ஹெல்ப் பக்கத்தின் எழுத்து அளவை மாற்றிட

ஹெல்ப் பக்கத்தின் எழுத்து அளவை மாற்றிட

எக்ஸ்பி சிஸ்டத்தில் அடிக்கடி நாம் தொடர்பு கொள்ளும் பிரிவு அதன் ஹெல்ப் பைல்கள்தான். ஆனால் இவை அளவில் சிறியதாக நம் கண்களைச் சோதிப்பதாக உள்ளது. சில வேளைகளில் இவற்றைப் படித்தறிய முடியாமல் போதுமடா சாமி ! என்று விட்டுவிடும் அளவிற்கு சிறியதாக இருக்கின்றன. இந்த அளவை மாற்றிட முடியுமா? என்று பல வாசகர்கள் கேட்டுள்ளனர். இவர்களுக்கான பதில் எழுத்தின் அளவை மாற்ற முடியும் என்பதுதான். ஆனால் அளவை மாற்றிட சிறிது சுற்றி வளைத்து சில வேலைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஹெல்ப் பைல்கள் அனைத்தும் எச்.டி.எம்.எல். அடிப்படையில் உருவானவை. அவை கேஸ்கேடிங் ஸ்டைல் ஷீட் (Cascading Style Sheets) என்பதன் மூலம் வடிவமைக்கப்பட்டவை. எனவே முதலில் நீங்கள் இணைய தளப் பக்கங்களை பார்க்கும் வகையை மாற்ற வேண்டும். முதலில் கண்ட்ரோல் பேனல் சென்று அதில் இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் (Internet Options)  என்பதைத் தேர்வு செய்திட வேண்டும். பின் அதில் உள்ள ஜெனரல் டேபில் கிடைக்கும் அக்செஸிபிலிட்டி (Accessibility) என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். அதில்  Ignore font sizes specified on Web pages   என்ற பாக்ஸில் டிக் மார்க் ஏற்படுத்துங்கள். பின் ஓகே கொடுத்து வெளியேறுங்கள். இந்த மாற்றத்தினால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தொகுப்பு அனைத்து இணைய தளப் பக்கங்களையும் நாம் View | Text Size  பிரிவில் கொடுக்கும் அளவிலேயே காட்டுமாறு கட்டாயப்படுத்தப்படும். இது உங்களுக்குப் பிடிக்க வில்லை என்றால் மீண்டும் மேலே தரப்பட்டுள்ள பிரிவுகளுக்குச் சென்று இறுதியாக டிக் மார்க் கொடுத்த இடத்தில் அதனை நீக்கி ஓகே கொடுக்கவும்

பிரிண்ட் ஹெட்

நாம் பயன்படுத்தும் பிரிண்டரைச் சுத்தமாக வைத்துப் பராமரிப்பது எப்படி என்று குறிப்புகள் சென்ற சில வாரங்களுக்கு முன் தரப்பட்டது. பல வாசகர்கள் இது குறித்து கடிதங்கள் எழுதுகையில் பிரிண்ட் ஹெட் என்பது எங்கு உள்ளது. அதனை எப்படிக் கண்டறிவது என்று கேட்டுள்ளனர். பலருக்கு இதில் சிறிய குழப்பம் ஏற்பட்டிருப்பது தெரிய வருகிறது.

முதலில் பிரிண்ட் ஹெட் என்பது என்ன என்று சொல்லிவிடுகிறேன். ஒரு பிரிண்ட் ஹெட் பிரிண்டரில் அச்சடிக்கும் பணி மேற்கொள்ளப்படுகையில் அச்சு அமைவதற்கான மையினை மிக மிகச் சிறிய துளிகளாக பேப்பரில் தெளிக்கும் சிறிய சாதனமே பிரிண்ட் ஹெட். இந்த வகை பிரிண்ட் ஹெட்கள் முன்பு வந்த பிரிண்டர்களில் இருந்தன. இப்போதும் ஒரு சில பிரிண்டர்களில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான பிரிண்டர்கள் அதற்கான பிரிண்டர் காட்ரிட்ஜ்களிலேயே இந்த பிரிண்ட் ஹெட்டை அமைத்துவிடுகின்றன. இதனைப் பார்க்க வேண்டும் என்றால் பிரிண்ட் காட்ரிட்ஜை எடுத்து பாருங்கள். நீளமான சிறிய அளவிலான மெட்டல் பார் ஒன்று இருக்கும். இதுவே பிரிண்ட் ஹெட். பழைய பிரிண்டர்களில் உள்ளாக அமைந்திருக்கும் பிரிண்ட் ஹெட்டினைப் பார்க்க வேண்டும் என்றால் இங்க் கேட்ரிட்ஜ் பிரிண்டருக்குள் சென்று அமரும் இடத்தில் வலது பக்கமாகப் பாருங்கள். அங்கு காணப்படும். இன்னும் உங்களால் பார்த்து அடையாளம் காண முடியவில்லை என்றால் உங்கள் பிரிண்டருடன் வந்துள்ள மேனுவல் எனப்படும் குறிப்பு நூலைப் பாருங்கள். நிச்சயமாய்ப் படம் போட்டு விளக்கி இருப்பார்கள்.

ஆன்லைன் பேங்கிங் நன்மைகளும் குறைகளும்

தற்போது நாட்டுடைமை யாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமின்றி தனியார் ஷெட்யூல் வங்கிகளும் ஆன்லைன் பேங்கிங் எனப்படும் இன்டர் நெட் வழி வங்கி நிதி பரிமாற்ற வசதிகளை அளித்து வருகின்றன. இந்த வசதியை கம்ப்யூட்டர் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங், பி.சி. பேங்கிங் மற்றும் ஹோம் பேங்கிங் எனவும் அழைக்கின்றனர். பல வாசகர்கள் இந்த வசதியினை நாம் நம் கம்ப்யூட்டர் மூலம் பயன்படுத்துவதில் பிரச்னை ஏதும் உள்ளதா என்று கேட்டு கடிதங்களை எழுதி உள்ளனர். இதில் உள்ள நல்லதுகளையும் அல்லதுகளையும் இங்கு பார்க்கலாம்.

நன்மைகள்:

1. ஆன்லைன் பேங்கிங் முறையில் மிகப் பெரிய நன்மை ஒன்று உண்டென்றால் அது நேரத்தை மிச்சம் செய்வதுதான். நீங்கள் உங்கள் பணத்தைக் கையாளும் விதம் குறித்து எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் வங்கி சென்று செக்குகளை எழுதி படிவங்களை நிரப்பும் வேலையையும் அதில் செலவழிக்கும் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. அது மட்டுமின்றி ஒரு பரிமாற்றத்திற்கான நேரத்தையும் வெகுவாகக் குறைக்கிறது. சில வேளைகளில் ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் கையாளுவதைக் காட்டிலும் குறைவான நேரத்தில் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
2. ஆன்லைன் பேங்கிங் என்பது 24 மணிநேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் மேற்கொள்ளக் கூடிய காரியம் ஆகும். எனவே வங்கிக்கு விடுமுறை, வங்கி மூடப்படும் நேரம் என்றெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை.
3. விடுமுறைக்கு வெளி மாநிலத்திற்கோ அல்லது வெளிநாட்டிற்கோ சென்று விட்டாலும் அங்கிருந்தும் உங்கள் நிதி அக்கவுண்ட்டைக் கையாளலாம். எல்லாமே ஒரு மவுஸ் கிளிக்கில் மேற்கொள்ளப்படும்.
4. பேப்பரினால் ஆன செக்குகளைப் பயன்படுத்தினால் அதற்கும் பணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த வசதிக்கு அது போல எந்தக் கட்டணமும் இல்லை. செக் புக் தீரப்போகிறதா? எப்போது மீண்டும் ஒரு புக் வாங்க வேண்டும் என்ற கவலை எதுவுமில்லாமல் ஆன்லைன் பேங்கிங் மேற்கொள்ளலாம். அது மட்டுமின்றி ஒரே ஒரு பாதுகாப்பான வெப் சைட் மூலம் உங்கள் அனைத்து பேங்க் அக்கவுண்ட்களையும் மேற்கொள்ளலாம்.
5. ஆன்லைன் பேங்கிங் வசதியைப் பெறும் இடத்தில் வேறு சில வசதிகளும் தரப்படுகின்றன. பங்கு விலை, விலை கூடுதல் குறித்த எச்சரிக்கை செய்தி, போர்ட்போலியே மேனெஜ்மென்ட் என பல வகை உதவிகளும் வசதிகளும் தரப்படுகின்றன.
குறைகள்:
1. நன்மைகளுக்கு எதிராக தீமைகள் என எதனையும் பட்டியலிட முடியாது. குறைகள் எனச் சிலவற்றை இங்கு குறிப்பிடலாம். ஆன்லைன் பேங்கிங் என்பது சில நிமிடங்களில் முடியும் என்றாலும் சில வேளைகளில் வங்கிகளின் இணையப் பக்கங்கள் கம்ப்யூட்டர் திரையில் கிடைக்க வெகுநேரம் ஆகிறது. குறிப்பிட்ட நாளில் அந்த வங்கி இணைய தளப் பக்கத்தில் அல்லது அதனைக் கையாளும் சர்வரில் பிரச்னை இருந்தால் இந்த வங்கிக்கு அன்று விடுமுறை என்று எண்ணிக் கொள்ள வேண்டியதுதான். இது போன்ற சில எதிர்பாரா நிலைகளுக்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
2. ஆன்லைன் வங்கிக் கணக்கினை அவ்வளவு எளிதாக உடனே தொடங்கிவிட முடியாது. இணைய தளத்தில் நீங்கள் பதிந்து கொள்ள ஒரு யூசர் பெயரும் பாஸ்வேர்டும் தேவை. இவற்றிற்கான விண்ணப்பத்தினை அளித்து பின் வங்கியின் தலைமை அலுவலகம் அல்லது ஆன்லைன் பேங்கிங் விவகாரங்களைக் கவனிக்கும் அலுவலகத்திற்கு உங்கள் விண்ணப்பம் சென்று அங்கிருந்து உங்களுக்கான கடிதம் வருவதற்கு சில மாதங்கள் ஆகலாம்.
3. உங்கள் வங்கியின் இணையதளத்தில் உங்கள் அக்கவுண்ட்டைக் கையாளும் விதம் குறித்து முற்றிலும் அறிந்து கொள்ள உங்களுக்குச் சில நாட்கள் அல்லது வாரங்கள் ஆகலாம். அதுவரை பொறுமையாக இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் நீங்கள் விரும்பும் பணப் பரிமாற்றம் ஏற்படாமல் வேறு பாதகமான பரிமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
4. ஒரு சிலர் தாங்கள் வங்கியில் கொடுக்கும் செக்கினையே பல முறை உற்றுப் பார்த்து உதறிப் பார்த்து கொடுப்பார்கள். பணத்தைப் பல முறை எண்ணிக் கொண்டே இருப்பார்கள். அத்தகைய பழக்கம் கொண்டவர்கள் இணைய தளம் மூலம் பேங்க் பணிகளைக் கையாண்டுவிட்டு தூக்கத்தைதொலைத்துவிட்டு இருப்பார்கள். பணம் சேர்ந்திருக்குமா என்ற கேள்வியை பலரிடம் கேட்டு பரிதாபமாக நிற்பார்கள். இவர்களுக்கு ஆன்லைன் பேங்கிங் குறித்து சரியாக விளக்க வேண்டும். அல்லது இந்த சந்தேக எண்ணத்தைத் தவிர்க்கும் வழியைக் கற்றுத் தர வேண்டும். பொதுவாக ஆன்லைன் பேங்கிங் செய்பவர்கள் இணைய தளம் மூலம் தங்கள் அக்கவுண்ட் பக்கத்தைப் பார்த்து அவ்வப்போது பிரிண்ட் எடுத்து பைலாக வைத்துக் கொள்ள வேண்டும்.
என்ன! ஆன்லைன் பேங்கிங் வேண்டுமா? வேண்டாமா? நீங்கள் தான் இரு பக்கத்தையும் இப்போது தெரிந்து கொண்டீர்களே! உங்களுக்குத் தேவையானதை நீங்களே தேர்ந்தெடுத்து பின்பற்றுங்கள்.

ஒரிஜினல்… அதே இடத்தில் அப்படியே!

எம்.எஸ். வேர்ட், எக்ஸெல் அல்லது பவர்பாய்ண்ட் பைல்களைக் கையாள்கையில் சில வேளைகளில் பைல் ஒன்றில் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். உங்கள் நோக்கம் பழைய பைலை அப்படியே வைத்துக் கொண்டு மாற்றங்களுடனான புதிய பைல் வடிவத்தினை புதிய பெயரில் வைத்திட வேண்டும் என்பது. ஆனால் ஏதோ எண் ணத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கையில் சேவ் அஸ் செல்லாமல் கண்ட்ரோல் + எஸ் கீகளை அழுத்தி ஒரிஜினல் பைலை மாற் றங்களுடன் சேவ் செய்து ஒரிஜினல் பைலை கோட்டைவிட்டுவிடுவீர்கள். இதற்கு தவறே ஏற்படுத்த முடியாத ஒரு வழி ஒன்று உள்ளது. File   மெனு திறந்து Open  பிரிவு செல்லுங்கள்.

இந்த விண்டோவில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் பைலைத் தேடுங்கள். பைலை கண் டுபிடித்தவுடன் Open  பட்டனை அழுத்தும் முன் சற்று தாமதப்படுத்துங்கள். எப்போதாவது அந்த பட்டனில் கீழ் நோக்கி ஒரு அம்புக் குறி இருப்பதனைப் பார்த்திருக்கிறீர்களா? நிச்சயம் பார்த்திருக்க மாட்டீர்கள். இப்போது பாருங்கள். இது போன்ற அம்புக் குறி இருப்பது எதனைக் குறிக்கிறது? சம்பந்தப் பட்ட பட்டனுக்கு இன்னும் சில சாய்ஸ் இருப்பதனைக் காட்டுகிறது. இப்போது அந்த அம்புக் குறியினை கிளிக் செய்திடுங்கள். ஒரு சிறிய மெனு விரியும். அதில் “Open as Copy”  என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் புரோகிராம் நீங்கள் தேர்ந்தெடுத்த பைலின் காப்பி ஒன்றைத் தேர்ந்தெடுக்கும். இந்த பைலில் நீங்கள் மேற்கொள்ள விரும்பும் எடிட் வேலைகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் ஒரிஜினல் பைல் அப்படியே இந்த மாற்றங்கள் இன்றி இருக்கும்.

கிளிப் போர்டு வியூவர்

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் நீங்கள் எந்த டெக்ஸ்ட், படம், கிராபிக்ஸ் என எதனை காப்பி அல்லது கட் செய்தாலும் அது கிளிப் போர்டு வியூவரில் தான் சென்று அமரும். எனவே எந்த ஒரு நிலையிலும் நீங்கள் இறுதியாகக் காப்பி செய்தது என்ன என்று தெரிந்து கொள்ள கிளிப் போர்டு வியூவரைக் காணலாம்.இதனை எங்கிருந்து பெறுவது? எந்த தொகுப்பிலும் டெக்ஸ்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் + சி அழுத்துகிறீர்கள் அல்லவா? அப்போது இருமுறை சிஅழுத்துங்கள். உடனே கிளிப் போர்டு விரிவடையும். அதில் என்ன டெக்ஸ்ட் உள்ளது என்று தெரியவரும்.

இம்மி இம்மியாய் ஆப்ஜெக்ட் நகர்த்த

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஸ்லைட் ஷோ புரோகிராம் ஒன்றை தயாரிக்கையில் ஆப்ஜெக்ட்டுகளைச் சரியான இடத்தில் வைத்தால் தான் நன்றாகத் தோற்றமளிக்கும். அது ஒரு படமாகவோ, சார்ட்டாகவோ அல்லது கிளிப் ஆர்ட்டாகவோ டெக்ஸ்ட் பாக்ஸாகவோ இருக்கலாம். ஆனால் இவற்றைச் சிறிது இழுத்தால் நாம் எதிர்பார்த்த இடத்தில் அமராமல் தள்ளி சென்று நிற்கும். மீண்டும் எதிர்த் திசையில் இழுத்தால் முன்பு இருந்த இடத்தையும் தாண்டிச் செல்லும். எரிச்சல் கூடி நாம் அந்த ஆப்ஜெக்டையே எடுக்கும் சூழலுக்குத் தள்ளப்படுவோம். இதற்கு ஒரு தீர்வு உள்ளது. முதலில் நகர்த்த வேண்டிய ஆப்ஜெக்டைத் தேர்ந்தெடுக்கவும். அது ஒரு டெக்ஸ்ட் பாக்ஸாக இருந்தால் டெக்ஸ்ட் பாக்ஸ் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதனை உறுதி செய்க. கர்சர் டெக்ஸ்ட் பாக்ஸுக்குள் இருக்கக் கூடாது. இனி ஆரோ கீ ஒன்றை ஒருமுறை தட்டவும். இப்போது ஆரோவின் திசையில் நகர்ந்திருக்கும். இனி கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு விரும்பிய திசைக்கான ஆரோ கீயை அழுத்துங்கள். ஆப்ஜெக்ட் சிறிது சிறிதாக இம்மி இம்மியாக நகர்வதனைப் பார்க்கலாம். இனி நீங்கள் விரும்பிய இடத்தில் துல்லிதமாக ஆப்ஜெக்டை அமைக்கலாம்.

%d bloggers like this: