Monthly Archives: மே, 2009

காங்கிரஸின் “கிராண்ட் மாஸ்டர்’

காங்கிரஸின் “கிராண்ட் மாஸ்டர்’

சிரித்தால் பளிச்சென்று குழிவிழும் கன்னம். சுறுசுறுப்பான நடை. நறுக்குத் தெரித்தாற்போலப் பேசும் பாங்கு. எந்தவொரு விஷயத்தையும் ஆழமாகத் தெரிந்து கொள்ள விழையும் ஆர்வம். அப்பாவைப்போலவே அப்பாவித்தனமான குழந்தை முகம் – இதுதான் ஜூன் 17, 1970-ல் பிறந்த ராகுல் காந்தி!

மன்னராட்சியில்கூட, ஐந்து தலைமுறையாகத் தொடர்ந்து மக்கள் செல்வாக்குடன் ஆட்சி செய்த அரச குடும்பங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். உலக ஜனநாயக சரித்திரத்தில் தொடர்ந்து ஐந்து தலைமுறையாக அரசியலில் கொடிகட்டிப் பறக்கும் ஒரே குடும்பம் மோதிலால் நேருவின் குடும்பமாகத்தான் இருக்கும்.

நமது மனதில் முதன்முதலில் பதிந்த ராகுல் காந்தியின் முகம், சோடாபுட்டிக் கண்ணாடியுடன், பாட்டி இந்திரா காந்தியின் சடலத்துக்குத் தந்தை ராஜீவ் காந்தி தீ மூட்டும்போது, அழுதபடி சகோதரி பிரியங்காவைக் கட்டிப்பிடித்த சிறுவனைத்தான். அடுத்தபடியாக நாம் பார்த்தது, அப்பா ராஜீவ் காந்தியின் சிதைக்குத் தீ மூட்டிய இளைஞனை. அடுத்தாற்போல, ராகுல் காந்தியைப் பற்றி நாம் கேள்விப்பட்டது, 2004 தேர்தலில் அவர் அமேதி தொகுதியில் மக்களவைக்குப் போட்டியிட்டபோதுதான்.

இடைப்பட்ட 13 ஆண்டு இடைவெளியில் ராகுல் காந்தி என்ன செய்தார், எப்படி, எங்கே இருந்தார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். நேரு குடும்பம் ஆட்சியில் இல்லாமல் இருந்ததுகூடக் காரணமாக இருக்கலாம். இப்போது மீண்டும் நேரு குடும்பம் அதிகார மையத்தில் இருப்பதால், அத்தனை கண்களும் அந்தக் குடும்பத்தின் அடுத்த வாரிசான ராகுல் காந்தியின்மீது பதிந்திருப்பதில் ஆச்சரியமில்லை.

ராகுல் காந்தி முதலில் தில்லியிலுள்ள மாடர்ன் பள்ளியில் சேர்க்கப்பட்டபோதும், அடுத்த சில மாதங்களிலேயே தந்தையும் சித்தப்பாவும் படித்த டூன் பள்ளிக்கூடத்துக்கு மாற்றப்பட்டார். இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக வீட்டிலிருந்தபடி படிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

தில்லியிலுள்ள புனித ஸ்டீபன்ஸ் கல்லூரியில் ராகுலைச் சேர்க்க அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி விரும்பியபோது, அவ்வளவு சுலபமாக அவரால் அந்தக் கல்லூரியில் சேர்க்க முடியவில்லை. காரணம், ராகுலுக்குப் படிப்பில் அவ்வளவு கெட்டிக்காரத்தனம் இல்லாமல் இருந்ததுதான். விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டை சாக்கிட்டு, துப்பாக்கி சுடுவதில் தேர்ச்சி பெற்றவர் என்று கூறி, பலமான சிபாரிசுடன் ராகுல் காந்தி புனித ஸ்டீபன்ஸ் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். ஆனால், அதிக நாள் அங்கே அவரால் தொடர முடியவில்லை.

1989 தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததும், தனது குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டார் ராஜீவ் காந்தி. பிரியங்கா இத்தாலியில் தாய்வழிப் பாட்டியின் வீட்டிற்கும், ராகுல் காந்தி அமெரிக்காவுக்கும் அனுப்பப்பட்டனர். அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாநிலத்தில் அமைந்த ரோலின்ஸ் கல்லூரியில் சேர்க்கப்பட்டார் ராகுல். ஃப்ளோரிடாவில் அவருடன் படித்த கல்லூரித் தோழர் இப்போது மத்திய தகவல் தொடர்புத்துறை இணையமைச்சராக இருக்கும் ஜோதிராதித்ய சிந்தியா. அன்று தொடங்கிய நெருங்கிய நட்பு இப்போதும் தொடர்கிறது.

என்ன காரணத்தாலோ, ரோலின்ஸ் கல்லூரியில் மூன்று வருடங்கள் படித்தும், எந்தவிதப் பட்டமும் பெறாமல் அமெரிக்காவிலுள்ள இன்னொரு பல்கலைக்கழகத்துக்குத் தாவினார் ராகுல். அங்கே அவர் பட்டப்படிப்பை முடித்தார் என்று கூறப்படுகிறது. 1995-ல் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ட்ரினிட்டி கல்லூரியில் அக்டோபர் 1994 முதல் ஜூலை 1995 வரை படித்து எம்.பில். பட்டம் பெற்றதாகச் சொல்கிறார்கள். “பத்து மாதம் எங்கள் கல்லூரியில் படித்து எம்.பில். பட்டம் பெற்றார் ராகுல் காந்தி’ என்று சமீபத்தில் அந்தப் பல்கலைக்கழகத் துணைவேந்தரே சான்றிதழ் கொடுத்திருக்கிறார்.

ஹார்வர்ட் பிசினஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் போர்ட்டர் என்பவர் நடத்தும் “மானிட்டர்’ நிலையத்தில், தகவல் தொடர்புத் துறையின் ஆய்வாளராக ராகுல் காந்தி சில காலம் பணியாற்றினார். பிறகு இந்தியா திரும்பி மும்பையில் சொந்தமாக ஒரு கன்சல்டென்சி நிறுவனம் நடத்தி வந்தார். இப்போது அதையும் மூடிவிட்டதாகத் தெரிகிறது. இவையெல்லாம்தான் ராகுல் காந்தி பற்றிய இளமைக் காலத் தகவல்கள்.

2004 தேர்தலில் ராகுல் காந்தி வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானது முதல், அவரது தனிப்பட்ட வாழ்க்கை அரசியல் வட்டாரங்களில் சற்று அதிகமாகவே அலசப்படுகிறது. 39 வயதாகிவிட்ட ராகுல் காந்தி திருமணமாகாமல் இருப்பது ஏன் என்கிற கேள்வி எழுவதில் தவறொன்றும் இல்லை. அதுவும், தனக்கு ஒரு காதலி இருப்பதாக அவரே ஒரு பத்திரிகை பேட்டியில் கூறிவிட்ட பிறகு, அவரது திருமணம் பற்றிய பேச்சு எழுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது!

அதேநேரத்தில், ராகுல் காந்தி தான் காதலிக்கும் பெண்ணைக் கைபிடிப்பாரா இல்லையா என்பதைப் பொருத்துத்தான் ராகுல் காந்தியின் அரசியல் வருங்காலமும், காங்கிரஸ் கட்சியின் வருங்காலமும் அமையும் எனும்போது, ஆச்சரியம் விவாதமாக மாறத்தானே செய்யும்?

ராகுல் காந்தியின் கொலம்பியாக் காதலி என்று எழுதுகிறார்களே, அவர்கள் ராகுல் – வெரோனிக்கா உறவைப் பற்றி அரைகுறையாகத் தெரிந்தவர்கள். அவர் கொலம்பியப் பெண்ணே அல்ல. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வெரோனிக்காவின் பெற்றோர் வசிப்பது வெனிசுலாவில். இவர்களது காதல் கடந்த 13 வருடங்களாகத் தொடர்கிறது.

சோனியா மற்றும் பிரியங்காவுக்கு ராகுலின் காதலைப் பற்றி நன்றாகவே தெரியும். வெரோனிக்கா இந்தியா வந்திருந்தார் என்பது மட்டுமல்ல, தில்லியில் சோனியா காந்தியின் வீட்டிலேயே தங்கி இருந்தார். வெரோனிக்காவை அழைத்துக் கொண்டு கேரளம் மற்றும் லட்சத்தீவுக்கு உல்லாசப் பயணம் போக அனுப்பியதே சோனியாதான்.

வீட்டாரைப் பொருத்தவரை ராகுல் காந்தி வெரோனிக்காவைத் திருமணம் செய்து கொள்வதில் எதிர்ப்பில்லை. ஆனால், ராகுல் காந்தி ஓர் ஐரோப்பியப் பெண்ணை மணந்து கொள்வதை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? இது சோனியா குடும்பத்திலும், காங்கிரஸôர் மத்தியிலும் எழும் நியாயமான கவலை. ராகுல் – வெரோனிகா உறவு முறிந்து விட்டதா, இன்டர்நெட் “சாட்டிங்’கில் தொடர்கிறதா என்பது சோனியா குடும்பத்துக்கே வெளிச்சம்!

பாட்டி, அப்பா, அம்மா ஆகிய மூன்று பேரிலிருந்தும் மிகவும் வித்தியாசப்படுகிறார் ராகுல் காந்தி என்பதை அவரது அமேதி செயல்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன. வீணான புகழுரைகள், ஜால்ரா கூட்டங்கள் என்று எதையுமே அவர் அனுமதிப்பதில்லை. தொகுதி மக்களிடம் அவர் சொல்லும் விஷயம்~ “உழைத்துப் பிழைக்க வழி கேளுங்கள். செய்கிறேன். நன்கொடையில் வாழ நான் உதவி செய்ய முடியாது!’

காங்கிரஸ் கட்சிக்கு இளமைப் பொலிவை ஏற்படுத்தும் சக்தி ராகுல் காந்திக்கு இருக்கிறது என்பதை, காங்கிரஸ் அல்லாத கட்சியினரே ஒத்துக் கொள்கிறார்கள். ராகுலின் பின்னால், ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட், ஜிதின் பிரசாதா, நிதின் ஜிண்டால், மிலிந்த் தேவ்ரா என்று மெத்தப் படித்த ஒரு வாரிசுகள் பட்டாளமே திரண்டு நிற்கிறது.

2007 முதல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் ராகுல் காந்தி இந்தியா முழுவதிலிருந்தும் 40 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்துக் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். தில்லியிலுள்ள அவரது இல்லமான 12, துக்ளக் லேன் இப்போது ஓர் அலுவலகமாக மாற்றப்பட்டு, காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்திலிருந்து பலப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

ராகுல் காந்திக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது உண்மை. அவர் போகும் இடங்களிலெல்லாம் இளைஞர் கூட்டம் அவரை மொய்க்கிறது. ஆனால், அவர் பிரசாரத்துக்குப் போன சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெறுகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் உத்தரப் பிரதேசம், பிறகு குஜராத், அடுத்தது கர்நாடகம் என்று ராகுல் முழுமூச்சாக இறங்கிப் பிரசாரம் செய்த மாநிலங்களில் எல்லாம் தோல்வி மேல் தோல்வி.

இந்தத் தோல்விகள் ராகுல் காந்தியைச் சோர்வடையச் செய்துவிடவில்லை. ஒரு குறிக்கோளுடனும் லட்சியத்துடனும் களமிறங்கி இருக்கிறார் அவர். இந்த மக்களவைத் தேர்தலிலேயே, உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரில் தனித்துப் போட்டியிடுவது என்பது ராகுலின் முடிவுதான் என்கிறார்கள். தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை, கட்சி அமைப்புகளைப் பலப்படுத்துவதுதான் முக்கியம் என்பது அவரது கருத்து.

இடம், பொருள், ஏவல் தெரியாமல் ராகுல் காந்தி பேசி, காங்கிரஸ் தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறார் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ராகுல் காந்தி கவலையேபடுவதில்லை. அவர் ஒரு திட்டத்துடன்தான் களமிறங்கி இருக்கிறார் என்று தோன்றுகிறது. தனது சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றுப் பிரதமராக வேண்டும் என்று அவர் திட்டமிட்டாலும்கூட அதிசயப்பட ஒன்றுமில்லை.

ராகுல் காந்தியின் பொழுதுபோக்கும் அவர் அடிக்கடி விரும்பி விளையாடுவதும் “செஸ்’ ஆட்டத்தைத்தான். எப்படி, எங்கே காயை நகர்த்தி “செக்’ வைப்பது என்பதுதான் “செஸ்’ விளையாட்டின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் விஷயம். அரசியலிலும் அப்படியே!

கட்டுரையாளர்
‘க்ளோஸ் – அப்’- சத்தீஷ்
dinamani

விழித்துக் கொள்ளாவிட்டால் அழிவு நிச்சயம்!

விழித்துக் கொள்ளாவிட்டால் அழிவு நிச்சயம்!

தரைமேல் காணப்படுகிற அமேசான் காடுகளின் அடர்த்தியைப்பற்றி நாம் அறிவோம். கடலிலும் அப்படி ஓர் அடர்த்திமிக்க பவளப்பாறைத் தொடர்கள் தென்கிழக்கு ஆசிய கடல் எல்லைகளில் உள்ளன. இந்தக் கடல் பிரதேசத்தில்தான் குரோஷி என்கிற வெப்ப நீரோட்டமும் உள்ளது.

நிலப்பரப்பு உயிரினங்கள் தாங்கள் உணவைத்தேடிக் கண்டறிந்து தற்காப்புக்குத் தகுந்த சூழல்களில் வாழத் தலைப்படுவது இயல்பு. அதைப் போலவே கடல்வாழ் உயிரினங்கள் கடல்நீருக்கடியில் செழித்திருக்கும் பவளப்பாறைகளை அண்டி வாழ்வதும் இயல்பு. இந்தியக் கடலிலிருந்து பசிபிக் கடல் வழியாக தென்கிழக்கு ஆசிய நாடுகளை ஒட்டிச் செல்லும் குரோஷி நீரோட்டப்பாதை இதற்குப் பெரிதும் துணைபுரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

பூமி வெப்பமடைவது நாளுக்குநாள் அதிகரிக்கிறது. இதை ஒரு கட்டுக்குள் வைத்திருந்தாலன்றி, பூவுலக உயிரினங்கள் அனைத்துக்கும் தீங்குகள் பல விளையும். இதைக் கருத்தில் கொண்டு 1990-ம் ஆண்டில் எந்த அளவு கரியமிலவாயு வெளியாகியதோ அதில் 80 சதவீதத்துக்குக்கீழ் உள்ளதாக இருக்குமாறு தற்காத்து வருவது அவசியம் என்றும் அதை அனைத்து நாடுகளும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் ஜப்பான் கியோட்டாவில் நடைபெற்ற உலக நாடுகளின் உச்சிமாநாட்டில் பிரகடனமானதோடு சரி. எந்த நாடும் அதை நடைமுறைப்படுத்தவில்லை.

ஆனால் அண்மையில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி, கியோட்டா பிரகடனத்தை எண்ணிப்பார்க்க வைத்தது.

நடக்கக்கூடிய தூரத்துக்கு நடப்பது, முடிந்தவரை மோட்டார்பைக்குகள், கார் இவற்றுக்குப் பதிலாக சைக்கிள்களைப் பயன்படுத்துவது, தனித்தனி என்பதைத் தவிர்த்து பலபேர் சேர்ந்து பயணம் செய்யத்தக்க பெரிய வாகனங்களைப் பயன்படுத்துவதுமான நடத்தைகளை ஐரோப்பிய நாடுகள் பல பின்பற்றத் தொடங்கின.

சீனாவின் ஷாங்காய் மாகாண ரயில் நிலையங்களில் சைக்கிள்களை நூற்றுக்கணக்கில் நிறுத்திவைத்து ரயில் பயணிகள் வீடுகளுக்குச் சென்று திரும்ப அவற்றைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியது.

அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார் கார் உள்பட உலகின் பஸ், கார் உற்பத்தி நிறுவனங்கள் முடங்கிப்போயின. அரசாங்கங்களும் விழிப்படைந்தன. கரியமிலவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை மக்களிடையே தற்போது செய்து வருகின்றன.

குறிப்பாக பூமிக்குள் படிந்திருக்கும் பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை வரம்புமீறி தொடர்ந்து எரிப்பதால் வெளியாகும் கரியமிலவாயு இயல்புக்கு மாறானதான வெப்பத்தை அதிகரிக்கத் தூண்டுதலாக அமைந்துவிடுகிறது.

அது நீடிக்குமேயானால், மேலே சொல்லப்பட்டிருக்கும் கடலுக்கடியில் மிளிர்கின்ற அமேசான் காடுகளைப் போன்ற பவளப்பாறைத் தொடர்களின் வளமை அழியும். 21-ம் நூற்றாண்டின் கடைசியில் பூமியில் வாழும் உயிர்களுக்கு வரக்கூடிய உணவுப் பஞ்சமும் தவிர்க்க முடியாததாகிவிடும் என்று பவளப்பாறை வளம் குறித்த ஆய்வுக்குழுவின் தலைவர் லிடாபெட் சோயிட் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையொட்டி நாம் நமது தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமைகளைப் பார்ப்போம்.

நிலத்தடி நீர் தாழ்ந்து வருவதால் தோப்புகள் குறைந்து வந்துள்ளன. அன்னியச் செலாவணி ஈட்டுதல் என்பதன் பெயரால் டீ எஸ்டேட்டுகள் காடுகளைக் காலிசெய்து விரிவடைந்தன. பணக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடுதலாகி அவர்களின் கோடை வாசஸ்தலங்களாகவும் மாறிவருகின்றன.

இங்கு வேலைகளைச் செய்யவும் உல்லாச வாசிகளுக்குப் பணிவிடை செய்யவும் நிலப்புலத்திலிருந்து ஆள்கள் குடும்பம் குடும்பமாய் தருவிக்கப்பட்டு அங்கு குடியமர்த்தப்பட்டனர்.

விளைவு: வனத்தின் பரப்பு சுருங்கியது . மழைவளம் குறைந்ததோடு ஊற்றுநீர் சுரந்துவந்த மலைத்தொடர்களும் வறண்டன. போதாக்குறைக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த மரங்களும் சாய்க்கப்பட்டன.

எங்கும் வறண்டு போனதால், குடிநீருக்காக அலைந்து தவிக்கும் வன உயிரினங்களின் துயரங்கள் சொல்லிமாளாது.

தண்ணீரைத் தேடும் யானைகள் மலைகளையும் வனங்களையும் ஒட்டியுள்ள நிலங்களில் நுழைகின்றன. தாகத்தின் உச்சகட்ட விளைவாக மான் கூட்டம் ஒன்று அண்மையில் பாசனக் கிணறு ஒன்றில் பாய்ந்து மரணத்தைத் தழுவ நேர்ந்தது.

சனி நீராடு என்கிறது தமிழ் இலக்கியம். மெல்ல நகரும் நடக்கும் (நடந்தாய் காவிரி என்பதுபோல) நீரில் குளித்து எழு என்பது அதன் பொருள் என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் அ. சிவபெருமானின் விளக்கம்.

சூரியனைச் சுற்றும் ஒன்பதில் ஒன்றான சனி கோள் ஒரு தடவை சூரியனைச் சுற்றிவர இரண்டரை ஆண்டுகளாகின்றன என்பதும் மற்றவை அதைவிடக் குறைந்த காலத்திலேயே சுற்றி வருகின்றன என்பதும் வானவியல் கணக்கு.

ஆக, சனி என்றால் மெல்ல என்று பொருள் கொள்ளப்படுவதாலேயே சனி நீராடு சொற்றொடர் உண்டானது. ஆமாம்! குளிக்கின்ற மாதிரியான அந்த நீரோட்டம் இன்று வறண்டு கிடக்கின்றபோது, மற்றவற்றின் நிலையை விவரிக்கத் தேவையில்லை.

அப்படி பூமியின் மேல்பரப்பில் கிடைக்கின்ற நீரைச் சுத்திகரித்து குடிநீராகப் பயன்படுத்த முடியாமல் உடல் நலத்துக்கு ஒவ்வாமை கொண்டுள்ள கனிமங்களும் ரசாயனங்களும் செறிந்து கிடக்கும் நிலத்தடி நீரை அல்லவா தமிழகத்தின் 10 ஆயிரம் கிராமங்களில் குடிநீராக வழங்கிவிடுகின்றனர். இதில் மாசுபட்ட நீரும் அடங்கும். ஆக, குளிக்கவும் குடிக்கவுமான இயற்கையான நீரோட்டத்தை அழித்த கையோடு, கிணறு மற்றும் குழாய் நீர் பாசனம் என்பதன் பெயரால் விளை நிலங்களையும் அல்லவா இன்று உப்பளமாக மாற்றியிருக்கிறோம்.

முன்பெல்லாம் ஒரு உழவு மழையில் விதைப்பு செய்து அடுத்தடுத்து வரும் இரண்டு மூன்று உழவு மழையிலேயே விளைந்து தள்ளிய புஞ்சை நில விளைச்சல் இன்று அற்றுப்போனதன் காரணங்களை யாரும் கண்டறியவில்லை.

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்பது வழக்கு. ஆம், நமது கண் மூடித்தனமான பாசன முறைகளால் விளை நிலங்களும் நிலத்திற்கடியில் இருந்த உப்பைச் சுமந்து கொண்டுவிட்டபடியால், புஞ்சைப் பயிர்களும் இன்று நான்கு ஐந்து உழவு மழைக்கு ஏங்குகிறது. இப்போதெல்லாம் அந்த மும்மாரி மழை என்பது ஏது?

இந்த ஆண்டு தொடக்கத்தில், புவி வெப்பமடைவதைத் தவிர்க்கும் வேலைத் திட்டங்களை ஆராய்ந்த கூட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பு ஒன்றுமே இல்லை என்பது தகவல். மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி இதற்கு தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பொதுவாக சுற்றுப்புறச் சூழல் கேட்டை படிப்படியாய்க் குறைப்பதற்கு இந்திய அரசு அக்கறை செலுத்தவில்லை.

தொழிற்சாலை மற்றும் நகரக் கழிவுகளும், மறுசுழற்சிக்குப் பயன்படும் என்கிற விழிப்புணர்வு கொஞ்சம்கூட இல்லாத நம் நுகர்வோர் கண்ட மாதிரி வீசி எறிகின்ற பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் மருத்துவக் கழிவுகள் விளைநிலம் மற்றும் மழைநீரை மட்டும் அல்லாமல், நிலத்தடி நீரையும் மாசுபடுத்துவதை எவருமே கண்டுகொள்ளவில்லை.

உலக நாடுகள் அனைத்தும் கவலைப்படுகின்றன. ஆபத்து நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் விரலால் எண்ணக்கூடிய அடுத்த சில தலைமுறைகளில் அந்த “டைம் பாம்’ வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது. இனியும் இந்தியா மெத்தனமாக இருந்தால் எப்படி? மரம் வளர்ப்பதும், புகை வெளியேற்றத்தைக் குறைப்பதும் தான் ஆபத்தைத் தள்ளிப் போடும் வழிகள். அது தெரிந்தும் தயக்கம் ஏன்? விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இதுவே!

கட்டுரையாளர்
சி. வையாபுரி
தினமணி

சமாளிப்பாரா மன்மோகன் சிங்?

சமாளிப்பாரா மன்மோகன் சிங்?

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ள போதிலும் அமைச்சர்கள் நியமனத்தில் பல்வேறு கட்சிகளின் நிர்பந்தங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. கடந்த முறை மன்மோகன் சிங் அமைச்சரவையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிலரும் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர். இந்த முறை அத்தகைய பேர்வழிகளுக்கு அமைச்சரவையில் இடம்தரக்கூடாது என்று மன்மோகன் நினைத்திருந்தார். ஆனால், அவரால் அதைச் செயல்படுத்த முடியவில்லை.

மன்மோகன் சிங் முதலில் டி.ஆர்.பாலுவையும், ஆ. ராசாவையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார். பின்னர் அவர்கள் இருவரையும் தனது “நண்பர்கள்’ என்று கூறிய சிங், அவர்களை அமைச்சர்களாக்க ஒப்புக்கொண்டார். ஆனால், அவர்கள் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்த துறையைத் தரமுடியாது என்று கூறினார். இறுதியில் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு அவர் ஏற்கெனவே வகித்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பதவியையே வழங்க முன்வந்துள்ளார்.

மத்திய அரசை வெளியிலிருந்து ஆதரிப்பதாகச் சொன்ன திமுக இப்போது அமைச்சரவையில் இடம்பெற சம்மதித்துள்ளது. திமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் உள்ளன. அவர்களுக்கு அமைச்சர் பதவி தரமுடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். அப்படியெனில் காங்கிரஸ் அமைச்சர்கள் சிலர் பதவியை வைத்து பணம் சம்பாதித்தது எப்படி? என்ற கேள்வி எழுகிறது. திமுக அமைச்சர்கள் இருவரும் “ஊழல் பேர்வழிகள்’ என்று பிரதமர் கருதினால், கடந்த அமைச்சரவையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மௌனமாக இருந்தது ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது.

மான்டேக் சிங் அலுவாலியாவை நிதியமைச்சராக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் முயற்சித்தது அனைவருக்கும் தெரிந்த ரகசியம். ஆனால், அவரது முயற்சி பலிக்கவில்லை. அரசியல் அனுபவம் வாய்ந்த ஒருவரே நிதியமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா முடிவு செய்துவிட்டார்.

திட்டக் கமிஷன் துணைத் தலைவராக இருந்த அலுவாலியாவுக்கும் பிரதமருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததால் கடந்த 5 ஆண்டுகளில் தூதர்களும், அதிகாரிகளும் அவரிடம் அடிக்கடி தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர். அலுவாலியா, அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்றதுடன், பிரதமர் எடுத்த சில முக்கிய முடிவுகளுக்குப் பின்னணியாகவும் செயல்பட்டார்.

மான்டேக் சிங் அலுவாலியா, சர்வதேச அளவிலான சிறந்த பொருளாதார நிபுணர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், கட்சித் தலைவர் சோனியா காந்தி, அவரை நிதியமைச்சராக்க விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியின் முக்கிய கோஷம் என்னவெனில் “ஏழைகளின் நலன் காப்போம்’ என்பதுதான். இது தொடர வேண்டுமானால், அதற்கு மான்டேக் சிங் அலுவாலியா சரியான நபர் அல்ல; பிரணாப் முகர்ஜி போன்ற அரசியல் அனுபவம் பெற்றவர்களே தேவை என்பதுதான் சோனியாவின் கருத்தாக இருந்தது.

மேலும் மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சராக நீடிக்க விரும்பவில்லை என்பதை பிரணாப் முகர்ஜி தெளிவுபடுத்தி இருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர், பிரதமருக்கு பக்க பலமாக இருந்துள்ளார். பிரதமர் இல்லாத சமயங்களில் அமைச்சரவைக் கூட்டத்துக்கு தலைமைதாங்கியுள்ளார். அமைச்சரவைக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் திறமையாக அதைச் சமாளித்துள்ளார். எனவே அவரை காங்கிரஸ் கட்சியால் புறக்கணிக்க முடியவில்லை.

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்திரா காந்தி அமைச்சரவையில் பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தார். இப்போது மீண்டும் அவர் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் போது அவர் மிகவும் எச்சரிக்கையாகவே செயல்படுவார் எனத் தெரிகிறது. தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் விவசாயிகள் மீதான கடன் தள்ளுபடி, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகியவற்றை முன்வைத்துப் பிரசாரம் செய்தனர். அது அவர்களுக்கு நல்ல பலனைக் கொடுத்தது. தேர்தலின் போது வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஏழை குடும்பத்தினருக்கு மலிவு விலையில் அரசி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் கொடுத்திருந்தது. இப்போது அதை நிறைவேற்ற வேண்டிய கடமை அக்கட்சிக்கு உள்ளது.

எஸ்.எம்.கிருஷ்ணா மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒருவகையில் மகிழ்ச்சிதான். படித்தவர், முன்னாள் முதல்வராக இருந்தவர், நிர்வாக அனுபவம் பெற்றவர் என்று இவரைக் கூறினாலும், உடல்நலம் சரியில்லாத நிலையில், 77 வயதில் இவரை அமைச்சரவையில் சேர்த்துள்ளது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், வெளியுறவுக் கொள்கைகள் தன்னால் வகுக்கப்பட வேண்டும். தான் சொல்வதை அந்தத் துறையைச் சார்ந்தவர்கள் கேட்க வேண்டும். முந்தைய அமைச்சரவையில் நட்வர்சிங் செயல்பட்டதுபோல் தன்னிச்சையாகச் செயல்படக்கூடாது என்று மன்மோகன் நினைக்கிறார்.

பொருளாதார நெருக்கடி, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டிய நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுள்ளது. பாகிஸ்தான், நேபாளம், இலங்கையில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. அண்டைநாடுகள் மீது சீனா ஆதிக்கம் செலுத்த முற்படுவது, இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு என பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இவற்றை புதிய அரசு எப்படிச் சமாளிக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மத்திய அமைச்சர்கள் நியமனத்தில் சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ள போதிலும் துணிச்சலான நடவடிக்கை எதிலும் இறங்கவில்லை. வழக்கமான அணுகுமுறையின்படியே அமைச்சர்கள் நியமனம் நடந்துள்ளது.

கட்சியிலும் ஆட்சியிலும் தலைமுறை மாற்றத்தை காங்கிரஸ் விரும்புகிறது. இது பாஜகவிடம் இல்லாத ஒரு சாதகமான அம்சமாகும். இளம் எம்.பி.க்கள் பலர் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர். அனுபவம் வாய்ந்த மூத்த அமைச்சர்களின் கீழ் அவர்கள் செயல்படுவதன் மூலம் எப்படி நிர்வாகம் செய்வது என்பதை அவர்கள் கற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் பின்னாளில் ராகுல் காந்தி தலைமையில் இளம் தலைமுறையினர் ஆட்சி நிர்வாகத்தை ஏற்க வழிவகுக்கும்.

பிரதமர் மன்மோகன் சிங், இளம் தலைமுறையினரை துணை அமைச்சர்களாகவோ இணை அமைச்சர்களாகவோ நியமித்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு முக்கியப் பொறுப்புகளையும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இளம் தலைமுறையினரை உருவாக்கும் முயற்சி அர்த்தமுள்ளதாக இருக்கும். கடந்த காலங்களில் இணை அமைச்சர், துணை அமைச்சர் பதவி, நிர்வாகப் பொறுப்பு வாய்ந்ததாக இல்லாமல் வெறும் அலங்காரப் பதவியாகவே இருந்து வந்துள்ளது. கடந்த காலங்களில் துணை அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்புகளோ, பணிகளோ கொடுக்கப்படவில்லை. இது அவர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தியதுடன், அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பும் வீணடிக்கப்பட்டது.

மத்திய அமைச்சரவையில் சுகாதாரம், ஊரக வளர்ச்சி, மனித ஆற்றல் மேம்பாடு, மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் ஆகிய நான்கு துறைகளும் முக்கியமானவை. இந்த துறைகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை வைத்துத்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தலைவிதி நிர்ணயிக்கப்படும். ஏனெனில் மக்களிடம் நேரடித் தொடர்புள்ள துறைகள் இவைதான்.

கடந்த காலங்களில் இந்த துறைகளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. அவை ஏதோ சாதாரண துறைகள் போலவே கருதப்பட்டன. நாட்டின் வளர்ச்சி முக்கியம், சிறந்த நிர்வாகத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி உண்மையிலேயே விரும்பினால், மேற்குறிப்பிட்ட துறைகளில் சிறப்புக் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அமோக வெற்றியைத் தேடித் தந்துள்ளனர். எனவே அதற்கேற்ப காங்கிரஸ் கட்சியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் செயல்பட வேண்டும்.

கடந்த முறை மன்மோகன் பிரதமரானபோது புதுமணத் தம்பதிகள் போல தேனிலவு உல்லாசப் பயணத்தை அனுபவித்தார். ஆனால், இந்த முறை அவருக்கு குடும்பப் பொறுப்பைப் போல செம்மையான முறையில் நிர்வாகத்தை நடத்திச் செல்லும் கடமை காத்திருக்கிறது.

கட்டுரையாளர்
நீரஜா சௌத்ரி
தினமணி

தொப்பையை குறைக்க ‘டயட்’டில் இருப்பவரா நீங்கள்?

தொப்பையை குறைக்க ‘டயட்’டில் இருப்பவரா நீங்கள்?

ஹாய் பிரண்ட்ஸ், இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் கொண்டு அனைவருக்குமே பெரும் பிரச்னையா இருப்பது உடல் பருமன் தான். அதிலும், அடிவயிற்றில் சதைப்பிடிப்பு அதிகமாக இருந்தால் உடல் அழகே கெட்டுவிடும். தொப்பையால் தங்கள் அழகு கெட்டுவிட்டதே என்று பல பெண்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

வாசகி ஒருவர், திருமணமாகாத தனது மகள், உடல் எடை அதிகரிப்பதற்காக அதிகமாக சாப்பிட ஆரம்பித்தாள்; ஆனால், அவள் எடை கூடவில்லை. மாறாக, அவளது அடிவயிற்றில் மட்டும் அதிமாக சதை வைத்து தொப்பை விழுந்து விட்டது. அவளது தொப்பையைக் குறைக்க ஏதாவது வழி சொல்லுங்களேன் என்று கடிதம் எழுதியிருந்தார். உணவுப் பழக்கவழக்கத்தை மாற்றுவதன் மூலம் <உடல் எடையைக் குறைக்கலாமே ஒழிய தொப்பையைக் கரைக்க முடியாது.

தொப்பையால் வயிற்றில் சதைப்பகுதி கொஞ்சம் தளர்ந்து விடும். அதைச் சரிசெய்யவும், வலுவானதாக்கவும் கொஞ்சம் பயிற்சிகளை மேற்கொள்வதுதான் சிறந்தவழி.

வயிற்றுப் பகுதியை வலுவாக்க பிசியோதெரபிஸ்ட்டுகள், பிட்னெஸ் பயிற்சியாளர்களிடம் கேட்டு, அவர்கள் ஆலோசனைப் படி பயிற்சி மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

மற்றபடி உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். அளவான உடற்பயிற்சி உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு ஆயுள்காலத்தையும் அதிகரிக்கிறது. எனவே, தினமும் காலை, மாலை வேளையில் ஒரு கிலோ மீட்டர் தூரமாவது நடப்பது உடலுக்கு நல்லது. அதிலும், காலையில் நடப்பது நல்ல பலன் தரும். அதேபோல், இரவு உணவிற்கு பிறகு நடப்பது நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும்.

உடல் எடைக் குறைய…

* தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

*சீசனல் ப்ரூட்ஸ் எல்லாம் சாப்பிடலாம். ஆனால், மாம்பழம், பலாப்பழம், கிழங்கு வகைகளை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

* உடல் எடை குறைய விரும்புபவர்கள் இரவில் பால் அருந்திவிட்டு உறங்குவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், உணவில் தேங்காய் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.

*பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். பப்பாளிக் காயை கூட்டு, சாம்பார் செய்து சாப்பிடலாம்.

* முள்ளங்கியையும் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும்.

* இஞ்சியை இடித்து சாறு எடுத்து அடுப்பில் ஏற்றி, சாறு சற்று சுண்டியதும் அதில் தேன் விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.

காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.

* வாழைத் தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றில், ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் எடை குறையும். உடல் அழகு பெறும்.

ன்னடா இது இப்படி தொப்பையோட, குண்டா இருக்கோமே அப்படின்னு கவலைப்படுறத விட்டுட்டு, பிசியோதெரபிஸ்ட்டுகள், பிட்னெஸ் மாஸ்டர் என தகுந்த நபர்களிடம் உரிய ஆலோசனை பெற்று, வாழ்க்கையை என்ஜாய் செய்யுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே!

சிறப்பாய் வாழ சிறுதேக்கு

சிறப்பாய் வாழ சிறுதேக்கு

முதுமை காலத்தில் தோன்றும் நோய்களான சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஆஸ்துமா, பார்வை குறைபாடு போன்ற பல நோய்கள் கூட இளமைக்காலத்திலேயே இப்பொழுது பலரை ஆட்கொள்ளத் தொடங்கிவிடுகிறது. என்னதான் கவனமாக உடலை பேணிப் பாதுகாத்தாலும் கூட பரம்பரை நோய்களிலிருந்து நாம் தப்பிப்பது சிரமமே நவீன அறிவியலில் மரபணு சிகிச்சையின் மூலம் பரம்பரை நோய்களை தடுக்கலாம் என்ற போதிலும், எளியவர்களுக்கு இந்த சிகிச்சை எட்டாக்கனியாகவே உள்ளது. நாம் நோயின்றி வாழ்ந்தால்தான் நமது பராம்பரியமும் நோயற்ற வாழ்வு வாழமுடியும்.

அடிக்கடி தோன்றும் சளித்தொல்லை. மூச்சுதிணறல், மலச்சிக்கல், ரத்தச்சோகை, பெண்களுக்கு தோன்றும் அதிக ரத்தபோக்கு, தோலில் தோன்றும் பலவித ஒவ்வாமை என பல உபாதைகளுக்கு நாம் ஆட்படும் பொழுது வாழ்க்கையின் மேல் வெறுப்பும், மருத்துவத்தின் மேல் அவநம்பிக்கையையும் உண்டாகிறது. நோயுற்றப் பின் சிகிச்சை பெறுவதை விட நோய் வராமல் காத்துக் கொள்வதே சிறந்த வழியாகும். நோயின்றி வாழ நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, ஆசனம், தூய எண்ணங்கள், ஆரோக்கியமான உணவு மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளும் அவசியமாகும். இயற்கை அளித்த பலவிதமான மூலிகைகள் நோய் தடுப்பாற்றல் உள்ளவையாகவும், நோய் வந்தப்பின் அதனை குணப்படுத்தும் ஏராளமான மருந்துச் சத்துக்கள் உள்ளவையாகவும் காணப்படுகிறது. ஆனால் ருசியான, எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகைகளை மட்டுமே நாம் உணவில் எடுத்துக்கொள்வதால் மருத்துவக் குணமுள்ள பல மூலிகைகளின் பயன்கள் நமக்கு தெரிவதில்லை. நோயை தடுக்கும் தன்மையுடையதுடன், அவ்வப்போது நம் உடலில் தோன்றும் சிறு, சிறு உபாதைகளையும் நீக்கும் வல்லமை படைத்த அற்புத மூலிகைதான் சிறுதேக்கு என்று அழைக்கப்படும் கண்டுபாரங்கி ஆகும்.

பெருஞ்செடி வகையச் சார்ந்த கிளிரோடென்ரம் செர்ரேட்டம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட வெர்பினேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகள் சமவெளிப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. சிறுதேக்கு செடியின் பட்டையில் டிரைடெர்பினாய்டுகள், ஓலியோனோலிக், செராடாஜெனிக், க்யூரிடெரிக் அமிலங்கள், ஆல்பா ஸ்பைனஸ்டீரால்,லியுடியோலின், அபிஜெனின், ஸ்குடெலரின், பினோலிக், காபிக், பெருலிக் போன்ற ஊட்டச்சத்து மிக்க அத்தியாவசிய அமிலங்கள் ஏராளமான காணப்படுகின்றன. இதன் வேர் சித்த மருத்துவத்தில் பெருமளவு பயன்படுகிறது.

சிறுதேக்கு வேரை பொடித்து, சலித்து, 1முதல் 2 கிராமளவு தினமும் இரண்டு வேளை சாப்பிட ஒவ்வாமையால் தோன்றும் சளித்தொல்லை மற்றும் தோல் அரிப்பு நீங்கும். 15முதல் 30 கிராமளவு சிறுதேக்கு வேரை 500மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து, 100மிலியாக சுண்டியப்பின்பு வடிகட்டி, குடிக்க மூச்சுதிணறல் மற்றும் வறட்டு இருமல் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சிறுதேக்கு என்ற கண்டுபாரங்கியால் செய்யப்பட்ட மகாமஞ்சிஸ்டாதி கசாயம் 5முதல் 10மிலியளவு தினமும் இரண்டு வேளை சாப்பிட தோல் நோய்கள் நீங்கும். அதே போல் கனகாசவம் என்னும் ஆசவத்தை 15மில்லி தினமும் இரண்டு வேளை உணவுக்குப்பின்பு சாப்பிட பலவிதமான சளித்தொல்லைகள் மற்றும் மலச்சிக்கல் நீங்கும்.

மைக்ரேன்…!’

மைக்ரேன்…!’

மைக்ரேன் – தலைவலிகளில் பல விதமான தலைவலிகள் உள்ளன. ஆனால், பெரும்பாலானவை எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாதவை; அதற்கான காரணமும் தெரியாது. ஆனால், ஒற்றைத்தலைவலி என்று சொல்லப்படும் மைக்ரேன் வந்து விட்டால் போதும், மாத்திரையும் கையுமாக தான் அலைய வேண்டும். மூளை நரம்பு திசுக்களில் ஏற்படும் அதிர்வுகள் தான் “மைக்ரேன்’ தலைவலி. தலையை பிளப்பது போல வலி இருக்கும். ஒரு பக்க தலையில் மட்டும் வலிக்கும். சில மணி நேரம் , சில நாள் வரை கூட தொடரும்.

எத்தனை வகை?

பல நாடுகளிலும் “மைக்ரேன்’ பாதிப்பு உள்ளது. 80 சதவீத மைக்ரேன் பாதிப்பு சாதாரணமானவை தான். 20 சதவீத மைக்ரேன் பாதிப்பு தான் , சில நோய்களால் ஏற்படுகின்றன. இந்த வீரியமுள்ள மைக்ரேன் வந்தால், மூளை நரம்புகள் பாதிக்கப் பட்டு, வயதான போது மறதி நோய் வர வாய்ப்பு அதிகம். அசாதரணமான ஒளி, அலர்ஜியான சத்தம், சாக்லெட் ,ஐஸ்கிரீம் போன்ற சில வகை உணவுகள் ஆகியவை தான் மைக்ரேன் வர காரணம். இதை சாப்பிடுவோர் எல்லாருக்கும் தலைவலி வரும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு தான் வரும்.

அறிகுறி என்ன?

பெரும்பாலான மைக்ரேன் தலைவலிகளில், பாதிக்கப்பட்டவருக்கு ஒரு பக்க தலையில் வலிக்கும். சிலருக்கு இரு பக்கமும் வலி ஏற்படும். எந்த வேலையையும் செய்ய முடியாமல் முடக்கிப்போடும். கண்களை மூடிக்கொண்டு இருந்தால் போதும் என்று நினைக்கத்தோன்றும். வாந்தி வருவது போல தோன்றும்.

மன அழுத்தம் இருந்தால், இந்த தலைவலி வரும். அடிக்கடி வந்தால் மைக்ரேன் தான். அதுபோல, சிகரெட் பிடிப்போர், அடிக்கடி கருத்தடை மாத்திரை விழுங்குவோர், ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்காதவர்களுக்கு கூட இந்த பாதிப்பு வரும்.

நீடித்தால் உஷார்:

தனக்கு வந்திருப்பது மைக்ரேன் தானா என்று பாதிக்கப்பட்டவருக்கு தெரியாது. சில அறிகுறிகள் , தொடர்ந்து வருவது போன்றவற்றால் தான் அதை கண்டுபிடிக்க முடியும். மேற்சொன்ன காரணங்களுடன், சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, அடிக்கடி விரதம் இருப்பது, சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது போன்றவற்றாலும் மைக்ரேன் வரும். தனக்கு எதனால் வருகிறது என்பதை தெரிந்து அதை தவிர்த்துக்கொண்டாலே போதும்; ஒற்றைத்தலைவலி வராமல் நின்று விடும்.

எந்தெந்த உணவு:

டின்னில் அடைக்கப்பட்ட , நாள் பட்ட பதப்படுத்தப்பட்ட மாமிசம், ரெட் ஒயின் உட்பட சில வகை மதுக்கள், பீன்ஸ், காபி, சாக்லெட், மோர், கிரீம், மிட்டாய்கள், உணவில் மணம் அதிகரிக்க சேர்க்கப்படும் சில வகை பொருட்கள், வேர்க்கடலை உட்பட சில வகை கடலைகள், பப்பாளி, ஊறுகாய், சாஸ், இனிப்பு வகைகள் போன்றவையும் மைக்ரேன் தலைவலியை தூண்டும். இந்த உணவுகளில் ஏதாவது ஒன்று அலர்ஜியை ஏற்படுத்தினாலும், சம்பந்தப் பட்டவருக்கு மைக்ரேன் வரும். அதனால், இதை கண்டுபிடித்து அந்த உணவை தவிர்க்க வேண்டும்.

மரபு காரணமா?

பரம்பர�யாக வரும் பாதிப்புகளில் இதுவும் ஒன்று. அப்பா, அம்மாவில் யாருக்காவது இருந்தாலோ, தாத்தா, பாட்டிக்கு இருந்தாலோ வாரிசுகளில் யாருக்காவது வரும். குழந்தைகளுக்கு வருமா என்று கேட்கலாம்; நிச்சயமாக வரும். ஆனால், சில நிமிடங்களில் போய்விடும். அதனால் தான், சில குழந்தைகளுக்கு வாந்தி வருகிறது; லைட்டை பார்த்தாலே கண் கூசுகிறது. இளைய வயதில் மைக்ரேன் வர வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த சிகிச்சை பெற வேண்டும்.

மோசமானது எது?

மைக்ரேனில் மோசமான தலைவலி நான்கு கட்டமாக வரும். மலச்சிக்கல், மன அழுத்தம் போன்ற காரணத்தால் அடிக்கடி தலைவலி வந்தால் சந்தேகப்பட வேண்டும். அடிக்கடி சிறுநீர் கழித்தாலும் மைக்ரேன் ஆரம்பம். இதன் பெயர் “ப்ரோட்ரோம்’ இரண்டாவது கட்டம் “ஆரா’ என்பது. இந்த கட்டத்தில் தான் விளக்கு வெளிச்சத்தை பார்த்தாலே கண்களை மூடிக்கொள்ள வைக்கும். சில வகை வாசனைகள் கூட தலைவலியை ஏற்படுத்தும். பேசும் போது வார்த்தைகள் தடுமாறும்; நினைவாற்றலும் பாதிக்கும்.

மூன்றாவது கட்டம்:

இதில் தலைவலியுடன் மூக்கடைப்பு, தண்ணீர் வற்றிப்போன நிலை, மயக்கம் வரும். நான்காவது கட்டம், போஸ்ட்ரோம்; நாட்கணக்கில் கூட இது தொடரும். கடைசியில் மன அழுத்தம் ஏற்படும். எந்த வேலையிலும் நாட்டம் வராது.

சிகிச்சை தேவையா?

பெரும்பாலான மைக்ரேன் தலைவலிகளுக்கு சிகிச்சை தேவையில்லை. உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வந்தாலே போதும். தொடர்ந்து வந்தால், அதை தடுக்க யோகா பயிற்சி செய்வது நல்லது.

மாத்திரைகளை விழுங்குவதை தவிர்க்க வேண்டும். மிக அதிக பாதிப்பு வந்தால், அதை தடுக்க இதயத்துக்கு “பேஸ் மேக்கர்’ கருவி பொருத்துவது போல, காதுக்கு பின்பக்கம் கருவியை வைத்து, அதிர்வலைகளை ஏற்படுத்தி, நரம்பு திசுக்களை சரி செய்ய முடியும். இந்த கருவி பொருத்த செலவு என்ன தெரியுமா? இரண்டரை லட்சம் ரூபாய்.

இளைய கலாம் மயில்சாமி அண்ணாதுரை! (கட்டுரை)

இளைய கலாம் மயில்சாமி அண்ணாதுரை! (கட்டுரை)

சாதனையாளர்களிடம் நெருங்கிப் பழகுபவர்கள் கூட கேட்கத்தயங்கும் கேள்விகளை, பள்ளி மாணவர்கள் பளிச்சென தயக்கமில்லாமல் துணிச்சலாக கேட்டு விடுகின்றனர்.

அப்படி கேட்கப்பட்ட கேள்விகளால் கிடைத்த பதில் கள் தான் எவ்வளவு தெளிவானவை. சந்திரனுக்கு ஏவப்பட்ட சந் திராயன் விண்கலத்தின் இயக் குனரான மயில்சாமி அண்ணாதுரைதான் இன்றைக்கு மாணவர்களின் ஹீரோ. சமீபத்தில், மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு கிடைத்த பதில்கள் பலரின் பலநாள் சந்தேகத்தை தீர்த்து வைக்கும் வகையில் இருந்தன. வாசகர்கள் சிலரின் சந்தேகம் கூட இவரது பதில்க ளால் தெளிவாகலாம் என்பதால் இந்த கட்டுரை…

ஏழ்மை நாடான நமக்கு சந்திராயன் போன்ற செலவினங்கள் தேவைதானா?

அவசியம் தேவை. காரணம், நாம் ஏழை நாடு என்றாலும், கோழை நாடல்ல என்பதை நிரூபிக்க இதெல்லாம் தேவை. மேலும், உலக நாடுகளின் முன்னிலையில் நமக்கு பெருமை பெற்றுத்தருவதே இதுபோன்ற ராக்கெட் செல்வதால்தான். தற் போது அபரிமிதமான வேலைவாய்ப்பு, வருமானத்திற்கும் இதில் வழிஉண்டு.

சந்திராயனால் நமக்கு என்ன நன்மை?

பொக்ரைன் அணு சோதனைக்கு பிறகு நமக்கு வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி கிடைப்பது நின்றுவிட்டது. ஆனால், அதையே சவாலாக எடுத்துக்கொண்டு, உள்நாட்டு உபகரணங்களுடன் பல ராக் கெட்டுகள் விடப்பட்டு உள்ளன. அவற்றுள் தலையாயனதுதான் சந்திராயன். இந்த சந்திராயன் வெற்றிகரமாக ஏவியதன் மூலம், இப்போது பல நாடுகள் நம்மிடம் உதவி கேட்டுள்ளன. இதன் மூலம் மிகப்பெரிய வர்த்தகத்தை நாம் காணமுடியும்.

சந்திராயன் இனியும் சாதிக் கப் போவது என்ன…

நாட்டின் மின் தேவையை மிக எளிதில் ஹீலியம் மூலம் சமாளிக்கலாம்.இந்த ஹீலியம் சந்திரனில் எங்கு இருக்கிறது, எந்த அளவில் இருக்கிறது என்பதை சந்திராயன் விண் கலம் ஆராயும். ஆராய்ச்சி வெற்றி பெற்றால், எதிர் காலத்தில் மின்தட்டுப்பாடே இருக்காது.

பல வருடங்களுக்கு முன்பே அமெரிக்கர்கள் சந்திரனுக்கு ராக்கெட் மூலம் ஆளையே அனுப்பிவிட்டனர். ஆனால், நாம் இப்போதுதான் ஆள் இல்லாத ராக்கெட்டே அனுப்பியுள்ளோம். இது பெருமையா…

நிச்சயம் பெருமைதான். பல வருடங்களுக்கு முன் அவர்கள் ஆளை வைத்து அனுப்பினாலும், அது ஓரு குத்து மதிப்பாக அனுப்பப்பட்ட அனுபவமாகும். ஆனால், இப்போது நாம் அனுப்பியுள்ளது, சந்திரனில் எந்த பகுதியில் இறங்கவேண் டும், என்ன செய்யவேண்டும் என்பதை எல்லாம் திட்டமிட்டு செய்து வெற்றி கண்டுள்ளோம்.

அவர்கள் அனுப்பிய ராக் கெட் கண்ட்ரோலில் அவர்கள் இருந்தனர்; ஆனால், இன்று நமது கண்ட்ரோலில் ராக்கெட் உள்ளது. இதுதான் மிகப்பெரிய சாதனை. இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்ப உள்ள அமெரிக்கர்கள் தேர்ந்தெடுத் துள்ளது நம் சந்திராயன் திட்ட பாதைதான் என்பதே சந்திராயனுக்கு உள்ள பெரும் பெருமை.

சந்திராயனைத் தொடர்ந்து அடுத்து என்ன?

சந்திராயனை தொடர்ந்து, சந் திராயன் 2,சந்திராயன் 3 என்று அடுத்தடுத்து புறப்பட உள்ளன.

மாணவர்களுக்கு சொல்லும் அறிவுரை?

நான் கிராமப்புறத்தில் படித் தவன். இலக்கியம் படிக்க இருந்த நான், ஒரு விபத்து போல அறிவி யல் துறையில் இறங்கி சாதிக்க முடிந்தது என்றால், நீங்களெல்லாம் இதுதான் இலக்கு என்று இந்த துறையை தேர்ந்து எடுப்பீர்களேயானால், இன்னும் பெரிதாக சாதிக்கலாம்.

நம்பினார் கெடுவதில்லை! (ஆன்மிகம்)

நம்பினார் கெடுவதில்லை! (ஆன்மிகம்)

களங்கமற்ற, முழுமையான இறை நம்பிக்கை, இறைவனை நம்மிடம் நேரில் கொண்டு வந்து காட்டும் என் பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி.

இவர், சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் அவதரித்தார். இங்குள்ள பொள்ளாப்பிள்ளையார் கோவில் மிகவும் பிரபலமானது. “பொள்ளா’ என்றால், உளியால் செதுக்கப்படாதது என்று பொருள்; அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் அவர்.

இந்த விநாயகருக்கு பூஜை செய்து வந்தார் நம்பியின் தந்தை; நம்பிக்கும் பூஜை முறைகளைக் கற்றுக் கொடுத் தார். ஒருநாள், அவர் தன் மனைவியுடன் வெளியூர் செல்ல இருந்ததால், மகனிடம், “இன்று, நீ போய் விநாயகருக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்து வா…’ என்றார்.

மகிழ்ச்சியடைந்த சிறுவன் நைவேத்திய பொருட்களுடன் கோவிலுக்குச் சென்றான். விநாயகரை வணங்கி நைவேத்யத் தைப் படைத்தான்.

“அப்பனே, விநாயகா! நான் சின்னஞ்சிறுவன். அப்பா ஊருக் குப் போய் விட்டார். உனக்கு தேங்காய், பழம், பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று விடாமல் சாப்பிடு. குருகுலத்துக்கு கிளம்ப வேண்டும். தாமதமாகச் சென்றால், ஆசிரியர் கோபிப்பார். விரைவில் சாப்பிடப்பா…’ என்றான்.

பிள்ளையார் என்றாவது சாப்பிட்டதுண்டா?

அவர் கல்லாக அப்படியே உட்கார்ந்திருந்தார். பையனுக்கு அழுகை வந்தது…

“இதோ பார்! நீ மட்டும் இப்போது சாப்பிடாவிட்டால் இந்தத் தூணில் முட்டி மோதி இறப்பேன்…’ என்று சொல்லியபடியே, தூணில் முட்டி அழுதான்.

அவனது களங்கமற்ற பக்தி விநாயகரை ஈர்த்தது. அவர் சன்னதியில் இருந்து எழுந்து வந்து, அவனைத் தடுத்து நிறுத்தினார். தும்பிக்கையால் நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க, காயம்பட்ட வடுவே மறைந்து விட்டது. நம்பியின் விருப்பப்படியே அத்தனை பொருட்களையும் ஒன்று விடாமல் சாப்பிட்டார்.

அவரிடம், “விநாயகா! எப் படியோ இன்று குருகுலம் செல்ல நேரமாகி விட்டது. நான் அங்கு சென்றிருந்தால் அவர் என்ன கற்றுக் கொடுத்திருப் பாரோ, அதை நீயே சொல்லிக் கொடேன்…’ என்றார் நம்பி.

அவனுக்கு அனைத்து ஞானத் தையும் போதித்து, மறைந்து விட்டார் விநாயகர்.

மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான் நம்பி. பெற்றவர்கள் ஊர் திரும்பியதும் நடந்ததையெல்லாம் சொன்னான். அவர் கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இந்த விஷயம் ராஜராஜசோழனுக்கு எட்டியது. அவன் நம்பியாண்டார் நம்பியின் இல்லத்துக்கே வந்துவிட்டான். விநாயகருக்கு நைவேத்யம் செய்து அவர் சாப்பிடுவதைக் கண்ணார கண்டு களிக்க வேண்டும் என்றான்.

அதன்படியே, கோவிலுக்குச் சென்று விநாயகரை சாப்பிட வைத்தார் நம்பி. மன்னனும், மக்களும் ஆச்சரியப் பட்டனர். அவரது மகிமையை உணர்ந்த மன்னன், தில்லையம்பலத்தில் பூட்டிக் கிடக்கும் அறையில் மூவர் பாடிய தேவாரமும், தொகையடியார்கள் வரலாறும் இருப்பதைச் சொல்லி, அவற்றை வெளியே கொண்டு வர ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டான்.

அதன்படி, அவர்கள் அங்கு சென்று புற்று மண்டிக்கிடந்த அறையில் இருந்து ஓலைச்சுவடிகளை எடுத்து வந்தனர். நம்பியாண்டர் நம்பி அவற்றை 11 திருமுறைகளாகப் பிரித்தார். அவை இன்றும் நமக்கு இசையின்பத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

குழந்தை போல களங்கமற்ற உள்ளங்களுக்கு கடவுள் தெரிவான் என்பதை நம்பியாண்டார் நம்பி வரலாறு உணர்த்துகிறது.

பித்தன் என்பவன் யார்? (ஆன்மிகம்)

பித்தன் என்பவன் யார்? (ஆன்மிகம்)

பரமேஸ்வரனுக்கு, “பித்தன்’ என்ற ஒரு பெயருமுண்டு. இவருக்கு பிடித்துள்ள பித்து என்ன? உயிர்களை தம் பக்தர்களாக ஆக்குவதில் பெரும் பித்தனாக இருக்கிறார். இந்த பித்தானது கருணை வடிவாகி, அருள் பெருகி, பல பக்தர்களை அவன்பால் பித்து பிடிக்கும்படி செய்கிறது.

அதீதமான பற்றுதலை பித்து என்பர். பணம், பணம் என்று அலைபவர்களை, “பணப்பித்து’ என்கின்றனர். சிவனையே நினைத்து பக்தி செய்பவர்களையும் பித்தன் என்பர்.

பகவானைப் புகழ்ந்து பாடி வழிபட்டால், அவனை சந்தோஷப்படுத்தினால், அவன் பல சம்பத்துக்களையும் அளித்து, சம்சார பந்தத்திலிருந்து நம்மை விடுவிக்கிறான்; பக்தர்களை ரட்சிக்க வேண்டியதை தன் பொறுப்பாகவே ஏற்றுக் கொள்கிறான். கஷ்டம், மரணம் என்பதெல்லாம் சாதாரண மக்களுக்குத் தான். அதை கண்டு அவர்கள் பயப்படுவர்; ஆனால், அவைகளைக் கண்டு பக்தர்கள் பயப்படுவதில்லை. பக்தர்களுக்கு வளமையோ, செழுமையோ எதுவும் தெரியாது; தெய்வத்தின் அருளே அவர்களது செல்வம்.

சிவனார் ஆலகால விஷம் உண்டார். எதற்காக? அந்த விஷம் வெளியில் இருந்தால் உலகத்துக்கு ஆபத்து என்பதற்காக. இது அவரது கருணையல்லவா! தெய்வத்தை வழிபட்டு, நெறியான வாழ்க்கை வாழ்ந்து, கடவுள் வழிபாட்டில் தீவிரமாக இருப்பவர்களை எந்தவித துன்பமும் பாதிப்பதில்லை.

பாண்டிய மன்னன், மாணிக்க வாசகரை பலவிதமாக துன்புறுத்தினான். ஆனால், அவர் கலங்கவில்லை. பகவானை நம்பினார். பிரகலாதனும் பலவித துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டும் வருத்தப்படவே இல்லை. தெய்வீக இன்பத்தில் திளைத்திருப்பவர்களுக்கு சரீர துன்பம் எதுவுமே தெரியாது!

தபஸ்விகள் தவம் செய்யும்போது, ஈ, எறும்பு கடித்தாலும், அதை அவர்கள் அறிய மாட்டார் கள். மனம் கடவுளிடம் இருக்கும்போது சரீர இன்ப, துன்பங்கள் அவர்களது தியானத்தை கலைப்பதில்லை.

ஒரு தபஸ்வியின் கழுத்தில் ஒரு செத்த பாம்பை போட்டான் பரீட்சித்து மன்னன். ஆனால், அந்த தபஸ்விக்கு அது தெரியவே இல்லை. அவர் மனம் தவத்தில் ஈடுபட்டிருந்தது.

தன்னை மறந்து பகவானிடம் மனதை வைப்பவர்களுக்கு வெளியில் அல்லது தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. ஒருவர் வாசற்படியின் அருகில் திண்ணையில் உட்கார்ந்து ஜெபம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு எதிரில் ஒரு மாடு போகிறது. ஆனால், அதோ, மாடு போகிறது என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றவில்லை.

ஒருவன் வந்து, “ஐயா! இந்த பக்கம் ஒரு மாடு போயிற்றா?’ என்று கேட்டான். அவர், “தெரியலையே! நான் கவனிக்கவில்லையே…’ என்றார். இவரது கண் முன் ஒரு மாடு போயிருக்கிறது; ஆனால், விழித்திருந்தும் அவர் அந்த மாட்டை கவனிக்கவில்லை; காரணம், அவரது மனம் முழுவதுமாக பக்தியில் ஈடுபட்டிருந்தது.

மனம் எதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறதோ, அப்போது மற்ற விஷயங்கள் மனதில் படுவதில்லை. இப்படி மெய்மறந்து பக்தி செய்ய வேண்டும்!

கல்வியா? செல்வமா?

கல்வியா? செல்வமா?

மனிதன் பிறந்த நிலையிலேயே விடப்பட்டால் அவன் மிருகமாகி விடுவான்; அவனை மனிதனாக மாற்றுவது கல்வி. எல்லாச் செல்வங்களிலும் கல்விச் செல்வமே மிகவும் உயர்ந்தது என்று கூறப்பட்டாலும், அந்தக் கல்வியைப் பெறுவதற்கும் பொருள்செல்வம் இல்லாமல் முடியாது என்ற நிலை இப்போது உருவாகிவிட்டது.

இன்றைய உயர்கல்வி மட்டுமல்ல, தொடக்கக் கல்வியும் மக்களுக்கு எட்டாத உயரத்துக்குப் போய்விட்டது. விண்ணுக்கும் மண்ணுக்கும் பாய்ந்து பறக்கும் இந்தத் தேசிங்குராசன் குதிரையை அடக்குவார் யாரும் இல்லையா? அரசாங்கமும், அதிகாரிகளும் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்கு மட்டும்தானா?

இப்போது எங்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்குத் தகுதியை மீறிய ஆசை பிடித்து ஆட்டுகிறது; இருப்பதை இழந்து விட்டுப் பறப்பதற்கே ஆசைப்படுகிறார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் இதனை எண்ணெய் ஊற்றி எரியச் செய்கின்றன. வெற்று விளம்பரங்களில் வீழ்ந்து பொய்களை உண்மைகளாக ஏற்கின்றன. இதற்குக் கலாசாரம் மட்டுமல்ல, கல்வியும் விதிவிலக்காக முடியுமா?

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைவிட உயர்ந்த கல்வி, தனியார் கல்விக் கூடங்களில்தான் இருக்கிறது என்று எண்ணுகின்றனர். அவைகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு இரவும், பகலும் தூங்காமல் அலைகின்றனர். கடன் வாங்கியாவது அவர்கள் கேட்கும் தொகையைக் கட்டுகின்றனர்.

ஆனால் எவ்வளவு காலத்துக்கு இப்படி கடன் வாங்கிக் கட்ட முடியும்? வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி இப்பள்ளிகளுக்குப் பணத்தைக் கட்டிவிட்டு, கடைசியில் கடனைக் கட்ட முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். தமது பிள்ளைகள், “மம்மி, டாடி’ சொல்வதற்காகவும், அவர்கள் சொல்லும் “ரைம்ஸ்’களைக் கேட்டு ரசிப்பதற்காகவும், பெற்றோர்கள் படும்பாடு கேட்கவே வேண்டாம். புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்ட கதைதான்.

நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆசைப்பட்டு ஆரம்பத்தில் சேர்த்துவிட்டு, தொடர்ந்து பணம் கட்ட முடியாமல் பாதியில் நிறுத்தியவர்கள் ஏராளம். தாங்கள் கண்ட கனவு நிறைவேறாமல், “பகல் கனவாகி விட்டதே!’ என்று வெளியில் சொல்ல முடியாமல் வெந்து நொந்தவர்களுக்குக் கணக்கே இல்லை.

நடுத்தர மக்களின் ஆங்கில மோகத்தைப் பயன்படுத்திக் கொண்டு, புதிய புதிய பள்ளிகள் பெரிய பெரிய விளம்பரத்தோடு ஆசைகாட்டுகின்றன. அரசின் அங்கீகாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு, மக்களிடம் நன்கொடைகள் வாங்கியே கட்டடங்கள் கட்டித் தங்கள் வசதிகளைப் பெருக்கிக் கொள்கின்றன. மாணவர் வருகை அதிகரிக்க அதிகரிக்கக் கட்டணங்களையும் உயர்த்திக் கொண்டே போகின்றன.

லாபகரமான இந்த வணிகம் பட்டிதொட்டியெங்கும் கொடிகட்டிப் பறக்கிறது. முதலீடும் தேவையில்லை. இதனால்தான் எங்குமே இல்லாத அளவுக்குத் தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இப்போது சுமார் 3700-க்கும் அதிகமான மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ வழிப்பள்ளிகள் செயல்படுகின்றன.

சென்னை போன்ற நகரங்களில் எல்.கே.ஜி. படிப்பிற்கே பெரும் போட்டியைச் சமாளித்தாக வேண்டும்; ஆறு மாதங்களுக்கு முன்பே சேர்க்கை தொடங்கிவிடும். பெற்றோர்கள் பட்டதாரிகளா? பிள்ளைகள் ஆங்கிலம் பேசுவார்களா? தேர்வில் வெற்றி பெறுவார்களா? இவ்வளவு கேள்விகளையும் சமாளித்து வரிசையில் நின்று உள்ளே போனால் அவர்கள் கேட்கும் அதிர்ச்சிக் கேள்வி: “எவ்வளவு நன்கொடை தருவீர்கள்?’

இதுபோலவே எங்கும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கலைக் கல்லூரி, பாலிடெக்னிக், மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் இடம்பிடிக்கப் பெரும் போட்டியையே சந்திக்க வேண்டியுள்ளது. நன்கொடைகளும், கட்டணங்களும் அரசாங்கம் நிர்ணயித்த வரம்புக்குள் அடங்குவதில்லை; ஆசைக்கு அளவேது?

இன்றைய சூழ்நிலையில் பணத்துக்கே முதலிடம் தருவதால் கல்வியின் தரம் குறைந்து கொண்டே போகிறது என்று பெற்றோர்கள் வேதனைப்படுகின்றனர். தமிழை மொழிப்பாடமாக எடுப்பவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தால்தான் பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்க முடியும். நகரங்களில் தமிழை விட பிறமொழிப் பாடங்களை எடுத்துப் படிப்பவர்களே அதிகமாக இருப்பதால் சென்னை போன்ற நகரங்கள் முதலிடங்களை இழந்து வருகின்றன.

கிராமப்புற மாணவர்களிடம் படித்துச் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதனால்தான் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்ட நான்கு மாணவர்களும் கிராமப்பகுதிகளைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிராம, நகர மாணவர்களுக்கான இந்த ஆரோக்கியமான போட்டி தொடர வேண்டும் என்றே கல்வியாளர்கள் விரும்புகின்றனர்.

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வழக்கமாகவே அதிகம். இந்தக் கல்வியாண்டு (2009 – 10) கட்டணத்தை இப்பள்ளிகள் இன்னும் கூடுதலாக்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுபற்றி பெற்றோர்கள் கேள்வி கேட்க முடியாது. அப்படியொரு அடக்குமுறை. கேட்டால் பதில் தயாராக இருக்கிறது. “”உங்களால் முடியாவிட்டால் மாற்றுச் சான்றிதழை வாங்கிக் கொண்டு போய்விடுங்கள்” என்று பள்ளி நிர்வாகம் ஆத்திரமாக அல்ல, அமைதியாக மிரட்டுகிறது; பெற்றோர்களையும், பிள்ளைகளையும் நவீன அடிமைகளாகவே நடத்துகிறது.

பயிற்சியில்லாத ஆசிரியர்கள், பயன்படாத விளையாட்டு மைதானம், காட்சிக்காகவே இருக்கும் அறிவியல் ஆய்வகம், ஆரோக்கியம் இல்லாத கழிவறைகள் இவைகளே பல நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் நிலைமை. இதற்கு விதிவிலக்காக சில பள்ளிகள் இருக்கலாம்.

இவை பற்றியெல்லாம் ஆராய்ந்து கல்விக்குழுவினர் தெரிவித்துள்ள பரிந்துரைகளை தனியார் பள்ளி நிர்வாகங்கள் செயல்படுத்துவதில்லை. செயல்படுத்துமாறு அரசும், கல்வித்துறையும் கட்டாயப்படுத்துவதுமில்லை. இதையே இன்னும் விளக்கமாகச் சொல்வதென்றால் போன மாட்டையும் தேடுவதில்லை; வந்த மாட்டையும் கட்டுவதில்லை.

“1960-ம் ஆண்டுக்குள் 14 வயது வரையுள்ள சிறுவர்களுக்குக் கட்டாய இலவசக் கல்வி அளித்தல்’ என்பதை நமது அரசியல் சாசனம் உறுதி செய்துள்ளது. ஆனால் ஆட்சிபீடம் ஏறிய ஆட்சியாளர்கள் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை; கருத்தில் கொள்ளவுமில்லை.

ஆட்சியாளர்கள் கவலைப்பட்டிருந்தால் இலவசமாகக் கிடைக்க வேண்டிய இந்தக் கல்விக்கு இவ்வளவு விலை கொடுக்க நேர்ந்திருக்குமா? கல்விக்காக ஒதுக்க வேண்டிய நிதி ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே போகுமா?

காமராஜ் பிறந்தநாளை “கல்வி வளர்ச்சி நாளாக’க் கொண்டாடும்படி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. மதிய உணவுத் திட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தி, தமிழ்நாட்டின் கல்வியைத் தூக்கி நிறுத்திய கர்ம வீரரின் பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாகக் கடைப்பிடிப்பது மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால் கல்வி வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டப்படவில்லை. அரசுப் பள்ளிகளை மக்கள் விரும்பும்படி மாற்றிக் காட்ட வேண்டிய கடமை அரசுக்கு இல்லையா?

ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமுதாயம் அமைவதற்கான அடிப்படை தொடக்கக் கல்வியிலிருந்து தொடங்க வேண்டும்.

ஏழைகளுக்கான கல்வி, பணக்காரர்களுக்கான கல்வி, கிராமப்புறத்துக்கான கல்வி, நகர்ப்புறத்துக்கான கல்வி என்று வேறுபட்டுக் கிடந்தால் சமத்துவ சமுதாயம் எப்படி உருவாகும்? இதற்காக அறிவிக்கப்பட்ட “சமச்சீர் கல்வி’ இந்த ஆண்டும் செயல்படுத்தப்படவில்லை.

“”கல்வியும், திறன் மேம்பாடும் சமத்துவத்தை ஏற்படுத்துவதில் முக்கிய அம்சங்களாகும். எனவே அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு இவை மிகவும் முக்கியமாகும். ஆகவே தொடக்கக் கல்வியை வழங்குவதில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் ஒரு நல்ல தொடக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது…” என்று பிரதமர் மன்மோகன் சிங் தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் நடைமுறையில் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறது. ஒரு நர்சரிக் குழந்தை கூறியது: “”நான் பெரியவன் ஆனதும் என் அப்பாவுக்கு ஒரு வீடு வாங்கித் தருவேன். ஏன்னா, எங்க வீட்டை வித்துத்தான் என்னை நர்சரியில் சேர்த்தார்…”

துணுக்குச் செய்தியாக இருந்தாலும், இதுகூறும் உண்மையை மறந்துவிட முடியாது. இப்போது கூறுங்கள்: கல்வியா? செல்வமா? எட்டாத இந்தக் கல்வி எல்லோருக்கும் எட்டுவது எப்போது?
கட்டுரையாளர்
உதயை மு. வீரையன்
தினமணி