உங்கள் பிரவுசரை சோதனையிடலாமா?

உங்கள் பிரவுசரை சோதனையிடலாமா?

கம்ப்யூட்டரில் பிரவுசர் பயன்படுத்தாத நாளே இல்லை எனலாம். இந்த பிரவுசர் வழியாகத்தான் நாம் மற்ற கம்ப்யூட்டர்களுடன் நெட்வொர்க்கில் இணைகிறோம். இதன் வழியாக ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுகிறோம். பொருட்கள் வாங்குகிறோம். அதற்கு நம் கிரெடிட் கார்டு எண்ணைத் தருகிறோம். நம் யூசர் பெயரையும் பாஸ்வேர்டையும் அடிக்கடி பயன்படுத்துகிறோம். கேம்ஸ் விளையாடுகிறோம். மற்றவர்களுடன் தொடர்பு கொள்கிறோம். மணிக்கணக்கில் அரட்டை அடிக்கிறோம். அதனால் நம் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை மற்றவர் பார்க்க மற்றும் படிக்க சந்தர்ப்பம் ஏற்படுகிறது. இருந்தாலும் நாம் ரிஸ்க் எடுத்து இந்த செயல்பாடுகளை மேற்கொள்கிறோம். எனவே நாம் பயன்படுத்தும் பிரவுசர் பாதுகாப்பானதா? பாதுகாப்பான நிலையில் உள்ளதா? என்று தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கென நாம் என்ன செய்யலாம்? நம் பிரவுசருக்கான பேட்ச் பைல்களைக் கொண்டு அவ்வப்போது அப்டேட் செய்திடலாம். இருந்தாலும் அதன் பாதுகாப்பு தன்மையினை சோதித்து அறிவது எப்படி?
இந்த வகையில் நமக்கு உதவிட அருமையான புரோகிராம் ஒன்றினை ஓர் இணைய தளம் கொண்டுள்ளது. இந்த தளத்தையும் புரோகிராமினையும் வடிவமைத்துத் தந்துள்ள நிறுவனத்தின் பெயரே Scanit  என்பதாகும். இந்த தளம் http://bcheck.scanit.be/bcheck/) சென்றால் நம்முடைய பிரவுசர் எது? நாம் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இயக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற தகவல் கிடைக்கும். அத்துடன் அருகே உங்கள் பிரவுசரை எந்த எந்த சோதனைக்கு உள்ளாக்கலாம் என்ற விபரமும் கிடைக்கிறது.
முதலிலேயே நமக்கு ஓர் எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. சோதனை செய்யப்படுகையில் உங்கள் பிரவுசர் கிராஷ் ஆகலாம். அனைத்து பிற பிரவுசர் விண்டோக்களையும் மூடிவிட்டு சோதனையை ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறது. அத்துடன் அந்த இணைய தளத்தினை புக்மார்க் செய்திடும்படியும் வேண்டுகோள் விடுக்கிறது. ஏனென்றால் பிரவுசர் கிராஷ் ஆனால் இந்த புக் மார்க் மூலம் மீண்டும் அதே தளத்திற்கு செல்லவே இந்த ஏற்பாடு. அங்கே உங்கள் பிரவுசர் எதனால் கிராஷ் ஆனது? தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்ளவா? என்று கேட்டு சோதனை தொடரும்.
இந்த ஸ்கேன் இட் புரோகிராம் தற்போது புதுப்பிக்கப்பட்டு புதிய பல சோதனைகளுடன் தரப்பட்டுள்ளது. புதியதாக 12 சோதனை முறைகள் இணைக்கப்பட்டுள்ளன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், ஆப்பரா, ஏன் பிளாஷ் மற்றும் குயிக் டைம் போன்றவற்றையும் சோதனை செய்து முடிவுகளைக் காட்டுகிறது.
இந்த தளம் சென்றவுடனேயே உங்களின் பிரவுசர் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவல்கள் தரப்படுகின்றன. கீழாக எந்த வகை சோதனைகள் நடத்த என ஆப்ஷன் கேட்கப்படுகிறது. இதில் மூன்று ஆப்ஷன்கள் உள்ளன. உங்கள் பிரவுசருக்கு மட்டுமான சோதனைகள் (“Only test for bugs specific to my type of browser),அனைத்து சோதனைகள் (Run all available tests) மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் சோதனைகள் மட்டும் (Choose individual tests)  என இவை தரப்பட்டுள்ளன. இதிலிருந்து நீங்கள் உங்களுக்குத் தேவைப்படும் சோதனைகளை மேற்கொள்ளலாம்.
நீங்கள் மற்ற பிரவுசர் எதனையேனும் அதே நேரத்தில் திறந்திருந்தால் அவற்றை மூடி விட வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு பிரவுசரை மட்டுமே சோதனை செய்திட முடியும் என்பதால் இந்த தேவை நிறைவேற்றப்பட வேண்டும்.
அடுத்து ஸ்கேன் இட் புரோகிராம் தன் அனைத்து சோதனைகளையும் ஒவ்வொன்றாகத் தொடங்கும். முழுமையான வெவ்வேறு வகையான சோதனைகள் என்பதால் சற்று நேரம் பிடிக்கும் செயல் இது. எனவே பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். (வேண்டுமானால் இன்னொரு கப் காபிக்கு ஆர்டர் செய்யலாம்) இடையே உங்கள் பிரவுசர் கிராஷ் ஆனால் மீண்டும் ஸ்கேன் இட் தளத்திற்குச் செல்லவும். உடனே அந்த தளம் உங்கள் பிரவுசர் கிராஷ் ஆனதா? என்று கேட்கும். அதற்கு யெஸ் கிளிக் செய்தால் என்ன பிரச்சினையினால் கிராஷ் ஆனது என்று தகவல்கள் கிடைக்கும்.
அதன்பின் Continue the Test என்பதில் கிளிக் செய்திட தொடர்ந்து பிரவுசர் சோதனை நடக்கும். இப்படியே அனைத்து சோதனைகளும் நடந்தேறிய பின்னர் முடிவுகள் பட்டியலிடப்படும். குறிப்பாக உங்கள் பிரவுசர் எந்த பிரச்சினையினால் முழுமையான பாதுகாப்பானது என்று சொல்ல முடியவில்லை என்ற தகவல் காட்டப்படும்.
இந்த சோதனையை அனைவரும் மேற்கொள்வது நல்லது. ஸ்கேன் இட் உண்மையிலேயே ஒரு பெரிய சேவையை நமக்குத் தருகிறது. இதில் நோட்டிபிகேஷன் சர்வீஸ் என ஒரு சேவைப் பிரிவு உள்ளது. இது உங்கள் பிரவுசரை மீண்டும் எப்போது ஸ்கேன் செய்ய வேண்டும் என்று நினைவுபடுத் தும். இந்த சேவை நமக்கு வேகமாகவும் இலவசமாகவும் தரப்படுகிறது. எந்த புரோகிராமினையும் நம் கம்ப்யூட்டரில் பதிய வேண்டியதில்லை. எனவே ஒவ்வொருவரும் இதனை மேற்கொண்டு அவர்களின் பிரவுசர் எந்த நிலையில் உள்ளது என்று தெரிந்து கொள்வது நல்லது.

%d bloggers like this: