எனக்கு எல்லாமே பெயிலியர் தான் என்று சலித்து போனவரா நீங்கள்?

எனக்கு எல்லாமே பெயிலியர் தான் என்று சலித்து போனவரா நீங்கள்?

வாழ்க்கை வாழ்வதற்கே!

எனக்கு எதுவுமே சக்சஸ் ஆக மாட்டேங்குது. எல்லாத்துலயுமே தோல்வி தான். தோல்வியைத் தவிர வேற எதையுமே நான் பார்த்ததில்லை. ரொம்பவே சலிச்சுப் போயிட்டேன். என்னோட தோல்வியைப் பார்த்து மத்தவங்க சிரிக்கும் போது அவமானமா இருக்கு… என்ன வாழ்க்கையோ இது… என்று தோல்வியால் துவண்டு போனவரா நீங்கள்?

உங்கள் தோல்வி வெற்றியாக மாற வேண்டுமா? முதலில் நீங்கள் உங்கள் மனதில் பதிந்திருக்கும், “எனக்கு எப்பவுமே தோல்வி தான்’ என்ற எண்ணத்தை அழியுங்கள்.

இந்த தொடர் தோல்வி, என்னை கீழ் நோக்கி தள்ளுவதற்காக அல்ல, மாறாக, நான் மேலும் மேலும் சிறப்படைவதற்காகவே வருகிறது என்று நம்புங்கள்; உண்மையும் அதுதான். வெற்றியின் முதல்படி தோல்வி தானே?

சம்மட்டி கண்ணாடியை சிதறடிக்கிறது; ஆனால், அதே சம்மட்டி தான் இரும்பைக் காய்ச்சி அடித்து உறுதியாக்குகிறது. நமக்கு ஏற்படும் சோதனைகள், சம்மட்டி இரும்பை உறுதிப்படுத்துவது போல் நம்மை உருவாக்குவதற்காக வருகிறதே தவிர, நம்மை உடைப்பதற்காக அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நமக்கு வரும் பிரச்னைகள் நாம் மேற் கொள்ளும் பணிகளை வேண்டுமானால் தகர்க்கலாம். ஆனால், நம் மனதை பண் படுத்துகிறது. மனிதனின் வெளிப்புறத்தைத் தாக்கும் அடி, மனிதனின் உட்புறத்திற்கு பலமாக அமையும்.

மென்மையானவற்றாலும், தற்செயலாக நிகழ்பவற்றாலும் சந்தோஷமடையும் மனிதர்கள் ஒரு போதும் வலிமையாக ஆவதில்லை. போராட்டமும், சிக்கலும் தான் மனதினுள் வலிமை என்னும் உரத்தை ஏற்படுத்துகிறது.

இதை நீங்கள் உணர்ந்து செயல்படத் துவங்கும் போது, யாராலும் உங்களைத் தோற்கடிக்க முடியாது; இந்த நிலையை நீங்கள் அடைந்தால் <உங்களுக்கு உற்சாகம் கரை புரண்டோடும். நம்பிக்கை, தானே தேடி வரும்.

பிறகென்ன? எதனாலும், யாராலும் உங்களை அசைக்க முடியாது. நீ யாரென்று உன்னை உணர்கிறாயோ, அந்த எண்ணத்தைப் போல நீ உருமாறுகிறாய்!

நாம் ஒவ்வொருவரும் நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி இது – எனக்கு நானே என்ன செய்து கொள்கிறேன்? என்னுள் உறங்கிக் கிடக்கும் முழு ஆற்றலுக்கு சமமாக என்னை நான் ஆக்கிக் கொள்கிறேனா? அல்லது என்னால் செய்யக் கூடியது இவ்வளவு தான் என்று சிறிய வரைமுறைக்குள் உழல்கிறேனா? இந்த கேள்வியை நீங்கள் உங்களுக்குள் கேட்டு விடை காணுங்கள்.

வாழ்க்கை என்பது மேடு, பள்ளங்கள் நிறைந்தது. தோல்வி என்கிற ஒன்று இருந்தால் தான் வெற்றி ருசிக்கும்.

“உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்

வலி தாங்கும் இதயம் தானே நிலையான சுகம் காணும்’

என்ற பாடல் வரியை கேட்டதில்லையா! ஆம், அவமானம் ஒரு மூலதனம்; அது புரிந்தால் வெற்றி நிச்சயம். வாழ்க்கை வாழ்வற்கே…

<span>%d</span> bloggers like this: