பாப் அப் வழி தூண்டில்கள்

இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில் கம்ப்யூட்டர் இன்பெக்ட் ஆகிவிட்டதாகவும், கம்ப்யூட்டர் மிகவும் ஸ்லோவாக செயல்படுவதாகவும் மெசேஜ் பாப் அப் செய்யப்பட்டு அதற்கு இலவச தீர்வு வேண்டும் என்றால் கிளிக் செய்யவும் என ஒரு லிங்க் அல்லது சிகப்பு கலரில் எக்ஸ் அடையாளம் தரப்படுகிறது. இது உண்மையா? என்ன செய்ய வேண்டும்? இது போன்ற பல கடிதங்கள் கம்ப்யூட்டர் மலர் அலுவலகத்திற்கு வாசகர்களிடமிருந்து வருகின்றன. மேலும் பலர் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு கேட்கின்றனர். இதுவும் வைரஸைப் பரப்புபவர்கள் மற்றும் பிஷ்ஷிங் செய்து பெர்சனல் தகவல்களைத் திருடுபவர்கள் வேலைதான். இவ்வாறு பலமுறை எழுதிய பின்னரும் பலர் அது எப்படி இருக்க முடியும் என்று எண்ணி இந்த செய்தியை உண்மை என நம்பி லிங்க்கில் கிளிக் செய்து பின் விளைவுகளை அனுபவிக்கின்றனர். எனவே சற்று விரிவாக இந்த பிரச்சினையை இங்கு காணலாம்.

கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போது வரும் இத்தகைய தூண்டில் செய்திகள் குறித்து பொதுவாக அனைவருமே அறிந்து வைத்துள்ளனர். அதற்கேற்ப இப்போது ஏமாற்றும் விதமும் அதிகரித்து வருகிறது. இந்த செய்திகளைக் கவனித்தால் அவற்றை அனுப்புபவரின் தந்திரம் தெரியவரும்

1. நாம் உடனடியாகச் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம் மற்றும் அவசரம் என்ற தொனியில் நம்மை எச்சரிக்கும் விதமாக இந்த செய்தி அமைக்கப்பட்டிருக்கும். வைரஸை எடுக்க வேண்டும்; உடனடியாக அப்டேட் ஒன்றை மேற்கொள்ள வேண்டும்; இல்லையேல் கம்ப்யூட்டர் நாசமாகிவிடும் என நம்மை பயம் அடைய வைக்கும் விதமாக இது அமைந்திருக்கும்.

2. பல வேளைகளில் இந்த செய்தி ஓரு பிரபலாமான நிறுவனம் (மைக்ரோசாப்ட், நார்டன், சைமாண்டெக், அடோப், குயிக் டைம் போன்றவை) ஒன்றின் பெயரில் தரப்படும். இது ஒரு ஏமாற்று வேலை. இந்த செய்தியை நன்றாக உற்றுக் கவனித்தால் பல எழுத்துப் பிழைகள் மற்றும் இலக்கண பிழைகள் இருக்கும். புகழ் பெற்ற நிறுவனங்கள் நிச்சயம் இந்த வகை பிழைகளுடன் செய்திகளைத் தர மாட்டார்கள்.

இவை டவுண்லோட் செய்திடச் சொல்லும் புரோகிராமின் பெயர் அல்லது விசிட் செய்யச் சொல்லும் வெப்சைட்டின் முகவரியினை காப்பி செய்து கூகுள் சர்ச் இஞ்சினில் போட்டுப் பார்த்தால் இவை உண்மையா என்பது தெரியவரும்.

எனவே இது போன்ற மெசேஜ் பாப் அப் ஆகி வருகையில் என்ன செய்திட வேண்டும்?

1. உங்கள் மவுஸின் கர்சரை எந்தக் காரணத்தைக் கொண்டும் லிங்க் அருகே கொண்டு செல்ல வேண்டாம்.

2. விண்டோவின் எந்த இடத்திலும் மவுஸைக் கிளிக் செய்திட வேண்டாம். செய்தால் உடனே நம்மைக் கவிழ்க்கும் புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோட் ஆகத் தொடங்கும்.

3. உடனடியாக ஆல்ட்+எப்4 கீகளை அழுத்துங்கள். அந்த விண்டோ அல்லது பிரவுசர் மூடப்படும். பின் மீண்டும் உங்கள் பிரவுசரை இயக்கி இன்டர்நெட் பிரவுஸ் செய்திடலாம்.

அல்லது கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.

1. விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைத் திறக்கவும். இதற்கு Ctrl+Alt+Del கீகளை அழுத்தவும்.

2. கிடைக்கும் விண்டோவில் Applications டேப்பில் இடது கிளிக் செய்திடவும்.

3. உங்கள் பிரவுசர் புரோகிராம் மீது இடது கிளிக் செய்திடவும்; அல்லது நீங்கள் பிரச்சினை என்று முடிவு செய்திடும் புரோகிராம் மீது கிளிக் செய்திடவும். இந்த புரோகிராம் ஹைலைட் ஆகும். பெரும்பாலும் இது நீல நிறத்திற்குச் செல்லும்.

4. அடுத்து End Task பட்டனில் கிளிக் செய்திடவும். புரோகிராம் மூடப்படும்.

உங்கள் கம்ப்யூட்டரில் பயர்வால் மற்றும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் எப்போதும் அப் டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் உங்கள் பிரவுசரில் இது போன்ற பாப் அப் விண்டோக்கள் வராதவாறு தடை செய்திடும் வசதி இருக்கும். அதனை இயக்கி வைக்க வேண்டும்.

இது போல பிரவுசரில் பாப் அப் தடை செய்யப்பட்டிருந்தாலும் இயங்கும்படி இந்த கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் செட் செய்யப்பட்டிருக்கலாம். எனவே பிரவுசரில் தடை செய்யப்பட்ட பின் வரும் பாப் அப் செய்திகள் எல்லாம் உண்மையானவை என்று எண்ண வேண்டாம்.ஏற்கனவே உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராமுடன் இன்னொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை கம்ப்யூட்டரில் வைத்துக் கொள்ளுங்கள். இதனை பத்து நாட்களுக்கு ஒரு முறை இயக்குங்கள். இதனால் எப்போது இயங்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமிற்குத் தப்பிக்கும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் இதில் மாட்டிக் கொள்ளலாம். இதற்கு மால்வேர் பைட்ஸ் (Malwarebytes) என்ற புரோகிராம் சிறப்பாக உதவிடுகிறது. இதனை இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். இந்த புரோகிராமினைப் பெற அணுக வேண்டிய முகவரி: http://malwarebytes.org. இந்த புரோகிராமின் செயல்பாடுகள் குறித்த விளக்கங்களும் புரோகிராம் பைலும் இந்த தளத்தில் கிடைக்கின்றன.

இன்டர்நெட் தொடர்புகள் அறிய

இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து தளங்களுக்குச் சென்று அரிய தகவல்களைப் பெறுவது என்பது அனைவரும் விரும்பும் குஷியான சமாச்சாரமாக மாறிவிட்டது. யாராவது இந்த இன்டர்நெட் இணைப்பு எப்படி எந்த கம்ப்யூட்டர் வழியாகப் போகிறது என்று ஒரு நிமிடம் எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? பரந்து விரிந்த உலக இன்டர்நெட் கட்டமைப்பில் எந்த எந்த கம்ப்யூட்டர் வழியே ஓர் இணைப்பு கிடைக்கிறது என்று அறிய எல்லாருக்கும் ஆவலாகத்தான் இருக்கிறது. ஆனால் அதனை எளிமையான முறையில் எப்படி அறிவது? அதற்கான தொழில் நுட்பத்தை எல்லாம் கற்றுக் கொள்ளாமல் எப்படி தெரிந்து கொள்வது?

இத்தகைய கேள்விகளுக்குப் பதில் அளிக்கத்தான் இணையத்தில் ஒரு சாப்ட்வேர் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இன்டர்நெட் தொடர்பில் இருக்கையில் கம்ப்யூட்டரின் பாதுகாப்பினை அறியவும் இந்த புரோகிராம் உதவுகிறது. இந்த புரோகிராமின் பெயர் TCPView. இதனை இலவசமாக இறக்கிப் பதியலாம்.

எளிதாக இயக்கவும் செய்திடலாம். இந்த புரோகிராம் இயங்குகையில் நமக்கு ஒரு நீண்ட பட்டியல் கிடைக்கிறது. இதனை மேலோட்டமாகப் பார்த்தால் கம்ப்யூட்டர் தொழில் நுட்பச் சொற்கள் அடங்கிய பட்டியல் போல் தெரியும். ஆனால் ஒவ்வொரு வரியும் உங்கள் கம்ப்யூட்டர் இன்டர்நெட் தொடர்பில் எதனை எல்லாம் தொடர்பு கொண்டு செயல்படுகிறது என்று காட்டுவதைக் காணலாம்.

நீங்கள் இன்டர்நெட்டில் இருக்கையில் சேட் கிளையண்ட் புரோகிராம் இயங்கலாம். அதற்கான நெட்வொர்க் தொடர்புகள் காட்டப்படும். அதே நேரத்தில் சில தளங்களுக்குச் சென்று நீங்கள் தகவல்களை எடுத்து சேட் செய்திடும் நண்பருக்கு அனுப்ப முயற்சிக்கலாம். அந்த தொடர்பு காட்டப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு கம்ப்யூட்டர் தொடர்பு கொள்ளும் நெட்வொர்க் கம்ப்யூட்டர்களை எல்லாம் கண்காணித்துக் கொண்டு இருக்கும். அந்த வரிசையும் காட்டப்படும்.

இதில் இன்னொரு நன்மையும் உண்டு. நமக்குத் தெரியாமல் நம் கம்ப்யூட்டரில் அமர்ந்து கொண்டு இயங்கும் புரோகிராம்களும் நம் இன்டர்நெட் வழியாகத்தானே நம் தகவல்களை அனுப்புகின்றன. இந்த தொடர்பு வரிசையைக் கண்டு கொண்டால் அது எங்கே செல்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம். எனவே நீங்கள் டி.சி.பி. வியூ புரோகிராமினைப் பதிந்து ரெகுலராக அதனைக் கவனித்து வந்தால் புதிதாக ஏதேனும் ஒரு கம்ப்யூட்டர் உங்கள் இன்டர்நெட் பாதையில் தெரிந்தால் உடனே உஷாராகி அதனை அப்புறப்படுத்தலாம்.

இந்த புரோகிராமில் உங்களுக்கு ஆர்வம் உள்ளதா? உடனே http://technet.microsoft.com/enus/sysinternals/bb897437.aspx என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று இதனை டவுண்லோட் செய்து பதிந்து இயக்கவும்.

%d bloggers like this: