காலையும் கவனிங்க!-கண்டதை அணிந்தால் காலாணி = டயபடீஸ் இருந்தால் கால் அல்சர்

காலையும் கவனிங்க!

கண்டதை அணிந்தால் காலாணி = டயபடீஸ் இருந்தால் கால் அல்சர்

கசங்காத பேன்ட், சட்டை அணிவதில், தலையை வாரிக் கொள்வதில் உள்ள அக்கறையை பலரும் கால்களில் அணியும் செருப்பு மீது செலுத்துவதில்லை.

கால் ஆணி, கால் கழலை முதல் கால் அல்சர் வரை பல பிரச்னைகளும் காலில் தான் ஏற்படுகின்றன. இதை பலரும் மறந்து விட்டு, பிரச்னை வந்தால் மட்டும் டாக்டரிடம் ஓடுகின்றனர். காலில் இரண்டு காரணங்களால் தான் பிரச்னை வரும்; ஒன்று, காலை சுத்தமாக வைக்காமல் இருந்தால் கோளாறு ஏற்படும்; பொருந்தாத செருப்பு, காலுறை அணிந்தால் காலாணி போன்றவை ஏற்படும். சர்க் கரை நோய் உள்ளவர்களுக்கு, நோயின் வீரியத்தை பொறுத்து கண் பார்வை பாதிக்கப்படுவது போல, காலில் அல்சரும் வரும்.

“ஹை ஹீல்ஸ்’ லொள்ளு

நமக்கு பொருத்தமான செருப்பு, ஷூ எது என்பதை நாம் சரியாக தேர்வு செய்யாமல் இருப்பதால் தான் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அதிக அழுத்தம் இல்லாமல் இருந்தாலே போதும்; அப்படிப்பட்ட செருப்பை அணியலாம். காலில் உராய்வு அதிகமானால், காலாணி வருவது நிச்சயம். பெரும்பாலும் ஆண்களை விட, இளம் பெண்களுக்கு தான் காலாணி பிரச்னை வருகிறது. ஹை ஹீல்ஸ் ரக செருப்பு அணிவதால் அவர்களுக்கு உராய்வு அதிகம். குறைந்த இடத்தில் செருப்பில் காலை நுழைத்து நடக்க வேண்டியிருக்கிறது. ஆனால், இதை இளம் வயதினர் புரிந்து கொள்வதில்லை.

கால் கழலை ஏன்?

காலாணி போல சிலருக்கு தொந்தரவு தருவது கால் கழலை பாதிப்பு. அதாவது, காலில் காய்த்துப் போன தோல் பகுதியை தான் இப்படி கூறுவதுண்டு. கோடை காலத்தில் இதனால் பிரச்னை இருக்காது; மழைக்காலத்தில் புண் ஏற்பட்டு, பாதிப்பு அதிகமாகும். மிருதுவான செருப்பு அணியாமல், அழுத்தம் அதிகம் தரும் செருப்பு அணிவதால் தான் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதுவும் பெண்களுக்கு தான் அதிகம் வரும். உயிரற்ற தோல் பகுதிகள் திரண்டு இப்படி காய்த்துப்போகிறது. அந்த பகுதி தடித்து, மரத்து போகிறது. இது உடனே கவனித்து விட்டால் பிரச்னை பெரிதாகாது.

நல்ல செருப்பு எது

இப்போதெல்லாம் நாகரிகமான செருப்பு, ஷூக்களை வாங்குகின்றனரே தவிர, காலுக்கு ஏற்றது எது என்பதை பார்த்து வாங்குவதில்லை. காலாணி ஏற்பட இதுவும் காரணம். சாதாரணமாக தடித்துப் போனாலோ, லேசாய் சிராய்ப்பு ஏற்பட்டாலோ யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால், பெண்களை பொறுத்தவரை, சிறிய உராய்வும் பாதிப்பை ஏற்படுத்தும். அவர்கள், பெரிய ஹீல் உள்ள செருப்பை அணிந்தாலும், பொருத்தமானவதை தேர்ந்தெடுக்க வேண்டும். அழகுக்காக தேர்வு செய்வதை விட, காலுக்கு ஆரோக்கியமானதாக இருப்பதாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

நடக்க முடியலியே

சிலர் “வெரிகோஸ்’ பாதிப்பு காரணமாக நடக்க முடியாமல் சிரமப்படுவர்; நீண்ட நேரம் நிற்பதில் கூட கஷ்டம் இருக்கும். காலில் நரம்பு புடைத்துக் கொள்ளும் பாதிப்பு தான் இது. இதன் பாதிப்பை தடுக்க, இறுக்கமான காலுறை அணியலாம்; முழங்கால் வரை காலுறை அணிந்தால், ரத்த ஓட்டம் சீராக இருக்கும். பாதிப்பு குறையும். சில கிரீம்களும் இப்போது விற்கப்படுகின்றன. அதை தடவலாம். காலில், கட்டை விரல் நகம் உடைந்தோ, போதுமான அளவில் வளராமலோ இருந்தாலும், கால் வலிக்கும். நடக்க முடியாது. அதற்கு தீர்வு காண அறுவை சிகிச்சை வரை உள்ளது.

காலை கடிக்கிறதே

சில செருப்பு தான் காலை கடிக்கும். எந்த வகை செருப்பு வாங்கினாலும், பொருத்தமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். முன்பக்கம் குறுகலாகவோ, காலை விடும் போது குறைவான இடமே உள்ள நிலையில் உள்ள செருப்பை வாங்கி அணியக்கூடாது. விரல்களை நுழைத்து நடக்கும் போது, உராய்வு காரணமாக காலில் சிராய்ப்பு ஏற்படும். இதைத் தான் காலை கடிக்கிறது செருப்பு என்று சொல்கின்றனர். செருப்பு எங்கே கடிக்கிறது; நாம் தான் சரியான செருப்பை தேர்வு செய்யவில்லை என்று உணர வேண்டும்.

தோலில் வெடிப்பு

சர்க்கரை நோய் பிரச்னை உள்ளவர்களுக்கு தான் கால் வெடிப்பு ஏற்படும். இதை தடுக்கவும் ஆயின்ட் மென்ட், லோஷன்கள் உள்ளன. பதினைந்து நிமிடம் வரை, வெது வெதுப்பான நீரில் கால்களை நனைக்கலாம். காய்ந்து போன தோல் பகுதிகள் நீங்கி விடும். சர்க்கரை நோயாளிகளுக்கு தொற்று கிருமிகளால் புண் ஏற்படலாம். காலில் வியர்வை தங்குவதால் இப்படி நேரலாம். பொது கழிப்பறையை பயன்படுத்துவதால் அங்குள்ள தொற்று கிருமிகளும் காரணமாக இருக்கலாம்.

வியர்வை காலா

சிலருக்கு வியர்வை கால்களாக இருக்கும். ஷூ அணிந்தால், கால் வியர்வை அதிகமாகி, காலுறை நாற்றம் எடுக்கும். இதை தடுக்க, இவர்கள், காலில் காலுறையை போடும்போதே, அதிலும், காலிலும் முகப்பவுடரை தெளிக்கலாம். அப்போது நாற்றம் வராது. பொதுவாக ஷூ அணியும் போது, அதிக பட்சம் 6 மணி நேரம் தொடர்ந்து காலில் போடலாம். அவ்வப் போது கழற்றி வைப்பது நல்லது. இல்லாவிட்டால், இதுபோன்ற பாதிப்பு ஏற்படும்.

%d bloggers like this: