டிஸ்க் டிக்கர்

டிஸ்க் டிக்கர்

எத்தனை முறை பைல்களைக் கையாளும் விதம் குறித்தும் அவற்றை அழிக்கும் முன் எச்சரிக்கையாகச் செயல்படுங்கள் என்று எழுதினாலும் பல வாசகர்கள் தாங்கள் தெரியாமல் ஒரு சில பைல்களை அழித்துவிட்டோம்; எப்படியாவது அவற்றைப் பெற உதவிடுங்கள் என்று கடிதங்கள் எழுதுகின்றனர்.

இந்த மலரில் அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு உதவிடும் புரோகிராம்கள் குறித்து பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.

சில வாரங்களுக்கு முன் ரெகுவா என்று ஒரு அழித்த பைல்களை மீட்டுத் தரும் புரோகிராம் பற்றி எழுதி இருந்தோம். இதோ இன்னொரு பயனுள்ள புரோகிராம்:

டிஸ்க் டிக்கர் (Disk Digger) கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் மட்டுமின்றி பிளாஷ் டிரைவ், டிஜிட்டல் கேமரா மெமரி மற்றும் பிற மெமரி மீடியாக்களில் அழித்த பைல்களையும் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.

மீண்டும் பார்மட் செய்யப் பட்ட அல்லது சரியாக பார்மட் செய்யப்படாத டிஸ்க்குகளில் இருந்தும் பைல்களை மீட்டுத் தரும் என்பது கூடுதல் சிறப்பு. Disk Digger ஒரு இலவச புரோகிராம். விண்டோஸ் இயக்கத்தில் இயங்குகிறது. இதனை உருவாக்கியவர் டிமிட்ரி ப்ரையண்ட் என்பவர். இது ஓர் அளவில் சிறிய எக்ஸிகியூட்டபிள் புரோகிராம்.

ஒரு ஸிப் பைலுக்குள்ளாகக் கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இதன் எக்ஸிகியூட்டபிள் பைலை இயக்கி எந்த டிரைவினை ஸ்கேன் செய்திட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.

அழிந்த பைல்களை மீட்டுத் தர இரு வழிகள் தரப்பட்டுள்ளன. ஆழமாக (“dig deep”) டிரைவ்களில் மூழ்கி அழிக்கப்பட்ட பைல்களைத் தேடுதல். இந்த வகையில் முழு டிரைவும் ஸ்கேன் செய்யப்பட மாட்டாது. விண்டோஸ் இயக்கத் தில் நாம் அதிகம் புழங்காத பைல் வகைகளை விட்டுவிடும்.

அதிக ஆழமாகத் தேடும் வகையில் இந்த புரோகிராம் அழித்த பைல் குறித்த தகவல்களைப் பெறும். ஆனால் பைலின் பெயரைப் பெற்றுத் தராது. எந்த எந்த அழிக்கப்பட்ட பைல்களை மீண்டும் பெற முடியும் என்று அதன் பெயர்கள் அல்லது தானாக அமைந்த பெயர்கள், உருவாக்கப்பட்ட தேதி, எடிட் செய்யப்பட்ட தேதி, பைலின் அட்ரிபியூட்ஸ் என்று சொல்லப் படுகிற பைலின் தன்மை, அதன் அளவு ஆகியவை பட்டியலிடப் படும்.

இந்த பட்டியலைப் பார்த்து இன்னும் அந்த பைலில் டேட்டா பத்திரமாக உள்ளதா என அறிந்து கொள்ளலாம். பின் அந்த பைல் அல்லது பைல்களைத் தேர்ந்தெடுத்து Restore selected file(s)” என்ற கட்டளை கொடுக்கலாம். அதன் பின் எந்த டைரக்டரியில் இந்த பைல்களை வைத்திட வேண்டும் எனத் தேர்ந்தெடுத்து கட்டளை கொடுத்தால் பைல்கள் மீட்கப்பட்டு நமக்குக் கிடைக்கும்.

இந்த புரோகிராமினை இலவசமாகப் பெற http://dmitrybrant.com/diskdigger என்ற முகவரிக்குச் செல்லவும்.

எக்ஸெல் – ஷிப்டிங் செல்ஸ்

எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றில் டேட்டாவினை அமைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கையில் சந்தோஷமாக அதனை முடிக்கும் வேளையில் மீண்டும் ஒரு சில தகவல்கள் வருகின்றன. அந்த டேட்டாக்களை ஏற்கனவே அமைக்கப்பட்ட செல்களின் ஊடாக அமைக்க வேண்டும். இந்த டேட்டாவிற்கு என புதிய வரிசைகளை இன்ஸெர்ட் செய்தால் மற்ற நேரான டேட்டா மாறிவிடும்.

அப்படியானால் நெட்டு வரிசையில் மட்டும் நமக்கு இரு செல்களை இணைக்க வேண்டும் என்றால் என்ன செய்வது?

இணைக்க வேண்டிய இடத்தின் கீழாக உள்ள செல்களில் உள்ள டேட்டாவினை மொத்தமாக செலக்ட் செய்து அப்படியே கீழே இழுக்கலாமா? இதுவும் பிரச்சினையில் முடியும். ஏனென்றால் பெரிய அளவில் டேட்டா இருந்தால் சிக்கல்தானே.

இதற்கான தீர்வினை எக்ஸெல் கொண்டுள்ளது. டேட்டாக்கள் அமைக்கப்பட்ட செல்களின் ஊடாக மேலும் டேட்டாவினை அமைக்க காலி செல்களைத் தருகிறது. செல்கள் மட்டுமே தருகிறது. முழு வரிசைகளை அல்ல. அருகில் உள்ள படத்தைப் பாருங்கள்.

நெட்டு வரிசையில் ஒருசெல் மட்டும் இடையே செருகப் பட்டுள்ளது. இதனால் மற்ற வரிசைகள் பாதிக்கப்படவில்லை. இது எதற்குப் பயன் படுகிறது என்று பார்க்கலாம். முதலில் உங்களுக்கு ஏற்கனவே டேட்டாக்களுடன் அமைந்த செல்களில் சில வற்றை மாற்ற வேண்டும் என்ற தேவை ஏற்பட வேண்டும்.

பின் சரியாக எத்தனை செல்கள் நகர்த்தப்பட வேண்டும் என்று கண்டறிந்து குறிக்க வேண்டும். இதன் பின் எத்தனை செல்கள் காலியாகத் தேவை என நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.

எந்த செல்கள் காலியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் இன்ஸெர்ட் மெனு செல்லவும். அதில் செல்ஸ் என்பதைத் தேர்ந் தெடுக்கவும். அல்லது இதற்குப் பதிலாக கண்ட்ரோல்+ ஷிப்ட்++ (கூட்டல் அடையாளம்) அடுத்து இன்ஸெர்ட் விண்டோ கிடைக்கும். அதில் பல ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும்.

செல்களை வலது புறம் அல்லது கீழாக நகர்த்த ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதற்கும் கீழே முழு நெட்டு வரிசை அல்லது முழு படுக்கை வரிசையையும் மாற்றிட ஆப்ஷன்ஸ் இருக்கும்.

எந்த மாதிரியான ஷிப்ட் தேவை என நீங்கள் திட்டமிடுகிறீர்களோ அதற்கான வரியைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும். உடனே உங்களுக்குத் தேவையான காலி செல்கள் மற்ற டேட்டாக்களை மாற்றிடாமல் அமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். இதற்கு மாற்று இணையாக செல்களை அழிப்பதற்கு டெலீட் விண்டோவுடன் இதே போன்று ஆப்ஷன்களுடன் விண்டோவும் தரப்படும். அதன் மூலம் செல்களை அழிக்கலாம்.

One response

  1. […] டிஸ்க் டிக்கர் […]

%d bloggers like this: