Daily Archives: ஜூலை 5th, 2009

எதிர்நோக்கும் பேராபத்து!- மாவோயிஸ்ட் தீவிரவாதம்

மேற்கு வங்கத்தில் வெடித்திருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதத்தின் பின்னணியும், அதன் பின்விளைவுகளும் வருங்காலத்தைப் பற்றிய சிந்தனையுள்ள எவரையுமே திடுக்கிட வைக்கிறது. கட்சிக்கும் ஆட்சிக்கும் வேறுபாடு இல்லாத நிலைமை ஏற்பட்டால் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்து என்ன என்பதற்கு முன்பு நந்திகிராமும் இப்போது லால்கரும் எடுத்துக்காட்டுகள்.

கடந்த முப்பது ஆண்டுகளாகவே வளர்ச்சி என்கிற பெயரில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. காடுகள் அழிக்கப்படுகின்றன. ஆதிவாசிகளின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன. ஊடகங்கள் நகர்ப்புற, வசதி படைத்த சமுதாயத்தின் பணக்காரப் படாடோபங்களை நாளும்பொழுதும் படம்பிடித்துக் காட்டிக் கொண்டிருப்பதை, அரைவயிற்றுக் கஞ்சிக்கு வழியில்லாமல், வேலையில்லாமல், வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை நாள்தான் பார்த்துப் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்? “முதலாளித்துவம்’ பற்றி வாய்கிழியப் பேசியவர்களே முதலாளிகளாகிவிடும் விபரீதத்தை எத்தனை நாள்தான் சகித்துக் கொண்டிருப்பார்கள்?

கடந்த நவம்பர் மாதம் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியாவின் உயிருக்குக் குறி வைத்துத் தோல்வி அடைந்தனர் மாவோயிஸ்ட்டுகள். அடக்குமுறையை அவிழ்த்துவிட்டது மார்க்சிஸ்ட் கட்சி. கட்சித் தொண்டர்களும், அவர்களுக்கு உதவியாகக் காவல்துறையினரும் அப்பாவி மக்களைக் கைது செய்வதும், வீடுகளில் சோதனைகள் நடத்துவதுமாகச் செய்த இம்சைகளின் விளைவாக உருவானதுதான் காவல்துறை அடக்குமுறைக்கு எதிரான மக்கள் இயக்கம் என்பது. இப்போது, இந்த இயக்கத்தினருடன் மாவோயிஸ்ட்டுகள் கைகோர்த்துக் கொண்டுவிட்டனர்.

மக்கள் இயக்கத்தின் துணையுடன் மாவோயிஸ்ட்டுகள், லால்கரிலுள்ள மார்க்சிஸ்ட் தோழர்கள் மீதும், கட்சி அலுவலகத்தின் மீதும் தாக்குதல் நடத்தி அவர்களை ஊரைவிட்டே ஓடச் செய்துவிட்டனர். இந்த மாவோயிஸ்ட்டுகளின் அட்டகாசம், அடுத்தடுத்த ஊர்களிலும், மாவட்டங்களிலும் பரவத் தொடங்கி இருக்கிறது. ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 900 சதுர கிலோமீட்டர் இப்போது மாவோயிஸ்ட்டுகளின் பிடியில். சத்தீஸ்கரிலுள்ள தண்டேவாடாவுக்குப் பிறகு இது அடுத்த மாவோயிஸ்ட் தளம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிங்குரிலும், நந்திகிராமிலும் நடந்த விஷயங்கள் நமக்குத் தெரியும். மேற்கு வங்கத்தில் உள்ள பிர்பூம் மாவட்டத்தில் போல்புர் என்கிற கிராமம். இந்தக் கிராமத்தில் 9 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகண்டன் சாந்தி நிகேதன் கட்டமைப்பு நிறுவனம் என்கிற தனியார் நிறுவனத்துக்காக, மேற்கு வங்கத் தொழில் வளர்ச்சிக் கழகம் 300 ஏக்கர் விவசாய நிலத்தைக் கையகப்படுத்தியது. வாக்குறுதி அளித்த நஷ்ட ஈட்டைத் தரவில்லை என்பதுடன், பலருக்கும் நஷ்ட ஈடே தரப்படவில்லை என்பதுதான் வேதனை. அதைவிட வேதனை, இன்றுவரை அங்கே எந்தவிதத் தொழிற்சாலையும் நிறுவப்படவும் இல்லை.

விவசாயிகள் பொறுமை இழந்தனர். சுற்றிலும் போடப்பட்டிருக்கும் கம்பி வேலிகளை உடைத்தெறிந்து மீண்டும் விவசாயம் செய்ய முற்பட்டனர். இவர்களைத் தடுத்து நிறுத்தியது காவல்துறை அல்ல, மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள். கைகலப்பும், அடிதடியும் என்று தொடங்கி, தோழர்களுக்கு ஆதரவாகக் காவல்துறையினர் களத்தில் இறங்கி, இப்போது பிரச்னை பூதாகரமாகி இருக்கிறது.

இடதுசாரி அரசின் 32 ஆண்டு ஆட்சியின் மிகப்பெரிய தவறு ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள வேறுபாடு அகற்றப்பட்டதுதான். தங்களுக்குச் சாதகமான அல்லது கட்சி சார்புள்ள அதிகாரவர்க்கத்தை மட்டுமே தங்களைச் சுற்றி வைத்துக் கொண்டனர். காவல்துறை, அரசு இயந்திரம் என்று அனைத்திலும் கட்சித் தொண்டர்கள் நியமிக்கப்பட்டனர். உள்ளூரில் பிரச்னை ஏற்பட்டால் அதை நிர்வாகமோ, காவல்துறையோ தலையிட்டுத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, கட்சியினர் தீர்வு காண்பது என்கிற கலாசாரம் நிலைநிறுத்தப்பட்டது. சிங்குரில், நந்திகிராமில், போல்புரில், இப்போது லால்கரில் என்று இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம், நிர்வாக இயந்திரம் என்பது செயலிழந்துவிட்டதுதான். கட்சித் தொண்டர்களின் கட்டளையை நிறைவேற்றுவதுதான் நிர்வாகத்தின் கடமை என்கிற தவறான கலாசாரத்தால், நல்லது கெட்டது சொல்லவோ, பிரச்னைகளுக்கு நிர்வாக ரீதியான தீர்வு காணவோ வழியில்லாத நிலைமை ஏற்பட்டு விட்டிருக்கிறது.

லால்கரில் மாவோயிஸ்ட்டுகள் தங்களைச் சுற்றி, உள்ளூர் அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு ஏற்பட்டது ஏன்? எப்படி? மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பிகார் மற்றும் ஒரிசாவில் உள்ள தீவிரவாதிகள் மத்தியப் பிரதேசம், ஆந்திரம் மற்றும் சத்தீஸ்கரிலுள்ள தீவிரவாதிகளுடன் கைகோர்த்து கொண்டால் அதன் விளைவுகள் மிகவும் பயங்கரமாக இருக்கும். இவர்களுக்கும், வடகிழக்கு மாநிலங்களிலுள்ள தீவிரவாதிகளுக்குத் தருவதுபோன்ற ஆதரவை சீனா நிச்சயமாகக் கொடுக்கும் என்று நாம் நம்பலாம்.

எழுபதுகளில் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற இடதுசாரிகள் நக்சலைட் இயக்கத்துக்கு ஆதரவளித்து ஆட்சியைக் கைப்பற்றினார்கள். இப்போது இடதுசாரிகளை அரசியல்ரீதியாக எதிர்கொள்ளாமல், இந்தத் தீவிரவாத இயக்கங்களுக்குத் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க முற்படுகிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது. அதற்கு மத்திய அரசும் காங்கிரஸýம் துணைபோகாது என்று நம்புவோமாக.

ஒன்று மட்டும் நிச்சயம். மாவோயிஸ்ட்டுகளின் வளர்ச்சி என்பது இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த சீனா செய்யும் முயற்சி என்பதை நினைவில் வைத்து, அதை வேரறுப்பதில் தயக்கம் காட்டலாகாது!

நன்றி தினமணி

வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!

இருக்கிற வரிகளெல்லாம் போதாதென்று இனி இருசக்கர வாகனங்கள் உள்பட புதிய வாகனங்களைப் பதிவு செய்வதாக இருந்தால் “சாலைப் பாதுகாப்பு வரி’ என்கிற புதிய வரியையும் பொதுமக்கள் தலையில் சுமத்த மாநில அரசு முடிவெடுத்திருக்கிறது. சாலைப் பாதுகாப்பு, சாலை விபத்தில் காயமடைவோர் மற்றும் உயிரிழப்போர் குடும்பத்திற்கு உதவும் வகையில் இந்தப் புதிய வரி விதிப்பு செய்யப்படுவதாக அறிவித்திருக்கிறார் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர். சாலைப் பாதுகாப்பு என்பது காவல்துறையினரின் வேலை. சாலையைச் செப்பனிடுவது மற்றும் பராமரிப்பது என்பது நெடுஞ்சாலைத் துறையின் வேலை. இந்த வேலைக்காகத்தான் வாகன வரியும் ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணமும் ஏற்கெனவே வசூலிக்கப்படுகிறது. போதாக்குறைக்கு ஏனைய பல வரிவிதிப்புகளும் உள்ளன.

காயமடைவோர் மற்றும் உயிரிழப்போர் நலனைப் பேணுவதற்காகத்தான் கட்டாய வாகனக் காப்பீடு செய்யப்படுகிறது. காயமடைவோர் மற்றும் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பது காப்பீடு நிறுவனங்கள்தானே தவிர, மாநில அரசு அல்ல.

அப்படி இருக்க, எதற்காக இப்படியொரு புதிய வரி என்பது புதிராக இருக்கிறது. ஒருபுறம் மதுபான விற்பனை அமோகமாக நடப்பதால், அரசு கஜானா நிரம்பி வழிகிறது என்று மாநில அரசு மார்தட்டிக் கொள்கிறது.

இன்னொருபுறம், இலவசத் திட்டங்களை வாரி வழங்கி அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்த அரசு முயல்கிறது. ஆனால், மற்றொருபுறமோ, இதுபோல தேவையில்லாத அர்த்தமில்லாத வரிகளை மக்கள் மீது சுமத்தி அவர்களின் ஏகோபித்த வயிற்றெரிச்சலையும் வாங்கிக் கட்டிக்கொள்கிறது.

தேர்தலுக்கு முன்னால் பஸ் கட்டணத்தைத் திடீரென்று குறைத்தார்கள். தேர்தல் கமிஷனின் கண்டிப்பினால் குறைத்த கட்டணத்தை மறுபடி உயர்த்தினார்கள். இப்போதுதான் தேர்தல் எல்லாம் முடிந்து, அமோக வெற்றியும் பெற்றாகிவிட்டதே! மக்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக பஸ் கட்டணத்தை முன்பு திட்டமிட்டதுபோல குறைப்பார்களென்று எதிர்பார்த்தால், சம்பந்தாசம்பந்தமே இல்லாமல் இப்படி புதியதொரு வரியை விதிக்கிறது தமிழக அரசு!

சாலைகள் அமைப்பது, கல்வி, சுகாதாரம், குடிநீர் வசதி போன்றவைகளை மக்களுக்கு அளிப்பது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது போன்றவை ஓர் அரசின் அடிப்படைக் கடமையல்லவா? இதற்காகத்தானே வருமான வரி, விற்பனை வரி, சுங்க வரி, வீட்டு வரி, வாகன வரி என்று மக்களிடமிருந்து வரிகள் பல வசூலித்தும் வருகின்றனர்? அதற்குப்பிறகும் சாலைகளில் பயணிக்கக் கட்டணம் வசூலிப்பது ஏன்?

சுற்றுலா வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்கிறது அரசு. மகாபலிபுரத்துக்கு யாராவது பயணிக்க வேண்டுமானால் அதற்கு சுங்கம் (டோல்) கட்டியாக வேண்டும். கேட்டால் கட்டணச் சாலையில் இலவசமாக எப்படி நீங்கள் பயணிக்க நினைக்கலாம் என்று கேட்கிறார்கள்? சாலைகளை அமைத்துப் பராமரிக்கும் அரசின் கடமைக்குக் கட்டாயக் கட்டண வசூல் என்பதே வேடிக்கையாக இல்லை?

வர்த்தக ரீதியிலான வாடகைக் கார்கள், சரக்குப் போக்குவரத்துக்கான வேன்கள், லாரிகள் மற்றும் பஸ்களிடமிருந்து கட்டணம் வசூலித்தால்கூட ஏற்றுக்கொள்ளலாம். தனியார் வாகனங்களிடமிருந்து 20-ம் 30-ம் 40-ம் சாலைக்கட்டணம் என்ற பெயரில் போகும்போதும் வரும்போதும் வசூலிக்கப்படுவது பகல் கொள்ளையல்லவா? இதற்கு அரசாங்கம் எதற்கு, தனியாரிடம் ஆட்சியை ஒப்படைத்து விடலாமே?

“மானியங்கள் ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட வேண்டும். எதுவும் இலவசமாக வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பது சரியல்ல. அது கல்வியானாலும், மருத்துவ வசதியானாலும், சாலைகளானாலும் அதற்கான கட்டணத்தை பொதுமக்கள் தரத்தான் வேண்டும்’ – இது, கடந்த 20 ஆண்டுகளாக உலக வங்கியின் பொருளாதார மேதைகள் நமது ஆட்சியாளர்களுக்குச் சொல்லித் தந்திருக்கும் உபதேசம். அதன் விளைவுதான் பணம் படைத்தால் மட்டுமே இந்தியாவில் வாழ முடியும் என்கிற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.

சாலைப் பாதுகாப்பு வரி என்பது ஓர் அப்பட்டமான மோசடி. சாலை விபத்தில் காயமடைவோர் மற்றும் உயிரிழப்போரின் குடும்பத்தாருக்கு முறையாகவும் விரைவாகவும் வாகனக் காப்பீட்டுக் கழகங்கள் நிவாரணம் அளிக்கிறதா என்பதை அரசு உறுதி செய்தாலே போதும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு முறையாகவும் நியாயமாகவும் அரசு நிவாரணம் கொடுத்தாலே போதும். அதையெல்லாம் விட்டுவிட்டு இதுபோல மோசடியான வரிகளை பொதுமக்கள் தலையில் சுமத்தி அவர்கள் காதில் பூ சுற்ற வேண்டிய அவசியமில்லை!

நன்றி தினமணி

பருவமழை பொய்க்கிறது, ஜாக்கிரதை…

பசிபிக் கடல் பரப்பில் நிலவும் வெப்ப நிலைமைகளின் அடிப்படையில் நிகழாண்டின் தென்மேற்குப் பருவமழை தாமதமாகும் என்பதுடன் சராசரி அளவைக் காட்டிலும் குறைவாகப் பெய்யும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்தக் கணிப்பு பொய்ப்பதில்லை என்பதற்கு முன்னோட்டமாக பிகாரில் இப்போதே கடுமையான வெப்பக் காற்று வீசத் தொடங்கி விட்டது.

இந்த ஆண்டுப் பருவமழை சராசரி அளவைவிடக் குறைவாகப் பெய்வதால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவை இந்தியாவின் வடமேற்கு மத்திய மாநிலங்கள்தான். தமிழ்நாட்டில் சராசரியைவிட 23 சதவீதம் குறைவாகப் பருவமழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளனர்.

பருவமழை குறைந்தால், விளைச்சல் குறையும்; விவசாயிகள் வீட்டு அடுப்பில் பூனை உறங்கும்; பதுக்கல் அதிகரிக்கும்; உணவுப் பொருள் விலை உயரும்; பதுக்கல்காரர்கள் வீட்டில் வெளிச்சம் பெருகும்; மக்கள் தவிப்பார்கள்; அரசியல்வாதிகள் குதிப்பார்கள்.

இதேபோன்று, 2002-ம் ஆண்டில் தென்மேற்குப் பருவ மழையில் தேசிய அளவில் 19 சதவீதம் குறைந்தபோது, இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு பரப்பளவுக்கு வறட்சி ஏற்பட்டது. உணவு உற்பத்தி 7 சதவீதம் குறைந்தது.

பருவமழை குறைந்து நீர்ப்பாசனம் பாதிக்கப்படும் என்றால், பொதுவாக பாதிக்கப்படுவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சாகுபடி செய்யப்படும் நெல் பயிர்தான்.

தமிழ்நாட்டில் வழக்கமாக ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. அணையில் போதுமான நீர் இல்லை. கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மழை வேண்டித்தான் தமிழ்நாட்டு கோயிலுக்கு வந்தேன் என்றும் மழை பெய்தால்தான் காவிரியில் தண்ணீர் என்றும் கூறிச் சென்றுள்ளார்.

தமிழ்நாட்டுத் தெய்வம் கர்நாடகத்துக்கு மழையைக் கொடுத்தாலும், தண்ணீரைக் கொடுப்பார்களா? இந்தச் சூழ்நிலையில் குறுவை சாகுபடி எந்த அளவுக்கு வெற்றிகரமாக அமையும் என்று தெரியவில்லை.

பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, மின்பற்றாக்குறையும் விவசாயிகளுக்கு சேர்ந்து கொண்டுள்ளது. குறுவை சாகுபடிக்காக 16 மணி நேரம் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதி கூறினாலும், இதை தஞ்சை நெற்களஞ்சியப் பகுதியில் மட்டும் அமல்படுத்தினால் பயன் இல்லை.

தமிழ்நாடு முழுவதும் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தஞ்சையைவிட அதிகமான நெல் உற்பத்தியை மற்ற மாவட்டங்கள்தான் வழங்குகின்றன. காவிரிப் பிரச்னைக்குப் பிறகு தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் மாற்றுப்பயிர்களுக்கு மாறியதன் காரணமாக, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்ற பெயர் தஞ்சைக்கு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதே கேள்விக்குறியான விஷயம்.

ஆக, தமிழ்நாட்டில் அனைத்து நெல் சாகுபடியாளர்களும் பயன்பெறும் வகையில் விவசாயத்துக்கு 16 மணி நேரம் மின்சாரம் அளித்தால்தான் உணவு உற்பத்தி குறையாமல் தடுக்க முடியும்.

சராசரியைவிட குறைவாகப் பருவமழை பெய்தாலும் ஏற்கெனவே பெய்துள்ள போதுமான மழை நிலத்தடி நீராக உள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்படாது என்ற கருத்தை வேளாண் வல்லுநர்கள் முன்வைக்கின்றனர்.

இது உண்மையாக இருந்தாலும்கூட, மின்சாரம் இருந்தால்தான் நீலத்தடி நீர் மற்றும் கிணற்றுப் பாசனத்துக்கு வழியுண்டு. குறிப்பாக தொண்டைமண்டலப் பகுதியில் கிணற்று நீரை நம்பித்தான் விவசாயம் செய்யப்படுகிறது. அவர்களுக்கு போதுமான நேரம் மின்சாரம் இல்லாவிட்டால், நிலத்தடி நீரையும் பயன்படுத்த இயலாத சூழ்நிலை உருவாகும்.

பருவமழை குறையும் என்று தெரிந்த பிறகு, யார் யார் என்னென்ன பயிர்களை சில மாதம் கழித்து சாகுபடி செய்யலாம், எந்த மாவட்டத்தில் நிலத்தடி நீர் அதிகம் உள்ளது என்பதை விவசாயிகளுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.

மேலும், பருவமழை குறைகிறது என்று தெரிந்தவுடன் அரிசி, பருப்பை பதுக்கும் வியாபாரத் தந்திரங்கள் எல்லா இடங்களிலும் நடக்கும். பதுக்கும் நபர்களை அடையாளம் காண்பதும், அவற்றைப் பறிமுதல் செய்வதும்தான் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகளைக் கட்டுக்குள் வைக்க உதவும்!

நன்றி தினமணி

மீண்டும் கூட்டுப்பண்ணை…

ரஷியாவில் புரட்சி நடந்து கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயத்திலும் தொழில் வளர்ச்சியிலும் அந்த நாடு படைத்த சாதனைகள் உலக நாடுகளை, அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற ஏழை நாடுகளை வெகுவாக ஈர்த்தன. நாமும் அவர்களைப் போலச் செயல்பட்டு நாட்டின் விவசாய உற்பத்தியையும் தொழில்துறை உற்பத்தியையும் பெருக்க வேண்டும் என்ற பேரவா நமது தலைவர்களுக்கு ஏற்பட்டது.

கூட்டுப்பண்ணை முறையால் சாகுபடி அதிகரிக்கும், உற்பத்தித்திறன் பெருகும் என்று கருதியதால் மக்களிடையே அதைப் பிரசாரம் செய்து இயக்கமாகவே கொண்டுவர விரும்பினார்கள். நாட்டின் முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் விவசாய வளர்ச்சிக்கு முழு அக்கறை செலுத்தப்பட்டது.

பாசன வசதிகள் பெருக்கப்பட்டன. விதைப்பண்ணைகள் உருவாக்கப்பட்டன. உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் விவசாயத்தை ஒரு பாடமாகவே கற்றுத்தர முயற்சிகள் தொடங்கின. விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டன. விவசாயக் கல்லூரிகளும், செயல்விளக்கப் பண்ணைகளும் ஏற்படுத்தப்பட்டன. வேளாண்விரிவாக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், கடன் வசதி ஆகியவை ஒருங்கே கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விவசாயிகளின் விளைபொருள்களைக் கொள்முதல் செய்ய நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டன. விவசாயப் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய மார்க்கெட் கமிட்டிகள் ஏற்படுத்தப்பட்டன.

இத்தனை செய்தும் விவசாயம் என்பது லாபகரமான தொழிலாகவே இல்லாமல் இருக்கிறது. இதற்கு முதல் காரணம் பாரம்பரியமாக விவசாயம் செய்த குடும்பங்களில் சந்ததி பெருகப்பெருக நிலங்களைப் பங்கு போட்டு அவை இப்போது குறுகிக்கொண்டே வந்து, கட்டுப்படியாகக்கூடிய சாகுபடி என்று எதையுமே செய்ய முடியாத அளவுக்கு நிலங்கள் சுருங்கிவிட்டன. அடுத்தது வேளாண் பணிகளுக்குக் கூலி ஆள்கள் கிடைப்பது பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. ஆண்டு முழுவதும் வேலையும் இல்லை, வேலைக்கு ஏற்ற கூலியும் இல்லை என்பதால் விவசாயத் தொழிலாளர்கள் மாற்று வேலைகளுக்குப்போக ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த நிலையில்தான் கூட்டுப்பண்ணை விவசாயத்தை மீண்டும் அறிமுகப்படுத்தினால் என்ன என்ற எண்ணம் ஆந்திர மாநில அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதற்காக புதிய திட்டம் ஒன்றை அது வகுத்திருக்கிறது. இதன்படி விவசாயிகள் இணைந்து தங்களுக்குள் ஒரு சங்கத்தையோ நிறுவனத்தையோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவரவர்களுடைய நிலங்களை இந்த சங்கத்துக்கு அளிக்க வேண்டும். நில அளவுக்கேற்ப, இன்றைய சந்தை மதிப்பில் மதிப்பு கணக்கிடப்பட்டு அவர்களுடைய கணக்கில் “”மூலதன முதலீடு” பற்று வைக்கப்படும். பிறகு நிலங்களில் வரப்புகளை நீக்கி, பெரும் பண்ணையாக மாற்றி பொதுவான முடிவுகளின் கீழ் விவசாய வேலைகள் மேற்கொள்ளப்படும்.

இந்தப் பண்ணைக்குத் தேவைப்படும் கடனை வங்கிகளிடமிருந்து பெற, தொடக்க காலத்தில் மாநில அரசே கணிசமான தொகையை சங்கத்துக்கு மானியமாக வழங்கும். சங்கம் தனக்காக கிடங்குகளைக் கட்டிக்கொள்ளும். எல்லா விவசாயப்பணிக்கும் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். வேளாண் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்களின் உதவி சாகுபடிக்கு பயன்படுத்திக்கொள்ளப்படும். விளைச்சலை விற்பனை செய்ய நவீன சந்தைப்படுத்தல் தொழில்நுட்பங்கள் கையாளப்படும். லாபம் அவரவர் பங்குக்கு ஏற்ற வகையில் பிரித்துக் கொள்ளப்படும்.

இதைச் சொல்வது எளிது, செயல்படுத்துவது கடினம். ஆனால் தொழில்நுட்ப நிபுணர்களின் ஆலோசனைகளும் சங்க உறுப்பினர்களின் தீவிர ஈடுபாடும் இணைந்தால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அரசுக்கும் விவசாயிகளுக்கும் இருக்கிறது. இதற்காக ஓரிரு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது வெற்றிகரமாக அமைந்தால் ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளில் இது விரிவுபடுத்தப்படும். தோல்வியில் முடிந்தால் நிலம் கொடுத்தவர்களுக்கு அவரவர் நிலங்கள் திருப்பி வழங்கப்படும், சங்கம் கலைக்கப்படும், இழப்பை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும்.

இந்த சங்கத்தில் இடம் பெற்றுள்ள உறுப்பினர் எவராவது இடையில் விலக விரும்பினால், தன்னுடைய பங்கு நிலத்தை பிற உறுப்பினர்களுக்கு விற்றுக்கொள்ளலாம். இந்த சங்கத்தின் நடவடிக்கைகளில் மாநில அரசின் குறுக்கீடு மிகவும் குறைவாகவும், ஆதரவு பெரும் அளவிலும் இருக்கும் என்று உறுதி கூறப்பட்டுள்ளது. நிலங்களுக்கு மதிப்பை நிர்ணயிப்பது முதல் சாகுபடியைத் தீர்மானிப்பது, சந்தையில் விற்பது போன்ற அனைத்துச் செயல்களும் வெளிப்படையாகவே நடைபெறும்.

ஆந்திர முதலமைச்சரின் பொருளாதார ஆலோசகரும், மாநில வேளாண் தொழில்நுட்ப இயக்கத்தின் துணைத் தலைவருமான டி.ஏ. சோமயாஜுலு இந்த கூட்டுப்பண்ணை விவசாயத் திட்டத்தில் பெரும் ஆர்வம் காட்டுகிறார். விவசாயிகளுக்கு விவசாயத்தில் கிடைக்கும் வருவாய் குறைந்துவருவதாலும், உற்பத்தித் திறன் அதிகரிக்காமல் தேக்க நிலையை அடைந்துவிட்டதாலும் இந்த முறையைச் சோதனை செய்து பார்க்க முடிவு செய்திருப்பதாக அவர் கூறுகிறார்.

வாரங்கல், கரீம்நகர் மாவட்டங்களில் முல்கானூர் கூட்டுறவுச் சங்கத்தின் வெற்றிகரமான செயல்பாடுகளும், நிஜாமாபாத் மாவட்டத்தில் அங்காபூர் கிராமத்தில் நடந்த கூட்டுறவு முயற்சிகளும் அடைந்த வெற்றியால் உந்தப்பட்டு இந்தச் சோதனையில் இறங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திரத்தில் கிடைக்கும் வெற்றியைப் பொருத்து தமிழகமும் இதைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கலாமா?
நன்றி தினமணி

சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள்

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் மாயாவதி தனக்காக சிலைகள் எழுப்பி இருப்பது தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

லக்னௌவில் அண்மையில் 40 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 6 மாயாவதியின் உருவச் சிலைகள். இந்த 40 சிலைகளுக்கும் ஆன செலவு ரூ. 6.68 கோடி. உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி தனக்காக மட்டும் சிலை அமைத்துக்கொள்ளவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னமான யானை சிலைகளை உயர்தரமான பளிங்குக் கற்களால் அமைக்க உ.பி. மாநில அரசு ரூ. 52 கோடி செலவிட்டுள்ளது.

இந்த விவரங்களை அரசிடம் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றவர்கள் தற்போது நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருக்கிறார்கள். மக்கள் பணம் இவ்வாறு வீணடிக்கப்படலாமா என்பது மனுதாரரின் கேள்வி. இந்த மனுவை ஏற்றுக்கொண்டுள்ள நீதிமன்றம் உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள மற்றொரு குற்றச்சாட்டு, உத்தரப் பிரதேச மாநில பண்பாட்டுத் துறைக்கு சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 194 கோடி வெறுமனே சிலைகள் நிறுவுவதற்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளன. இவ்வாறு மக்கள் வரிப் பணத்தை ஒரு மாநில முதல்வர் தன் சொந்த விருப்பங்களுக்காகச் செலவிடலாமா? என்ற கேள்வியை மனுதாரர் ரவிகாந்த் எழுப்பியுள்ளார்.

சிலைகள் அமைக்கும்போது, சிலைகள் அமைக்கப்படும் இடத்துக்கான விலை, அனுமதிக் கட்டணம் என்று பல்வேறு நடைமுறைச் செலவுகளும் இருக்கவே செய்கின்றன. இவற்றையெல்லாம் சேர்த்தால் வெறும் சிலைகளுக்காக மட்டுமே பல நூறு கோடி ரூபாயை உத்தரப் பிரதேச மாநில அரசு செலவழிக்கிறது என்பதுதான் மனுதாரரின் கேள்வி. இது நியாயமான கேள்விதான்.

மாயாவதி தன் சிலைகளை அமைப்பது குறித்தோ, பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷிராம் சிலைகளை நிறுவுதல் குறித்தோ யாருக்கும் ஆட்சேபனை இல்லை. கட்சிச் சின்னமாகிய யானையை எவ்வளவு பெரிதாகவும் எத்தனை எண்ணிக்கையிலும் அவர் அமைக்கட்டும். ஆனால் இதனைக் கட்சிச் செலவில் அவர் அமைப்பார் என்றால் அதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை. மக்கள் பணத்தை எடுத்து இத்தகைய செலவுகளைச் செய்யும்போதுதான் கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் நேரிடுகின்றன.

மனிதனின் அடிப்படையான வேட்கை இறவா வரம். ஆனால் பிறந்தவர் இறந்தே ஆக வேண்டும் என்கிற சுடுகின்ற உண்மை காரணமாக, இறந்தும் இறவாப் புகழால் வாழ்வதற்கான முயற்சிகளில் இறங்குகிறான். அந்த முயற்சிகள் பல வகையாக அமைகின்றன. படைப்புகளாகவும், சாதனைகளாகவும், வெற்றிகளாகவும், உழைப்பாகவும், விளையாட்டாகவும், உலகின் பெரும்பணக்காரனாக மாறும் தொழில்போட்டியாகவும், உடலை வருத்திக்கொள்ளும் கின்னஸ் சாதனைகளாகவும், கணினியை விஞ்சும் கணிதம் மற்றும் நினைவாற்றல் திறனாகவும், திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெறுவதாகவும் மக்களை அச்சுறுத்தும் ரெüடியாகவும், கடைசியாக அதிகார துஷ்பிரயோகங்களாகவும்கூட இந்தப் புகழ் வேட்கை வெளிப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநில முதல்வர் மாயாவதியைப் பொருத்தவரை சிலைகளின் மூலம் அவரது புகழாசை வெளிப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் என்ற பெருமையை எந்த வரலாறும் மாற்றி எழுதிவிட முடியாது என்ற புரிதல் அவருக்கு இருக்குமேயானால், இதுபோன்ற சிலைகள் மூலமாகத்தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்ற கற்பிதங்களால் அவர் தடம்மாறியிருக்க மாட்டார்.

ஆட்சி மாற்றங்களின்போதும் கலவரங்களின்போதும் அரசியல் மனக்கசப்புகளின் போதும் சிலைகள்தான் அடிகளை வாங்கிக் கொள்கின்றன. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இறந்தபோது, சென்னை அண்ணா சாலையில் இருந்த இன்றைய முதல்வர் கருணாநிதி சிலை இடிக்கப்பட்டது. சேதமான அந்தச் சிலை அகற்றப்பட்ட பிறகு, முதல்வர் கருணாநிதியின் சிலை அங்கே மீண்டும் வைக்கப்படவில்லை. வைக்கப்படும் சிலைகள்எல்லாம் நிரந்தரமாகப் போற்றிப் பாதுகாக்கப்படும் என்று யாராவது நினைத்தால் அது பேதைமை.

“மூலையில் நேரு நிற்பார்.முடுக்கினில் காந்தி நிற்பார்.சாலையில் யாரோ நிற்பார்.சரித்திரம் எழுதப் பார்ப்பார்…’ கவிரயரசர் கண்ணதாசனின் “மண்ணகம் முழுவதும் இன்று மனிதர்கள் சிலை ஆயிற்று’ கவிதையை இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து, அரசியல் தலைவர்களுக்கு கொடுப்பதும்கூட சிலைநோய்க்கு நல்மருந்தாக அமையும்.

சிலை எழுப்பி தலைவர்களைப் பெருமைப்படுத்துகிறார்களா இல்லை நாற்சந்தியில் நிற்க வைத்து அவமானப்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை. சரித்திரத்தின் பக்கங்களில் முத்திரை பதித்தவர்களின் பங்களிப்பை சிலை எழுப்பித்தான் பதிவு செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. அவர்கள் காட்டிய வழியே நடக்காமல் சிலை மட்டும் வைப்பதென்பது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்குமே தவிர ஆக்கபூர்வமான பயன் அளிக்காது.

ரஷியாவில் லெனின் மற்றும் ஸ்டாலின் சிலைகளுக்கு நேர்ந்த கதிதான் இங்கேயும் பல சிலைகளுக்குக் காத்திருக்கிறது என்பதுகூட தெரியாமல் இருப்பவர்களைப் பார்த்து சரித்திரம் சிரிக்கும்; காலம் கேலி செய்யும்.
நன்றி தினமணி