. எம்.பி.3 பிளேயர் வாங்கலாமா….

எம்.பி.3 பிளேயர் வாங்கலாமா….

மிக பிரபலமான மியூசிக் சாதனமாகவும் அனைவரும் பயன்படுத்தும் ஒரு எளிதான டிஜிட்டல் பொருளாகவும் இன்று அனைவரிடமும் காணப்படுவது எம்பி3 பிளேயராகும். இவற்றில் பல்வேறு மாடல்கள் பலவகை வசதிகளுடன் இன்று மார்க்கட்டில் கிடைக்கின்றன. ஒரு எம்பி3 பிளேயரை வாங்குவது என்று முடிவெடுத்தால் அதில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று பார்ப்போமா!!

மெமரி: ஒரு எம்பி3 பிளேயரில் மிக முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது மெமரியாகும். எனவே எந்த அளவிற்கு அதிக மெமரி உள்ளதோ அதுவே சிறப்பானதாகும். இதனால் நாம் அதிகமான எண்ணிக்கையில் பாடல்களைப் பதிந்து வைத்துப் பயன்படுத்தலாம்.

ஆடியோ – வீடியோ பார்மட்: ஒரு எம்பி3 பிளேயர் அதிகமான எண்ணிக்கையில் ஆடியோ –வீடியோ பார்மட்டுகளை சப்போர்ட் செய்தால் அது நமக்கு கூடுதல் வசதியைத் தரும். இதனால் சப்போர்ட் செய்யாத பார்மட்டுகளை வேறு பார்மட்டுகளுக்கு மாற்ற வேண்டும் என்கிற சூழ்நிலைக்கு நாம் ஆளாக வேண்டியதில்லை. அதற்கான சாப்ட்வேர் தொகுப்புக்கு அலைய வேண்டாம். தற்போது புழக்கத்தில் உள்ள எம்பி3 பார்மட் என்று எடுத்துக் கொண்டால் MP3, WMA, FLAC, Ogg Vorbis மற்றும் WAV ஆகியவற்றைக் கூறலாம். வீடியோ பார்மட் என நாம் பார்க்கையில் பழக்கத்தில் உள்ளவை MPEG1, MPEG4, DivX, XviD மற்றும் WMV ஆகும். இவற்றுடன் ஆடியோ ஈக்குவலைசர் மற்றும் பேண்ட்ஸ் இருந்தால் ஒலி வெளிப்பாடு நாம் விரும்பிய வகையில் இருக்கும்.

செயல்பாடுகள்: ஒரு எம்பி3 பிளேயர் என்னவெல்லாம் கொண்டுள்ளது; எப்படியெல்லாம் செயல்படுகிறது என்று பார்க்க வேண்டும். Functionality என ஆங்கிலத்தில் இதனை அழைப்பார்கள். இந்த வகையில் பெரும்பாலான எம்பி3 பிளேயர்கள் நாம் விரும்பும் வசதிகளோடு சில கூடுதல் வசதிகளையும் கொண்டிருக்கும். ஆனால் அனைத்தையும் நாம் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் எப்போதாவது இவற்றைப் பயன்படுத்துவோம் என்ற வகையில் கூடுதல் வசதிகளைக் கொண்டதையே வாங்க வேண்டும்.

கூடுதல் வசதிகள்: டெக்ஸ்ட் வியூவர், பிக்சர் வியூவர், வீடியோ பிளேயர், எப்.எம். ரேடியோ மற்றும் வாய்ஸ் ரெகார்டர் ஆகியவை இன்றைய எம்பி3 பிளேயரில் கிடைக்கும் கூடுதல் வசதிகள். இவை இருப்பது அதன் பயன்பாட்டினைக் கூடுதலாக்கும். இந்த வரிசையில் பிளே லிஸ்ட் உருவாக்க வசதி அனைவருக்கும் பயன்படும். அதிகமான எண்ணிக்கையில் பாடல்கள் இருக்கையில் நாம் ஒவ்வொரு பாடலுக்கும் தேடித்தேடி அவற்றைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடியாது.

நாம் பாடல் கேட்கும் ஆர்வத்தினையே இது கெடுத்துவிடும். பிளே லிஸ்ட் மூலம் நாம் அவ்வப்போது கேட்க வேண்டிய பாடல்களின் பட்டியலை உருவாக்கி பயன்படுத்தலாம். இதனை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இன்னொரு முக்கிய வசதி நேரடியாக ரெகார்ட் செய்யக்கூடிய திறன். எப்.எம்.ரேடியோ, வீடீயோ அல்லது வேறு ஆடியோ சாதனங்களிலிருந்து இணைப்பு மூலம் பெறக்கூடிய ஆடியோ அலைகளை அதே பார்மட்டில் அப்படியே ரெகார்ட் செய்து கொள்ளக் கூடிய வசதி பல நேரங்களில் நமக்குப் பிரியமான பாடலை நாம் பதிவு செய்து கொள்ள உதவும்.

பேட்டரி: வழக்கமான பென் டார்ச் லைட் பேட்டரிகளைக் (AA Alkaline) காட்டிலும் லித்தியம் அயன் பேட்டரிகள் வெகுநாட்கள் உழைக்கக் கூடியவை. கூடுதல் நாட்கள் பயன் தரக் கூடிய பேட்டரிகள் இருப் பது தங்கு தடையற்ற பயன் பாட்டினைக் கொடுக்கும்.

முழுமையான பாடல்: ஒரு பாடல் இசைக்கப்படுகையில் அதில் பயன்படுத்தப்பட் டுள்ள அனைத்து இசைக்கருவிகளிலிருந்து வெளிப்படும் ஓசைகளும் நமக்குக் கேட்க வேண்டும். ஏதாவது ஒரு நிலையில் ஒலிக்கப்படும் இசை தெளிவாக நம்மை அடையவில்லை என்றால் அந்த பிளேயரில் பயன்படுத்தப்படும் ஹெட்செட் சரியாக இல்லாமல் இருக்கலாம். ஹெட்செட் நல்லதாக இருந்து ஒலி சரியாகக் கேட்க முடியாத நிலை இருப்பின் அது எம்பி3 பிளேயரின் தரக் குறைவையே காட்டுகிறது.

தோற்றம்: ஒவ்வொரு எம்பி3 பிளேயரும் ஸ்டைலாகத் தோற்றம் அளிப்பதனையே நாம் விரும்புவோம். மேலும் ஸ்டைலாக இருப்பது மட்டுமின்றி அதன் மீது கீறல்கள் ஏற்படா வண்ணம் மேல் பூச்சு இருக்க வேண்டும். எப்போதும் சிறிய எடை குறைந்த எம்பி3 பிளேயர்கள் ஸ்டைலான தோற்றத்தையும் பயனுள்ள அமைப்பையும் கொண்டிருக்கும்.

தேடிக் காணல்: ஒரு எம்பி3 பிளேயரில் உள்ள பாடல்களை நாம் எளிதில் தேடி அறியக் கூடிய வசதி தரப்பட்டிருக்க வேண்டும். ஜாக் டயல், டச் ஸ்கிரீன் போன்றவை பாடல்களைத் தேடுவதை எளிமையாக்குகின்றன. மற்றவை மூலம் தேடுவது சற்று சிரமமான செயலாகவும் அதிக நேரம் எடுக்கும் வேலையாகவும் இருக்கும். இவ்வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் எம்பி3 பிளேயர்கள் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

வாரண்டி: பொதுவாக எம்பி3 பிளேயர்களுக்கு ஓராண்டு வாரண்டி தரப்படுகிறது. சில பிளேயர்கள் 3 ஆண்டு வாரண்டியுடன் வருகின்றன. கூடுதல் வாரண்டி தரும் பிளேயர்களை வாங்குவது நமக்கு அதிக பாதுகாப்பானது. அதற் கென சற்று கூடுதலாக பணம் செலுத்துவதனைப் பொருட்படுத்தக் கூடாது.

விலையும் வசதிகளும்: டிஜிட்டல் சாதனம் ஒன்றை வாங்குகையில் நமக்கென ஒரு பட்ஜெட் இருக்கும். அதே சமயத்தில் அவ்விலைக்குள்ளாக அதிக பட்ச வசதிகளும் அதிக நாள் உழைக்கக் கூடிய சாதனத்தையும் வாங்க வேண்டும். சில பிளேயர்கள் குறைந்த விலையில் சிறப்பாக இயங்கும் தன்மை கொண்டிருக்கும்.வெறுமனே பாடல் மட்டும் கேட்க வேண்டும் என எண்ணினால் அவற்றையே வாங்குவது சிறந்தது. சில அனைத்து கூடுதல் வசதிகளையும் கொண்டிருக்கும். எனவே நமக்குத் தேவையான வசதிகள் எவை என்று முடிவு செய்து அவற்றைத் தரும் எம்பி3 பிளேயர்களில் சிறந்த தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தும் பிளேயராகத் தேர்ந்தெடுத்து வாங்கலாம்.

பிளாஷ் / ஹார்ட் டிரைவ்: எம்பி3 பிளேயர்களில் இருவகை டிரைவ் தரப்படுகின்றன –– பிளாஷ் மெமரி அடிப்படையிலான டிரைவ் மற்றும் ஹார்ட் டிரைவ். இந்த இரண்டிற்கும் இடையேயான வேறுபாடு அதன் கொள்ளளவுதான்.

பிளாஷ் மெமரி அடிப்படையிலான டிரைவ்கள் அதிக பட்சம் 8 ஜிபி அளவில் மெமரி கொண்டிருக்கும். ஹார்ட் டிரைவ்களில் 80 ஜிபி வரை மெமரி இருக்கும். ஆனால் ஹார்ட் டிரைவ் கொண்டவை சற்று பெரியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே இவற்றைப் பொதுவாக யாரும் விரும்புவதில்லை. இவ்வகையில் நாம் பார்க்க வேண்டியது பைல் ட்ரான்ஸ்பர் வசதிதான். யு.எஸ்.பி. போர்ட் மூலம் பிற சாதனங்களை இணைத்து பைல்களை இரண்டிற்கும் இடையே பரிமாறிக் கொள்ள முடிகிறதா என்று கவனிக்க வேண்டும்.

இந்த வசதி இருந்தால் நம்மால் எளிதில் பாடல்கள் அடங்கிய பைல்களை பிற சாதனங்களிலிருந்து மாற்றிப் பயன்படுத்த முடியும். அண்மைக் காலத்தில் பல புதிய வடிவமைப்புகளில் எம்பி3 பிளேயர்கள் வந்துள்ளன. மேஜையில் அழகுக்காக வைக்கப்படும் பொருட்களின் வடிவிலும் பொம்மைகளாகவும் இவை தோற்றமளிக்கின்றன. ஏன், பெரிய ஹெட்செட்டிற்குள்ளாக அமைந்த எம்பி3 பிளேயர்கள் தற்போது பிரபலமாகி வருகின்றன. இவற்றில் உங்கள் பட்ஜெட் டிற்குள் கூடுதலாக வசதிகளைத் தரும் எம்பி3 பிளேயர்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிப் பயன் படுத்துங்கள்.

One response

  1. […] எம்.பி.3 பிளேயர் வாங்கலாமா…. […]

%d bloggers like this: