Daily Archives: ஏப்ரல் 26th, 2009

வசீகரமாக தோற்றமளிக்க ஆசையா? புன்னகைக்க மறக்காதீங்க!

வசீகரமாக தோற்றமளிக்க ஆசையா? புன்னகைக்க மறக்காதீங்க!

இந்த உலகில் நம்மை சட் டென்று கவர்பவர்கள் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? ஐஸ்வர்யா ராய், நயன்தாரா போன்ற பிரபலங்களை சற்றே தள்ளி வைத்துவிட்டு பார்த்தால், நம்மை சட்டென்று கவர்ந்து இழுப்பவர்கள், நிச்சயமாக, சிரித்த முகத்துடன் இருப்பவர்கள் தான். புன்னகை அவ்வளவு சக்தி வாய்ந்தது. அதனால் தானோ என்னவோ, நம் முன்னோர் “புன்னகை இருக்க, பொன் நகை எதற்கு?’ என்ற பழமொழியை கூறியுள்ளனர். புன்னகை மூலம், எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம். ஒருவரின் தோற்றத்தை, செலவே இல்லாமல் வசீகரமாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே. நமக்குப் பிடித்த நபர்களைப் பார்த்தவுடன், நம்மையும் அறியாமல் நாம் புன்புறுவல் பூக்கிறோம் அல்லவா?
அந்த சிரிப்பு, வெறும் உதடுகளின் அசைவு மட்டும் இல்லை; <அது உறவின் வெளிப்பாடு. சிரித்த முகத்தை பார்க்கும் போது, எத்தனையோ பிரச்னைகளை மீறி, ஒரு நம்பிக்கை விதை மனதில் விழுகிறது. உங்கள் சிரிப்பு, “பெர்சனாலிட்டி’யை உயர்த்துவதோடு, உங்களை வசீகரமாகவும் காட்டும். எனவே, சிரித்த முகத்துடன் இருக்க பழகுங்கள். அழும் குழந்தையை விட, சிரிக்கும் குழந்தையை தானே நாம் அனைவரும் விரும்புகிறோம். சிடுமூஞ்சி பெண்ணை விட, சிரித்த முகம் கொண்ட பெண் தானே விளம்பரங்களுக்கு ஏற்றவள். ஆக, சிரித்த முகமே கூடுதல் வசீகரம். பிறரை வசீகரப்படுத்தவும், எப்படிபட்ட நபரையும் “ஹேண்டில்’ செய்வதற்கும், அவசியமான ஒன்று உங்கள் புன்னகை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, வீடாக இருந்தாலும் சரி, பணியாற்றும் இடமாக இருந்தாலும் சரி, புன்னகை பூத்திடுங்கள்.
பணியிடத்தில் புன்னகையையும், ஆதரவான பார்வையையும் தவழ விடுங்கள். இது செயற்கையான விஷயமாக தோன்றலாம். ஆனால், கடுமையான அலுவலகச் சூழலை சரி செய்யும் கருவியாக, உங்கள் புன்னகை செயல்படும்.
எனவே, உங்கள் முசுடு உயரதிகாரியையோ அல்லது “மூடி’யான கணவனையோ பார்த்து உங்களுக்கு புன்னகை வரவில்லை என்றாலும், செயற்கையாக நீங்களாகவே புன்னகையை வரவழையுங்கள். உடனடியாக இல்லாவிட்டாலும், காலப் போக்கில் உங்கள் புன்னகை அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்கள் <உங்களை நடத்தும் விதம் மாறலாம்.
உங்களின் இந்த புன்னகை, நீங்கள் மற்றவருடன் கொள்ளும் உறவை, வலுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஆயுதம். என்றாலும், உங்கள் புன்னகையை தேவையற்ற இடங்களிலோ அல்லது தேவையற்ற நபரிடமோ காட்டினால், நீங்கள் தேவையில்லாத பிரச்னையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
குறிப்பாக, ஜொள்ளடிக்கும் சக ஊழியர்களிடமோ, பெண்களிடம் தவறாக நடக்கும் சீப்பான ஆசாமிகளிடமோ புன்னகையை நீங்கள் தொடர்வீர்களானால், விளைவு வேறு மாதிரியாக இருக்கும் என்பதை சற்றும் மறக்காதீர்கள்; அப்படி மறந்தால், அனாவசிய வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தேவையான இடங்களில், <உங்கள் புன்னகையை தவழவிட்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

பார்லர் போகாமலேயே பளிச்சிட வேண்டுமா?

பார்லர் போகாமலேயே பளிச்சிட வேண்டுமா?

சருமத்தில் ஏற்படும் கருமையை போக்க, பார்லியை தூளாக்கி, அத்துடன் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு, பால் ஆகியவற்றை கலக்க வேண்டும்.பின் அந்த கலவையை, வெயில் அதிகமாக படும் இடங்களான முகம், கழுத்து, கை, கால் ஆகிய இடங்களில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து, அவை காய்ந்ததும், குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர சருமத்தில் ஏற்படும் கருமை மறைந்து போய்விடும்.

பியூட்டி பார்லருக்கு சென்று ப்ளீச், பேஷியல் போன்றவை செய்து கொண்டால் அதில் இருக்கும் ரசாயனங்களால், அந்த சமயத்துக்கு நல்லாயிருந்தாலும், நாள்பட முக அழகு கெட்டுவிடும் என்று எண்ணுபவரா நீங்கள்? உங்கள் வீட்டில் இருந்தபடி நீங்களே பேஸ் மாஸ்க் போட்டு உங்கள் முகத்தை பளபளப்பாக ஆக்கிக் கொள்ள முடியும். இதோ சில டிப்ஸ் உங்களுக்காக…

எண்ணெய் சருமத்திற்கான பேஸ் மாஸ்க்

மூன்று டீஸ்பூன் முல்தானி மட்டி, ஒரு டீஸ்பூன் தயிர், அரை தக்காளி, ஐந்து துளி ஆரஞ்சு எசன்ஷியல் ஆயில் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்த பின் முகத்தை கழுவ, எண்ணெய் பசை நீங்கி, முகம் பளபளக்கும். இந்த மாஸ்க், சாதாரண மற்றும் எண்ணெய் பசை சருமத்திற்கு உகந்தது. இந்த மாஸ்க்கை முகத்தில் பூசுவதால், அவை காய்ந்து இறுகி வறண்ட தன்மையை கொடுக்கும். இந்த தன்மை சருமத்தில் காணப்படும், அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சுவதோடு, அழுக்கையும் அகற்றுகிறது.

வறண்ட சருமத்திற்கான பேஸ் மாஸ்க்

முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் சோளமாவு, இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் ஐந்து துளி ஜெரேனியம் எசன்ஷியல் ஆயில் ஆகியவற்றை கலந்து மிக்சியில் அடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

மென்மையான(சென்சிடிவ்) சருமத்திற்கான பேஸ் மாஸ்க்

நன்கு பழுத்த வாழைப்பழத்துடன், முட்டையின் மஞ்சள் கருவை கலந்து, இரண்டு டீஸ்பூன் சன்பிளவர் ஆயில், ஐந்து துளி ரோஸ் எசன்ஷியல் ஆயில் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த வகை பேஸ் மாஸ்க் வறண்ட மற்றும் மென்மையான சருமத்திற்கு ஏற்றது.

ஒளிரும் சருமம் வேண்டுமா…

50 கிராம் திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், பப்பாளி, தக்காளி ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றை எடுத்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதோடு இரண்டு டீஸ்பூன் தயிர் மற்றும் மூன்று துளி எலுமிச்சை எசன்ஷியல் ஆயில் சேர்த்து, முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென ஒளிரும். ஒளிரும் சருமத்திற்கான இந்த மாஸ்க் பயன்படுத்திய பின் தோல் ஈரப்பதத்துடன், மென்மையாகவும், இளமையாகவும் காணப்படும். இவ்வகை மாஸ்க் அடிக்கடி முகத்தில் பூசினால் தோலில் காணப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.

எனக்கு எல்லாமே பெயிலியர் தான் என்று சலித்து போனவரா நீங்கள்?

எனக்கு எல்லாமே பெயிலியர் தான் என்று சலித்து போனவரா நீங்கள்?

வாழ்க்கை வாழ்வதற்கே!

எனக்கு எதுவுமே சக்சஸ் ஆக மாட்டேங்குது. எல்லாத்துலயுமே தோல்வி தான். தோல்வியைத் தவிர வேற எதையுமே நான் பார்த்ததில்லை. ரொம்பவே சலிச்சுப் போயிட்டேன். என்னோட தோல்வியைப் பார்த்து மத்தவங்க சிரிக்கும் போது அவமானமா இருக்கு… என்ன வாழ்க்கையோ இது… என்று தோல்வியால் துவண்டு போனவரா நீங்கள்?

உங்கள் தோல்வி வெற்றியாக மாற வேண்டுமா? முதலில் நீங்கள் உங்கள் மனதில் பதிந்திருக்கும், “எனக்கு எப்பவுமே தோல்வி தான்’ என்ற எண்ணத்தை அழியுங்கள்.

இந்த தொடர் தோல்வி, என்னை கீழ் நோக்கி தள்ளுவதற்காக அல்ல, மாறாக, நான் மேலும் மேலும் சிறப்படைவதற்காகவே வருகிறது என்று நம்புங்கள்; உண்மையும் அதுதான். வெற்றியின் முதல்படி தோல்வி தானே?

சம்மட்டி கண்ணாடியை சிதறடிக்கிறது; ஆனால், அதே சம்மட்டி தான் இரும்பைக் காய்ச்சி அடித்து உறுதியாக்குகிறது. நமக்கு ஏற்படும் சோதனைகள், சம்மட்டி இரும்பை உறுதிப்படுத்துவது போல் நம்மை உருவாக்குவதற்காக வருகிறதே தவிர, நம்மை உடைப்பதற்காக அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நமக்கு வரும் பிரச்னைகள் நாம் மேற் கொள்ளும் பணிகளை வேண்டுமானால் தகர்க்கலாம். ஆனால், நம் மனதை பண் படுத்துகிறது. மனிதனின் வெளிப்புறத்தைத் தாக்கும் அடி, மனிதனின் உட்புறத்திற்கு பலமாக அமையும்.

மென்மையானவற்றாலும், தற்செயலாக நிகழ்பவற்றாலும் சந்தோஷமடையும் மனிதர்கள் ஒரு போதும் வலிமையாக ஆவதில்லை. போராட்டமும், சிக்கலும் தான் மனதினுள் வலிமை என்னும் உரத்தை ஏற்படுத்துகிறது.

இதை நீங்கள் உணர்ந்து செயல்படத் துவங்கும் போது, யாராலும் உங்களைத் தோற்கடிக்க முடியாது; இந்த நிலையை நீங்கள் அடைந்தால் <உங்களுக்கு உற்சாகம் கரை புரண்டோடும். நம்பிக்கை, தானே தேடி வரும்.

பிறகென்ன? எதனாலும், யாராலும் உங்களை அசைக்க முடியாது. நீ யாரென்று உன்னை உணர்கிறாயோ, அந்த எண்ணத்தைப் போல நீ உருமாறுகிறாய்!

நாம் ஒவ்வொருவரும் நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி இது – எனக்கு நானே என்ன செய்து கொள்கிறேன்? என்னுள் உறங்கிக் கிடக்கும் முழு ஆற்றலுக்கு சமமாக என்னை நான் ஆக்கிக் கொள்கிறேனா? அல்லது என்னால் செய்யக் கூடியது இவ்வளவு தான் என்று சிறிய வரைமுறைக்குள் உழல்கிறேனா? இந்த கேள்வியை நீங்கள் உங்களுக்குள் கேட்டு விடை காணுங்கள்.

வாழ்க்கை என்பது மேடு, பள்ளங்கள் நிறைந்தது. தோல்வி என்கிற ஒன்று இருந்தால் தான் வெற்றி ருசிக்கும்.

“உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்

வலி தாங்கும் இதயம் தானே நிலையான சுகம் காணும்’

என்ற பாடல் வரியை கேட்டதில்லையா! ஆம், அவமானம் ஒரு மூலதனம்; அது புரிந்தால் வெற்றி நிச்சயம். வாழ்க்கை வாழ்வற்கே…

இல்லறம் இனிக்க வேண்டுமா?

இல்லறம் இனிக்க வேண்டுமா?

திருமணமான புதிதில், எல்லாருமே சந்தோஷமா தான் இருக்காங்க. ஓரிரு வருஷம் கழித்து கேட்டால், கல்யாணம் செய்யாமலேயே இருந்திருக்கலாம்; ஏன் தான் கல்யாணம் செய்து கொண்டேனோ? என்று புலம்புபவர்கள் தான் அதிகம். நீங்களும் அப்படி புலம்பித் தவிப்பவரா? கவலையை விடுங்கள். சின்ன சின்ன அட்ஜஸ்மென்ட் செய்து கொண்டாலே போதும் உங்கள் பிரச்னை காணாமல் போய்விடும். இல்லறத்தை இனிதாக்க இதோ சில டிப்ஸ் உங்களுக்காக…

* உங்கள் கணவரது விருப்பு, வெறுப்புகளை அறிந்து, அதன்படி விட்டுக் கொடுத்து நடந்துங்கோங்க. அவருடைய விருப்பங்களை அலட்சியப்படுத்தாதீங்க. உங்களுக்கு பிடிக்காததா இருந்தாலும், அவருக்கு பிடித்ததை நீங்க ரசிக்கப் பழகிக்கோங்க.

* உங்க கணவர் உங்கள விட அறிவிலோ, கல்வியிலோ, பொருளாதாரத்திலோ குறைவாக இருந்தால், அவரை குறைகூறாதீங்க; மற்றவருடன் ஒப்பிட்டும் பேசாதீங்க.

* உங்க கணவருக்கு தேவையான சிறுசிறு உதவிகளை செய்ய மறக்காதீங்க.

*மத்தவங்க முன்னாடி உங்க கணவரை ஒரு போதும் விட்டுக் கொடுத்துப் பேசாதீங்க.

*கடுமையான வார்த்தையை பேசி காயப்படுத்தாதீங்க; அதுவும் மத்தவங்க முன்னாடி கூடவே கூடாது; கூலான, அன்பான வார்த்தைகளை மட்டுமே பேசுங்க. சந்தோஷமா இருக்கும் போது மட்டுமில்லை, சங்கடமான சமயங்களிலும் பேசணும்.

*நிறைய பேசுங்க, பேசவிடுங்க, பேசுறதை கேளுங்க… நீங்க மட்டும் பேசிபேசிப் போரடிக்காம, உங்க கணவர் பேசுவதையும் காதுகொடுத்து கேளுங்க.

*கணவருடன் சண்டை போட்டுட்டு மனக் குமுறலோடு படுக்கைக்குப் போகாதீங்க. படுக்கப் போகும் முன் சண்டையை சுமூகமாக தீர்த்துக்கோங்க.

*முடிந்த வரை இருவரும் சேர்ந்தே சாப்பிடுங்க. அட்லீஸ்ட் தினமும் டின்னர் மட்டுமாவது சேர்ந்து சாப்பிடுங்க.

*உங்க அன்பை, காதலை வெளிக்காட்ட அடிக்கடி கிப்ட்ஸ் கொடுங்க… விசேஷ நாட்கள்ல மட்டுமல்ல; மற்ற நாட்களிலும் கொடுக்கலாமே!

*வீட்டில் பர்ஸ்ட் பிரிபரன்ஸ் உங்க கணவனுக்கு தான் இருக்கணும்; அதுக்கு அப்புறமா தான் குழந்தைங்க கூட.

*நமக்கு தான் வயசு நாற்பதை தாண்டிடுச்சே, இனிமே என்ன இருக்கு என்று நினைக்காம, உங்களோட அழகுல கவனம் செலுத்த மறக்காதீங்க.

*தினமும் இரவில், குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி மனம் விட்டுப் பேசுங்க. சினிமா, அரசியல் என, உங்களுக்குள் கருத்து வேறுபாடு வராதவரை எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுங்க.

*ஐ லவ் யூ! இந்த வார்த்தையை உங்கள் கணவரிடம் அடிக்கடி சொல்லுங்க. இந்த வார்த்தையோட பவரை புரிஞ்சுப்பீங்க.

*நீங்க தவறு செய்யும் போது, உங்க கணவரிடம் மன்னிப்பு கேட்க தயங்காதீங்க.

*வருடத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக, உங்கள் கணவருடன் எங்காவது டூர் போயிட்டு வாங்க. குழந்தைகள் இருந்தா தாத்தா பாட்டி அல்லது நண்பர்கள் என யாரிடமாவது விட்டுச் செல்லுங்கள். அந்த நாட்களை எப்படி கொண்டாட வேண்டும் என்பதை திட்டமிட்டு என்ஜாய் பண்ணுங்க. இப்படியெல்லாம் நீங்க இருந்தா உங்க குடும்பத்துலயாவது… சண்டையாவது… பின் என்ன? வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க. வாழ்க்கை வாழ்வதற்கே!

2. கிச் டிப்ஸ்

* தேங்காய் துருவலுடன், ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையை சேர்த்து, தேங்காய் பர்பி செய்தால், வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

* தோசை மாவுடன், சிறிதளவு சோளமாவு சேர்த்து தோசை வார்த்தால், தோசையின் சுவை அபாரமாக இருக்கும்.

*இட்லிப் பொடி தயாரிக்கும் போது, சிறிதளவு கருவேப்பிலையை வறுத்து சேர்த்து அரைத்தால், ருசியாக இருக்கும்.

*தயிர் வடை செய்யும் போது வடையை பொரித் ததும், அதை சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து பின் தயிரில் போட்டால் நன்றாக ஊறும்.

*ஜவ்வரிசி பாயசம் செய்யும் போது, இரண்டு டீஸ்பூன் வறுத்த கோதுமை மாவை பாலில் கரைத்து ஊற்றி செய்தால், பாயசம் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும்.

*இட்லிக்கான அரிசியை வெந்நீரில் ஊற வைத்து அரைத்தால், இட்லி பஞ்சு போல இருக்கும்.

*முள்ளங்கி சாம்பார் செய்யும் போது, சிறிதளவு எண்ணெயில் முள்ளங்கியை வதக்கிய பின் சாம்பார் செய்தால் ருசி கூடும்.

*கட்லெட் செய்யும் போது, அவை எண்ணெயில் போட்டதும் உதிர்ந்து போகாமல் இருக்க, கலவையில் சிறிது முட்டையை ஊற்றி பிசைந்து செய்யலாம். முட்டை விரும்பாதவர்கள் அதற்கு பதில் பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து கட்லெட் கலவையுடன் சேர்த்து செய்யலாம்.

*கட்லெட் செய்ய ரொட்டி தூள் இல்லையென்றால், அரிசியை பொரித்து தூளாக்கி பயன்படுத்தலாம்.

*வெங்காய பஜ்ஜிக்கான வெங்காயத்தை, தோலை உரிக்காமல் வட்டமாக வெட்டி விட்டு பின் தோலை உரித்தால், வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும்.

*உளுந்தம்பருப்பு வடைக்கு அரைக்கும் போது, சிறிதளவு பச்சரிசியையும் சேர்த்து அரைத்தால், வடை மொறுமொறுப்பாக இருக்கும்.

*உளுந்தம்பருப்பு வடைக்கு அரைக்கும் போது தண்ணீர் அதிகமாகி விட்டதா? அதில், சிறிது பச்சரிசி மாவை தூவினால் தண்ணீரை அரிசி மாவு உறிஞ்சிவிடும்.

*உருளைக்கிழங்கை சீவியதும் சிறிதளவு பயத்தம்பருப்பு மாவை தூவி, சிப்ஸ் செய்தால் மொறுமொறுவென்று இருக்கும்.

*பருப்பில் சிறிதளவு நெய் விட்டு வேக வைத்தால், விரைவாக வேகும். அதோடு சுவையும் மணமும் அதிகரிக்கும்.

*மோர் குழம்பு செய்து இறக்கும் போது சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால் வாசனையாக இருக்கும்.

*கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை போன்றவற்றில் சமையலுக்கு தேவையானதை, முதல் நாள் ஊறப் போட மறந்து விட்டால், அவற்றை எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்து பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்கு வெந்து விடும்.

*தோசை மாவு அரைக்கும் போது சிறிதளவு கடலைப் பருப்பை சேர்த்து அரைத்தால், தோசை பொன்னிறமாக வரும்.

*தோசை மாவில் வெந்தயப் பொடி சிறிதளவு சேர்த்து தோசை வார்த்தால் வாசனையாக இருக்கும்.

*மிளகாயை வறுத்து பொடி செய்யும் போது, சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வறுத்தால், அவை கமறாமல் இருப்பதோடு, பொடியும் மணமாக இருக்கும்.

*வற்றல் குழம்பு தாளிக்க நல்லெண்ணெய் பயன் படுத்தினால், வாசனை நன்றாக இருக்கும்.

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா நீங்கள்?

 கல்லூரி மாணவர்கள், இளம்பெண்கள் என அனைவருமே ஒல்லியாக இருக்கவே விரும்புகின்றனர்.

ஒல்லியாக இருப்பது தான் அழகு என்று நினைப்பது தான் இதற்கு காரணம். பல பெண்கள் சிம்ரன் போல ஒல்லியாக இருக்க வேண்டும்; சினேகா போல இடுப்பு வேண்டும் என்று தங்கள் எடையை குறைக்க விரும்புகின்றனர். விளைவு, “நான் டயட்டில் இருக்கேன்’ அப்படின்னு பெருமையா சொல்லிட்டு, அவங்க இஷ்டத்துக்கு ஏதேதோ சாப்பிடறாங்க; சில பேர் சாப்பிடாம பட்டினி கிடக்குறாங்க. சாப்பிடாமல் இருந்தால் ஸ்லிம்மாகி விடலாம் என்று யார் சொன்னது? உண்மையில், முறைப்படி சாப்பிட்டால் தான் ஸ்லிம்மாக முடியும். அளவாக சத்தான உணவை சாப்பிட் டால், என்றைக்கும் மாறாத இளமையோடும், அழகோடும் இருக்கலாம். அவரவர் உடம்புக்கு எந்தெந்த உணவு வகைகள் ஒத்துக் கொள்கிறதோ, அதைச் சாப்பிட்டு வந்தாலே போதும். அதை விட்டுவிட்டு சாப்பிடாமல் பட்டினி கிடந்தால், பீரியட்ஸ் ப்ராப்ளம், ரத்தசோகை, மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் தான் வரும். எனவே, ஒல்லியாகப் போறேன் அப்படின்னு உங்க இஷ்டத்துக்கு உணவை குறைக்காதீங்க; உங்கள் வயதுக்கேற்ற, ஆரோக்கியமான, சத்தான உணவை சாப்பிடுங்கள். அவரவர் உயரத்துக்கு தகுந்த எடையுடன் இருப்பது தான் அழகு. அப்படி நீங்க ஸிலிம்மாக விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியவை:

* மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்:

உங்கள் உடல் அமைப்பு, உணவுப் பழக்க வழக்கங்கள், நாள் ஒன்றுக்கு செலவாகும் சக்தி போன்ற பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு தான் மருத்துவர் உங்களுக்கு ஆலோசனை அளிப்பார். எனவே, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதற் கேற்ப டயட்டில் இருங்கள்.

* உடற்பயிற்சி செய்யுங்கள்:

எடையைக் குறைக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஜிம்,யோகா, நீச்சல், டான்ஸ், வாக்கிங் ஆகியவையும் உடற்பயிற்சி தான். இதுபோன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அதற்காக, அதி தீவிரமாக பயிற்சியில் ஈடுபடாதீர்கள். அது ஆபத்தில் கொண்டு போய் விடும். அளவான பயிற்சி, அளவான சாப்பாடு போன்றவை தான் நல்ல பயனை தரும். டயட்டீஷியன், பிட்னெஸ் மாஸ்டர் ஆகியோரை ஆலோசித்து செயல்படுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

* உணவுமுறையில் கவனம் செலுத்துங்கள்:

ஸிலிம்மாக மாற வேண்டுமென்றால், நிச்சயமாக நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செ<லுத்த வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்புச்சத்து நிறைந்த பொருட்கள் ஆகியவற்றை தவிருங்கள். அவை சுவையுள்ளதாக இருப்பினும் உடலுக்கு தீங்கு விளைவிக் கக் கூடியவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படி குண்டாக இருக் கோமே என்று கவலைப் படுவதை விட்டுவிட்டு, உரிய நபர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்று, உங்கள் விருப்பப்படி ஸிலிம்மாக மாறி லைப்பை என்ஜாய் செய்யுங்கள்

கிச்’ டிப்ஸ்

கிச்’ டிப்ஸ்

பளிங்கு பொருட்கள் பளிச்சிட…

பிளவர் வாஷ், தேனீர் கோப்பை, தண்ணீர் டம்ளர் போன்ற கண்ணாடி மற்றும் பளிங்கினால் ஆன பொருட்களை பயன் படுத்தினால் அதன் அழகே தனிதான். ஆனால் அந்த பளிங்கு பொருட்களை தொடர்ந்து பளபளப்பாக வைத்திருப்பது என்பது கடினமான விஷயம். அவற்றை பராமரிப்பதற்கான சில டிப்ஸ் இதோ… * கண்ணாடி பொருட்களை அலம்பிய பின், கடைசியாக கழுவும் தண்ணீரில் சிறிது வினிகர் மற்றும் போராக்ஸ் பவுடர் கலந்து கழுவ வேண்டும். அப்படி செய்தால் அவை எப்போதும் பளபளப்பாக இருக்கும். * கண்ணாடி பொருட்களை கழுவும் போது, கையில் அணிந்திருக்கும் மோதிரத்தை கழட்டி வைத்து விட்டால், கண்ணாடி பொருட்களில் உராய்ந்து கீறல் விழுவதை தவிர்க்கலாம். * பளிங்கு மற்றும் கண்ணாடி பாத்திரங்களை, ஷெல்புகளில் நியூஸ் பேப்பரின் மேல் வைப்பதை தவிர்ப்பது நல்லது. நியூஸ் பேப்பர் இங்க்களில் காணப்படும் ரசாயனம், நாளடைவில் பளிங்கு பொருட்களின் பளபளப்பை மங்கச் செய்து விடும். * ஷெல்புகளில் பீங்கான் தட்டுக்களை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைப்பதால் உராய்ந்து கீறல் விழுகிறதா? அடுக்கி வைக்கும் போது, ஒவ்வொரு தட்டை அடுக்கிய பின்னும், ஒரு துணியை போட்டு பின் அதன் மேல் மற்றொரு தட்டு என அடுக்கலாம். இவ்வாறு செய்வதால் இரு தட்டுக்களுக்கு இடையே உராய்வு ஏற்படுவது தவிர்க்கப்படும். * கண்ணாடி ஜன்னல்கள் மீது பெயின்ட் கறை படிந்து விட்டால், சிறிது வினிகரை வெதுவெதுப்பாக சூடுபடுத்தி, ஒரு துணியில் நனைத்து, பெயின்ட் கறை மீது தேய்த்தால் கறை காணாமல் போய்விடும். * கண்ணாடி பாட்டில்களில் துர்நாற்றம் அடிக்கிறதா… கவலையே வேண்டாம். அந்த பாட்டிலில்சிறிதுகடுகைபோட்டு, வெந்நீர் ஊற்றி, சிறிது நேரம் வையுங்கள். பின், வெந்நீரை கீழே ஊற்றி விட்டு துடைத்து காய வைத்தால் துர் நாற்றம் காணாமல் போய்விடும். கடுகுக்குப் பதிலாக உப்பை போட்டு ஊற வைத்தும் கழுவலாம். * கண்ணாடி மற்றும் பீங்கானாலான பவுல்கள், டம்ளர்கள் போன்றவற்றில் காணப்படும் கறைகளை அகற்ற, எலுமிச்சம்பழச்சாறு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை கலந்து கறையுள்ள இடத்தில் தேய்த்து கழுவினால் கறை அகன்று விடும். * வாஷ் பேசினில் மஞ்சள் கறை படிந்திருந்தால், அவற்றின் மீது வினிகரை தெளித்து, சிறிது நேரம் தண்ணீர் ஊற்றி தேய்த்து கழுவினால் கறை காணாமல் போய்விடும். * வெள்ளை நிறத்தாலான வாஷ் பேசினை சுத்தம் செய்த பின், அதில் சிறிதளவு துணிகளுக்கு பயன்படுத்தப்படும் நீலம் கலந்த தண்ணீரை ஊற்றி கழுவினால் மிகவும் பளபளப்பாக இருக்கும். * கண்ணாடியாலான பிளவர் வாஷ்கள், எண்ணெய் ஊற்றி வைக்கும் ஜாடி, தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றில் அதிக நாட்கள் எண்ணெய் மற்றும் தண்ணீர் வைத்திருப்பதால் கறை ஏற்படும். அதை போக்க அதில் சிறிது வினிகரை ஊற்றி, கறையின் தன்மையை பொறுத்து 30 நிமிடங்கள் முதல் ஒரு நாள் இரவு வரை ஊற விட்டு, வெதுவெதுப்பான தண்ணீரில் அலச வேண்டும்.

எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுமா?

எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுமா?

ஹாய் பிரண்ட்ஸ், நாம் அனைவருமே எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால், அனைவராலும் வெற்றி பெறமுடிவதில்லை. இந்த காரியத்தில் ஏன் என்னால் வெற்றி பெற இயலவில்லை என்று பலரும் யோசிப்பதில்லை; மாறாக, அவ்வளவு தான் என் விதி என்று விட்டுவிடுகிறோம். ஆசை மட்டும் இருந்தால் வெற்றி கிட்டாது. ஆசையுடன் சில செயல்களையும் மேற்கொண்டால் மட்டுமே வெற்றி கிட்டும். அதற்கு செய்ய வேண்டியன என்ன?

இதோ சில டிப்ஸ் உங்களுக்காக …

* நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடாமுயற்சியும், நம்பிக்கையும் தேவை. அந்த நம்பிக்கை, “என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும்’ என்ற மனஉறுதியுடன் அமைய வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் திறமை உள்ளவராக இருந்தாலும் கூட உங்களால் வெற்றி பெற இயலும்.

* பிரச்னைகள் வரும் போது, நான் இவ்வளவுதான், இது என் விதி என்று மனம் தளரக் கூடாது. மாறாக, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி. நம்பினால், நீங்கள் புதியவனாக, புதியவளாக மாற முடியும். அந்த தன்னம்பிக்கை தோல்வியுறுபவர்களை, வெற்றியாளராக்கும்; சோம்பேறிகளை சுறுசுறுப்பானவர்களாக மாற்றும்.

* உங்கள் இலக்கை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த இலக்கை பாசிடிவ் எண்ணங்களும், நம்பிக்கைகளும் சூழ்ந்திருக்க வேண்டும். பின், ஆக்கப்பூர்வமாக அதை தொடர்ந்து செய்யும் போது உங்களால் வெற்றி அடைய முடியும்.

* தன்னம்பிக்கையும் தைரியமும் நீங்கள் நினைக்கும் எண்ணங்களோடு இணைந்திருக்கும் போது உங்களுக்கு வெற்றி நிச்சயம். மாறாக, எதிர்மறையான (நெகடிவ்) எண்ணங்களை வளர்த்துக் கொண்டால், விளைவும் மோசமானதாகத்தான் இருக்கும். ஏனென்றால், <உங்கள் ஆழ்மனம், உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறது. ஆழ்மனதிற்கு நீங்கள் எதை அனுப்புகிறீர்களோ, அதையே உங்களுக்கு திருப்பி அனுப்புகிறது. உதாரணமாக, தாழ்வுணர்ச்சி, பயம் போன்றவற்றை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் போது, அது உங்கள் ஆழ்மனதினுள் சென்று அதையே திரும்ப அனுப்புகிறது. ஆக, நீங்கள் <உங்கள் மனதினுள் அனுப்புவதையே பெறுகிறீர்கள்.

எனவே, மனதை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதில், ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான, தைரியமான எண்ணங்களால் நிரப்புங்கள். வெற்றி நிச்சயம்!