பதற்றத்தில் பைல்களை அழித்தால்..

பதற்றத்தில் பைல்களை அழித்தால்….

சில சிக்கலான சூழ்நிலைகளில் நம் கம்ப்யூட்டர் நம்மை நிறுத்திவிடும். ஹார்ட் டிஸ்க் தன் பணியில் தொய்வினைக் காட்டும். அல்லது சண்டித்தனம் செய்திடும் குதிரையாக அப்படியே நின்றுவிடும். ஹார்ட் டிஸ்க் எத்தனை ஆண்டுகளுக்கு நமக்காக சுழன்று சுழன்று உழைக்கும். எந்த எச்சரிக்கையும் தராமல் இந்த ஸ்டிரைக் வந்தால் என்ன செய்வது? ஹார்ட் டிஸ்க்கை விடுங்கள். நாம் கூட சில வேளைகளில் தவறாகச் செயல்பட்டு அய்யோ என தலையில் கைவைத்து அமர்ந்துவிடுவோம். பல வேளைகளில் தேவையான முக்கிய பைலை நம்மை அறியாமலேயே அழித்துவிடுவோம். ஒரு சிலர் தெம்பாக ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லவிடாமல் ஷிப்ட அழுத்தி அழிப்பார்கள். ஒரு சிலர் ரீ சைக்கிள் பின்னில் இருந்து அப்புறம் எடுத்துக் கொள்ளலாம் என்று தொடர்ந்து மற்ற நீக்க வேண்டிய பைல்களை அழிப்பார்கள். முதலில் ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்பப்பட்ட பைல் ஒரு கட்டத்தில் அங்கிருந்தும் அகன்றுவிடும்.

இது போன்ற சூழ்நிலைகளில் என்ன செய்வது? ஹார்ட் டிஸ்க் ஸ்டிரைக் செய்திடும் முன் என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று இங்கு காண்போம். இது போன்ற சூழ்நிலைகளில் உதவுவதற்கென்றே பல பைல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஹார்ட் டிஸ்க் வழியே தானே எப்போதும் கம்ப்யூட்டரை பூட் செய்கிறீர்கள். அது ஸ்டிரைக் செய்தால் உடனே ஒரு சிடி மூலம் பூட் செய்திடலாம். இதற்கான பூட்டிங் சிடி தயாரிப்பது நமக்கு எப்போதும் கை கொடுக்கும். இதற்கு Ultimate Boot CD என்ற சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தலாம். இது இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இது பூட்டிங் பணி மட்டுமின்றி மேலும் பல பணிகளுக்கும் உதவுகிறது. ஹார்ட் டிஸ்க்கை பார்ட்டிஷன் செய்ய, ஹார்ட் டிஸக்கின் பழுதுகளை களைய என பல யுடிலிட்டிகளை இங்கு காணலாம். www.ultimatebootcd.com என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இதனை இறக்கிக் கொள்ளலாம்.பின் அதனை ஒரு சிடியில் பதிந்து அவசர காலத்தில் பயன்படுத்துங்கள்.

இதன் மூலம் ஹார்ட் டிரைவின் இமேஜ் ஒன்றை உருவாக்கி அதை சிடியில் பதிந்து வைக்கலாம். அல்லது இன்னொரு டிரைவில் போட்டு வைக்கலாம். இதனால் என்ன பலன் என்றால் இமேஜ் ஒன்று உருவாக்கப்படுவதால் ஹார்ட் டிஸ்க்கில் உள்ளதற்கு பேக் அப் எடுக்க வேண்டியதில்லை. முதல் முறை இமேஜ் உருவாக்குகையில் மேலே சொல்லப்பட சாப்ட்வேரில் உள்ள அப்ளிகேஷன் அனைத்து பைல்களுக்கும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ளும். பின் நாம் அடுத்து அடுத்து இமேஜ்களை உருவாக்குகையில் புதிய பைல்கள் தொடர்ந்து பேக் அப் எடுக்கப்படும். பைல்களில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் அவற்றிற்கும் புதிய பேக் அப் பைல்கள் உருவாக்கப்படும்.

இவ்வாறு இமேஜ் தயாரிப்பதற்கு மேலும் சில சாப்ட்வேர் தொகுப்புகள் உள்ளன. இவற்றை சர்ச் இஞ்சின் மூலம் தேடி எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் சிலவற்றை தருகிறேன்: Partition Saving, Part Image, True Image, RDrive Image, HD Clone Free Edition. இதில் இறுதியாகக் கூறப்பட்ட HD Clone Free Edition இலவச தொகுப்பாகும். இதனைப் பெற www.miray.de/download/sat.hdclone.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லவும்.

ஒரு சில பைல்கள் நமக்கு மிக மிக முக்கியமானவையாக இருக்கும். நம் அன்றாட பணிகள் அவற்றைச் சுற்றியே இருக்கும். அத்தகைய பைல்களை நாமே பேக்கப் எடுக்கலாம். அல்லது கம்ப்யூட்டரே எடுத்து வைப்பதற்கான சாப்ட்வேர்கள் மூலம் எடுக்கலாம். Save and Backup, Second copy போன்ற சாப்ட்வேர்கள் இதற்கு உதவும். www.bygsoftware.com மற்றும் ஆகிய www.centered.com முகவரிகளில் உள்ள இணைய தளங்களில் இவற்றைக் காணலாம்.

ஒரு பைலை அழித்துவிட்டால் அது விண்டோஸின் ரீசைக்கிள் பின்னில் பாதுகாப்பாக இருக்கும். ரீசைக்கிள் பின்னைத் திறந்து அழித்த பைலை மீட்கலாம். ரீசைக்கிள் பின்னை சுத்தமாக காலி செய்தால் அந்த பைல் கிடைக்காது. ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு ஒரு பைலை அழித்தால் அந்த பைல் ரீசைக்கிள் பின்னிற்குச் செல்லவே செல்லாது. நாம் பைலை அழிக்கும் போது அது ரீசைக்கிள் பின்னுக்குச் செல்கிறது.

சரி, அப்புறம் தொடர்ந்து பைல்களை அழிக்கையில் அவையும் செல்கின்றன. சரி. அப்புறம் என்னவாகும். எத்தனை பைல்களைத் தான் ரீசைக்கிள் பின் தாங்கும். அது நிறைந்தவுடன் முதலில் அனுப்பிய, கீழாக இருக்கும் பைலை விண்டோஸ் அழித்துவிட்டு அடுத்து அழிக்கும் பைல்களுக்கு இடம் கொடுக்கும். ஆக ரீசைக்கிள் பின்னில் இருந்தாலும் அதனை எப்போதும் மீண்டும் எடுத்துக் கொள்ளலாம் என்பது சரியல்ல, அல்லவா.

இதற்குக் காரணம் உங்கள் ஹார்ட் டிஸ்க்கின் அளவில் 10% இடம் தான் ரீசைக்கிள் பின்னுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே பைல்களை மீட்டு எடுக்க தவறி விட்டாலோ அல்லது தொடர்ந்து நிறைய பைல்களை அழித்தாலோ ரீசைக்கிள் பின்னிலிருந்தும் பைல்களை மீட்க முடியாது. இந்த வேளையில் வேறு சில அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் நமக்கு உதவுகின்றன. இவை Filerecovery சாப்ட்வேர் தொகுப்புகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றில் PC Inspector Smart Recovery, PC Inspector File Recovery என்ற சாப்ட்வேர்கள் பிரபலமானவை. இவற்றை www.pcinspector.de என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த தளம் பிரெஞ்ச் மொழியில் இருக்கும். அதனை ஆங்கிலத்தில் வேண்டும் என்றால் அதிலேயே மொழிகள் என்ற பிரிவில் ஆங்கிலம் தரப்பட்டிருக்கும். அதனைக் கிளிக் செய்தால் தளம் ஆங்கிலத்தில் கிடைக்கும். ஒரு சில ஆண்டி வைரஸ் தொகுப்புகளும் இந்த பைல் ரெகவரி வசதியை அளிக்கின்றன. எனவே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும் ஆபத்து காலத்தில் உதவிடும் பைல்களின் மூலமும் நாம் அழியும் பைல்களை மீட்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம்.

%d bloggers like this: