பிராட் பேண்ட் ஹெல்ப் லைன்

பிராட் பேண்ட் ஹெல்ப் லைன்

பிராட் டேண்ட் இன்டர்நெட் இணைப்பு பெறுவது எதிர்பார்த்த அளவில் உயரவில்லை என்றாலும் தொடர்ந்து பலரும் இதற்கு மாறிக் கொண்டுதான் இருக்கின்றனர். பிராட் பேண்ட் இணைப்பிற்கு மாறியபின் அதற்கு அடிமையாகி தினந்தோறும் சில தளங்களைப் பார்க்காவிட்டால், இமெயில்களை செக் செய்யாவிட்டால், நண்பர்களுடன் அரட்டையில் இறங்காவிட்டால் பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிடுகின்றனர்.

எனவே தான் திடீரென பிராட் பேண்ட் இணைப்பு கிடைக்காவிட்டால் எரிச்சல், கோபம்,ஏன் இரத்த அழுத்தமும் எகிறத் தொடங்குகிறது. 100 நாள் சரியாக இணைப்பு கிடைத்தபின்னர் ஏதேனும் ஒரு நாளில் இணைப்பு கிடைக்கவில்லை என்றால் உடனே “இணைப்பினை தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் சுத்த மோசம்;

அடுத்த முறை வேறு ஒரு நிறுவனத்திற்கு மாறினால் தான் இவர்களுக்கெல்லாம் பொறுப்பு வரும்’ என்று எண்ணத் தொடங்கி விடுகின்றனர். உடனே இவர்கள் அழைப்பது அந்நிறுவனம் வழங்கும் 24 மணி நேர சேவையைத்தான். எந்நேரமும் சேவை வழங்கும் இவர்களின் தொடர்பு கிடைத்தவுடன் தனக்கு எப்படி இணைப்பு கிடைக்கவில்லை; எப்போது இணைப்பு கிடைக்கவில்லை என்று தொடங்கி இன்று கட்டாய வேலை இருக்கிறது, இப்படி செய்கிறீர்களே என்று போய் இறுதியில் நமக்குப் பொறுமையாகப் பதில் சொல்லும் அவர்களிடம் பொறுமை இழந்து கத்தவோ திட்டவோ தொடங்கி விடுகின்றனர். ஏன் இந்த கோபம்? இயந்திரங்கள் செய்யும் தவறுக்கு பாவம் அவர் என்ன செய்வார்? என்றெல்லாம் இங்கு நாம் யோசிக்க மறந்து விடுகிறோம். இது போன்ற நேரத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பார்ப்போமா?

1.முதலில் திட்டுவதையோ குறை கூறுவதையோ நிறுத்தவும். நாம் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருப்பவர் நமக்கு உதவத்தான் இருக்கிறார் என்ற எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும்.

நம் கம்ப்யூட்டரில் என்ன பிரச்னை, இணைப்பில் என்ன பிரச்னை என்று அறிய அவர் தொடக்கத்திலிருந்து பிரச்னையை அறிந்து கொள்ள சில கேள்விகள் கேட்கலாம்; அவை சிறுபிள்ளைத்தனமாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அவையெல்லாம் உங்களுக்குத் தெரியும் என்று அவருக்கு எப்படி தெரியும்? எனவே உரக்கப் பேசக் கூடாது என்று முடிவெடுத்து பொறுமையுடன் சேவை மைய உதவியாளரிடம் பேச்சு கொடுக்கவும்.

2. சேவை உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளுமுன் சில அடிப்படைத் தகவல்களைத் தர தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய கம்ப்யூட்டர் இயக்கத் தொகுப்பின் பதிப்பு (விண்டோஸ் / விஸ்டா / சர்வீஸ் பேக்) பிரவுசர் பெயர், பதிப்பு, புதிதாக இன்ஸ்டால் செய்த தொகுப்பின் பதிப்பு எண், உங்கள் பிரச்னை குறித்து சுருக்கமான தொகுப்பு, ஏதாவது பிழைச் செய்தி கிடைத்திருந்தால் அதன் டெக்ஸ்ட், பிழைச் செய்திக்கான கோட் எண் இருந்தால் அந்த எண் போன்றவற்றை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இவை அனைத்தையும் ஒரு வேளை உங்களால் முன்னரே தெரிந்து கொள்ள இயலவில்லை என்றால் எதை அறிய முடியவில்லை என்பதனை தெளிவாக சேவை மைய உதவியாளரிடம் கூறி அதனை எப்படி பெறுவது என்பதையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

3. தேவையில்லாத தகவல்களைக் கூற வேண்டாம். எடுத்துக் காட்டாக போன மாதம் இதே போல பிரச்னையை அந்த ஊரில் இருக்கும் என் தம்பிக்கு வந்தது போன்ற தகவல் எல்லாம் தருவதில் பயன் இல்லை.

4. பிரச்னை குறித்து இமெயில் அனுப்புகிறீர்களா? அப்படியானால் உங்கள் இமெயில் முகவரியினைச் சரியாக அமைத்து அனுப்புகிறீர்களா? என்பதனை உறுதி செய்து கொள்ளவும். அந்த இமெயில் முகவரிக்கு வரும் கடிதங்களை ரெகுலராக நீங்கள் பார்க்கும் பழக்கமுடையவராக இருக்க வேண்டும். அடுத்து உங்கள் போன் எண் தந்தால் உங்கள் ஊர் எஸ்.டி.டி. கோட் மற்றும் அந்த எண் உங்கள் அலுவலக எண் என்றால் எப்படி உங்கள் தொடர்பைக் கேட்டுப் பெறுவது என்பதனைத் தெளிவாகக் கூறவும்.

5. சேவை மைய உதவியாளரிடம் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். இது எந்த பலனையும் அளிக்காது. மேலும் இரண்டாவது முறை மையத்தினைத் தொடர்பு கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் தயங்காமல் தொடர்பு கொள்ளவும். இந்த முறை வேறு ஒருவர் உங்களுடன் தொடர்பு கொண்டால் உடனே முன்பு தொடர்பு கொண்ட நபருடன் தான் பேசுவேன் என்று கட்டாயப் படுத்த வேண்டாம். மீண்டும் புதியவரிடம் எந்த சூழ்நிலையில் நீங்கள் பிரச்னையைச் சந்தித்தீர்கள் என்று தெளிவாக விளக்கவும்.

6. உதவியாளர் சொல்வது புரியவில்லை என்றால் உடனே விளக்கம் கேட்கவும். அவர் சொல்வதற்கு மேலாக எதுவும் செய்திட வேண்டாம். அவர் வேகமாக ஏதாவது கூறினாலோ அல்லது செயல்படச் சொன்னாலோ மெதுவாகச் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளவும். நிச்சயமாய் உதவுவார்கள். கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் எந்த வேளையிலும் பிரச்னை ஏற்படலாம். நாம்தான் பொறுமையாக அவற்றை அணுகி தீர்க்கும் வழிகளைக் காண வேண்டும்.

%d bloggers like this: