Daily Archives: ஜூலை 21st, 2009

BLOGS – தயாரிக்க உதவி வேண்டுமா!

இணைய உலகில் அவரவர்களுக்கென்று தனி வலைமனைகளை அமைத்துத் தங்கள் கருத்துக்களை வெளியிடுவது இன்றைய வாழ்க்கையின் ஒரு பரிமாணமாக அமைந்துவிட்டது. ஆடூணிஞ்ண் என அழைக்கப்படும் இந்த வலை மனைகள் அமைப்பதும், பராமரிப்பதும் அவற்றில் கருத்துக்களை எழுதுவதும், நண்பர்களுக்கு அவை குறித்த தகவல்களை அனுப்புவதும் மிகவும் எளிதான செயல்களாக இன்று மாறிவிட்டன.

பிளாக்குகளை உருவாக்குவதில் நண்பர்களிடையே நலமான போட்டியும் நிலவுகிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய பிளாக் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என அதற்குப் பல வழிகளில் முயற்சிக்கின்றனர்.

இவர்களுக்கு உதவுவதற்கென்றே பல தளங்கள் அதற்கான புரோகிராம்களை வழங்குகின்றன. அவற்றில் மிகச் சிறந்ததாக அண்மையில் நான் பார்த்தது http://www.allblogtools.com/ என்ற முகவரியில் உள்ள தளமாகும். இந்த தளத்தில் நுழைந்தவுடன் நம்மை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியும் ஆழ்த்துவது இதன் பலவகையான டூல்ஸ்கள் தான். டூல்ஸ், டிரிக்ஸ் மற்றும் தகவல்கள் என பலவகைகளில் ஒரு பிளாக் அமைக்கத் தேவையான அனைத்தும் கிடைக்கின்றன.

இரண்டு வகைகளில் இவற்றைத் தேடிப் பெறலாம். பக்க வாட்டில் ஒரு மெனு தரப்பட்டுள்ளது. அத்துடன் புளு நேவிகேஷன் மெனு ஒன்றும் தரப்பட்டுள்ளது.

புளு நேவிகேஷன் மெனுவில் கிடைக்கும் வகைகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

1. Blogger Templates: இங்கு தான் நம் பிளாக்குகளை அமைக்க அடிப்படை கட்டமைப்பு கிடைக்கிறது. எந்த வகை, என்ன அமைப்பு மற்றும் வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். கீழே இருக்கும் எண்கள் பக்கங்களைக் குறிக்கின்றன. இவற்றின் மூலம் பல பக்கங்களில் உள்ள டெம்ப்ளேட்டுகளைக் காணலாம்.ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தவுடன் அதனைக் கிளிக் செய்தால் அதனை முழுமையாகப் பெற லிங்க் ஒன்று கிடைக்கும்.(கூகுள் விளம்பர பாப் அப்களும் கிடைக்கும்; அவற்றைத் தள்ளிவிடுங்கள்). இந்த லிங்க்கிள் கிளிக் செய்தால் மிக அழகான வடிவமைக்கப்பட்ட டெம்ப்ளேட்டுகள் இலவசமாக டவுண்லோட் செய்திடக் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்த எந்தவிதமான தடையும் இல்லை.

2. Blogger Tricks: இந்த பிரிவில் உங்கள் வலை மனையை வெற்றிகரமான ஒன்றாக அமைக்கத் தேவையான ட்ரிக்குகள் கிடைக்கின்றன. பலவகைகளில் இவை வகைப்படுத்தப்பட்டு கிடைப்பது நம் வேலையை எளிதாக்குகின்றன.

3. Blogger Tools: இதில் நான்கு வகையான டூல்ஸ் தரப்பட்டுள்ளன. அவை glitter generator, a signature generator, a static image generator, மற்றும் a HTML color code generator ஆகும். இவை அனைத்தையும் நாம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆனால் பிளாக்குகளை வண்ணமயமாக்க உதவும் HTML color code generator மிகவும் பயனுள்ள ஒரு சாதனம். பெரிய அளவில் இதனை நாம் பயன்படுத்தலாம்.

4. Blogger Falling Objects : உங்கள் பிளாக்கில் நட்சத்திரங்கள், காதல் அடையாளச் சின்னங்கள் பின்னணியில் விழுவது போல் அமைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறீர்களா! உங்கள் எண்ணத்திற்குத் தீனி போடும் வகையில் இந்த பிரிவு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைக் கட்டாயம் உங்கள் பிளாக்குகளில் அமைக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் இவற்றை எப்படி உருவாக்கலாம் என்பதை இந்த பிரிவில் இருந்து கற்றுக் கொள்ளலாம்.

5.Glitters: இந்த பிரிவில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட மின்னும் இமேஜஸ் கிடைக்கின்றன. தேவைப்பட்டால் எடுத்து பிளாக்கில் இணைத்துக் கொள்ளலாம்.

6. Animations: அனிமேஷன் எனப்படும் சிறிய அசையும் உருவங்கள் உங்கள் வலைமனையில் அமைக்க வேண்டும் என ஆசைப்பட்டால் இந்த பிரிவு உங்களுக்கு நிறைய அனிமேஷன் பைல்களைத் (.GIF) தருகிறது.

மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் அதன் பிரிவுகளைச் சார்ந்தே தரப்பட்டுள்ளன. இந்த தளத்திற்குச் சென்றால் இன்னும் என்னவெல்லாம் கிடைக்கின்றன என்பதனைத் தெரிந்து கொள்வீர்கள்.

இங்கு சென்று வந்த பின் இதுவரை வலைமனை அமைக்காதவர்கள் இதன் எளிதான சாதனங்களைப் பெற்று அமைக்கத் தொடங்கிவிடுவார்கள். ஏற்கனவே அமைத்தவர்கள் தங்கள் பிளாக்குகளுக்கு மெருகூட்டுவார்கள் என்பது உறுதி.

புரோகிராம் பட்டியலில் கூட்டமா?

ஏதேனும் ஒரு புரோகிராமினை நீக்கவும் இணைக்கவும் நாம் உடனே அணுகுவது கண்ட்ரோல் பேனலில் உள்ள ஆட்/ரிமூவ் (Add/Remove) புரோகிராம் பட்டியல் தான். ஆனால் இப்போதெல்லாம் சிஸ்டம் மற்றும் முக்கிய புரோகிராம்களின் அப்டேட் பைல்கள் இன்ஸ்டால் செய்யப்படுகையில், அவற்றுக்கும் தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு பட்டியலில் இடம் பெறுகின்றன. இதனால் பட்டியல் நான் மேனேஜ் செய்திட முடியாத வகையில் மிக நீளமாக அமைந்து விடுகின்றன.

இப்போதெல்லாம் இன்ஸ்டால் ஆன புரோகிராம்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அவற்றிற்கான அப்டேட் பைல்கள் இன்ஸ்டால் ஆவதுதான் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் கம்ப்யூட்டர் மற்றும் இணைய உலகில் அப்ளிகேஷன் புரோகிராம்களில் உள்ள பிழைகளின் வழியாக நம்மை அழிக்க உருவாகும் புரோகிராம்களைத் தடுக்க பல வழிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதே.

இவற்றை உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து நீக்கக் கூடாது. ஏனென்றால் இவை உங்கள் அனுமதியுடன் அமைக்கப்பட்டிருந்தாலும் அனுமதியின்றி தாமாக அமைக்கப்பட்டிருந்தாலும் அவை அத்தியாவசியமாகத்தேவைப்படுவதால் தான் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. கம்ப்யூட்டருக்குத் தேவை இல்லை என்றால் இவற்றை நீக்குவதில் எந்த பிரச்சினையும் எழாது. எனவே எந்த ஒரு புரோகிராமிற்கு அப்டேட் இன்ஸ்டால் செய்யப்படுகிறதோ அந்த புரோகிராமினை நீங்கள் நீக்கவோ அல்லது பயன்படுத்தவோ வேண்டாம் என எண்ணிச் செயல்பட்டால் அதற்கென அப்டேட் செய்யப்பட்டுள்ளவற்றை அன் இன்ஸ்டால் செய்திடலாம். இதிலும் ஒரு பிரச்சினை ஏற்படும். அந்த புரோகிராமினை வெறுமனே வைத்திருக்க எண்ணி அப்டேட் புரோகிராமினை நீக்கிவிட்டால் எந்த பிழைகளை நிவர்த்தி செய்திட இந்த அப்டேட் புரோகிராம் அமைக்கப்பட்டதோ அவை மீண்டும் தென்படும். அவற்றின் மூலமாக மால்வேர் தொகுப்புகள் உங்கள் கம்ப்யூட்டருக்குள் வந்துவிடும். எனவே மூல புரோகிராமினை நீக்கினால் மட்டுமே இவற்றையும் நீக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் சில அப்டேட் புரோகிராம்கள் தாமாகவே நீங்கிவிடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

ஆட்/ரிமூவ் புரோகிராம் லிஸ்ட்டைப் பார்க்கையில் தேவையில்லாமல் அது பெரியதாக நீளமாக இருப்பதாக ஒருவர் குறிப்பிட்டிருந்தார். இது தவறு. தேவையில்லாமல் அவை இல்லை. ஒரு அப்டேட் இன்ஸ்டால் செய்யப்படுகையில் அதற்கு முந்தைய அப்டேட் தானாக நீக்கப்பட்டு அந்த இடத்தில் தான் புதிய அப்டேட் இருக்கும். எனவே தற்போது காட்டப்படும் இந்த அப்டேட் இன்ஸ்டலேஷன் புரோகிராம் என்ட்ரிகளை அப்படியே விட்டுவிடுவதுதான் நம் கம்ப்யூட்டருக்குப் பாதுகாப்பானதாகும்.

ஆனால் இவை காட்டப்படுவது உங்களுக்கு எரிச்சலைத் தருவதாக இருந்தால், அப்டேட் வரிகள் காட்டப்பட வேண்டாம் என்று நீங்கள் செட் செய்திடலாம். இதற்கு கண்ட்ரோல் பேனல் மேலாக என்று Show Updates என ஒரு வரி தரப்பட்டு அருகில் ஒரு செக் பாக்ஸ் இருக்கும். அதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடலாம். எடுத்துவிட்ட பின் இந்த அப்டேட் இன்ஸ்டாலேஷன் குறித்த தகவல் பட்டியலில் காட்டப்படமாட்டாது. அவை அனைத்தும் மறைக்கப்பட்டுவிடும். பின் மீண்டும் இவற்றைக் காண வேண்டும் என எண்ணினால் இந்த டிக் அடையாளத்தை ஏற்படுத்திப் பார்க்கலாம்.

குறிப்பிட்ட பைல்களைத் திறந்தே தொடங்கிட

சில நிறுவனங்களில் குறிப்பிட்ட சில எக்ஸெல் பைல்களை அடிப்படையாகக் கொண்டே அனைத்து வரவு செலவு அல்லது நிர்வாகக் கணக்குகளைக் கையாளுவார்கள். எனவே ஒவ்வொரு ஆப்பரேட்டரும் அந்த பைல்கள் அனைத்தையும் திறந்த பின்னரே அன்றாடப் பணியினைத் தொடங்குவார்கள். எடுத்துக் காட்டாக ஒரு விற்பனை மையத்தில் பொருட்களுக்குத் தகுந்தபடி வெவ்வேறு எக்ஸெல் பைல்களை வைத்திருப்பதாக வைத்துக் கொள்வோம்.

இவை சம்பந்தப்பட்ட பற்று வரவு சீட்டுக்களை என்டர் செய்திட அனைத்தையும் தினம் திறந்தாக வேண்டுமே. இவற்றை ஒவ்வொன்றாகத் திறப்பதற்குப் பதிலாக கம்ப்யூட்டரில் எக்ஸெல் புரோகிராம் இயக்கப்படும் போதே மொத்தமாக அவற்றைத் திறக்கும் வகையில் வைத்தால் நன்றாக இருக்குமே. அவ்வாறே செட் செய்திடலாம்.

முதலில் எக்ஸெல் புரோகிராமினைத் திறந்து எந்த எந்த பைல்களை எல்லாம் தினமும் திறந்து பயன்படுத்த வேண்டுமோ அவற்றை எல்லாம் தனியாக ஒரு போல்டரில் வைக்கவும்.

பின் எக்ஸெல் தொகுப்பில் உள்ள டூல்ஸ் மெனுவினைக் கிளிக் செய்யவும். விரியும் மெனுவில் ஆப்ஷன்ஸ் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். பல டேப்கள் உள்ள விண்டோ கிடைக்கும். இதில் ஜெனரல் டேபில் கிளிக் செய்து வரும் பிரிவுகளில் “”At startup, open all files in” என்று இருக்கும் இடத்தைக் கண்டறியவும். அதில் Type the location of the folder என்று ஒரு விண்டோ கிடைக்கும்.

அதில் நீங்கள் தினந்தோறும் திறந்து பணியாற்ற வைத்திருக்கும் பைல்கள் அடங்கிய போல்டரின் டைரக்டரி வழியை அமைத்திடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

இனி எக்ஸெல் புரோகிராம் திறக்கப்பட்டவுடன் அந்த போல்டரில் உள்ள அனைத்து பைல்களும் திறக்கப்படும். எனவே தேவையற்ற பைல்களை அந்த போல்டரில் சேவ் செய்வதனைத் தவிர்க்கவும்.

அதே போல ஏற்கனவே உள்ள பைல்களில் ஏதாவது ஒன்று தேவை இல்லை என்றால் அதனை வேறு ஒரு போல்டருக்கு மாற்றிவிடவும்.

வந்துவிட்டது பயர்பாக்ஸ் 3.5

பரயர்பாக்ஸ் ரசிகர்களின் பலவகையான வேண்டுகோள்களையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் பயர்பாக்ஸ் 3.5 முழுமையான பதிப்பு வெளியாகியுள்ளது. சபாரி பிரவுசரின் பதிப்பு 4 வெளியாகியுள்ள நிலையில் இந்த தொகுப்பு வந்துள்ளது பிரவுசர் தயாரிக்கும் நிறுவனங்களிடையே நிலவும் கடுமையான போட்டியைக் காட்டுகிறது. உலகின் இரண்டாவது பிரபலமான பிரவுசர் என்ற பெயரை பயர்பாக்ஸ் மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இயங்கும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பிரவுசிங் தொழில் நுட்பமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் வெளியான பயர்பாக்ஸ் பதிப்பு 3 ஐக் காட்டிலும் பெரிய அளவில் இதில் மாற்றங்களோ வேகமோ இல்லை என்றாலும் சில புதிய வசதிகள், பிரவுசர் சந்தை போட்டியில் பயர் பாக்ஸைத் தொடர்ந்து தூக்கி நிறுத்துகின்றன.

இதில் பல புதிய வசதிகள் இருந்தாலும் அவை ஒன்றும் ஆச்சரியத்தைத் தரும் வகையில் இல்லை என்பதே பலரின் கணிப்பு. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ரசிகர்களுக்குப் பழக்கமான InPrivate மற்றும் குரோம் பிரவுசர் தரும் Incognito ஆகிய Private Browsing வசதியினை பயர்பாக்ஸ் 3.5 தாங்கி வந்துள்ளது. ஏற்கனவே டிசம்பர் 2008 முதல் பீட்டா தொகுப்பினைப் பெற்று பயன்படுத்திய 8 லட்சம் பேர் இந்த வசதியினை அனுபவித்தனர். இப்போது பொதுவாக அனைவரும் பயன்பெறும் வகையில் பதிப்பு 3.5ல் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் இந்த பிரவுசர் மூலமாகப் பார்த்த தளங்கள் குறித்த குறிப்புகள், அந்த தளங்களில் நாம் தந்த நம் பெர்சனல் தகவல்கள் ஆகியவை பதியப்பட மாட்டாது. இதனால் நாம் பார்த்த தளங்களின் பட்டியல் யாருக்கும் கிடைக்காது. எனவே பொதுவான கம்ப்யூட்டர் மையங்களில் நாம் மற்றவர் அறியாமல் நம் பிரவுசிங் வேலையை மேற்கொள்ளலாம். இந்த வகை பிரவுசிங் போது புக்மார்க்குகளை அமைக்கலாம். பிரவுசரை மூடும்போது இவை புக் மார்க் பட்டியலில் ஏற்றப்படும்.

இந்த வகையில் குரோம் மற்றும் பிற பிரவுசர்களில் பிரைவேட் மற்றும் பப்ளிக் பிரவுசிங் ஆகிய இரண்டு வகை பிரவுசிங்குகளையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளலாம். பயர் பாக்ஸில் அந்த வசதி இல்லை. பயர்பாக்ஸ் 3.5 பதிப்பு தொழில் நுட்ப அடிப்படையில் மற்றவற்றைக் காட்டிலும் சிறப்பான ஒரு அம்சத்தைக் கொண்டிருப்பதாக இணைய தள வடிவமைப்பாளர்கள் கூறி உள்ளனர். எச்.டி.எம்.எல்.5 லோக்கல் ஸ்டோரேஜ், சி.எஸ்.எஸ்.மீடியா டேக்ஸ், இறக்கிப் பயன்படுத்தக் கூடிய வகையில் எழுத்துக்கள் வசதி என டெவலப்பர்களுக்குப் பயன் தரக்கூடிய பல வசதிகள் தரப்பட்டுள்ளன.

இந்த புதிய பதிப்பில் ஜியோ லொகேட்டிங் என்னும் வசதியும் உள்ளது. இதனால் நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்து இயக்குகிறீர்கள் என்பதனை பிரவுசர் உணர்ந்து கொள்ளும். பிரவுசர் கிராஷ் ஆனால் மீண்டும் அதனை இயக்கும் போது அப்போது இயங்கிக் கொண்டிருந்த அனைத்து டேப்களும் திறக்கப்பட வேண்டுமா என்று கேட்கப்பட்டு அவை அனைத்தும் திறக்கப்படும். ஆனால் தற்போது அதிலும் எந்த டேப்கள் திறக்கப்பட விரும்புகிறோமோ அவற்றை மட்டும் திறக்கலாம். மேலும் கிராஷ் ஆகும்போது ஏதேனும் வெப் படிவத்தில் டெக்ஸ்ட் டைப் செய்து கொண்டிருந்தாலும் அந்த டெக்ஸ்ட்டும் மீண்டும் தரப்படும்.

இந்த பதிப்பின் வேகம் குறித்து சொல்லியே ஆக வேண்டும். சன் ஸ்பைடர் ஜாவா ஸ்கிரிப்ட் பெஞ்ச் மார்க் என்னும் சோதனை மூலம் இதனைச் சோதித்த போது இது பயர்பாக்ஸ் பதிப்பு 3 ஐக் காட்டிலும் இரண்டு மடங்கு வேகத்தில் இயங்கியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டேப் பிரவுசிங் பழக்கத்திற்கு வந்த நாள் முதல் பிரவுசர்கள் அனைத்தும் தங்கள் டேப் பாரில் ஏதாவது முன்னேற்றமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்த பதிப்பில் சபாரி பிரவுசரில் உள்ளது போல டேப்களை அதன் வரிசையை மாற்றி அமைக்கலாம். இழுத்து நீக்கலாம். ஒரு டேப்பை இழுத்து புதிய விண்டோ ஒன்றில் அமைக்கலாம். பயர்பாக்ஸ் பதிப்பு இப்போது 70க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. இன்னும் சில மொழிகளிலும் இதனைத் தர வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிப் போர்டு மேனேஜர்கள்

விண்டோஸ் மற்றும் வேர்ட் புரோகிராம்களில் செயல்படும் கிளிப் போர்டுகள் குறித்து பலமுறை இங்கு விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேர்ட் புரோகிராம் கொண்டிருக்கும் கிளிப் போர்டு எப்படி விண்டோஸ் கிளிப் போர்டினைக் காட்டிலும் கூடுதல் சிறப்பம்சங்களைக் கொண்டு நமக்குப் பல வசதிகளைத் தருகிறது என்பதனையும் நம் வாசகர்களுக்குத் தந்திருக்கிறோம்.  இங்கு இந்த கிளிப் போர்டுகளைக் கண்காணித்து அவற்றைப் பயன்படுத்தும் போது கூடுதல் வசதிகளைத் தரும் சில இலவச இணைய புரோகிராம்களைக் காணலாம்.

1. Flashpaste: இது விண்டோஸ் இயக்கத் தொகுப்பிற்கு உதவிடும் ஒரு புரோகிராம். இது கிளிப் போர்டில் காப்பி செய்யப்படும் டெக்ஸ்ட்டைக் கண்காணித்து அவற்றைத் தேவையானபோது பெற்று பேஸ்ட் செய்திட உதவுகிறது. இதன் மூலம் நாம் அடிக்கடி காப்பி செய்து பேஸ்ட் செய்திடும் டெக்ஸ்ட்டை பதிந்து வைத்து பயன்படுத்தவும் முடியும். எடுத்துக் காட்டாக நம் பெயர், முகவரி, இணைய முகவரிகள், சில இணைய அக்கவுண்ட் விபரங்கள் ஆகியவற்றை நிரந்தரமான கிளிப்பாக பதிந்து வைத்து இதிலிருந்து பெற்று பயன்படுத்தலாம்.

இத்துடன் ஒரு சிறிய மேக்ரோ மூலம் நேரம் மற்றும் நாளினை நாம் விரும்பும் பார்மட்டில் பேஸ்ட் செய்திட முடியும். அதே போல டாகுமெண்ட்களையும் இணைய பக்கங்களையும் குறிப்பிட்ட நாளில் திறக்க இதில் குறிப்புகளை எழுதி வைத்துப் பயன்படுத்தலாம். இந்த புரோகிராம் சில ஷார்ட் கட் கீகளை அமைத்திடவும் உதவுகிறது. இதனை ஒரு யு.எஸ்.பி. டிரைவிலும் வடிவமைத்திடலாம். இது முற்றிலும் இலவசமான புரோகிராம் அல்ல. முதல் 30 நாட்களுக்கு மட்டும் இதனை இலவசமாகப் பயன்படுத்தலாம். இதனைப் பெற http://flashpaste.com/  என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினை அணுகவும்.

2. ClipMate: இதனை விண்டோஸ் 98 முதல் விஸ்டா வரையிலான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படுத்தலாம். இதுவும் கிளிப் போர்டில் காப்பி ஆகும் விஷயங்களை கண்காணிக்கிறது. காப்பி ஆகும் தகவல்களை, அவை பிட் மேப் பைல், ஆர்.டி.எப். டெக்ஸ்ட், எச்.டி.எம்.எல். என எதுவாக இருந்தாலும் அதனை ஷார்ட் கட் கீ (Shift + Ctrl + Q) மூலம் பேஸ்ட் செய்திட செட் செய்திடலாம்.

கிளிப் போர்டில் கிளிப் செய்யப்பட்டவற்றைப் பல வகைகளில் இது நிர்வகிக்கிறது. கிளிப்களை நீக்கலாம்; எடிட் செய்திடலாம்; என்கிரிப்ட் செய்திடலாம்; எதனுடனாவது இணைக்கலாம். இன்னும் பல செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். இந்த கிளிப் பிரவுசரில் ஒரு ஸ்பெல் செக்கர் உள்ளது. டெக்ஸ்ட் எழுத்து மாற்றும் வசதி கொண்டுள்ளது. குறுக்கு கோடுகளை நீக்கிடும் வசதி உள்ளது. எச்.டி.எம்.எல். மற்றும் யு.ஆர்.எல் ஆகியவற்றை ஹைலைட் செய்திடும் வசதியும் தரப்பட்டுள்ளது.

இவற்றுடன் கிளிப்களை அகர வரிசைப்படுத்திப் பயன்படுத்தலாம். ஹாட் கீ அமைக்கலாம். கிளிப்களைத் தனியாகவும் பிரிண்ட் செய்திடலாம். இன்னும் பல வசதிகளைக் கொண்ட இந்த புரோகிராம் டவுண்லோட் செய்து முதல் 30 நாட்களுக்கு மட்டும் இலவசமாகப் பயன்படுத்தும் வகையில் தரப்படுகிறது. இணைய முகவரி: http://www.thornsoft.com/ யு.எஸ்.பி. டிரைவில் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய பதிப்பு ஒன்றும் தரப்படுகிறது.

3. ClipMagic:  இந்த புரோகிராம் தனி நபர் பயன்பாட்டிற்கு இலவசம் என்ற அறிவிப்புடன் டவுண்லோட் செய்திடக் கிடைக்கிறது. http://www.clipmagic.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம். கிளிப் போர்டில் காப்பி செய்யப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் இமேஜ்களை இது பதிந்து வைத்துக் கொள்கிறது. பின் அவற்றை எப்போது வேண்டுமானாலும் பேஸ்ட் செய்திடவும் எடிட் செய்திடவும் முடியும். நிறைய கிளிப்கள் இருந்தால் அவற்றை வகைப்படுத்த முடியும். தொடர்ந்து கிடைக்கும் கிளிப்களைத் தாமாக அந்த அந்த வகைகளில் பதியும் படி அமைக்க முடியும். இன்னும் சில கூடுதல் வசதிகளையும் இந்த புரோகிராம் மூலம் அமைக்கலாம்: டெக்ஸ்ட் மற்றும் இமேஜ் கிளிப்களை பிரிவியூ செய்திடலாம்; எந்த இணைய தளங்களில் இருந்து டெக்ஸ்ட் காப்பி செய்யப்பட்டது என்று நினைவில் வைக்கலாம்; இதனுடன் இணைந்த வெப் பிரவுசரில் கிளிப்களை அதன் மூலத்திலேயே காணலாம்; ஸ்கிரின் இமேஜை முழுமையாகவும் தேவையான அளவிலும் வரையறை செய்து காப்பி செய்திடலாம்; கிளிப்களை டிஸ்க்கில் காப்பி செய்திடலாம். முன்பு காப்பி செய்த கிளிப்களை எளிதாகப் பெற கிளிப் மேஜிக்கில் அதன் மீது ரைட் கிளிக் செய்து “Item Properties” தேர்ந்தெடுக்க வேண்டும். பின் அந்த குறிப்பிட்ட கிளிப்பிற்கு ஹாட் ஷார்ட் கட் கீ அமைக்கலாம். எந்த நிலையிலும் கிளிப் ஒன்றினை பேஸ்ட் செய்திடலாம்.

4.ArsClip: விண்டோஸ் இயக்கத்தின் கிளிப் போர்டுக்கான இலவச என்ஹேண்சர் புரோகிராம் என இது அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிப் போர்டில் இறுதியாகக் காப்பி செய்யப்பட்ட 15 டெக்ஸ்ட்களையும் 5 டெக்ஸ்ட் அல்லாதவற்றையும் இந்த புரோகிராம் நினைவில் கொள்கிறது. இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால் Ctrl + Shift + Z என்ற ஹாட் கீகள் மூலம் பெறலாம். இந்த புரோகிராமினை இயக்குகையில் இது சிஸ்டம் ட்ரேயில் ஐகான் ஒன்றை அமைக்கிறது. இதன் மீது ரைட் கிளிக் செய்து கிளிப்களை செலக்ட் செய்திடலாம். எப்போதும் வேண்டும் சில கிளிப்களை நிரந்தரமாக காப்பி செய்து வைக்கலாம். அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு ஹாட் கீ ஏற்படுத்தி வைக்கலாம். நிரந்தரமாக ஒரு கிளிப்பை வைத்திட சிஸ்டம் ட்ரே ஐகானில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Permanent Items”என்பதைத் தேர்ந்தெடுக்கவும். “ArsClip Permanent Items and Groups” என்னும் டயலாக் பாக்ஸ் உங்களுக்குக் கிடைக்கும். இதில் “Default” என்பதில் கிளிக் செய்திடவும். அதன்பின் “New Item”என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இனி நீங்கள் செலக்ட் செய்துள்ள கிளிப்பிற்கு ஒரு பெயரை டைப் செய்திடவும். இது ArsClip மெனுவில் காட்டப்படும். பின் இதனை இந்த புரோகிராமில் பேஸ்ட் செய்திடவும். பேஸ்ட் செய்த பின்னர் “Use Keystrokes / Commands” என்ற பாக்ஸில் டிக் செய்திடவும். இதன் மூலம் கீ ஸ்ட்ரோக்ஸ் அமைக்கலாம்.

இந்த புரோகிராம் மூலம் கிளிப் போர்டில் உள்ளவற்றை நீக்கலாம். கட்டளை ஒன்றை இயக்கலாம். இன்றைய தேதியை அல்லது ஒரு கிளிப்பினை டெக்ஸ்ட்டில் செருகலாம். இதனைப் பேஸ்ட் செய்வதற்குக் கூட ஒரு ஹாட் கீ அமைக்கலாம். அதன் பின் சேவ் செய்தால் ஒரு கிளிப்பிற்காக நீங்கள் மேற்கொண்ட, மேலே சொன்ன அனைத்தும் சேவ் செய்யப்படும். இதன் பின் “ArsClip Permanent Items and Groups” டயலாக் பாக்ஸை மூடவும்.இதன் பாப் அப் மெனுவினைப் பெறுகையில் எந்த ஒரு கிளிப்பினையும் பெர்மணன்ட் ஆக ஒரு சிறிய கிளிக் மூலம் ஆக்க முடியும்.

ஒரு செட் அப் புரோகிராம் மூலம் வந்தாலும், அது ஒரு எக்ஸிகியூட்டபிள் பைலாகத்தான் கிடைக்கிறது. இதனை ஹார்ட் டிஸ்க் அல்லது போர்ட்டபிள் பிளாஷ் டிரைவில் எந்த இடத்திலும் பதிந்து வைக்கலாம். http://www.joejoesoft.com/cms/showpage.php?cid=97 என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனை இலவசமாக டவுண்லோட் செய்திடலாம்.

வெள்ளிவிழா கொண்டாடும் மேக் கம்ப்யூட்டர்

அது 1984 ஆம் ஆண்டின் ஜனவரி 24. அந்த நாளில் தான் மேக் இன்டோஷ் தன் கிராபிக் இன்டர்பேஸ் கொண்ட கம்ப்யூட்டரை அதன் சிறிய மவுஸ் இணைத்து அறிமுகப்படுத்தியது. அன்று தான் மேக் கம்ப்யூட்டர் விற்பனைக்கு வந்தது. அது அன்று வித்தியாசமாகத் தெரிந்தாலும் மிக எளிதான இது இனி இருந்தே ஆகும் என்ற நிலையை எட்டியது.  முதலில் 1980 களில் ஆப்பிள் II  வெளியானது முதல் அது ஒரு உரசலான இடத்தையே பிடித்தது. இதனை அடுத்து 1980ல் வந்த Apple III யும் ஒரு சிறிய குண்டைத் தூக்கிப் போட்டது. ஆனால் இதனை அடுத்து வந்த லிஸா (Lisa) தான் வர்த்தக ரீதியாக கிராபிகல் யூசர் இன்டர்பேஸ் மற்றும் மவுஸுடன் வந்த முதல் சிஸ்டம். ஆனால் விலை 9,995 டாலர். இந்த மார்க்கட்டை அப்போது வந்த ஐ.பி.எம். பெர்சனல் கம்ப்யூட்டரும் அதனைப் போல வந்த மற்ற சிஸ்டங்களும் கைப்பற்றத் தொடங்கின.

இருப்பினும் ஆப்பிள் தனி ஒரு இடத்தைப் பிடித்தது. அந்த இடத்தை எதுவும் அடைய முடியவில்லை. ஆப்பிள் நிறுவனமும் இதனை உணர்ந்து Lisa கம்ப்யூட்டரின் விலை குறைந்த பதிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன் தொடர்ச்சி தான் ஜனவரி 24, 1984ல் விற்பனைக்கு வெளியான 128 கிலோ பைட்ஸ் மேக் கம்ப்யூட்டர். அதன் விலை 2,495 டாலர். அப்போது அது ஒரு பெரிய தொகைதான். ஆனால் Lisa  கம்ப்யூட்டரைக் காட்டிலும் குறை வான விலையில் இருந்ததல்லவா! இந்த விலை தாங்கக் கூடியதாக இல்லை என்று டைம்ஸ் பத்திரிக்கை எழுதியது. இருப்பினும் தன் நிலையை மேக் கம்ப்யூட்டர் மாற்றிக் கொள்ள இல்லை. இதே வேளையில் பெர்சனல் கம்ப்யூட்டர் டாஸ் இயக்கத்தில் வெளியாக மேக் கம்ப்யூட்டரும் டாஸ் கம்ப்யூட்டரும் ஒன்றுக்கொன்று இணைந்து இயங்கவில்லை என்பது அனைவரின் வருத்தமாக இருந்தது. இருப்பினும் மேக் கம்ப்யூட்டர் விற்பனை சற்று நிலையாகவே இருந்தது.

இந்த 25 ஆண்டுகளில் மேக் கம்ப்யூட்டர் பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்துள்ளது. 1997 ஆம் ஆண்டில் ஆப்பிள் கம்ப்யூட்டருக்கு எதிர்காலம் இருக்குமா என்ற கேள்விக்குறியிடும் அளவிற்கு நிலை சென்றது. ஆனால் 2002ல் மீண்டும் இதன் தனித் தன்மை உலகிற்குக் காட்டப்பட்டது. அப்போது முதல் ஐ–மேக் கம்ப்யூட்டர் வெளியானது. டைம் இதழின் அட்டைப் படமாக இந்த ஐ–மேக் காட்டப்பட்டது. ஒரு டெஸ்க் மேல் வைக்கும் விளக்கு போல இந்த கம்ப்யூட்டர் உள்ளது என்ற கருத்து பரவியது. ஆனால் எந்த நிலையிலும் மேக் இன்டோஷ் தன்னை மாற்றிக் கொள்ளவே இல்லை. தொடர்ந்து தன் நிலையில் தனக்கென ஒரு இடத்தை இன்னும் கொண்டுள்ளது.  என்னதான் விண்டோஸ் இன்று உலகை ஆண்டாலும் அதனைப் பார்க்கையில் மவுஸைத் தொடுகையில் அதன் திரையைக் காண்கையில் அது ஆப்பிள் நிறுவனம் முதலில் அறிமுகப்படுத்திய ஒன்று என்ற எண்ணம் எழுகிறது.

கம்ப்யூட்டர் பத்து வகை

பெர்சனல் கம்ப்யூட்டர் என்று சொல்கையில் உடனே நாம் அன்றாடம் வீட்டில் அல்லது அலுவலகத்தில் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள் நினைவிற்கு வருகிறது. லேப் டாப் என்று சொல்கையில் சிலருக்கு அவர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரும், பலருக்கு அவர்களின் அதிகாரிகள் அல்லது வளரந்து வேலை பார்க்கும் அல்லது உயர் கல்வி படிக்கும் பிள்ளைகள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள் நினைவிற்கு வருகின்றன. ஆனால் இன்னும் சிலவகைக் கம்ப்யூட்டர்களும் புழக்கத்தில் உள்ளன. அவை குறித்து இங்கு காணலாம்.

மைக்ரோ ப்ராசசர் பயன்படுத்தும் எந்த சாதனத்தையும் கம்ப்யூட்டர் என்று கூறலாம். ஆனால் நாம் எண்ணுவதெல்லாம் மவுஸ் அல்லது கீ போர்டு வழியாக தகவல்களை அனுப்பி ஏதேனும் ஒரு நவீன வழியில் அவற்றை ஒரு செயல்முறைக்கு உள்ளாக்கி முடிவுகளைத் திரையில் காட்டும் சாதனத்தை மட்டுமே கம்ப்யூட்டர் எனக் கொண்டுள்ளோம். இங்கு அதன் வகைகளைப் பற்றி காணலாம்.

1. பெர்சனல் கம்ப்யூட்டர்: ஒரு நேரத்தில் ஒருவர் பயன்படுத்தும் வகையில் பொதுவான பல பயன்பாடுகளுக்கான ஒரு கம்ப்யூட்டர். மேக் ( Mac)  என்பதுவும் ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் தான். ஆனால் நம்மில் பலர் விண்டோஸ் அல்லது லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரை மட்டுமே பெர்சனல் கம்ப்யூட்டர் என்று சொல்கிறோம்.

2. டெஸ்க்டாப்: எங்கும் எளிதில் எடுத்துச் சென்று பயன்படுத்த முடியாத, ஒரு மேஜை மீது வைத்துப் பயன்படுத்தக் கூடிய கம்ப்யூட்டரே டெஸ்க் டாப் கம்ப்யூட்டர். பொதுவாக இதனை ஒரு நிலையான இடத்தில் வைத்துப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலான டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் நமக்கு அதிக செயல்திறனை அளிக்கின்றன. அத்துடன் தகவல்களை ஸ்டோர் செய்திடும் வசதியையும் தருகின்றன.

3. லேப்டாப்: இதனை நோட்புக் கம்ப்யூட்டர் என்றும் அழைக்கின்றோம். எங்கும் எடுத்துச் சென்று எளிதாகப் பயன்படுத்தக் கூடிய கம்ப்யூட்டர்களே லேப்டாப் கம்ப்யூட்டர்கள். டிஸ்பிளே, கீ போர்டு, பாய்ண்ட்டிங் டிவைஸ் அல்லது ட்ரேக் பால், ப்ராசசர், மெமரி, ஹார்ட் டிரைவ் என அனைத்துக் கொண்டு பேட்டரியின் திறனிலும் செயல்படக் கூடிய கம்ப்யூட்டர் இது. ஒரு பெரிய ஹார்ட் பவுண்ட் புத்தகத்தைக் காட்டிலும் சற்றுப் பெரிதாக இருக்கும். இப்போது இதன் அளவும் குறைந்து வருகிறது.

4.பி.டி.ஏ.(PDA): பெர்சனல் டிஜிட்டல் அசிஸ்டன்ட் (Personal Digital Assistant) என்பதன் சுருக்கம். இதில் மெமரியைத் தர ஹார்ட் டிஸ்க்குக்குப் பதிலாக பிளாஷ் டிரைவ் பயன்படுகிறது. இதில் வழக்கமாக கீ போர்டு இருக்காது. டச் ஸ்கிரீன் தொழில் நுட்பம் வழி தகவல் உள்ளீடு செயப்படும் செயல்பாடு தான் இதன் அடிப்படை. ஒரு பேப்பர்பேக் நாவலைக் காட்டிலும் சிறியதான அளவில் இது கிடைக்கிறது. எடையும் குறைவு; பேட்டரியில் இயங்குவது. இந்த அளவில் சற்று அதிகமான அளவில் உள்ளதை ஹேண்ட் ஹெல்ட் (Handheld Computer) கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படுகிறது.

5. ஒர்க் ஸ்டேஷன் (Work Station): இதுவும் ஏறத்தாழ ஒரு டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் தான். ஆனால் சாதாரண பெர்சனல் கம்ப்யூட்டரைக் காட்டிலும் அதிகத் திறன் கொண்ட ப்ராசசர் இதில் இருக்கும். கூடுதல் மெமரி தரப்பட்டிருக்கும். பல பணிகளை இணைத்துச் செயல்படுத்த கூடுதல் சிறப்பு வழிகள் இதில் உண்டு. முப்பரிமாண கிராபிக்ஸ் பேக்கேஜ் மற்றும் கேம்ஸ் தயாரிக்கும் பணிகளை இதில் மேற்கொள்ளலாம்.

6.சர்வர் (Server): ஒரு நெட்வொர்க் மூலமாக பல கம்ப்யூட்டர்களுக்குத் தேவையான சாப்ட்வேர் அப்ளிகேஷன் மற்றும் தகவல்களைத் தரும் கம்ப்யூட்டர். பொதுவாக சர்வர்களாகச் செயல்படும் கம்ப்யூட்டர்கள் அதிகத் திறன் கொண்ட ப்ராசசர்களைக் கொண்டிருக்கும். ஏகப்பட்ட அளவில் ராம் மெமரியும், அதே அளவிற்கு ஈடு கொடுக்கும் அளவில் ஹார்ட் டிஸ்க்கும் கொண்டிருக்கும்.

7. மெயின் பிரேம் (Mainframe): கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டிற்கு வந்த தொடக்க காலத்தில் இந்த வகைக் கம்ப்யூட்டர்கள் ஒரு பெரிய அறை முழுவதையும் எடுத்துக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். ஏன், ஒரு மாடிக் கட்டடத்தில் முழு தளத்தையும் எடுத்துக் கொண்டிருக்கும். பிற்காலத்தில் கம்ப்யூட்டர்களின் அளவு குறைந்து கொண்டே வர மெயின் பிரேம் கம்ப்யூட்டர் என்பது என்டர்பிரைஸ் சர்வரைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. இப்போது கூட பெரிய நிறுவனங்களில் மெயின் பிரேம் கம்ப்யூட்டர் என்ற சொல்லை அவர்களின் கம்ப்யூட்டர் களுக்குப் பயன்படுத்துவதனைப் பார்க்கலாம். இவை எல்லாம் ஒரு நேரத்தில் பல லட்சக்கணக்கான தகவல்களை செயல் பாட்டிற்கு எடுத்துக் கொண்டு கண்ணி மைக்கும் நேரத்தில் தகவல்களைத் தரும் திறன் கொண்டவை.

8. மினி கம்ப்யூட்டர் (Mini Computer): இந்த சொல் தற்போது அவ்வளவாகப் பயன்படுத்தப்படுவதில்லை. பெர்சனல் கம்ப்யூட்டருக்கும் மெயின் பிரேம் கம்ப்யூட்டருக்கும் இடை நிலையில் இயங்கி வந்த கம்ப்யூட்டர்களைக் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை மிட் ரேஞ்ச் சர்வர் (Mid Randge Server)என்றும் அழைக்கின்றனர்.

9. சூப்பர் கம்ப்யூட்டர் (Super Computer): கோடிக்கணக்கில் பணம் செலவழித்தால் தான் இத்தகைய கம்ப்யூட்டர் ஒன்றை வடிவமைக்க முடியும். சில சூப்பர் கம்ப்யூட்டர்கள் தனிக் கம்ப்யூட்டர்களாகச் செயல்பட்டாலும் கூடுதல் திறன் கொண்ட பல கம்ப்யூட்டர்கள் ஒரே நேரத்தில் இணையாகச் செயல்படும் கூட்டுக் கம்ப்யுட்டராகத்தான் இது அமையும். கிரே சூப்பர் கம்ப்யூட்டர்ஸ் என்ற நிறுவனம் இத்தகைய கம்ப்யூட்டர்களைத் தயாரித்துத் தருகிறது.

10. வேரபிள் கம்ப்யூட்டர் (Wearable Computer): கம்ப்யூட்டர் உலகில் அண்மைக் காலத்தில் வந்து அனைவரின் பாராட்டுதலைப் பெற்ற ஒரு வகை கம்ப்யூட்டர் இது. ஒரு கம்ப்யூட்டரில் நாம் மேற்கொள்ளும் அன்றாட அத்தியாவசிய செயல்பாடுகளை (email, database, multimedia, calendar/scheduler) ஒரு கடிகாரம், மொபைல் போன், ஏன் ஆடைகளில் கூட கிடைக்கும்படி அமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுவதே வேரபிள் கம்ப்யூட்டர் என அழைக்கப்படும் அணியக் கூடிய கம்ப்யூட்டர்.

மேலே கூறப்பட்டவை எல்லாம் பொதுவான கம்ப்யூட்டர் வகைகள். இப்போது கம்ப்யூட்டரை நாம் கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க இயலாத வகைகளில் எல்லாம் கொண்டுவரும் முயற்சிகளில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.  ஹ்யூலட் பேக்கார்ட் நிறுவனம் டச் ஸ்மார்ட் பிசி ( Touch Smart PC) என்ற ஒன்றை அண்மையில் இயக்கிக் காட்டியது. இது விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்தைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் ஐ–போன் போலவும் செயல்படுகிறது. டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்துகிறது.

ஜப்பான் நாட்டின் மட்சுசிஸ்டா எலக்ட்ரிக் இண்டஸ்ட்ரியல் நிறுவனம் டப் புக் (Toughbook) என்ற பெயரில் போர்ட்டபிள் கம்ப்யூட்டர் ஒன்றை மருத்துவ செயல்பாடுகளுக்கென வடிவமைத்து வழங்கியுள்ளது. இது குறைந்த மின் சக்தியில் இயங்கும் Atom  ப்ராசசரில் இயங்குகிறது. எல்.சி.டி. டிஸ்பிளே கொண்டுள்ளது. அடுத்து ஒவ்வொருவரும் முதலிலேயே பணம் செலுத்திவிட்டு செலுத்திய கடையிலிருந்து தங்கள் கைகளில் இயங்கும் கம்ப்யூட்டர் மூலமாகப் பொருட்களை ஆர்டர் செய்து பெறும் வகையில் கம்ப்யூட்டர்கள் வரும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீடியா சென்டர் பிசி (Media Center PC) என்ற ஒரு வகை கம்ப்யூட்டர் இப்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.இது ஆடியோ மற்றும் வீடியோ ரிசீவரையும் கொண்டுள்ளது. இதில் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மற்றும் சார்ந்த அப்ளிகேஷன் புரோகிராம்களை அப்டேட் செய்திடும் வசதி உண்டு. இதனால் இது ஒரு ஹோம் தியேட்டராகவும் செயல்படுகிறது.

NEC நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அண்மையில் திரவத்தின் மூலம் சூடு தணியும் வகையில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஒன்றை இயக்கிக் காட்டினார். Valuestar VW790  என அழைக்கப்படும் இந்த கம்ப்யூட்டரின் சிபியு மற்றும் ஹார்ட் டிரைவ் திரவத்தைப் பயன்படுத்தி குளிர்ச்சி அடையும் வகையில் பிளேட்டுகளைக் கொண்டு இயங்குகின்றன. இந்த வகையில் வரக் கூடிய அடுத்த நிலை பெர்சனல் கம்ப்யூட்டர் லேப் டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் குறைவான இடத் தையே டேபிளில் எடுத்துக் கொள்ளும்.

வருகிறது கூகுள் குரோம் ஓ.எஸ்.

சென்ற ஜூலை 7ல் தன் வலைமனையில் பெர்சனல் கம்ப்யூட்டருக்கான குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தர இருப்பதாக கூகுள் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. கூகுள் பிரவுசர் போல இது வேகமாகவும் எளிமையாகவும் இயங்கும் என்றும்,இந்த ஓ.எஸ். பைல் அளவில் சிறியதாக இருக்கும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. குரோம் என்ற பெயரில் இது வரலாம். இணைய தளப் பயன்பாட்டை மையப்படுத்தி இது வடிவமைக்கப்படுகிறது. விண்டோஸ், மேக் ஓ.எஸ்., பலவகையான லினக்ஸ் ஓ.எஸ், ஏன் தன் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ். ஆகிய அனைத்தைக் காட்டிலும் சிறப்பான ஆப்பரேட்டிங் சிஸ்டமாகத் தன் குரோம் ஓ.எஸ். இருக்கும் என கூகுள் அறிவித்துள்ளது. குரோம் பிரவுசர் அறிமுகப்படுத்தப்பட்டு ஒன்பது மாதங்கள் கழித்து இந்த அறிவிப்பை கூகுள் வெளியிட்டுள்ளது. குரோம் பிரவுசரை 3 கோடிப் பேர் தொடர்ந்து பயன்படுத்தி வருவது கூகுள் நிறுவனத்தின் பொறியாளர்களுக்கு நம்பிக்கையைத் தந்துள்ளது.

முதலில் தற்போது பெருகிவரும் நெட்புக் கம்ப்யூட்டர்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வெளியிட கூகுள் திட்டமிடுகிறது. 2010 ஆம் ஆண்டின் இரண்டாவது பகுதியில் இது வெளியிடப்படலாம். நெட்புக் கம்ப்யூட்டர்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன் இதற்கான ஒப்பந்தத்தினை மேற்கொள்ளும் முயற்சியில் கூகுள் ஈடுபட்டுள்ளது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் முழுவதும் ஓப்பன் சோர்ஸ் முறையில் அமையும். இதற்கான கோடிங் குறியீடுகளை கூகுள் விரைவில் வெளியிடும். குரோம் ஓ.எஸ். எக்ஸ் 86 மற்றும் ஏ.ஆர்.எம். (x86 & ARM) சிப்களில் இயங்கும்.

இந்த முயற்சி மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சரியான போட்டியாக அமையும். ஏற்கனவே கம்ப்யூட்டரில் தகவல் தேடுவதற்கான சர்ச் இஞ்சின் புரோகிராம்கள், வெப் மெயில், பிரவுசர், மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனப் பல துறைகளில் இரண்டு நிறுவனங்களுக்கிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இதனால் தான் மைக்ரோசாப்ட் தன் விண் டோஸ் 7 ஆப்பரேட் டிங் சிஸ்டத்தினை நெட்புக் கம்ப்யூட்டருக்காகவும் உருவாக்கி வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை சவாலுக்கு இழுப்பதில் கூகுளின் வர இருக்கும் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் முதல் முதலில் வந்தது என்று சொல்வதற்கில்லை. ஏற்கனவே லினக்ஸ் வந்தது. ஆனால் லினக்ஸில் இல்லாதது குரோம் பிரவுசரில் இருக்கும். அதுதான் இணைய தளப் பயன்பாட்டினை ஒட்டிய செயல்பாடு. அந்த வழியில் குரோம் மைக்ரோசாப்ட் சிஸ்டத்தை மிஞ்சலாம்.

ஆனால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையில் பல பயனுள்ள அப்ளிகேஷன் புரோகிராம்கள் இயங்கி வருகின்றன. எடுத்துக் காட்டாக எம்.எஸ். ஆபீஸ் மற்றும் அடோப் புரோகிராம்களைக் கூறலாம் இந்த அப்ளிகேஷன் புரோகிராம்கள் தரும் பயன்பாட்டினை புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் அளிக்குமா? அதனை ஒட்டி புதிய புரோகிராம் தொகுப்புகள் எழுதப்படுமா? என்பது கேள்விக் குறியே. இது குறித்து கூகுள் நிறுவனத்தில் துணைத் தலைவராகப் பணியாற்றும் சுந்தர் பிச்சை குறிப்பிடுகையில் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் இன்டர்நெட் வழிதான் தங்கள் செயல்பாட்டினை மேற்கொள்கிறார்கள். எனவே அதன் அடிப்படையில் குரோம் ஓ.எஸ். ஒரு வெப் அடிப்படையிலான ஓ.எஸ். ஆக இருக்கும் என்றார்.

இணைய இணைப்பிலேயே அனைத்து அப்ளிகேஷன்களும் கிடைக்கும். அதாவது எம்.எஸ். ஆபீஸ் மற்றும் அடோப் போன்ற புரோகிராம் பயன்பாடுகளை இணைய தளம் சென்று அங்குள்ள இது போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தி நம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதற்கெனத் தனியே அப்ளிகேஷன் புரோகிராம்களை காசு கொடுத்து வாங்கிப் பதிய வேண்டியதில்லை. மக்கள் உடனே இந்த நிலைக்கு மாற மாட்டார்கள். ஆனால் படிப்படியாய் மாறுவார்கள் என்று கூகுள் எதிர்பார்க்கிறது. அண்மைக் காலத்தில் இன்டர்நெட் என்பது அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கான ஒரு தளமாக மாறி வருகிறது. யாஹூ, கூகுள், பேஸ்புக், மை ஸ்பேஸ் ஆகியவற்றை மக்கள் அதிகமாகப் பயன்படுத்துவது இதனை உறுதி செய்கிறது. எனவே தான் கூகுள் வெப் அடிப்படையிலான ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கித் தர இருக்கிறது. ஆனால் இதிலும் பல பிரச்சினைகள் உள்ளன. நம் கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதில் உள்ள ஹார்ட்வேர் சாதனங்களைக் (வெப் கேமரா, டிவிடி ரைட்டர் போல) கையாள்வது போல வெப் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினால் கையாள முடியாது.

அடுத்து செயல்திறன். வெப் அடிப்படையிலான புரோகிராம்கள் எச்.டி.எம்.எல். மற்றும் சி.எஸ்.எஸ். (Cascading Style Sheets) ஜாவா ஸ்கிரிப்ட் போன்றவற்றின் அடிப்படையில் செயல்படுகின்றன. இதனால் தற்போது பெர்சனல் கம்ப்யூட்டரில் வைத்து செயல்படும் புரோகிராம்கள் போல இவை செயல்திறன் கொண்டிருக்காது. அடுத்த பிரச்சினை இன்டர்நெட் கனெக்ஷன். இன்டர்நெட் இல்லாத வெப் அப்ளிகேஷன்கள் நூல் இல்லாத தையல் மெஷின் மாதிரி. இன்றைக்கும், நவீன தகவல் தொலை தொடர்பு தொழில் நுட்பங்கள் வந்துவிட்ட போதிலும் இன்டர் நெட் தொடர்பினை நாம் உறுதியாக நம்பமுடியவில்லை.

ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் செயல்பட பல்லாயிரக்கணக்கில் டெவலப்பர்கள் இருந்தாலும் இவர்களால் இப்போது நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் தரும் எளிமையையும் திறனையும் கொண்ட அனைத்து புரோகிராம்களையும் தர முடியுமா என்பது சந்தேகமே. ஆனால் கூகுள் அனைத்தையும் தன்னால் சமாளிக்க முடியும் என்றே எண்ணுகிறது. அதற்கான முயற்சிகளையும் வேகமாக எடுத்து வருகிறது. ஓ.எஸ். விவகாரத்தில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெரிய போட்டியாளராக அதனைக் கருத முடியாது. ஆனால் எதிர்காலத்தில் இதனைச் சமாளிப்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குப் பெரிய தலைவலியாகத்தான் இருக்கும். கூகுள் இந்த முயற்சியில் சில தெளிவான இலக்குகளை வைத்துள்ளது. முதலாவதாக ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாதாரண மக்கள், கம்ப்யூட்டரைப் பயன்படுத்த எளிதானதாகவும் பாதுகாப்பு கொண்டதாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த சிஸ்டம் பைல் சிறிய அளவிலும் இருக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்களைத் திறந்து இயக்கும் திறனை மையமாகக் கொண்டு விண்டோஸ் வந்தது. கூகுள் இந்த விண்டோஸ் செயல்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு புதிய விண்டோஸ் முறையைக் கொண்டு வர முயற்சிக்கிறது. வெப்– 2 சகாப்தம் என புதிய எழுச்சியில் எச்.டி.எம்.எல். 5 அடிப்படையில் அனைத்தும் இருக்க முடியும் என கூகுள் நம்புகிறது. இது ஒன்றும் முடியாதது அல்ல. ஏற்கனவே பாம் (Palm) இதனை முயற்சித்துப் பார்த்து வருகிறது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. கூகுளின் இலக்குகள் எல்லையற்றவை. பெர்சனல் கம்ப்யூட்டிங் செயல்பாட்டில் பெரிய மாற்றத்தினைக் கொண்டுவர அது முயற்சிக்கிறது.

கூகுள் எதனையும் செய்திட முடியும் என்ற இலட்சியத்தைக் கொண்டது. எனவே இதன் இலக்குகளை நிச்சயம் கூகுள் எட்டும் என எதிர்பார்ப்போம். (மேலும் தகவல்களுக்கு http://googlblog.blogspot.com/2009/07/introducinggooglechromeos.html என்ற முகவரியில் உள்ள தளத்தினைக் காணவும்.)

60 பிளஸ்…? சறுக்கி… வழுக்கி… தடுமாறி… விழவே கூடாது! : மெதுவா நடங்க; அஜாக்கிரதை வேணாம்

60 பிளஸ்…? சறுக்கி… வழுக்கி… தடுமாறி… விழவே கூடாது! : மெதுவா நடங்க; அஜாக்கிரதை வேணாம்

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன் றவை வந்தால், அதற்கான மருந்து, மாத்திரை சாப்பிட்டு, கன்ட்ரோலில் வைத்துக்கொள்ளலாம். ஆனால், 60 வயதை தாண்டி விட்டால், மிக மிக முக்கியமானது எது தெரியுமா?
வீட்டிலும், வெளியிலும் தடுமாறி விழாமல் இருப்பது தான், மற்ற எல்லாவற்றை விட முக்கியம். விழுந்துவிட்டால், அதனால் வரக்கூடிய விளைவுகள் படு மோசமானவை. அவர்களுக்கும் மீள முடியாத வேதனை; அவர்களின் குடும்பத்தினருக்கும் மாளாத கஷ்டங்கள். அதனால், அறுபது வயதை தாண்டியவர்கள் நடக்கும் போது, குளிக்கும் போது, கழிப்பறை செல்லும் போது, படுக்கை அறை மெத்தையில் படுக்கும் போது… Continue reading →

மென்மையான பாதம் வேண்டுமா?

மென்மையான பாதம் வேண்டுமா?

பெண்கள் தங்கள் முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள் கூட, தங்கள் பாதங்களை கவனிக்க செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்னை பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும், இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக் கொள்பவர்கள் ஏராளம்.

பித்தவெடிப்பு போவதற்கான டிப்ஸ் இதோ உங்களுக்காக…

* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.

* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

* தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.

* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

* இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

* குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.