சந்தேகமும் விளக்கமும் –

சந்தேகமும் விளக்கமும்

கேள்வி : எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சில வேளைகளில் ஓரிரு வரிசைகளில் மட்டும் டேட்டாக்களை அமைத்து ஒர்க் ஷீட் உருவாக்குகிறோம். இதனை பிரிண்ட் செய்கையில் அவை இடது மேல் மூலையில் அச்சிடப்படுவதால் பைல் செய்வது சிரமமாகிறது. இதனை அச்சிடும் பக்கத்தில் நடுவில் அமைக்க முடியுமா?

பதில்: எக்ஸெல் ஒர்க்ஷீட்டின் டேட்டாவை சென்டர் செய்து பிரிண்ட் செய்திடக் கேட்கிறீர்கள். இது எளிதுதான். முதலில் அந்த ஒர்க் ஷீட்டைத் திறந்து கொள்ளுங்கள். பின் பேஜ் செட் அப் விண்டோவினைத் திறந்து கொள்ளுங்கள்.

இதற்கு File   மெனு சென்று Page Setup   தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுங்கள். அல்லது நீங்கள் பிரிண்ட் பிரிவியூ விண்டோவில் இருந்தால் Setup பட்டனில் கிளிக் செய்திடுங்கள்.இனி Margins   டேப் பினை அழுத்தவும். இதன் கீழாக  Center on Page section  பேஜ் பிரிவைக் காணவும். இதில் உங்களுக்கு இரண்டு விதமான விருப்பத்தினை மேற்கொள்ளும் வகையில் ஆப்ஷன்ஸ் கிடைக்கும். நெட்டுவாக்கிலும் படுக்கை வாக்கிலும் டேட்டாவினை மையப்படுத்தலாம். இவ்வாறு தேர்ந்தெடுத்தவுடன் அச்சில் இது எப்படி இருக்கும் என்பதனை பிரிவியூவில் காணலாம். இது சரியானது என எண்ணினால் ஓகே கொடுத்து வெளியேறவும்.

கேள்வி: பிட்மேப் என்பது என்ன? டிஜிட்டல் போட்டோவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஜேபெக் பைலில் பிட்மேப் இருக்காதா?

பதில்: விளக்கம் எதுவும் இல்லாமல் இந்த சொல்லை ஏதேனும் குறிப்புகளில் படித்துவிட்டு இதனைக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அடிப்படையில் ஒரு டிஜிட்டல் கேமரா எடுக்கும் அனைத்து போட்டோக்களும் கம்ப்யூட்டரில் அமைக்கப்படுகையில் பிட் மேப்களால் உருவாக்கப்படுகின்றன. ஒரு படமானது கம்ப்யூட்டரில் புள்ளிகளால் (பிட்ஸ்) ஆன மேப் மூலம் கிடைக்கிறது. உங்கள் கம்ப்யூட்டர் ஸ்கிரீனிலிருந்து நீங்கள் விலகி இருந்து படங்களைப் பார்க்கையில் இவை உங்கள் கண்களுக்குத் தனித்து தெரியாது. படங்கள் எப்போதும் போலத் தோற்றமளிக்கும். ஆனால் மிக அருகே செல்கையில் இந்த புள்ளிகளை, அதாவது மேப்பினை, பார்க்கலாம். இந்த படத்தை எவ்வளவுக்கு எவ்வளவு பெரிதாக அமைக்கிறோமோ அந்த அளவிற்கு இந்த புள்ளிகளால் ஆன மேப் தெரியவரும். பிட் மேப்கள் பல வகையான பைல் பார்மட்களில் கிடைக்கின்றன. பி.எம்.பி. என்பது ஒரிஜினல் பிட்மேப் பார்மட் ஆகும். ஜேபெக், ஜிப், பிக்ட் மற்றும் டிப் (JPEG, GIF, PICT and TIFF)  என்பவை பிற பார்மட்களாகும்.

கேள்வி: செகண்ட் ஹேண்ட் பிரிண்டர் (எச்.பி.)ஒன்று வாங்கினேன். இந்த பிரிண்டர் அனைத்து வகைகளிலும் சரியாக அச்சாகும் என்று காண டெஸ்ட் பிரிண்ட் பேஜ் எடுக்க வேண்டும் என என் நண்பர் கூறுகிறார். அவ்வகை பிரிண்ட் பேஜினை எப்படி எடுப்பது?

பதில்: ஒரு பிரிண்டர் சரியாக அனைத்து கேரக்டர்களையும் பல அளவுகளில் பிரிண்ட் செய்கிறதா என்பதனை அறிய டெஸ்ட் பேஜ் பிரிண்ட் எடுத்துப் பார்க்கலாம். இந்த டெஸ்ட் பிரிண்ட் எடுக்க பிரிண்டரில் கொடுத்துள்ள சில குறிப்பிட்ட பட்டன்களை ஒரு சேர அழுத்தி எடுக்கலாம். ஆனால் எந்த பட்டன்கள் என்பது பிரிண்டருக்கு பிரிண்டர் மாறுபடும். இதற்கு வேறு ஒரு வழியும் உள்ளது.   Start, Control Panel  சென்று அங்கு Printers and Other Hardware   என்னும் பிரிவில் கிளிக் செய்திடவும். பின் இதில் கிடைக்கும் பிரிவுகளில் Printers and Faxes   என்னும் பிரிவினைக் கிளிக் செய்திடவும். இங்கு உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள, இணைக்கப்பட்டுள்ள அனைத்து பிரிண்டர்களின் பட்டியல் இருக்கும். வழக்கமாக ஒரு பிரிண்டர் தான் நாம் வைத்திருப்போம். அல்லது இரண்டு இருக்கலாம். இதில் எந்த பிரிண்டரில் டெஸ்ட் பேஜ் எடுக்க விரும்புகிறீர்களோ அந்த பிரிண்டரைத் தேர்ந்தெடுக்கவும். அதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties   தேர்ந்தெடுக்கவும். பின் Properties   பாக்ஸ் மேலெழுந்து வரும். இதில் உள்ள டேப்களில் General  டேபினைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் பாக்ஸில் கீழாகப் பார்த்தால் Print Test Page   என்ற பட்டன் இருக்கும். இதில் கிளிக் செய்தால் உங்கள் பிரிண்டர் டெஸ்ட் பேஜ் ஒன்றை பிரிண்ட் செய்து கொடுக்கும்.

கேள்வி: நான் இன்டர்நெட்டில் கல்வி சம்பந்தமான வெப்சைட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில் கீழ்க்கண்டவாறு சில செய்திகள் வந்து தொடர்ந்து பார்க்க இயலாமல் போனது. இது எதனால் ஏற்படுகிறது? என்னுடையபிரவுசர் இன்டர் நெட் எக்ஸ்புளோரர் 7. இதனை மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டுமா?

An error has occurred in the script on this page
Line: 35 char. 3725
Error: Expected identifier Code: 0
URL: mhtml:ml
Do You Want to continue running scripts on this page?
Yes No

பதில்: உங்களுடைய பிரவுசரில் ஒரு பிரச்னையுமில்லை. இது நீங்கள் பார்த்துக் கொண்டிருந்த இணையப் பக்கத்தின் வடிவமைப்பில் தான் கோளாறு. அந்த பக்க வடிவமைப்பில் இருந்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எதையோ எதிர்பார்த்தது. அது அங்கு சரியாக அமைக்கப்படவில்லை.உடனே இந்த பிழைச் செய்தியினை தந்துள்ளது. நோ பட்டனை அழுத்திவிட்டு சற்று சாய்ந்து உட்கார்ந்து என்ன நடக்கிறது என்று பாருங்கள். சில வேளைகளில் தொடர்ந்து அந்த பக்கம் உங்களுக்குக் கிடைக்கலாம். அல்லது கிடைக்காமல் போகலாம். அல்லது பிரவுசரில் உள்ள ரெப்ரெஷ் பட்டனை கிளிக் செய்து அந்த தளத்தை மீண்டும் இறக்கிப் பார்க்கலாம். அந்த பக்கத்தில் வசதி இருந்தால் அந்த தளத்தை அமைத்த வெப் மாஸ்டருக்கு இந்த பிழைச் செய்தியை இமெயில் மூலம் அனுப்பலாம். அப்போது உங்கள் கம்ப்யூட்டர் என்ன வகை, என்ன பிரவுசர் பயன்படுத்தினீர்கள் என்ற விபரங்களைத் தர வேண்டும்.

கேள்வி: வேர்டில் ஒரு டெக்ஸ்ட்டை செலக்ட் செய்தால் அது என்ன எழுத்துவகையில் எழுதப்பட்டுள்ளது என்றும் எழுத்தின் பாய்ண்ட் அளவு என்றும் காட்டப்படும். ஆனால் சில வேளைகளின் என் வேர்ட் தொகுப்பில் எதுவும் காட்டப்படாமல் வெற்றிடமாக உள்ளது. ஏன்?

பதில்: நீங்கள் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட் முழுவதும் ஒரே எழுத்துவகையாகவும் ஒரே அளவாகவும் இருந்தால் நிச்சயம் வேர்ட் எழுத்து வகையின் பெயரையும் அளவையும் காட்டும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்து வகையோ அல்லது அளவோ பயன்படுத்தப்பட்டிருந்தால் வேர்ட் எதைக் காட்டும்? எனவே வெற்றிடத்தைக் காட்டுகிறது. டெக்ஸ்ட்டின் எழுத்துவகையை மாற்றுவதோ அல்லது அளவை மாற்றுவதோ உங்கள் நோக்கமாக இருந்தால் எழுத்துவகை பெயர் கட்டம் சென்று தேவையான எழுத்துவகையினைத் தேர்ந்தெடுத்து மாற்றலாம்.

%d bloggers like this: