Daily Archives: ஜூலை 7th, 2009

டீன்-ஏஜ் பெண்ணின் பிரச்னை தெரியுமா?


பொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை “டீன்-ஏஜ்’ என்கிறோம். இந்த டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம்.

இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அதனால், பெற்றோராகிய நீங்கள், குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு கவனித்தீர்களோ அதேபோல், இந்தப் பருவத்திலும் கவனிக்க வேண்டியது அவசியம்.

டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன?

* பூப்பெய்துவதில் சில குழந்தைகளுக்கு கால தாமதம் ஏற்படலாம். உடல் உறுப்பு வளர்ச்சி சரியாக இருந்தால் 16 வயது வரை பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி இல்லையெனில், உடன் மருத்துவரை அணுகுவது நல்லது.

* சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். இது எண்ணெய் பசையுள்ள தோல், ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால், இந்த வயதுப் பெண்கள் இதை ஒரு நோய் போல கருதுவர் எனவே, இதுகுறித்து, பெற்றோர்கள் தெளிவாக தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், பருக்களை கிள்ளாமல் இருக்க அறிவுறுத்துவது அவசியம்.

* அடுத்து, இளம் பெண்களுக்கு, தன் சுத்தம் பற்றி தாய்மார்கள் எடுத்துக் கூற வேண்டியது மிக மிக அவசியம். நோய் தொற்று வராமல் இருப்பதற்கு சுகாதாரம் மிக முக்கியம். அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறித்தும் கவனமுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும்.

* தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாக சொல்லித்தர வேண்டும். உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றத்தால், உணர்வுப் பூர்வமாக பலவிதமான மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

எனவே, இந்த பருவத்தில் எல்லோருக்கும் இப்படித் தான் உடல் வளர்ச்சி இருக்கும். இதுகுறித்து கவலைப்பட வேண் டாம் என்பதை பெற்றோர்கள் எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம். அதோடு, வெளியிடங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் கூற வேண்டும்.

* வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களின் டீன்-ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி பேச வேண்டும் மனம் விட்டு பேச வேண்டும். இது அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும் பாசத்தையும் மேம்படுத்தும்.

* இந்த வயதுக்கே உரிய பல்வேறு பிரச்னைகளால், டீன் ஏஜ் குழந்தைகள், பொதுவாக அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால்,ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை சரிப் படுத்துவதுடன் ஹீமோகுளோபின் அளவை 10க்கு மேல் வைத்துக் கொண்டால், படிப்பில் முன்னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு, ஆரோக்கியம் ஆகியவை மேம்படும்.

மூலிகை கட்டுரை-கரையும் ஈறுக்கு, கத்தரி

ஒரு செடி பலமாக இருக்க வேண்டுமென்றால் அதன் வேரை தாங்கி இருக்கும் மண்ணும் பலமாக இருக்க வேண்டும். அதே போல் பல் ஈறு என்னும் பரப்பில் பதிந்து வளரும் பற்கள் பலமாக இருக்க வேண்டுமானால், ஈறும் பலமாக இருக்க வேண்டுமல்லவா? நுண்கிருமிகள் பற்களை கெடுத்து விடாவண்ணம் பற்களுக்கே அரணாக இருக்க கூடிய ஈறுகளை சீராக பாதுகாக்காவிட்டால் பற்கள் கொஞ்ச கொஞ்சமாக ஆட்டம் காண ஆரம்பித்துவிடும். பற்களை வெண்மையாக துலக்கி பாதுகாக்கும் நாம், ஈறுகளை பற்றி அக்கறைப் படுவதில்லை.

பற்களை விட பல் ஈறுகளில் கிருமித்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆகவே பற்களை பாதுகாப்பது போல் பல்ஈறுகளையும் பாதுகாக்க வேண்டும். இனிப்பு பண்டங் களை அதிகம் உண்ணுதல், அமிலம் மற்றும் காரத்தன்மையுள்ள பொருட்களை அதிகம் உட் கொண்டு வாயை சுத்தம் செய்யாமல் இருத்தல், நாட்பட்ட வயிற்றுப் புண்கள், தொண்டை சதை வளர்ச்சி, சைனஸ் நோய், அதைத் தொடர்ந்த குறட்டை, சீரற்ற பல்லமைப்பு, ஸ்டீராய்டு மருந்துகள், பாதரசம், தாமிரம், துத்தநாகம் போன்ற உலோகத்தால் செய்யப்பட்ட மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்ளுதல், வேதிப் பொருட்களால் செய்யப்பட்ட துரித உணவுகள், பதப்படுத்தப் பட்ட உணவுகள், குளிர்பானம் மற்றும் தீவிரகிருமித் தொற்று போன்றவற்றால் பல் ஈறு பாதிக்கப் படுகிறது. பல் ஈறு பாதிப்பதின் அறிகுறியாக பல்லில் வலி, ஈறு பகுதிகளில் வீக்கம் அல்லது கரைவு, வாய் துர்நாற்றம், ஈறில் ரத்தக்கசிவு, பல்லாட்டம் மற்றும் உணவு உட்கொள்ளும் போது வாயில் எரிச்சல் மற்றும் வலி போன்ற தொல்லைகள் தோன்றுகின்றன.

அன்றாடம் பல் துலக்கியப் பின்பு நல்லெண்ணெய் அல்லது திரிபலாச்சூரணம் கலக்கிய நீரால் வாய் கொப்பளிப்பது ஈறை பலப்படுத்தும், ஆனால் இவற்றை விட எளிதில் கிடைக்கக்கூடிய கத்தரிக்காய்தான் ஈறுகளை காப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

சொலனம் மெலோன்ஜினா என்ற தாவரவியல் பெயர் கொண்ட சோலனேசியே குடும்பத்தைச் சார்ந்த கத்தரி செடிகள் இந்தியாவிற்கு சொந்தமானவை. இதிலுள்ள வேதிப்பொருட்கள் ரத்தத்திலுள்ள கோலின் எஸ்ட்ரேஸ் என்னும் பொருளை கட்டுப்படுத்தும் தன்மையுடையதாகவும். ரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பழத்திலுள்ள சொலசோடின், கேம்பிஸ்டீரால், பீட்டா சைட்டோஸ்டீரால், யுரோஸ்லிக் அமிலம், சோலாமார்கின் போன்ற பொருட்கள் சதை செல் அழிவை கட்டுப்படுத்துகின்றன.

வெம்பிய முழு கத்தரிப் பழத்தை பல இடங்களில் ஊசியால் நன்கு குத்தி நல்லெண்ணெய் விட்டு வறுக்க வேண்டும். இதனை பிழிந்து எண்ணெயை வடித்து, ஈறு கரைந்துள்ள இடங்களில் தடவ ஈறு இறுகும். பழத்தை இளஞ்சூட்டுடன் மென்று வாய் ஈறில் வைத்து அடக்கி வர ஈறு பலப்படும். வெம்பிய கத்தரிப்பழங்களை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெயால் வாய் கொப்புளித்து வர (ஆயில் புல்லிங்) பற்கள் மற்றும் ஈறுகள் வலுவடையும்.

மூத்த குடிமக்களே! -ஆபத்தான வியாதிகள்

மனிதனுக்கு குழந்தை பருவம், சிறுவர் பருவம், வாலிப பருவம், நடுவயது பருவம் (40 -59), முதியவர் பருவம் 60 வயதுக்கு மேல் என்று பிரிக்கலாம். ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்றாற் போல வியாதிகள் பல வருவதுண்டு. உதாரணமாக நாற்பது, ஐம்பது வரை உயிருக்கு ஆபத்தான வியாதிகள் வருவதில்லை. வியாதிகள் வருவதெல்லாம் 60 வயதுக்குமேல். முதியவர்களுக்கு வரும் வியாதிகள், பல உள்ளன. இந்த வியாதிகளோடு தான் அவர்கள் வாழ வேண்டிய நிலை, இந்த வியாதிகளை கண்காணித்து வாழ வேண்டிய சூழ்நிலை.

உடலிலுள்ள உறுப்புகள், முடி நரைத்தல், தோல் சுருங்குதல் தோலிலுள்ள நீர் குறைந்து உலர்ந்து அரிப்பு, ஒவ்வாமை என்ற அலர்ஜி, கண்பார்வை மங்குதல், கேட்ராக்ட். சிலருக்கு ஆஸ்துமாவினால் கார்புல்மினேல் (corpulminale) சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு இவைகளால் சிறுநீரக கோளாறு, சர்க்கரை நோயால் ஏற்படும் இதய நோய்கள், ரத்தக் கொதிப்பால் ஏற்படும் இதய நோய்கள். மூத்த குடிமக்களுக்கே உரித்தான மூட்டு தேய்மான நோய்கள், ஆர்த்தரைட்டீஸ், எலும்பிலுள்ள சுண்ணாம்பு சத்து குறைந்து ஆஸ்டியோ பொராசிஸ் என்ற வியாதிகள். இதனால் எலும்பு முறிவுகள் அதிகமாகிறது.

இரண்டு வியாதியாவது: மூத்த குடிமக்கள், இந்த வியாதிகளில் ஏதாவது இரண்டு மூன்று வியாதிகள் இல்லாமல் வாழ்வு இல்லை. அப்படி கூறினால், நீங்கள் நம்பாதீர்கள். எம்.பி.பி.எஸ்., எம்.டி., (பொது மருத்துவம்), டி.எம்., (இதய நோய்) முதலிய உயர் பட்டப்படிப்பு படித்த காலத்திலும் உதவி பேராசிரியர், பேராசிரியர் என்ற பதவி வகித்த காலத்திலும், மேல் நாட்டில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த காலத்திலும், இந்த வியாதிகள் முதியோரைத் தாக்கியதைப் பார்த்து, வைத்தியம் பார்த்துள்ளேன். ஆனால், இன்றோ பல அரிய டையக்னாஸ்டிக் கருவிகள், மருந்துகள், அறுவை சிகிச்சைகள் வந்துள்ளன. இதனால், எவ்வளவு முதியோர் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ள முன் காலத்தை போல கைத்தடிகள் இல்லாமல், மூட்டு மாற்று சிகிச்சை மூலம் நடந்து படியேறிப் போகின்றனர். இதற்கு என்ன விலை கொடுக்க வேண்டும்?

மூட்டு மாற்று சிகிச்சையால், சில லட்சங்கள் செலவாகிறது. முதியோர் கீழே விழுந்து எலும்பு ஒடிந்தால் பிளேட் வைத்து அறுவைச் சிகிச்சைக்கு எவ்வளவு செலவு, இதற்கு ஆகும் மாத்திரை மருந்துகள் செலவு, வாழ்நாள் முழுவதும் செலவு என்பது தெரியுமா?

முப்பது வயதினரும்: இன்று சர்க்கரை நோய் என்ற டயபட்டீஸ் நோய் 30, 40, 50 வயதுள்ளவர்களுக்கு வந்து மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். 60 வயதுக்கு மேல் இந்த வியாதி பல விளைவுகளை தாக்கி விடுகின்றது. இந்த சர்க்கரை வியாதியை மைக்ரோ வாஸ்குலர் என்ற சிறு கண்ணுக்கு தெரியாத வியாதிகளை தாக்கி விடுகின்றது. இந்த நோய் ரத்தக்குழாயின் என்டேதிலியம் என்ற உட்சுவரினை பாதித்து அடைத்து விடுகிறது. சிறிய ரத்தக்குழாய் அடைப்பால் விளைவு பெரிது. நோயாளிகள் எந்த குறையும் கூறமாட்டார்கள்.

சாதாரணமாக பொது பரிசோதனைக்கு போகும் போது, கண்டுபிடிப்பர். அதற்குள் கண்புரை, ரெட்டினா வியாதி, இதய சர்க்கரை நோய்கள், சிறுநீரக கோளாறுகளான கிட்னி பெய்லியர் என்று பலவாகிறது. சர்க்கரை நோயால்,சிறு ரத்தக் குழாய்கள் பாதிப்பால், கால்களில் ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டு கால் விரல் கள் அழுகி விடுகின் றன. இதனால், சில நேரங்களில் கால் களை, விரல்களை எடுக்க வேண்டிய நிலை. இதனால், மூத்த குடிமக்கள் வாழும் துயரம் மிகுந்த வாழ்க்கைக்கு தினம், தினம் ஆகும் செலவு.

எட்டு ஆண்டுகளுக்கு முன்: சென்னையை சேர்ந்த செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்த 62 வயதான அம்மையார், என்னிடம் ரத்த அழுத்தத்திற்கு வைத்தியம் பார்க்க வந்தார். வந்தவருக்கு சர்க்கரை நோய், அதே நேரத்தில் சிறுநீரக கோளாறும் கண்டுப்பிடிக்கப்பட்டு, யூரியா 48 மில்லி கிராம் கிரியாட்டின், 1.8 மி.கி., என்று அறியப்பட்டது. மூன்று மாதம் ஒருமுறை பரிசோதனைக்கும் ஆலோசனைக்கும் வருவார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் கிரியாட்டின் 2 மி.கி., ஆகிறது. இதை அப்படியே கிரியாட்டின் 2.5 மி.கி., மேல் ஆகாமல், பத்து ஆண்டுகள் வைத்தியம் பார்த்தேன். பத்து ஆண்டுகள் கழித்து கிரியாட்டின் 3 மி.கி., ஆயிற்று பிறகு 4 மி.கி., ஆகியது.

இப்படி சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்து, டயாலிசிஸ் செய்ய வேண்டியதாயிற்று. இதற்கிடையில், பல தடவை மூச்சிரைப்பு, படபடப்பென்று உயர் ரத்த அழுத்தம் இவைகளுக்கு மருத்துவமனையில் அனுமதித்து வைத்தியம் பார்க்க வேண்டியதாயிற்று. ஒவ்வொரு தடவை மருத்துவமனை அனுமதி வைத்தியத்திற்கு பல ஆயிரம் செலவு. வீட்டிலிருந்து வைத்தியத்தால் மருந்துக்கும், ஊசிக்கும் என்று மாதம் சில ஆயிரம். 75 வயதான அந்த பெண்ணுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய முடிவானது.

அப்போது டாக்டர் இதய நோய்க்கு முதலில் சிகிச்சைப் பெற்று பைபாஸ் செய்து, தகுதி சர்ட்டிபிகேட் கேட்டனர். பழுதடைந்த சிறுநீரகத்தை சரி செய்து அதாவது முதலில் சிறுநீரகத்தை மாற்றிய பிறகு பைபாஸ் செய்யலாம் என்று கூறி, நோயாளி வாரம் இருமுறை டயாலிசிஸ் செய்து பிறகு தினம் என்று மாறி இறுதியில் நோயாளி மரணமடைந்தார்.

எப்படி செலவு செய்ய முடியும்? மாற்று சிறுநீரகம் பொருத்திய பிறகு அந்த சிறுநீரகம் பழுதடையாமல் காக்க மருந்தும், முன்கூட்டியே உடம்பிலுள்ள ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், மற்றும் பரிசோதனை செலவு என்று மாதம் பல ஆயிரம் செலவாகிறது. வருடத்திற்கு லட்சங்களை தாண்டும் வருமானமில்லாத வயதான மூத்த குடிமக்கள் காலத்தில் எப்படி பணம் செலவு செய்ய முடியும்?

உயர் ரத்த அழுத்தம் உள்ள மூத்த குடிமக்களுக்கு ரத்த அழுத்தத்தால் ஏற்படும் டி.ஐ.ஏ., (TIA) என்ற உடலில் ஒரு பாதி வலுவையிழந்து தற்காலிகமாக ஸ்டிரோக் ஏற்பட்டு மருத்துவமனை மருத்துவம், எம்.ஆர்.ஐ., (MRI) போன்ற உயர் பரிசோதனைகள். அதன் பிறகு மருந்து, மாத்திரை செலவுகள்.

இருபது ஆண்டுகளுக்கு முன், நான் கோவை மருத்துவக் கல்லூரியில் இதய நோய் பேராசிரியராக இருந்த போது, இராம கிருஷ்ண வித்யாலயத்தில் இலவச மருத்துவ கேம்ப் நடத்திய போது, அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற முதியவர், எனக்கு இதயத்தில் பேஸ்மேக்கர் வைக்கப் பட்டுள்ளது. நான் ஓய்வுப் பெற்ற பின் (பென்ஷன்) பெற்ற பணத்தையெல்லாம் செலவு செய்துவிட்டேன். இப்போது மருந்து வாங்க பணமில்லை. எப்படி நான் ஓய்வூதியத்தில் சாப்பிடுவதா? மருந்துக்கு செலவு செய்வதா? என்று புலம்பினார். இதுபோல எத்தனைப் பேர்?

சில ஆண்டுகளுக்கு முன், மூத்த பெண்மணிக்கு இதய நோய்க்கு டாக்டர் ஆஞ்சியோ கிராம் செய்து, ஐந்து அடைப்புள்ளது, மூன்று அல்லது நான்கு அடைப்பை ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து ஸ்டென்ட் வைக்கலாம் என்று நான்கு லட்சங்கள் செலவில் ஸ்டென்ட்களை வைத்து சிகிச்சை செய்து விட்டார். இதற்கு அவர் சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் செலவு செய்துவிட்டார். பிறகு இரண்டு மாதங்களில் நோயாளிக்கு மீண்டும் நெஞ்சுவலி, மூச்சிரைப்பு வந்துவிட்டது. முன் சிகிச்சை அளித்த டாக்டர், “அடைப்பு எப்படியுள்ளது, ஸ்டென்ட் வேலை செய்கிறதா’ என்று பார்ப்போம் என்று கூறினார். அதற்கு நோயாளியின் கணவர் ஒத்துக் கொண்டார்.

மறு ஆஞ்சியோ கிராம் செய்ததில் இரண்டு ஸ்டென்ட்கள் மூடிவிட்டது தெரிந்தது. இதனால், உடனடியாக பைபாஸ் செய்ய வேண்டுமென்று கூறிவிட்டார். கையில் பணமில்லை, கடன் வாங்கியாவது தனது மனைவிக்கு பைபாஸ் செய்துவிட வேண்டுமென்று, வீட்டின் மேல் கடன் வாங்கி பைபாஸ் செய்துவிட்டார் கணவர். பிறகு ஆறு மாதங்கள் கழித்து நோயாளிக்கு அந்த பைபாஸ் கிராப்ட்டும் மூடிவிட்டது. இவ்வளவு செய்து கடன்பட்டு, மூலதனத்தையெல்லாம் இழந்த விரக்தியில், அவரும் நோயாளியும் தற்கொலை செய்து கொண்டுவிட்டனர். இதற்கு காரணம் யார்?

நவம்பர், டிசம்பர் (மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள்) காலங்களில் ஏற்படும் குளிர், மழையால் மூத்த குடிமக்கள் அடிக்கடி இருமல் சளி போன்ற தொந்தரவுக்கு ஆளாவர். இவர்களுக்கு முன்பே இருந்த மவுனமான இதய நோயான ஸ்மிக் இதயம் சில நேரங்களில் இதய நோய் பெய்லியர் ஆகிவிடும். ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் குறைந்துவிடும். இதனாலும் மூச்சிரைப்பு அதிகமாகி, இது 90 சதவீதத்திற்குள் குறைந்தால் மூச்சு நின்றுவிடும். இதனால், வென்டிலேட்டரை வைத்து செயற்கையாக வென்டிலேட்டரில் மாட்டிவிட்டு, நுரையீரல், இதயத்திற்கு சிகிச்சை அளிப்பர். இதற்கு தினமும் 5,000 முதல் 10,000 வரை செலவாகலாம். இவற்றோடு சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, இதய நோய் என்று பல நோய்கள் இருந்தால் என்ன செலவு ஆகும் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.

60 வயது கடந்தவரா: இந்த வயதில் உடலில் ஏதாவது சர்க்கரை, பி.பி., மூட்டு வலி, மவுனமாக மறைந்து இருக்கும் இதய நோயான மார்புவலி, மாரடைப்பு, சர்க்கரை நோய் வரும் தன்மையுள்ளவர்கள், இதன் விளைவாக வரும் பல வியாதிகளான ஆஞ்சியோ பிளாஸ்டி, பைபாஸ் சர்ஜரி, பேஸ்மேக்கர் இவைகளுக்கு ஆகும் செலவை வராமல் தடுப்பது.

சிறுநீரகத்தால் கிட்னி பெய்லியர், கிட்னி டிரான்ஸ் பிளான்ட் மற்றும் ஸ்டிரோக் (கூஐஅ) எம்.ஆர்.ஐ., போன்ற செலவு. மூட்டினால் ஏற்படும் வலி, மூட்டு மாற்றுச் சிகிச்சை போன்றவற்றிற்கு, லட்சங்களில் ஏற்படும் செலவுகளை தவிர்க்க, நல்ல ஆரோக்கியமாக வாழ, உடலிலுள்ள இதயம், நுரையீரல் கிட்னி, மூளை முதலிய உறுப்புகளை காக்க, மூலதனத்தை (வீடு, நகை, நிலம்) காக்க நல்ல மருத்துவ ஆலோசனைபடி வாழ்வை துவக்குங்கள். வாழ்க, வளமுடன் என்றும்.

மைக்கேல் ஜாக்சனுக்கு: உலகப்புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சன், 1982ல் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் தலையில் தீக்காயம் ஏற்பட்டு, பிளாஸ்டிக் சர்ஜரி தலைக்கும் முகத்திற்கும் என்று பலவித சர்ஜரி செய்து, மருந்துகளை உட்கொண்டார். வியாதிகளின் தாக்குதல், மருந்துகள் என்று அவர் தொழில் தரத்தை பாதித்து, பல நிகழ்ச்சிகளை ரத்து செய்து, நஷ்டமடைந்தார். உலகப்புகழ், பெரும் செல்வம் இருந்தும், தனிப்பட்ட ஒழுக்க நெறியோடு வாழாததால், 50 வயதில் மரணம். பல வழிகளில் பல்லாயிரம் கோடிகள் குவித்தாலும் சில வியாதிகளை வெல்ல முடியாது.

பேராசிரியர் சு.அர்த்தநாரி எம்.டி.டி.எம்.,

குருவுக்கு மரியாதை செய்வோம்! (ஆன்மிகம்)ஜூலை – 7, வியாசபூஜை!

மாதா, பிதாவால் நம் ஜனனம் நிகழ்கிறது. இந்த பிறப்பை அர்த்தமுள்ளதாகச் செய்பவர்கள் நம் ஆசிரியர்களே! குருவருளால் தான் திருவருள் – இறைவனின் அருள் கிடைத்து நிம்மதியாக வாழ முடியும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, “அ’வில் துவங்கி, உயர்கல்வி வரை கற்றுத் தந்து அவர்களை சீர்திருத்தும் சிற்பிகள் ஆசிரியர்களே! ஆசிரியர்கள் சொன்னதைக் கேட்டு எந்த ஒரு மாணவன் தன்னை சீர்படுத்திக் கொள்கிறானோ, அவன் பிற்காலத்தில் நிம்மதியாக இருப்பான்.

பகவான் கிருஷ்ணரும், குசேலரும் பள்ளிக்கூட நண்பர்கள். அக்காலத்தில் குருகுலத்தில் படிக்கும் மாணவர்கள், அங்கேயே தங் கிப் படிக்க வேண்டும்; பள்ளி நேரம் தவிர, மற்ற சமயங்களில் குரு இடும் கட்டளைகளைச் செய்ய வேண்டும். ஒருநாள், இவர்களது குரு சாந்தீபனி முனிவரின் மனைவி, கிருஷ்ணரையும், குசேலரையும் சமைப்பதற்கு விறகு பொறுக்கி வரச்சொல்லி விட்டாள்.

குருவின் மனைவியின் கட்டளையை ஏற்ற அந்தக் குழந்தைகள், காட்டில் சென்று விறகு பொறுக்கினர். மழை வந்துவிட்டது. விறகு நனையாமல் இருக்க, ஒரு மரப்பொந்தில் அதை வைத்துவிட்டு, மழையில் நனைந்தபடி நின்றனர். இருட்டி விட்டது. குழந்தைகளைக் காணாத குரு, மனைவியைக் கடிந்து கொண்டு குழந்தைகளைத் தேடிச்சென்றார்.

குரு பத்தினியின் கட்டளையை நிறைவேற்ற விறகை மறைத்து விட்டு, மழையில் அவர்கள் நனைந்தது கண்டு கண்ணீர் வடித்தார். “நீங்கள் மிக நன்றாக இருப்பீர்கள்…’ என ஆசிர்வதித்தார். அவரது ஆசிர்வாதம் பலித்தது. துவாரகையின் மன்னரானார் கிருஷ்ணர்; ஏழையான குசேலர், தன் நண்பனின் உதவியால் பெரும் செல்வந்தரானார்.

குருவின் சொல்லை இளமையில் கேட்டு நடப்பவர்கள் எதிர்காலத்தில் செல்வந்தர்களாக விளங்குவர்.

குரு வணக்க நாள், ஆடி மாத பவுர்ணமியில் அனுஷ்டிக்கப்படுகிறது. சில ஆண்டுகளில் பஞ்சாங்கம் கணிப்பதில் மாறுபாடு ஏற்படுவதை ஒட்டி, ஆனிமாதக் கடைசியில் வரும் பவுர்ணமியில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த நாளில், அதிகாலை 4 மணிக்கு எழ வேண்டும். நீராடி, திருவிளக்கேற்றி, அதன் முன் அமர்ந்து, தங்களுக்கு கற்றுத்தந்த குருமார் மற்றும் தங்கள் ஆன்மிக குருக்களை மனதில் எண்ணி வணங்க வேண்டும்.

“த்யான மூலம் குரோர் மூர்த்தி

பூஜாமூலம் குரோர் பதம்

மந்த்ரமூலம் குரோர் வாக்யம்

மோக்ஷமூலம் குரோக்ருபா!’

என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும். சமஸ்கிருத உச்சரிப்பு வராதவர்கள், “தியானத்திற்கு உகந்தது குருவின் திருவுருவம்; பூஜிக்கத் தகுந்தது குருவின் திருப்பாதங்கள்; மந்திரத்திற்கு உகந்தது குருவின் வாக்கியங்கள்; குருவின் அருள், மோட்சம் நல்குகிறது…’ என்று சொல்ல வேண்டும்.

துறவிகளை வணங்க வேண்டும்; ஆன்மிக சொற் பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அன்று பகலில் பழம், பால் மட்டுமே சாப்பிட வேண்டும். மகான்கள் படம் இருந்தால், அதற்கு பூஜை செய்ய வேண்டும்.

ஆன்மிக ரீதியாக குரு இல்லாதவர்கள், மகாபாரத ஆசிரியர் வியாசரை தங்கள் குருவாக எண்ண வேண்டும். அவர் நான்கு வேதங்கள், பதினெட்டு புராணங்கள், ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றை உலகுக்கு தந்து உலக மக்களுக்கு தர்மத்தின் பாதையைக் காட்டியவர். அவரை இந்நாளில் பூஜிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அவருக்கு சன்னதி உள்ளது. அங்கு சென்று அவரைப் பூஜித்து வரலாம்.

நம் அறிவைப் பிரகாசிக்கச் செய்த குருமார்களுக்கு வியாசபூஜை நன்னாளில் மரியாதை செய்வோம்.

பக்தியை பெருக்குங்கள்! (ஆன்மிகம்)

தராசு முள் நேராக ஒரே நிலையில் இருக்க வேண்டுமானால், அதன் இரண்டு பக்கத் தட்டுகளும் ஒரே பளு உள்ளதாக இருக்க வேண்டும். தட்டுகளில் உள்ள பளு கூடுதலாகவோ, குறைவாகவோ இருந் தால், நேராக நிற்காமல் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் தராசு முள் ஆடிக் கொண்டிருக்கும்.

அதுபோல, மனம் ஒரே நிலையில் இருக்க வேண்டுமானால், மனதின் அடித் தளத்தில் விருப்பு, வெறுப்பு ஏதுமின்றி இருக்க வேண்டும்; அதில் ஏற்றத் தாழ்வு இருப்பின், மனமும் அலைபாயும்.

ஒரு தட்டில் ஆசைகள் அனைத் தையும் வைத்து, மற்றொரு தட் டில் பக்தியை வைத்துப் பார்த் தால், பக்தியே பளுவானது; வலுவானது. மற்ற விஷயங் களில் ஆசையை விட்டு, பகவானுடைய சரணங்களில் ஆசை வைத்தால் அவனையே பிடித்து விடலாம்.

சரணடைந்தவர்களை அவன் உதறித் தள்ளுவதில்லை; கை தூக்கி விடுகிறான். பக்தி செய்து சரணடைந்தால், பகவான் முக்தியளிக்கிறான். நமக்கு இப்போது கிடைத் துள்ள மனிதப் பிறவி புதிதாக முதன் முதலாகக் கிடைத்ததல்ல; இதற்கு முன் எத் தனையோ பிறவி எடுத்தாகி விட்டது. ஆத்மா அழிவற்றது. அது, மேலும், கீழும் போய்ப் போய் வருகிறது. கர்ம வினை தீர்ந்து, புண்ணிய பலன் ஏதாவது இருந்தால், இன்னும் கொஞ்சம் உயர்ந்த ஜென்மா கிடைக்கிறது.

இப்படி புண்ணிய பலன் கூடு தலாக, கூடுதலாக, பட்சி, பிராணி, பசு, மனிதன் என்று வரிசையாக பிறப்பு வருகிறது. மனித ஜென்மாவில் கூட எத்தனையோ மனித ஜென்மா எடுத்து புண்ணியம் சேர்ந்திருந்தால், இந்த மனித ஜென்மாவிலும் சுகபோகங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு! புண்ணிய காரியம் செய் வதற்கும் பிராப்தம் இருக்க வேண்டும்; அது இல்லாவிடில், மனம் அதில் ஈடுபடாது; வேறு எதிலோதான் ஈடுபடும்.

புண்ணிய காரியம் என்றால், தான – தர்மங்கள் செய்வது மட்டுமல்ல; தெய்வ பக்தி, தெய்வ தரிசனம், ஆலய தரிசனம், புண்ணிய தீர்த்த ஸ்நானம் இவைகளுக்கும் புண்ணியம் உண்டு. இதையும் தவிர, மகான்கள் தரிசனம் பெரிய புண்ணியம். நாம் இப்போது மனிதப் பிறவியை அடைந்துள்ளோம். இதற்கு முன், ஜென்மாவில் நாம் மேற்கூறிய எதையாவது செய்திருக்கலாம்; மகா புருஷர் களை தரிசித்திருக்கலாம். எல்லா காலங்களிலும் மகா புருஷர்கள் இருந்திருக்கின்றனர். ஏதோ ஒரு காலத்தில், யாரோ ஒருவரை நாம் தரிசித்திருக்கலாம்; வணங்கி இருக்கலாம்.

அது நமக்கு தெரியாவிட்டாலும் கூட, இப்போது கிடைத் துள்ள மனித ஜென்மாவையும், அனுபவிக்கும் சுகங்களையும் வைத்துப் பார்த்தால், இதற்கு முன் யாரையோ தரிசித்த புண் ணியம்தான் காரணம் என்று யூகிக்கலாம். அதே போல, இந்த ஜென் மாவிலும் இப்போதுள்ள மகான்களையும் தரிசித்து வணங்கி விட்டால், தெய்வபக்தி செய்து வந்தால், அடுத்த பிறவி இன்னும் சிறப்பாக இருக்கும்.

உலக மாயையில் சிக்காமல், அஞ்ஞானம் விலகி, ஞானம் ஏற்பட்டு சர்வமும் ஈஸ்வர மயம், எல்லாமே பரம்பொருள் என்று எண்ணுகிற நிலையெல்லாம் வந்த பிறகு தான் முக்தி என்கிற மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய முடியும். இப்போது அதன் எல்லைக் கோடு வரையிலாவது போக முடியுமா என்பதுதான் கேள்வி.

மகான்கள் தரிசனம், தெய்வ பக்தி இவைகளை விருத்தி செய்து கொண்டே போனால், எப்போதோ, எந்தக் காலத் திலோ பகவானோடு சேர்ந்து விடலாம். முயற்சி செய்ய வேண்டும்; நம்பிக்கை இருக்க வேண்டும்.
– வைரம் ராஜகோபால்

அன்லாக்கர்

பலமுறை நாம் ஏதேனும் பைல்களை அழிக்க முற்படுகையில் சில எரிச்சலூட்டும் செய்திகள் காட்டப்பட்டு நம் முயற்சியில் குறுக்கே நிற்கும். அந்த செய்திகள் பின்வருமாறு இருக்கலாம்:–

இன்னொரு புரோகிராம் இந்த பைலை பயன்படுத்திக் கொண்டுள்ளது.

பைலைப் பகிர்ந்து கொள்வதில் வரையறை மீறப்பட்டுள்ளது. இன்னொரு புரோகிராம் அல்லது இன்னொரு யூசர் இதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். டிஸ்க் முழுமையாக இல்லை அல்லது எழுதப்படவிடாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. பைல் இப்போது பயன்பாட்டில் இல்லை.

சோர்ஸ் அல்லது டெஸ்டினேஷன் பைல் ஒருவேளை பயன்பாட்டில் இல்லை.

இதில் என்ன சோகம் என்றால் இன்னொரு புரோகிராம் பயன்படுத்துவதாக செய்தி வருகையில் நாம் கம்ப்யூட்டரில் வேறு எந்த புரோகிராமினையும் பயன்படுத்தாமல் இருப்போம். என்ன புதிராக உள்ளதே என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்போம். இன்னொரு யூசர் எங்கே இருக்கிறார்? இது யாரைக் குறிக்கிறது என்று வியப்பில் இருப்போம். இதெல்லாம் கம்ப்யூட்டரில் சில செட் அப் அமைப்பின் காரணமாக நமக்கு வரும் செய்திகள். பொதுவாக இது போன் ற செய்திகள் வருகையில் பைலை அழிக்கும் வேலையையே விட்டுவிடுவோம்; அல்லது ரீஸ்டார்ட் செய்து பைலை அழிப்போம்.

இந்த வேலை இல்லாமல், கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடாமல் பைலை அழிக்க இலவசமாக ஒரு புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. அதன் பெயர் (Unlocker)அன்லாக்கர். இதனை http://ccollomb.free.fr/unlocker/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இதனை எளிதாக டவுண்லோட் செய்து பின் இன்ஸ்டால் செய்திடலாம்.

இன்ஸ்டால் செய்த பின் நீங்கள் அழிக்க விரும்பும் பைல் அல்லது போல்டரில் ரைட் கிளிக் செய்திடுங்கள்.

கிடைக்கும் மெனுவில் Unlocker என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடுங்கள். நீங்கள் இலக்கு வைக்கும் பைல் மேலே சொல்லப்பட்ட காரணங்களால் லாக் செய்யப்பட்டிருந்தால் ஒரு சிறிய விண்டோ ஒன்று திறக்கப்படும்.

அதில் எந்த புரோகிராமினால் அல்லது யூசரால் எதற்காக லாக் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைக்கும்.

உடனே மிக எளிதாக “ Unlock All ” என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். பைல் இப்போது விடுவிக்கப்பட்டு டெலீட் செய்திட ஏதுவாக இருக்கும். நீங்கள் அதனை அழித்துவிடலாம்.

குழாய் நீரில் கீ போர்டைக் கழுவலாம்!


சிறிது தண்ணீர் அல்லது காபி துளி பட்டாலே தாம் தூம் என்று என் அப்பா குதிக்கிறார்! இதென்ன குழாய் நீரில் கீ போர்டைக் கழுவலாமா? ரீலா? என்று வியப்புடன் பல மாணவர்கள் இதனைப் படிக்கலாம்.

ஆம், உண்மைதான். கிங்ஸ்டன் நிறுவனம் நீரில் கழுவிச் சுத்தம் செய்திடக் கூடிய கம்ப்யூட்டர் யு.எஸ்.பி / பி.எஸ்2 கீ போர்டு ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கழுவக் கூடிய வசதி மட்டுமின்றி இது ஆண்ட்டி மைக்ரோபியல் ட்ரீட்மெண்ட்டுக்குப் பின் விற்பனை செய்யப்படுவதால் எந்த பாக்டீரியாவும் இதில் இருக்காது. இதனால் நீர் பட்டு பங்கஸ் பிடிப்பது, சிறிய மோல்டுகள் உருவாவது இல்லை.எனவே மருத்துவமனைகளில் பாதுகாக்கப்பட்ட இடங்களில் இந்த கீ போர்டினைப் பயன்படுத்தலாம். அதே போல அரசு அலுவலகங்கள், பள்ளிகள் போன்ற கல்வி நிலையங்கள் ஆகியவற்றிலும் பயன்படுத்தலாம். 104 கீகளுடன் ஸ்டாண்டர்ட் கீ போர்டாக இது உள்ளது.

தற்போதைக்கு Amazon.com  மற்றும் Kensington.com  ஆகிய தளங்களின் வழியாகப் பெற்றுக் கொள்ளலாம். இதன் விலை 39.99 டாலர். விரைவில் இந்தியாவிலும் இதனை எதிர்பார்க்கலாம்.

போர்ட்டபிள் ஹார்ட் டிஸ்க் 640 ஜிபி 16 கிராம் எடை

ஹார்ட் டிஸ்க் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற முன்னணி நிறுவனமான ஸீ கேட் நிறுவனம் அண்மையில் 640 ஜிபி கொள்ளளவு கொண்ட கையில் எடுத்துச் சென்ற பயன்படுத்தக் கூடிய ஹார்ட் டிஸ்க் ஒன்றை 16 கிராம் எடையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இது Free agent Go  என்ற வரிசையில் வந்துள்ளது. இதன் அகலம், உயரம், தடிமன் 80 x 130 x 12.5 மிமீ என்ற அளவில் உள்ளது. இதனால் 640 ஜிபி டேட்டாவை ஒருவர் ஜஸ்ட் லைக் தேட் பாக்கெட்டில் போட்டு எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். யு.எஸ்.பி. 2 வகை போர்ட்டில் இதனை இணைக்கலாம்.விநாடிக்கு 480 எம்பி டேட்டா தகவல் பரிமாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சற்று கூட குறைய இருக்கலாம்.பேக் அப் சாப்ட்வேர் மற்றும் என்கிரிப்ஷன் வசதி உள்ளது.

இதிலேயே இதற்குத் தேவையான Free agent சாப்ட்வேர் பதிந்து தரப்படுகிறது. இது இயங்காத போது மின் சக்தியைப் பயன்படுத்தாது. விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவில் இயங்கும் இந்த ஹார்ட் டிஸ்க் மேக் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்காது. சில்வர் மற்றும் கருப்பு ஆகிய இரு வண்ணங்களில் இது கிடைக்கிறது.இதற்கு ஐந்து ஆண்டுகள் வாரண்டி தரப்பட்டுள்ளது.

சாப்ட்வேர் இன்ஸ்டலேஷனில் பிரச்சினையா?

கம்ப்யூட்டர் மலர் அலுவலகத்திற்கு அடிக்கடி கடிதங்களும் தொலைபேசி அழைப்புகளும் வாசகர்களிடமிருந்து இன்ஸ்டலேஷன் குறித்து வருகின்றன. அதுவும் நீங்கள் எழுதிய புரோகிராமினை அல்லது சாப்ட்வேரினை இன்ஸ்டால் செய்தேன்; ஆனால் பாதியிலேயே நின்றுவிட்டது; ஏன் இது போல பிரச்சினையான சாப்ட்வேர் எல்லாம் ரெகமண்ட் செய்கிறீர்கள் என்றெல்லாம் குற்றம் சுமத்தும் கடிதங்களும் நிறைய வருகின்றன. அப்போது வாசகர்களுடன் சேர்ந்து நாங்களும் வருத்தப்படுவோம். எதற்காக? கூடுதலாகச் சில குறிப்புகளை அவ்வப்போது தந்து கொண்டே இருக்க வேண்டும்; ஆனால் அப்படி தராததே இதற்குக் காரணாமாக இருக்குமோ என்பதால் தான். அந்தக் குறிப்புகளை இங்கு காணலாம்.

சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்கையில் பல தரப்பட்ட இது போன்ற சூழ்நிலைகளையும் தவறுகளையும் நாம் எதிர்கொள்ளலாம். இவற்றை ஆங்கிலத்தில் PBDC errors என்று அழைக்கின்றனர். இதன் முழு விரிவாக்கம் Problem Between Desk and Chair என்பதாகும். அதாவது நாம் செயல்படத் தொடங்கி அச்செயல் முடிவடையும் முன் அதனை முழுமையடைய விடாமல் ஏற்படும் பிரச்சினைகளே இவை.

சாப்ட்வேர் தொகுப்புகளை அல்லது சிறிய புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்கையில் நிறைய அறிவிப்புகள் வரும். வெகு நீளமான டெக்ஸ்ட்டாக இருக்கும் என்பதால் நாம் கட கடவென நெக்ஸ்ட், நெக்ஸ்ட் என அழுத்தியவாறு விரைவாக இன்ஸ்டால் செய்வோம். ஆனால் அவை பல்வேறு கண்டிஷன்களைக் கூறி பின் இன்ஸ்டால் செய்கிறது என்பதனை உணர மாட்டோம். அதன்பின்னர் பிரச்சினை ஏற்படுகையில் அதற்கான காரணத்தை அறியாமல் திகைக்கிறோம். கீழே நல்ல முறையில் இன்ஸ்டால் செய்வதற்கான சில டிப்ஸ்கள் வழங்கப்படுகின்றன.

சிஸ்டம் ஒத்துப் போகுமா? உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஹார்ட்வேர் தொகுப்பின் பரிமாணங்களுடன் இன்ஸ்டால் செய்யவிருக்கும் சாப்ட்வேர் ஒத்துப் போகுமா? என்று அறிந்த பின்னரே இன்ஸ்டால் செய்திட வேண்டும். இன்ஸ்டால் செய்யப்பட இருக்கும் சாப்ட்வேர் குறித்து தரப்படும் தகவல்களின் இறுதியாக இவை குறிப்பிடப்பட்டிருக்கும். ப்ராசசர் என்ன ஸ்பீட் வேண்டும்? எவ்வளவு ஹார்ட் டிஸ்க் தேவைப்படும்? மெமரி எவ்வளவு இருக்க வேண்டும்? என்ன வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் எல்லாம் சாப்ட்வேர் செயல்படும் என்றெல்லாம் தரப்பட்டிருக்கும். இன்ஸ்டால் செய்ய முயற்சிக்கையில் நீங்கள் இன்ஸ்டால் செய்யப்பட இருக்கும் டிரைவில் எவ்வளவு இடம் உள்ளது? அது போதுமா என்றெல்லாம் காட்டப்படும். இவற்றைச் சற்றுப் பொறுமையுடன் படித்துப் பார்த்து உங்கள் சிஸ்டம் அந்த சாப்ட்வேர் தொகுப்பை ஏற்றுக் கொள்ளுமா என்பதனை வரையறை செய்த பின்னரே இன்ஸ்டால் செய்வதனைத் தொடர வேண்டும். உங்களிடம் பழைய பென்டியம் ஐ விண்டோஸ் 98, 8எக்ஸ் டிரைவ் என இருந்தால் நிச்சயம் இன்றைய நாட்களில் வரும் சாப்ட்வேர் புரோகிராம்கள் இன்ஸ்டால் செய்வதில் பிரச்சினை வரத்தான் செய்யும்.

லைசன்ஸ் ஒப்பந்தத்தைச் சற்றாவது படிக்கவும்: சாப்ட்வேர் இன்ஸ்டலேஷன் போது உங்களுக்கும் அந்த சாப்ட்வேரை வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே ஒரு நீளமான ஒப்பந்தத்திற்கு ‘I accept’ என்பதை அழுத்தி நீங்கள் இசைவு தர வேண்டியதிருக்கும். இந்த நீளமான ஒப்பந்தத்தினைச் சற்று சில இடங்களிலாவது படிக்க வேண்டும். அதன் சில ஷரத்துக்கள் சற்று விவகாரமானவையாக இருக்கலாம். எடுத்துக் காட்டாக ரியல் ஒன் ஆடியோ பிளேயரை நீங்கள் இன்ஸ்டால் செய்தால் அது உங்களுடைய பெர்சனல் தகவல்களை வாங்கிக் கொண்டு உங்கள் கம்ப்யூட்டரிலேயே அது பயன்படுத்த பதிந்து வைக்கும். அது மட்டுமின்றி நீங்கள் ‘I accept’ என்பதனை அழுத்தும் போது உங்களுடைய பெர்சனல் தகவல்களை அந்த நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள அனுமதியும் அளிக்கிறீர்கள். இதனால் அந்நிறுவனம் மட்டுமின்றி சார்ந்த நிறுவனத்தின் சாதனங்கள் மற்றும் அறிவிக்கைகள் உங்களுக்குத் தேவையோ இல்லையோ அவை ஸ்பாம் மெயில்கள் மாதிரி வந்து கொண்டே இருக்கின்றன. எனவே நீளமான அந்த ஒப்பந்தத்தில் privacy policy statement என்று இருப்பதையாவது படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எங்கு இன்ஸ்டலேஷன்? இன்ஸ்டலேஷனுக்கு முந்தைய விண்டோக்களில் நெக்ஸ்ட் நெக்ஸ்ட் என தொடர்ந்து அழுத்த வேண்டாம். குறிப்பாக எந்த டிரைவில் இந்த புரோகிராம் இன்ஸ்டால் ஆகிறது என்பதனை உணர்ந்தாக வேண்டும். பொதுவாக அனைத்து புரோகிராம்களும் சி டிரைவிலேயே இன்ஸ்டால் செய்திடும்படி செட் செய்திடப்பட்டிருக்கும். ஆனால் நீங்கள் முடிவு செய்தால் அதனை வேறு ஒரு டிரைவில் இன்ஸ்டால் செய்திடலாம். வேறு டிரைவில் இன்ஸ்டால் செய்வதுதான் நல்லது. எனவே அந்த கேள்வி உள்ள விண்டோ கிடைக்கையில் அதற்கென சில டிரைவ்களை ஒதுக்கி அந்த டிரைவ்களிலேயே பதியவும். அப்படி வேறு டிரைவில் பதிந்தாலும் சாப்ட்வேர் ஒன்றின் சில பைல்கள் சி டிரைவில் பதியப்படும் என்பதனை இங்கு நினைவில் கொள்வது நல்லது.

எந்த வகை இன்ஸ்டலேஷன்? புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில் தயவு செய்து மேலோட்டமாகவாவது அக்ரிமெண்ட் பக்கத்தைப் பார்க்கவும். ஒருவர் அவசரமாக பதிந்து விட்டு இறுதியில் பார்க்கையில் டெமோ பதிப்பு மட்டுமே பதியப்பட்டிருந்தது. உடனே நம் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இதற்குத்தானா பக்கம் பக்கமாய் எழுதினீர்கள் என்றார். இறுதியில் அவர் இன்ஸ்டால் செய்த போது டெமோ பதிப்பிற்கு யெஸ் சொல்லி நெக்ஸ்ட் அழுத்தி உள்ளார் என்பது தெரியவந்தது. என்ன என்ன வசதிகளுடன் ஒரு புரோகிராம் இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும் என்பதனை நம்மிடம் கேட்ட பின்னரே ஒரு புரோகிராம் இன்ஸ்டால் செய்யப்படும். எனவே கவனமாக இவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

ரீட் மி (Read Me) பைலைப் படிக்கலாமே! எப்போதும் ஒரு சாப்வேர் இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன் உங்களுக்கு அந்த புரோகிராம் இன்ஸ்டால் செய்ததற்காக நன்றி சொல்லிவிட்டு ரீட் மி பைலை தரட்டுமா என்று கேட்கப்படும்; பெரும்பாலானவர்கள் இதனை தள்ளிவிட்டு புதிய சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தச் செல்வார்கள். ஏனென்றால் இந்த வகை பைல்களில் சட்ட ரீதியான ஒப்பந்தம் பற்றி மீண்டும் சில குறிப்புகள் இருக்கும். அல்லது தொழில் நுட்ப ரீதியாகத் தகவல்கள் இருக்கும். ஆனால் சில வேளைகளில் சில கம்ப்யூட்டர் சிஸ்டங்களினால் எப்படி அந்த சாப்ட்வேர் சரியாக வேலை செய்யவில்லை என்று காட்டியிருப்பார்கள். இதில் உங்கள் சிஸ்டமும் ஒன்றாக இருக்கலாம். எனவே இதனையும் படித்து அறிந்து கொள்வது நல்லது.

டுடோரியல் பக்கங்கள்! பல சாப்ட்வேர் தொகுப்புகளில் டுடோரியல் பக்கங்கள் என சிலவற்றைத் தந்திருப்பார்கள். குறிப்பிட்ட சாப்ட்வேர் தொகுப்பினை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? என்ன என்ன பயன்கள் கிடைக்கும் எனத் தரப்பட்டிருக்கும். குறிப்பாக விர்ச்சுவல் டிரைவ், பயர்வால், பாப் அப் பிளாக்கர்கள், குறிப்பான சில பயன்பாடுகளைத் தரும் புரோகிராம்கள் (கால்குலேட்டர், கரன்சி கன்வெர்டர், பிற மொழி சாப்ட்வேர் தொகுப்புகள் போன்றவை) ஆகியவற்றைச் சரியாக செட் (Configure) செய்திடாவிட்டால் அவை சரியாகச் செயல்படாமல் போகும் வாய்ப்பு உண்டு.

எனவே பயன்களைச் சரியாக அதிக பட்ச அளவில் பெற இதனைப் படித்தறிவது நல்லது.இது போன்ற சின்ன சின்ன வழிகாட்டல்களைப் பின்பற்றுவது பின் நாளில் நமக்குக் கிடைக்கக் கூடிய ஏமாற்றத்தைத் தவிர்க்க உதவும்.

டி.வி.நிகழ்ச்சிகள் நாம் நினைத்த நேரத்தில் பார்த்து மகிழ


டிஜிட்டல் வழி பொழுது போக்கு சாதனங்கள் திடீர் திடீரென புதிய வகைகளில் அறிமுகமாகி நம் வாழ்க்கையின் போக்கை மாற்றி அமைக்கின்றன. அந்த வகையில் தற்போது டிஜிட்டல் வீடியோ ரெகார்டர் சில மாதங்களாய் நம் ஹால்களில் நுழைந்து வேகமயமாகி வரும் வாழ்க்கையில் இன்னொரு வசதியான சாதனமாய் உருவாகியுள்ளது.

டிஜிட்டல் வீடியோ ரெகார்டர் அல்லது பெர்சனல் வீடியோ ரெகார்டர் என அழைக்கப்படும் இந்த சாதனம் வீடியோவினை டிஜிட்டல் பார்மட்டில் ஒரு டிஸ்க் அல்லது வேறு வகை மெமரி சாதனத்தில் பதிந்து பின் நாம் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தத் தருகிறது. ஸ்டேண்ட் அலோன் செட் டாப் பாக்ஸ், போர்டபிள் மீடியா பிளேயர், பெர்சனல் கம்ப்யூட்டரில் வீடியோ கிளிப்களை ரெகார்ட் செய்து பின் இயக்க வழி தரும் சாப்ட்வேர் தொகுப்புகள் ஆகிய அனைத் தையும் இந்த பெயரில் அழைக்கலாம். நுகர்வோருக்கான எலக்ட்ரானிக் சாதனங்களை வடிவமைத்துத் தரும் சில நிறுவனங்கள் தொலைக் காட்சிப் பெட்டிகளை இது போன்ற டிஜிட்டல் வீடியோ ரெகார்டரையும் அதற்கான சாப்ட்வேர் தொகுப்பினையும் இணைந்ததாகத் தரத் தொடங்கிவிட்டன. எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இதனை 2007 ஆம் ஆண்டிலேயே வடிவமைத்து வெளியிட்டது. தற்போது பல வடிவங்களில், நிலைகளில் இவை கிடைக்கத் தொடங்கிவிட்டன.

முதன் முதலில் அமெரிக்காவில் நடந்த ஒரு எலக்ட்ரானிக் �ஷாவில் 1999 ஆம் ஆண்டில் டி.வி.ஆர் மற்றும் ரீ பிளே டிவிக்கள் காட்டப்பட்டன. மைக்ரோசாப்ட் நிறுவனமும் இந்த செயல்பாட்டை முன்னிறுத்தி சாப்ட்வேர் தொகுப்பினை வெளியிட்டது. ஆனால் வர்த்தக ரீதியாக இந்த தொகுப்பு 1999 ஆம் ஆண்டின் பின்பகுதியில்தான் கிடைத்தது.

டி.வி. ஆர். – அதன் அடிப்படைகள்: டிஜிட்டல் வீடியோ ரெகார்டர் என்பது அடிப்படையில் ஓர் அழகான பெட்டியில் ஹார்ட் டிரைவ் ஒன்றினைக் கொண்டிருக்கும். இதன் பின்புறம் இதனை டிவி, செட் டாப் பாக்ஸ், கேபிள் பாக்ஸ் அல்லது வி.சி.ஆர். ஒன்றுடன் இணைப்பதற்கான போர்ட்டுகள் இருக்கும். ஆன்டென்னா, கேபிள் அல்லது சாட்டலைட் மூலம் டெலிவிஷன் சிக்னல்கள் இந்த டி.வி.ஆர். உள்ளே உள்ள ட்யூனரை வந்தடையும். பின் அந்த சிக்னல்கள் ஒரு எம்பெக்-2 என்கோடருக்கு மாற்றப்படும். இங்கே அனலாக் சிக்னல்கள் டிஜிட்டல் சிக்னல்களாக மாற்றப்படும். (எம்பெக் 2 என்பது ஒரு டிவிடியில் டேட்டாவினை பதியும் வகையில் சுருக்கி மாற்றித் தரும் தொழில் நுட்பம் என்பது தெரிந்ததே)

இந்த என்கோடரிலிருந்து சிக்னல்கள் இரண்டு இடங்களுக்கு மாற்றப்படுகின்றன. முதலாவதாக இவற்றை சேவ் செய்து பதிந்து வைத்திட ஹார்ட் டிரைவிற்கு. இரண்டாவதாக எம்பெக்–2 டிகோடர் சாதனத்திற்கு. இந்த டிகோடர் டிஜிட்டல் சிக்னல்களை மீண்டும் அனலாக் சிக்னல்களாக மாற்றி தொலைக் காட்சிப் பெட்டிக்கு காட்சிகளாக நாம் காணுவதற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

சில சிஸ்டங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட ட்யூனர்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் ஒரே நேரத்தில் பல சேனல்களின் டிஜிட்டல் சிக்னல்கள் டிரைவின் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவாகின்றன. இதனால் சில சாதனங்களில் இரண்டு வெவ்வேறு சேனல்கள் பதியப்படுகையில் நம்மால் மூன்றாவதாக ஒரு சேனலைக் கண்டு களிக்கலாம்.

சாட்டலைட் டிவி மற்றும் டிஜிட்டல் கேபிள்: டிஜிட்டல் கேபிள் அல்லது சாட்டலைட் சிஸ்டங்களில் பாக்ஸுக்குள்ளாக எந்தவிதமான என்கோடரும் தேவைப்படுவதில்லை; ஏனென்றால் சாட்டலைட் அல்லது கேபிள் நிறுவனம் இந்த சிக்னல்களை டிஜிட்டல்களாக மாற்றிய பின்னரே நமக்கு வழங்குகின்றன. இதனால் இவற்றின் மூலம் கிடைக்கும் காட்சி, ஆன்டென்னா அல்லது கேபிள் சிஸ்டம் மூலம் கிடைக்கும் காட்சிகளைக் காட்டிலும் அதிகத் தெளிவுடன் இருக்கின்றன.

ஒரு டிவிஆர் பழைய வி.சி.ஆர். சாதனத்தைப் போல இயங்குவதாகத் தெரிந்தாலும் இரண்டிற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. டிவிஆர் சாதனத்தில் டேப் கிடையாது. வி.சி.ஆர். காட்சிகளைப் பதிய மட்டுமே செய்திடும். காலியான டேப்புகள் இதன் மீடியாவாகும்.ஆனால் ஒரு டிவிஆர் சாதனத்தில் மீடியா மற்றும் டூல் ஆகிய இரண்டும் ஒன்றே. ஹோம் நெட்வொர்க் என அழைக்கப்படும் எந்த சிறிய நெட்வொர்க்கிலும் டிவிஆர் –னை இணைத்து உலகின் இன்னொரு மூலையிலிருந்து கிடைக்கும் வீடியோ காட்சிகளைப் பதிந்து கொள்ளலாம்.

டிவிஆர் நமக்குத் தரும் மிகப் பெரிய வசதி என்னவென்றால் டிஜிட்டல் காட்சிகளைத் திரும்பப் பெறுவதற்கு நமக்கு அளிக்கும் ஆப்ஷன்கள் தாம். வி.சி.ஆர் ஒன்றில் ஒரு வீடியோ காட்சி ஒன்றைப் பதிந்தால் அது முடிந்து பின் மீண்டும் டேப் திரும்ப சுழன்று முதலில் இருந்து காட்சிகளைக் காணலாம். ஆனால் டிவிஆர் மூலம் காட்சி தொடர்ந்து பதிந்து கொண்டிருக்கும்போதே பத்து நிமிடங்களுக்கு முன் பதிந்த காட்சியைக் காணலாம். அப்போதும் அந்த நிகழ்ச்சி தொடர்ந்து பதியப்பட்டுக் கொண்டு தான் இருக்கும்.

இதனால் பயன்படுத்த எளிமை, காட்சிகளைத் தேடி அறிய நவீன தேடுதல் முறைகள், ஒரே நேரத்தில் பதிவதும் இயக்குவதுமான இரட்டை வேலை, படங்களின் தெளிவு சிறிதும் சிதையாமை, படங்களைச் சுருக்கிப் பதிதல், தூரத்தில் இருந்து பதிவதனையும் பார்ப்பதனையும் கட்டுப்படுத்துதல் எனப் பல பரிமாணங்களை பொழுதுபோக்கு உலகிற்கு இந்த டிவிஆர் தருகிறது.

மேலும் IPTV DVR  சாதனத்தை எளிதாக நெட் வொர்க்கில் இணைக்க முடிகிறது. இதனுள்ளே அமைக்கப்படும் இணைய இன்டர்பேஸ் மூலம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற பிரவுசர் வழியாக ஒரே நேரத்தில் வீடியோ காட்சியினைப் பார்ப்பதும், பதிவதும், மீண்டும் இயக்கிப் பார்ப்பதும் எளிதாகிறது. இதில் தரப்பட்டுள்ள வீடியோ ஸ்டோரேஜ் தொழில் நுட்பத்தின் மூலம் குறைந்த அளவிலான டிஸ்க் இடத்தில் அதிக பட்ச வீடியோ சிக்னல்கள் பதிவாகின்றன.

இந்தியாவில் இந்த டிவிஆர் குறைந்த அளவிலேயே பயன்பாட்டில் உள்ளன. சில மாதங்களுக்கு முன் கம்ப்யூட்டர் மலரில் டாட்டா ஸ்கை இவ்வகையில் அறிமுகம் செய்த டாட்டா ஸ்கை ப்ளஸ் சாதனம் குறித்து ஏற்கனவே இங்கு தகவல்களைத் தந்திருந்தோம். இந்த வகை டாட்டா ஸ்கை இணைப்புகள் மிக அதிகமான எண்ணிக்கையில் மக்களிடம் பரவவில்லை. மொத்தத்தில் இது 10 சதவிகிதம் என்ற அளவிலேயே தான் உள்ளது. இதற்குக் காரணம் இந்த டிவிஆர் பாக்ஸின் விலை தான். டாட்டா ஸ்கை நிறுவனம் இந்த பாக்ஸின் விலையில் ரூ. 5,000 முதல் ரூ.8,000 வரை தள்ளுபடி செய்தே தர வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

ஏற்கனவே ஆண்டுக்கு ரூ. 2,000 கோடி இழப்பில் இந்திய சாட்டலைட் டிவி சேனல் நிறுவனங்கள் இயங்கி வருவதாக மீடியா பார்ட்னர்ஸ் ஆசியா என்ற அமைப்பு தெரிவித்திருக்கும் சூழ்நிலையில் மேலும் தள்ளுபடி விலையில் இந்த டிவிஆர் கள் சாட்டலைட் இணைப்புகளுடன் தரப்படுமா என்பது சந்தேகமே.

எது எப்படி இருந்தாலும் டிஜிட்டல் பொழுது போக்கு சாதனங்களின் வரிசையில் டிவிஆர் ஒரு ஸ்பெஷல் மைல் கல் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு டெலிவிஷன் சேனல் நிகழ்ச்சியை எந்த நேரத்தில் ஒருவர் காண வேண்டும் என்ற உரிமையை இந்த டிவிஆர் சாதனங்கள் மக்களுக்கு வழங்கி உள்ளன என்பது ஒரு புரட்சிகரமான மாறுதல் தானே. எனவே விரைவில் இது மக்களை அதிகமான எண்ணிக்கையில் சென்றடையும் என்று எதிர்பார்க்கலாம்.

எக்ஸெல் டிப்ஸ், டிப்ஸ்….

பில் ஹேண்டில்

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஒரு செல்லில் டேட்டாவை அமைத்துவிட்டு தொடர்ந்து வரும் செல்களில் அதே டேட்டாவினை அமைக்க பல வழிகள் தரப்பட்டுள்ளன. ஒரு செல்லில் ஒரு எண்ணை அமைத்துவிட்டு கீழே உள்ள செல்களில் அதே எண்ணை அமைக்க பில் ஹேண்டில் பயன்படுத்துகிறோம். பில் ஹேண்டில் என்பது செல்லில் டேட்டாவை அமைத்துவிட்டு கர்சரை வலது புறம் உள்ள பார்டரில் கொண்டு வந்தால் கீழாக ஒரு + அடையாளம் கிடைக்கும். இதனை இழுத்தால் செல்லில் உள்ள டேட்டா கீழாக உள்ள செல்லில் அமைக்கப்படும். இது எப்படி அமைக்கப்படுகிறது? எடுத்துக் காட்டாக ஒரு எண்ணை அமைத்துப் பின் பில் ஹேண்டிலை வைத்து இழுத்தால் அந்த எண் மற்ற செல்களில் ஜஸ்ட் காப்பி செய்யப்படுகிறது. எடுத்துக் காட்டாக ஒரு செல்லில் 2345 என எண்டர் செய்து பில் ஹேண்டில் இழுத்தால் கீழே உள்ள செல்களில் 2345 என்ற எண் காப்பி செய்யப்படும்.

அடுத்ததாக அவ்வாறு இழுக்கும் போது கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு இழுத்தால் அடுத்தடுத்த செல்களில் எண்ணுடன் 1 சேர்த்து அடுத்த எண் அமைக்கப்படும். அதாவது 2346, 2347, 2348 என அமைக்கப்படும்.

சரியா! இப்போது செல்லில் ஒரு தேதியை அமைத்து இதே போல பில் ஹேண்டிலைப் பயன்படுத்துங்கள். சாதாரணமாக இழுத்தால் எண்களுக்கு நடந்தது போல அதே தேதி காப்பி ஆகாது. அதற்குப் பதிலாக அடுத்த அடுத்த தேதி காப்பி ஆகும். அதாவது 03–03–09 என டைப் செய்து பின் ஹேண்டிலை இழுத்தால் 04–03–09, 05–03–09 என்று வரிசையாக அமைக்கப்படும். (ஒர்க் ஷீட்டில் தேதி பார்மட் அமைப்புப்படி இது நடக்கும்) அப்படியானால் கண்ட்ரோல் கீ அழுத்தி அமைத்தால் என்னவாகும் என்று எண்ணுகிறீர்களா. ஜஸ்ட் அதே தேதி காப்பி ஆகும்.

இதிலிருந்து என்ன தெரிகிறது. எக்ஸெல் ஒவ்வொரு வகை டேட்டாவிற்கும் பில் ஹேண்டில் பயன்பாட்டினை ஒவ்வொரு வகையில் அமைத்துள்ளது என்பது தெரிகிறது.எக்ஸெல் தொகுப்பில் பைல் ஒன்றினைத் திறக்க முயற்சிக்கையில் பைல் ஓப்பன் டயலாக் பாக்ஸ் கிடைக்கிறது. இதே போன்று தான் மற்ற விண்டோஸ் புரோகிராம்களிலும் கிடைக்கிறது. இதன் மூலம் எக்ஸெல் பைல்கள் எந்த வகையில் வரிசைப்படுத்தப்பட்டு திறக்கப்படுவதற்குக் காட்டப்பட வேண்டும் என்பதை உறுதி செய்திடலாம். இதற்குக் கீழ்க்காணும் வழிகளின் படி செயல்படவும்.

1. File மெனுவில் Open என்பதனைக் கிளிக் செய்திடவும்; அல்லது Standard டூல் பாரில் Open டூல் மீது கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2007 ஆக இருந்தால் ஆபீஸ் பட்டனை அழுத்துகையில் கிடைக்கும் ஓப்பன் டூலினைக் கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல் ஓப்பன் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.

2. இந்த டயலாக் பாக்ஸில் Toolbar ல் உள்ள View டூல் அருகே வலது பக்கம் உள்ள கீழ் நோக்கி உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் கீழ் விரியும் மெனு ஒன்றைத் தரும்.

3. இதில் Arrange Icons என்று ஒரு கீழ் விரி மெனு ஒன்று கிடைக்கும். இதில் பைல்களை எந்த வகையில் வரிசைப்படுத்தி வைக்க என பல ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். அகரவரிசை, இறுதியாக எடிட் செய்த நாளின் அடிப்படையில், அளவின் அடிப்படையில் எனப் பல ஆப்ஷன்ஸ் தரப்படும். இதில் எந்த வகையில் இருந்தால் உங்களுக்குச் சரியாக இருக்குமோ அந்த வகையினைத் தேர்ந்தெடுக்கவும். உடனே நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் படி பைல்கள் வகைப்படுத்தப்பட்டு வரிசைப்படுத்தப்படும். பின்னர் நீங்கள் பைல் ஓப்பன் டயலாக் பாக்ஸ் திறக்கும் போது அதே வகையிலேயே இருக்கும். மீண்டும் இதனை மாற்றினால் தான் மாறும்.

விண்டோஸ் + எக்ஸெல் இணைந்து செயலாற்றும் சில பதிப்புகளில் Arrange Icons மெனு கிடைக்காமல் இருக்கலாம். அந்த மாதிரியான சூழ்நிலைகளில் பைல் ஏரியாவில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். அதில் கிடைக்கும் Context மெனுவில் இந்த Arrange Icons மெனு கிடைக்கும். அதனைப் பயன்படுத்தலாம்.

ஒர்க் புக் அனைத்தையும் மூட

எக்ஸெல் தொகுப்பில் பல ஒர்க்புக்குகளைத் திறந்து வேலை பார்த்துக் கொண்டிருப்போம். அனைத்து வேலைகளையும் முடித்த பின்னர் அவற்றை மூட வேண்டும். ஒவ்வொன்றாக மூடுவோம். பைல் மெனு சென்று Close பிரிவில் கிளிக் செய்திடுவோம். ஒவ்வொரு ஒர்க்புக்கினையும் இவ்வாறு மூட முயற்சிப்போம். அதிகமான எண்ணிக்கையில் ஒர்க்புக்குகள் திறக்கப்பட்டிருந்தால் இந்த வேலை சற்று சலிப்பினைத் தரும். அதற்குப் பதிலாக இவை அனைத்தையும் எக்ஸெல் தொகுப்பை மூடாமல் மூடிட ஒரு வழி உள்ளது. பைல் மெனுவில் கிளிக் செய்திடுகையில் ஷிப்ட் கீயினை அழுத்திக் கொள்ளுங்கள். அப்போது பைலை மூட அழுத்த இருக்கும் Close கட்டளை Close All கட்டளையாக மாறி இருக்கும். இதில் கிளிக் செய்தால் அனைத்து ஒர்க்புக்குகளும் உடனே மூடப்படும்.

எக்ஸெல் செல் அகலம்

எக்ஸெல் ஒர்க்புக்கில் ஒரு செல்லுக்குத் தரப்பட்டிருக்கும் அகலம் ஒர்க்புக்கில் வேலையைத் தொடங்கத் தரப்படும் தொடக்க நிலைதான். இன்னும் சொல்லப்போனால் ஒர்க் புக்கில் மேற்கொள்ளப்படும் பார்மட்டிங் பணிகளில் செல்லின் அகலத்தை நம் தேவைக்கேற்ப மாற்றுவதுதான் முதன்மையான பணியாக இருக்கும். செல் ஒன்றில் தரப்படும் டேட்டா அனைத்தும் நன்றாகத் தெரியும் படி இருக்க வேண்டும் என விரும்பினால் கீழ்க்காணும் வழிகளில் செயல்படவும்.

1. நீங்கள் அட்ஜஸ்ட் செய்திட விரும்பும் செல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். எந்த செல்லில் அதிகமான அகலத்தில் டேட்டா தரப்பட்டு அவை காட்டப்பட வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.

2. Format மெனுவில் இருந்து Column என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இது ஒரு சப் மெனுவினைக் காட்டும்.

3. இந்த சப்மெனுவில் இருந்து Autofit என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடனே அதில் உள்ள டேட்டா அனைத்தும் தெரியும் வகையில் செல்லின் அகலம் நீட்டப்படும். இன்னொரு வழியும் உள்ளது. எந்த செல்லின் அகலத்தினை அகலப்படுத்த வேண்டுமோ அதன் டிவைடிங் பாரில் மவுஸ் கர்சரைக் கொண்டு செல்லவும். அதாவது ஈ என்ற நெட்டு வரிசையில் உள்ள செல்லின் அகலத்தை நீட்டிக்க ஈ மற்றும் உ நடுவே அவற்றைப் பிரிக்கும் பாரில் உங்கள் கர்சரைக் கொண்டு செல்லவும். ஒர்க் ஷீட்டின் மேலாக காலம் தலைப்பு உள்ள கிரே ஏரியாவில் காணும் டிவைடரில் இதனை மேற்கொள்ள வேண்டும்.

ஆட்டோ பிட் வழி சென்று அமைத்தால் நீங்கள் எந்த செல்லைத் தேர்ந்தெடுத்து இந்த வழியை மேற்கொள்கிறீர்களோ அந்த செல்லுக்கேற்றபடி அகலம் அமைக்கப்படும். இரண்டாவது வழியில் டிவைடர் மூலம் மேற்கொள்கையில் நாம் விரும்பும் வகையில் அகலப்படுத்தலாம்.

பார்முலா இயங்கும் வழிகள்

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் நிறைய பார்முலாக்களைப் பயன்படுத்துவோம். டேட்டாவினைக் கணக்கிட்டுத் தர இவை நமக்கு உதவுகின்றன. இவற்றைச் சரியாக அமைக்கவில்லை என்றால் நாம் விரும்பும் வகையில் டேட்டாக்களைக் கையாள முடியாது; தேவையான முடிவுகளும் கிடைக்காது. பார்முலாவில் தவறு உள்ளதா என்றோ அல்லது பார்முலா எந்த வழிகளில் செயல்படுகிறதோ என்று நம்மால் அறிந்தால் தவறு எங்கே நேர்கிறது என்று அறியலாம். எக்ஸெல் ஒரு பார்முலா எப்படி செயல்படுகிறது என்பதனைப் படிப்படியாகக் காட்டுவதற்கு வழி ஒன்றைப் பெற்றுள்ளது.

1. நீங்கள் ஆய்வு செய்திட விரும்பும் பார்முலா உள்ள செல்லினைத் தேர்ந்தெடுக்கவும்.

2. Tools மெனுவில் இருந்து Formula Auditing என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக் ஸெல் இங்கு ஒரு சப் மெனுவினைத் தரும்.

3. இந்த சப் மெனுவில் இருந்து Evaluate Formula என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு எக்ஸெல் Evaluate Formula Dialogue Box னைக் காட்டும்.

நீங்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், ரிப்பனில் பார்முலா டேப்பினைக் காட்டவும். இதில் Formula Auditing குரூப்பில் Evaluate Formula டூலினைக் கிளிக் செய்திடவும். இங்கும் Evaluate Formula Dialogue Box கிடைக்கும். இந்த இடத்தில் எக்ஸெல் செல்லில் உள்ள பார்முலாவினை முழுமையாகக் காட்டும். இதில் சில பகுதிகள் அடிக்கோடிடப்பட்டிருக்கும். இந்த அடிக்கோடிட்ட பகுதிகள் அடுத்து அந்த பார்முலா கணக்கிட இருக்கும் பகுதியாகும். இதனை அறிவதன் மூலம் எக்ஸெல் குறிப்பிட்ட முடிவினைக் காட்ட இடையே எந்த வேலையை மேற்கொள்கிறது என்பதனை நாம் அறிய முடிகிறது.

ஒவ்வொரு முறை Evaluate பட்டனை அழுத்தும் போதும் எக்ஸெல் அடிக்கோடிட்ட பகுதிக்கான முடிவினைக் காட்டும். இந்த Formula Evaluator மூலம் நீங்கள் என்ன செய்தாலும் ஒர்க் ஷீட்டில் உள்ள பார்முலா மாற்றப்பட மாட்டாது. பார்முலாவின் ஒவ்வொரு நிலையிலும் என்ன நடைபெறுகிறது; இடைக்கால முடிவு என்ன என்றே இந்த வசதி காட்டும். முழுமையாகப் பார்த்தவுடன் குளோஸ் பட்டனை அழுத்தி வேலையை முடிக்கலாம்.

மைக்ரோசாப்ட் அடோப் எச்சரிக்கை

ஜூன் 9 அன்று மைக்ரோசாப்ட் தன்னுடைய விண்டோஸ், எம்.எஸ். ஆபீஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்புகளில் உள்ள சில தவறுகளுக்கான பேட்ச் பைல்களை வெளியிட்டது.

அதே போல அடோப் நிறுவனம் தன்னுடைய இணைய தளத்தில் பாதுகாப்பான இயக்கத்திற்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அக்ரோபட் மற்றும் ரீடர் தொகுப்புகளைப் பயன்படுத்துபவர்கள் புதிய பதிப்புகளுக்கு மாறிக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த புதிய பதிப்புகள் தங்களுடைய பெர்சனல் கம்ப்யூட் டர்களில் சரியாக இயங்கவில்லை என் றால் அதற்கேற்ப கூடுதல் சாப்ட்வேர் தொகுப்புகளும் தரப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வழங்கியுள்ளது. தற்போதைய தொகுப்புகளில் உள்ள சில தவறுகள் மிகவும் ஆபத்தானவை என்று அறிவித்துள்ளது. இருப்பினும் இவற்றைப் பயன்படுத்தி இதுவரை எந்த மலிசியஸ் சாப்ட்வேரும் இயங்கியதாகத் தெரியவில்லை என்றும் அறிவித்துள்ளது. இந்த பிரச்சினை அடோப் தொகுப்புகளைப் பயன்படுத்தும் விண்டோஸ் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களுக்கு ஏற்படுகிறது என்று தெரியவந்துள்ளது. இவை வெளியே தெரிய வரும் பட்சத்தில் கெடுதல் விளைவிக்கும் மலிசியஸ் சாப்ட்வேர் தொகுப்புகளைத் தயாரிப்பவர்கள் உடனே தயாரிக்கத் தொடங்கி விடுவார்கள் என்றும் கூறியுள்ளது.

எக்ஸெல் வரிசை வகை மாற்றம்

எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை உருவாக்கியிருப்பீர்கள். தொடர்ந்து வரும் டேட்டாவை கணக்கிட்ட பின்னர் நெட்டு வரிசையில் உள்ளதைப் படுக்கை வரிசையிலும், படுக்கை வரிசையில் உள்ளதை நெட்டு வரிசையிலும் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நீங்கள் திட்டமிடலாம்.

அல்லது ஏதேனும் ஒரு வகையில் உள்ளதை மட்டும் மாற்றி அமைக்க இன்னொரு ஒர்க் ஷீட்டில் எண்ணலாம். இதனை எப்படி மாற்றுவது? நான்கு அல்லது பத்து செல்கள் என்றால் ஒவ்வொன்றாக டைப் செய்துவிடலாம் என்று நீங்கள் முயற்சிக்கலாம். இதுவே அதிகமான எண்ணிக்கையில் செல்கள் உள்ள ஒர்க் ஷீட்டாக இருந்தால் என்ன செய்வது?

எக்ஸெல் இதற்கு அருமையான ஒரு வழி தந்துள்ளது. எந்த செல்களில் உள்ளதை மாற்ற வேண்டும் என திட்டமிடுகிறீர்களோ அந்த செல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுங்கள். பின் கண்ட்ரோல்+சி அழுத்தி காப்பி செய்திடுங்கள்.

அடுத்து எங்கு மாற்றத்துடன் வரிசையை அமைக்க வேண்டுமோ அந்த இடத்தில் முதல் செல்லுக்குச் செல்லுங்கள். பின் ALT + E + S அழுத்துங்கள்.அல்லது எடிட் மெனு சென்று பேஸ்ட் ஸ்பெஷல் என்னும் பிரிவில் கிளிக் செய்திடுங்கள். இப்போது பேஸ்ட் ஸ்பெஷல் என்னும் சிறிய விண்டோ கிடைக்கும். இதில் பல ஆப்ஷன்ஸ் தரப்பட்டிருக்கும். எல்லாவற்றிற்கும் கீழாக ட்ரான்ஸ்போஸ் (Transpose) என்று ஒரு ஆப்ஷன்ஸ் கிடைக்கும். அதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் நீங்கள் எதிர்பார்த்தபடி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்.