என்ன…? எப்படி…? ஏன்?

என்ன…? எப்படி…? ஏன்?

கால் வீங்குவது ஏன்? : அறுவை சிகிச்சைக்கு பின், சிலருக்கு கால் வீங்கி விடும். தொடர்ந்து படுக்கையில் படுத்தபடியே இருப்பவர்களுக்கும் இப்படி பிரச்னை ஏற்படும். இதற்கு பெயர், டீப் வெய்ன் த்ரோம்போசிஸ். கால் நரம்புகளில் ஓடும் ரத்தம் ஒரே இடத்தில் கட்டிவிடுவதால் ஏற்படும் கோளாறு தான் இது. காலில் இப்படி ரத்தம் கட்டிவிடுவதால், மற்ற விரல் பகுதிகளிலும் ஒரு வித இறுக்கம் காணப்படும்; ரத்தம் செல்லாததால் அந்த பகுதிகளும் வீக்கம் காணும்.

இதற்கு, டாக்டர்கள் வலி நிவாரணி மாத்திரையையும், ரத்தம் கட்டாமல் இருப்பதற்கான மருந்தும் தருவர். காலுக்கு பொருந்தாத காலுறை அணிவதால் கூட இப்படி வீக்கம் ஏற்படும். அடிக்கடி இப்படி நேர்ந்தால், ரத்த நாளம் சம்பந்தப்பட்ட டாக்டரிடம் காட்டி சிகிச்சை செய்வது நல்லது.

மூலம் எப்போது மோசம்? : சாதாரண அளவில் மூலநோய் ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் தெரியும். அப்படி எந்த அறிகுறியும் இல்லாவிட்டால், அதற்கான சிகிச்சை பெற வேண்டாம். மூலநோயில், மூன்றாவது, நான்காவது நிலை என்று உள்ளது. அப்படிப் பட்டவர்களுக்கு தான் அறுவை சிகிச்சை தேவைப்படும். அப்போது தாமதிக்காமல், உரிய சிகிச்சை பெற வேண்டும்.

அல்சருக்கு பின்… : குடலில் உள்ள வீக்கம், தொற்றுக் கிருமி பாதிப்பு தான் அல்சர். இதை போக்க உரிய வகையில் டாக்டரிடம் பரிசோதனை செய்து கண்டுபிடித்து அதற்கேற்ப சிகிச்சை செய்து கொள்வது தான் சரியானது. சிலருக்கு அறுவை சிகிச்சைக்கு பின், மலத்தில் ரத்தம் சேர்ந்து வரும்; காஸ் பிரச்னை இருக்கும். சரியான முறையில் பரிசோதிக்காமல், அறுவை சிகிச்சை செய்து விடுவதால் இப்படி நேர்வதுண்டு. ஆசனவாயில் பைல்ஸ் பாதிப்பு இருப்பது தெரியாமல், அல்சருக்கு சிகிச்சை பெறுவோரும் உண்டு. அல்சர் உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் போன்றவை ஏற்பட வாய்ப்பில்லை. அதனால், சரியான டாக்டரை அணுகி, தெரிந்து கொண்டபின் அல்சரா என்றும் உறுதி செய்வதே சரி.

தையல் போட்டதில் : இதயக் கோளாறு நீங்க, பைபாஸ் ஆபரேஷன் நடந்து முடிந்தபின், அந்த இடத்தில் சிலருக்கு சீழ் ஏற்படலாம்; தையல் பிரியலாம்; இன்னும் சொல்லப்போனால், தையல் போட்ட இழைகள் கூட வெளியே தெரியலாம். இதை உடனே டாக்டரிடம் சொல்லி விட வேண்டும். சிலருக்கு ஆண்டுக்கணக்கில் கூட இப்படிப்பட்ட நிலை நீடிக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு விரிவான சோதனை தேவை. சி.டி.ஸ்கேன் எடுத்த பின், காயத்துக்கு போடப் பட்ட தையல்களை மீண்டும் சரி செய்து, புதிய தையல் போட வேண்டும். இது தொடர்பாக,இதய அறுவை சிகிச்சை நிபுணரை சந்தித்து பரிசோதனை செய்வது முக்கியம்.

மார்பகம் பெரிதாக : மூக்கின் நீளத்தை குறைப்பது மட்டுமல்ல, மார்பகத்தை பெரிதாக்கும் நவீன அறுவை சிகிச்சைகள் வந்துவிட்டன. பிரபல மருத்துவமனைகளில் இதற்காக தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மார்பகம் பெரிதாக்கும் அறுவை சிகிச்சைக்கு குறைந்த பட்சம் ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறது. இந்த அறுவை சிகிச்சையால் ஆபத்தில்லை. ஆனால், திருமணமான பின், இதை செய்துகொள்ள டாக்டரிடம் முறையாக கருத்து கேட்பது முக்கியம்.

அப்பெண்டிக்ஸ் வலி : குடல் முனையில் ஏற்படும் அழற்சி, வீக்கம் தான் அப்பெண்டிக்ஸ் என்பது. லேப்ராஸ்கோப் முறையில் சிகிச்சை உண்டு. நான்கு நாளில் மாமூல் நிலைக்கு வந்துவிடலாம். ஆனால், அதிக எடை தூக்குவதோ, செக்ஸ் உறவு வைத்துக்கொள்வதோ உடனடியாக மேற்கொள்ளக்கூடாது. ஒரு மாதம் அல்லது ஆறு வாரம் வரை பொறுமையாக இருந்து, காயம் ஆறிய பின் வழக்கமான பணிகளை முழுமையாக மேற்கொள்ளலாம்.

அடிவயிற்றில் : சிலருக்கு அடிவயிற்றில் வலி இருக்கும். சில சமயம், வலது பக்கமும், சில சமயம் இடது பக்கமும் வலி இருக்கும். டாக்டர்கள் பரிசோதனையில் உடனடியாக தெரிய வராது என்பதால், பயத்தில் அப்பெண்டிக்ஸ் டாக்டர் உட்பட சில டாக்டர்களிடம் காட்டுவது உண்டு. சிலர் அப்பெண்டிக்ஸ் என்பர். சிலர், சிறுநீரக கல் இருப்பதாக கூறுவர். ஆனால், ரத்தப் பரிசோதனை, அல்ட்ராசோனோ கிராபி, சி.டி.ஸ்கேன் எடுத்தால், என்ன என்று கண்டுபிடித்துவிட முடியும்.

கருப்பை மாற்றம் : மாற்று கருப்பை அறுவை சிகிச்சை என்பது அரிய விஷயம். தொழில்நுட்ப ரீதியாக இது சிக்கலான விஷயம் இல்லை என்றாலும், நோயாளியின் உடலுக்கு ஏற்றுக் கொள்வது என்பது அரிதானது. இப்போது தான் பிராணிகள் மூலம் இதற்கான சோதனை நடந்துவருகிறது.

வாய் திறந்தபடியே : வயதான காலத்தில் சிலருக்கு, தூங்கும் போது வாய் மூடியிருக்கும்; மற்ற சமயங்களில் வாய் திறந்தபடியே இருக்கும். எப்போது பார்த்தாலும் எச்சில் வழிந்தபடியே கூட இருக்கும். இவர்கள் தூங்கும் போது பெரிதாக தெரியாவிட்டாலும், விழித்திருக்கும் போது, வாய் வலிக்கும். அதனால் வாய் மூட முடியாது. பேஷியல் சர்ஜன் மூலம் பரிசோதனை செய்தால் என்ன காரணம் என்று தெரியும். அவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெறலாம்.

%d bloggers like this: