சேட் ரூம்களில் பாதுகாப்பு

சேட் ரூம்களில் பாதுகாப்பு

இன்றைய இன்டர்நெட் உலகில் இளைஞர்கள் முதியவர்கள் என்றில்லாமல் அனைவரும் விரும்பிச் செல்லும் இடம் அரட்டை அறை(Chat Rooms) களாகும். ஏனென்றால் நாம் இதுவரை சந்திக்காத, முகம் தெரியாத ஒரு நபருடன் பழக்கம் ஏற்படுத்தி நட்பு பாராட்டி பேசுவது என்பது நமக்கு மகிழ்ச்சி தரும் ஓர் அனுபவம் தான். ஆனால் அங்கு என்ன நடக்கிறது? என்று அறியாமல் நாம் சிக்கிக் கொள்வதும் இங்கேதான். ஆம், இன்டர்நெட்டில் மிகவும் மோசமான இடமாக இருப்பதும் இந்த அரட்டை அறைகள்தான். இதில் நமக்கு வீசப்படும் வலைகளில் விழுந்துவிட்டால் உங்கள் பெர்சனல் தகவல்கள் திருடப்படுவதுடன் அதனைத் தொடர்ந்து பல இழப்புகளையும் நீங்கள் சந்திக்க வேண்டியதிருக்கும். அப்படியானால் அரட்டை அறைகளில் முகம் தெரியா நண்பர்களைச் சந்தித்து பயனுள்ள தகவல்களைப் பெற முடியாதா? நிச்சயம் முடியும். நாம் நமக்குள் ஒரு பாதுகாப்பு வளையத்தினை ஏற்படுத்தி பாதுகாப்பாக இயங்கினால்தான் இது சாத்தியமாகும். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.

1. நாம் விரும்பாவிட்டாலும் இன்டர்நெட்டில் ஆன்லைனில் பல பயங்கரவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். நீங்கள் கவனமாக உங்கள் கண்களைத் திறந்திருக்கவில்லை என்றால் ஒரு நொடியில் நீங்கள் ஆபத்தைச் சந்திக்கும் வேளைகள் அதிகமாகிவிடும். இதனைத் தவிர்க்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? உங்களை நீங்கள் அடையாளம் காட்டக் கூடிய எதனையும் இந்த மாதிரி அரட்டை அறைகளில் வெளிப்படுத்தக் கூடாது. யாருடனாவது அரட்டை அடிக்கிறீர்களா! இவர்கள் நாம் அறியாதவர்கள், காண முடியாதவர்கள் என்ற எண்ணம் எப்போதும் உங்கள் மனத்தினுள் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். எனவே உங்களுடைய உண்மைப் பெயர், இமெயில் முகவரி, இருப்பிட அல்லது அலுவலக முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைத் தரவே கூடாது. அப்படியானால் ஒருவர் நம்மிடம் நட்பு முறையில் பேசுகையில் என்ன செய்யலாம்? இதற்கென ஒரு போலியான இமெயில் முகவரியினைத் தயார் செய்து வைத்திருங்கள். பெயர் மற்றும் பிற தகவல்களையும் அவ்வாறே வைத்துக் கொள்ளலாம்.

2. யாருடன் பேசினாலும், பிற பொய்ப் பெயர்களில் இருந்து கொண்டு அறிமுகமானாலும் உங்களின் அன்றாட செயல்பாடுகளை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம். பள்ளி, கல்லூரிக்குச் செல்வது, பொருட்கள் வாங்கும் நேரம், இடம், சந்திக்கும் உறவினர் அல்லது நண்பரின் இடம், நேரம் ஆகியவற்றைக் குறிப்பிடவே கூடாது.

3. மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். ஆன் லைனில் இது போல பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட ஒருவருடன் எந்த நிலையிலும் நேரில் சந்திக்கும் வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ளக் கூடாது. மற்ற உங்கள் நண்பர்கள் அவ்வாறெல்லாம் சந்திக்கிறார்களே என்று நீங்களும் முயற்சிக்கக் கூடாது. இது உங்கள் வாழ்க்கை; அதனை முறையாக வைத்துக் கொள்வதும் ஆபத்தின்றி காப்பாற்றிச் செல்வதும் உங்கள் பொறுப்பு. அப்படியும் இன்றி நீங்கள் அரட்டை அறையில் சந்தித்த நபர் நேர்மையானவர்; எந்தப் பிரச்சினையும் தரக்கூடியவர் இல்லை என எண்ணினால் அவரைத் தனியாகச் சந்திக்கும் முயற்சியைக் கைவிடவும். உங்கள் நண்பர் அல்லது உற்றவர்களுடன் சேர்ந்து அது போன்ற நபர்களைச் சந்திக்கவும். மேலும் சந்திக்கும் இடமும் பொது மக்கள் வந்து செல்லும் பூங்கா, உணவு விடுதி போன்றவையாக இருக்கட்டும். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் நீங்கள் எங்கு செல்கிறீர்கள், யாரைப் பார்க்க இருக்கிறீர்கள் என்பதை எல்லாம் சொல்லிவிட்டுச் செல்லவும்.

4. நீங்கள் அரட்டையில் ஈடுபடும்போது எதிர் முனையில் இருப்பவர்களில் யாரேனும் ஒரு இணையத் தொடர்பினைக் கொடுத்து இங்கு கிளிக் செய்து பார்க்கவும் என்று உங்களுக்கு செய்தி தருகிறார்களா! உடனே அதனைக் கிளிக் செய்து பார்க்கக் கூடாது. அந்த இணைப்பில் தான் உங்களை வேவு பார்க்க அனுப்பும் புரோகிராம்கள் உங்கள் கம்ப்யூட்டர்களில் வந்து அமர்ந்து கொள்ளும்.

5. சில அரட்டை அறைகளில் மாடரேட்டர்கள் என ஒருவர் இருப்பார். இவர் கலந்து கொள்ளும் அனைவரையும் அனுமதித்து பேசிக்கொள்வதனைக் கண்காணிப்பார்; அனுமதிதருவார். அது போன்ற மாடரேட்டர் கள் இருக்கும் அறைகளில் மட்டுமே செல்லவும். இது முற்றிலும் பாதுகாப்பு என்றில்லாவிட்டாலும் நமக்கு ஓரளவிற்கு பிறரும் கண்காணிக்கும் வாய்ப்பு இங்கு உள்ளது.

6. ஒரு சிலர் உங்களின் போட்டோ அனுப்புங்கள் என்று கேட்கலாம். உடனே ஆஹா! என்று வியந்து தயாராக டெஸ்க் டாப்பில் உள்ள படத்தை அனுப்ப வேண்டாம். ஏதேனும் கார்ட்டூன் படத்தை அனுப்புங்கள். இதுதான் நான் என்று வேடிக்கையாகச் சொல்லுங்கள். ஏனென்றால் உங்கள் படத்தை மோசமான வழிகளில் பயன்படுத்த பலரும் தயாராக இருக்கலாம்.

7. ஏதேனும் ஒரு நாளில் இது போன்ற அரட்டை அறைகளுக்குச் சென்று முகம் தெரியாத, நீங்கள் ஆர்வம் கொண்டிருக்கும் அதே விஷயங்களில் ஆர்வம் காட்டும் நபர்களுடன் நம் தகவல்களையும் இலக்குகளையும் பகிர்ந்து கொள்வது நல்லதுதான். இது எப்போதாவதுதான் நடை பெற வேண்டுமே ஒழிய எப்போதும் நடை பெறக் கூடாது. ஒரு சிலர் இந்த சேட் அறைகளில் செயல்படுவதை தினந்தோறும் மேற்கொள்ளும் பழக்கமாக ஏற்படுத்திக் கொண்டு அந்த பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். இது அறவே தவிர்க்கப்பட வேண்டும்.

மேலே சொன்ன வழிகள் அரட்டை அறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து பாதுகாப்பு வழிகளையும் உங்களுக்குச் சுட்டிக் காட்டியுள்ளன என்று எண்ணுகிறேன். இது உங்கள் வாழ்க்கை; எனவே நீங்கள் அனைத்து நிகழ்வுகளிலும் நிலைகளிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்ற மேலோங்கிய எண்ணத்துடன் செயல்பட வேண்டியது உங்கள் பொறுப்பு. இதே தகவல்களை உங்கள் வீட்டில் உள்ள இணைய இணைப்பினையும் கம்ப்யூட்டரையும் பயன் படுத்துபவர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துங்கள். அது உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் கம்ப்யூட்டருக்கும் நல்லது.

One response

  1. […] சேட் ரூம்களில் பாதுகாப்பு […]

%d bloggers like this: