வெயிலில் அலைந்தால் தலைவலி வருதா? : வேறு நோயின் அறிகுறியாக இருக்கலாம்

வெயிலில் அலைந்தால் தலைவலி வருதா? : வேறு நோயின் அறிகுறியாக இருக்கலாம்

சென்னை உட்பட, பல மாவட்டங்களில் வெயில் கொளுத்துவது இன்னும் விட்டபாடில்லை; சில தென் மாவட்டங்களில் மழை வந்து குளிர்வித்தாலும், பெரும்பாலான பகுதிகளில் உள்ள மக்கள், வெயிலுக்கு படாதபாடுபட்டு வருகின்றனர்.

கத்தரி வெயில் போய்விட்டது என்றாலும், வழக்கமான வெப்பமும், புழுக்கமும் தொடர்கிறது. மழையை விட, வெயில், பலருக்கும் கெடுதல் தான். வெயிலில் அலைந்துவிட்டு வீடு திரும்பினால், தலைவலி, வயிற்று வலி என்று ஏதாவது கோளாறு வருவதும் சிலருக்கு வாடிக்கை தான்.

மருந்து சாப்பிட்டால்… : வெயிலில் போனால், “சன் ஸ்ட்ரோக்’ வருவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று: உடலில் அளவுக்கு அதிகமாக வெப்பம் சேர்வது; அதனால் உடலில் நீர்ச்சத்து இல்லாமல் போவது. இரண்டாவது காரணம், சில வகை மருந்துகள் தொடர்ந்து எடுத்துக் கொள்வோருக்கு வெயில் ஆகாது. அவர்களுக்கு வெயில் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
உடலில் உள்ள வெப்பம் அதிகரித்து, நாக்கு வறண்டு போய், நீர்ச்சத்து குறைவது, ஒருவருக்கு தாராளமாக தெரியும். அதன் அறிகுறியை கண்டு, உஷாராக இருப்பது நல்லது.

நடுத்தர வயதினருக்கு : வெயிலில் வரும் கோளாறுகள் எல்லாம், வயதானவர்களுக்கு வரும்; குழந்தைகளுக்கு வரும். நடுத்தர வயதினருக்கு வராது. அவர்கள் சமாளித்துக்கொள்வது தான் காரணம். ஆனால், சில கோளாறு உள்ள நடுத்தர வயதினர், வெயிலில் அடிக்கடி அலைந்தால் பாதிப்பு ஏற்படும். வியர்வை வெளியேறிவிட்டால் பிரச்னை இல்லை. வயதானவர்களுக்கு வியர்வை வெளியேறுவது குறைவாக இருக்கும். அதுபோலத்தான் குழந்தைகளுக்கும் வியர்வை வெளியேறுவது குறைவு. இதனால், வெயில் மூலம் உடலில் ஏற்படும் வெப்பம் பாடாய்படுத்துகிறது அவர்களை.

தலைவலி வருதே “: வெயிலில் போய்விட்டு வீடு திரும்பினால் சிலருக்கு தலைவலி வரும். எல்லாருக்கும் இப்படி வராது. தலைவலி தொடர்ந்து வருகிறது என்றால், கண்களில், தலையில் பாதிப்பு உள்ளது என்று பொருள். டாக்டரிடம் காட்டி பரிசோதித்துக்கொள்வது நல்லது. ஆனால், வெயில் காலத்தில் மட்டும் தலைவலி வருகிறது என்றால், கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதிக அளவில் குடிநீரும், பானங்களையும் எடுத்துக்கொண்டால் போதுமானது.

ஒற்றைத்தலைவலி : ஒற்றைத்தலைவலி உள்ளவர்கள், மழைக்காலத்தை விட, வெயில் காலத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். வெயில் காலத்தில் தான் அவர்களுக்கு அதிக அளவில் தலைவலி ஏற்படும். உடலில் சூடு ஏறும் போது, ஒற்றைத் தலைவலியை அது அதிகப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அதனால்,இப்படிப்பட்டவர்கள் பகல் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வெயிலை பார்க்காமல் இருப்பதே நல்லது.

அடிக்கடி போகுதா : சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய பாதிப்பு போன்ற பிரச்னை உள்ளவர்கள், சில மருந்துகள் சாப்பிடுவதால் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள், மது குடிப்போர், தூக்க மாத்திரை எடுத்துக்கொள்வோர் போன்றவர்கள், வெயிலில் கண்டிப்பாக அலையக்கூடாது. இவர்களுக்கு வெயில் சம்பந்தப்பட்ட கோளாறு கண்டிப்பாக வரும். அதனால், சில நிமிடத்துக்கு மேல் வெயிலில் போவதை தவிர்க்க வேண்டும்.

உடலை குளிர்வித்தால் : உடல் வெப்பமாதலால் தானே “சன் ஸ்ட்ரோக்’ ஏற்படுகிறது, அதிகமாக தண்ணீர் குடித்தால் உடல் குளிர்ந்து இந்த கோளாறு வராது தானே…என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், அப்படி செய்தாலும் இந்த பிரச்னை வராது என்று சொல்ல முடியாது. அதிக தண்ணீரும் சிக்கல் தான். உடலில் உள்ள வெப்பம் வியர்வையாக வெளியேற உடலில் நீர்ச்சத்து வேண்டும். அதற்காக, ஐந்து லிட்டர் குடிப்பதெல்லாம் தவறு. மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால் போதும். ஆனால், வியர்வை வெளியேறாவிட்டால், பாதிப்பு வரத்தான் செய்யும்.

தலை, கழுத்து… : வெயிலில் தன்னை பாதுகாத்துக்கொள்ள நினைப்பவர், முக்கியமாக இரு உறுப்புகளை பாதுகாக்க வேண்டும். ஒன்று, தலை; இரண்டாவது, கழுத்து. தலையை பாதுகாத்துக்கொள்ள தலையில் தொப்பி அணியலாம்; குடை பிடித்து வெளியில் செல்லலாம். அதுபோல, கழுத்துப்பகுதியில் இருந்து வியர்வை வெளியேற வேண்டும். இல்லாவிட்டால், கழுத்து பகுதியில் எரிச்சல், வலி ஏற்படும்.

ரத்த அழுத்தம் : வெயிலில் ரத்த அழுத்தம் எகிறுமா என்று பலருக்கு சந்தேகம் உள்ளது. ஆனால், வெயிலில் ரத்த அழுத்தம் அதிகமாகாது; மாறாக, அது குறையும். அதேசமயம், நாடித் துடிப்பு அதிகரிக்கும். இதனால், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வெயிலை தவிர்ப்பது தான் சரியானது.

காற்று வரட்டும் : மனித உடல் அதிகபட்சம் 97 டிகிரி வரை கூட தாங்கிக் கொள்ளும். அதற்கு மேல் வெப்பம் காணப்பட்டாலும், வியர்வை வெளியேறுவதை பொறுத்து உடல் சமப்படுத்திக்கொண்டு விடும். தோல் பகுதிகளில் ரத்த ஓட்டம் சீராக இருந்தால் தான் வியர்வை வெளியேற்றம் சீராக நடக்கும். இத்துடன் காற்றோட்டமும் இருந்தால் உடலுக்கு பாதிப்பு ஏற்படாது.

%d bloggers like this: