சாப்ட்வேர் இன்ஸ்டலேஷனில் பிரச்சினையா?

கம்ப்யூட்டர் மலர் அலுவலகத்திற்கு அடிக்கடி கடிதங்களும் தொலைபேசி அழைப்புகளும் வாசகர்களிடமிருந்து இன்ஸ்டலேஷன் குறித்து வருகின்றன. அதுவும் நீங்கள் எழுதிய புரோகிராமினை அல்லது சாப்ட்வேரினை இன்ஸ்டால் செய்தேன்; ஆனால் பாதியிலேயே நின்றுவிட்டது; ஏன் இது போல பிரச்சினையான சாப்ட்வேர் எல்லாம் ரெகமண்ட் செய்கிறீர்கள் என்றெல்லாம் குற்றம் சுமத்தும் கடிதங்களும் நிறைய வருகின்றன. அப்போது வாசகர்களுடன் சேர்ந்து நாங்களும் வருத்தப்படுவோம். எதற்காக? கூடுதலாகச் சில குறிப்புகளை அவ்வப்போது தந்து கொண்டே இருக்க வேண்டும்; ஆனால் அப்படி தராததே இதற்குக் காரணாமாக இருக்குமோ என்பதால் தான். அந்தக் குறிப்புகளை இங்கு காணலாம்.

சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்கையில் பல தரப்பட்ட இது போன்ற சூழ்நிலைகளையும் தவறுகளையும் நாம் எதிர்கொள்ளலாம். இவற்றை ஆங்கிலத்தில் PBDC errors என்று அழைக்கின்றனர். இதன் முழு விரிவாக்கம் Problem Between Desk and Chair என்பதாகும். அதாவது நாம் செயல்படத் தொடங்கி அச்செயல் முடிவடையும் முன் அதனை முழுமையடைய விடாமல் ஏற்படும் பிரச்சினைகளே இவை.

சாப்ட்வேர் தொகுப்புகளை அல்லது சிறிய புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்கையில் நிறைய அறிவிப்புகள் வரும். வெகு நீளமான டெக்ஸ்ட்டாக இருக்கும் என்பதால் நாம் கட கடவென நெக்ஸ்ட், நெக்ஸ்ட் என அழுத்தியவாறு விரைவாக இன்ஸ்டால் செய்வோம். ஆனால் அவை பல்வேறு கண்டிஷன்களைக் கூறி பின் இன்ஸ்டால் செய்கிறது என்பதனை உணர மாட்டோம். அதன்பின்னர் பிரச்சினை ஏற்படுகையில் அதற்கான காரணத்தை அறியாமல் திகைக்கிறோம். கீழே நல்ல முறையில் இன்ஸ்டால் செய்வதற்கான சில டிப்ஸ்கள் வழங்கப்படுகின்றன.

சிஸ்டம் ஒத்துப் போகுமா? உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஹார்ட்வேர் தொகுப்பின் பரிமாணங்களுடன் இன்ஸ்டால் செய்யவிருக்கும் சாப்ட்வேர் ஒத்துப் போகுமா? என்று அறிந்த பின்னரே இன்ஸ்டால் செய்திட வேண்டும். இன்ஸ்டால் செய்யப்பட இருக்கும் சாப்ட்வேர் குறித்து தரப்படும் தகவல்களின் இறுதியாக இவை குறிப்பிடப்பட்டிருக்கும். ப்ராசசர் என்ன ஸ்பீட் வேண்டும்? எவ்வளவு ஹார்ட் டிஸ்க் தேவைப்படும்? மெமரி எவ்வளவு இருக்க வேண்டும்? என்ன வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் எல்லாம் சாப்ட்வேர் செயல்படும் என்றெல்லாம் தரப்பட்டிருக்கும். இன்ஸ்டால் செய்ய முயற்சிக்கையில் நீங்கள் இன்ஸ்டால் செய்யப்பட இருக்கும் டிரைவில் எவ்வளவு இடம் உள்ளது? அது போதுமா என்றெல்லாம் காட்டப்படும். இவற்றைச் சற்றுப் பொறுமையுடன் படித்துப் பார்த்து உங்கள் சிஸ்டம் அந்த சாப்ட்வேர் தொகுப்பை ஏற்றுக் கொள்ளுமா என்பதனை வரையறை செய்த பின்னரே இன்ஸ்டால் செய்வதனைத் தொடர வேண்டும். உங்களிடம் பழைய பென்டியம் ஐ விண்டோஸ் 98, 8எக்ஸ் டிரைவ் என இருந்தால் நிச்சயம் இன்றைய நாட்களில் வரும் சாப்ட்வேர் புரோகிராம்கள் இன்ஸ்டால் செய்வதில் பிரச்சினை வரத்தான் செய்யும்.

லைசன்ஸ் ஒப்பந்தத்தைச் சற்றாவது படிக்கவும்: சாப்ட்வேர் இன்ஸ்டலேஷன் போது உங்களுக்கும் அந்த சாப்ட்வேரை வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே ஒரு நீளமான ஒப்பந்தத்திற்கு ‘I accept’ என்பதை அழுத்தி நீங்கள் இசைவு தர வேண்டியதிருக்கும். இந்த நீளமான ஒப்பந்தத்தினைச் சற்று சில இடங்களிலாவது படிக்க வேண்டும். அதன் சில ஷரத்துக்கள் சற்று விவகாரமானவையாக இருக்கலாம். எடுத்துக் காட்டாக ரியல் ஒன் ஆடியோ பிளேயரை நீங்கள் இன்ஸ்டால் செய்தால் அது உங்களுடைய பெர்சனல் தகவல்களை வாங்கிக் கொண்டு உங்கள் கம்ப்யூட்டரிலேயே அது பயன்படுத்த பதிந்து வைக்கும். அது மட்டுமின்றி நீங்கள் ‘I accept’ என்பதனை அழுத்தும் போது உங்களுடைய பெர்சனல் தகவல்களை அந்த நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள அனுமதியும் அளிக்கிறீர்கள். இதனால் அந்நிறுவனம் மட்டுமின்றி சார்ந்த நிறுவனத்தின் சாதனங்கள் மற்றும் அறிவிக்கைகள் உங்களுக்குத் தேவையோ இல்லையோ அவை ஸ்பாம் மெயில்கள் மாதிரி வந்து கொண்டே இருக்கின்றன. எனவே நீளமான அந்த ஒப்பந்தத்தில் privacy policy statement என்று இருப்பதையாவது படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எங்கு இன்ஸ்டலேஷன்? இன்ஸ்டலேஷனுக்கு முந்தைய விண்டோக்களில் நெக்ஸ்ட் நெக்ஸ்ட் என தொடர்ந்து அழுத்த வேண்டாம். குறிப்பாக எந்த டிரைவில் இந்த புரோகிராம் இன்ஸ்டால் ஆகிறது என்பதனை உணர்ந்தாக வேண்டும். பொதுவாக அனைத்து புரோகிராம்களும் சி டிரைவிலேயே இன்ஸ்டால் செய்திடும்படி செட் செய்திடப்பட்டிருக்கும். ஆனால் நீங்கள் முடிவு செய்தால் அதனை வேறு ஒரு டிரைவில் இன்ஸ்டால் செய்திடலாம். வேறு டிரைவில் இன்ஸ்டால் செய்வதுதான் நல்லது. எனவே அந்த கேள்வி உள்ள விண்டோ கிடைக்கையில் அதற்கென சில டிரைவ்களை ஒதுக்கி அந்த டிரைவ்களிலேயே பதியவும். அப்படி வேறு டிரைவில் பதிந்தாலும் சாப்ட்வேர் ஒன்றின் சில பைல்கள் சி டிரைவில் பதியப்படும் என்பதனை இங்கு நினைவில் கொள்வது நல்லது.

எந்த வகை இன்ஸ்டலேஷன்? புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில் தயவு செய்து மேலோட்டமாகவாவது அக்ரிமெண்ட் பக்கத்தைப் பார்க்கவும். ஒருவர் அவசரமாக பதிந்து விட்டு இறுதியில் பார்க்கையில் டெமோ பதிப்பு மட்டுமே பதியப்பட்டிருந்தது. உடனே நம் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இதற்குத்தானா பக்கம் பக்கமாய் எழுதினீர்கள் என்றார். இறுதியில் அவர் இன்ஸ்டால் செய்த போது டெமோ பதிப்பிற்கு யெஸ் சொல்லி நெக்ஸ்ட் அழுத்தி உள்ளார் என்பது தெரியவந்தது. என்ன என்ன வசதிகளுடன் ஒரு புரோகிராம் இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும் என்பதனை நம்மிடம் கேட்ட பின்னரே ஒரு புரோகிராம் இன்ஸ்டால் செய்யப்படும். எனவே கவனமாக இவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

ரீட் மி (Read Me) பைலைப் படிக்கலாமே! எப்போதும் ஒரு சாப்வேர் இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன் உங்களுக்கு அந்த புரோகிராம் இன்ஸ்டால் செய்ததற்காக நன்றி சொல்லிவிட்டு ரீட் மி பைலை தரட்டுமா என்று கேட்கப்படும்; பெரும்பாலானவர்கள் இதனை தள்ளிவிட்டு புதிய சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தச் செல்வார்கள். ஏனென்றால் இந்த வகை பைல்களில் சட்ட ரீதியான ஒப்பந்தம் பற்றி மீண்டும் சில குறிப்புகள் இருக்கும். அல்லது தொழில் நுட்ப ரீதியாகத் தகவல்கள் இருக்கும். ஆனால் சில வேளைகளில் சில கம்ப்யூட்டர் சிஸ்டங்களினால் எப்படி அந்த சாப்ட்வேர் சரியாக வேலை செய்யவில்லை என்று காட்டியிருப்பார்கள். இதில் உங்கள் சிஸ்டமும் ஒன்றாக இருக்கலாம். எனவே இதனையும் படித்து அறிந்து கொள்வது நல்லது.

டுடோரியல் பக்கங்கள்! பல சாப்ட்வேர் தொகுப்புகளில் டுடோரியல் பக்கங்கள் என சிலவற்றைத் தந்திருப்பார்கள். குறிப்பிட்ட சாப்ட்வேர் தொகுப்பினை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? என்ன என்ன பயன்கள் கிடைக்கும் எனத் தரப்பட்டிருக்கும். குறிப்பாக விர்ச்சுவல் டிரைவ், பயர்வால், பாப் அப் பிளாக்கர்கள், குறிப்பான சில பயன்பாடுகளைத் தரும் புரோகிராம்கள் (கால்குலேட்டர், கரன்சி கன்வெர்டர், பிற மொழி சாப்ட்வேர் தொகுப்புகள் போன்றவை) ஆகியவற்றைச் சரியாக செட் (Configure) செய்திடாவிட்டால் அவை சரியாகச் செயல்படாமல் போகும் வாய்ப்பு உண்டு.

எனவே பயன்களைச் சரியாக அதிக பட்ச அளவில் பெற இதனைப் படித்தறிவது நல்லது.இது போன்ற சின்ன சின்ன வழிகாட்டல்களைப் பின்பற்றுவது பின் நாளில் நமக்குக் கிடைக்கக் கூடிய ஏமாற்றத்தைத் தவிர்க்க உதவும்.

%d bloggers like this: