Monthly Archives: ஜனவரி, 2009

இளமை தரும் ஆரஞ்சு பழச்சாறு

என்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள். தலைமுடி நரைக்கிறது. தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. கண்கள் குழிவிழுந்து காணப்படுகின்றன. நல்ல திடகாத்திரமான இளைஞர்களை இன்று காணமுடியவில்லை. இதற்குக் காரணம் இராசயனம் கலந்த உணவுகள், அரைவேக்காட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், சத்தற்ற உணவுகள், உடலுக்குத்தேவையான உடற்பயிற்சி இல்லாமை போன்றவையே.

இன்றைய மாணவ சமுதாயத்திற்கு கல்விச் சாலைகள் சிறைச்சாலைகளாக உள்ளன. பாடத்திட்டம் அனைத்தும் மூளை சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி, விளையாட்டு என்பதே இல்லை. மேலும் வீட்டிற்கு வரும் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சிறப்பு வகுப்புக்கு அனுப்புகிறார்கள். இதுபோல் விடுமுறை நாட்கள் பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே கழிந்துவிடுகின்றன. அடுத்த தெருவிற்கு செல்லவேண்டும் என்றாலும் வாகனத்தில்தான் செல்கிறோம். நடை என்பது பலருக்கு நோயின் தாக்கத்திற்குப் பிறகுதான் தெரியவரும்.

இப்படி சத்தற்ற உணவும், உடற்பயிற்சி யின்மையும் ஒரு மனிதனை முதுமையின் வாசலுக்கு எளிதில் அழைத்துச் செல்லும்.

உடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.

எங்கும் எப்போதும் கிடைக்கும் ஆரஞ்சு பழச் சாறின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம்.

சில உணவுகள் சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை உண்டுபண்ணி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.

இந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்துவிடுகிறது. இதனால் இரத்தம் அசுத்தமடைகிறது. பித்த நீர் தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது. மேலும் ஞாபக மறதி ஏற்படுகிறது. சருமம் பாதித்து சுருங்கச் செய்கிறது. தலைமுடி நரைக்கச் செய்கிறது. இதுபோல் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை 300 கலோரி அளவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து இரத்தத்தை பரிசோதித்துப் பார்த்தால் பித்த நீர் அதிகம் சுரந்து இரத்தத்தில் கலந்திருப்பதை அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

இந்த பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.

ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டவர்களின் இரத்தத்தில் பித்த நீரில் அளவு குறைவாக இருக்கிறது.

ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் இது புற்றுநோயாகக் கூட மாறலாம். இருதய நோய்களுக்கும் இந்த உணவு வகைகளே காரணமாகின்றன. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடபட இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். இருமுறை கூட அருந்தலாம். ஆரஞ்சு பழத்தை தினமும் உண-வில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.

ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.

நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மிலி வரை கொடுக்கலாம்.

ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.

ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.

மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்

நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும்.

ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது.

என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்.

ஜீன் தெரபியில் புதுமை-தேவையான குழந்தை ஆணா, பெண்ணா !

குழந்தை என்றாலே எல்லோருக்கும் கொள்ளை பிரியம். “ஆசைக்கு ஒரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண்” என்பார்கள். தம்பதிகள் மட்டுமல்ல, குழந்தைகள் கூட “ஓடிப்பிடித்து விளையாட தம்பிப் (தங்கை) பாப்பா வேண்டும்” என்று சில நேரம் விளையாட்டாய் கேட்டுவிடுவார்கள்.

இதனால் ஆண் குழந்தை இருப்பவர்கள், பெண் குழந்தை மீதும், பெண் குழந்தை இருக்கும் தம்பதி ஆண் குழந்தை மீதும் மோகம் கொள்வது இயல்பு. அதேபோல் குழந்தை பாக்கியமே இல்லாதவர்கள் எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் ஏக்கம் கொள்வதும் தவிர்க்க முடியாதது.

இந்த ஆசை, ஏக்கங்களுக்கு தீர்வுகாண சில மருத்துவமுறைகள் இருக்கின்றன. இதில் புதிதாக, கருத்தரித்தவுடன் நமக்கு தேவையான குழந்தை ஆணா, பெண்ணா என்று முடிவு செய்து விரும்பியபடி குழந்தை பெற புதிய வழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதைப்பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்டெம்செல் தெரபி, ஜீன் தெரபி ஆகியவை அடுத்த தலைமுறைக்கான நவீன மருத்துவ முறைகளாகும். இந்த இரு முறைகளும் தினமும் வெளிக் கொண்டு வரும் புதுமைகளால் மருத்துவ உலகில் புரட்சி ஏற்பட்டிருக்கிறது எனலாம்.

ஜீன்கள் என்பவை மரபுப் பண்புகளுக்கு அடிப்படையானவை. நமது உடலில் எந்த வகை ஜீன்கள் எந்தப்பணிகளை செய்கிறது என்பது வேகமாக அறியப்பட்டு வருகிறது. புற்றுநோய், தலை வழுக்கை, நுரையீரல் நோய் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும் ஜீன்கள் இனம் கண்டறியப்பட்டுவிட்டன. எனவே இந்த வியாதிகளை மனித இனத்தில் இருந்து அடியோடு விரட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

அதேபோல் உறுப்புகள் உருவாக்கத்துக்கான அடிப்படை செல்லான `ஸ்டெம்செல்’ கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் மருத்துவ உலகம் மறுமலர்ச்சி கண்டிருக்கிறது. இதன் முலம் பல்வேறு வியாதிகளுக்கு தீர்வு காணமுடியும் என்று ஆய்வின் முலம் மெய்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் முதன்முறையாக ஸ்டெம்செல் முறையில் கண்புரை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மருத்துவப்புரட்சி வரிசையில் தற்போது பாலின மாற்றத்துக்கு காரணமான ஜீன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதாவது வயிற்றில் உருவாகும் கருவானது ஆணாகவும், பெண்ணாகவும் மாறுவதற்கு அடிப்படையாக இருக்கும் ஜீன்கள் அறியப்பட்டு உள்ளன.

இதுவரை ஆண்டிரோஜன், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் மிகுதிக்கு ஏற்ப ஆண், பெண் தன்மை மாறுபடும் என்று அறியப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஹார்மோன் சுரப்போடு தொடர்புடைய ஜீன்கள் கண்டறியப்பட்டு உள்ளன.

அதாவது பெண் தன்மை ஏற்படுவதற்கு பாக்ஸ்எல்2  என்ற ஜீன்களும், ஆண் தன்மைக்கு சோக்ஸ்9  என்ற ஜீன்களும் காரணமாக இருக்கின்றன. இந்த இரு ஜீன்களில் எது முதலில் செயல்படத் தொடங்குகிறதோ, அதற்கு ஏற்பத்தான் கருவானது ஆணாகவோ, பெண்ணாகவோ மாறுகிறது என்று தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த ஜீன்களின் செயல்பாடுதான் ஆண்களுக்கு தாடி, மீசை வளர்வதிலும், பெண்களுக்கு மார்பகம், கருப்பை வளர்ச்சியிலும் பங்கு வகிக்கிறது. எனவே பருவ வளர்ச்சியில் திடீர் பால்மாற்றம் ஏற்பட்டு அரவாணித் தன்மை அடைவதற்கும் காரணமாக இருக்கிறது.

தற்போது இந்த ஜீன்கள் அடையாளம் காணப்பட்டு இருப்பதால், எதிர்காலத்தில் வாரிசுகள் தேவைப்படுவோர் ஆணோ, பெண்ணோ விருப்பத்தின்பேரில் கருவை வளர்த்து பெற்றுக் கொள்ளலாம். இதனால் காலமாற்றத்தால் குறைந்துவிட்ட பெண்சிசுக் கொலை அறவே ஒழியும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் அரவாணித் தன்மையையும் கட்டுப்படுத்த முடியும். குழந்தைகளில் விரும்பிய பண்புகளை உருவாக்குவதற்கும் ஜீன் தெரபியில் வழி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பியன் மாலிக்லர் பயாலஜி ஆய்வகத்தைச் சேர்ந்த மத்தியாஸ் டிரையர் என்பவர் தலைமையிலான குழு இந்த ஜீன்களை கண்டுபிடித்து உள்ளது.

வியக்க வைத்த புதிய சூரியன்!


விண்வெளி என்பது விசித்திரங்களின் உறை விடம். குளிர்ச்சி தரும் நிலவு, வெப்பமான சூரியன் உள்பட பல்வேறு அம்சங்கள் நிறைந்த கிரகங்கள் இங்கு உண்டு.

சூரியனைப் போன்ற லட்சக்கணக்கான சூரியன்கள் விண்வெளியில் மிதக்கின்றன. சூரியனைப்போல ஆயிரம் மடங்கு பெரிய கோள்கள், நட்சத்திரங்கள் இருக்கின்றன.

சூரியன் வெளியிடும் வெப்பமே பூமியில் உயிரினங்கள் வாழ முக்கிய காரணமாக இருக்கிறது. தற்போது விண்வெளி விஞ்ஞானிகள், சூரியனைவிட 35 மடங்கு வெப்பம் நிறைந்த நட்சத்திரத்தைக் கண்டுபிடித்து உள்ளனர்.

இந்த நட்சத்திரத்திற்கு `பக் நெபுலா’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. பால்வெளியில் இதுவரை கண்டறியப்பட்டு உள்ள நட்சத்திரங்களில் மிக அதிக வெப்பமானது. எனவே மிகவும் பிரகாசமானது. ஆனாலும் பூமியில் இருந்து சாதாரணக் கண்களால் இதைக் காணமுடியாது.

ஏனெனில் தூசிகள், பனிப்படலம் இதை மறைத்துக் கொண்டிருக்கின்றன. மேலும் 3 ஆயிரத்து 500 ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் உள்ளது. இந்த சூடான நட்சத்திரத்தின் புறப்பகுதி வெப்பநிலை 2 லட்சம் டிகிரி செல்சியஸ் ஆகும். இது சூரியனைவிட 35 மடங்கு அதிகம். அதேபோல் உருவத்திலும் சூரியனைப்போல் 100 மடங்கு பெரியது.

இவ்வளவு கடுமையான வெப்பம் காரணமாக இதன் அருகில் உள்ள கோள்களில் உயிரினங்கள் வசிக்கும் வாய்ப்பு இல்லை. அமெரிக்காவின் மான்செஸ்டர் பல்கலைக்கழக வானியற்பியல் விஞ்ஞானிகள் இதை கண்டுபிடித்து உள்ளனர். எச்.எஸ்.டி. எனப்படும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி இதை படம்பிடித்துக் காட்டி உள்ளது.

இந்த விஞ்ஞானிகள் குழுவில் உள்ள மாணவர் சிசரி சைஸ்கா என்பவர் கூறும்போது, `நாம் உண்மையிலேயே அதிர்ஷ்டமிக்க ஒரு வாய்ப்பாக இதை தெரிந்து கொண்டிருக்கிறோம். இந்த வெப்பமயமான நட்சத்திரம் தற்போது அழிந்து வருகிறது.

அதாவது குளிர்ந்து கொண்டு வருகிறது. இதில் இருந்து வெளிப்படும் வாயுக்களை நாம் வண்ணக் கோலமான காட்சியாக பார்க்க முடியும். உண்மையிலேயே இது ஒரு விதிவிலக்கான அதிசயம்தான்’ என்றார்.

உங்களிடம் தனித்துவம் இருக்கிறதா?

வெற்றி என்பது தனித்துவத்தின் சாரம்தான். யாரும் செய்ய முடியாததை அல்லது அனைவருக்கும் முன்பாக, முதன்மையாக செய்து முடிப்பதே வெற்றி. இதைச் செய்து முடிப்பதற்கான திறனே தனித்துவம் ஆகிறது.

உங்களுக்குள் அந்த தனித்துவம் இருந்தால் நீங்களும் வெற்றி பெறுவீர்கள். அதை பரிசோதித்துப் பார்க்க சில வினாக்களை உங்களை நீங்களே கேட்டு பதில் பெறுங்கள். விடைகள் உங்களின் தனித்துவத்தை விளக்கும். இருப்பதை இருக்கிற மாதிரியே தொடர விரும்பாத புதுமை விரும்பிகளா நீங்கள்? சின்ன விஷயங் களையும் பெரிதுபடுத்துவீர்களா? எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் பரந்த மனம் உண்டா?

இல்லை, இத்தனைக்கும் எதிரான எண்ணம் உங்களுக்குள் இருக்கிறதா? அதாவது புதுமையை விரும்பாமல் அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே என்று அசாதாரணமாக இருப்பீர்களா? அப்படியென்றால் உங்களின் தனித்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். கால மாற்றத்துக்கு ஏற்ப தேவையான மாற்றங்களை ஏற்படுத்துவதுதான் தனித்துவங்களில் முதன்மையானது!
நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள், பரபரப்பாகிறது விவாதம். எதிர்ப்பு அதிகம் இருந்தாலும் உங்கள் தரப்பு கருத்துக்களை திடமாகவும், தெளிவாகவும் முன்வைப்பீர்களா? இல்லை பின்வாங்கிவிடுவீர்களா? உங்கள் கருத்துக்களை தெளிவாக முன்வைப்பது ஒரு தனித்துவம். அதில் உறுதியாக இருப்பதே வெற்றிக்கான அடித்தளம். இந்த தனித்துவத்தில் குறைவு இருந்தால் வளர்த்துக் கொள்ளுங்கள். அதுபோல உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும், விளக்கங்களுக்கும், அடிக்கடி `தெரியாது’ என்று பதில் அளிக்கிறீர்களா? பணியிடத்திலும் புதிய பணியை ஏற்றுச் செயல்பட தயக்கம் காட்டுகிறீர்களா? தயக்கம் என்பது தனித்துவத்தை குறைக்கும் பெரிய சக்தியாகும். அவசியமானவற்றை தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்தவற்றுக்கு தெளிவான விளக்கம் கொடுங்கள். புதிய பணிகளையும் பிறர் ஆச்சரியப்படும் வகையில் செய்து காட்டுங்கள். ஒரு இக்கட்டான சூழலில் மிகவும் நெருக்கமானவர் உங்களுக்கான முடிவை அறிவிக்கிறார். அவர் அது தொடர்பான விஷயங்களில் அனுபவம் உடையவர். ஆனால் அவர் எடுத்த முடிவு உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. அந்த முடிவை ஏற்றுக் கொள்வீர்களா? அவர் அனுபவத்தின் பேரில் சரியான முடிவு எடுத்திருப்பார் என்று கருதி விட்டுவிடுவீர்களா? இதற்கு நீங்கள் ஆம் என்று பதில் அளித்தாலோ, அந்த முடிவை ஏற்றுச் செயல்பட்டாலோ? உங்களிடம் போதிய தனித்துவம் இல்லை என்பதுதான் உண்மை. ஏனெனில் திருப்தி இல்லாமல் செய்யும் எந்த விஷயமும் முழுமை அடைவதில்லை. யார் ஆலோசனை வழங்கினாலும், முடிவு உங்களுடையதாக இருக்கட்டும். அதே நேரத்தில் `தீதும், நன்றும் பிறர் தர வாரா?’ என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மேற்கண்டபடி நீங்களே முடிவு செய்து காரியத்தில் இறங்கிவிட்டீர்கள். இடையில் கவனிக்கும்போது நாம் செய்வதெல்லாம் சரியா என்ற கேள்வி எழுகிறது, அவர் சொன்னபடி செயல்பட்டு இருக்கலாமோ என்று தோன்றுகிறது, இலக்கை அடைய முடியுமா? என்ற தவிப்பும் வருகிறது.

அப்போது நீங்கள் மிரண்டுபோய் பின்வாங்கிவிடுவீர்களா? நமது திட்டம் சரிதான், எங்கு பிழை செய்தோம் என்று தேடி அதை சரி செய்வீர்களா? இல்லை, இடையிலேயே வேறு திட்டத்துக்கு மாற முயற்சிப்பீர்களா? இங்குதான் `தீதும் நன்றும் பிறர் தர வராது’ என்பதற்கு விடை கிடைக்கும். முடிவு எடுத்தபிறகு அதை கண்டிப்பாக செயல்படுத்துங்கள். தவறு நேர்ந்தாலும் அதற்கும் பொறுப்பேற்று செயல்படுங்கள். அது மாற்றுத்திட்டமோ, குறைகளை களைவதோ, எதுவாகவும் இருக்கலாம். நமக்குத் தேவை இலக்கு. அதற்கான உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுங்கள்! நீங்கள் நேர்மையாகவும், சரியாகவும் செயல்படுவதாக தோன்றுகிறது. ஆனால் முன்னேற்றம் கிடைக்கவில்லை. நாம் தவறு செய்துவிட்டோம், குறுக்கு வழியிலாவது முன்னேற வேண்டும் என்று நினைப்பீர்களா?

அதேபோல் எதிர்பாராதவிதமாக கட்டுக்கட்டான பணம் உங்களிடம் கிடைக்கிறது. அதிர்ஷ்ட தேவதை நமக்கு அருளிவிட்டாள் என்று நினைப்பீர்களா? இந்தத் தொல்லைபிடித்த வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்து காலாட்டிக் கொண்டு வாழ்க்கையைத் தள்ளலாம் என்று நினைப்பீர்களா? இரண்டுமே தன்னம்பிக்கை இல்லாததை உணர்த்தும் எண்ணங்களாகும். தன்னம்பிக்கை இல்லாவிட்டால் தனித்துவமும் இல்லை. சரியான செயல்பாடு சரியான விளைவுகளையே ஏற்படுத்தும். அதற்கான பலன் கிடைக்க உழைப்பு இன்னும் தேவை என்று எண்ணி தொடர்ந்து நேர்மையையே கடைபிடியுங்கள். அதிர்ஷ்டம் என்பதே குருட்டு நம்பிக்கைதான். அதை எண்ணிக் கொண்டிருந்தால் வந்தது போலவே திடீரென்று காணாமல் போகும்.

எனவே தன்னம்பிக்கையே வெற்றி. தனித்துவமே வெற்றிப் பாதை. உணருங்கள், உயர்வீர்கள்.