சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள்

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் மாயாவதி தனக்காக சிலைகள் எழுப்பி இருப்பது தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

லக்னௌவில் அண்மையில் 40 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 6 மாயாவதியின் உருவச் சிலைகள். இந்த 40 சிலைகளுக்கும் ஆன செலவு ரூ. 6.68 கோடி. உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி தனக்காக மட்டும் சிலை அமைத்துக்கொள்ளவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னமான யானை சிலைகளை உயர்தரமான பளிங்குக் கற்களால் அமைக்க உ.பி. மாநில அரசு ரூ. 52 கோடி செலவிட்டுள்ளது.

இந்த விவரங்களை அரசிடம் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றவர்கள் தற்போது நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருக்கிறார்கள். மக்கள் பணம் இவ்வாறு வீணடிக்கப்படலாமா என்பது மனுதாரரின் கேள்வி. இந்த மனுவை ஏற்றுக்கொண்டுள்ள நீதிமன்றம் உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள மற்றொரு குற்றச்சாட்டு, உத்தரப் பிரதேச மாநில பண்பாட்டுத் துறைக்கு சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 194 கோடி வெறுமனே சிலைகள் நிறுவுவதற்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளன. இவ்வாறு மக்கள் வரிப் பணத்தை ஒரு மாநில முதல்வர் தன் சொந்த விருப்பங்களுக்காகச் செலவிடலாமா? என்ற கேள்வியை மனுதாரர் ரவிகாந்த் எழுப்பியுள்ளார்.

சிலைகள் அமைக்கும்போது, சிலைகள் அமைக்கப்படும் இடத்துக்கான விலை, அனுமதிக் கட்டணம் என்று பல்வேறு நடைமுறைச் செலவுகளும் இருக்கவே செய்கின்றன. இவற்றையெல்லாம் சேர்த்தால் வெறும் சிலைகளுக்காக மட்டுமே பல நூறு கோடி ரூபாயை உத்தரப் பிரதேச மாநில அரசு செலவழிக்கிறது என்பதுதான் மனுதாரரின் கேள்வி. இது நியாயமான கேள்விதான்.

மாயாவதி தன் சிலைகளை அமைப்பது குறித்தோ, பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷிராம் சிலைகளை நிறுவுதல் குறித்தோ யாருக்கும் ஆட்சேபனை இல்லை. கட்சிச் சின்னமாகிய யானையை எவ்வளவு பெரிதாகவும் எத்தனை எண்ணிக்கையிலும் அவர் அமைக்கட்டும். ஆனால் இதனைக் கட்சிச் செலவில் அவர் அமைப்பார் என்றால் அதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை. மக்கள் பணத்தை எடுத்து இத்தகைய செலவுகளைச் செய்யும்போதுதான் கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் நேரிடுகின்றன.

மனிதனின் அடிப்படையான வேட்கை இறவா வரம். ஆனால் பிறந்தவர் இறந்தே ஆக வேண்டும் என்கிற சுடுகின்ற உண்மை காரணமாக, இறந்தும் இறவாப் புகழால் வாழ்வதற்கான முயற்சிகளில் இறங்குகிறான். அந்த முயற்சிகள் பல வகையாக அமைகின்றன. படைப்புகளாகவும், சாதனைகளாகவும், வெற்றிகளாகவும், உழைப்பாகவும், விளையாட்டாகவும், உலகின் பெரும்பணக்காரனாக மாறும் தொழில்போட்டியாகவும், உடலை வருத்திக்கொள்ளும் கின்னஸ் சாதனைகளாகவும், கணினியை விஞ்சும் கணிதம் மற்றும் நினைவாற்றல் திறனாகவும், திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெறுவதாகவும் மக்களை அச்சுறுத்தும் ரெüடியாகவும், கடைசியாக அதிகார துஷ்பிரயோகங்களாகவும்கூட இந்தப் புகழ் வேட்கை வெளிப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநில முதல்வர் மாயாவதியைப் பொருத்தவரை சிலைகளின் மூலம் அவரது புகழாசை வெளிப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் என்ற பெருமையை எந்த வரலாறும் மாற்றி எழுதிவிட முடியாது என்ற புரிதல் அவருக்கு இருக்குமேயானால், இதுபோன்ற சிலைகள் மூலமாகத்தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்ற கற்பிதங்களால் அவர் தடம்மாறியிருக்க மாட்டார்.

ஆட்சி மாற்றங்களின்போதும் கலவரங்களின்போதும் அரசியல் மனக்கசப்புகளின் போதும் சிலைகள்தான் அடிகளை வாங்கிக் கொள்கின்றன. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இறந்தபோது, சென்னை அண்ணா சாலையில் இருந்த இன்றைய முதல்வர் கருணாநிதி சிலை இடிக்கப்பட்டது. சேதமான அந்தச் சிலை அகற்றப்பட்ட பிறகு, முதல்வர் கருணாநிதியின் சிலை அங்கே மீண்டும் வைக்கப்படவில்லை. வைக்கப்படும் சிலைகள்எல்லாம் நிரந்தரமாகப் போற்றிப் பாதுகாக்கப்படும் என்று யாராவது நினைத்தால் அது பேதைமை.

“மூலையில் நேரு நிற்பார்.முடுக்கினில் காந்தி நிற்பார்.சாலையில் யாரோ நிற்பார்.சரித்திரம் எழுதப் பார்ப்பார்…’ கவிரயரசர் கண்ணதாசனின் “மண்ணகம் முழுவதும் இன்று மனிதர்கள் சிலை ஆயிற்று’ கவிதையை இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து, அரசியல் தலைவர்களுக்கு கொடுப்பதும்கூட சிலைநோய்க்கு நல்மருந்தாக அமையும்.

சிலை எழுப்பி தலைவர்களைப் பெருமைப்படுத்துகிறார்களா இல்லை நாற்சந்தியில் நிற்க வைத்து அவமானப்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை. சரித்திரத்தின் பக்கங்களில் முத்திரை பதித்தவர்களின் பங்களிப்பை சிலை எழுப்பித்தான் பதிவு செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. அவர்கள் காட்டிய வழியே நடக்காமல் சிலை மட்டும் வைப்பதென்பது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்குமே தவிர ஆக்கபூர்வமான பயன் அளிக்காது.

ரஷியாவில் லெனின் மற்றும் ஸ்டாலின் சிலைகளுக்கு நேர்ந்த கதிதான் இங்கேயும் பல சிலைகளுக்குக் காத்திருக்கிறது என்பதுகூட தெரியாமல் இருப்பவர்களைப் பார்த்து சரித்திரம் சிரிக்கும்; காலம் கேலி செய்யும்.
நன்றி தினமணி

%d bloggers like this: