எல்லாம் பயம் முற்றிப்போனால் ஆபத்து

எல்லாம் பயம் முற்றிப்போனால் ஆபத்து

* சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார் அவர். மரத்தில் இருந்த காகம் , எச்சமிட்டது. அவர் சட்டையில் விழவில்லை. ஆனால், அவரோ, காகம் தன் மீது தான் எச்சமிட்டது என்று, தோள்பட்டை பகுதியில் சட்டையை தேய்த்து தேய்த்து அழுக்காக்கி விட்டார்.

* வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த மற்றவர்கள் எல்லாம் சத்தம் போட்டுபேசிக்கொண்டு சாப்பிடுகின் றனர். ஒருவர் மட்டும் எரிச்சலடைந்து, தனியே எழுந்து போய் அடுத்த அறையில் உட்கார்ந்து சாப்பிடுகிறார்.

* புத்தகத்தை புரட்டும் ஒருவர், அந்த குறிப்பிட்ட எண்ணுள்ள பக்கம் வந்ததும் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு புரட்டி விடுகிறார். கேட்டால், அந்த எண்ணை பிடிக்கவே பிடிக்காது என்கிறார்.

* சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று தரையை தேய்த்து தேய்த்து துடைக்கிறார் அந்த பெண். ஆனாலும் திருப்தி அடையாமல், டப்பாவில் இருக்கும் டெட்டாலை கரைத்து விடுகிறார். அப்படியும் அவருக்கு திருப்தி வரவில்லை.

* அவர் பைக்கில் ஏறவேமாட்டார்; கேட்டால், விபத்தாகி விடுமாம். நடந்து போகும் போது, நூறு தடவையாவது திரும்பிப்பார்த்தபடி தான் செல்வார். ஏதாவது வாகனம் வருகிறது என்றால் ஒதுங்கி தள்ளி நின்று, பின் செல்வார்.

இதெல்லாம் பார்ப்பதற்கு சாதாரணமாகத்தான் தோன்றும். ஆனால், இது தான் “போபியா’ என்ற கோளாறு. போபியா என்பது மருத்துவப்படி சொன் னால், மனதில் எழும் கவலை,பதட்டம், அர்த்தமில்லா பிடிவாதம்.

போபியா என்றால்…

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை, பொருள் காரணமாக மனதில் எழும் கற்பனை அச்சம். அதுவே அதிகமாகி, கடைசியில்கோளாறாகி விடுகிறது. குறிப்பிட்ட பொருளை பார்த்தாலோ, சூழ்நிலை நேர்ந்தாலோ அச்சம் ஏற்படுகிறது.

போபியா என்பது வியாதியல்ல. ஆனால்,அதனால் ஏற்படும் விளைவுகளால் வேறு பாதிப்புகள் வர வாய்ப்பு அதிகம். ஆண்களை விட, பெண்களுக்கு தான் அதிக வாய்ப்பு உள்ளது. காரணம்,பெண்களுக்கு அடிப்படையிலேயே பய உணர்வு அதிகம்.

ஐந்து வயதில் ஆரம்பம்

சில வகை போபியாக்கள், பரம்பரையாக தொடர் கிறது. கரப்பான் பூச்சி, பல்லி உட்பட பூச்சிகளை பார்த்து பயப்படுவதை இதற்கு உதாரணமாக கூறலாம். இப்படிப்பட்ட போபியா, குழந்தைப்பருவத்திலேயே ஆரம்பித்து விடுகிறது.

ஐந்து வயதில் போபியா ஆரம்பிக்கும். பூச்சிகளை பார்த்தால், இருட்டை பார்த்தால், யாராவது அதிர்ந்து பேசினால், குழந்தைகள் பயப்படும். பள்ளியில் முரட்டுத்தனமான வாத்தியாரை பார்த்தால் பிடிக்காது. வாகன சத்தம் பிடிக்காது. இதுபோன்ற விஷயங்களில் அடிக்கடி பயம் ஏற்பட்டால், டாக்டரை பார்த்து விடுவது தான் நல்லது.

அறிகுறிகள் இதோ

* குறிப்பிட்ட பொருளை பார்த்தால், சூழ்நிலை ஏற்பட்டால் பதட்டம்; பயம்.

* நெஞ்சு படபடப்பு, மூச்சு திணறல் ஏற்பட்டு வியர்த்துக்கொட்டும்.

* மனதில் தொடர்ந்து சோர்வு ஏற்படும். கை, கால்கள் நடுங்கும்.

* வாந்தி வருவது போல தோன்றும்; நாக்கு குழறும்.

* இதன் இறுதிக்கட்டமாக, மன அழுத்தம் ஏற்படும்.

இந்த அறிகுறிகள் ஏற்பட்டால், மனோதத்துவ டாக்டரிடம் செல்வது நல்லது. அவர் பரிசோதித்து விட்டு, போபியாவை கண்டுபிடித்து விடுவார். மனதில் தைரியம், நம்பிக்கைளை வளர்த்துக் கொள்ள “கவுன்சலிங்’ செய்வார்.

வாழ்க்கையை கவிழ்க்கும்

சாதாரண விஷயத்தில் ஆரம்பித்து, கடைசியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடும். பல்வேறு காரணங்களால், மூளையில் ரசாயன மாற்றம் ஏற்பட்டு, போபியா ஏற்படுகிறது. பெண்களை பொறுத்தவரை, சிலவகை சுரப்பிக் கோளாறு கூட போபியாவுக்கு காரணமாகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போபியாவுக்கு மூளையில் உள்ள குறிப்பிட்ட செல்தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், அதை நீக்க வழியில்லாமல் நிபுணர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதை தடுக்காவிட்டால், வாழ்க்கையில் பலபாதிப்புகள் தொடரும் ஆபத்து உண்டு.

சில விசித்திர போபியா

நாய், பூனை அருகே வந்தாலோ ,நாவால் நக்கி னாலோ அமிகோபோபியா; தனிமையில் இருந்தால் அனுப்டாபோபியா; கம்ப்யூட்டர் பார்த்தால் சைபர் போபியா, சாப்பிடும் போது பேசினால் டைனோபோபியா, இருட்டை பார்த்தால் லைகோபோபியா, நிலவை பார்த்தால் செலனோபோபியா…இப்படி 700க் கும் மேற்பட்ட போபியாக்கள் உள்ளன.

பெரும்பாலான போபியாக்களை போக்க தெரபிக்கள் வந்துவிட்டன; டாக்டர் கவுன்சலிங் செய்தால் போதும். சிலவற்றுக்கு மட்டும் மருந்துகள் உள்ளன.

பூச்சாண்டி பயம்

குழந்தை பருவத்தில் குழந்தைகளுக்கு நம்பிக் கையை ஊட்டி வளர்க்க வேண்டும். பூச்சாண்டி வருவான் என்று பயமுறுத்தி சாப்பிட வைத்தால், அதுவே பல வித ஆட்களை கண்டால் பயப்பட ஆரம்பிக் கும். போபியாவுக்கு அடித்தளம் இது தான். சிறிய வயதில் இருந்தே , பயத்தை ஏற்படுத்தி வளர்க்கவே கூடாது. எதைக்கண்டாலு<ம் பயம் என்ற நிலையை மாற்ற வேண்டும். மூட நம்பிக்கை கூட இந்த பாதிப்புக்கு ஒரு முக்கிய காரணம். விழிப்புணர்வை ஏற்படுத்தி, மனதளவில் திடசாலியாக்க வேண்டும்.

அப்புறம் என்ன போபியா ஓட்டம் பிடிக்கும்.

%d bloggers like this: