Daily Archives: ஜூலை 2nd, 2009

உங்க பேச்சை மத்தவங்க கேட்கவே மாட்டேங்குறாங்களா?


ஹாய் பிரண்ட்ஸ், இந்த வாரம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசப்போறோம். சில பேர் நல்லவங்களா இருந்தாலும், படிச்சவங்களா இருந்தாலும், ஏன் அறிவாளியா இருந்தாக் கூட அவங்களோட பேசுவற்கும், அவர்களது பேச்சை கேட்பதற்கும் பலரும் விரும்புவதில்லை.

காரணம், அவங்களுக்கு மத்தவங்ககிட்ட எப்படி உரையாட வேண்டும்? எப்படிப் பேசினால், நமது பேச்சை மற்றவர்கள் கேட்பர் என்பது தெரியாதது தான். அதனால, மத்தவங்ககிட்ட பேசும் போது, சில விஷயங்களை நாம் ஞாபகத்துல வச்சுக்கணும். அப்படி நாம பேசும் போது தான், நம்மகிட்ட மத்தவங்க நட்புறவோட பேசுவாங்க.

அதுமட்டுமில்லாம, நம்மள பத்தின உயர்வான எண்ணமும் மத்தவங்க மனதுல தோன்றும். அப்படி என்ன செய்யணும்னு கேக்கிறீங்களா? இதோ சில டிப்ஸ் உங்களுக்காக…

முடிந்தவரை குரலைத் தாழ்த்தி, இனிமையாகப் பேச பழக வேண்டும். அப்படிப் பேசுவது தான் நம்மைப் பண்புள்ளவராகக் காட்டும். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், இந்நிலையிலிருந்து, நாம் மாறக் கூடாது. உணர்ச்சி வசப் பட்டு ஆவேசத்துடன் கூச்சலிட்டுப் பேசினால், அது கேட்க சங்கடமாக இருப்பதுடன், நம்மைப் பற்றிய நல்ல அபிப்ராயம் மாறுவதற்கு நாமே காரணமாக மாறிவிடுவோம்.

சில பேர் பேசும்போது, மத்தவங்களுக்கு புரியுதா, புரியலயா அப்படிங்கற பத்தியெல்லாம் கவலைப்படாம படபடன்னு பேசிக்கிட்டடே இருப்பாங்க. இத்தகையப் பேச்சு கேட்பவருக்கு எரிச்சலைத் தரும். அதனால, அவங்க கேட்பதை பாதியிலேயே நிறுத்திடுவாங்க. அதனால, மத்தவங்களுக்குப் புரியும்படி தெளிவா பேசணும். அப்ப தான் நமது பேச்சை விரும்பிக் கேப்பாங்க.

மத்தவங்களோட நாம பேசும் போது, எந்த விதமான தயக்கமோ, தங்கு தடையோ இன்றி சரளமாகப் பேச வேண்டும். அத்தகைய பேச்சுதான், நமது பேச்சில் உள்ள உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும்.

இல்லாவிட்டால், நமது பேச்சில் உண்மை இல்லை என்று கேட்பவர் நினைக்கத் தோன்றும்.

மற்ற நபர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, இடையிடையே பேசாதீர்கள். அப்படி பேசுவதோ அல்லது முணுமுணுப்பதோ தவறான செயலாகும்.

மற்றவர்களுடன் உரையாடும் போது, நாம் பேசுவது தான் நியாயம். அடுத்தவர் பேசுவதில் நியாயமே இல்லை என்ற ரீதியில் பேசக் கூடாது. இந்த உணர்வு நமது பேச்சில் பிரதிபலித்தால், நம்முடன் பேசவோ, பழகவோ யாருமே முன் வரமாட்டார்கள். இதனால், பாதிப்பு நமக்குத் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மற்றவர்களிடம் பேசும்போது, ஆக்ரோஷமான விவாதங்களைத் தவிர்க்க வேண்டும். அப்படி பேசும் போது, நல்ல நண் பர்களைக் கூட இழக்க நேரிடலாம்.

சிலர் பேசும் போது, மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காமல், தாங்கள் மட்டும் பேசிக் கொண்டிருப்பர்.

இதனால், கேட்பவர் எரிச்சல் அடைவது மட்டுமின்றி, கேட்பதை நிறுத்திவிடுவர்.

எனவே, நம்மிடம் உள்ள இதுபோன்ற குறைகளை நீக்கிவிட்டு மற்றவர்களுடன் உரையாட வேண்டும்.

அப்போது தான், நாம் அறிவாளியாகவே இருந்தால் கூட, மற்றவர்கள் மத்தியில் நம் பேச்சு எடுபடும்.

இவங்க இன்னும் கொஞ்சம் பேச மாட்டாங்களா, என்ற உணர் வினை நமது பேச்சை கேட்பவருக்குத் தோற்றுவிக்க வேண்டும். அப்படிப் பேசுவது தான் நாம் பேசும் பேச்சின் வெற்றிக்கு அடிப்படை என்பதை நினைவில் வைத்துப் பேசுவோம். வெற்றியடைவோம். வாழ்க்கை வாழ்வதற்கே!

பதவியில் இருந்தாலும் பக்தி வேண்டும்! (ஆன்மிகம்)

பக்தர்களின் உள்ளங்களை உருக வைத்த திருவாசகத்தை உலகுக்கு அளித்தவர் மாணிக்கவாசகர். “திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்ற பழமொழி ஒன்றே அவரது பெருமையை உலகுக்கு உணர்த்த போதுமானது.

மதுரை அருகிலுள்ள திருவாதவூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர் மாணிக்க வாசகர். இங்குள்ள மக்கள் சிவபக்தியில் ஊறியவர்கள். மாணிக்கவாசகரின் தந்தை தன் மகனுக்கு ஊரின் பெயரையே வைத்தார். “திருவாதவூரார்’ என்பதே அவர் பெயர். மிகச்சிறப்பாகக் கற்றுத் தேர்ந்த வாதவூராரை தன் முதலமைச்சராக நியமித்துக் கொண் டான் அரிமர்த்தன பாண்டிய மன்னன்.

பெரிய பதவியில் இருப்பவர் கள் சுகத்தை அனுபவிக்க விரும்புவதே வழக்கம். ஆனால், “இப்பிறவி எதற்காக வந்தது, நாம் யார், எங்கிருந்து வந் தோம், இந்த உடல் தரப்பட்டது யாரால், மீண்டும் எங்கே செல்லப் போகிறோம், இப்போது வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளது தானா?’ போன்ற கேள்விகளைத் தனக் குள் எழுப்பிக் கொண்டார் வாதவூரார். இதற்குரிய விடையும் கிடைத்தது.

இந்தப் பிறவி அர்த்தமற்றது. பிறவியை விடுத்து, இறைவனிடம் இரண்டறக் கலந்திருப்பதே நிரந்தர இன்பம் எனக் கருதினார். இறைவனை அடைய ஒரே வழி சைவ நெறியைக் கடைபிடிப் பதே என்பதை உணர்ந்தார்.

இதனிடையே அரசாங்கத் தின் குதிரைப்படையை பலப் படுத்த பலரக குதிரைகள் வாங் கும் பொறுப்பு வாதவூராரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் பெரும் பணத்துடன் படைகள் சூழ, முத்துப்பல்லக்கில் அமர்ந்து புறப்பட்டார். வழியில் ஆவுடையார் கோவில் என்னும் தலம் வந்தது. அங்குள்ள குருந்தமரத்தடியில், அந்தணர் வடிவம் கொண்டு தன் சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார் சிவபெருமான். அதைப் பார்த்த தும், வாதவூராரை தெய்வீக உணர்வு ஆட்கொண்டது.

அந்த அந்தணரின் பாதங் களைப் பணிந்தார். மிக அருமையான பாடல்களைப் பாடினார்.

“பெருமானே! என்னிடம் தகாத குணங்கள் இருப்பதாக நீ கருதினால் அவற்றை அகற்றி, நல்லுணர்வைக் கொடு. துன்பம் வரும் வேளையில் மட்டுமல்ல, இன்பமாய் இருக்கும் வேளையிலும் உன் நினைவு நிலைத் திருக்க வேண்டும்; உனக்கே என்றும் தொண்டு செய்ய வேண் டும்…’ என்ற பொருளில் பல பாடல்களைப் பாடினார்.

அது கேட்டு அந்த அந்தணர் பரவசம் கொண்டார். “வாதவூரானே! உன் வாசகம் ஒவ் வொன்றும் மாணிக்கம் போன் றது. இனி, நீ, “மாணிக்கவாசகன்’ என்று அழைக்கப்படுவாய்…’ என்றார். மாணிக்கவாசகர் பாடிய அந்தப் பாடல்களே திருவாசம். இதன் பிறகு மாணிக்கவாசகருக்கு பல கஷ்டங்களைத் தந்து சோதித்தார் சிவபெருமான். அத் தனை கஷ்டங்களையும் இனிய முகத்தோடு ஏற்றுக் கொண்ட மாணிக்கவாசகரை தன்னோடு இணைத்துக் கொண்டார் சிவபெருமான்.

ஆனி மாதம் மகம் நட்சத் திரத்தில் இறைவனுடன் கலந் தார் மாணிக்கவாசகர். அந்த நாளில் ஆவுடையார் கோவிலிலும் (புதுக் கோட்டை மாவட்டம்), திருவாத வூர் திருமறைநாதர் கோவிலிலும், மாணிக்கவாசகர் கோவிலிலும், தேனி மாவட்டம் சின்னமனூர் மாணிக்கவாசகர் கோவிலிலும் குருபூஜை நடத்தப்படும். இது தவிர, சிவாலயங்களிலுள்ள நால்வர் சன்னதியில் மாணிக்கவாசகருக்கு பூஜை உண்டு. பதவியில் இருந்தாலும் பக்தியால் பெருமை பெற்ற மாணிக்கவாசகரை வணங்கி சிவனருள் பெறுவோம்.

– டி-பரணிபாலன்