கம்ப்யூட்டர் பத்து வகை

பெர்சனல் கம்ப்யூட்டர் என்று சொல்கையில் உடனே நாம் அன்றாடம் வீட்டில் அல்லது அலுவலகத்தில் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள் நினைவிற்கு வருகிறது. லேப் டாப் என்று சொல்கையில் சிலருக்கு அவர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரும், பலருக்கு அவர்களின் அதிகாரிகள் அல்லது வளரந்து வேலை பார்க்கும் அல்லது உயர் கல்வி படிக்கும் பிள்ளைகள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள் நினைவிற்கு வருகின்றன. ஆனால் இன்னும் சிலவகைக் கம்ப்யூட்டர்களும் புழக்கத்தில் உள்ளன. அவை குறித்து இங்கு காணலாம்.

மைக்ரோ ப்ராசசர் பயன்படுத்தும் எந்த சாதனத்தையும் கம்ப்யூட்டர் என்று கூறலாம். ஆனால் நாம் எண்ணுவதெல்லாம் மவுஸ் அல்லது கீ போர்டு வழியாக தகவல்களை அனுப்பி ஏதேனும் ஒரு நவீன வழியில் அவற்றை ஒரு செயல்முறைக்கு உள்ளாக்கி முடிவுகளைத் திரையில் காட்டும் சாதனத்தை மட்டுமே கம்ப்யூட்டர் எனக் கொண்டுள்ளோம். இங்கு அதன் வகைகளைப் பற்றி காணலாம்.

1. பெர்சனல் கம்ப்யூட்டர்: ஒரு நேரத்தில் ஒருவர் பயன்படுத்தும் வகையில் பொதுவான பல பயன்பாடுகளுக்கான ஒரு கம்ப்யூட்டர். மேக் ( Mac)  என்பதுவும் ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் தான். ஆனால் நம்மில் பலர் விண்டோஸ் அல்லது லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரை மட்டுமே பெர்சனல் கம்ப்யூட்டர் என்று சொல்கிறோம்.

2. டெஸ்க்டாப்: எங்கும் எளிதில் எடுத்துச் சென்று பயன்படுத்த முடியாத, ஒரு மேஜை மீது வைத்துப் பயன்படுத்தக் கூடிய கம்ப்யூட்டரே டெஸ்க் டாப் கம்ப்யூட்டர். பொதுவாக இதனை ஒரு நிலையான இடத்தில் வைத்துப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலான டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் நமக்கு அதிக செயல்திறனை அளிக்கின்றன. அத்துடன் தகவல்களை ஸ்டோர் செய்திடும் வசதியையும் தருகின்றன.

3. லேப்டாப்: இதனை நோட்புக் கம்ப்யூட்டர் என்றும் அழைக்கின்றோம். எங்கும் எடுத்துச் சென்று எளிதாகப் பயன்படுத்தக் கூடிய கம்ப்யூட்டர்களே லேப்டாப் கம்ப்யூட்டர்கள். டிஸ்பிளே, கீ போர்டு, பாய்ண்ட்டிங் டிவைஸ் அல்லது ட்ரேக் பால், ப்ராசசர், மெமரி, ஹார்ட் டிரைவ் என அனைத்துக் கொண்டு பேட்டரியின் திறனிலும் செயல்படக் கூடிய கம்ப்யூட்டர் இது. ஒரு பெரிய ஹார்ட் பவுண்ட் புத்தகத்தைக் காட்டிலும் சற்றுப் பெரிதாக இருக்கும். இப்போது இதன் அளவும் குறைந்து வருகிறது.

4.பி.டி.ஏ.(PDA): பெர்சனல் டிஜிட்டல் அசிஸ்டன்ட் (Personal Digital Assistant) என்பதன் சுருக்கம். இதில் மெமரியைத் தர ஹார்ட் டிஸ்க்குக்குப் பதிலாக பிளாஷ் டிரைவ் பயன்படுகிறது. இதில் வழக்கமாக கீ போர்டு இருக்காது. டச் ஸ்கிரீன் தொழில் நுட்பம் வழி தகவல் உள்ளீடு செயப்படும் செயல்பாடு தான் இதன் அடிப்படை. ஒரு பேப்பர்பேக் நாவலைக் காட்டிலும் சிறியதான அளவில் இது கிடைக்கிறது. எடையும் குறைவு; பேட்டரியில் இயங்குவது. இந்த அளவில் சற்று அதிகமான அளவில் உள்ளதை ஹேண்ட் ஹெல்ட் (Handheld Computer) கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படுகிறது.

5. ஒர்க் ஸ்டேஷன் (Work Station): இதுவும் ஏறத்தாழ ஒரு டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் தான். ஆனால் சாதாரண பெர்சனல் கம்ப்யூட்டரைக் காட்டிலும் அதிகத் திறன் கொண்ட ப்ராசசர் இதில் இருக்கும். கூடுதல் மெமரி தரப்பட்டிருக்கும். பல பணிகளை இணைத்துச் செயல்படுத்த கூடுதல் சிறப்பு வழிகள் இதில் உண்டு. முப்பரிமாண கிராபிக்ஸ் பேக்கேஜ் மற்றும் கேம்ஸ் தயாரிக்கும் பணிகளை இதில் மேற்கொள்ளலாம்.

6.சர்வர் (Server): ஒரு நெட்வொர்க் மூலமாக பல கம்ப்யூட்டர்களுக்குத் தேவையான சாப்ட்வேர் அப்ளிகேஷன் மற்றும் தகவல்களைத் தரும் கம்ப்யூட்டர். பொதுவாக சர்வர்களாகச் செயல்படும் கம்ப்யூட்டர்கள் அதிகத் திறன் கொண்ட ப்ராசசர்களைக் கொண்டிருக்கும். ஏகப்பட்ட அளவில் ராம் மெமரியும், அதே அளவிற்கு ஈடு கொடுக்கும் அளவில் ஹார்ட் டிஸ்க்கும் கொண்டிருக்கும்.

7. மெயின் பிரேம் (Mainframe): கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டிற்கு வந்த தொடக்க காலத்தில் இந்த வகைக் கம்ப்யூட்டர்கள் ஒரு பெரிய அறை முழுவதையும் எடுத்துக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். ஏன், ஒரு மாடிக் கட்டடத்தில் முழு தளத்தையும் எடுத்துக் கொண்டிருக்கும். பிற்காலத்தில் கம்ப்யூட்டர்களின் அளவு குறைந்து கொண்டே வர மெயின் பிரேம் கம்ப்யூட்டர் என்பது என்டர்பிரைஸ் சர்வரைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. இப்போது கூட பெரிய நிறுவனங்களில் மெயின் பிரேம் கம்ப்யூட்டர் என்ற சொல்லை அவர்களின் கம்ப்யூட்டர் களுக்குப் பயன்படுத்துவதனைப் பார்க்கலாம். இவை எல்லாம் ஒரு நேரத்தில் பல லட்சக்கணக்கான தகவல்களை செயல் பாட்டிற்கு எடுத்துக் கொண்டு கண்ணி மைக்கும் நேரத்தில் தகவல்களைத் தரும் திறன் கொண்டவை.

8. மினி கம்ப்யூட்டர் (Mini Computer): இந்த சொல் தற்போது அவ்வளவாகப் பயன்படுத்தப்படுவதில்லை. பெர்சனல் கம்ப்யூட்டருக்கும் மெயின் பிரேம் கம்ப்யூட்டருக்கும் இடை நிலையில் இயங்கி வந்த கம்ப்யூட்டர்களைக் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை மிட் ரேஞ்ச் சர்வர் (Mid Randge Server)என்றும் அழைக்கின்றனர்.

9. சூப்பர் கம்ப்யூட்டர் (Super Computer): கோடிக்கணக்கில் பணம் செலவழித்தால் தான் இத்தகைய கம்ப்யூட்டர் ஒன்றை வடிவமைக்க முடியும். சில சூப்பர் கம்ப்யூட்டர்கள் தனிக் கம்ப்யூட்டர்களாகச் செயல்பட்டாலும் கூடுதல் திறன் கொண்ட பல கம்ப்யூட்டர்கள் ஒரே நேரத்தில் இணையாகச் செயல்படும் கூட்டுக் கம்ப்யுட்டராகத்தான் இது அமையும். கிரே சூப்பர் கம்ப்யூட்டர்ஸ் என்ற நிறுவனம் இத்தகைய கம்ப்யூட்டர்களைத் தயாரித்துத் தருகிறது.

10. வேரபிள் கம்ப்யூட்டர் (Wearable Computer): கம்ப்யூட்டர் உலகில் அண்மைக் காலத்தில் வந்து அனைவரின் பாராட்டுதலைப் பெற்ற ஒரு வகை கம்ப்யூட்டர் இது. ஒரு கம்ப்யூட்டரில் நாம் மேற்கொள்ளும் அன்றாட அத்தியாவசிய செயல்பாடுகளை (email, database, multimedia, calendar/scheduler) ஒரு கடிகாரம், மொபைல் போன், ஏன் ஆடைகளில் கூட கிடைக்கும்படி அமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுவதே வேரபிள் கம்ப்யூட்டர் என அழைக்கப்படும் அணியக் கூடிய கம்ப்யூட்டர்.

மேலே கூறப்பட்டவை எல்லாம் பொதுவான கம்ப்யூட்டர் வகைகள். இப்போது கம்ப்யூட்டரை நாம் கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க இயலாத வகைகளில் எல்லாம் கொண்டுவரும் முயற்சிகளில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.  ஹ்யூலட் பேக்கார்ட் நிறுவனம் டச் ஸ்மார்ட் பிசி ( Touch Smart PC) என்ற ஒன்றை அண்மையில் இயக்கிக் காட்டியது. இது விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்தைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் ஐ–போன் போலவும் செயல்படுகிறது. டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்துகிறது.

ஜப்பான் நாட்டின் மட்சுசிஸ்டா எலக்ட்ரிக் இண்டஸ்ட்ரியல் நிறுவனம் டப் புக் (Toughbook) என்ற பெயரில் போர்ட்டபிள் கம்ப்யூட்டர் ஒன்றை மருத்துவ செயல்பாடுகளுக்கென வடிவமைத்து வழங்கியுள்ளது. இது குறைந்த மின் சக்தியில் இயங்கும் Atom  ப்ராசசரில் இயங்குகிறது. எல்.சி.டி. டிஸ்பிளே கொண்டுள்ளது. அடுத்து ஒவ்வொருவரும் முதலிலேயே பணம் செலுத்திவிட்டு செலுத்திய கடையிலிருந்து தங்கள் கைகளில் இயங்கும் கம்ப்யூட்டர் மூலமாகப் பொருட்களை ஆர்டர் செய்து பெறும் வகையில் கம்ப்யூட்டர்கள் வரும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீடியா சென்டர் பிசி (Media Center PC) என்ற ஒரு வகை கம்ப்யூட்டர் இப்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.இது ஆடியோ மற்றும் வீடியோ ரிசீவரையும் கொண்டுள்ளது. இதில் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மற்றும் சார்ந்த அப்ளிகேஷன் புரோகிராம்களை அப்டேட் செய்திடும் வசதி உண்டு. இதனால் இது ஒரு ஹோம் தியேட்டராகவும் செயல்படுகிறது.

NEC நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அண்மையில் திரவத்தின் மூலம் சூடு தணியும் வகையில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஒன்றை இயக்கிக் காட்டினார். Valuestar VW790  என அழைக்கப்படும் இந்த கம்ப்யூட்டரின் சிபியு மற்றும் ஹார்ட் டிரைவ் திரவத்தைப் பயன்படுத்தி குளிர்ச்சி அடையும் வகையில் பிளேட்டுகளைக் கொண்டு இயங்குகின்றன. இந்த வகையில் வரக் கூடிய அடுத்த நிலை பெர்சனல் கம்ப்யூட்டர் லேப் டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் குறைவான இடத் தையே டேபிளில் எடுத்துக் கொள்ளும்.

One response

  1. very good classification.Thank you

%d bloggers like this: