Daily Archives: மே 26th, 2009

கல்வியா? செல்வமா?

கல்வியா? செல்வமா?

மனிதன் பிறந்த நிலையிலேயே விடப்பட்டால் அவன் மிருகமாகி விடுவான்; அவனை மனிதனாக மாற்றுவது கல்வி. எல்லாச் செல்வங்களிலும் கல்விச் செல்வமே மிகவும் உயர்ந்தது என்று கூறப்பட்டாலும், அந்தக் கல்வியைப் பெறுவதற்கும் பொருள்செல்வம் இல்லாமல் முடியாது என்ற நிலை இப்போது உருவாகிவிட்டது.

இன்றைய உயர்கல்வி மட்டுமல்ல, தொடக்கக் கல்வியும் மக்களுக்கு எட்டாத உயரத்துக்குப் போய்விட்டது. விண்ணுக்கும் மண்ணுக்கும் பாய்ந்து பறக்கும் இந்தத் தேசிங்குராசன் குதிரையை அடக்குவார் யாரும் இல்லையா? அரசாங்கமும், அதிகாரிகளும் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்கு மட்டும்தானா?

இப்போது எங்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்குத் தகுதியை மீறிய ஆசை பிடித்து ஆட்டுகிறது; இருப்பதை இழந்து விட்டுப் பறப்பதற்கே ஆசைப்படுகிறார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் இதனை எண்ணெய் ஊற்றி எரியச் செய்கின்றன. வெற்று விளம்பரங்களில் வீழ்ந்து பொய்களை உண்மைகளாக ஏற்கின்றன. இதற்குக் கலாசாரம் மட்டுமல்ல, கல்வியும் விதிவிலக்காக முடியுமா?

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைவிட உயர்ந்த கல்வி, தனியார் கல்விக் கூடங்களில்தான் இருக்கிறது என்று எண்ணுகின்றனர். அவைகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு இரவும், பகலும் தூங்காமல் அலைகின்றனர். கடன் வாங்கியாவது அவர்கள் கேட்கும் தொகையைக் கட்டுகின்றனர்.

ஆனால் எவ்வளவு காலத்துக்கு இப்படி கடன் வாங்கிக் கட்ட முடியும்? வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி இப்பள்ளிகளுக்குப் பணத்தைக் கட்டிவிட்டு, கடைசியில் கடனைக் கட்ட முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். தமது பிள்ளைகள், “மம்மி, டாடி’ சொல்வதற்காகவும், அவர்கள் சொல்லும் “ரைம்ஸ்’களைக் கேட்டு ரசிப்பதற்காகவும், பெற்றோர்கள் படும்பாடு கேட்கவே வேண்டாம். புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்ட கதைதான்.

நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆசைப்பட்டு ஆரம்பத்தில் சேர்த்துவிட்டு, தொடர்ந்து பணம் கட்ட முடியாமல் பாதியில் நிறுத்தியவர்கள் ஏராளம். தாங்கள் கண்ட கனவு நிறைவேறாமல், “பகல் கனவாகி விட்டதே!’ என்று வெளியில் சொல்ல முடியாமல் வெந்து நொந்தவர்களுக்குக் கணக்கே இல்லை.

நடுத்தர மக்களின் ஆங்கில மோகத்தைப் பயன்படுத்திக் கொண்டு, புதிய புதிய பள்ளிகள் பெரிய பெரிய விளம்பரத்தோடு ஆசைகாட்டுகின்றன. அரசின் அங்கீகாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு, மக்களிடம் நன்கொடைகள் வாங்கியே கட்டடங்கள் கட்டித் தங்கள் வசதிகளைப் பெருக்கிக் கொள்கின்றன. மாணவர் வருகை அதிகரிக்க அதிகரிக்கக் கட்டணங்களையும் உயர்த்திக் கொண்டே போகின்றன.

லாபகரமான இந்த வணிகம் பட்டிதொட்டியெங்கும் கொடிகட்டிப் பறக்கிறது. முதலீடும் தேவையில்லை. இதனால்தான் எங்குமே இல்லாத அளவுக்குத் தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இப்போது சுமார் 3700-க்கும் அதிகமான மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ வழிப்பள்ளிகள் செயல்படுகின்றன.

சென்னை போன்ற நகரங்களில் எல்.கே.ஜி. படிப்பிற்கே பெரும் போட்டியைச் சமாளித்தாக வேண்டும்; ஆறு மாதங்களுக்கு முன்பே சேர்க்கை தொடங்கிவிடும். பெற்றோர்கள் பட்டதாரிகளா? பிள்ளைகள் ஆங்கிலம் பேசுவார்களா? தேர்வில் வெற்றி பெறுவார்களா? இவ்வளவு கேள்விகளையும் சமாளித்து வரிசையில் நின்று உள்ளே போனால் அவர்கள் கேட்கும் அதிர்ச்சிக் கேள்வி: “எவ்வளவு நன்கொடை தருவீர்கள்?’

இதுபோலவே எங்கும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கலைக் கல்லூரி, பாலிடெக்னிக், மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் இடம்பிடிக்கப் பெரும் போட்டியையே சந்திக்க வேண்டியுள்ளது. நன்கொடைகளும், கட்டணங்களும் அரசாங்கம் நிர்ணயித்த வரம்புக்குள் அடங்குவதில்லை; ஆசைக்கு அளவேது?

இன்றைய சூழ்நிலையில் பணத்துக்கே முதலிடம் தருவதால் கல்வியின் தரம் குறைந்து கொண்டே போகிறது என்று பெற்றோர்கள் வேதனைப்படுகின்றனர். தமிழை மொழிப்பாடமாக எடுப்பவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தால்தான் பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்க முடியும். நகரங்களில் தமிழை விட பிறமொழிப் பாடங்களை எடுத்துப் படிப்பவர்களே அதிகமாக இருப்பதால் சென்னை போன்ற நகரங்கள் முதலிடங்களை இழந்து வருகின்றன.

கிராமப்புற மாணவர்களிடம் படித்துச் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதனால்தான் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்ட நான்கு மாணவர்களும் கிராமப்பகுதிகளைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிராம, நகர மாணவர்களுக்கான இந்த ஆரோக்கியமான போட்டி தொடர வேண்டும் என்றே கல்வியாளர்கள் விரும்புகின்றனர்.

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வழக்கமாகவே அதிகம். இந்தக் கல்வியாண்டு (2009 – 10) கட்டணத்தை இப்பள்ளிகள் இன்னும் கூடுதலாக்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுபற்றி பெற்றோர்கள் கேள்வி கேட்க முடியாது. அப்படியொரு அடக்குமுறை. கேட்டால் பதில் தயாராக இருக்கிறது. “”உங்களால் முடியாவிட்டால் மாற்றுச் சான்றிதழை வாங்கிக் கொண்டு போய்விடுங்கள்” என்று பள்ளி நிர்வாகம் ஆத்திரமாக அல்ல, அமைதியாக மிரட்டுகிறது; பெற்றோர்களையும், பிள்ளைகளையும் நவீன அடிமைகளாகவே நடத்துகிறது.

பயிற்சியில்லாத ஆசிரியர்கள், பயன்படாத விளையாட்டு மைதானம், காட்சிக்காகவே இருக்கும் அறிவியல் ஆய்வகம், ஆரோக்கியம் இல்லாத கழிவறைகள் இவைகளே பல நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் நிலைமை. இதற்கு விதிவிலக்காக சில பள்ளிகள் இருக்கலாம்.

இவை பற்றியெல்லாம் ஆராய்ந்து கல்விக்குழுவினர் தெரிவித்துள்ள பரிந்துரைகளை தனியார் பள்ளி நிர்வாகங்கள் செயல்படுத்துவதில்லை. செயல்படுத்துமாறு அரசும், கல்வித்துறையும் கட்டாயப்படுத்துவதுமில்லை. இதையே இன்னும் விளக்கமாகச் சொல்வதென்றால் போன மாட்டையும் தேடுவதில்லை; வந்த மாட்டையும் கட்டுவதில்லை.

“1960-ம் ஆண்டுக்குள் 14 வயது வரையுள்ள சிறுவர்களுக்குக் கட்டாய இலவசக் கல்வி அளித்தல்’ என்பதை நமது அரசியல் சாசனம் உறுதி செய்துள்ளது. ஆனால் ஆட்சிபீடம் ஏறிய ஆட்சியாளர்கள் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை; கருத்தில் கொள்ளவுமில்லை.

ஆட்சியாளர்கள் கவலைப்பட்டிருந்தால் இலவசமாகக் கிடைக்க வேண்டிய இந்தக் கல்விக்கு இவ்வளவு விலை கொடுக்க நேர்ந்திருக்குமா? கல்விக்காக ஒதுக்க வேண்டிய நிதி ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே போகுமா?

காமராஜ் பிறந்தநாளை “கல்வி வளர்ச்சி நாளாக’க் கொண்டாடும்படி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. மதிய உணவுத் திட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தி, தமிழ்நாட்டின் கல்வியைத் தூக்கி நிறுத்திய கர்ம வீரரின் பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாகக் கடைப்பிடிப்பது மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால் கல்வி வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டப்படவில்லை. அரசுப் பள்ளிகளை மக்கள் விரும்பும்படி மாற்றிக் காட்ட வேண்டிய கடமை அரசுக்கு இல்லையா?

ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமுதாயம் அமைவதற்கான அடிப்படை தொடக்கக் கல்வியிலிருந்து தொடங்க வேண்டும்.

ஏழைகளுக்கான கல்வி, பணக்காரர்களுக்கான கல்வி, கிராமப்புறத்துக்கான கல்வி, நகர்ப்புறத்துக்கான கல்வி என்று வேறுபட்டுக் கிடந்தால் சமத்துவ சமுதாயம் எப்படி உருவாகும்? இதற்காக அறிவிக்கப்பட்ட “சமச்சீர் கல்வி’ இந்த ஆண்டும் செயல்படுத்தப்படவில்லை.

“”கல்வியும், திறன் மேம்பாடும் சமத்துவத்தை ஏற்படுத்துவதில் முக்கிய அம்சங்களாகும். எனவே அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு இவை மிகவும் முக்கியமாகும். ஆகவே தொடக்கக் கல்வியை வழங்குவதில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் ஒரு நல்ல தொடக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது…” என்று பிரதமர் மன்மோகன் சிங் தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் நடைமுறையில் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறது. ஒரு நர்சரிக் குழந்தை கூறியது: “”நான் பெரியவன் ஆனதும் என் அப்பாவுக்கு ஒரு வீடு வாங்கித் தருவேன். ஏன்னா, எங்க வீட்டை வித்துத்தான் என்னை நர்சரியில் சேர்த்தார்…”

துணுக்குச் செய்தியாக இருந்தாலும், இதுகூறும் உண்மையை மறந்துவிட முடியாது. இப்போது கூறுங்கள்: கல்வியா? செல்வமா? எட்டாத இந்தக் கல்வி எல்லோருக்கும் எட்டுவது எப்போது?
கட்டுரையாளர்
உதயை மு. வீரையன்
தினமணி

முக்கியமான 3 சக்திகள்!

முக்கியமான 3 சக்திகள்!

வாழ்க்கையில் எந்த ஒரு மனிதரும் நோயில்லாமல் வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஆனால் அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் குறிப்பிட்ட வயதுக்கு மேல் மருந்து, மாத்திரைகளால் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எந்த மனிதரும் உடல், உயிர், உள்ளம் இந்த மூன்றுக்கும் ஓரளவாவது முக்கியத்துவம் தந்து விட்டால் அவர்களது வாழ்வில் எந்த நோயும் இல்லாமல் நலமுடன் வாழ்வார்கள். இந்த மூன்றுக்கும் தேவையான 3 முக்கியமான சக்திகளைப் பற்றி சிறிது விரிவாகப் பார்ப்போம்!
யோகக் கலை: புதிதாக ஒரு தையல் மெஷின் வாங்குகிறோம். அது சில ஆண்டுகள் மட்டும் நன்றாக இருந்த பின்னர், அதன் பாகங்கள் தேய்மானம் அடைந்து விடுகின்றன. தினசரி அதனை எண்ணெய் போட்டு சுத்தம் செய்வது அந்த மெஷினுக்கு அவசியமாகிறது. அதேபோலத்தான் மனித உடலும் தேய்மானம் அடையும் போது மெஷினைப் பாதுகாப்பது போல பாதுகாக்க வேண்டியுள்ளது.
நமது உடலை எப்போதும் இளமையோடும், முகப் பொலிவோடும் வைத்திருக்க யோகக் கலை முக்கியமாகும். இருக்கிற அத்தனை யோகாசனங்களையும் செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. தினசரி 10 நிமிடம் செய்தாலும் கூட போதுமானது. சர்க்கரை நோய், மூலநோய், மூட்டு வலிகள் இருப்பவர்கள் கூட இக் கலையினைத் தொடர்ந்து செய்து வந்தால், நோய்களின் தாக்கம் குறைவதை உணர முடியும்.
எனவே, எந்த மனிதரது உடல் ஆரோக்கியத்திற்கும் யோகக் கலை முக்கியமான சக்திகளில் ஒன்றாகும்.
பிராணாயாமக் கலை: உடல் நன்றாக இருந்தால்தானே உயிர் இருக்கும். உயிர் போய் விட்டால் எப்போது தூக்குவார்கள் என்கிறார்கள்? சாலையின் ஓரத்தில் அதிக சுமை ஏற்றி நின்று கொண்டிருக்கும் லாரி அதில் இருக்கும் டயரால்தான் நிற்கிறது என்றாலும், உண்மையில் லாரியின் டயருக்குள் இருக்கும் காற்றால் தான் நிற்கிறது.
டயரில் நிரம்பி இருக்கும் காற்று இல்லையென்றால், லாரி சாய்ந்து விடும். அதுபோலவே மனித உடலும் மூச்சு என்று கூறப்படும் காற்றால் அதாவது உயிர் சக்தியால்தான் நிற்கிறது. அந்த உயிர்சக்தியை எப்போதும் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ளும் கலைக்கு பிராணாயாமக் கலை என்கின்றனர். நமது உடலில் ஏதேனும் ஓர் உறுப்பு நோய்வாய்ப்பட்டிருந்தாலும், நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து அந்த இடத்தில் சிறிது நேரம் நிறுத்திவைத்து பழுதான நம் உறுப்பையும் சரிசெய்து விடலாம் என்கிறார்கள் இக்கலையை கற்றுத் தேர்ந்த வல்லுநர்கள்.
எனவே, எந்த மனிதருக்கும் உயிர்சக்தியை புத்துணர்வோடு வைத்துக் கொள்ள பிராணாயாமம் என்ற சக்தியும் முக்கியமான சக்திகளில் ஒன்றாகிறது. பிராணன் போயிருச்சு என்று சொல்லாமல் இருக்கவும் நலமோடும், நீண்ட ஆயுளோடும் இருக்கவும் பிராணாயாமம் அவசியம்.
தியானம்: நமது உடலில் உள்ளம் என்ற ஓர் உறுப்பு இருக்கிறதா? அது கறுப்பா, சிவப்பா, வெள்ளையா, சிறியதா, பெரியதா என்றால் எதுவும் இல்லை. நமது உடலிலேயே இல்லாத ஓர் உறுப்பை “உள்ளம்’ என்றும் “மனசு’ என்றும் சொல்கிறோம். கண்போன போக்கிலே கால் போகலாமா? கால்போன போக்கிலே மனம் போகலாமா? என்ற கண்ணதாசனின் கவிதை வரிகள் கூட நமக்கு நினைவுக்கு வரலாம்.
சூரியனின் ஒளிக்கதிர்கள் எல்லா இடத்திலும் பரவி இருக்கின்றன. அக் கதிர்களை ஒரு லென்ஸ் மூலம் குவிக்கிற போது அது ஒரு காகிதத்தை கூட எரித்து விடும் சக்தி பெறுகிறது. இதுபோலவே மனதை அலைபாய விடாமல் நமது சொல்படி நடக்க மன ஒருமைப்பாடு அவசியமாகிறது. மனதை ஒருமுகப்படுத்தும் கலையைக் கற்றுக் கொண்டால் மேம்பட்ட ஆற்றல்களை நம்மால் பெற முடியும்.
எனவே, உள்ளத்தை அதாவது மனதை ஒருமுகப்படுத்திட, மேம்படுத்திட தியானம் என்கிற சக்தியும் முக்கியமானதாகிறது.
டிரைவர் இருந்தால் தான் காரை ஓட்ட முடியும். காரும் இருந்து டிரைவரும் இருந்து பெட்ரோல் இல்லையேல் கார் ஓடாது. எனவே, கார் ஓட டிரைவரும், பெட்ரோலும் எப்படி முக்கியமோ, அதுபோல உடல் என்கிற காருக்கு மூச்சுக் காற்றான டிரைவரும், மனதை ஒருமுகப்படுத்தும் சக்தியான தியானம் என்கிற பெட்ரோலும் இருந்தால் தான் உடல் என்கிற கார் நன்றாக, வேகமாக ஓடும்.
யோகக் கலை, பிராணாயாமக் கலை, தியானம் இந்த மூன்று சக்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கற்றுக்கொண்டு அதனை தினசரி செய்யத் துவங்கி விட்டால் உடலில் நோய்களே வர வாய்ப்பில்லை.
எப்போதும் புத்துணர்வுடனும் இருக்க முடியும். எந்தச் செயலாக இருந்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி அதைச் சிறப்பாகச் செய்துவிட முடியும். சாதனைகள் பலவும் நிகழ்த்த முடியும்.
சுவாமி விவேகானந்தரின் கம்பீரமான தோற்றம், உயர்ந்த சிந்தனைகள், சிறப்பான செயல்பாடுகளுக்கு இவை மூன்றும்தான் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன. இந்த மூன்றையும் முறையாகப் பயன்படுத்தியதால்தான் சித்தர்கள், முனிவர்கள் போன்றோர் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள்.
நம் உடல் உறுப்புகளில் ஒன்றாகவே ஆகி விட்ட செல்போன் தினசரி சார்ஜ் செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். அதைப்போலவே இந்த 3 சக்திகளையும் நமது உடலில் தினசரி சார்ஜ் செய்யக் கற்றுக் கொண்டால் சிறப்பாகச் செயல்பட முடியும். இல்லையேல் சார்ஜ் ஏற்றப்படாத செல்போனாகி விடுவோம்.
ஆரோக்கியத்துக்காக தினசரி ஒருமணி நேரமாவது ஒதுக்கவில்லையெனில், நோய்க்காக தினசரி பலமணி நேரங்களை ஒதுக்கவேண்டிய நிலை வந்துவிடும்!

வெற்றிபெறுமா புதிய ஓய்வூதியத் திட்டம்?

வெற்றிபெறுமா புதிய ஓய்வூதியத் திட்டம்?

புதிய ஓய்வூதியத் திட்டத்தை மே மாதம் முதல் தேதி மத்திய அரசு மே தினப் பரிசாக வழங்கியுள்ளது! அமைப்பு சார்ந்த ஊழியர்கள், அமைப்பு சாராத தொழிலாளர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், இந்தியக் குடிமக்கள் அனைவரும் இதில் சேர்ந்து ஓய்வூதியம் பெறலாம் என்பதே இதன் சிறப்பு.

புதிய ஓய்வூதியத் திட்டம் ஓர் அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை நிர்வகிக்கும் பொறுப்பினை ஓய்வூதிய நிதி நெறிமுறை மற்றும் மேம்பாடு என்னும் ஆணையம் ஏற்றுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாகப் பேசப்பட்ட இத்திட்டம் அண்மையில்தான் இறுதிவடிவம் பெற்றது. இடையில் இத்திட்டத்தின் சில அம்சங்களை, மத்திய அரசுக்கு முன்னதாக ஆதரவு அளித்து வந்த இடதுசாரிக் கட்சிகள் ஆட்சேபித்ததால், இது அவ்வப்போது கிடப்பில் போடப்பட்டது. இப்போது ஒருவழியாக மே முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துவிட்டது.

18 வயது முதல் 55 வயது வரையில் உள்ள எந்த ஓர் இந்தியக் குடிமகனும் இதில் சேரலாம். முதல்கட்டமாக, முதல்நிலை கணக்கு மட்டுமே தொடங்க முடியும். இதில் செலுத்தக்கூடிய தொகையை ஓய்வூதியத் திட்டம் தவிர வேறு காரணங்களுக்காக எடுக்க முடியாது.

அடுத்தகட்டமாக, இரண்டாம் நிலை கணக்கைத் தொடங்கலாம். அந்தக் கணக்கில் விருப்பம்போல் பணம் செலுத்தலாம்; வேண்டும்போது எடுக்கலாம்.

இரண்டாம் நிலை கணக்கு 6 மாதங்களில் நடைமுறைக்கு வர உள்ளது. நாம் இரண்டாம் நிலை கணக்கு தொடங்குவதற்கு முன், நமக்கு முதல் நிலை கணக்கு அவசியம் இருக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தில் சேருவது எப்படி? இதற்கென 22 அமைப்புகள் நாடெங்கும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளுக்கு ஆங்காங்கு கிளைகள் உள்ளன. இந்த கிளைகளில் ஒன்றுக்கு நேரில் சென்று, உரிய படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தால், நமது பெயர் பதிவு செய்யப்படும். அதை அடுத்து, நமக்கு ஒரு நிரந்தர கணக்குப் பதிவு எண் வழங்கப்படும். அத்துடன் தொலைபேசி மற்றும் இணையதளத்தின் மூலம் தொடர்பு கொள்வதற்கு வசதியாக நமக்கு அனுமதி குறியீடுகள் தரப்படும். ஒவ்வொன்றுக்கும் நேரில் செல்லத்தேவை இருக்காது.

நாம் கணக்கில் செலுத்த வேண்டிய தொகைக்கு உச்சவரம்பு இல்லை. ஆனால், குறைந்த பட்சம் மாதம் ரூ.5,00 என்றோ, வருடத்துக்கு ரூ.6,000 என்றோ செலுத்த வேண்டும். பணத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது செலுத்த வேண்டும்.

ஒரு வேளை, எப்போதாவது தொகையை உரிய காலத்தில் கட்டத் தவறினால், அந்த கணக்கை உயிர்ப்பிக்க, அபராதத் தொகையாக ரூ.100 மற்றும் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும்.

நமது இருப்புத் தொகையை சில குறிப்பிட்ட வழிகளில் முதலீடு செய்வார்கள். அதிலிருந்து கிடைக்கும் லாபம் நமக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

முதலீட்டுத் திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒன்று, பங்குச் சந்தையில் முதலீடு. இது கூடுதல் லாபம் ஈட்டக் கூடியது என்றாலும், இதில் கூடுதல் “ரிஸ்க்’ உண்டு. எனவே இத்திட்டத்தைத் தேர்வு செய்பவர்களின் தொகையில் 50 சதவிகிதம் மட்டுமே இதில் முதலீடு செய்யப்படும்.

இரண்டாவது முதலீட்டுத் திட்டம், நிலையான வருமானம் தரக்கூடிய கடன் பத்திரங்கள் அடங்கியது. இதில் மிதமான “ரிஸ்க்’; மிதமான வருவாய் இருக்கும்.

மூன்றாவது முதலீட்டுத் திட்டம். அரசு பத்திரங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டுப் பத்திரங்கள் ஆகியவை அடங்கும். இதில் வருவாய் குறைவு; “ரிஸ்க்’ அனேகமாக இல்லை எனலாம்.

எதில் நம் பணம் முதலீடு செய்யப்பட வேண்டும் என்பதை நாமே தீர்மானித்து ஆணையத்துக்கு தெரிவிக்கலாம். நம்மால் தீர்மானிக்க இயலாத பட்சத்தில் முடிவை நிர்வாகிகளிடமே ஒப்படைக்கலாம். அவர்கள் நமது வயதை முக்கியமாகக் கருத்தில் கொண்டு முதலீட்டுத் திட்டத்தை தேர்வு செய்வார்கள். வயது குறைவாக இருந்தால், கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என்றும் வயது அதிகரிக்க, அதிகரிக்க ரிஸ்க் தவிர்க்கப்பட வேண்டும் என்ற பொதுவான அடிப்படையில் தேர்வு செய்வார்கள். எந்த ஒரு கட்டத்திலும், நாம் தலையிட்டு, முதலீட்டுத் திட்டத்தை நாமே தீர்மானிக்கலாம். நாம் முதலில் செய்த முடிவை மறுபரிசீலனை செய்து மாற்றிக் கொள்ளவும் நமக்கு உரிமை உண்டு.

இந்த நிதியை செய்வனே, தொழியல் ரீதியாக நிர்வகிப்பதற்காக, பயிற்சியும், தேர்ச்சியும் பெற்ற நிதி மேலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அமைப்புகள் ஆறு. அவை: யூ.டி.ஐ.பரஸ்பர சகாயநிதி, பாரத ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல், கோடக் மகேந்திரா, ஐ.டி.எப்.சி மற்றும் ரிலையன்ஸ் ஆகியவை.

தொழில் நுட்ப ஆய்வுகள் அடிப்படையிலும், ஏலத்தின் மூலம் கட்டணங்கள் சாதகமானதாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டும் இந்த அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆறு நிறுவனங்களில் நாம் ஒன்றை தேர்வு செய்யலாம். நாளடைவில் ஒன்றுக்கு மேற்பட்ட நிதி மேலாளர்களை நாம் தேர்வு செய்து கொள்ளலாம். அடுத்த ஆண்டு மே மாதம் முதல் நமது நிதி மேலாளரை, நாம் விரும்பினால் மாற்றிக் கொள்ளவும் முடியும்.

நமது வசிப்பிடம் மாறினால் அதற்கு ஏற்ப மாற்றங்களை செய்துகொள்ளலாம். ஓய்வூதியம் பெறுவதற்கான வயது 60 என இப்போதைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே 60 வயதில், நமது கணக்கில் உள்ள இருப்புத் தொகையிலிருந்து 40 சதவிகிதத் தொகையை பயன்படுத்தி, ஒரு காப்பீடு நிறுவனத்திலிருந்து, ஆயுள் அய்ய்ன்ண்ற்ஹ் காப்பீட்டு பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும். மீதத் தொகையை அவ்வப்போது, ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம். 70 வயதுக்குள் முழுமையாக ரொக்கத் தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை, 60 வயதுக்கு முன்பே, இத்திட்டத்திலிருந்து வெளியேற விரும்பினால், 20 சதவிகிதத் தொகையை ரொக்கமாகப் பெற்றுக்கொண்டு 80 சதவிகிதத் தொகையை காப்பீட்டு நிறுவனத்திடமிருந்துஅய்ய்ன்ண்ற்ஹ்பாலிசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

துரதிஷ்டவசமாக, ஒருவர் 60 வயதுக்குள் மரணம் அடைந்தால், அவரால் நியமிக்கப்பட்ட நபருக்கு முழு தொகையும் வழங்கப்படும். இத்திட்டத்தின் செயல்பாட்டுக்கு, “நேஷனல் செக்யூரிடீஸ் டெபாசிட்டரி லிமிடெட்’ என்னும் தேசிய அமைப்பு மத்திய ஆவணக் காப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த அறக்கட்டளையின் வங்கியாக அரசுடைமை வங்கியான பேங்க் ஆப் இந்தியா செயல்படுகிறது. இத்திட்டத்தில் உள்ள குறைபாடு, இதற்கு வழக்கமான வருமானவரிச் சலுகை இல்லை என்பதுதான். இப்போதைக்கு இத்திட்டம் 80 சிசிடி பிரிவின் கீழ்தான் வருகிறது. எனவே பணத்தை வெளியே எடுக்கும்போது, அதற்கு வருமானவரி விதிக்கப்படும்.

இந்த வரியைத் தவிர்க்க வேண்டுமானால், முழு தொகையையும், காப்பீட்டு நிறுவனத்துக்கு மாற்றி பாலிசியாக பெற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே இத்திட்டத்துக்கு பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்டுக்கு உள்ளது போல் வருமானவரிச் சலுகை அளிக்க வேண்டும். புது ஓய்வூதிய ஆணையம் மத்திய அரசிடம் இது தொடர்பாக விண்ணப்பித்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. மத்தியில் புதிய அரசு அமைந்த பிறகே இந்த முடிவு மேற்கொள்ளப்படும்.

இந்தியாவில் 90 சதவிகித ஊழியர்களும், தொழிலாளர்களும் அமைப்பு சாராதவர்கள். அவர்களுக்கு சமூகப் பொருளாதார பாதுகாப்பு வழங்கக் கூடிய திட்டம் இது என்பது வெளிப்படை.

எனினும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் போது, அவ்வப்போது இதில் உள்ள குறைபாடுகள் வெளிப்படக்கூடும். அவை உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, சரி செய்யப்பட வேண்டும். அதேபோல், பொது மக்களும் இத்திட்டத்தில் சேருவதற்கு எந்த அளவு முனைப்பு காட்டுகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனினும் போகப்போக இத்திட்டத்தின் நன்மைகள் உணரப்படும் என்பதால் இத்திட்டம் நாளடைவில் பரவலாக வரவேற்கப்படும் என நம்பலாம்.

2004 முதல் செயல்படுத்தப்படும் மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தில், ஊழியர்களது முதலீட்டுத் தொகைக்கு சராசரியாக 14.5 சதவிகிதம் லாபம் கிடைத்துள்ளது. இது மிகவும் கவர்ச்சிகரமான வருவாய் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே, புதிய ஓய்வூதியத் திட்டத்திலும் அதுபோன்ற கணிசமான லாபத் தொகை கிடைக்குமேயானால், இதில் சேருவதற்கு மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். ஆக, இதன் வெற்றி வாய்ப்பு, நிதி மேலாளர்களின் திறமையான செயல்பாட்டிலும், அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய அணுகுமுறையிலும் தான் உள்ளது எனலாம்.

கட்டுரையாளர்
எஸ். கோபாலகிருஷ்ணன்
தினமணி

கரப்பான்பூச்சிகள்

கரப்பான்பூச்சிகள்

அரசு ஊழியர் லஞ்சம் வாங்குவது புதிது அல்ல. மன்னர் ஆட்சிக் காலத்திலிருந்து மக்களாட்சியில் சிறந்துவிளங்கும் நாடுகளிலும்கூட லஞ்சம் இருக்கவே செய்கிறது.

ஆனால், சட்டத்துக்குப் புறம்பாகச் செய்ய வேண்டிய வேலைகளுக்கு மட்டுமே லஞ்சம் என்ற நிலைமை மாறி, சட்டத்துக்குட்பட்ட செயல்களுக்கும் லஞ்சம் கொடுத்தால்தான் நடக்கும் என்பதும், ஓர் அரசு ஊழியர், தான் வாங்கும் சம்பளத்துக்குச் செய்தாக வேண்டிய கடமைக்கும்கூட லஞ்சம் கொடுத்தால்தான் கையெழுத்து என்ற சூழ்நிலை கவலை தருவதாக இருக்கிறது. அதைவிட பெரும்கவலை தரும் விஷயம் என்னவென்றால், கைது செய்யப்படும்போது இருக்கும் பரபரப்பான செய்தி, அதன் பின்னர் மறக்கப்பட்டு விடுகிறது. இவர்களில் பலர் மீண்டும் பணியில் சேர்ந்துவிடுகிறார்கள். அல்லது குறைந்த தண்டனையுடனும் கொள்ளையடித்த லஞ்சப் பணத்துடனும் தலைமறைவாக வாழ்கிறார்கள்.

தற்போது இத்தகைய பரப்பான செய்திகளுக்கு ஆளாகியிருப்பவர் சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலர் சுமதி ரவிச்சந்திரன். தட்கால் முறையில் கடவுச்சீட்டை வழங்க ரூ. 9,000 லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்ட இவரது இல்லத்தில், பல லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இனி திறக்கப்படவுள்ள இவரது வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்தில் என்னென்ன இருக்குமோ தெரியவில்லை.

கடவுச்சீட்டு என்பது ஒரு குடிமகனுக்கு இந்திய அரசு தரும் அடையாளம், அங்கீகாரம். விமான நிலையங்களில் பல நேரங்களில் போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற நபர்கள் கைது செய்யப்படுவது நடைபெறுகிறது. இவர்களில் பெரும்பாலோர் அயல்நாடுகளில் வேலைசெய்து, அதிகம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையால் பொய்யான தகவலையும், புகைப்படங்களை மாற்றியும் குற்றமிழைப்பவர்கள்.

ஆனால், நாட்டின் எல்லைகடந்து வந்து, இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் தொழில்செய்கிற அல்லது தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகிறவர்களும் லஞ்சப் பணத்தால் கடவுச்சீட்டு எளிதில் கிடைக்கும் என்ற நிலைமை நீடிப்பது இந்திய அரசுக்கு அவமானம்.

சில நூறு ரூபாய் “”செலவு” செய்தால் குடும்ப அட்டை பெறவும், ஓட்டுநர் உரிமம் பெறவும், வங்கிக் கணக்கு தொடங்கவும் முடியும். ஆனால் காவல்துறையின் சரிபார்ப்பு கடிதம் மிக முக்கியமான சான்று என்றாலும், காவல்துறையினர் பல விண்ணப்பங்களை புலனாய்வு செய்வதில்லை. சம்பந்தப்பட்டவர்களை விண்ணப்பத்துடன் உள்ள அதே ஆவணங்களுடன் காவல்நிலையத்துக்கு வரவழைத்து, “”பேசிப் பார்த்த” பிறகு தங்கள் தகவல்களை அனுப்பி விடுகிறார்கள். இதனால் சட்டப்படியான நடைமுறைப்படி, பொய்த் தகவல்களைக் கொடுத்து கடவுச்சீட்டை யார் வேண்டுமானாலும் பெறும் சூழ்நிலையே நிலவுகிறது.

போலி கடவுச்சீட்டுகள் பிடிபடும்போது, அதை வைத்திருக்கும் நபர்களைக் கைது செய்வதோடு, அந்த கடவுச்சீட்டை வழங்கக் காரணமான அலுவலர்கள், புலனாய்வு செய்த காவல்துறை அலுவலர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வழக்கம் இருந்திருந்தால், இப்படி லஞ்சம் வாங்கும் நடைமுறைகளும் கட்டுக்குள் வந்திருக்கும்.

லஞ்ச வழக்கில் பிடிபடும் அலுவலர்கள் ஓரிரு நாள் செய்திகளில் இடம்பெறுவதோடு சரி. அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு என்ன ஆனது, என்ன தண்டனை விதிக்கப்பட்டது என்பதெல்லாம் உலகுக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது. அவர்களது சொத்துகள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டதா இல்லையா என்ற தகவலும் வெளியாவதில்லை.

கடந்த ஆண்டு திருக்கழுகுன்றம் அருகே ஒரு வட்டாட்சியர் வீட்டில் ரூ.40 லட்சம் ரொக்கம் பிடிபட்டது. அவர் என்ன ஆனார்? வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஒருவரின் இரு வீடுகளில் பல கோடி ரூபாய்க்கு ஆவணங்கள் சிக்கின. அவர் என்ன ஆனார்? போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் ஆவணங்கள் இலச்சினைகள் வைத்திருந்த புதுக்கோட்டை நபரை காவல்துறை கைது செய்தபோது, திருச்சி கடவுச்சீட்டு அலுவலருக்குத் தொடர்பு இருப்பதாக விசாரணை செய்ததே, என்ன ஆயிற்று! லஞ்ச வழக்கில் கைது செய்யப்படும் சம்பவங்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒன்றாவது இருக்கிறது. ஆனால் தண்டிக்கப்பட்ட சம்பவம் மாதத்தில் ஒன்றாவது உண்டா? இல்லை. இவர்களை அரசியலும் சில ஊழியர் அமைப்புகளும் ஆதரவாக நின்று காப்பாற்றி விடுகின்றன.

“தர்மம் செய்பவரை தர்மம் காப்பாற்றும்’ என்பது மெய்யோ பொய்யோ, லஞ்சம் வாங்குபவரை லஞ்சம் காப்பாற்றுகிறது என்பது உண்மை! உலகம் முழுவதும் அழிந்தாலும் அழியாத உயிரினமாக இருக்கக்கூடியது கரப்பான்பூச்சிகள் என்று சொல்கிறார்கள். லஞ்சப்பேர்வழிகளும் கரப்பான்பூச்சிகள்தான்.

இரா. சோமசுந்தரம்
தினமணி

வளர்ச்சியும் பகிர்வு மேம்பாடும்

வளர்ச்சியும் பகிர்வு மேம்பாடும்

உலக வங்கியால் சமீபத்தில் வெளியிடப்பட்ட 2009-ம் ஆண்டுக்கான “உலக முன்னேற்ற அறிக்கை’ என் வாசிப்பிற்குக் கிடைத்தது. அந்த அறிக்கையின் தலைப்பே வித்தியாசமாக இருந்தது. “”பொருளாதாரப் புவியியல் மறு உருவாக்கம்” என்பதுதான் அந்த அறிக்கையின் தலைப்பு. உலகத்தில் உள்ள பல்வேறு புவியியல் சார்ந்த பொருளாதார மேம்பாட்டு ஏற்றத்தாழ்வுகளை அந்த அறிக்கை பட்டியலிட்டு விளக்கிக் காட்டியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இன்றைய சூழலில் உலகம் எவ்வளவு பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டு இயங்கி வருகிறது என்பதை அந்த அறிக்கை படம்பிடித்துக் காட்டியுள்ளது.

உலகத்தில் ஒரு சில இடங்கள் மட்டுமே பொருளாதார மேம்பாட்டை எல்லையில்லா அளவுக்கு அடைந்துள்ளன என்பதை எடுத்துக் காட்டினாலும், எல்லாப் பகுதி மக்களும் மேம்பாடு அடைய வாய்ப்புகள் இருப்பதையும் அந்த அறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது. இத்தகைய எல்லையற்ற ஏற்றத்தாழ்வுகளை அரசாங்கங்கள் தங்களின் சிறந்த ஆளுகையின் மூலம்தான் களைய முடியும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் அரசாங்கங்கள் எந்த அளவுக்குத் தீவிரமாக இந்த ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்குப் பாடுபடுகின்றன என்பதுதான் இன்றைய முக்கியக் கேள்வி.

உலகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த எந்த அளவுக்கு அரசாங்கத்தால் தேவையான சூழல்கள் உருவாக்கப்படுகின்றன என்பதுதான் அடுத்த கேள்வி. அதேபோன்று எவ்வளவுதான் சூழல்கள் சாதகமானவையாக இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்தும் மனோபாவமும் ஆற்றலும் பெற்ற மக்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதுதான் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

உலகத்தின் வளர்ச்சி என்பது உலகமய பொருளாதாரச் சூழலில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாகவே இருக்கும். இது தவிர்க்க இயலாதது என்றாலும்கூட, வளர்ச்சியின் பலன்களை எல்லாச் சமூகத்திற்கும் எல்லாத் தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகளும் இதில் இருக்கின்றன என்பதையும் அந்த அறிக்கை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. உலகத்தில் பொருளாதார வளர்ச்சியானது பெருநகரம் சார்ந்ததாகவும் கடலுக்குப் பக்கத்தில் நிகழ்வதாகவும், சங்கிலித் தொடர்போல் நாடுகள் இணைந்து பொருளாதார மேம்பாட்டுக்குச் செயல்படுவதாலும் ஒரு குறிப்பிட்ட பூகோள வரையறைக்குள்ளே நடைபெறுகிறது என்பதையும் அந்த அறிக்கை விரிவாக விளக்கியுள்ளது.

உலகத்தில் வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, வடகிழக்கு ஆசிய நாடுகள் இன்று வளங்கொழிக்கும் நாடுகளாகத் திகழ்கின்றன. இந்த நாடுகள்தான் உலகத்தின் பெரும்பகுதியான பொருளாதாரத்தைத் தங்கள் வசம் வைத்துள்ளன. நாடுகள் வெகுவேகமாக முன்னேறும்போது அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரமும் சீராக முன்னேறி விடுகிறது. ஆனால் இப்படிப்பட்ட செயல்பாடுகள் எல்லா நாடுகளிலும் நடைபெறுவது இல்லை. எங்கெல்லாம் ஆளுகை திறம்பட இருக்கிறதோ, குடிமக்கள் விழிப்புடன் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்போது மக்களின் வாழ்க்கைத் தரமும் மேம்பட்டு விடுகிறது. வளர்ச்சியின் பலன்களை மக்களின் வாழ்க்கைத் தரம் உயரப் பங்கீடு செய்வதில் அரசு தீவிரமாகச் செயல்படுவதையும் அந்த அறிக்கை படம்பிடித்துக் காட்டியுள்ளது.

உலக வங்கியின் அந்த அறிக்கை ஒரு வித்தியாசமான செய்தியை நமக்குத் தருகிறது. அதாவது முன்னேற்றம் என்பது சுமுகமாக நடப்பது இல்லை. அது மிகப்பெரிய போராட்டத்தின் அடிப்படையில் வருவதாகும். பொருளாதார மேம்பாட்டுக்காக மக்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்து இடம்விட்டு இடம் பெயர்ந்து கடின உழைப்பைத் தந்து செயல்படுகின்றனர். அதுமட்டுமல்ல, இந்தக் கடின உழைப்பு என்பது எல்லாப் பகுதிகளுக்கும் வருவது அல்ல. ஒரு சில இடங்கள் மட்டும் முன்னேற்றத் திட்டங்களைக் கவ்விப் பிடித்துக் கொள்கின்றன.

பொருளாதார வளர்ச்சி எல்லாப் பகுதிகளுக்கும் எல்லாத் தரப்பு மக்களுக்கும் சமமாகப் பகுக்கப்பட்டதாக இருப்பதில்லை. இந்த வளர்ச்சியைச் சமமாகப் பங்கிட்டு எல்லாத் தரப்பு மக்களுக்கும் எல்லாப் பகுதிகளுக்கும் சென்றடைய எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி பெறுவதும் கிடையாது. சில நேரங்களில் அரசின் இந்தப் பகிர்மானச் செயல்பாடுகள் வளர்ச்சியையே தகர்த்து விடுவதும் உண்டு.

உலகப் பொருளாதார வளர்ச்சியைப் பார்க்கும்பொழுது ஒருசில இடங்கள் எல்லையில்லாத அளவுக்குச் செல்வம் செழிக்கும் நிலைக்குச் செயல்பாடுகள் நிகழ்கின்றன. அமெரிக்காவில் பிறந்த ஒருவன், ஜாம்பியா நாட்டிலிருந்து பிறந்த ஒருவனை விட நூறு மடங்கு சம்பளம் அதிகமாகப் பெறுவான். அதேபோல் ஓர் அமெரிக்கன் ஜாம்பியா நாட்டில் உள்ளவனை விட முப்பது ஆண்டுகாலம் கூட பூமியில் உயிர் வாழ்வான். நியூயார்க்கில் பிறந்த ஒருவன் வாழ்க்கையில் சராசரியாக 4.5 மில்லியன் அமெரிக்க டாலரை வருமானமாகப் பெற்று சிறப்புடன் வாழ்வான். ஆனால் ஜாம்பியாவில் வாழும் ஒருவன் தன் வாழ்நாளில் பத்தாயிரம் டாலர் பெற்று வாழ்க்கையை உயிர் வாழ்வதற்காகவே நடத்துவான்.

நைஜீரியாவில் ஒன்பதாண்டு கல்வி பெற்று அமெரிக்காவில் பணியாற்றும் ஒருவன், நைஜீரியாவில் இருப்பவனைவிட எட்டுமடங்கு அதிகமாகச் சம்பாதிப்பான். எனவே உலகத்தில் நாம் எங்கே வாழ்கிறோம் என்பதில்தான் நம் வருமானம் அடங்கியுள்ளது. எனவே உலகத்தில் வருமானத்தை நிர்ணயம் செய்வது என்பது நமக்கு என்ன தகுதி, திறமை, யாரைத் தெரியும் என்பதைவிட எங்கு நாம் வேலை செய்கிறோம் என்பதில்தான் நிர்ணயம் செய்யப்படுகிறது.

உலகத்தில் ஒருசில இடங்கள் அப்படிப்பட்ட பொருளாதார முக்கியத்துவம் பெற்ற இடங்களாக மாறிவிடுகின்றன. வருமான வித்தியாசம், வாழ்க்கை மேம்பாட்டில் உள்ள வேறுபாடுகள் அனைத்தும் பொருளாதார முன்னேற்றத்தில் விளைபவை என்பதை உலக வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல் வேகமாகப் பொருளாதாரம் வளர்ந்துவரும் நாடுகளுக்குப் பக்கத்தில் இருந்தாலோ அல்லது வேகமாகப் பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் மிகப்பெரிய நகரத்துக்குப் பக்கத்தில் இருந்தாலோ பொருளாதார வளர்ச்சி என்பது அருகில் உள்ள பகுதிகளையும், நாடுகளையும், பிராந்தியங்களையும் மேம்பாடு அடையச் செய்யும் என்பதனையும் இந்த அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது.

தேசிய அளவில் பொருளாதார வளர்ச்சி என்பது சமமாக இல்லை. பிராந்தியங்கள், பகுதிகள், நகரங்கள் என்று எவையெல்லாம் சந்தைக்கு அருகில் இருக்கின்றனவோ, பொருள் உற்பத்தி செய்யும் இடங்களுக்கு அருகில் உள்ளனவோ அவையெல்லாம் மிகப்பெரிய வளர்ச்சியைப் பொருளாதார நிலையில் அடைய முடிகிறது. மற்ற பகுதிகள் மற்றும் பிராந்தியங்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. அரசியல்வாதிகள் இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நிராகரித்தபொழுதும் அவர்களால் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை மாற்றியமைக்க முடியவில்லை. இந்த ஏற்றத்தாழ்வுகளுக்குத் தீர்வு காணவும் முடியவில்லை. ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

அரசின் ஆழ்ந்த பரிசீலனையும் தெளிந்த நடைமுறைத் திட்டங்களும் புரிதலுடன் செயல்படும் மக்களின் ஒத்துழைப்பும்தான் இந்நிலைமையைச் சீர்செய்ய உதவும். எனவேதான் அரசியல் கட்டமைப்பிற்குள் வருகின்றவர்கள் சிறந்த சிந்தனையாளர்களாகவும் கடப்பாடு உடையவர்களாகவும் இருந்தால் மட்டுமே இந்தச் சாதனையைச் சாதிக்க முடியும் என்று கூறுகின்றனர். இல்லை என்றால் அவ்வப்போது மக்களை ஏமாற்றப் பகட்டுத் திட்டங்களைத்தான் செயல்படுத்த முடியும். இவற்றால் ஏற்றத்தாழ்வுகளைக் களைய முடியாது. 2000-வது ஆண்டில் நான்கில் மூன்று பங்கு பொருள் உற்பத்தி வடஅமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் வடகிழக்கு ஆசியாவிலும் நிகழ்ந்துள்ளது.

மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் சீனாவும், இந்தியாவும் உலகத்தில் மூன்றில் இரண்டு மடங்கு செல்வத்தை வைத்திருந்தன. அன்று இந்த இரு நாடுகளும் உலக மக்கள்தொகையில் பாதியைத் தங்கள்வசம் வைத்திருந்தன. ஆனால் இன்று அதிக எண்ணிக்கையில் மக்கள் வறுமையிலும் படிப்பறிவு இல்லாமலும் குறைந்த வாழ்நாளுடன் வாழும் சூழலிலும் ஒரு குறிப்பிட்ட பூகோள எல்லைப்பகுதியில் வாழ்கின்றனர்.

பொருளாதார வளர்ச்சி மேம்பாடு பொருள் உற்பத்தி இவையெல்லாம் நகரம் சார்ந்ததாக மாறிவிட்ட காரணத்தால் நகரமயமாதல் என்பது தவிர்க்க இயலாததாகவும் மாறிவிட்டது. எல்லையில்லா அளவுக்கு மக்கள் நகரங்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். நகர மேம்பாடு என்பது எல்லா நாடுகளிலும் ஒரு சவாலாக இருந்து வருகிறது.

உலகத்தில் ஒரு பக்கம் எல்லையில்லா வளர்ச்சி, மறுபக்கத்தில் வறுமை, கல்வியறிவின்மை, சுகாதாரக் கேடுடன் வாழும் மக்கள். இந்தச் சூழல் இன்றைய வளர்ச்சிக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. இரண்டு நூற்றாண்டுகளில் பொருளாதாரச் செயல்பாடுகள் புவியியல் சார்ந்து வேற்றுமைகளை வருமானத்திலும், பொருள் உற்பத்தியிலும் கொண்டு வந்துவிட்டன. ஒரு தலைமுறை பொருளாதார மேம்பாட்டு ஆராய்ச்சியில் ஓர் உண்மையைக் கண்டுபிடித்துவிட்டது. அதாவது வளர்ந்த பொருளாதாரம் சுமுகமாக எல்லா இடங்களுக்கும் பரவிவிடும் என்று நாம் எதிர்பார்க்க இயலாது.

உலகத்திலேயே பெரிய நகரமான டோக்கியோ 35 மில்லியன் மக்களை அதாவது ஜப்பானின் நான்கில் ஒரு பங்கு மக்களை வெறும் நான்கு சதவிகித பூமியில் வைத்துக்கொண்டுள்ளது. அதேபோல் உலகத்திலேயே வளர்ந்த பொருளாதார நாடான அமெரிக்காவின் 35 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் இடம்பெயர்ந்து வருகின்றனர். உலகிலேயே வளமான பகுதியாக விளங்கும் மேற்கு ஐரோப்பா எல்லா வளர்ந்த நாடுகளின் கூட்டுத் துணையுடன் பொருளாதாரத் தொடர்பினை ஏற்படுத்தி மேலும் பொருளாதார வளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

இன்று இந்தியாவில் ஒரு சில மாநிலங்கள் வளர்ச்சியை நோக்கி மிக வேகமான நடைபோட்டு வருகின்றன. குறிப்பாகத் தமிழகம் போன்ற மாநிலங்கள் முன்னணியில் இருந்தாலும் அடைந்த வளர்ச்சிகளை பகிர்மானம் செய்வதில் நமக்கு இருக்கும் சிக்கல்கள் ஏராளம். சென்னை வளர்கிறது. பெங்களூர் வளர்கிறது. மும்பை வளர்கிறது. மக்கள் குவிகின்றனர். தமிழகம் மிக வேகமாக நகரமயமாகி வருகிறது. கிராமம் வெறிச்சோடிப் போய்க்கொண்டிருக்கிறது. நமக்கான இன்றைய சிக்கல் வளர்ச்சியைக் கொண்டு வருவதில் அல்ல. அவற்றின் பலனைப் பிரித்துக் கொடுப்பதில்தான் இருக்கிறது. இதில்தான் நாம் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும்.

பெருகிவரும் மக்கள்தொகை அடர்த்தியைக் குறைப்பதும் நகர்ப்புறங்களுக்கு மக்கள் குடிபெயர்வதைத் தடுப்பதும் அடைந்த பொருளாதாரத்தை சீரான அளவில் பங்கிட்டு வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதும் தான் இன்றைய அரசாங்கத்தின் முக்கியக் கடமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் உலக வங்கி அலசி ஆராய்ந்து தனது அறிக்கையின் முடிவாக வெளிப்படுத்தியுள்ளது. இதுதான் உலக யதார்த்தமும்கூட.

க. பழனித்துரை

கூவம் மணக்குமா?

கூவம் மணக்குமா?

சமீபத்தில் புதுப்பேட்டையிலுள்ள பழைய சித்ரா தியேட்டர் அருகிலுள்ள கூவத்தின் கரையோரம் இருந்த குடிசைகள் அப்புறப்படுத்தப்பட்டபோது, கூவத்தின் வரலாறு மனக்கண்ணில் தெரிந்தது. கூவம் சென்னையின் மைய ரேகையாக அமைந்து உள்ளது. சென்னை மாநகரின் வரலாற்றில் கூவம் முக்கிய அங்கமாகிவிட்டது. 1820-ம் ஆண்டு காலகட்டத்தில் இன்றைய கல்லூரிச் சாலையிலுள்ள கல்வித்துறை இயக்குநரகத்தின் பின்புறம் உள்ள கூவம் ஆற்றங்கரையிலும், எழும்பூர் சிந்தாதிரிப்பேட்டை அருகில் உள்ள ஆற்றங்கரையிலும் மாலை நேரங்களில் மக்கள் கூடி விருந்துகள் வைத்துக் கொண்டாடுவது உண்டு. இன்றைய கடற்கரைக்குச் சென்று பொழுதைக் கழிப்பதைப்போல 1820-களில் கூவம் கரை, பொழுதுபோக்கு மையமாக இருந்து வந்துள்ளது என்று சொன்னால் நம்பவா முடிகிறது? அதுமட்டுமல்லாமல், கூவத்தைப் புனிதமாகக் கருதினார் வள்ளல் பச்சையப்பர். அவர் அதிகாலையில் புதுப்பேட்டை, கோமளீஸ்வரன்பேட்டையிலுள்ள கூவத்துக்கு வந்து குளித்துவிட்டு, குதிரையில் கந்தகோட்டம் முருகன் கோவிலுக்குப் போவார் என்று அவரது சரிதையில் கூறப்படுகிறது. 1907-ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரல்ப் பென்சன் இன்றைய பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் டவுட்டன் இல்லத்தில் குடியிருந்தபோது, மாலை நேரங்களில் கூவம் கரையில் உலவச் செல்வதுண்டு. அவர் கூவத்தை ‘நண்ப்ஸ்ங்ழ்ஹ் இர்ர்ஸ்ஹம்’ என்று குறிப்பிட்டுள்ளார். சென்னை ஆளுநர் கிராண்ட் டப், “”கூவம் கரையோரத்தில் உள்ள மஞ்சள் அரளி மரங்களிலிருந்து நீரில் விழும் அரளி மலர்களைப் பார்க்க ஆனந்தமாக உள்ளது” என்று கூறி மகிழ்ந்திருக்கிறார். இவ்வாறு கீர்த்தி பெற்ற கூவம் படிப்படியாகக் கழிவுநீர்க் கால்வாய் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு முதல் காரணம், இந்தியாவில் விளையும் பருத்தியின் மூலம் துணிகளை உற்பத்தி செய்து உடனே பிரிட்டனுக்கு அனுப்ப வேண்டும் என்று இங்கிலாந்திலிருந்து ஓர் அரண்மனை உத்தரவு வந்தது. அதனால், 1934-ல் கவர்னர் மார்டின் பிட், சிந்தாதிரிப்பேட்டையில் பல பகுதிகளிலிருந்து நெசவாளர்களை அழைத்துக் கொண்டு வந்து குடியமர்த்தினார். நெசவுத் தொழில் மூலம் வெளியாகும் கழிவுகள் கூவத்தில் சேர்ந்தன. இதுதான் முதல் பாதிப்பு. கூவம் ஆறு சென்னையின் மேற்குப் பகுதியில் 65 கி.மீட்டர் தூரத்தில் கேசவரம் அணையில் இருந்து தொடங்குகிறது. இந்த ஆறு கடம்பத்தூர் ஒன்றியத்தில் இருக்கும் கூவம் கிராமத்தில் தொடங்கி, மணவாள நகர், அரண்வாயல், திருமழிசை, வெள்ளவேடு, கண்ணார்பாளையம், பருத்திப்பட்டு, பூவிருந்தவல்லி, மதுரவாயல், அமைந்தகரை என ஓடி சாக்கடை நீரோடு கலந்து சென்னை மாநகருக்குள் வருகிறது. சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்காம், ஓட்டேரி கால்வாய்களும், நந்தனம், மாம்பலம், அரும்பாக்கம், விருகம்பாக்கம், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் ஓடைகளும் உள்ளன. இவைகள் மூலமாகத்தான் கழிவு நீர் ஓடுகிறது. இதனால் நாற்றம். கொசுக்கள் வளர்கின்றன. இன்றைக்கு அழகிய கூவம் நதியாக இருக்க வேண்டியது வெறும் சாக்கடையாக மாறிவிட்டிருக்கிறது. 70 ஆண்டுகளில் படிப்படியாக நாசமாகிவிட்டது. சென்னை மாநகரில் 18 கி.மீட்டர் தூரத்துக்கு கூவம் ஆறு ஓடுகிறது. இதன் கரையில் குடிசைகள் வேய்ந்த 8,266 குடும்பங்கள் வாழ்கின்றன. இதில் 127 இடங்களில் மாநகரக் கழிவு நீர் சேர்கிறது. கோயம்பேட்டில் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு 34 மில்லியன் லிட்டர் இதில் சேர்கிறது. இந்நிலையில் கூவம் மணக்குமா? பல திட்டங்கள், அறிக்கைகள் என சொல்லப்பட்டு எதுவும் சரிவரவில்லை. ஆங்கிலேயர் காலத்திலேயே முயற்சிகள் இருந்தும், 1960-ல் இது குறித்து சென்னை மாகாண அரசு திட்ட மதிப்பிலே அறிக்கை தயார் செய்தது. அதன்படி சேத்துப்பட்டு அருகே அடையாற்றை கூவத்துடன் இணைக்கலாம் என்று அதில் பரிந்துரை செய்தது. காங்கிரஸ் ஆட்சி முடிந்து அண்ணா தலைமையில் திமுக ஆட்சி ஏற்பட்டது. அண்ணா 1967-ல் ரூ. 118 லட்ச மதிப்பில் ஒரு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது, அண்ணா “”லண்டனுக்கு தேம்ஸ் எப்படி பெருமை சேர்க்கிறதோ அதைப்போல் கூவம் சென்னைக்குப் பெருமை சேர்க்க வேண்டும்” என்ற ஆசையை வெளிப்படுத்தினார். 1973-ல் இதில் படகுகள் விடப்பட்டன. படித்துறையில், பாரி, ஓரி என தமிழக ஏழு பெரும் வள்ளல்கள் பெயரில் படித்துறை மண்டபங்கள் அமைக்கப்பட்டன. இன்று அவை எல்லாம் பாழடைந்த நிலையில் இருக்கின்றன. 1976-ல் ம.பொ.சி. தலைமையில் அமைந்த குழு ரூ. 22 கோடியில் ஒரு திட்டத்தைக் கண்டறிந்தது. 1991-ல் செவன் டிரண்ட் என்ற ஆலோசனைக் குழுமம் மற்றும் 1994-ல் மேக் டொனால்ட் குழுமமும் ரூ. 34.8 கோடி மதிப்பீட்டிலும், 1998-ல் அரசு பொதுப்பணித்துறை ரூ. 19 கோடி மதிப்பீட்டிலும், 2000-ல் மீண்டும் தமிழக அரசு ரூ. 720 கோடி மதிப்பீட்டிலும், தற்போது 2008-ல் தமிழக அரசு உலக வங்கியுடன் இணைந்து பல திட்டங்கள் என அறிவிப்புகள்… ஆனால், எதிலும் பலன் கிட்டவில்லை. சேத்துப்பட்டு பாலத்தின் கீழ் அரசின் மீன் வளர்ப்புப் பண்ணை இருந்தாலும் மீன் வளர்ப்பும் சரியாக நடக்கவில்லை. அது நஷ்டத்தில் நடக்கிறது. இங்கு கிடைக்கும் மீன் வகைககள், நண்டுகளை உண்டால் உடலுக்குத் தீங்கு ஏற்படுவது நிச்சயம். போதாக்குறைக்கு கழிவுகள் அதில் சேர்வதால் மனித இனத்தை வாட்டும் கொசுக்கள் தாராளமாக உற்பத்தி ஆகின்றன. கூவத்தில் கலக்கும் கழிவு நீரைத் தடை செய்ய வேண்டும். அத்துடன் தூர்வாரி, கரைகளில் மரம், செடி, கொடிகளை வளர்க்க வேண்டும். கூவம் சுத்தம் ஆனால் மின்சார ரயில், பறக்கும் ரயில் போலவே நீர்வழி போக்குவரத்தையும் சென்னை மாநகரில் ஏற்படுத்தலாம். கூவத்தைச் சீர்படுத்தி, பக்கிங்காம் கால்வாய்த் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இவற்றுடன் இணைக்கலாம். கூவம் ஆறு நேப்பியர் பூங்கா அருகில் கிழக்கு நோக்கிச் சென்று வங்கக் கடலில் கலக்கிறது. அதன் முகத்துவாரத்தை ஆழப்படுத்தி, அங்குள்ள மேட்டுப்பாங்கான கழிவுகளை அகற்ற வேண்டும். சென்னையில் 1,398 பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இதில் பல தொழிற்கூடங்களின் கழிவுகள் கூவத்தில் நேரடியாகச் சேர்கின்றன. சில சமயங்களில் இறந்த மாடுகள், நாய்களின் உடல்கள் இந்த ஆற்றில் காணப்படுகின்றன. அவற்றையும் அகற்ற உரிய நடவடிக்கைகள் வேண்டும். கூவத்தைச் சுத்திகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பல உள்ளன: 1. கூவம் கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் உள்ள தடைகளை அகற்றிச் சுத்தம் செய்ய வேண்டும். 2. கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்றி அங்கு வசிக்கும் மக்களுக்கு வேறு பகுதிகளில் மாற்று இடம் கொடுக்க வேண்டும். 3. மருத்துவமனை கழிவுகள், ஆலைக் கழிவுகள், பெரிய ஓட்டல்களின் கழிவுகள் கூவத்தில் கலப்பதைத் தடை செய்ய வேண்டும். இந்தக் கழிவுகளில் மருத்துவமனைகளின் மூலம் சேர்வது மட்டும் 37 டன் ஆபத்தான மருத்துவக் கழிவுகள். 4. கூவத்தில் நீர்வரத்தைச் சரிசெய்ய 50 முதல் 80 மீட்டர் அளவில் அகலப்படுத்த வேண்டும். 5. புறநகர்ப் பகுதியில் செங்கல் சூளைக்காக மண் எடுக்கப்படுகிறது. இதனால் ஒரே சீரான ஆழம் இல்லாமல் போகிறது. மணலும் திருடப்படுகிறது. கூவத்தின் கரையோரங்களில் பூங்கா, ஓட்டல்கள், மக்களைக் கவரும் வகையில் பல்பொருள் அங்காடிகள் அமைக்கலாம். இவற்றைப் பராமரிக்க இவற்றிலிருந்து வாடகை பெறலாம். இவ்வளவு திட்டங்கள் மற்றும் ஆய்வுகள் அரசுச் செலவில் நடத்தப்பட்டு அவ்வப்போது கூவத்தைச் சுத்தப்படுத்த ஒதுக்கீடும் செய்யப்பட்ட பிறகும் கூவம் மணக்கவில்லையே ஏன்? இதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தைப் பலரும் பங்கு போடாமல் இருந்திருந்தால் இப்போது பணிகள் முடிந்து இருக்கும். மக்களின் வரிப்பணம் இவ்வளவு கோடிகளாக ஒதுக்கீடு செய்து அது குறிப்பிட்ட நோக்கத்துக்காகச் செலவு செய்யப்படாமல் தனிப்பட்டவரின் நலனுக்குச் செல்கிறது. இதனால் கூவம் மட்டுமல்லாமல் எந்தத் திட்டமும் வெற்றி பெறுவதில்லை. காகிதப் பூ மணக்காது! அதைப்போல் கூவம் தேம்ஸ் ஆகிவிடாது! உண்மையிலேயே நமது ஆட்சியாளர்களுக்கு மனமிருந்தால், வாஷிங்டன் நகருக்கு ஒரு பொட்டோமாக் நதி, லண்டனுக்கு ஒரு தேம்ஸ், பாரிஸ் நகருக்கு ஒரு ரைஸ் போல சிங்காரச் சென்னைக்கு கூவமும் அமைவது என்ன இயலாத ஒன்றா

கே.எஸ். இராதாகிருஷ்ணன்
தினமணி

விவசாயியே வெளியேறு!

விவசாயியே வெளியேறு!

1942 “”வெள்ளையனே வெளியேறு” என்ற விடுதலைக் குரல் இந்தியாவில் ஓங்கி ஒலித்ததன் விளைவால் தூங்கிய பாரதம் துணிவுடன் எழுந்தது. விடுதலை பெற்ற இந்தியாவில் இன்று நிகழ்வது என்ன?

ஆட்சியைப் பிடித்தவர்கள் கட்சிகளை மாற்றுகிறார்கள். மாறி மாறி ஆட்சி செய்கிறார்கள். அமைச்சர் பதவிக்காக கொள்கைகளைக் குப்பையில் கொட்டியபின்பும் சாயம் வெளுக்காத சில சமரசங்கள் அவர்களுக்குப் பணத்தை அள்ளித் தரலாம்.

எந்தக் கட்சி பதவிக்கு வந்தால் என்ன? யார் ஆண்டால் யாருக்கு என்ன லாபம்? யாராலுமே காப்பாற்ற முடியாத ஒரு கேவல நிலைக்கு இந்திய விவசாயிகள் தள்ளப்பட்டுவிட்டனர்.

ஆண்டுதோறும் விவசாயத்தைக் கைவிட்டு பெருநகரங்களின் சேரிகளில் குவியும் விவசாயிகளின் நிலை ஏறத்தாழ இலங்கை அகதிகளைவிடக் கேவலமாயுள்ளது. விவசாயிகளின் வாரிசுகள் இன்று விவசாயம் செய்யத் தயாராக இல்லை. 1980 – 89 காலகட்டத்தில் 5 ஏக்கர் முதல் 20 ஏக்கர் நிலம் வைத்து விவசாயம் செய்தவர்கள் 2004 – 05 காலகட்டத்தில் என்ன ஆனார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் திரட்டப்படுமானால் இந்த உண்மை வெட்டவெளிச்சமாகும்.

5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருந்தவர்களின் நிலை இன்னமும் மோசம். நகரங்களில் குடிபெயர்ந்தவர்களில் பெரும்பாலோர் உழவியல் நுட்பம் நன்கு தெரிந்த சிறு – குறு விவசாயிகளாவர். பல லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு தாமாகவே வாழ்வை முடித்துக்கொண்டு விட்டார்கள்.

அரசுத்தரப்பு புள்ளிவிவர அடிப்படையில் இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரத்திலும் மூன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 1993-லிருந்து 2006 வரையில் 1,50,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஊடகங்களின் தகவல்களின்படி விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை மூன்று லட்சம்.

2006-லிருந்து 2009 வரையில் மேலும் பல்லாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இந்தியாவில் இவ்வளவு அரசியல் கட்சிகள் இருந்தும் எந்த ஒரு கட்சியாவது விவசாயிகளின் தற்கொலையை ஒரு பிரச்னையாக எடுத்துக்கொண்டு ஒரு தேசம் தழுவிய மாநாடு கூட்டியோ ஊர்வலம் நடத்தியோ ஏதும் ஒரு பொதுக்கூட்டத்தில் விவாதித்ததா? மாநில அளவிலாவது இந்தப் பிரச்னை விவாதிக்கப்பட்டதா? எதுவுமே செய்யப்படாததன் பொருள் என்ன? திட்டமிடப்பட்ட பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்ட இந்தியாவில், விவசாயிகளை வெளியேற்றுவதும் ஒரு திட்டக் கொள்கையாக மாறிவிட்டதுதான் பரிதாபகரமான உண்மை நிலை. இது எவ்வாறு என்றால் அமெரிக்கா திட்டமிடுகிறது. அதை இந்தியா நிறைவேற்றுகிறது. அமெரிக்காவில் எவையெல்லாம் நிகழ்ந்தனவோ அவையெல்லாம் இந்தியாவில் நிகழப் போகின்றன.

ஓர் அரசு மேல்மட்ட அதிகாரியையோ, அரசுத்துறை விவசாய விஞ்ஞானியையோ பார்த்து, இந்திய விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? என்று கேட்டுப் பாருங்கள். ரெடிமேட் பதில்கள் நிறையக் கிடைக்கும்.

உற்பத்தித்திறன் குறைவதால் வருமானம் குறைகிறது. அதனால் தற்கொலை என்பார். விவசாயம் காரணமல்ல. திருமணச் செலவு காரணமாகக் கடனாளியாகித் தற்கொலை செய்து கொள்கின்றனர். உண்மையை மூடி மறைக்கவே இப்படியெல்லாம் விவசாயத் துறையினர் காரணங்களைக் கண்டுபிடிக்கின்றனர்.

பசுமைப்புரட்சி நிகழ்வதற்கு முன் குறிப்பாக 1960 – 69 பதிற்றாண்டில் விவசாய உற்பத்தித் திறன் குறைவாகத்தான் இருந்தது. அன்று எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொண்டதாக எதுவும் செய்தி இல்லையே. அன்றும் விவசாயிகளின் பெண்களுக்குக் கல்யாணக்கடன் இருந்தது. அதற்காக அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை.

கடந்த 40 ஆண்டுகளில் வேளாண்மை உற்பத்தியும் உற்பத்தித்திறனும் பன்மடங்கு உயர்ந்தும் கூட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது ஏன்? கடந்த 40 ஆண்டுகளாக உணவு உற்பத்தியை உயர்த்த வேண்டும் என்ற இலக்கு உலகளாவியதாக இருந்தது. அமெரிக்காவிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா என்று உலகின் எல்லா இடங்களிலும் உற்பத்தியை உயர்த்துவது ஒரு பொதுவான லட்சியமே. வளர்ச்சியுற்ற நாடுகளில் அமெரிக்காவை மாதிரியாகக் கொண்டு இயங்கும் இந்தியா வளரும் நாடுகளில் ஒன்று. இரு நாடுகளின் வேளாண்மைப் பொருளியல் ஒப்பிடக்கூடியதும் அல்ல. அமெரிக்காவில் 7 லட்சம் விவசாயிகளே உள்ளனர். அமெரிக்காவில் சிறையில் உள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை 70 லட்சம். ஒட்டுமொத்த அமெரிக்க சிறைக் கைதிகளின் எண்ணிக்கையில் 10 சதவீதமே விவசாயிகளின் எண்ணிக்கையாக உள்ளது.

இரண்டாவது உலகப் போருக்கு முன்பு அமெரிக்காவில் 3 கோடி விவசாயிகள் இருந்தனர். அமெரிக்காவில் இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் விவசாயத் தொழிலைக் கார்ப்பரேட் என்ற வர்த்தகக் கூட்டணி கைப்பற்றியது. சுமார் 2.7 கோடி விவசாயிகளைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலத்தை விட்டு வெளியேற்றியது. இன்றைய அமெரிக்காவின் விவசாயக் கொள்கை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவன நிகழ்ச்சி நிரலாக மாறிப்போனது.

2000-ம் ஆண்டில் அமெரிக்காவில் மக்கள்தொகைக் கணக்கு கடைசியாக எடுக்கப்பட்டபோது வேண்டுமென்றே விவசாயிகளின் எண்ணிக்கை புள்ளிவிவரத்தை எடுக்கவில்லை. அமெரிக்காவில் விவசாயிகளின் தொகை சுருங்குவதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இன்று ஐரோப்பாவிலும் விவசாயிகள் அழிந்து வருகின்றனர். ஆனால் இந்தியாவிலும் சீனாவிலும் விவசாயிகளின் எண்ணிக்கை இவ்வளவு மோசமாக விவசாயக் கொள்கைகளுக்கு மத்தியில் கணிசமாக உள்ளது. இந்திய விவசாயிகளின் எண்ணிக்கை 20 கோடி. உலக விவசாயிகளில் 10-க்கு நால்வர் இந்திய விவசாயிகள். இந்தியாவின் விளைநிலம் 139 கோடி ஹெக்டேர். விவசாயியின் சராசரி நில அளவு 1.4 ஹெக்டேர். இந்தியாவுடன் ஒப்பிட்டால் அமெரிக்காவின் சராசரி நில அளவு 2000 மடங்கு கூடுதல். இந்தியாவில் விவசாயம் வாழ்க்கை. அமெரிக்காவில் விவசாயம் வியாபாரம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமெரிக்காவின் அனுபவம் இந்தியாவுக்கு எப்படிப் பொருந்தும் என்பதே விளங்காத புதிராக உள்ளபோது, இந்தியாவிலும் விவசாயிகள் நிலத்தைவிட்டு வெளியேறும் எண்ணிக்கை பல கோடிகளைக் கடந்துவிட்டது. குறிப்பாக 1980-க்குப் பின் கிராமங்களைவிட்டு வெளியேறிய சிறு – குறு விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் 5 கோடிக்கு மேல் இருக்கும்.

இந்தியாவிலும் கிழக்காசிய நாடுகளிலும் முக்கிய உணவு அரிசி. அமெரிக்காவில் அரிசி ஏற்றுமதிச் சரக்கு. “”அமெரிக்காவில் அரிசியின் உற்பத்தித்திறன் 7 டன். இதுவே இந்தியாவில் 3 டன். ஆகவே இந்திய விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமானால் அமெரிக்காவுக்கு இணையாக இந்தியாவிலும் ஹெக்டேருக்கு 7 டன் அரிசி விளைவிக்க வேண்டும். இந்த அளவில் இந்திய விவசாயிகள் அரிசி உற்பத்தி செய்தால் போதும். நல்ல லாபம் வரும். நிலத்தைவிட்டு வெளியேற வேண்டாம். தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்தும் இல்லை. விவசாயப் பிரச்னைகள் எல்லாமே உற்பத்தித் திறனை உயர்த்தினால் போதும்…” இப்படித்தான் நமது நிபுணர்கள் நினைக்கின்றனர். இது சரியல்ல.

அமெரிக்காவில் மொத்த அரிசி உற்பத்தியின் பணமதிப்பு 1.2 பில்லியன் டாலர். இந்த அளவில் அரிசி உற்பத்தி செய்ய 1.4 பில்லியன் டாலர் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் அதாவது கார்ப்பரேட் நிறுவனங்கள் – ரொக்கமாக இந்த அளவு மானியம் பெறுவதால் 7 டன் உற்பத்தித்திறன் சாத்தியமாகிறது. இந்திய விவசாயிகளுக்கும் இந்த அளவுக்கு மானியம் வழங்குவது சாத்தியமா? இந்த அளவில் மானியம் பெற முடியாத சூழ்நிலையில் நிபுணர்களின் பேச்சைக்கேட்டு அதிகம் முதலீடுகளைக் கொட்டி அதிக உற்பத்தி செய்தும் அதற்கான சந்தையும் விலையும் இல்லாமல் நஷ்டமடைந்து கடனாளியாகி முடிவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுதான் நிஜம்.

நமது விவசாயக் கொள்கை எப்படி உள்ளது என்றால், “”விவசாயிகள் எப்படியாவது கடனை உடனை வாங்கி புதிய முறை விவசாயத்தைக் கடைப்பிடித்து உற்பத்தியை உயர்த்தி முடிவில் விற்க வழியில்லாமல் தற்கொலை செய்து செத்துவிடு அல்லது நிலத்தை வந்த விலைக்குக் கார்ப்பரேட்டுகளிடம் விற்றுவிட்டு வெளியேறு என்று கூறுவதுபோல் உள்ளது”.

ஆமாம். இன்று இந்திய விவசாயத்தில் அமெரிக்காவைப்போல் கார்ப்பரேட்டுகள் நுழைந்துவிட்டனர். இன்று அமெரிக்க உபதேசத்தை வேதமாகக் கொண்டு நம்மை ஆட்டிப் படைக்கும் அமைச்சர்கள் விவசாயத்தை லாபகரமாக மாற்ற ஏற்றுமதிக்குரிய மாற்றுப்பயிர்த்திட்டத்தை முன்வைக்கின்றனர். கொய்மலர், வெள்ளரிக்காய், கண்வலிக்கிழங்கு, மூலிகைகள் என்ற வரிசையில் பல வகைப் பயிர்கள் உண்டு. இவற்றைப் பயிரிடும் தகுதி உணவு விவசாயம் செய்யும் ஒன்றே முக்கால் ஏக்கர் பேர்வழிகளுக்கு இயலாது. கார்ப்பரேட்டுகள் அல்லது கார்ப்பரேட்டுகளின் பக்கபலம் உள்ள பணக்கார விவசாயிகளுக்கு மட்டுமே லாபம் உண்டு.

ஏற்றுமதி எத்தர்களால் வெள்ளரிக்காய் சாகுபடி செய்து ஏமாந்துபோன விவசாயிகள் திண்டுக்கல், ஆத்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் ஆயிரம் உண்டு. அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு தென் அமெரிக்க நாடுகளில் மாற்றுப் பயிர் சாகுபடி செய்து கார்ப்பரேட் பயன் அடைந்தார்கள். ஆனால் உணவு உற்பத்தி குறைந்து அமெரிக்காவிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்து உயிர் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். சிறு – நடுத்தர விவசாயிகள் வெளியேறி விட்டனர்.

இதேபோக்கு இந்தியாவில் தென்படுகிறது. இந்திய விவசாயிகளின் பாரம்பரிய அறிவைப் புறக்கணித்துவிட்டு அமெரிக்கப் பாரம்பரியத்தை ஏற்கும் நிலை புதிய புதிய நவீன ரசாயன – இயந்திரத் தொழில் நுட்பங்கள் மூலம் அறிமுகமாகி விட்டதால் இந்திய மண்ணில் இனி பாரம்பரிய விவசாயிகளுக்கு வேலையே இல்லாமல் போய்விடும்.

இனி எதிர்காலத்தில் இந்திய விவசாயம் முழுமையாகவே கார்ப்பரேட்டுகளின் வசமாகிவிடும். வேறு வழியில்லாமல் விவசாயிகள் வேகமாக சொந்த மண்ணைவிட்டு உள்ளூர் அகதிகளாக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
ஆர்.எஸ். நாராயணன்
தினமணி

தலிபானிஸ்தான்!

தலிபானிஸ்தான்!

காலைச் சுற்றிய பாம்பு கடிக்கத் தொடங்கிய பிறகுதான் வலியை உணர்ந்துள்ளது பாகிஸ்தான். அந்த நாட்டையே துண்டாடும் அளவுக்கு தலிபான்கள் அடைந்துள்ள எழுச்சி பாகிஸ்தான் ஆட்சியாளர்களை மிரளவைத்துள்ளது.

தலிபான்களுக்கு எதிராக தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கின் முக்கிய நகரமான மிங்கோராவில் இருந்து, ஒரு பெரும் தலிபான் படையே இஸ்லாமாபாத் நோக்கி நகர்ந்ததாகத் தெரியவந்தபோது, அந்த நாடு மட்டுமன்றி மொத்த உலகமும் அதிர்ச்சியுடன்தான் பார்த்தது.

ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவி, அங்குள்ள ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் வலுவான அடித்தளத்தை அமைத்த தலிபான்கள், அப் பகுதியில் இஸ்லாமிய சட்டத்தையும் அமல்படுத்தினர்.

அத்துடன் நிற்காமல் “பாகிஸ்தானை இன்னொரு ஆப்கானிஸ்தானாக மாற்றுவோம்’ என சூளுரைத்து, இஸ்லாமாபாதிலிருந்து 60 மைல் தொலைவில் உள்ள பியூனர் மாவட்டம் நோக்கி முன்னேறத் தொடங்கினர்.

அப்போதும்கூட செய்வதறியாதுதான் இருந்தது பாகிஸ்தான். பின்னர், நிலைமையின் தீவிரத்தை உணர்த்தி, அமெரிக்கா கொடுத்த கடும் நெருக்கடி காரணமாக, தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் படைகள் தற்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.

அமெரிக்காவில் 2001, செப்டம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானை “நேட்டோ’ படைகள் துவம்சம் செய்தன. அத்துடன் தலிபான்கள் ராஜ்யம் வீழ்ந்ததாகத்தான் கருதப்பட்டது. ஆனால், தற்போது ஆப்கானிஸ்தானில் மட்டுமன்றி, பாகிஸ்தானிலும் தலிபான்கள் தங்கள் ராஜ்யத்தை நிறுவத் தொடங்கியிருப்பது உலக அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தானைவிட்டு ரஷியப் படைகளை வெளியேற்றுவதற்காக அமெரிக்கா வளர்த்துவிட்ட தலிபான்கள், அமெரிக்காவின் கண்ணையே குத்தினர். அதுதான் இரட்டைக்கோபுரத் தாக்குதல். அதேபோல, தலிபான்களைக் கண்டும்காணாமல் இருந்த பாகிஸ்தானின் கண்ணை தற்போது குத்தத் தொடங்கியுள்ளனர் தலிபான்கள்.

ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் தற்போது நடந்துவரும் சண்டை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அப் பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர். இவ்வாறு வெளியேறும் மக்களுக்கு உதவுவதற்காக உலக நாடுகளின் உதவியைக் கோரியுள்ளது பாகிஸ்தான்.

வழக்கம்போல உதவி வழங்க அமெரிக்கா தயாராக இருந்தாலும், “தலிபான்கள் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் பாகிஸ்தானின் அணுஆயுதங்களைக் கைப்பற்றும் அபாயம் இருப்பதாக’ அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அண்மையில் பகிரங்கமாக எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

அணுஆயுதங்கள் பாதுகாப்பாக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானி திரும்பத் திரும்பக் கூறிவந்தாலும், அதை நம்புவதற்கு அமெரிக்கா தயாராக இல்லை.

பாகிஸ்தானில் தளம் அமைத்துச் செயல்படும் தீவிரவாதிகளை அந்த நாடு ஒடுக்க வேண்டும் என இந்தியா நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. அப்போதெல்லாம் தங்கள் மண்ணில் தீவிரவாதிகளுக்கு இடம் இல்லை எனவும், தங்களுக்கு முதல் எதிரி இந்தியாதான் எனவும் வலுவற்ற காரணங்களைக் கூறி தட்டிக்கழித்து வந்த பாகிஸ்தான், இப்போது தலைக்குமேல் வெள்ளம் சென்ற பிறகு தலிபான்களை அழிக்க தீவிர நடவடிக்கை எடுத்துவருவதாக உலகுக்குச் சொல்கிறது.

தலிபான்களுடன் சண்டையிடுவதற்காக இந்திய எல்லையில் நிறுத்தியுள்ள பாகிஸ்தான் வீரர்களைக்கூட கிழக்குப் பகுதிக்குத் திருப்ப உத்தரவிட்டுள்ளதாக, பிரதமர் கிலானி கூறியுள்ளார்.

இந்தியாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் எல்லாம் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்குத் தொடர்பு இருப்பதாக இந்தியா ஆதாரங்களுடன் தெரிவித்து வந்துள்ளது. அப்போதெல்லாம் பாகிஸ்தானுக்குச் சாதகமாகவே அமெரிக்கா இருந்து வந்துள்ளது. இப்போது, பாகிஸ்தானில் தனி அரசாங்கத்தையே அமைக்கும் அளவுக்குத் தலிபான்கள் வளர்ந்துவிட்ட பிறகுதான் நிலைமையின் தீவிரத்தை அமெரிக்கா உணரத் தொடங்கியுள்ளது.

தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காகவே அமெரிக்காவிடம் இருந்து ஏராளமான நிதி மற்றும் ஆயுதங்களைப் பெற்று வரும் பாகிஸ்தான் இதுவரை உண்மையான நடவடிக்கை எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை.

ஆனால், இப்போது பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் வெறும் பேச்சோடு நிறுத்தாமல் உண்மையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பொருளாதார வீழ்ச்சி, அடிப்படைவாதக் குழுக்களின் வளர்ச்சி என மோசமான பின்னடைவைச் சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு அதுதான் நல்லது. பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, உலகுக்கும்.

அழுவதா? சிரிப்பதா?

அழுவதா? சிரிப்பதா?

சென்னையிலுள்ள குப்பங்களில் ஒடுங்கிக் கிடக்கும் அடித்தட்டு மக்களிடம், மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியது. இதற்காக, இன்னொரு இலவசத் திட்டமாக, பச்சை, சிவப்பு பக்கெட்டுகளை ரூ. 50 லட்சம் செலவில் விநியோகம் செய்தது. இதைப்பற்றி, தமிழக முதல்வர்கூட, அவரது கேள்வி – பதில் வெளியீடு மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், மற்றொரு நிகழ்ச்சியில் பேசும்போதுகூட, கூவத்தைத் தூய்மையாக்க சத்ய சாய்பாபாவிடமிருந்து நிதி பெறவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அரசு கொண்டு வரும் ஒவ்வொரு புதிய திட்டத்தையும் உடனடியாகக் குறை கூறுவது அழகல்ல. எனினும், மாநகராட்சியின் இத்தகைய தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் திட்டங்களை நினைத்தால் அழுவதா? சிரிப்பதா? அல்லது அழுது கொண்டே சிரிப்பதா? என்றே புரியவில்லை.

இன்று வாழைப்பழமும், பப்பாளியும்கூட ஏழைகளுக்கு எட்டாக் கனிகளாகிவிட்டன. விலைவாசி உயர்வால் அவர்களது அடிப்படை வாழ்வாதாரமே மங்கி வரும் நிலையில், அவர்கள் எங்கே குடியிருப்புகளில், மக்கும், மக்காத குப்பைகளை உற்பத்தி செய்யப் போகிறார்கள்?

நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களின் வரைமுறையற்ற நுகர்வுக் கலாசாரமும், தமிழகத்தின் பல்வேறு இடங்கள் நகர்ப்புறங்களாகி வருகின்ற நிலையுமே, பெரிய அளவில் குப்பைகளின் பெருக்கத்துக்கு காரணங்களாகி வருகின்றன. இதற்கும் குப்பத்து அடித்தட்டு மக்களுக்கும் அதிக சம்பந்தம் இல்லை. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் எல்லா நடுத்தரக் குடும்பங்களும், குப்பைகளைக் கலந்து கட்டி, தெருக்களில் உள்ள குப்பைத் தொட்டிகளின் மேல் அபிஷேகம் செய்து விடுகின்றனர்.

நூற்றுக்கணக்கான குப்பை சேகரிப்பவர்கள், சிறுவர்கள் குப்பைத்தொட்டிகளைச் சரித்துக் கொட்டி, விலைபோகும் பொருள்களைப் பிரித்தெடுத்துக் கொள்கிறார்கள். இவ்வகைத் தொழில்தான் குப்பை வளாகங்களிலும் இரவு பகலாக நடக்கிறது.

சூப்பர் மார்க்கெட்டுகள், திருமண மண்டபங்கள், கையேந்தி பவன்கள், டாஸ்மாக் பார்கள், கசாப்புக் கடைகள், இளநீர் கடைக்காரர்கள், விடுதிகள் என்று எல்லா வியாபாரிகளும் மழைநீர் வடிகால்வாய்களை குப்பைத் தொட்டிகளாக உபயோகிப்பதே நடைமுறை உண்மை.

மாநகராட்சிகளுக்கு உண்மையான அக்கறையிருந்தால், இவ்வகை வியாபாரிகளிடமும், நடுத்தர மேல்தட்டு மக்களிடமும் தான், குப்பை குறைப்பு மற்றும் குப்பை பிரிப்பு போன்ற திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளை “சட்டமாக’ இயற்றி, போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.

மேலும் ஒப்பந்தப் பணியாளர்களோ, நகராட்சிகளில் வேலை செய்யும் பணியாளர்களோ, கையுறை, காலணி இல்லாமல் தான் துப்புரவுப் பணி செய்கிறார்கள். மழைநீர் வடிகால்வாய்களில், தகுந்த பாதுகாப்பு கையுறைகள், காலணிகள் அளிக்காமல், சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு தூர்வாரக் கூடாது என்று உயர் நீதிமன்றம் தடை செய்து இரண்டு வருடங்களாகின்றன. ஆயினும் நீதிமன்ற ஆணையை சற்றும் மதிக்காமல் மழைக்குப் பின்னால்கூட, நூற்றுக்கணக்கான மாநகராட்சிப் பணியாளர்கள், எந்தவிதப் பாதுகாப்பும் இன்றியே, நாற்றம் பிடித்த மழைநீர் வடிகால்வாய்களில் இறங்கி தூர்வார பணிக்கப்பட்டார்கள்.

ஆயிரக்கணக்கான வியாபார நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் சட்டத்துக்குப் புறம்பாக அவர்களது கழிவு நீர்க் குழாய்களை, மழைநீர் வடிகால்வாய்களுடன் இணைத்திருப்பது, தமிழகம் முழுவதுமே நடந்து வரும் விஷயம். நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும் இந்நிலையை மாற்றுவதற்கு முனைப்பான செயல்பாடு நிர்வாகங்களிடம் இல்லை.

சென்னையைச் சுற்றி பல வீடுகளிலும், நிறுவனங்களிலும், ஆலைகளிலும் இருந்து லாரி, பம்புகள் மூலம் அப்புறப்படுத்தும் கழிவு நீரை, ஒப்பந்ததாரர்களில் சிலர், சோம்பேறித்தனத்தினாலோ, டீசல் மிச்சம் பிடிக்க வேண்டியோ, சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லாமல், கூவத்திலோ அல்லது அருகிலுள்ள ஓடைகளிலோ, சப்தம் போடாமல் விட்டு விடுகின்றனர். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும், அரைகுறையாக சுத்திகரிப்பு செய்த சாக்கடை நீரை மீண்டும் நீர்நிலைகளிலேயே விட்டுவிடுகின்றன.

கடந்த 20 ஆண்டுகளாக ஒருமுறை உபயோகித்துவிட்டு தூக்கி எறியும் மெல்லிய பாலித்தீன் பைகளின் உபயோகம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. 2002-ம் ஆண்டு, 20 மைக்ரானுக்குக் குறைவான மெல்லிய பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் தட்டுகள் போன்ற சுற்றுச்சூழலைக் கெடுக்கும் பொருள்களைத் தடை செய்யும் மசோதா ஒன்று அன்றைய தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால் இவ்வகை பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டோரின் மிகைப்படுத்தப்பட்ட எதிர்ப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல், அந்த மசோதா திரும்பப் பெறப்பட்டது. இன்று எல்லாக் கோயில்களிலும், அர்ச்சனைகள்கூட கடவுள்களுக்கு பிளாஸ்டிக் பைகளில் வைத்துச் செய்யப்படுகிற அளவுக்கு மக்களிடம் விழிப்புணர்வு மங்கி விட்டது.

ஒவ்வோர் ஆண்டும், சென்னையில் மழைக் காலங்களில் நீர் வடியாமல் எல்லோரும் அவதிக்குள்ளாவதற்கு, இவ்வகை பாலித்தீன் பைகள், பொருள்கள், மழை நீர் வடிகால்வாய்களை அடைத்துக் கொள்வதே காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். எல்லா நீர் நிலைகளிலும் இவ்வகை பாலித்தீன் பைகள் மிதந்து கொண்டும், அடைத்துக் கொண்டும் உள்ளன. எவ்வளவு கோடிகளை, மலேரியாவைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு செலவழித்தாலும், இந்நிலை நீடித்தால், பருவம் தவறாமல், தாக்கும் மலேரியா, சிக்குன் குனியா, யானைக்கால் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முடியாது. இவையெல்லாம், கீழ்த்தட்டு மக்களையும், அவர்களது குழந்தைகளையுமே அதிக அளவில் பாதிக்கின்றன.

பஞ்சாப், கோவா, மேற்கு வங்கம், தில்லி, ஒரிசா போன்ற மாநிலங்களில் 40 மைக்ரான் தடிமனுக்குக் கீழ் உள்ள பாலித்தீன் பைகள் தடை செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தில் 50 மைக்ரானுக்குக் குறைவாகவும், இமாசலப் பிரதேசத்தில் 70 மைக்ரானுக்குக் குறைவாகவும் தடிமன் உள்ள பைகள் தடை செய்யப்பட்டுள்ளன. வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளில்கூட, அதிரடியாக 150 மைக்ரானுக்குக் குறைவான பாலித்தீன் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் வங்கதேசம், வேலை இழப்பிற்குப் பதில், புதிதாக ஆயிரக்கணக்கான சணல், மூங்கில் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் நிரந்தர வாழ்வாதாரம் உருவாகி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

உலக அளவில் கட்டட வல்லுநர்களுக்கு போட்டி வைத்து, கோயம்பேடு காய்கனி வளாகம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு அது எங்கு திரும்பினாலும், அழுகிய குப்பை வளாகமாகவும், திறந்தவெளிக் கழிப்பிடமாகவுமே காட்சியளிக்கிறது. காய்கனிக் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயார் செய்யும் திட்டம்கூட இன்றைய அளவில் செயலற்று உள்ளது.

தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவுகள், சாயப்பட்டறைக் கழிவுகள் ஆகிய பிரச்னைகளுக்கு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் சரியான நீண்ட காலத் தீர்வுகள் எட்டப்படவில்லை. கடலூர், மேட்டூர் போன்ற நகரங்களில் உள்ள நிறுவனங்களால், நிலத்தடி நீரும், காற்றும் பாழ்பட்ட நிலை ஆகிய எதிலுமே தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அரைகுறை நடவடிக்கைகளினால், எந்த மாற்றமும் நிகழவில்லை. இன்றுவரை, மாசுக்கட்டுப்பாடு வாரியம், பல் பிடுங்கப்பட்ட பாம்பாகவே காட்சியளிக்கிறது.

கூவத்தை இனி சுத்தம் செய்வதற்கு வேண்டுமானால் சாய்பாபாவிடமிருந்து நிதி வேண்டியிருக்கலாம். ஆனால் கூவமும், தமிழகமெங்கும் இருக்கும் ஓடைகளும், நீர்நிலைகளும், ஆற்றுப்படுகைகளும் நிலத்தடி நீரும் இன்னும் பாழ்படாமல் தடுப்பதற்குத் திட்டங்களைத் துரிதப்படுத்த வேண்டும்.
அ. நாராயணன்
தினமணி

தினமும் தேநீர் குடியுங்கள்: இதய நோயைத் தவிர்க்கலாம்

தினமும் தேநீர் குடியுங்கள்: இதய நோயைத் தவிர்க்கலாம்

தினமும் 3 கோப்பை தேநீர் குடித்தால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

முக்கியமாக டீ குடிப்பது மாரடைப்பு ஏற்படுவதை பெருமளவுக்கு தடுக்கிறது.

டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஏற்கெனவே பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது பிரிட்டனைச் சேர்ந்த உணவு முறை வல்லுநர் குழுவின் தலைவர் டாக்டர் கேரி ரக்ஸ்டன் ஆய்வு மேற்கொண்டு, டீ குடித்தால் இதய நோய்க்கான வாய்ப்பு குறைகிறது என்று கண்டறிந்துள்ளார்.

பிரிட்டனிலிருந்து வெளியாகும் டெய்லி மெயில் பத்திரிகையில் இது குறித்து அவர் கூறியுள்ளது:

தினமும் 3 கோப்பை டீ குடிப்பது உடல் நலத்துக்கு ஏற்றது. இது தவிர இதய நோய் முக்கியமாக மாரடைப்பு வரும் வாய்ப்பும், வலிப்பு நோய் பாதிப்புக்கான வாய்ப்பும் குறைகிறது.

தினமும் 2 கோப்பைக்கு அதிகமாக டீ குடிக்கும் நபருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு 21 சதவீதம் குறைகிறது.

ஏற்கெனவே பிரான்ஸில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தினமும் டீ குடித்து வந்த பெண்ணுக்கு 32 சதவீதம் வரை இதய நோய் வர வாய்ப்புகள் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஆய்வில் தினமும் 3 கோப்பைகளுக்கு மேல் டீ குடிப்போருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு 70 சதவீதம் அளவுக்கு குறைவது தெரியவந்துள்ளது.

டீ குடிப்பது கோப உணர்ச்சியையும், மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதயத்தில் ரத்தக் கட்டு ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் ரத்தக்குழாய்களை சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இது தொடர்பாக நாங்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என்றார் கேரி ரக்ஸ்டன்.

இனி நண்பர் டீ குடிக்க அழைக்கும் போது மறுக்காமல், உடன் செல்வது உடல் நலத்துக்கும் நல்லது.