ஆப்பரா 10 பீட்டா தொகுப்பு

நீங்கள் ஆப்பரா பிரவுசரைப் பயன்படுத்துபவர் என்றால் உங்களுக்கு அருமையான விருந்து காத்திருக்கிறது. ஆப்பரா சோதனைத் தொகுப்பு 10 வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் வேகத்துடன் கண்களுக்கு விருந்தளிக்கும் பல வசதிகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

சென்ற மாதம் குரோம் பிரவுசர் பதிப்பு 2 வெளியானதை அடுத்து ஆப்பராவின் புதிய பதிப்பிற்கான சோதனை தொகுப்பு வெளியாகி உள்ளது. விண்டோஸ், மேக், லினக்ஸ், சோலாரிஸ் ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான அனைத்து பிரவுசர் தொகுப்புகளும் வெளியாகி உள்ளன. அதன் சில சிறப்பு அம்சங்களை இங்கு காணலாம்.

நம் கண்களை முதலில் கவர்வது புதிய தோற்றம் தரும் அதன் ஸ்கின்கள். சரியான முனை மடிப்புகளுடன் எடுப்பான தோற்றத்துடன் உள்ளது.

பேனல் டிஸ்பிளே பட்டன் முதல் டேப்பிற்கு முன்னால் தரப்பட்டுள்ளது. உங்களுக்குப் பிரியமான தளங்களுக்கு புக் மார்க் அமைக்கிறீர்களா! அவற்றுக்கு இதய வடிவிலான ஐகான்கள் தரப்படுகின்றன. இனி இதன் செயல்பாட்டிற்கு வருவோம்.

இதனைப் பல்வேறு சோதனைக்கு உட்படுத்திய பல சாப்ட்வேர் சோதனையாளர்கள், சோதனைகள் அனைத்திலும் இந்த பதிப்பு நல்ல வேகத்தைக் காட்டியதாக தெரிவித்துள்ளனர். பொதுவாக பிரவுசர்களை ஆசிட் 3 டெஸ்ட், சன்ஸ்பைடர் டெஸ்ட் ஆகியவற்றின் மூலம் சோதனை செய்வார்கள். இவற்றில் இதன் வேகம் மற்ற பிரவுசர்களுக்கு இணையாக இருந்ததாக கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக முந்தைய பதிப்புகளில் ஜிமெயில் பெற மிகத் தாமதமானது. இந்த பதிப்பில் ஜிமெயில் வேகமாக இறக்கப்பட்டு கிடைக்கிறது. கீழாக இடது ஓரத்தில் ஆப்பரா டர்போ ஐகானைக் கிளிக் செய்து பிரவுசரை செட் செய்திடலாம். இதில் உள்ள ஆட்டோமேடிக் ஆப்ஷன் மெதுவாக இன்டர்நெட் இணைப்பு இருந்தால் அதனைக் கண்டறிந்து வேகமாக மாற்றுகிறது. ஆப்பரா டர்போ என்பது சர்வரை துணைக்கு இழுத்து டேட்டாவை கம்ப்ரஸ் செய்து செயல்படுத்தும் தொழில் நுட்பமாகும். டவுண்லோட் செய்யப்படும் பக்கங்கள், அதில் உள்ள இமேஜஸ் ஆகியவற்றை இந்த தொழில் நுட்பம் கண்காணித்து கிடைக்கும் பேண்ட்வித் திறனைக் கொண்டே அவற்றை வேகமாக டவுண்லோட் செய்திட வழி தருகிறது.

ஆப்பரா பிரவுசரில் தான் முதன் முதலில் ஸ்பீட் டயல் வசதி தரப்பட்டது. அதன் பின் குரோம் மற்றும் சபாரியில் தரப்பட்டது. இப்போது வந்துள்ள ஆப்பரா பதிப்பில் 25 ஸ்பீட் டயல் வசதியினை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த டயல் கிரிட்டை 2×2 என்ற அளவில் சிறியதாகவும் 5×5 என்ற அளவில் பெரியதாகவும் அமைத்துக் கொள்ளலாம். இவற்றை மறைத்து வைத்திட Hide Speed Dial உதவுகிறது.

மேலே சொன்ன சில சிறப்பு அம்சங்களுடன் வழக்கமான வசதிகளும் இதில் உள்ளன. ஒவ்வொரு பிரவுசரும் ஏதேனும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி பிரவுசர் சந்தையில் அதிக வாடிக்கையாளர்களைப் பெறத் துடிக்கின்றன.

இவை அனைத்தும் இப்போது கவனம் செலுத்தும் வசதி ஜியோலொகேஷன் என்னும் புதிய தொழில் நுட்பத்தில் தான். ஆப்பரா 10, கூகுள் குரோம் 3, பயர்பாக்ஸ் 3.5 மற்றும் சபாரி ஆகிய அனைத்தும் புதிய பதிப்புகளை விரைவில் இந்த வசதியுடன் வெளியிட உள்ளன. இவை வந்த பின்னரே எது உயர்ந்திருக்கிறது என்று தெரிய வரும்.

One response

  1. […] ஆப்பரா 10 பீட்டா தொகுப்பு […]

%d bloggers like this: