சுவிஸ் வங்கி கருப்பு பணம் அள்ளப்போவது யார்

சுவிஸ் வங்கி கருப்பு பணம் அள்ளப்போவது யார்

சுவிஸ் வங்கிகளில் புதையலாக குவிந்துள்ள கருப்புப் பணம் முன்பு எப்போதும் இல்லாத அளவில், இந்த தேர்தலில் தேசிய கட்சிகளுக்கு முக்கிய அரசியல் பிரச்னையாக மாறியுள்ளது. “கோடிக்கணக்கான ரூபாய் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கவில்லை’ என்று பா.ஜ., தலைவர் அத்வானியும், “மத்தியில் பா.ஜ., ஆட்சியில் இருந்த போது அதை செய்திருக்கலாமே’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த தேர்தலில் இப்பிரச்னையை முதலில் முன்வைக்க, பத்திரிகையாளர்கள் கூட்டத்துக்கு அத்வானி கடந்த மார்ச் 29ம் தேதி ஏற்பாடு செய்தார். அப்போது இது குறித்து தெரிவித்த அவர், “”சுவிஸ் வங்கியில் குவிந்துள்ள கோடிக்கணக்கான கருப்புப் பணத்தை இந்தியா கொண்டு வந்தால் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தலாம். கருப்புப்பணத்தை கொண்டுவர முயற்சி செய்யாத காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலில் தண்டிக்க வேண்டும். பா.ஜ., மத்தியில் ஆட்சி அமைத்தால் இப்பணத்தை இந்தியா கொண்டு வர முயற்சி செய்வோம்,” என்று கூறியிருந்தார். வருமான கணக்குக் காட்டுவதிலிருந்து தப்பிக்கவும், வரி மோசடி செய்வதற்காகவும் ஏராளமானோர் கருப்புப்பணத்தை சுவிஸ் வங்கிகளில் முறைகேடாக முதலீடு செய்துள்ளனர். குற்றவாளிகளின் பணம்: இதுதவிர கொலை, கொள்ளை, பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளோரின் பணமும் இங்கு குவிந்துள்ளது. இதன் மதிப்பு தற்போது ரூ.25 லட்சம் கோடியிலிருந்து ரூ.75 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சுவிட்சர் லாந்தில், 408 வங்கிகள் உள்ளன. இவ்வங்கிகளுக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இவற்றில் யு.பி.எஸ். ஏ.ஜி., மற்றும் கிரடிட் சுசே என்ற இரு வங்கிகள்தான் பெரியவை. அந்நாட்டின் சட்டப்பட்டி சுவிஸ் வங்கிகளில் உள்ள கணக்குகள் பரம ரகசியமானது. கணக்கு வைத்திருப்பவர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த தகவலும் அளிக்கப்படுவதில்லை. இரண்டாம் உலகப் போரின் போது, யூதர்களின் கணக்குகளை வங்கியிலிருந்து பெற்று அவர்களை அழிக்கும் முயற்சியில் ஜெர்மனியின் ஹிட்லர் ஈடுபட்டதால், வங்கிக் கணக்குகளை ரகசியம் ஆக்கும் சட்டத்தை 1934ம் ஆண்டு சுவிஸ் வங்கி கொண்டு வந்தது. அப்போது முதல் இன்று வரை, இந்த சட்டத்தின் படி கணக்கு வைத்திருப்பவரைத் தவிர, அவர் சார்ந்திருக்கும் நாடு அல்லது புலனாய்வு நிறுவனங்கள் கேட்டால்கூட தருவதில்லை. எண் அடிப்படையில் கணக்கு: சுவிஸ் வங்கிகளில் சிலருக்கு வங்கிக் கணக்கு பெயர் அடிப்படையில் அல்லாமல் எண் அடிப்படையில் வழங்கப்படும். அந்த எண்ணுக்கு உரியவரின் பெயரை கண்டுபிடிக்க வங்கியின் உயர் அதிகாரிகளால்தான் முடியும். ஆகவே வெறும் எண்ணை வைத்தே கணக்குகளை இயக்கி வருவோரும் உண்டு. இந்தியாவில் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் வேட்பாளர், ஒருவேளை சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்தால் கூட, அந்த ரகசியம் யாருக்கும் தெரியாது என்பதால் அதை எளிதாக மறைத்துவிடும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற நடைமுறைகள் வரி ஏய்ப்புக்கு வழிவகுக்குகிறது என்று பெரும்பாலான நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், சுவிஸ் வங்கி கணக்குகளை வழங்கும்படி சுவிட்சர்லாந்து அரசிடம் அமெரிக்கா கேட்டது. வரி ஏய்ப்பிலிருந்து தப்பியவர்களை இதன்மூலம் எளிதில் மடக்கி வரி வசூலிக்க வேண்டும் என்பது அந்நாட்டின் திட்டம். இதே போன்று ஜெர்மனியும் கேட்டிருந்தது. 20 ஆயிரம் அமெரிக்கர்களின் ரகசிய கணக்குகளையும், 1400 ஜெர்மனியர் களின் ரகசிய கணக்குகளையும் சுவிஸ் அரசு அந்நாடுகளிடம் அளித்துள்ளது. ஜெர்மனியின் பட்டியலில் 600 பேர்தான் அந்நாட்டை சேர்ந்தவர்கள். அந்த பட்டியலில் இந்தியர்களின் பெயர்களும் இருப்பதாகவும், இந்தியா கேட்டால் தரத்தயார் என்றும் அந்நாடு கூறியிருக்கிறது. அத்வானி கருத்து: இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அத்வானி, “ஜெர்மனியிடம் இந்தியர்களின் பெயர்களை கேட்க மத்திய நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியும் கூட, நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றார். கடந்த ஓராண்டாகத்தான் கருப்புப் பண விவகாரம் சூடுபிடித்துள்ளது. அமெரிக் காவும் ஜெர்மனியும் முனைப்புக் காட்டும் இச்சமயத்தில்தான் மத்திய அரசு விழிப்பாக இருந்திருக்க வேண்டும். கடந்த ஏப்ரல் 2ல் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க லண்டன் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், கருப்புப்பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காக அங்கு நடந்த பேச்சு வார்த்தையில் மவுனம் சாதித்தார் என்றும் பா.ஜ., குற்றம்சாட்டுகிறது. இந்தியப் பணம் மீண்டும் இந்தியாவுக்கே கொண்டுவரப்படுமானால், ஏறத்தாழ ரூ. 4 ஆயிரம் கோடி அளவுக்கு இந்தியாவுக்கு வரி வருவாய் கிடைக்கும். இந்த பணத்தை கொண்டு ஒவ்வொரு கிராமத்துக்கும் சுகாதாரமான குடிநீர், பள்ளிக்கூடங்கள், இன்டர்நெட் இணைப்பு வசதி கூட செய்து தர முடியும் என்றும் கூறப்படுகிறது. கருப்புப் பணத்தின் புதையலாக காட்சி அளிக்கும் இந்த பணத்தை கொண்டு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இந்த கருப்புப்பணம் இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவும், குற்றச்செயல்களை தூண்டவும், பங்கு சந்தையை முடமாக்கவும்தான் பயன்படுகிறது என்ற அத்வானியின் கருத்து இத்தேர்தலில் முக்கிய இடம் பெற்றுவிட்டது. இந்த பெயர்கள் வெளியானால் இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் பலரின் முகத்திரை கிழியும். நல்லவர்களாக நடிக்கும் பலரது வேஷம் கலையும். வி.ஐ.பி.,கள் குற்றவாளிகள் ஆவார்கள். எந்த நாடு அதிகம்… இந்தியா – ரூ.75 லட்சம் கோடி ரஷ்யா – ரூ.25 லட்சம் கோடி பிரிட்டன் – ரூ.20 லட்சம் கோடி உக்ரைன் – ரூ.5லட்சம் கோடி சீனா – ரூ. 4.8 லட்சம் கோடி

2 responses

  1. how to get the our money

  2. how to take for clear this problums?

%d bloggers like this: