கேள்வி: பல இணைய தளங்களைப் பார்வை யிடுகையில் இந்த இடத்தில் கிளிக் செய்திடவும் என்ற செய்தி கிடைக்கிறது. இதில் கிளிக் செய்தால் உடனே ஏதாவது அனிமேஷன் புரோகிராம் இயங்குகிறது. இதனை கிளிக் செய்திடுகையில் என்ன நடக்கிறது?
பதில்: இது குறித்து கொஞ்சம் விவரமாகத்தான் எழுத வேண்டும். உங்களில் பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். வெப் பிரவுசிங்கில் ஈடுபடுகையில் அதில் ஏதேனும் பிளாஷ் அனிமேஷன் வழி தகவல் இருந்தால் இதனைச் செயல்படுத்த கிளிக் செய்திடவும் (“Click to activate and use this control”) என்ற செய்தி தரப்பட்டிருக்கும். பிளாஷ் பிளேயர் மட்டுமின்றி ஷாக் வேவ் மற்றும் ஆதர்வேர் பிளேயர், அடோப் ரீடர், சன் ஜாவா, ரியல் பிளேயர், குயிக்டைம் பிளேயர் போன்ற தொகுப்புகளின் மூலம் இயக்கப்பட வேண்டிய அனைத்திற்கும் இந்த செய்தி இருக்கும். இதில் உள்ள சங்கதி நீங்கள் மவுஸைக் கிளிக் செய்திடாமல் இயங்காது. கிளிக் செய்திட்டபின் அனிமேஷன் அல்லது மற்ற தகவல்கள் தளத்தின் சர்வரிலிருந்து இறங்கத் தொடங்கி இயக்கப்படும். இவ்வகையான செயல்பாடு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6க்கான சில அப்டேட் பைல்கள் வந்த பின்னர் தொடங்கியது. தற்போது இது பெரும்பாலான இணைய தளங்களில் உள்ளது. இத்தகைய செய்தி கிடைக்கையில் சுட்டப்பட்டுள்ள இடத்தில் ஒருமுறை கிளிக் செய்தால் போதும். இருந்தாலும் இத்தகைய ஏற்பாடு பலருக்கு கூடுதல் வேலையாகத் தான் தோன்றுகிறது.
கேள்வி: எக்ஸெல் மற்றும் வேர்ட் தொகுப்பில் டெக்ஸ்ட் ஒன்றை பேஸ்ட் செய்தால் அதன் அருகே சிறிய சதுரக் கட்டம் ஒன்று தொங்கிக் கொண்டே இருக்கிறது. இதனைத் தவிர்க்க முடியாதா? அந்த இடத்தில் பேஸ்ட் செய்ததை இது சுட்டிக் காட்டுகிறதா?
பதில்: பேஸ்ட் செய்ததைச் சுட்டிக் காட்டுவதற்கு மட்டும் இல்லை. இதில் ரைட் கிளிக் செய்தால் பேஸ்ட் செய்த டெக்ஸ்ட்டின் பார்மட்டை திருத்துவதற்கான ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இது நல்லதொரு வசதிதான் என்றாலும் உங்களைப் போன்ற பலருக்கு பிடிக்கவில்லை என்றால் இது போன்ற சிறிய ஐகான் வராமல் செட் செய்திடும் வசதியும் தரப்பட்டுள்ளது. எக்ஸெல் தொகுப்பில் ஒர்க் ஷீட்டைத் திறந்த பின் Tools கிளிக் செய்து Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுங்கள். இதில் கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் Edit என்னும் டேபினைத் தட்டவும். கிடைக்கும் பல வரிகளில் Show Paste Options buttons என்ற வரியைக் கண்டு அதன் எதிரே உள்ள கட்டத்தில் காணப்படும் டிக் அடையாளத்தின் மீது மவுஸ் கர்சரைக் கொண்டு கிளிக் செய்தால் டிக் அடையாளம் எடுக்கப்பட்டுவிடும். பின் OK கிளிக் செய்து வெளியேறவும். வேர்டிலும் இதே போல் அமைக்கலாம்.
கேள்வி: ஆப்டிகல் மவுஸ், வயர்லெஸ் மவுஸ் போக வேறு மவுஸ்கள் உள்ளனவா? அவை என்ன
பதில்: நிறைய உள்ளன. கார்ட்லெஸ் மவுஸ் எனப்படும் வயர்லெஸ் மவுஸ், புட் மவுஸ் (கால்களில் இயக்கலாம்; எனவே கரங்கள் தடையின்றி கீ போர்டில் இயங்கலாம்) டச்பேட் அல்லது கிளைட் பாயின்ட் மவுஸ், வீல் மவுஸ், ஆப்டிகல் மவுஸ், ஜே மவுஸ், இன்டெல்லி மவுஸ் எனப் பலவகைகள் உள்ளன. இப்போது பரவலாக அனைவரும் பயன்படுத்துவது ஆப்டிகல் மவுஸ்தான். இதனை மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் வழங்குகின்றன. கம்ப்யூட்டர் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் பிற நிறுவனங்களின் மவுஸ்களை வாங்கித் தங்கள் நிறுவனப் பெயர்களில் இவற்றை வழங்கும் பழக்கமும் உள்ளது.
கேள்வி: அண்மையில் விண்டோஸ் பதிப்பு 6 லிருந்து 7க்கு மாறினேன். வெப் தளத்தை சேவ் செய்திட முயன்றால் அதற்கான மெனு கிடைக்கவில்லை. ஏன் இது தரப்படவில்லை. இதற்கு என்ன வழி? வைரஸ் வந்து மறைக்கிறதா?
பதில்: வைரஸ் எதுவும் இல்லை, சின்னதுரை. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7ல் இது மறைத்து வைக்கப்பட்டு உங்கள் இணைய தேடலுக்கு மானிட்டரில் அதிக இடம் கொடுக்கப் பட்டுள்ளது. இந்த மெனு பாரினை அடூt பட்டன் அழுத்தினால் கிடைக்கும். எனவே உங்களை அறியாமல் நீங்கள் Alt பட்டனை அழுத்துகையில் அது தெரிகிறது.
பின் மீண்டும் மறைந்துவிடுகிறது. இது நிரந்தரமாகக் காட்சி அளிக்க முதலில் Alt பட்டனை அழுத்தி மெனு பாரினைப் பெற்றுக் கொள்ளுங்கள். பின் View பிரிவில் கிளிக் செய்தால் வரும் மெனுவில் Tools பார் என்பதை அழுத்தவும். பின் அதில் கிடைக்கும் துணை மெனுவில் Menu bar என்பதற்கு முன் டிக் அடையாளத்தை மவுஸின் துணை கொண்டு ஏற்படுத்தவும். இனி மெனு பார் நிரந்தரமாக உங்களுக்குக் கிடைக்கும்.
கேள்வி: என் கம்ப்யூட்டரில் வேர்ட் பயன்படுத்துகையில் மேலாக படுக்கை வசத்தில் ரூலர் கிடைக்கிறது. ஆனால் இடது பக்கம் ரூலர் தெரியவில்லை. ஏன் என்னுடையதில் மட்டும் மறைக்கப்பட்டுள்ளது.
பதில்: உங்களுக்கு மட்டும் ஏன் மறைக்கப்பட வேண் டும்? நீங்கள் அதனை இயக்கி வைத்துக் கொள்ளலாம். செட் செய்ய வேண்டிய வழிகளைப் பார்க்கலாமா? நீங்கள் விரும்பும் இடது பக்க ரூலர் பிரிண்ட் வியூவில் மட்டுமே கிடைக்கும். Tools கிளிக் செய்து பின் Options கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவைக் கவனிக்கவும். இதில் உள்ள பல டேப்களில் View என்ற டேபினைக் கிளிக் செய்திடவும். இங்கு நான்கு பிரிவுகள் இருக்கும. இதில் மூன்றாவது பிரிவான Print and Web Layout Options என்ற பிரிவிற்குச் செல்லவும். அதில் Vertical Ruler (Print Layout only ) என்று இருப்பதன் முன் உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் வேர்ட் டாகுமெண்ட்டில் இடது பக்கமும் ரூலர் தெரியும். ஆனால் வேர்ட் டாகுமெண்ட் வியூ பிரிண்ட் லே அவுட் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
கேள்வி: என் வேர்ட் தொகுப்பில் இருந்த டூல்பார் திடீரென மறைந்துவிட்டது. டாப் ரூலருக்கு மேலே எதுவும் இல்லை. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ரெகவரி டிஸ்க்கினையும் பயன்படுத்தி பார்த்துவிட்டேன். சரியாகவில்லை. இதற்கு என்ன காரணம்? எப்படி டூல்பாரினை மீண்டும் அமைப்பது?
பதில்: வேர்ட் எப்போதும் எந்த எந்த டூல்பார்களை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்கள் என்ற தேர்வை உங்களிடமே விட்டுவிடுகிறது. அதே போல அனைத்து டூல் பார்களையும் கூட வேண்டாம் என்று நீங்கள் அமைக்கலாம். இவ்வாறு மறைப்பதற்கான தேர்வை நீங்கள் உங்களை அறியாமல் எடுத்திருக்கலாம். அல்லது வேர்ட் தொகுப்பில் முழுத்திரையும் (full screen) காட்டும் வகையில் நீங்கள் செட் செய்திருக்கலாம். இந்த வகைத் தேர்வில் அனைத்து டூல்பார்களும் மறைந்து போகும். அப்படியானால் Alt + V அழுத்தவும். இப்போது View மெனு கிடைக்கும். இதில் U அழுத்தவும். உடனே நார்மல் வியூ கிடைக்கும். இந்நிலையிலேயே வேர்ட் தொகுப்பை மூடவும். இனி மீண்டும் வேர்ட் இயக்குகையில் full screen க்குச் செல்லாது. பின் View மெனு அழுத்தி அதில் டூல் பாரினையும் அழுத்தி உங்களுக்கு என்ன என்ன டூல் வேண்டுமோ அவற்றை டிக் செய்து பெறவும்.