இணையத்தில் உதவிடும் புக்மார்க்லெட்ஸ்

இணையத்தில் உதவிடும் புக்மார்க்லெட்ஸ்

வெப் பிரவுசரில் நமக்கு எளிமையான சில வசதிகளை ஏற்படுத்த புக்மார்க்லெட்ஸ் (Bookmarklets) என்னும் பட்டன்கள் உதவுகின்றன. புக்மார்க்லெட் என்பது ஒரு சிறிய ஆப்லெட் (Applet) என்னும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் புரோகிராம். இவை பிரவுசருக்கென உருவாக்கப்படும் சிறிய ஆட் ஆன் வசதிகளாகும். பொதுவாக இது ஒரு ஜாவா ஸ்கிரிப்ட் புரோகிராம் ஆகும்.

அடிப்படையில் இவை ஜாவா ஸ்கிரிப்ட் பயன்படுத்தி பல பயனுள்ள செயல்பாடுகளை மேற்கொள்ள உதவி செய்திடும் பட்டன்களாகும். இந்த ஆட் ஆன் பட்டன்களைப் பதிந்து கொண்டால் நம் பிரவுசரிலிருந்தே நேரடியாக இந்த செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். இந்த புரோகிராம் வெப் பிரவுசரில் ஒரு புக்மார்க்காகப் பதியப்படும். அல்லது சிறிய ஹைப்பர் லிங்க்காக வைக்கப்படும். எப்படிப் பதிந்தாலும் பதிந்த இடத்தில் கிளிக் செய்தால் (ஒரு கிளிக் போதும்) அதன் இயக்கம் தொடங்கும். இந்த பெயர் bookmark மற்றும் applet என்ற இரு சொற்களின் சிதைந்த கூட்டாகும். எப்படி இந்த புக்மார்க்லெட்களைக் கண்டறிவது, எவ்வாறு இவற்றை இன்ஸ்டால் செய்வது என்று பார்க்கலாம்.

முதலில் உங்கள் பிரவுசரில் லிங்க்ஸ் (links)டூல் பார் இருக்க வேண்டும். அது இருக்கிறதா என்பதனை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். இங்கிருந்து தான் நாம் புக்மார்க்லெட் பட்டன்களை இயக்க முடியும். புக்மார்க்லெட்கள் பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களுடன் செயல்படக் கூடியவை ஆகும்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் வியூ (View) மெனு கிளிக் செய்து பின் Links என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் Toolbar என்பது செக் செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். இல்லை என்றால் செக் செய்திடவும். இப்போது ஒரு டூல்பார் கிடைக்கும். இதில் டூல் பார் மட்டுமே இருக்கட்டும். எனவே ஏதேனும் பிற பட்டன்கள் இருந்தால் அவற்றின் மீது ரைட் கிளிக் செய்து டெலீட் அழுத்தி கிளிக் செய்திடவும்.

பயர்பாக்ஸ் பிரவுசரிலும் இதே வேலையைச் செய்திட வேண்டும். ஆனால் அங்கு புக்மார்க்ஸ் டூல்பாரில் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளவும். இப்போது புக்மார்க்லெட் பயன்படுத்த தயாராகிவிட்டீர்கள். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் புக்மார்க்லெட் ஒன்றை இணைக்க லிங்க் மீது ரைட் கிளிக் செய்து அதில் Add to Favorites என்பதில் கிளிக் செய்திடவும். போல்டர்களின் பட்டியலுடன் கீழாக ஒரு பாக்ஸ் கிடைக்கும். இந்த பாக்ஸ் கிடைக்கவில்லை என்றால் Create in என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின் Links போல்டரில் கிளிக் செய்து பின் ஓகே கிளிக் செய்திடவும். புக்மார்க் பட்டியலில் புக்மார்க்லெட் வித்தியாசமாக காணப்படும். ஏனென்றால் மற்ற புக்மார்க்குகள் உங்களை ஓர் இணைய தளத்திற்கு இழுத்துச் செல்லும். இந்த புக்மார்க்லெட் ஒரு சிறிய செயல்பாட்டை மேற்கொள்ளும். பயர்பாக்ஸ் தொகுப்பில் லிங்க்கை அப்படியே Links bar வரை இழுக்கவும். இழுத்திவிட்டுவிட்டால் அது அப்படியே ஒரு டேப்பாக இருக்கும். இதனை எப்போது கிளிக் செய்தாலும் அது இயங்கத் தொடங்கும்.

புக்மார்க்லெட் எங்கிருக்கிறது என்று கண்டறிய சர்ச் இஞ்சின் உதவியை நாடவும். சில புக்மார்க்லெட்கள் ஏதாவது ஒரு பிரவுசரில் மட்டுமே இயங்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். எந்த பிரவுசரில் அது இயங்கும் என்பதற்கு அந்த பிரவுசரின் லோகோ தரப்பட்டிருக்கும். இந்த புக்மார்க்லெட்களை உங்கள் பிரவுசரில் பதித்தவுடன் அதன் பெயர்கள் வித்தியாசமாகக் காட்டப்படும். எனவே அதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ரீ நேம் தேர்ந்தெடுத்து அதன் பயன்பாட்டிற்கேற்ற பெயர் ஒன்றைச் சூட்டவும்.

எடுத்துக் காட்டாக ஒரு மிகப் பயனுள்ள புக்மார்க்லெட் ஒன்றைக் கூறுகிறேன். ஆயிரக்கணக்கான வாசகர்கள் போனிலும் கடிதங்கள் மூலமாகவும் யு–ட்யூப் தளத்தில் இயங்கும் வீடியோ படங்களை எப்படி நம் கம்ப்யூட்டரில் வீடியோ பைலாகப் பதியலாம். அதற்கான புரோகிராம் எங்குள்ளது? என்று கேட்டுள்ளனர். இந்த நோக்கத்துடன் புக்மார்க்லெட்டினைத் தேடிப்பார்க்கையில் பல புக்மார்க்லெட்டுகள் இதற்கென இருப்பது தெரிய வந்தது. இதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன். அதன் முகவரி http://googlesystem.blogspot.com/2008/04/downloadyoutubevideosasmp4files.html
இந்த தளத்தில் இதற்கான புக்மார்க்லெட் Get You Tube videoஎனக் கட்டம் கட்டி உள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்தினால் இதன் மீது ரைட் கிளிக் செய்து புக்மார்க்காக இணைக்கச் சொல்லவும். சிறிய விண்டோவில் என்ன பெயரில் சேவ் செய்திட என்றெல்லம் கேட்டுவிட்டு இது புக்மார்க்காக இணைக்கப்படும். புக்மார்க் பட்டியலில் இது இறுதியாக இடம் பெற்றிருக்கும். பயர்பாக்ஸ் பிரவுசரில் இந்த இடத்தில் மவுஸை அழுத்திப் பிடித்து இழுத்து லிங்க்ஸ் பாரில் கொண்டு சென்று விட்டுவிடலாம். ஒரு டேப்பாக இது இருக்கும்.

நீங்கள் யு–ட்யூப் தளத்தில் ஒரு வீடியோ காட்சியினை ரசிக்கிறீர்கள். அதனை உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு பைலாக சேவ் செய்திட விரும்புகிறீர்கள் என்றால் உடனே இந்த புக்மார்க் அல்லது புக்மார்க்லெட்டில் கிளிக் செய்தால் உடனே வீடியோ இயங்குவது நிறுத்தப்பட்டு வீடியோ பைல் பதியப்படும். இதே போல் பல்வேறு செயல்பாடுகளுக்கான புக்மார்க்லெட்டுகளைத் தேடிப் பார்த்து பதிந்து வைத்துக் கொள்ளவும்.

%d bloggers like this: