்பாடம்
செய்து ஒப்புவிப்பதுடன், கீதையைப் பற்றிச்
சிந்திப்பதற்கும், அதன் அறவுரையையும், பொருளையும்
ஆராய்ந்து நடத்தையில் கைக்கொள்வதற்கும், அவ்விதம்
மனப்பாடம் செய்வது உதவியாக இருக்க வேண்டும். பொறுமையுடன்
முயற்சித்தால் ஒரு கிளியைக்கூட கீதையை மனப்பாடம் செய்து
ஒப்புவிக்கும்படி செய்துவிட முடியும்.

One response

  1. it’s important ou life

%d bloggers like this: