பருக்கள் உங்கள் அழகை கெடுக்கிறதா? : நீங்களும் அழகு ராணி தான்

பருக்கள் உங்கள் அழகை கெடுக்கிறதா? : நீங்களும் அழகு ராணி தான்

பெண்களுக்கு டீன்ஏஜ் வயது தொடங்கிவிட்டாலே, நாம் அழகாக இருக்கிறோமோ இல்லையா என்ற சந்தேகம் வந்துவிடும். கண்ணாடி முன் நின்று அடிக்கடி முகத்தை பார்த்து கொள்வர். முகத்தில் ஒன்றிரண்டு பருக்கள் வந்தாலே போதும், தனது அழகே போய் விட்டதாக எண்ணி மிகவும் வருத்தப்படுவர். டீன் ஏஜில் பருக்கள் வருவது இயல்பு தான். அதை தவிர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.

பருக்கள் வருவதற்கான காரணங்கள்:

* எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக சுரப்பதால் பருக்கள் வரலாம்.
* சருமத்தை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் பருக்கள் வரலாம்.
* பெரும்பாலும் மாதவிடாய் காலங்களில் பருக்கள் வரலாம்.
* அதிக நேரம் வெயிலில் அலைந்தால் உஷ்ணமும், தூசியும் கலந்து பருக்கள் உண்டாகலாம்.

பருக்கள் தோன்றினால் செய்யக் கூடாதவை:

* அடுத்தவர் பயன்படுத்திய சோப், டவல் போன்றவற்றை பயன் படுத்தக் கூடாது.
* பருக்கள் உள்ளவர்கள் காபி, டீ, கோகோ கலந்த பானங்களை அருந்தக் கூடாது.
* சிப்ஸ், சாக்லேட் போன்ற கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* நகம் விஷத்தன்மை உடையது. எனவே, பருக்களை நகத்தினால் கிள்ளக் கூடாது. அப்படி செய்தால் பருக்கள் இன்னும் அதிகமாக பரவிடுமே தவிர குறையாது.
* உஷ்ணக்காற்று முகத்தில் படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
* பொடுகு இல்லாமல் கூந்தலை பராமரிக்க வேண்டும். தலையணை உறையை அடிக்கடி துவைக்க வேண்டும். தலையிலிருந்து பொடுகு உதிர்ந்து தலையணையில் விழும். அதில் முகத்தை வைத்து படுக்கும் போது பருக்கள் தோன்றும்.
பருக்களுக்கு வீட்டிலேயே செய்து கொள்ளும் சிகிச்சை முறைகள்:

முகத்தில் பருக்கள் வந்துவிட்டால், பார்லருக்கு போய் தான் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பருக்களை அகற்றுவதற்கான சிகிச்சையை செய்து கொள்ளலாம்.

அதற்கான எளிய டிப்ஸ்கள்:

* ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை, ஒரு டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு துடைத்து விடவும். சருமத்தில் உள்ள எண்ணெய் நீங்கி பருக்கள் வராமல் பாதுகாக்கும்.பார்லர்களில் இதே சிகிச்சையை ஆரஞ்சு பீல் மாஸ்க் என்ற பெயரில் செய்கின்றனர்.
* வேப்பிலை பொடி, துளசி பொடி, புதினா பொடி ஆகியவை தலா ஒரு டீஸ்பூனும், முல்தானி மட்டி இரண்டு ஸ்பூன்களும் எடுத்துக் கொள்ளவும். மிதமான சுடுநீரில் அவற்றை கலந்து முகப்பருக்களில் தடவவும். இந்த கலவையை கண்களுக்கு அடியில் தடவக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளலாம்.
* இரண்டு ஸ்பூன்கள் ஓமவல்லி இலைச்சாறுடன், ஒரு ஸ்பூன் சிவப்பு சந்தனத்தை கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் பருக்கள் தொல்லை நீங்கும்.
* சோற்றுக் கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. அவற்றின் நடுவில் இருக்கும் பசையை எடுத்து, அதில் சம அளவு நீரைக் கலந்து முகத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
* ஒரு ஸ்பூன் அருகம்புல் பொடியும், குப்பமேனி இலைப் பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போடலாம்.
* பன்னீர் ரோஜா மொட்டுக்களை எடுத்து, அது நனையும் அளவு சூடான தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அந்த நீரை வடிகட்டி முகத்தில் பூசி அரைமணி நேரம் ஊறிய பின் துடைத்து எடுக்கவும்.
* சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு இழைத்து முகத்தில் தடவினால், பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.
* தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையினால், துவாரங்களில் உள்ள அழுக்கு நீக்கி பருக்கள் வராமல் தடுக்கலாம்.

மேற்கூறிய எளிய சிகிச்சை முறைகளை அடிக்கடி செய்து வந்தால், பருக்களும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் மறைந்து முகம் பொலிவு பெறும்.

எத்தனை முறை முகம் கழுவலாம்? :

பருக்கள் வராமல் இருக்க, சிலர் அடிக்கடி முகத்தை கழுவி கொண்டே இருப்பர். இப்படி அடிக்கடி முகம் கழுவுவதால், சருமம் தன்னுடைய இயற்கை எண்ணெய் தன்மையை இழக்கிறது. வறண்ட சருமம் உள்ளவர்கள் நாளொன்றுக்கு இரண்டு முறையும், எண்ணெய் பசையுடன் கூடிய சருமம் உள்ளவர்கள் நான்கைந்து முறையும், நார்மல் சருமம் உள்ளவர்கள் மூன்று முறையும் முகம் கழுவலாம்.

%d bloggers like this: