புதுக்கம்ப்யூட்டர் வீட்டுக்கு குடி போறீங்களா!


வீட்டில் பயன்பாட்டில் உள்ள கம்ப்யூட்டர் வாங்கி மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டால் அது பழைய மாடலாகி விடுகிறது. கூடுதல் திறன் கொண்ட புதிய கம்ப்யூட்டருக்கு மாற விரும்புகிறோம். யாருக்குத்தான் ஆசை இருக்காது. சரி, புதிய கம்ப்யூட்டர் வாங்கிவிடுகிறோம். அதற்காக பழைய கம்ப்யூட்டரை அப்படியே விட்டுவிட முடியுமா? நாம் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் பணிகள் தொடர வேண்டுமானால் பழைய வீட்டிலிருந்து பொருட்களைப் புதிய வீட்டிற்குக் கொண்டு வருவது போல புரோகிராம்களையும் பைல்களையும் புதிய கம்ப்யூட்டருக்கு மாற்ற வேண்டுமே. எதை எல்லாம் கட்டாயம் மாற்ற வேண்டும்? எதை எல்லாம் விருப்பமிருந்தால் மாற்றலாம்? அப்படி மாற்றுகையில் என்ன என்ன பாதுகாப்பு வழிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பார்ப்போமா!

புதுக் கம்ப்யூட்டரை இன்ஸ்டால் செய்தவுடன் நம்மில் பலர் அதில் மாற்றப்பட்ட அல்லது இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களை இயக்கிப் பார்க்க மாட்டோம். உடனடியாக இன்டர்நெட் இயங்குகிறதா என்று பார்ப்போம். இங்குதான் பிரச்சினக்கு பிள்ளையார் சுழி போடப்படுகிறது. இன்டர்நெட்டில் தான் நம் கம்ப்யூட்டரைக் கைப்பற்றும் பல அரக்கர்கள் இருக்கிறார்களே! அப்படியானால் சரியான முறையில் நம் கம்ப்யூட்டரின் பாதுகாப்பினை அமைக்காமல் உடனே இன்டர்நெட் செல்வது தவறு அல்லவா!

சோபோஸ் (Sophos)  என்னும் ஸ்வீடன் நாட்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் புதியதாக இயக்கப்படும் கம்ப்யூட்டர்களில் 50% கம்ப்யூட்டர்கள் பத்து நிமிடங்களில் இன்டர்நெட் சென்று அடுத்த ஐந்து நிமிடங்களில் ஏதேனும் ஒரு மால்வேர் தொகுப்பினால் பாதிக்கப்படுகின்றன என்று கண்டறிந்துள்ளது. என்ன, பயமாக இருக்கிறதா! கவலைப்பட வேண்டாம். இது போன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்கும் வழியாகக் கீழ்க்காணும் வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.

பழைய கம்ப்யூட்டரிலிருந்து என்ன வேண்டும்? பழைய கம்ப்யூட்டரில் அது வாங்கப்பட்ட நாளிலிருந்து இன்ஸ்டால் செய்தவை அனைத்தும் இருக்கும். பல வெகு மாதங்களாகப் தேவைப்படாததால் பயன்படுத்தப்படாமல் இருக்கும். எனவே அனைத்து புரோகிராம்களையும் மற்றும் டேட்டா பைல்களையும் முழுமையாகப் பார்வையிட்டு எவை எல்லாம் அவசியமாகத் தேவைப்படும் என முடிவு செய்திடவும். இதில் டேட்டா பைல்களை நாம் சிடியில் காப்பி செய்து மாற்றி விடலாம். ஆனால் புரோகிராம்களை மாற்ற நமக்கு அவற்றின் ஒரிஜினல் சிடிக்கள் அல்லது புரோகிராம்கள் தேவைப்படும். இனி எப்படி மாற்றுவது என்று பார்ப்போமா!

1. பைல்கள் மாற்றம்: பழைய கம்ப்யூட்டரில் உள்ள பல டேட்டா பைல்களை புதிய கம்ப்யூட்டருக்கு மாற்ற விரும்புவீர்கள். அல்லது அவற்றை சிடியில் பதிந்து வைத்திட திட்டமிடுவீர்கள். இவற்றை முதலில் சரியாக வகை செய்திட வேண்டும். அவை உருவான நாள் அடிப்படையில், டேட்டா எதனைப் பற்றியது என்பதன் அடிப்படையில், பயன்படுத்துபவரின் அடிப்படையில் என வகைப் படுத்த வேண்டும். இவற்றுக்கு சரியான லேபிள் கொடுப்பது நல்லது. உங்களுக்குப் பிடித்தமான மற்றும் தேவைப்படும் படங்கள், டாகுமெண்ட்கள், மியூசிக் பைல்கள், வீடியோ கிளிப்கள், சினிமா பைல்கள், வெப்சைட் பேவரைட் சைட்கள் என இவை பலவகைப்படும். குறிப்பாக உங்கள் பழைய கம்ப்யூட்டரை விற்கப் போகிறீர்கள் என்றால் இதுதான் உங்கள் பைல்களைப் பெற கடைசி சான்ஸ் இல்லையா! எனவே கவனமாக அனைத்தையும் வகைப்படுத்தி சிடியில் காப்பி செய்திடுங்கள். பின் பழைய ஹார்ட் டிஸ்க்கை முற்றிலுமாக பார்மட் செய்திடுங்கள். அனைத்து பைல்களையும் கவனமாக வகைப்படுத்தி சிடிக்களில் பதிந்து கொண்டீர்களா. அனைத்திற்கும் டைரக்டரி, போல்டர் மற்றும் பைல்கள் லிஸ்ட் வைத்துக் கொள்வது நல்லது. இதன் துணை கொண்டு பழைய கம்ப்யூட்டரிலிருந்து தேவைப்படும் பைல்கள் எல்லாம் சிடியில் காப்பி ஆகிவிட்டதா என்று சோதனை செய்து கொள்ளலாம்.

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்களில் சில இன்டர்நெட்டிலிருந்து டவுண்லோட் செய்யப்பட்டு இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கலாம். அவற்றின் டவுண்லோட் செய்யப்பட்ட ஒரிஜினல் பைல்கள் இருந்தால் அவற்றை மொத்தமாக ஒரு தனி சிடியில் காப்பி செய்து எடுக்கவும். இவற்றைக் கொண்டு உங்களுக்குத் தேவைப்பட்ட புரோகிராம்களை தேவைப்படும் பொழுதில் இன்ஸ்டால் செய்திடலாம்.

2. டெமோ விளம்பரப் புரோகிராம்களை நீக்குக: இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்திடுகையில் சில புரோகிராம்கள் நமக்கு பல பயன்பாடுகளைத் தருவதாக விளம்பரப்படுத்தி நம்மை இன்ஸ்டால் செய்திட தூண்டும் வகையில் இருக்கும். நாமும் இலவசம் தானே என்று இன்ஸ்டால் செய்திடுவோம். இயக்கிப் பார்க்கையில் இவை ஒரு வாரம் அல்லது 15 நாட்கள் மட்டுமே இலவசமாக இயங்கும் என அறிவிப்பு வரும். அதற்குப் பின் வேண்டும் என்றால் கட்டணம் செலுத்தச் சொல்லி கேட்கும். பின்னர் இதனை அன் இன்ஸ்டால் செய்திடாமல் வைத்திருப்போம். இந்த மாதிரி புரோகிராம்களை த்தொடர்ந்து வைத்திருப்பதால் எந்தப் புண்ணியமும் இல்லை. இத்தகைய புரோகிராம்களைக் கண்டறிந்து அவற்றை அழித்திட வேண்டும். புதிய கம்ப்யூட்டருக்குக் கொண்டு செல்லக் கூடாது.

3. புதிய கம்ப்யூட் டரைப் பாதுகாக்கும் வழிகள்: புதிய கம்ப்யூட்டரை இயக்கும் முன் அதனைப் பாதுகாக்கும் படைகளைச் சரியாக அமைக்க வேண்டும். சில வேளைகளில் கம்ப்யூட்டர் தரும் நிறுவனங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் ஒரு சில இத்தகைய பாதுகாப்பிற்கான சாப்ட்வேர் தொகுப்புகளைப் பதிந்திருக்கலாம். ஆனால் நீங்கள் ஏற்கனவே சில தொகுப்புகளுக்குப் பழகிவிட்டதால் அவற்றையே இன்ஸ்டால் செய்வது நல்லது. முதலில் எத்தகைய பாதுகாப்பு வளையங்கள் வேண்டும் எனப் பார்க்கலாம்.

அ) ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு: வைரஸ்களுக்கு எதிரான ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும். கட்டணம் செலுத்தி வாங்கியிருந்தால் அவற்றின் சிடி கொண்டு பதிந்துவிட்டு பின் அதனை உடனே அப்டேட் செய்திட வேண்டும். இலவசமாக டவுண்லோட் செய்திருந்தால் அந்த புரோகிராமினை காப்பி செய்து அல்லது சிடியில் இருந்தவாறே இன்ஸ்டால் செய்திட வேண்டும்.

ஆ) பயர்வால்: உங்கள் கம்ப்யூட்டருக்குள் நுழைய முயற்சிக்கும் கெடுதல் விளைவிக்கும் பைல்களைத் தடுத்து நிறுத்தும் சாப்ட்வேர் அல்லது ஹார்ட்வேர் சாதனமே பயர்வால். தொடர்ந்து பிராட்பேண்ட் இணைப்பில் உங்கள் கம்ப்யூட்டர் இருக்கப் போகிறது என்றால் இந்த பயர்வால் கட்டாயம் தேவை. விண்டோஸ் சர்வீஸ் பேக் 2 தரும் பயர்வால் இந்தத் தேவையை நிறைவேற்றும் என் றாலும் பல இலவச பயர்வால் தொகுப் புகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றை நிறுவலாம்.

இ) ஸ்பைவேர் பாதுகாப்பு: உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பெர்சனல் தகவல்களைத் திருடி அதன் மூலம் உங்கள் பணத் தைக் கறக்கும் புரோகிராம்கள் அடிக்கடி இன்டர்நெட் இணைப்பில் இருக்கும்போது வரலாம். இதனைத் தடுத்து நிறுத்த ஸ்பைவேர் பாதுகாப்பு புரோகிராம்கள் தேவை. இவையும் இலவசமாகக் கிடைக்கின்றன. மேலும் எக்ஸ்பி அல்லது விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் வைத்திருப்பவர்கள் அவற்றிற்கான அப்டேட் பேட்ச் பைல்களை உடனடியாகப் பெற்று இணைக்க வேண்டும். ஏனென்றால் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்திடும் பணியை இந்த பேட்ச் பைல்கள் மேற்கொள்கின்றன. இவற்றை இணைக்காவிட்டால் நம் கம்ப்யூட்டர் யாரும் நுழையும் திறந்தவீடாக மாறிவிடும்.

4. யூசர் அக்கவுண்ட் ஏற்படுத்தி அட்மினிஸ்ட்ரேட்டரைப் பாதுகாக்கவும்: நீங்கள் வாங்கிய புதிய கம்ப்யூட்டரில் ஏற்கனவே ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதியப்பட்டிருக்கலாம். அநேகமாக அது அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டாக இருக்கும். மற்றவர்கள் அதனைப் பயன்படுத்தக் கூடாது. எனவே அதனைப் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாத்துவிட்டு மற்றவர்கள் மற்றும் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் பயன்படுத்த சில யூசர் அக்கவுண்ட்களை ஏற்படுத்தி வைக்கவும். இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்கள் உங்கள் சிஸ்டத்தில் தேவையற்ற மாறுதல்களை ஏற்படுத்துவதைத் தடுக்கலாம்.

5. கூடுதல் பயர்வால் பாதுகாப்பு: விண்டோஸ் அல்லது சாப்ட்வேர் பயர்வால் பாதுகாப்புடன் ரௌட்டர் அல்லது ஹார்ட்வேர் பயர்வால் ஒன்றையும் கூடுதலாக ஏற்படுத்தலாம். இவை ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் ஹார்ட்வேர் பாதுகாப்பினைக் காட்டிலும் கூடுதலான பாதுகாப்பினை ஏற்படுத்தித் தரும். இரண்டு வகைப் பாதுகாப்பும் இணைந்தே செயல்படும்.

என்ன! புதிய கம்ப்யூட்டர் வாங்கி உடனே பயன்படுத்தலாம் என்று முனைந்தால் இவ்வளவு வேலை பார்க்க வேண்டுமா என்று சலித்துக் கொள்கிறீர்களா! ஆம், பார்த்துத்தான் ஆக வேண்டும். இல்லை என்றால் என்றும் தொல்லை தரும் அனுபவமாக உங்கள் கம்ப்யூட்டர் பயன்பாடு இருக்கும், பரவாயில்லையா?

%d bloggers like this: