மீண்டும் கூட்டுப்பண்ணை…

ரஷியாவில் புரட்சி நடந்து கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயத்திலும் தொழில் வளர்ச்சியிலும் அந்த நாடு படைத்த சாதனைகள் உலக நாடுகளை, அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற ஏழை நாடுகளை வெகுவாக ஈர்த்தன. நாமும் அவர்களைப் போலச் செயல்பட்டு நாட்டின் விவசாய உற்பத்தியையும் தொழில்துறை உற்பத்தியையும் பெருக்க வேண்டும் என்ற பேரவா நமது தலைவர்களுக்கு ஏற்பட்டது.

கூட்டுப்பண்ணை முறையால் சாகுபடி அதிகரிக்கும், உற்பத்தித்திறன் பெருகும் என்று கருதியதால் மக்களிடையே அதைப் பிரசாரம் செய்து இயக்கமாகவே கொண்டுவர விரும்பினார்கள். நாட்டின் முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் விவசாய வளர்ச்சிக்கு முழு அக்கறை செலுத்தப்பட்டது.

பாசன வசதிகள் பெருக்கப்பட்டன. விதைப்பண்ணைகள் உருவாக்கப்பட்டன. உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் விவசாயத்தை ஒரு பாடமாகவே கற்றுத்தர முயற்சிகள் தொடங்கின. விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டன. விவசாயக் கல்லூரிகளும், செயல்விளக்கப் பண்ணைகளும் ஏற்படுத்தப்பட்டன. வேளாண்விரிவாக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், கடன் வசதி ஆகியவை ஒருங்கே கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விவசாயிகளின் விளைபொருள்களைக் கொள்முதல் செய்ய நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டன. விவசாயப் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய மார்க்கெட் கமிட்டிகள் ஏற்படுத்தப்பட்டன.

இத்தனை செய்தும் விவசாயம் என்பது லாபகரமான தொழிலாகவே இல்லாமல் இருக்கிறது. இதற்கு முதல் காரணம் பாரம்பரியமாக விவசாயம் செய்த குடும்பங்களில் சந்ததி பெருகப்பெருக நிலங்களைப் பங்கு போட்டு அவை இப்போது குறுகிக்கொண்டே வந்து, கட்டுப்படியாகக்கூடிய சாகுபடி என்று எதையுமே செய்ய முடியாத அளவுக்கு நிலங்கள் சுருங்கிவிட்டன. அடுத்தது வேளாண் பணிகளுக்குக் கூலி ஆள்கள் கிடைப்பது பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. ஆண்டு முழுவதும் வேலையும் இல்லை, வேலைக்கு ஏற்ற கூலியும் இல்லை என்பதால் விவசாயத் தொழிலாளர்கள் மாற்று வேலைகளுக்குப்போக ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த நிலையில்தான் கூட்டுப்பண்ணை விவசாயத்தை மீண்டும் அறிமுகப்படுத்தினால் என்ன என்ற எண்ணம் ஆந்திர மாநில அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதற்காக புதிய திட்டம் ஒன்றை அது வகுத்திருக்கிறது. இதன்படி விவசாயிகள் இணைந்து தங்களுக்குள் ஒரு சங்கத்தையோ நிறுவனத்தையோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவரவர்களுடைய நிலங்களை இந்த சங்கத்துக்கு அளிக்க வேண்டும். நில அளவுக்கேற்ப, இன்றைய சந்தை மதிப்பில் மதிப்பு கணக்கிடப்பட்டு அவர்களுடைய கணக்கில் “”மூலதன முதலீடு” பற்று வைக்கப்படும். பிறகு நிலங்களில் வரப்புகளை நீக்கி, பெரும் பண்ணையாக மாற்றி பொதுவான முடிவுகளின் கீழ் விவசாய வேலைகள் மேற்கொள்ளப்படும்.

இந்தப் பண்ணைக்குத் தேவைப்படும் கடனை வங்கிகளிடமிருந்து பெற, தொடக்க காலத்தில் மாநில அரசே கணிசமான தொகையை சங்கத்துக்கு மானியமாக வழங்கும். சங்கம் தனக்காக கிடங்குகளைக் கட்டிக்கொள்ளும். எல்லா விவசாயப்பணிக்கும் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். வேளாண் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்களின் உதவி சாகுபடிக்கு பயன்படுத்திக்கொள்ளப்படும். விளைச்சலை விற்பனை செய்ய நவீன சந்தைப்படுத்தல் தொழில்நுட்பங்கள் கையாளப்படும். லாபம் அவரவர் பங்குக்கு ஏற்ற வகையில் பிரித்துக் கொள்ளப்படும்.

இதைச் சொல்வது எளிது, செயல்படுத்துவது கடினம். ஆனால் தொழில்நுட்ப நிபுணர்களின் ஆலோசனைகளும் சங்க உறுப்பினர்களின் தீவிர ஈடுபாடும் இணைந்தால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அரசுக்கும் விவசாயிகளுக்கும் இருக்கிறது. இதற்காக ஓரிரு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது வெற்றிகரமாக அமைந்தால் ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளில் இது விரிவுபடுத்தப்படும். தோல்வியில் முடிந்தால் நிலம் கொடுத்தவர்களுக்கு அவரவர் நிலங்கள் திருப்பி வழங்கப்படும், சங்கம் கலைக்கப்படும், இழப்பை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும்.

இந்த சங்கத்தில் இடம் பெற்றுள்ள உறுப்பினர் எவராவது இடையில் விலக விரும்பினால், தன்னுடைய பங்கு நிலத்தை பிற உறுப்பினர்களுக்கு விற்றுக்கொள்ளலாம். இந்த சங்கத்தின் நடவடிக்கைகளில் மாநில அரசின் குறுக்கீடு மிகவும் குறைவாகவும், ஆதரவு பெரும் அளவிலும் இருக்கும் என்று உறுதி கூறப்பட்டுள்ளது. நிலங்களுக்கு மதிப்பை நிர்ணயிப்பது முதல் சாகுபடியைத் தீர்மானிப்பது, சந்தையில் விற்பது போன்ற அனைத்துச் செயல்களும் வெளிப்படையாகவே நடைபெறும்.

ஆந்திர முதலமைச்சரின் பொருளாதார ஆலோசகரும், மாநில வேளாண் தொழில்நுட்ப இயக்கத்தின் துணைத் தலைவருமான டி.ஏ. சோமயாஜுலு இந்த கூட்டுப்பண்ணை விவசாயத் திட்டத்தில் பெரும் ஆர்வம் காட்டுகிறார். விவசாயிகளுக்கு விவசாயத்தில் கிடைக்கும் வருவாய் குறைந்துவருவதாலும், உற்பத்தித் திறன் அதிகரிக்காமல் தேக்க நிலையை அடைந்துவிட்டதாலும் இந்த முறையைச் சோதனை செய்து பார்க்க முடிவு செய்திருப்பதாக அவர் கூறுகிறார்.

வாரங்கல், கரீம்நகர் மாவட்டங்களில் முல்கானூர் கூட்டுறவுச் சங்கத்தின் வெற்றிகரமான செயல்பாடுகளும், நிஜாமாபாத் மாவட்டத்தில் அங்காபூர் கிராமத்தில் நடந்த கூட்டுறவு முயற்சிகளும் அடைந்த வெற்றியால் உந்தப்பட்டு இந்தச் சோதனையில் இறங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திரத்தில் கிடைக்கும் வெற்றியைப் பொருத்து தமிழகமும் இதைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கலாமா?
நன்றி தினமணி

%d bloggers like this: