டச் ஸ்கிரீன் போன் வாங்க போறீங்களா

டச் ஸ்கிரீன் போன் வாங்க போறீங்களா

மொபைல் போன் சந்தையில் புது விருப்பமாய் மக்களிடம் இடம் பெறுவது டச் ஸ்கிரீன் போன்கள் தான். ஏற்கனவே இத்தகைய போன்கள் மார்க்கட்டில் இருந்தாலும் இவை பெரும்பாலும் பிசினஸ் மற்றும் அலுவலக உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் என்டர்பிரைஸ் போன்கள் மட்டுமே டச் ஸ்கிரீனாக இருந்தது. ஆனால் ஐ–போன் வந்த பின்னர் மல்ட்டி மீடியா போன்களும் டச் ஸ்கிரீன் கொண்டு வரத் தொடங்கிவிட்டன. இதனால் அனைத்து நிறுவனங்களும் எப்படியாவது ஒரு முறையில் டச் ஸ்கிரீன் போனைக் கொண்டு வரத் தொடங்கி விட்டன

முழுமையாக டச் ஸ்கிரீனில் மட்டுமே இயங்குபவை, ஒரு சில செயல்பாடுகளுக்கு மட்டும் டச் ஸ்கிரீன் பயன்படுத்துதல், ஸ்டைலஸ் என்னும் ஸ்பெஷல் குச்சி கொண்டு இயக்கும் ஸ்கிரீன்கள் மற்றும் விரல்களாலும் தொட்டு இயக்கும் ஸ்கிரீன்கள் எனப் பல வகைகளில் இவை உள்ளன. இதனாலேயே புதிய போனுக்கு மாறுபவர்கள் ஏன் நாமும் டச் ஸ்கிரீன் போன் வாங்கக் கூடாது என்ற எண்ணத்திற்கு வந்துள்ளனர். அவ்வாறு முடிவெடுக்கும் போது ஒரு டச் ஸ்கிரீன் போனில் என்ன என்ன அம்சங்களைப் பார்க்க வேண்டும் என்று பார்ப்போமா!

டிஸ்பிளே அளவு: டச் ஸ்கிரீன் தான் வேண்டும் என முடிவு செய்கையில் திரை அளவு தேவையான அளவோ அல்லது கூடுதலாகவோ இருந்தால் தான் நம் மனதிற்கு பிடிக்கும். எனவே டிஸ்பிளே திரை விசாலமாக இருக்க வேண்டும். அது தகவல்களை டெக்ஸ்ட்டாக அனுப்புவதாக இருந்தாலும் தகவல்களைப் பெறுவதாக இருந்தாலும் இந்த ஒவ்வொரு செயல்பாடும் திரையினை ஸ்டைலஸ் அல்லது விரலால் தட்டி தட்டித்தான் மேற்கொள்ளப்படுகிறது. எனவே டிஸ்பிளே நன்றாக அகலமாக இருப்பதே நல்லது என முடிவெடுக்கிறோம். இத்தகைய டச் ஸ்கிரீன் திரையைப் பொறுத்த வரை ஸ்டாண்டர்ட் சைஸ் என்று ஒன்றுமில்லை. இருப்பினும் 2.8 அங்குல டிஸ்பிளே திரையினை அனைத்திற்கும் உகந்ததாக எடுத்துக் கொள்ளலாம். இதைக் காட்டிலும் திரை பெரியதாக இருக்க வேண்டும் என எண்ணினால் பின் போன் மிகவும் பெரிதாகவே கிடைக்கும்.

இன்டர்பேஸ்: டச் ஸ்கிரீன் போன் ஸ்டைலஸ் இணைந்து வருகையில் விரலாலும் இதனை இயக்கலாம் என்று யாரும் எண்ணவில்லை. ஆனால் ஐ–போன் வந்த பின்னர் விரலால் இயக்கும் புதிய வகையிலான டச் ஸ்கிரீன் கிடைத்தது. ஸ்டைலஸ் கொண்டு இயக்கும் திரை கொண்டிருந்தால் கீ பேட் மிகவும் சிறியதாக இயக்க சிரமமானதாக இருந்தது. ஆனால் விரலால் தொட்டு இயக்கும் வகையில் உள்ள போன்களில் திரையும் விரல் தொடும் இடங்களும் தேவையான அளவில் அமைந்தன. எச்.டி.சி. டச், எல்.ஜி. வியூட்டி மற்றும் சாம்சங் அர்மனி ஆகிய போன்களில் இதனைக் காணலாம். ஆன் ஸ்கிரீன் கீ பேட் இல்லாத நிலையில் வழக்கமான கீ பேட் உள்ள டச் ஸ்கிரீன் போனையும் நாம் தேர்ந்தெடுக்கலாம். சோனியின் பி–1–ஐ இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

ஹேண்ட் ரைட்டிங் ரிகக்னிஷன்: நாம் திரையில் எழுதுவதைப் புரிந்து கொண்டு அதனை டெக்ஸ்ட்டாக அமைத்திடும் புரோகிராம் உள்ள போன்கள் அடுத்த பரிமாணத்தை டச் ஸ்கிரீன் போன்களுக்குத் தந்தன. ஆன் ஸ்கிரீன் கீ போர்டில் டெக்ஸ்ட்களை அமைப்பது சிரமமானதாகவும் அதிக நேரம் எடுப்பதாகவும் இருப்பதால் இந்த வகை தொழில் நுட்பம் மக்களைக் கவர்தாக உள்ளது. போகிற போக்கில் திரையில் ஸ்டைலஸ் கொண்டு எழுதி அது டெக்ஸ்ட்டாக அமைகிறது என்றால் யாருக்குத்தான் கசக்கும். ஒரு சில போன்களில் ஸ்க்ரீனின் எந்த இடத்திலும் எழுதலாம். சில போன்களில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே எழுத முடியும். சில போன்களில் எழுத்துக்களைச் சேர்த்து எழுதினாலும் போன் அதனைப் புரிந்து கொண்டு டெக்ஸ்ட் அமைத்திடும். ஆனால் எச்.டி.சி. பி–4350 போன்ற போன்களில் ஒவ்வொரு எழுத்தாகத்தான் எழுத வேண்டும். எனவே இந்த வசதியுடன் போன் வாங்குவதாக இருந்தால் எவ்வகையில் எழுதலாம் என்பதனை அறிந்து எழுதிப் பார்த்து வாங்கவும்.

ஸ்கிரீனின் உணரும் திறன்: திரையில் எழுதுவதை எவ்வளவு நேரத்தில் போன் உணர்ந்து கொள்கிறது என்பதனையும் எந்த அளவில் அழுத்தம் இருக்க வேண்டும் என்பதனையும் ரெஸ்பான்ஸ் டைம் என்பார்கள். இதனையும் ஒரு போன் வாங்குமுன் கவனிக்க வேண்டும். ஐ–போன் போன்ற போன்கள் இவ்வகையில் தனித் தன்மை கொண்ட சிறப்பாக இயங்கும் சென்சிடிவிடி உள்ள திரையினைக் கொண்டுள்ளன. எல்.ஜி. வியூட்டி இது போன்ற திரை அம்சத்தினைக் கொண்டிருக்கிறது. சென்சிடிவிடி சற்று கூடுதலாக இருந்திருக்கலாமோ என்று எண்ணும் வண்ணம் உள்ளது. இந்த வகையில் ஆப்பிள் ஐ–போன் ஒரு அருமையான அம்சத்தினைக் கொண்டுள்ளது. இதில் முகத்தினை அறியும் சென்சார் ஒன்று உள்ளது. போனில் பேச முகத்தினை அருகே கொண்டு சென்றவுடன் இதில் உள்ள தொழில் நுட்பம் கீ பேடினை லாக் செய்துவிடுகிறது. இதனால் பின்புலத்தில் இயங்கும் அப்ளிகேஷன்கள் இயங்குவது தடைபட்டு பிரச்னையில்லாமல் பார்த்துக் கொள்கிறது. இந்த வசதி மற்ற டச் ஸ்கிரீன் போன்களில் இல்லை.

சாப்ட்வேர் : போனுடன் வரும் சாப்ட்வேர் இல்லாமல் பிற கூடுதல் வசதிகளைத் தரும் மற்ற நிறுவனங்கள் வழங்கும் புரோகிராம்களையும் போனில் நீங்கள் பயன்படுத்த விரும்பினால் போனில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதனை ஏற்றுக் கொள்ளுமா என்று பார்க்க வேண்டும்.

பேட்டரி: ஒரு டச் ஸ்கிரீன் மொபைல் போனில் மிக மிக முக்கியமான விஷயம் அதன் பேட்டரி தான். வழக்கமான வசதிகளுக்கான மின் சக்தியுடன் டச் ஸ்கிரீன் செயல்பாடு அதிகமான மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறது. எனவே எந்த வகை பேட்டரி தரப்படுகிறது என்பதனையும் கண்டறிய வேண்டும். பேட்டரியின் ட்அட மதிப்பினையும் கணக்கிட வேண்டும். அத்துடன் அந்த பேட்டரி எவ்வளவு டாக் டைம் தரும், எவ்வளவு நேரம் ஸ்டேண்ட் பை ஆக இருக்கும் என்பதனையும் கணக்கிட வேண்டும்.

மொபைல் மார்க்கட்டில் பல நிறுவனங்கள் டச் ஸ்கிரீன் திரை கொண்டு போன்களை அறிமுகப்படுத்தி உள்ளன. இதனை அடிப்படியாகக் கொண்டு வாங்க முயற்சிக்கையில் மேலே தரப்பட்டுள்ள அம்சங்களை மனதில் கொண்டு வாங்குவது நல்லது. இன்னும் இந்தியாவில் ஆப்பிள் ஐ–போன் அதிகார பூர்வமாக விற்பனைக்கு வரவில்லை. இருந்தாலும் மற்ற போன்களை வாங்கி நீங்கள் டச் ஸ்கிரீனை அனுபவிக்கலாமே.

%d bloggers like this: