கேம்ஸ் ஏன் கிராஷ் ஆகிறது?

கேம்ஸ் ஏன் கிராஷ் ஆகிறது?

கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வயதில் போதையாக அமைந்து விடுகிறது. எப்படியாவது அந்த கார் ரேஸில் ஜெயிக்க வேண்டும். அவனைக் காட்டிலும் அதிக பாய்ண்ட் எடுத்துக் காட்டி பெருமை கொள்ள வேண்டும் என கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதில் பெரும் நேரத்தைச் செலவிடுபவர்கள் பலர் இருக்கின்றனர்.

பெரும்பாலானோர் புதிய கேம்ஸ் வர இருக்கிறது என அறிவிக்கையில் காத்திருந்து அவற்றை வாங்கி அல்லது காப்பி செய்து உடனே பயன்படுத்த வீட்டிற்கு ஓடி வருகின்றனர். கேம்ஸ் இருக்கும் சிடியை கம்ப்யூட்டரில் நுழைத்து பின் கேம்ஸை கம்ப்யூட்டருக்கு மாற்றி ஆசை ஆசையாக விளையாடத் தொடங்குகிறீர்கள். ஆஹா! அய்யோ!! கேம்ஸ் தொடர்ந்து செல்ல மறுக்கிறது. மீண்டும் முயற்சிக்கிறீர்கள். மீண்டும் கிராஷ் ஆகி நிற்கிறது.செய்வதறியாது பல நாட்களாக விளையாடிய கேம்ஸ்களையே விளையாடுகிறீர்கள். அல்லது ஏன் கிராஷ் ஆகிறது என்று மற்றவரிடம் கேட்கிறீர்கள். இதற்கான காரணங்களை இங்கு பார்க்கலாம்.

அடிப்படை பிரச்சினைகள்: கேம்ஸ் தொடக்கத்தில் இருந்து தொடங்கவே இல்லையா? அப்படியானல் கேம்ஸ் சிடியில் அல்லது அதன் அமைப்பில் எந்த பிரச்சினையும் இல்லை. குறிப்பிட்ட அந்த கேம்ஸ் விளையாடுவதற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை உங்கள் கம்ப்யூட்டர் பெறவில்லை என்றே பொருள். அது பெரும்பாலும் ராம் மெமரி அல்லது திரைத் தோற்றம் அல்லது அது போன்ற வேறு ஒரு ஹார்ட்வேர் இணைந்து செயல்பட முடியாததாக இருக்கலாம். இன்னொரு வகையிலும் தடை ஏற்படலாம். நீங்கள் வாங்கி வந்த கேம்ஸ் சிடி உங்கள் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்க முடியாததாக இருக்கலாம். உங்களிடம் விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் இருக்கலாம். ஆனால் நீங்கள் வாங்கி வந்தது மேக் சிஸ்டத்தில் இயங்கும் கேம்ஸ் பதிப்பாக இருக்கலாம்.

உங்களிடம் சிடி டிரைவ் உள்ள கம்ப்யூட்டர் உபயோகத்தில் இருக்கும். ஆனால் நீங்கள் கொண்டு வந்த கேம்ஸ் ஒரு டிவிடியில் இருக்கும். நிச்சயமாய் அந்த டிவிடி, சிடி டிரைவில் இயங்காது. உங்களிடம் 32 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருக்கும். வாங்கி வந்த கேம்ஸ் சிடி 64 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியதாக இருக்கும். அல்லது கேம்ஸ் இயங்கத் தேவையான கிராபிக்ஸ் கார்ட் உங்கள் கம்ப்யூட்டரில் இல்லாமல், திறன் குறைந்த கிராபிக்ஸ் கார்ட் இருக்கலாம்.

மேலே சொன்ன பிரச்சினைகளை எல்லாம் தவிர்க்க கேம்ஸ் சிடி இயங்கத் தொடங்கும் முன் அல்லது வாங்குவதற்கு முன் உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் திறன்கள் அந்த கேம்ஸ் இயங்க போதுமானவையா என்று சோதித்துத் தெரிந்து கொள்ளவும்.

ஓகே. கேம்ஸ் சிடி அல்லது டிவிடியில் குறிக்கப்பட்டுள்ள அடிப்படைத் தேவைகள் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளது என்று அறிந்து கேம்ஸ் சிடியை வாங்கிப் பயன்படுத்தப் போகிறீர்கள்.  பிரச்சினைகள் வரலாம். ஏனென்றால் மேலே சொல்லப்பட்டவை எல்லாம் அடிப்படைத் தேவைகள் தான். உங்களின் கேம்ஸ் விளையாடும் அனுபவம் ஆர்வத்தை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும் என்றால் மேலும் சில தேவைகள் உள்ளன. அவை இல்லை என்றால் தடைகள் தொடரத்தான் செய்யும்.

முதல் தடையைப் பார்ப்போம். கம்ப்யூட்டர் வாங்கி சில மாதங்கள் ஆகி இருக்கலாம். ஆர்வத்தில் பல புரோகிராம்களை, அவற்றை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துகிறீர்களோ இல்லையோ, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திருப்பீர்கள். நீங்கள் அறியாமலேயே உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கையில் இந்த புரோகிராம்கள் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கலாம். பின்னணியில் கம்ப்யூட்டரின் திறனை இவை உறிஞ்சிக் கொண்டிருக்கும். குறிப்பாக மெமரியில் குறிப்பிட்ட அளவை இவை பயன்படுத்திக் கொண்டிருக்கும். இதனால் உங்கள் கேம்ஸ் விளையாடத் தேவையான திறன் குறைவாகவே கிடைக்கும். இதனை எப்படி அறிந்து கொள்வது? இதற்கு performance check என்ற வசதி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த எந்த புரோகிராம்கள் உங்கள் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குவதிலிருந்து இயங்குகின்றன என்று கண்டறிந்து அவற்றை நீக்கலாம்.

பல கேம்ஸ் பிரச்சினைகளில் அவற்றிற்கான ஹார்ட் டிஸ்க் இடம் போதுமானதாக இல்லாதது ஒன்றாகவும் உள்ளது. ஹார்ட் டிஸ்க்கில் தேவைக்கு அதிகமாகவே இடம் இருக்கும். ஆனால் அதில் பதிந்துள்ள பைல்களால் அவை துண்டு துண்டாக இருக்கலாம். இதனால் கேம்ஸ் பிரச்சினை தருகையில் ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் செய்து பின்னர் முயற்சித்துப் பார்க்கலாம். (கூடுதல் இடம் உள்ள டிஸ்க்கினை வாங்குவதாக இருந்தாலும் இந்த வழியை மேற்கொள்வது நல்லது)

பல வேளைகளில் கேம்ஸ் இயங்காமல் இருக்கக் காரணம் ஹார்ட் டிஸ்க் இடம் அல்லது மெமரி இடம் இல்லாமல் போவதால் அல்ல. வீடியோ மெமரியும் ஒரு காரணமாகும். கேம்ஸை இயக்க இது ஒரு மிக முக்கியமான தேவையாகும். தற்போது வரும் கேம்ஸ் சிடிக்களின் கவர்களில் சிடியில் உள்ள கேம்ஸை இயக்க எவ்வளவு வீடியோ மெமரி தேவை எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள். உங்கள் வீடியோ மெமரி குறைவாக இருக்கையிலும் அந்த கேம்ஸ் இயங்கினாலும் பல வேளைகளில் கிராஷ் ஆகும் வாய்ப்பு உள்ளது.

இங்கு சிக்கல் என்னவென்றால் இதனை அதிகப்படுத்த முடியாது. உங்கள் கம்ப்யூட்டரில் AGP அல்லது graphics accelerator card C இல் இதற்கென ஏற்கனவே இடம் ஒதுக்கப்பட்டு டெடிகேட்டட் வீடியோ மெமரியாகச் செயல்படும். அல்லது மெயின் மெமரியில் ஒரு குறிப்பிட்ட இடம் வீடியோ மெமரிக்கென ஒதுக்கப்பட்டிருக்கும். இதனை நீங்களாக அதிகப்படுத்த முடியாது என்பதால் கேம்ஸ் விளையாடுகையில் அதன் ரெசல்யூசனைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் வீடியோ மெமரிக்கு இடம் கிடைக்கும். சில வேளைகளில் கேம்ஸ் நன்றாக விளையாடுவதற்காக கேம்ஸில் என்ன ரெசல்யூசன் குறிப்பிடப்பட்டுள்ளதோ அதற்கேற்ற வகையில் குறைத்துக் கொள்ள வேண்டியதிருக்கும்.

சில கம்ப்யூட்டர்களில் உள்ள கிராபிக்ஸ் கார்டுக்கு உங்கள் கேம்ஸ் ஒத்துப் போகாமல் இருக்கலாம். சில கம்ப்யூட்டர்களில் ஏ.ஜி.பி. கார்ட் இல்லாமலே இருக்கலாம். எனவே நன்றாக கேம்ஸ் விளையாட வேண்டும்; அதனை விளையாடுவதில் திரில்லிங் அனுபவம் தேவை என்றால் ஒரு AGP அல்லது 3D graphics accelerator card வாங்குவது நல்லது. வீடியோ அப்படியே செயலற்றுப் போய் ப்ரீஸ் ஆகி நிற்பது, ஸ்கிரீன் அடிக்கடி விட்டு விட்டு காட்சி தருவது மற்றும் மற்றவகையான கிராஷ் ஏற்படுவது ஆகியவை கேம்ஸ் விளையாடுகையில் ஏற்படும் சகஜமான நிகழ்வுகளாகும்.

இன்னொரு முக்கிய குறையும் நம் கம்ப்யூட்டரில் இருக்கலாம். உங்கள் கம்ப்யூட்டரின் டிரைவர் புரோகிராம்கள் அப்டேட் ஆகாமல் இருப்பதாலும் கிராஷ் ஏற்படும். எனவே அவற்றை அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியம். சில வேளைகளில் ஒத்துப் போகாத சவுண்ட் கார்டும் கிராஷ் ஏற்பட வழி வகுக்கும். இப்படிப்பட்ட கிராஷ்கள் ஏற்படுகையில் உங்கள் கேம்ஸ் சிடியினை மற்ற கம்ப்யூட்டர்களில் விளையாடிப் பார்த்து குறை எந்த வகை என அறியலாம்.  மிக உயர்ரக சி.பி.யு.வில் கேம்ஸ் விளையாடுகையில் அது அதிகமாக சூடு அடைந்து அதனாலும் கேம்ஸ் விளையாடுவது கிராஷ் ஆகலாம். மேலும் இந்த அதிக பட்ச உஷ்ணம் ப்ராசசரின் மேல் உள்ள பேன் இயங்காமல் இருப்பதால் ஏற்படலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் அவ்வப்போது அப்டேட் செய்திட வேண்டும்; அல்லது மாற்ற வேண்டும். என்னதான் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் விளையாடலாம் என உங்கள் கேம்ஸ் சிடியில் போட்டிருந்தாலும் பல வேளைகளில் இவை பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் கிராஷ் ஆகின்றன.

மேலே தரப்பட்டிருப்பது கம்ப்யூட்டர் நோக்கில் இருந்துதான். கேம்ஸ் சிடிக்களே தரமின்றி வடிவமைக்கப் பட்டிருந்தாலும் பல வேளைகளில் கிராஷ் ஏற்படுவதுண்டு. எனவே கிராஷ் ஏற்படும் வேளையில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் சோதனை செய்து பார்த்துவிடுவது நல்லது.

One response

  1. […] கேம்ஸ் ஏன் கிராஷ் ஆகிறது? […]

%d bloggers like this: