Monthly Archives: ஜூலை, 2009

நவீன நீர்க் கொள்ளையர்கள்

இந்தியாவின் விவசாயப் பாரம்பரியம் சிந்து நதி நாகரிகத்துடன் தொடர்புள்ளது. அண்மைக்காலக் கல்வெட்டு எழுத்தியல் ஆய்வுப்படி அது திராவிட பாரம்பரியம் என்றும் சொல்லப்படுகிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துநதி வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி உணவை உற்பத்தி செய்து, நூலில் நெய்யப்பட்ட உடை தரித்து வாழ்ந்த இந்தியத் திராவிடர்கள் நாகரிக மிதப்பில் வாழ்ந்தபோது, ஐரோப்பிய மனித இனம் காட்டுமிராண்டிகளாகவும், நரமாமிசம் உண்போராகவும் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே தலைசிறந்த நீர்நிர்வாகத்தை இந்திய மன்னர்கள் மேற்கொண்டதாக வரலாறு கூறுகிறது. “”வெள்ளாளர்” என்ற சாதிப்பெயர் உண்மையில் ஒரு தொழில்பெயரே. வெள்ளத்தைத் தடுத்து விவசாயம் செய்யக்கூடிய தொழில்நுட்ப விளைவால்தான் மேட்டில் ஓடும் நதியைக் கால்வாய் மூலம் ஒரு ஏரியில் சேமித்து நிறைந்ததும், பள்ளத்தில் உள்ள அடுத்த ஏரிக்கு வடியவிட்டுப் பின் அடுத்த ஏரி, அடுத்த ஏரி என்று ஏரிகளின் சங்கிலிப்பிணைப்பு உருவானது.

உதாரணமாக மதுராந்தகம் ஏரி மிகப்பெரியது. அந்த ஏரிக்கு சுமார் மேற்கு திசை மேட்டுப் பகுதியில் உள்ள 20 ஏரிகள் (சிறியவை) நீர் வழங்குகின்றன. சில ஏரிகள் இயல்பான பள்ளங்கள். சில ஏரிகள் மனிதனால் வெட்டப்பட்டவை. தமிழ்நாட்டில் ஏராளமான ஏரிகள் சோழர்காலம் – பின்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் உருவாக்கப்பட்டதாகச் செப்பேடுகள் கூறும். நீர்த்தேக்க வரலாற்றில் கரிகாலன் கட்டிய கல்லணை, தாஜ்மகாலைவிட உயர்வான உலக அதிசயம். வெள்ளநீர்த் தடுப்புக்குக் கொள்ளுமிடம் கொள்ளிடமாவதெல்லாம், கல்லணையின் பழைய கட்டுமானங்களைக் கவனித்தால் புரியும். காவிரி முக்கொம்பில் பிரிந்து, ஸ்ரீரங்கத்தை ஒரு தீவாக்கி கல்லணையில் கலந்து, கொள்ளிடமாகவும் வெண்ணாறாகவும் காவிரி வெள்ளம் திருப்பிவிடப்படுகிறது.

1925 காலகட்டத்தில் காட்டன் துரையால் கல்லணையில் வெண்ணாறிலிருந்து புது ஆறு வெட்டப்பட்டு புதிய டெல்டாப் பகுதி தஞ்சை-ஒரத்தநாடு-பட்டுக்கோட்டை-பேராவூரணி-அறந்தாங்கி வட்டங்களில் உருவாகி, தஞ்சை நெற்களஞ்சியம் விரிவானது. ஒரு அகண்ட காவிரி பழைய டெல்டாப் பகுதியான திருவையாறு – சுவாமிமலை – குடந்தை – மயிலாடுதுறை கடந்து பூம்புகாரில் ஒரு சிற்றாறாகிக் கடலில் கலக்கிறது.

மேட்டிலிருந்து பள்ளத்திற்கு வரும் நதிநீரை ஆங்காங்கே தேக்கி முழுப்பயனையும் பெற்ற பெருமை இன்று நேற்றல்ல, சங்க காலத்திலிருந்து இன்றும் நீடித்து வருகிறது.

நெல் விளைந்த தஞ்சைத் தரணியில் மக்காச் சோளமும் கரும்பும் ஊடுருவியுள்ளது. நஞ்சையைப் புஞ்சை உயர்த்தித் தென்னை நடவும் செய்கின்றனர். இந்தப் பிரச்னை ஒருபுறம் இருக்கட்டும். நமது பாரம்பரிய நீர் நிர்வாகத்தில் என்ன குறை உள்ளது? இப்போது இந்தியா முழுவதும் ஏ.சி. அறையில் அமர்ந்தபடி விவசாயம் – நீர் நிர்வாகம் செய்யும் மேல்நிலை விஞ்ஞானிகளின் புலம்பல் எதுவெனில் “வாட்டர் ஷெட்’… “வாட்டர் ஷெட்’… “வாட்டர் ஷெட்’. ஆங்கிலத்தில் ‘ரஹற்ங்ழ் நட்ங்க்’ தமிழில் “நீர் வடிமுனை மேம்பாடு’.

இது இந்தியாவுக்கு வந்த கதை தெரியுமா?

1980-களில் வேளாண்மை அமைச்சரகச் செயலாளராக இருந்த ஒரு வேளாண் விஞ்ஞானி அமெரிக்காவில் உள்ள டென்னசி மலைப்பள்ளத்தாக்கைப் பார்வையிட்டபோது அங்குள்ள மலைச்சரிவு வடிகால் மழை சேமிப்புக் கட்டமைப்புகளைக் கவனித்து அதே முறையை இந்தியாவில் அறிமுகம் செய்ய விரும்பினார். விரும்பியதோடு நிற்கவில்லை. செயல்படுத்தியும் விட்டார்.

அமெரிக்காவில் உள்ள புவியியல் – பருவச் சூழ்நிலையில் தொடர்மழைப்பொழிவு உள்ள சூழலுக்கு அது சரி. இந்தியாவில் உள்ள வறட்சி சூழ்நிலைக்கு ஆண்டில் மூன்றுமாதம் மட்டும் சுமார் 100 மணிநேர மழைப்பொழிவுள்ள இடங்களுக்கு இந்தக் கட்டுமானங்கள் பொருந்தாது. எதற்குத்தான் அமெரிக்க மாதிரிகளைச் செயல்படுத்த வேண்டும் என்பதற்கு விவஸ்தையே இல்லை. அமெரிக்கா என்றால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற தப்பெண்ணம் வளர்ந்துவிட்டது. இந்த டென்னசி நீர்வடிப்பகுதி மேம்பாட்டு மாதிரிகளை 40 முன்னோடித் திட்டங்களாகத்தான் இந்தியாவில் செயல்படுத்தினார்கள். இத்திட்டங்கள் வெற்றியுடன் செயல்பட்டனவா என்பதை ஓராண்டு முடிவில் மதிப்பீடு செய்ய வேண்டும். அவ்வாறு மதிப்பீடு செய்யாமலேயே மேலும் 2000 வட்டாரங்களில் உலக வங்கி உதவியுடன் மறு ஆண்டில் செயல்படுத்தினார்கள்.

காலம் கடந்த நிலையில் விவசாய விஞ்ஞானிகள் மறுப்புத் தெரிவித்தாலும், உலக வங்கிப் பணத்தை அபேஸ் செய்யும் வாய்ப்பு போய்விடுமே என்று அரசு அம்மறுப்புகளை நிராகரித்துவிட்டது. இதனால், “வாட்டர் ஷெட்’ ஒரு தொழிலாகிவிட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள், பஞ்சாயத்துத்தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை / ஆகியவர்கள், இத் தொழிலைச் செய்து வருகிறார்கள். மழைநீரை எந்த அளவு சேமித்தார்கள்?

இதற்கான கட்டுமானச் செலவுக்கு ஏற்ப மழை அறுவடை லாபமா என்ற கேள்விகள் முக்கியமில்லை. இதில் உலக வங்கிப் பணத்தைச் சுடுவதில்தான் தொழில் திறமை உள்ளது. மழைநீர் சேமிப்பு / நீர்வடிப்பகுதி மேம்பாடு போன்ற “வாட்டர் ஷெட்டுகள்’ யாவும் அமெரிக்க இறக்குமதி. ஆனால், இதில் நகைப்புக்கு இடமான விஷயம், அமெரிக்கா இந்திய மாதிரியைப் பின்பற்றுவதுதான்.

அமெரிக்காவில் சில பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய மழைநீர் சேமிப்பு நீர் ஆதாரங்களான ஏரி நீர்ப்பாசனத்தின் “வாட்டர் ஷெட்டுகளை’ ஆய்வு செய்து, மழை நீர் சேமிப்புக்கு அம்மாதிரிகளைச் சிறந்த உத்திகள் என்று போற்றிக் கண்காட்சிகளாக வைத்துள்ளதுடன், அவற்றைப் பின்பற்றவும் திட்டமிட்டுள்ளனர். உதாரணத்திற்கு டெக்சாஸில் உள்ள ஏ.எம். பல்கலைக்கழகத்தில் இம்மாதிரிகளைப் பார்க்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பொதுப்பணித்துறை – வேளாண் பொறியியல் துறை டென்னசிப் பள்ளத்தாக்கு மாதிரியைச் சிறப்பாகக் கருதுகிறது. அமெரிக்காவில் உள்ள நிபுணர்கள் நமது மாதிரிகளை உயர்வானது என்று கூறியும், நமக்குப் புத்தி வரவில்லை. நமது பாரம்பரிய நீர்ப்பிடிப்பு உத்திகளை நமது பொறியாளர்களோ, விஞ்ஞானிகளோ ஒரு நுண்ணறிவுடனும் அக்கறையுடனும் கவனிப்பதில்லை. அப்படியெல்லாம் கவனித்தால் நம்மவர்களுக்கு அமெரிக்கப் பயணங்கள் ஓசியில் கிட்டுமா? “வாட்டர் கேட்டை’ நினைத்துக் கொண்டு அமெரிக்காவின் “வாட்டர் ஷெட்டு மாதிரிகளை’ இறக்குமதி செய்வதன் மூலம், இந்திய விஞ்ஞானிகளும், இந்தியப் பொறியாளர்களும் வாழ்க்கையில் வெளிச்சம் பெறுகிறார்கள். அதுபோதுமே! இது ஒருபக்கம். நவீன நீர்க்கொள்ளையர்கள் யார்? அவர்களிடமிருந்து இவர்களுக்குப் பங்கு வருகிறதா? இந்தக் கேள்விகளுக்கு உலக வங்கியின் வாட்டர் ஷெட் திட்ட ஒருங்கிணைப்பாளர்களால்தான் பதில் கூற முடியும். இருப்பினும் உலக வங்கியின் வடிமுனைப் பகுதிப் பாசன மேம்பாட்டுத் திட்டத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து, நிஜமாக என்னதான் நடக்கிறது என்று கண்டறியும் பணியை மேற்கொண்டுவரும் “ஸ்வராஜ்’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் குமாரராஜாவை சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவரும் ஒரு திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்து விலகியவர் என்ற முறையில், அவர் கூறிய செய்திகள் திடுக்கிட வைத்தன. “சேது சமுத்திரத் திட்டத்தில் தூர்வாரிய மண்ணை எவ்வாறு அளவிட முடியாதோ அதுபோலவேதான் இதுவும்’ என்ற பீடிகையுடன் அவர் கூறியபோது, “”செலவு செய்ததாகக் கணக்கு இருக்கும். ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போட்டு ஒரு கணக்கு. குட்டியைத் தூக்கி ஆட்டில் போட்டு ஒரு கணக்கு” என்று பேச்சைத் தொடங்கினார்.

“தேனெடுத்தவன் புறங்கையை நக்குவான்’. எதில்தான் கையாடல் இல்லை? அதைவிடுங்கள். ஏன் இந்த உலக வங்கி, இவ்வளவு ஊழல் இருந்தும்கூட, விடாப்பிடியாக வாட்டர் ஷெட்டைப் பிடித்துக் கொள்வது ஏன்? இதற்கு நான் பெற்ற பதில்தான் இக்கட்டுரைத் தலைப்பு.

இந்த வாட்டர்ஷெட் அல்லது நீர்வடிப்பகுதி மேம்பாடு என்பதும் மழைநீர் சேமிப்பு என்பதும் ஒன்றுதான். குடிநீர்த்திட்டம் என்றாலும் சரி கூடுதல் பாசன வசதி என்றாலும் சரி போர் போடுவது அதாவது ஆழ்துளைக் குழாய்களை இறக்குவது வாடிக்கையாகிவிட்டது. இவ்வாறு ஆழ்துளைக் குழாய்கள் அமைப்பதை நிறுத்த வேண்டும், மேல்மட்ட நீரைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் கொள்கை. உலக வங்கியின் கொள்கை அதுவல்ல. பாசனப் பகுதியை விஸ்தரித்தல். ஒருபோகம் விளையும் நிலத்தில் பாசன வசதியளித்து இருபோகமாகவோ, மூன்று போகமாகவோ மாற்றுவது. நீர்வடி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ஏரி, குளங்களில் கொள்ளளவு உயர்ந்த பின்னர் ஆழ்துளைக்குழாய் இறக்கும் பணியும் அதிகமாகும்போதுதான் பாசன நிலம் கூடுதலாகும்.

பாசன நிலம் கூடும்போது உணவுப் பயிர்களைச் சாகுபடி செய்யாமல், வர்த்தக நிறுவனங்கள் விரும்பும் மாற்றுப்பயிர் சாகுபடி செய்து, பன்னாட்டு விதை நிறுவனங்களையும் ஏற்றுமதியையும் உயர்த்துவது மறைமுகமான நீர்திருடல். நேரடியான நீர்த்திருட்டு என்பது குடிநீர்த்திட்டம் என்ற பெயரில் பெப்சி, கோகோ கோலா போன்ற மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு வாட்டர் அளிப்பதும் நவீனமான அல்லது நாகரிகமான நீர்க் கொள்ளை.

பெரிய அளவில் பெப்சி, கோகோ கோலா கம்பெனிகளின் அக்வாஃபினா, கின்லே போன்றவை ஒருபுறம். உள்ளூரிலேயே மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் போன்றவையும் ஆங்காங்கே மினரல் வாட்டர் உற்பத்தித் தொழில் நிலையங்களை அமைத்துள்ளனர். பல சுதேசித் தனியார் நிலையங்களும் மினரல் வாட்டர் உற்பத்தி – விற்பனையில் இறங்கிவிட்டனர். அரசாங்கக் குழாய் வழிவரும் குடிநீர் பெரும்பாலும் குளியலுக்கும், துணி துவைக்கவும் பயனாகிறது. நான் வசிக்கும் சின்னாளப்பட்டி போன்ற சின்ன ஊரில்கூட குடிநீர் வியாபாரம் சக்கைபோடு போடுகிறது. 1 லிட்டர் புட்டி முதல் 25 லிட்டர் ரிஃபில் வரை நல்ல விலைக்கு விற்கப்படுகிறது. ஆகவே உலக வங்கியின் மூலதனம் “”வாட்டர் ஷெட்” என்ற பெயரில் மினரல் வாட்டர் விற்பனைக்கு ஊக்கம் அளிப்பதாயுள்ளது.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? என்று பாரதியார் கேட்டால், “1 லிட்டர் அக்வாஃபினா மினரல் வாட்டர் குடித்தால் தணிந்துவிடும்’ என்கிறது உலக வங்கி. “”நமது தேசபக்தியைச் சற்று மூட்டைகட்டி ஓரமாக வைத்துவிட்டு, “எல்லாம் உலகமயமடா’ என்ற தாரக மந்திரத்தை தினம் நூறு தடவையாவது கோஷமிட்டு, அமெரிக்காவை அணைத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று நமது பிரதமர் கூறுகிறார். பாரதியார் புத்தகத்தைக் குப்பையில் போட்டுவிட்டு, “அடிமைவாழ்வே ஆனந்தமடா’ என்று நாம் ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம். வாழ்க பாரதம்.

நமக்கு நாமே…

உலகில் வேறு எங்குமே இல்லாத அளவுக்கு மக்களாட்சித் தத்துவம் கேலிக்கூத்தாக மாற்றப்பட்டிருப்பது நமது இந்தியாவில்தான். நமது அரசியல்வாதிகள், எந்த அளவுக்கு மக்கள் தரும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதற்குத் தமிழக சட்டப் பேரவையின் உறுப்பினர்கள் தங்களுக்குத் தாங்களே ஊதியத்தை உயர்த்திக் கொண்டிருப்பது ஓர் அதிர்ச்சி தரும் எடுத்துக்காட்டு.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம் ஐந்து முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 2005-ல் ரூ. 12 ஆயிரமாக இருந்த அவர்களது ஊதியம் ரூ. 16 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த சில மாதங்களிலேயே மேலும் ரூ. 4,000 அதிகரிக்கப்பட்டு ஊதியம் ரூ. 20 ஆயிரமாக உயர்ந்தது.

அடுத்த நிதியாண்டில் ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்பட்ட ஊதியம் 2008 மே மாதம் மீண்டும் அதிகரிக்கப்பட்டு ரூ. 30 ஆயிரமாகியது. 2009 பிப்ரவரியில்தான் ரூ. 15 ஆயிரம் உயர்வு அளிக்கப்பட்டு, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம் ரூ. 45 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் அன்பழகன் அறிவித்தார். இதோ இப்போது மீண்டும் ஓர் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு மொத்த ஊதியம் ரூ. 50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்து முறை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது என்பது மட்டுமல்ல, நமது சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம் மூன்று மடங்கு அதிகரிக்கவும் செய்திருக்கிறது. இப்படி இத்தனை முறை ஊதிய உயர்வும், இந்த அளவுக்கு ஊதிய அதிகரிப்பும் தமிழகத்தில் வேறு எந்தத் தொழிலிலாவது, நிறுவனத்திலாவது  யாருக்காவது அளிக்கப்பட்டிருக்குமா?

ஓர் அரசு ஊழியருக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டுமானால் சம்பளக் கமிஷன் அமைத்து அதன் பரிந்துரையின்மீது நிதி அமைச்சகம் பல விளைவுகளையும் அலசி ஆராய்ந்து அதற்குப் பிறகு நான்கோ, ஐந்தோ, ஆறோ வருடங்களுக்கு ஒருமுறை ஊதிய உயர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் விஷயத்தில் அப்படி எதுவுமே தேவையில்லை. எப்போதெல்லாம் முதல்வராக இருப்பவருக்கு சட்டப்பேரவை உறுப்பினர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஓர் அறிவிப்பை வெளியிடுவார். அத்தனை உறுப்பினர்களும் கட்சி மனமாச்சரியங்களை மறந்து உற்சாகமாக மேஜையைத் தட்டி வரவேற்பார்கள். இடதுசாரிகள் இந்த விஷயத்தில் சற்று வித்தியாசமானவர்கள். தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திக்கொண்டே ஊதிய உயர்வை ஏற்றுக் கொள்வார்கள்.

இதற்கு முன்பே ஒருமுறை நாம் குறிப்பிட்டிருந்தபடி, தாங்களே தங்களது ஊதியத்தை நிர்ணயித்துக்கொண்டு அதை நிறைவேற்றிக் கொள்ளும் கேலிக்கூத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி விழ வேண்டும். எந்த ஊதிய உயர்வும் அடுத்து வரும் சட்டப்பேரவைக்குத்தான் பொருந்தும் என்கிற நிலைமை ஏற்பட்டால் மட்டும்தான் இப்படிப்பட்ட விபரீதத்திற்கு முற்றுப்புள்ளி விழும்.

ஊதிய உயர்வைவிட அதிர்ச்சி தரும் அறிவிப்பு ஒன்றை இப்போதைய சட்டப்பேரவையின் கடைசி நாள் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார் முதல்வர். சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குத் தனி காலனி அமைக்கப் போவதாகவும், ஒவ்வொருவருக்கும் தலா இரண்டரை கிரவுண்டில் வீட்டு மனை வழங்கப்படும் என்பதுதான் அந்த அதிர்ச்சி தரும் அறிவிப்பு.

முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பு வந்ததுதான் தாமதம், கட்சி மனமாச்சரியங்களை மறந்து நமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவசர அவசரமாக ஒரு கோரிக்கை மனுவில் கையெழுத்துப் போட்டு முதல்வரிடம் கொடுத்துவிட்டிருக்கிறார்கள். கிடைப்பதை வாங்கிக் கொள்வதிலும், உறுதிப்படுத்திக் கொள்வதிலும் அத்தனை அவசரம். என்ன கொடுமை இது?

சோழிங்கநல்லூர் பகுதியில் சந்தை மதிப்புப்படி ஒரு கிரவுண்ட் வீட்டு மனை குறைந்தது அரை கோடி ரூபாய் என்கிற நிலைமை இருக்கும்போது உறுப்பினர்களுக்குத் தலா இரண்டரை கிரவுண்ட் அரசு வழங்குவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியிலும் அதிர்ச்சியான விஷயம். தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளிலிருந்து அங்குள்ள மக்களால் தங்களது தொகுதிப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சென்னையில் வீட்டு மனை ஒதுக்க வேண்டிய அவசியம் என்ன?

மக்கள் சேவையில் (?) ஈடுபடும் உறுப்பினர்களின் குடியிருப்புத் தேவையைப் பூர்த்தி செய்ய அவரவர் தொகுதியில் வீட்டுமனை அளிக்கிறோம் என்று சொன்னால்கூட அர்த்தம் உண்டு. சென்னையில், அதுவும் மிக அதிகமான சந்தை விலையுள்ள இடத்தில் இவர்களுக்கு எதற்காக வீட்டுமனைகளை அரசு ஒதுக்கித் தர வேண்டும்?

இப்போதெல்லாம் இன்னொரு விபரீதமும் அரங்கேறுகிறது. ஒவ்வொரு கூட்டத் தொடரின் முடிவிலும் முதல்வர் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு விருந்து அளிப்பது எங்கே தெரியுமா? ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்! ஆண்டுதோறும் இதற்காகும் செலவு எத்தனை லட்சங்கள் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இது என்ன அவலம் என்று குரல் எழுப்பினால், சாமானியர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விருந்துண்ணக் கூடாதா என்று குதர்க்கம் பேசுவார்கள்.

ஒன்று மட்டும் தெரிகிறது – வாக்களித்துவிட்டு வாயைப் பிளந்து கொண்டு நிற்கும் “சாமானியன்’ முட்டாள். வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று அவரது  வயிற்றில் அடிக்கும் “சாமானியன்’ புத்தி சாலி!

கவலையளிக்கும் குழந்தைகளுக்கான நிதி ஒதுக்கீடு…!

2008 – 2009, பொருளாதாரக் கணக்கெடுப்பின்படி, 71.9 சதவிகித கிராமப்பகுதி மக்களும், 32.3 சதவிகித நகர்ப்புறப் பகுதி மக்களும் ஒரு நபருக்காகச் செலவிடும் நுகர்வு செலவினம் ஒரு நாளுக்கு, ரூ. இருபதுக்கும் குறைவானதே. இதன் அடிப்படையில் தேசிய அளவில் 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் வறுமையில் உள்ளதாக சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்புகள் கூறுகின்றன.

இந்தக் கணக்கெடுப்புகளும் தோராயமானவையே. உண்மையில் பெரும்பான்மை மக்கள் நல்ல தரமான வாழ்க்கையோ, வாழ்வாதாரமோ, சமூகப் பாதுகாப்போ இன்றி அன்றாடம் பிழைப்பிற்காக அல்லலுறும் நிலையிலேயே உள்ளனர். இந்நிலையில், மக்கள்தொகையில் 40 சதவிகிதம் உள்ள குழந்தைகளின் நிலையை ஒப்பிட்டால், கிட்டத்தட்ட 76 சதவிகிதம் குழந்தைகள், மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களைச் சார்ந்தே வாழ்பவர்களாக உள்ளனர். ஏனெனில், அவர்களின் பெற்றோர்கள் அடிப்படை உயிர் வாழ்விற்கான உணவு உத்தரவாதத்திற்கே போராட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்பதுதான்.

கிராமப் பகுதிகளில் உள்ள பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின், உணவிற்கு கூட அரசின் அங்கன்வாடி மற்றும் அரசுப் பள்ளிகளின் ஒருவேளை மதிய உணவுத் திட்டத்தையே நம்பியுள்ளனர். இவ்வாறு பெரும்பான்மை மக்கள், அரசின் நலத் திட்டங்களை நம்பி வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கும் நிலையில், மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட் ஒதுக்கீட்டில் குழந்தைகளுக்கான அடிப்படை உணவு, ஆரோக்கியம் – மருத்துவம், கல்வி, பாதுகாப்பு (பெற்றோர் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு) ஆகியவற்றுக்கான நிதியானது, சமூக சேவைத் துறைகள் என்ற தலைப்பின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

இந்திய அரசியல் சட்டத்தின்படி, சமூகத் துறைகளுக்கான பொறுப்பு மத்திய, மாநில அரசுகள் இரண்டிற்கும் பொதுவான பொதுப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. ஆகையால், இரண்டு இயந்திரங்களும் இதற்கு சமமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், மத்திய பட்ஜெட்டில் குழந்தைகள் நலம் சம்பந்தப்பட்ட துறைகளில் நிதி ஒதுக்கீடு 2007 – 08-ல் 4.93 சதவிகிதமாக இருந்தது, 2008 – 09-ல் 4.13 சதவிகிதமாகக் குறைந்து, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2009 – 10 பட்ஜெட்டில் 4.15 சதவிகிதமாக உள்ளது. இந்த 0.2 சதவிகிதம் உயர்வின் மதிப்பு ரூ. 5,193 கோடி.

இதில் அதிகபட்சமாக கல்விக்கான செலவினம் ரூ. 3,515 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையில், 1,450 கோடி கூடுதல் ஒதுக்கீடாக மத்திய அரசு நடத்தும் கேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 1,350 கோடி நடுநிலைக் கல்விக்கான பள்ளிகள், வகுப்பறைக் கட்டடங்களுக்கான திட்டமும், பிரதமர் அறிவித்த மாடல் பள்ளிகளுக்கான (வட்டார அளவில்) 350 கோடி திட்டமும் கல்விக்கான கூடுதல் செலவினத்தில் அடங்கும். மற்றபடி, மதிய உணவுத் திட்டத்திற்கோ, தொடக்கக் கல்விக்கோ எந்தவித நிதி உயர்வும் அறிவிப்பில் இடம்பெறவில்லை.

அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் 13,100 கோடியும் உலக வங்கிக் கடன் மூலமே செயல்படுத்தப்படுகிறது. அனைத்துக் குழந்தைகளுக்கும், சமமான, தரமான, கட்டாயத் தொடக்கக் கல்வி அளிப்பது மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமை. இந்நிலையில் 6 வயது முதல் 14 வயது வரை அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையின்படி நிறைவேற்ற வேண்டிய தொடக்கக் கல்விக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் இல்லை.

ஏற்கெனவே, தொடக்கக் கல்விக்கான 88 சதவிகிதம் நிதி, மாநில அரசுகளாலேயே ஏற்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நிதிப் பற்றாக்குறை காரணமாக மாநிலங்கள் தொடக்கக் கல்வியில் தனியார்மயத்தை அதிக அளவில் ஊக்குவித்து வருகின்றன. இதனால் கல்வியில் மிக அதிகமான பாகுபாடுகளைக் குழந்தைகள் சந்தித்து வருகின்றனர்.

குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த பட்ஜெட்டில் (4.15 சதவிகிதம்), 71 சதவிகிதம் மத்திய அரசின் கல்வித் திட்டங்களுக்காகவும், 11 சதவிகிதம் குழந்தைகள் ஆரோக்கியம் – மருத்துவம் (போலியோ சொட்டு மருந்து, பிற தடுப்பு மருந்துகள் திட்டம் போன்றவற்றுக்கானவை), 17 சதவிகிதம் குழந்தைகள் வளர்ச்சி (அங்கன்வாடிகள் – ஊட்டச்சத்து – ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் போன்றவை), 0.8 சதவிகிதம் குழந்தைகள் பாதுகாப்பிற்காகவும் (ஆதரவற்ற, கைவிடப்பட்ட, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான மையங்கள் அமைத்தல்) ஒதுக்கப்பட்டுள்ளது. இப் புள்ளிவிவரங்களை மேலோட்டமாகப் பார்த்தால் குழந்தைகள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதுபோல் தோன்றும். ஆனால் இவை அனைத்தும் அவ்வப்போது வெளியிடும் திட்டங்களே அன்றி, நிலையான முதலீடுகள் அல்ல.

மேலும், மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போதும், அடிமட்ட அளவில் குழந்தைகளுக்கான தேவைகளைக் கருத்தில்கொண்டு பார்த்தால் இந்த ஒதுக்கீடு மிகச் சொற்பமே. 2005-ல் தற்போது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் உறுப்பினராக இடம் பெற்றிருந்த கல்விக்கான மத்திய ஆலோசனைக் குழுமம் தெரிவித்த கணக்கின்படி, இந்தியாவில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும், தரமான, சமமான, கட்டாயத் தொடக்கக் கல்வி 14 வயது வரை உறுதி செய்ய வேண்டுமானால், தற்போது தொடக்கக் கல்விக்காகச் செலவிடப்பட்டு வரும் ரூ. 47,100 கோடியுடன் (2003 – 04) சேர்த்து கூடுதலாக ஒவ்வோர் ஆண்டும் 53,500 கோடி முதல் 72,700 கோடி வரை 6 ஆண்டுகளுக்கு மொத்தம் 3,21,000 கோடியிலிருந்து 4,26,000 கோடி வரை செலவிடப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

இதில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் நிதியை மத்திய அரசு ஏற்கெனவே வசூலித்து வரும் கல்வி வரியைக் கொண்டு சரிக்கட்டலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. கூடுதல் நிதியை மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும். இவையனைத்தும் மத்திய அரசின் நிதிக் கொள்கையைப் பொறுத்தே செயல்படுத்தப்படும். தற்போதைய நிலை, மத்திய அரசு எப்படியாவது இக்கூடுதல் நிதிச்சுமையை தனியார்மயத்தைக் கொண்டு சமாளிக்க முடியுமா என்று பார்ப்பதாகவே தெரிகிறது. இதனால் பொதுப் பள்ளிக் கல்வி முறையின் மூலமான சமச்சீர்கல்வி என்பது எட்டாக்கனியாகி வருகிறது.

குழந்தைகளுக்கான அடிப்படைக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு இந்தப் பாடுபட்டு வரும் நிலையில், 2008 – 09-ல் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்திற்காக அப்போது ஒதுக்கப்பட்ட 180 கோடியில், 54 கோடி மட்டுமே மாநிலங்களால் செலவிடப்பட்டதால், 2009 – 10-ம் நிதி ஆண்டில், அதற்கான ஒதுக்கீடு 60 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. உண்மையில், இந்த பட்ஜெட் குறைப்பிற்கு காரணம், இதில் பெரும் தொகை ஆதரவற்ற குழந்தைகள் இல்லக் கட்டட உருவாக்கத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டதால் அவற்றை நடைமுறைப்படுத்த மாநில, மாவட்ட அளவில் உள்ள நிர்வாகச் சிக்கல்களே காரணம்.

மாவட்ட அளவில், அனைத்துத் துறைகளுக்கும் தலைவராக மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற ஒரு நபரே பொறுப்பாக இருப்பதால், அவரால் அனைத்துத் துறைகளின் திட்டங்களையும் குறித்த நேரத்திற்கு நிறைவேற்ற இயலாமல் உள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் தவிர, மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சட்டம், ஒழுங்கு, வருவாய் நிர்வாகம் ஆகிய மிகப்பெரும் இரண்டு பொறுப்புகள் உள்ளன. மேலும் ஓராண்டுக்கான நிதி, மத்தியிலிருந்து மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் வந்து சேர்வதற்குள் பாதி நிதியாண்டு முடிவடைந்து விடும். மீதமுள்ள காலத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள், தரமில்லாமல், ஊழல் குறைபாடுகளுடனே நிறைவேற்றப்படுகின்றன அல்லது செலவிடப்படாமல் வைக்கப்படுகின்றன.

இவ்வாறு குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும் அனைத்து செலவினங்களும், திட்டம் சார்ந்த நிதியாகவே உள்ளது. மேலும், அவை மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு மட்டுமே அதற்கான வரையறைகளைப் பின்பற்றிச் செயல்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் பெரும்பாலான தொகை மாநிலங்களால் செலவிடப்படாமலேயே உள்ளது.

உதாரணமாக, ஆதரவற்ற குழந்தைகளுக்கான பாதுகாப்பு, பராமரிப்பிற்கான திட்டம் என்பது அரசின் கண்ணோட்டத்தில் குழந்தைகள் இல்ல கட்டடங்கள் அமைத்தல் என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. கிராம அளவில் உள்ளாட்சி மன்றங்களைக் கொண்டு, சமூகக் குழுக்களை வலுப்படுத்துவதன் மூலமும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை. இதுபோன்ற குழந்தைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அரசுகள் தங்கள் விருப்பப்படி அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் திட்ட நிதியாகவே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

நிலையான முதலீடுகள் குழந்தைகளுக்கான முழுமையான வளர்ச்சி, பாதுகாப்பிற்கு உத்தரவாதம் செய்யப்படுவதில்லை. இதற்கு உதாரணம், கடந்த 35 ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம். 6 வயது வரையிலான பள்ளி முன்பருவப் பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்தினை உறுதி செய்ய வேண்டிய இத்திட்டம் சரியான முதலீடின்றி, ஊழியர்களுக்கான மிகக் குறைந்த ஊதியத்துடனே செயல்படுத்தப்படுகிறது. தேசம் முழுமைக்கும் இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 6,705 கோடி மட்டுமே.

உள்ளாட்சி மன்றங்களுக்கு போதிய அதிகாரம் அளித்து, அதற்கான அரசின் நிதி முறையாக ஒதுக்கப்பட்டால் பல திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும். மேலும், சமூகத் துறைகளுக்கு மத்திய அரசின் நிதி திட்ட நிதியாக மட்டுமல்லாமல், திட்டம் சாரா முதலீடுகளாக அமைந்து, உள்ளாட்சிகள் உள்ளூர் சூழலுக்குத் தக்க திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தும் நடைமுறையும் கொண்டு வரப்பட வேண்டும்.

மேலும், உணவுப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், குடியிருப்பு, குடிநீர் விநியோகம், குழந்தைகள் பாதுகாப்பு, ஆரோக்கியம் ஆகிய சமூக சேவைத் துறைகள், பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் முன்னுரிமையாக இல்லை. இவை தேர்தல் அறிக்கைகளில் மட்டுமே அலங்காரத்திற்காக இடம்பெறும் வாக்கியங்களாக உள்ளன.

மேலும், பாரம்பரியமாக இத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள், குழந்தைகளுக்கான மூலதனமாக அல்லாமல், மத்திய அரசின் நலத்திட்டங்களாகவே தொடர்வது குழந்தை உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது.

போதுமான நிதி ஆதாரங்களும், ஊழியர்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் மக்களுக்கும் எதிர்காலச் சந்ததியினரான குழந்தைகளுக்கும் நேரிடையாக எந்தவித குளறுபடிகளும் இன்றி சென்றடைய வேண்டுமானால் மத்திய, மாநில உள்ளாட்சிகளின் அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.

இவற்றுக்கான, நிதிச் சுமையை மத்திய, மாநில அரசுகள் சமமாகப் பங்கிட்டுக் கொள்வதோடு, முறையான வழிகாட்டுதலுடன், உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டால் மட்டுமே மக்களால் ஜனநாயகத்தில் நேரடியாகப் பங்கேற்கும் வாய்ப்புக் கிட்டும். இதற்கான, கொள்கை, சட்டம், நிர்வாக மாற்றங்களும், சீர்திருத்தங்களும் இன்றைய உடனடி தேவை.

இந்தியாவின் அலட்சியம்

இந்திய, பாகிஸ்தான் உறவில் “ஹாட் நியூஸ்’ பலுசிஸ்தான் விவகாரம். அணிசாரா நாடுகளின் மாநாட்டுக்குச் சென்ற மன்மோகனும், கிலானியும் வெளியிட்ட கூட்டறிக்கையில் பலுசிஸ்தான் என்ற சொல் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்பிறகே, இரண்டு நாடுகளுக்கு இடையேயும், இந்தியாவுக்குள்ளும் அறிக்கைப் போர் நடந்துகொண்டிருக்கிறது.

இந்தக் கூட்டறிக்கை பலுசிஸ்தான் பற்றி விவகாரமாக எதையும் கூறிவிடவில்லை. “இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டபோது, பலுசிஸ்தானுக்கு வெளியிலிருந்து அச்சுறுத்தல் இருக்கிறது என பாகிஸ்தானுக்குத் தகவல் கிடைத்திருப்பதாக மன்மோகனிடம் கிலானி கூறினார்’ என்கிறது அந்த சர்ச்சைக்குரிய வாசகம். எங்கேயும் இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்றாலும், இது பழிபோடும் முயற்சிதான்.

1970-களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உறவு மிக மோசமாக இருந்தது. பாகிஸ்தானின் ஒரு பகுதி, தனி நாடாக சுதந்தரித்துக்கொள்ள இந்தியா வெளிப்படையாக உதவி செய்தது. அப்போதைய சூழலில் அது நியாயமாகவே கருதப்பட்டது. பலுசிஸ்தான் தொடர்பாகவும் இந்தியா மீது குற்றச்சாட்டுகள் இருந்தன. அது அந்தக் காலம். இந்தியா இப்போது பலுசிஸ்தானை மறந்துவிட்டது. இன்றைய சூழலில், பலுசிஸ்தானை சுட்டிக்காட்டுவதை இந்தியா அனுமதித்தது மாபெரும் தவறுதான். அதற்குக் காரணம் அலட்சியம். அந்த அலட்சியம்தான் இப்போது விபரீதமாகியிருக்கிறது.

வெளியுறவுக் கொள்கையைப் பாதிக்கும் இன்னொரு விஷயத்திலும் இந்திய அரசு அலட்சியமாகவே இருக்கிறது. அது கிரிக்கெட் வாரியம். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கிறது என்று பாகிஸ்தான் தரப்பிலிருந்து குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அங்குள்ள ஊடகங்களும் இந்தக் குற்றச்சாட்டை அவ்வப்போது நினைவூட்டுகின்றன. இப்படியொரு பயங்கரமான சந்தேகம் எழுந்ததற்கான அடிப்படைக் காரணம் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள்தான்.

2011-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் என முதலில் அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 49 போட்டிகளில் இந்தியாவுக்கு 21 போட்டிகளும், பாகிஸ்தானுக்கு 14 போட்டிகளும், இலங்கைக்கு 8 போட்டிகளும், வங்கதேசத்துக்கு 6 போட்டிகளும் ஒதுக்கப்பட்டன. நொடிந்து கிடக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கு இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் ஒரு வாய்ப்பாகவே கருதப்பட்டன.

இந்தச் சூழலில்தான் சில மாதங்களுக்கு முன்பு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைக் காரணம்காட்டி, பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரர்களுக்குப் பாதுகாப்பில்லை என்னும் முடிவுக்கு ஐசிசி வந்தது. போட்டிகளை நடத்தும் உரிமை பாகிஸ்தானிடமிருந்து பறிக்கப்பட்டது.

போட்டிகளை துபை, சார்ஜா, அபுதாபி போன்ற இடங்களில் நடத்துகிறோம் என்கிற பாகிஸ்தானின் கோரிக்கையும் எடுபடவில்லை. இந்த இடங்களில் பாதுகாப்பு, போக்குவரத்து, தங்கும் வசதிகளுக்கு எந்தக் குறைவும் இல்லை; நிர்வாகச் சிக்கலும் இல்லை. அப்படியிருந்தும் இந்தக் கோரிக்கையை ஏற்காததில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஏக அதிருப்தி.

இறுதியில், பாகிஸ்தானில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்ட 14 போட்டிகளில் ஒரு அரையிறுதிப் போட்டி உள்ளிட்ட 8 போட்டிகள் இந்தியாவுக்கு மாற்றப்பட்டன. உலகக் கோப்பை போட்டிகளின் தலைமையிடம் லாகூரிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது. இப்படியாக ஒரு நோஞ்சான் கிரிக்கெட் வாரியத்தை எல்லோருமாகச் சேர்ந்து நசுக்கினார்கள்.

இதெல்லாம் ஐசிசியின் முடிவு என்று கூறுவது காதில் பூச்சுற்றும் வேலை. உண்மையில் ஐசிசியின் எந்தவொரு முடிவையும் மாற்றும் வலு இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கு இருக்கிறது. சைமண்ட்ஸ்-ஹர்பஜன் விவகாரம் உள்ளிட்ட பலவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின்போதும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தபோதும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன பேசியது என்பது அனைவருக்கும் தெரியும்.

இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் பாகிஸ்தானில் சூழ்நிலை மாறக்கூடும். ஒரே மாதத்தில் ஐபிஎல் போட்டிகளை இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற முடியும் என்றால், சூழ்நிலைக்கேற்ப கொஞ்ச காலம் கழித்து முடிவெடுக்கலாமே? அப்படியில்லாமல், அவசர, அவசரமாக பாகிஸ்தானிலிருந்து போட்டிகளை மாற்றுவதற்கு, இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கு கொழுத்த லாபம் என்பதைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பிருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், பாகிஸ்தானியர்கள் அப்படிச் சந்தேகப்படுவதற்கு கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள்தான் காரணமாக இருக்கின்றன. இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பதில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நல்லுறவை ஏற்படுத்துவதற்கு அரசுகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். மக்களிடமும் கசப்புணர்வு அதிகரிக்கும்.

இப்படி, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்க, அதற்கு நேரெதிர் பாதையில் கிரிக்கெட் வாரியம் சென்று கொண்டிருக்கிறது. உரிய கட்டுப்பாடுகளை விதிக்காதவரை, விளையாட்டு என்கிற பெயரில் வெளியுறவுக் கொள்கையுடன் இவர்கள் விளையாடிக்கொண்டுதான் இருப்பார்கள். இன்னும் அலட்சியமாக இருந்தால், நாட்டுக்கு ஆகாது.

எங்கே போய் முடியுமோ?

மக்களவைப் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சமீபகாலமாக எதிர்பாராத சிக்கல்களில் சிக்கித் தவிப்பதைப் பார்த்தால், எந்தவித முன்யோசனையோ, ராஜதந்திர அணுகுமுறையோ இல்லாமல், தூண்டிலில் சிக்கும் மீனாக இந்தியா மாட்டிக் கொள்கிறதோ என்று சந்தேகிக்க வேண்டி இருக்கிறது. வெளிவிவகாரத்துறை அடுத்தடுத்து குளறுபடிகளைச் செய்வது கவலையைத் தருகிறது.

சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கென்று தனி மரியாதையை ஏற்படுத்தித் தந்தார் பண்டித ஜவாஹர்லால் நேரு. வளரும் நாடாகவே இருந்தாலும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் கருத்து என்ன என்று மேற்கத்திய நாடுகளாலும் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளாலும் அக்கறையுடன் கவனிக்கப்பட்ட காலம் ஒன்று உண்டு. அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் ஒரு அணியாகவும் சோவியத் யூனியன் தலைமையிலான சமதர்ம நாடுகள் மற்றொரு அணியாகவும் பிரிந்தபோது, இரு அணிகளையும் சாராத புதிய அணியை (அணி சாரா நாடுகள் அணி) ஏற்படுத்தி அதற்குத் தலைமையேற்கும் தகுதியை இந்தியாவுக்கு ஏற்படுத்தித் தந்தார் பண்டித நேரு.

நேருஜியின் இந்தப் பாரம்பரியத்தை லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி உள்ளிட்டோரும் காப்பாற்றி வந்தனர். இப்போது முதலாளித்துவ நாடுகள் வரிசையும் சோஷலிச நாடுகளின் வரிசையும் கலைந்துவிட்டதால் அணிசாரா நாடுகளின் வரிசைக்கு நியாயமாகக் கிடைத்திருக்க வேண்டிய முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது.  பயங்கரவாதிகளை ஊக்குவித்து எப்போதும் நமக்கு பிரச்னைகளை ஏற்படுத்துவதையே கடமையாகக் கருதிச் செயல்படும் பாகிஸ்தானுடன் சமாதானம் பேசினால்கூட ஆபத்தில்தான்போய் முடியும் என்றால் என்ன சொல்வது?

எகிப்தில் நடந்த இந்திய – பாகிஸ்தான் பிரதமர்களுக்கு இடையிலான சந்திப்புக்குப் பிறகு வெளியிட்ட அறிக்கையை இந்திய அதிகாரிகள் சரியாகப் படித்துப்பார்க்காமல் ஒப்புதல் தந்தது எப்படி? இப்போது இதை “”வெறும் காகிதம்தான், சட்டபூர்வ ஆவணம் இல்லை” என்கிறார் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர். அவருடைய விளக்கத்தைக் கேட்டு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

பாகிஸ்தானில் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது, போலீஸ் அகாதெமி தாக்கப்பட்டது ஆகிய இரு சம்பவங்களின் பின்னணியிலும் இந்திய அரசுக்குப் பங்கு இருக்கிறது என்று இப்போது நாகூசாமல் கூற ஆரம்பித்திருக்கிறார்கள் பாகிஸ்தானியர்கள். போதாக்குறைக்கு பலுசிஸ்தானில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக நடைபெறும் ஆயுதக் கலவரங்களின் பின்னணியிலும் இந்திய அரசின் உளவுத்துறை (“ரா’) இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். கூட்டறிக்கையிலேயே, “”பலுசிஸ்தான் குறித்து இருதரப்பும் ஆழ்ந்து கவலைப்படுவதாக” ஒரு வரியைச் சேர்த்திருக்கிறார்கள்! எத்தனை விஷமமான வார்த்தை இது? இதை எப்படி இந்திய அதிகாரிகள் அனுமதித்தார்கள்?

அமெரிக்க அரசுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இந்திய ராஜதந்திரத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று கூறி, சில மாதங்களுக்கு முன்னால் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பரித்தார்கள். உலகின் பிற நாடுகள் எல்லாம், “”இந்தியாவுக்கு மட்டும் சலுகையா?” என்று பொறாமையுடன் கேட்பதாகக்கூட பெருமைப்பட்டுக்கொண்டார்கள். இப்போதோ அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் (என்.பி.டி.) கையெழுத்திட்டால் மட்டுமே அணுசக்தி தொடர்பான நடவடிக்கைகளில் இனி ஒத்துழைப்பு என்று அமெரிக்கர்கள் நம் கழுத்தில் சுருக்கு மாட்டிவிட்டார்கள்.

இந்தியாவுக்கு வந்தார் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன். இந்தியாவில் ஐந்து நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஹிலாரி கிளின்டன் நமது வெளியுறவு அமைச்சருடன் செலவிட்டது வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே. அதுவும் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றி மட்டும்தான் பேசினார் என்று தெரிகிறது. ஜி – 8 மாநாடு அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்தால் மட்டுமே ஒத்துழைப்பு என்று கூறுகிறதே என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு மழுப்பலாக ஒரு பதிலைத் தந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார் ஹிலாரி.

எதை எதையோ சொல்லி, நம்மை நம்ப வைத்து வகையாக மாட்டி விட்டார்கள். நீங்கள் வல்லரசாக மாறுவது இருக்கட்டும். முதலில் அணிசாராக் கொள்கையைக் கைவிட்டுவிட்டு எங்களுக்கு அடிமை சாசனம் எழுதித் தாருங்கள் என்று சொல்லாமல் சொல்கிறது அமெரிக்கா. நம்பி மோசம் போனோம் என்று ஒத்துக்கொள்ளவும் முடியாமல், தவறைத் திருத்தும் தைரியமும் இல்லாமல் தவிக்கிறோமே, இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லையே!

தார்மிக வரம்பு மீறல்!

எந்த ஒரு செயலும் சட்டப்படி சரியாக இருந்துவிட்டால் மட்டும் போதாது. தார்மிக ரீதியாகவும் அந்தச் செயல் ஏற்புடையதாக இருக்க வேண்டும். கொலை செய்வது, கற்பழிப்பது போன்ற செய்கைகள் சட்டப்படி சரி என்று பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் ஒரு அரசு சட்டம் இயற்றுவதாலேயே, அந்தச் செயல்கள் சரியான செயல்கள் ஆகிவிடாது. அதேபோலத்தான், நமது அரசியல்வாதிகள் தங்கள் இஷ்டத்துக்குச் செலவு செய்து கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதி என்கிற தார்மிக வரம்பு மீறலும்!
1994-ம் ஆண்டு பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, அப்போது நிதியமைச்சராக இருந்த இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை விவரம் தெரிந்த யாருமே ஆரம்பம் முதலே அங்கீகரிக்கவோ, ஆமோதிக்கவோ இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி என்பதை மக்கள் நலனில் அக்கறை உள்ள பலரும் எதிர்த்துப் பேசியும் எழுதியும் வந்தாலும், “பணம்’ என்று வரும்போது கட்சி மாச்சரியங்களை மறந்து அனைத்துக் கட்சியினரும் கைகோர்த்துக் கொள்வதால் ஏற்படும் மக்களவைப் பெரும்பான்மை அதற்கு சட்ட அங்கீகாரம் அளித்து விட்டிருக்கிறது.
நாடாளுமன்றக் குழு ஒன்று கடந்த டிசம்பர் மாதம் இந்த நிதியை ஆண்டொன்றுக்கு ரூ.2 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக அதிகரிக்கப் பரிந்துரை செய்திருக்கிறது. ரூ.5 கோடியாக இந்த நிதி அதிகரிக்கப்பட்டாலே, இப்போதைய ரூ.1,600 கோடியிலிருந்து வருட நிதி ஒதுக்கீடு ரூ.4,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுவிடும். ரூ.10 கோடி என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தைப் பின்பற்றி, எல்லா மாநிலங்களிலும் சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களுக்கும் இதுபோன்ற திட்டம் அறிவிக்கப்பட்டு விட்டது. இப்போது, ஒன்றன்பின் ஒன்றாக, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அமைப்புகளையும் இந்த வியாதி தொற்றிக் கொள்ளத் தொடங்கி இருக்கிறது.
2002-ம் ஆண்டுக்கான மத்திய தணிக்கை மற்றும் வரவு – செலவு மேற்பார்வை இயக்குநரின் அறிக்கை பல மாநிலங்களிலும், ஏன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஷயத்திலும் முறைகேடுகளும், குளறுபடிகளும் காணப்படுவதைக் கண்டுபிடித்துள்ளது. எதற்காக நிதி ஒதுக்கப்பட்டதோ அதற்கு அந்த நிதி சென்றடையவில்லை என்றும், நிதி ஒதுக்கீடு முறைகேடாகப் பயன்பட்டது என்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை விமர்சித்திருக்கிறது அந்த அறிக்கை.
ஒரு சில அரசியல் கட்சிகள், தங்களது உறுப்பினர்கள் இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதியை கட்சி வளர்ச்சிக்குப் பயன்படுத்த ஊக்குவித்திருப்பதும், இந்த நிதியின் மூலம் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றும் ஒப்பந்ததாரர்கள் கட்சிக்கு நன்கொடை என்கிற பெயரில் இந்த நிதியின் ஒரு பகுதியை அளிக்க வற்புறுத்தப்படுவதாகவும்கூட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
2005-ல் புலனாய்வு முயற்சியில் ஈடுபட்ட ஒரு தொலைக்காட்சி அலைவரிசை, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கித் தர கையூட்டுப் பெறுவதைப் படம்பிடித்து அம்பலப்படுத்தியது. அரசு, தவறுகளைத் திருத்த என்ன வழி என்று ஆராய முற்பட்டதே தவிர ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் திட்டத்தைக் கைவிடத் தயாராகவில்லை.
நமது அரசியல் சட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சட்டங்களையும் திட்டங்களையும் முன்வைப்பதற்கும் நிர்வாக இயந்திரம் அதை நிறைவேற்றுவதற்கும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே என்னென்ன தேவை என்பதைப் பட்டியலிட்டு, அவர்களே அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வார்களானால் பிறகு நிர்வாக இயந்திரமும், அரசு அதிகாரிகளும் எதற்கு?
2005 ஏப்ரல் மாதத்தில் நடந்த தேசிய ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்றும், அதற்குச் செலவிடப்படும் நிதி ஒதுக்கீடு உள்ளாட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளின் தேவையைக் கேட்டறிந்து நேரடியாக அந்த அமைப்புகளுக்குத் தரப்பட வேண்டும் என்றும் ஒரு கருத்தை முன்வைத்தார் சோனியா காந்தி.
2007-ல் வீரப்ப மொய்லி தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது நிர்வாக சீர்திருத்தக் கமிஷனும் “”தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் – நாடாளுமன்றமோ, சட்டப்பேரவையோ எதுவாக இருந்தாலும் – தானே தனது தொகுதியின் மேம்பாட்டுக்கான பணியைத் தீர்மானித்துத் தமது நேரடி ஒதுக்கீட்டின் மூலம் நிறைவேற்றுவது ஊழலுக்கு உத்தரவாதம் அளிக்கும், அதிகாரப் பகிர்ந்தளிப்பு என்பதன் அடிப்படையையே இந்தத் திட்டம் தகர்த்து விடுகிறது” என்று கருத்துத் தெரிவித்தது.
இடதுசாரிகளையும், காஷ்மீரத்தைச் சேர்ந்த சிறுத்தைகள் கட்சியினரையும் தவிர, ஏனைய கட்சியின் உறுப்பினர்கள் எல்லோருமே, தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.5 கோடியாகவோ, ரூ.10 கோடியாகவோ அதிகரிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்கள். கடந்த 14 ஆண்டுகளாக ஒதுக்கப்படும் இந்த மேம்பாட்டு நிதியால் உறுப்பினர்கள் வேண்டுமானால் மேம்பாடு அடைந்திருக்கலாம், ஆனால் அவர்களது தொகுதி மேம்பாடு அடைந்ததாகத் தெரியவில்லை.
ஊழலில் ஊற்றுக் கண் என்று தெரிந்தும் இந்தத் திட்டம் தொடர்வது நல்லதல்ல!

தடுப்பு மருந்துக்கும் தட்டுப்பாடு

“நோய்த் தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்துகொண்டு, மருந்து உற்பத்தியைக் குறைத்துள்ளது பற்றி விசாரணை நடத்தப்படும்’ என்று மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையில் உறுதி கூறியுள்ளார்.

இந்தியாவில் 2.5 கோடி குழந்தைகளுக்கு தட்டம்மை, கக்குவான், போலியோ, மஞ்சள்காமாலை போன்ற நோய்த் தடுப்பு மருந்துகள் அரசால் இலவசமாகத் தரப்படுகின்றன. ஆனால் இந்த மருந்துகள் தற்போது கையிருப்பில் இல்லை. காரணம், தடுப்பு மருந்து தயாரிக்க வேண்டிய அரசு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டன. தற்போது தனியார் மருந்து உற்பத்தியாளர்கள்தான் இந்தத் தடுப்பு மருந்துகளைத் தயாரித்து வருகின்றனர். இவர்களிடம் இரு மடங்கு விலை கொடுத்து அரசு வாங்குகிறது.

இமாலயப் பிரதேசத்தில் கசெüலி என்ற இடத்தில் உள்ள மத்திய ஆய்வு நிறுவனம், சென்னையில் பிசிஜி வேக்ஸின் லேபரட்டரி, குன்னூரில் உள்ள பாஸ்டர் நிறுவனம் ஆகிய மூன்றும் இந்தியாவுக்குத் தேவையான நோய்த்தடுப்பு மருந்துகளில் 80 சதவீதத்தை தயாரித்து வந்தன. ஆனால் இந்த மூன்று நிறுவனங்களின் தடுப்பு மருந்து உற்பத்திக்கான உரிமம் 2008, ஜனவரி 16-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது.

இதற்குக் காரணமாக, மத்திய சுகாதாரத் துறை மேற்கோள் காட்டிய விஷயம் என்னவெனில், உலக சுகாதார நிறுவனம் தனது ஆய்வில் இந்த மூன்று நிறுவனங்களும் “தரமான உற்பத்தி முறைகளை (ஜிஎம்பி) கடைப்பிடிக்கவில்லை என்று அறிக்கை அளித்துள்ளது’ என்பதுதான்.

உலக சுகாதார நிறுவனம் இந்த விஷயத்தை 2007 ஆகஸ்ட் மாதம் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்தது என்பது உண்மையே. இருப்பினும், இந்த மூன்று நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவின் 80 சதவீத தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கின்றன என்ற உண்மை நிலையை மத்திய அரசு உணர்ந்திருக்குமானால், தரமான உற்பத்தி முறைக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தந்திருக்கும். ஆனால், உரிமத்தை ரத்து செய்துவிட்டு, தனியாரிடம் தடுப்பு மருந்துகளைக் கொள்முதல் செய்யத் தொடங்கியது மத்திய அரசு. இதனால் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையை இரு மடங்காக உயர்த்தின. தடுப்பு மருந்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.140 கோடியைக் கொடுத்தும், தனியார் நிறுவனங்களிடமிருந்து தேவைப்படும் மருந்தில் பாதி அளவுக்கே வாங்க முடிந்தது; இப்போது தட்டுப்பாடு!

“”தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காக இவ்வாறு உரிமம் ரத்து செய்யப்பட்டது என்று கூற முடியாது” என்று குலாம் நபி ஆசாத், மாநிலங்களவையில் தெரிவித்திருப்பது, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போன்றது.

மூன்று அரசு நிறுவனங்களின் நோய்த் தடுப்பு மருந்து தயாரிப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டாலும், இந்த நிறுவனங்கள் தங்கள் மூலப்பொருள்களை திசை திருப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து எஸ்.பி. சுக்லா (முன்னாள் தனிச்செயலர்) உள்பட சில தன்னார்வர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்துள்ளனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி இதுதான்: தட்டம்மை தடுப்பு மருந்துக்கான மூலப்பொருளை ஹைதராபாதில் உள்ள அரசு நிறுவனமான “இந்தியன் இம்யுனோலாஜிகல் லிமிடெட்’ இலவசமாகத் தருகிறது. இருப்பினும்கூட, சென்னையில் உள்ள பிசிஜி வேக்ஸின் லேபரட்டரி அவற்றை சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் விலைக்கு வாங்கியது ஏன்? அதேபோன்று, குன்னூரில் உள்ள பாஸ்டர் நிறுவனமும், தனியார் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துகொண்டு, ரூ.17.8 கோடிக்கு தட்டம்மை மருந்து தயாரிக்கவும், இதன் உரிமத் தொகையில் (ராயல்டி) 70 சதவீதத்தை தனியார் நிறுவனத்துக்கு அளிக்கவும் முன்வந்தது ஏன்?

இத்தகைய தவறுகள் எங்கே, ஏன், யாரால் நடந்தது என்பது இன்றைக்கான பிரச்னை அல்ல. ஆனாலும், 2.5 கோடி குழந்தைகளுக்கான நோய்த் தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் அரசு நிறுவனங்களுக்கு உரிமத்தை ரத்து செய்யும் முன்பாக மாற்று ஏற்பாடுகளைப் பற்றி ஏன் மத்திய அரசு யோசிக்கவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.

இதுபற்றி மத்திய அரசுக்குத் தெரியாது என்று சொல்லிவிட முடியாது. இந்தப் பிரச்னை, 2008 தொடக்கத்திலேயே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்களால் எழுப்பப்பட்டுள்ளது. அதற்குப் பதிலும் தரப்பட்டுள்ளது. அதன் பிறகும் இந்தப் பிரச்னைக்கு உரிய கவனம் தரப்படாமல் இப்போது இந்தியா முழுவதற்கும் தடுப்பு மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது என்றால், இதற்கு அப்போதும் இப்போதும் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிதானே முழுப்பொறுப்பு?
நன்றி தினமணி

மஞ்சள் பூசும் பழக்கம் உண்டா?

நம் உடலை நோயிலிருந்து காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது; தொற்று ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. இதனால் தான், இந்து கலாசாரத்தில் முதன்மையான முக்கியத்துவம் மஞ்சளுக்கு கொடுக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகளவில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. நிம்மதியைக் கொடுக்கும் திறன், மஞ்சளின் வாசனைக்கே உரிய குணம். அதன் நிறம் தைரியத்தை கொடுக்கும். மஞ்சள் கிழங்கின் இத்தகைய பெருமை பற்றி யாரும் கண்டு கொள்வதாய் இல்லை. மஞ்சள் பூசிய முகத்திற்கு முன்பெல்லாம் அதிக மவுசு உண்டு. இப்போது கிராமப் பெண்கள் தான் மஞ்சள் பூசுகின்றனர்; அதுவும் ஒரு சிலரே.

இந்திய கலாசாரத்தில் மஞ்சளின் முக்கியத்துவம்: இந்து கலாசாரத்தில், சமையலில் மஞ்சள் பயன்படுத்தப்படுவது போல் மற்றவர்கள் பயன்படுத்தவில்லை என்றாலும், அதன் மருத்துவ குணம் கருதி, மருந்துகளில் மஞ்சள் கலந்து தயாரிக்கும் பழக்கம் உலக நாடுகளில் காணப்படுகிறது. மஞ்சள் நிறத்திற்கு அறிவையும், சாதுர்யத்தையும் வளர்க்கும் ஆற்றல் உண்டு. எனவே தான், போட்டிகள், தேர்வுகள், நேரடித் தேர்வுகளைச் சந்திக்கும் நாட்களில் மஞ்சள் நிற ஆடை அணிவது நல்லது என்று சொல்லப்படுகிறது.

ஆனால், “ஆண்கள் மஞ்சள் பயன்படுத்துவதில்லை. ஏன்? ஆற்றலின் வடிவமாய் விளங்கும் பெண்களுக்கு மஞ்சள் அவசியம்; இந்த ஆற்றலை வழிநடத்தும் ஆண்களுக்கு மஞ்சள் அவசியமில்லை’ என்று, ஜகதீச அய்யர் என்பவர், இந்தியர்களின் கலாசாரம் குறித்த தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, பொங்கல் பானையில், மஞ்சள் செடி மங்கல அடையாளமாக கட்டப்படுகிறது. மஞ்சள் கட்டப்பட்ட பானையில், பொங்கும் பொங்கல், அந்த வீட்டின் வளத்தை குறிப்பதாகக் கருதப்படுகிறது.

பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரியங்கள் அனைத்திலும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கிறது. குங்குமம், வெற்றிலை, பாக்கு, பிளவுஸ் துணி, பழங்கள் மற்றும் பரிசு பொருட்களுடன் மஞ்சள் கிழங்கு வைத்து விருந்தினர்களுக்கு, குறிப்பாக திருமணம் போன்ற நல்ல காரியங்களின் போது வழங்கும் வழக்கம், இந்துக்கள் மத்தியில் காணப்படுகிறது. மஞ்சளின் புனித தன்மையால், அவற்றை திருமணத்தில் கட்டப்படும், மங்கள நாண் எனப்படும் “தாலிக் கயிறில்’ பூசப்படுகிறது.

சமையலில் மஞ்சளின் பயன்பாடு

இந்தியர்களின் சமையல்களிலும், மஞ்சள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மஞ்சள் பயன்படுத்தாத, இந்திய சமையல்களை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இது இயற்கையான நிறமியாக இருப்பதால், பெரும்பாலான உணவு பதார்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் தென்பகுதிகளில், சாம்பார், முட்டைகோசு கறி போன்றவற்றை, மஞ்சள் அதிக சுவையுடையதாக ஆக்குகிறது. அதேபோல், வடஇந்தியர்கள் கொழுக்கட்டையில் மஞ்சளை பயன்படுத்துகின்றனர். இது ஊறுகாயை பதப்படுத்தி பாதுகாக்கவும் உதவுகிறது.

அழகு சாதனமாக பயன்படும் மஞ்சள்

வெகு காலமாகவே இந்தியப் பெண்கள் தங்கள் முகத்தையும், உடலையும் அழகுபடுத்திக் கொள்ள மஞ்சளைப் பயன்படுத்தி வருகின்றனர். முகத்தில் மாசு, மரு நீக்கி பொலிவு கொடுப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை.மஞ்சள் இயற்கை சன்ஸ்கிரீனாக பயன்படுவதால், இந்திய பெண்கள் தோலுக்கு ஊட்டமளிக்கும் பொருளாக பயன் படுத்துகின்றனர். இது முகத் தில் ரோமங்கள் வளர்வதை தடுப்பதோடு, இயற்கை, “ப்ளீச்’சாக செயல்பட்டு கடினமான கையை மென்மையாக்குகிறது. இன்னும் சில வீடுகளில் எறும்புகள், பூச்சிகள், கரையான்கள் போன்றவை வராமல் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சளின் மருத்துவ குணம்:

* வயிற்றுப் புண்ணை மஞ்சள் ஆற்றும்.

* உடலின் எந்த இடத்தில் கட்டி இருந்தாலும், அதன் மீது மஞ்சள் பூசி, ஒரு இரவு ஊறினால், கட்டி பழுத்து, சீழ் வெளியேறி விடும்.

* ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமும் மஞ்சளுக்கு உண்டு.

* உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது.

* மிகச் சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது.

* மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால், மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.

டென்ஷனே இல்லாமல் புதிய நாளை வரவேற்க ஆசையா?

காலையில் விழித்தெழும்போது, இன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகள் என் னென்ன என்று சிந்தித்துக் கொண்டே எழுந்தால், “டென்ஷன்’ தானாகவே தொற்றிக் கொள்ளும். இதைத் தவிர்க்க…

ஏற்கனவே, “ஹலோ தோழியே’ பகுதியில் எழுதியுள்ளது போல், முதல் நாள் இரவே, அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள், தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள், வாங்க வேண்டிய பொருட்கள் என முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி விட்டு, நிம்மதியாகப் படுத்துத் தூங்க வேண்டும்.

அடுத்த நாள் எழும்போது, இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், இனிமையான சங்கீதம் கேட்க வேண்டும். பல் துலக்குவது, பால்/ காபி/ டீ குடிப்பது, காலைக் கடன்களை முடிப்பது உட்பட முதல் அரை மணி நேர வேலைகளை செய்து முடித்த பின், முதல் நாள் இரவு எழுதிய பட்டியலைப் பார்த்துக் கொண்டால், எந்தெந்த வேலைகளை முதலில் செய்வது என்ற தெளிவு பிறக்கும்.

சுறுசுறுப்பாய் வேலைகளைச் செய்யத் துவங்கலாம். இது அடிப்படை. இது தவிர, தினமும் உங்கள் மனதை, “ரிலாக்ஸ்’ செய்து கொள்ள சில யோசனைகள்…

* இனிமையான சங்கீதம் கேட்க அடிப்படைத் தேவையாக அமைவது, குறைந்தபட்சம் ஒரு கருவி. அது கேசட் பிளேயராகவோ, எம்.பி.,3யாகவோ, கம்ப்யூட்டராகவோ இருக்கலாம்; இனிமையான சங்கீதத்தை இதமாகக் கேட்கும் வகையில், அறைகளில் ஸ்பீக்கர் வசதி செய்து கொண்டால், மிக நல்லது.

நீங்கள் பயன்படுத்தும் அந்தக் கருவி எந்தப் பிரச்னையும் இல்லாமல், சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சரியாக இயங்கவில்லை என்றால், அதைச் சரி செய்வதில் எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது.

* செடி வளர்க்கலாம். தினமும் ஒரே ஒரு பூவாவது தரக் கூடிய வகையில், பூச்செடி வளர்க்கலாம். எந்தச் செடியையும், அதன் அருகில் அமர்ந்து பேசி, கொஞ்சி, தண்ணீர் விட்டு வளர்த்தால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே, பூக்களைக் கொடுக்கும்.

அவற்றுக்கும் மனது உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். நாமே வளர்த்து, ஒரே ஒரு பூ பூத்தால் கூட, அதில் கிடைக்கும் மன நிறைவு, நமக்கு நிம்மதியைக் கொடுக்கும்.

* கவிதை எழுதப் பிடிக்குமா? அடி மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் கவிதையாக அது அமைய வேண்டும். கவிதை எழுதப் பழகினால், மன வளம் பெருகும்; எழுத்து வளம் பெருகும். உங்களிடம் உள்ள வலிமையான கருத்துக்கள், பலவீனமான கருத்துக்கள் என்னென்ன என்பதைப் பாகுபடுத்திப் பிரித்துப் பார்க்கும் அறிவு வளரும்.

* பாட்டு பாடலாம், ஓவியம் வரையலாம், துணி தைக்கலாம், நகைகள் செய்யலாம். இது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடும்போது, உங்களிடையே உள்ள கலைத் தன்மை வெளிப்படும். இதுவே உங்களின் தனித் தன்மையை நிலைநாட்டும்.

* ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போது, தேவையற்ற விஷயங்களை மனதில் அசை போட வேண்டாம். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் நாட்டம் செலுத் தும்போது வேலையில் கவனம் குறையும்.

அதுவே உங்களுக்கு ஆபத்தாய் அமைந்து விடும். முழுமையான பணி செய்த திருப்தி ஏற்படாது; மன நிம்மதி கெடும். மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் பின்பற்றுவது மிகவும் கடினம் தான். வாழ்க்கையில் சந்தோஷமும் நிலைப்பதில்லை; துன்பங்களும் நிலைப்பதில்லை. இன்றைய தினத்தில் உள்ள கடமைகளையும், பணிகளையும் சீராகச் செய்யும்போது கிடைக்கும் நிம்மதியுடன், திருப்தியாக வாழப் பழகிக் கொள்ளுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே!

மூலிகை கட்டுரை: கழிச்சலை போக்கும் காட்டாத்தி


இரைப்பையானது உணவை பிசைந்து, முன் சிறுகுடல் வழியாக சிறுகுடல், பெருங்குடல் மற்றும் மலக்குடல் என சக்கையாக வெளித்தள்ளுகிறுது. சீராக இயங்கிக் கொண்டிருக்கும் குடலில் ஏதேனும் தொல்லை ஏற்பட் டால் குடல் வேலை நிறுத்தம் செய்ய ஆரம்பித்துவிடும். அப்பொழுது குடலில் உள்ள உணவுகள் செரிக்கபட முடியாமலும், நீர்ச்சத்து உறிஞ்சப்பட முடியாமலும், ஏற்கனவே குடலில் தங்கியுள்ள பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளுடன் சேர்ந்து குடலில் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தி கழிச்சலாக வெளியேற ஆரம்பிக்கும். இதுவே கழிச்சல் என்றும், வயிற்றுப்போக்கு என் றும் பேதி என்றும் அழைக்கப்படுகிறது. கழிச்சலின் போது குடலில் சீழ் தங்கி வெளியேறுவது சீதக்கழிச்சல், ரத்தம் வடிவது குருதிக் கழிச்சல் மற்றும் நுண்கிருமிகளால் குடல் அழுகலுடன் மலம் வெளியேறுவது நாற்றக் கழிச்சலாகவும் காணப்படும்.

கழிச்சலின் போது நீர்ச்சத்தும், வைட்டமின்களும் உடலுக்கு அவசியமான அமினோ அமிலங்களும், உப்புகளும் அநாவசியமாக வெளியேறிவிடுவதால் ரத்த அழுத்தக் குறைவு, கண் பஞ்சடைதல், உடல் சோர்வு, உடல் எடை குறைதல், பலஹீணம், தலைச்சுற்றல் போன்ற பல உபாதைகள் ஏற்படுகின்றன. நீர்ச்சத்து அதிகமாக வெளியேறுவதால் செல் மற்றும் ரத்தத்தின் சமச்சீர் நிலை பாதிக்கப் படுவதால் சிலர் கோமா எனப் படும் ஆழ் மயக்க நிலைக்கோ, மரணத்திற்கோ ஆட்படுகின்றனர். பெரும்பாலும் சிறு குழந்தைகள், முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் பெண்களே கழிச்சலின் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

பலவிதமான காரணங்களாலும் ஏற்படும் கழிச்சல் நீக்கி, குடற்புண்களை ஆற்றி, நீர்ச்சத்தை தங்க வைக்கும் அற்புத மூலிகை காட்டாத்தி, உட்போர்டியா பிரக்டிகோசா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லித்ரேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறு மரங்கள் வட மாநிலங்களில் ஏராளமாக விளைகின்றன. வேலக்காய் என்ற பெயராலும் அழைக்கப் படும். இந்த சிறு மரங்களின் பூக்களே காட்டாத்திப் பூ என்றும் நாட்டு மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

காட்டாத்திப் பூக்களை உலர்த்தில் பொடித்து 3 முதல் 6 கிராமளவு தினமும் ஒன்று அல்லது இரண்டு வேளை தேன், தேநீர் கசாயம் அல்லது மோருடன் கலந்து சாப்பிட கழிச்சல் நீங்கும். காட்டாத்திப் பூக்களை ஒரு கைப்பிடியளவு எடுத்து 500மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து, 100மிலியாக சுண்டியப் பின்பு வடிகட்டி, தினமும் இரண்டு வேளை உணவுக்கு முன்பு குடித்து வர குடல் புண்கள் ஆறும், கடையில் விற்கப்படும் அரிஷ்டம், ஆசவம் போன்றவை தயார் செய்வதற்கு காட்டாத்திப் பூக்களை கசாயம் செய்து சர்க்கரை கரைசலில் கலந்து, புளிக்க வைத்து பயன் படுத்துகின்றனர். இவை உட் கொள்ளும் மருந்தின் தன்மையை எந்தவித உபாதையும் இல்லாமல் குடல் ஏற்றுக் கொள்ள உதவுகின்றன.