உங்க பேச்சை மத்தவங்க கேட்கவே மாட்டேங்குறாங்களா?


ஹாய் பிரண்ட்ஸ், இந்த வாரம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசப்போறோம். சில பேர் நல்லவங்களா இருந்தாலும், படிச்சவங்களா இருந்தாலும், ஏன் அறிவாளியா இருந்தாக் கூட அவங்களோட பேசுவற்கும், அவர்களது பேச்சை கேட்பதற்கும் பலரும் விரும்புவதில்லை.

காரணம், அவங்களுக்கு மத்தவங்ககிட்ட எப்படி உரையாட வேண்டும்? எப்படிப் பேசினால், நமது பேச்சை மற்றவர்கள் கேட்பர் என்பது தெரியாதது தான். அதனால, மத்தவங்ககிட்ட பேசும் போது, சில விஷயங்களை நாம் ஞாபகத்துல வச்சுக்கணும். அப்படி நாம பேசும் போது தான், நம்மகிட்ட மத்தவங்க நட்புறவோட பேசுவாங்க.

அதுமட்டுமில்லாம, நம்மள பத்தின உயர்வான எண்ணமும் மத்தவங்க மனதுல தோன்றும். அப்படி என்ன செய்யணும்னு கேக்கிறீங்களா? இதோ சில டிப்ஸ் உங்களுக்காக…

முடிந்தவரை குரலைத் தாழ்த்தி, இனிமையாகப் பேச பழக வேண்டும். அப்படிப் பேசுவது தான் நம்மைப் பண்புள்ளவராகக் காட்டும். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், இந்நிலையிலிருந்து, நாம் மாறக் கூடாது. உணர்ச்சி வசப் பட்டு ஆவேசத்துடன் கூச்சலிட்டுப் பேசினால், அது கேட்க சங்கடமாக இருப்பதுடன், நம்மைப் பற்றிய நல்ல அபிப்ராயம் மாறுவதற்கு நாமே காரணமாக மாறிவிடுவோம்.

சில பேர் பேசும்போது, மத்தவங்களுக்கு புரியுதா, புரியலயா அப்படிங்கற பத்தியெல்லாம் கவலைப்படாம படபடன்னு பேசிக்கிட்டடே இருப்பாங்க. இத்தகையப் பேச்சு கேட்பவருக்கு எரிச்சலைத் தரும். அதனால, அவங்க கேட்பதை பாதியிலேயே நிறுத்திடுவாங்க. அதனால, மத்தவங்களுக்குப் புரியும்படி தெளிவா பேசணும். அப்ப தான் நமது பேச்சை விரும்பிக் கேப்பாங்க.

மத்தவங்களோட நாம பேசும் போது, எந்த விதமான தயக்கமோ, தங்கு தடையோ இன்றி சரளமாகப் பேச வேண்டும். அத்தகைய பேச்சுதான், நமது பேச்சில் உள்ள உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும்.

இல்லாவிட்டால், நமது பேச்சில் உண்மை இல்லை என்று கேட்பவர் நினைக்கத் தோன்றும்.

மற்ற நபர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, இடையிடையே பேசாதீர்கள். அப்படி பேசுவதோ அல்லது முணுமுணுப்பதோ தவறான செயலாகும்.

மற்றவர்களுடன் உரையாடும் போது, நாம் பேசுவது தான் நியாயம். அடுத்தவர் பேசுவதில் நியாயமே இல்லை என்ற ரீதியில் பேசக் கூடாது. இந்த உணர்வு நமது பேச்சில் பிரதிபலித்தால், நம்முடன் பேசவோ, பழகவோ யாருமே முன் வரமாட்டார்கள். இதனால், பாதிப்பு நமக்குத் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மற்றவர்களிடம் பேசும்போது, ஆக்ரோஷமான விவாதங்களைத் தவிர்க்க வேண்டும். அப்படி பேசும் போது, நல்ல நண் பர்களைக் கூட இழக்க நேரிடலாம்.

சிலர் பேசும் போது, மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காமல், தாங்கள் மட்டும் பேசிக் கொண்டிருப்பர்.

இதனால், கேட்பவர் எரிச்சல் அடைவது மட்டுமின்றி, கேட்பதை நிறுத்திவிடுவர்.

எனவே, நம்மிடம் உள்ள இதுபோன்ற குறைகளை நீக்கிவிட்டு மற்றவர்களுடன் உரையாட வேண்டும்.

அப்போது தான், நாம் அறிவாளியாகவே இருந்தால் கூட, மற்றவர்கள் மத்தியில் நம் பேச்சு எடுபடும்.

இவங்க இன்னும் கொஞ்சம் பேச மாட்டாங்களா, என்ற உணர் வினை நமது பேச்சை கேட்பவருக்குத் தோற்றுவிக்க வேண்டும். அப்படிப் பேசுவது தான் நாம் பேசும் பேச்சின் வெற்றிக்கு அடிப்படை என்பதை நினைவில் வைத்துப் பேசுவோம். வெற்றியடைவோம். வாழ்க்கை வாழ்வதற்கே!

Follow

Get every new post delivered to your Inbox.

Join 4,056 other followers

%d bloggers like this: